கோவை ஆனந்தன் கவிதைகள்

1.
உன் அன்பின் தூறலில்
நனைய விரும்பும்
மனதிடம்தான்
குடைகளின்
அவசியம் குறித்து
நிறைய பேசுகிறார்கள்….
2.
இரவோடு இரவாக
ஊர் எல்லையில் யாரோ
கொட்டிச்சென்ற
அம்மி ஆட்டுக்கல்
உரல் உலக்கையென
ஒன்றுக்கும் உதவாதவைதாம்
பெய்யாத மழைக்குக்
காரணமெனப்
பேசுகின்றனர்
தோளிலுள்ள கோடரியை
இறக்கி வைக்காமல்….
3.
நேரில் சந்திக்கும்போது
ஒரு புன்னகை
நலம் விசாரிப்பென
ஒவ்வொன்றையும் அக்கறையாய்ப் பொழிந்தவள்
இன்னும் மெளனமாகவே
இருக்கிறாள்
முகநூல்
நட்புக் கோரிக்கைக்குப்
பதில் சொல்லாமல்
4.
இரு நாட்களாய்ப்
பெய்யும் மழையைத்
தடுத்து நிறுத்த வேறு வழியில்லை
கையில் குடையை
எடுத்து செல்வதைத் தவிர