விடியல்

ஹரி

ஓயாத கடலலை எதையோ இடைவிடாமல் கூறிக்கொண்டே இருந்தது, காலை வேளையாகையால் எல்லோரும் அவசரம் அவசரமாக இரு கைகளையும் ஆட்டியபடி நடந்து கொண்டு இருந்தார்கள். நான் மட்டும் கடலின் அலைநுரைகளுக்கு என் கால்களைக் கொடுத்து விட்டு மண்ணில் அமர்ந்திருந்தேன், ஆதவன் மெல்ல அன்றைய பணிக்குத் தயாராகிக் கொண்டிருந்தான்.
அவற்றையெல்லாம் இரசிக்கும் மனநிலையில் நான் இல்லை. என் மனம் முழுவதும் ஒரு விதமான கசப்பு மட்டுமே குடியிருந்தது.
நான் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். தூரத்தில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள், அப்போதுதான் கவனித்தேன் என் பக்கத்தில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார், அவர் பார்க்க காவி வேட்டி கட்டிக்கொண்டு சிறிது அழுக்கு படிந்த சட்டையோடு, முகமெல்லாம் தாடியும், மீசையும் அடர்ந்து இருந்தார். கையில் ஒரு அழுக்குப் பை வேறு..
நான் ‘காசு இல்ல போ..’ என்றேன். அவர் என்னைப் பார்த்து கொண்டு நின்றார்.
‘அதான் காசு இல்லனு சொல்றேன்ல போ..’
‘நான் உன்கிட்ட காசே கேக்கலையே..’ என்றார்.
நான் என்ன சொல்வது என்று தெரியாமல் கடலை நோக்கி முகத்தை திருப்பி கொண்டேன். அவர் என் பக்கத்தில் அமர்ந்தார் பின்பு, ‘ஏன் இப்படி இங்க உட்காந்துகிட்டு இருக்க?’ என்றார்.
நான் ‘சும்மாதான்’ என்றேன்.
சுற்றிப் பார்த்துவிட்டு, ‘நல்லாத் திங்க வேண்டியது அப்புறம் அதக் குறைக்கறேன்னு ஓட வேண்டியது, வேடிக்கையா இருக்குல்ல’ என்றார்.
நான் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையை மட்டும் அசைத்தேன்.
பின்பு நானே பேசத்தொடங்கினேன். ‘மனசு கஷ்டமா இருக்கு அதா..’ என்றேன்.
‘என்னடே காதல் தோல்வியா’ என்றார்.
நான், ‘அதெல்லாம் இல்ல. இந்த மனிதர்களைப் பார்த்து தா’ என்றேன்.
‘பரவாயில்லையே உனக்கு கஷ்டப்படலா நேரம் இருக்கு. சில ஆட்களுக்கு அதுக்கு கூட நேரம் இல்லாமல் ஓடிட்டு இருக்கானுங்க’ என்று சிரித்தார். பின்பு, ‘இவுனுங்க மேல என்னடே கோபம்’ என்றார்.
‘எல்லாரும் சுயநலம் புடிச்சவுனுங்க’ என்றேன்.
‘உனக்கு சுயநலம் இல்ல யா’ என்றார்.
நான் யோசித்துப் பார்த்து விட்டு, ‘இருக்கு ஆனா அந்த அளவுக்கு இல்ல’ என்றேன்.
அவர் புன்னகையுடன், ‘இதுல அளவுகோல் வேற வச்சிருக்க’ என்றார்.
‘கருணையே இல்லாம துப்பாக்கிகளையும், குண்டுகளையும் வீசி சண்டை போட்டுக்குறாங்க, மனிதனை, மனிதன் வெட்டிக் கொல்லுறான், சின்ன குழந்தையைப் பலாத்காரம் செய்றான். இதுல நான் நல்லவன், நல்லவன் தம்பட்ட அடிக்கிறான், இப்படி சொல்லிக்கிட்டே போலாம். அன்பு என்பதே இல்லாம ஆகிடிச்சி’ என்று சற்று ஆவேசமாகக் கூறினேன்.
‘அப்படி இல்ல டே அன்பு இருக்கு, இங்க பாரு நான் இந்தியா புல்லா சுத்தி இருக்கேன். ஆனா ஒருநாளும் பசியோட படுத்தது இல்ல. எல்லா அம்மைகளும் என்ன சோறு போட்டு வளர்த்துட்டு வராங்க. அப்போ அன்பு இருக்குல்ல, கருணை இருக்குல்ல’ என்றார்.
‘மனிதனுக்குள்ள சாத்தானும் இருக்கு, கடவுளும் இருக்கு. மனசுல குப்பை இல்லாத மனிதன் யாரு இருக்கான் சொல்லு, அப்படி அவன் இருந்தான்னா அவன் கடவுளாக்கும்.’ மேலும் என்னை பார்த்து, ‘உன் மனசாட்சியத் தொட்டுச் சொல்லு. உன் மனசுல குப்பை எண்ணம் இல்லனு.’
‘ஆனால் நான் அவ்வளவு கேவலமானவன் இல்லை’ என்றேன்.
‘அது உன்னோட அறிவு தடுக்குது’ என்றார். ‘எப்போ எல்லாம் கலவரம் நடக்குதோ, கேள்வி கேட்க யாரும் இல்லை யோ அப்போ எல்லாம் மனிதனுக்கு உள்ள இருக்குற மிருகம் எட்டி பார்க்கும், அக்கா, அம்மானு தெரியாம நடந்துக்கும்.
ஆனா தெய்வம் மாதிரி வச்சி வணங்கக் கூடிய நல்ல மனிதர்களும் இருக்காங்க.’
சற்று நேரம் அமைதியாக இருந்தோம், அவர் பேசத் தொடங்கினர் ‘நான் என்பதில் இருந்து வருது எல்லாம்’ என்றார். நான் அவரைப் புரியாமல் பார்த்தேன்.
‘ஆமாம் டே என் வீடு, என் சாதி, என் மதம், என் நாடு, இப்படி தா.. என்துன்னு வந்தாலே அவன் சண்டை போடுவான், வெட்டுவான், சுடுவான் எல்லாம் பண்ணுவான்.
எல்லார் கைலயும் ஒரு போன் குடுக்கத் தெரிந்தவனுக்கு உலகத்துல இருக்குற எல்லாரும் ஒண்ணுனு சொல்ல தெரியாதா. சொல்ல மாட்டான். ஏன்னா, அவன் ஆணவத்துல, அதிகாரத்துல இருக்கான். சாதாரண மக்கள் யாரும் எந்த நாட்டு கூடையும் சண்டைக்கு போலயே அப்போ எதுக்கு நாட்டுக்கு, நாட்டுக்கு இராணுவம், எல்லாம் ஆணவம்’ என்றார்.
பின்பு அவர் கைப்பையைத் துளாவிக் கொண்டிருந்தார். கடலலைகள் எங்கள் கால்களை நனைத்துக் கொண்டு சென்றன. அவர் பையில் சில புத்தகங்கள் வைத்திருந்தார், கருப்பு அட்டை போட்ட புத்தகம் அதில் ‘பரிசுத்த வேதாகமம்’ என்று எழுதி இருந்தது.
‘நீங்கள் கிறிஸ்தவரா’ என்றேன்.
அவர் என்னைப் பார்த்து விட்டு, ‘அப்படியும் சொல்லலாம்’ என்றார்.
பின்பு பைபிளில் ஒரு பக்கத்தை எடுத்து வைத்து ஓரிடத்தில் கை வைத்து, ‘இதைப் படி’ என்றார். அது மத்தேயு 18:21-22.
‘அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரம் மட்டுமா என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரம் மாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரம் மட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்’ என்றிருந்தது.
‘என்ன சொல்லுது’ என்றார்.
‘மன்னிக்கச் சொல்லுது’ என்றேன்.
‘ஆமாம் எல்லோரையும் மன்னிக்கணும். அது ஒரு பெரிய நிலை’ என்றார்.
‘வளர்ந்தவன் தா மன்னிக்கமாட்டான், இதோ போர்ல செத்துப் போகுதே பிஞ்சு குழந்தை அது மன்னிக்கும் எல்லோரையும் தன் தாய், தந்தையைக் கொன்றவனையும் அது மன்னிக்கும், அதுனால தா “குழந்தையையும், தெய்வமும் ஒன்று”ன்னு சொன்னாங்க’ என்றார்.
‘பசிக்கிது டீ சாப்புடுவோமா’ என்றார் புன்னகையுடன்.
நான், ‘காசு இல்லே’ என்றேன்.
‘நான் வாங்கித் தாரேன், வாடே’ என்றார்.
நானும் அவரும் சேர்ந்து நடந்தோம். புறாக்கள் எங்களைச் சுற்றிப் பறந்தன. அவர், ‘இதுங்க மாதிரி இருக்கனும் “உலகம் யாவையும் ஒன்று” என்று’ என்றார். ‘உனக்கு ஒன்னு தெரியுமா? சைபீரியாவில் இருந்து இங்க வர பறவைய எல்லாம் இங்க தங்க விடாம வெடி வச்சி துரத்துறாங்களாம், வருடத்தில் ஒரு வாட்டி அங்கே இருந்து உசுரபுடிச்சிகிட்டு வருதுங்க ஆனா, எப்படி இருக்கான் மனிதன் பாத்தியா’ என்றார்.
‘உனக்கு இந்த உலகத்துல ஏதாவது நல்லது செய்யணும் தோணுது அப்படின்னா செஞ்சுடு, அது எப்படி வேண்டும் என்றாலும் முடியட்டும், ஆனால் எதையும் எதிர்பார்த்து செய்யாத’ என்றார். ‘எப்பயும் நாதியற்ற குரலுக்கு பக்கத்துல நில்லு’ என்றார்.
நாங்கள் இருவரும் டீ சாப்பிட்டோம், நான் அவரிடம், ‘காசு கொடுக்கலயா’ என்றேன்.
அவர் புன்னகையுடன் ‘கும்பிட்டால் போதும்’ என்றார். ‘சரி டே, நான் போறேன். விதி இருந்தா திரும்ப பார்ப்போம்’ என்றார்.
நான் அவரிடம், ‘உங்க பெயர்’ என்றேன். அவர் புன்னகையுடன் ‘பஷீர் – முகமது பஷீர்’ என்றார். அவர் என் கண்களில் இருந்து மறையும் வரை அவரையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

Leave a comment

Trending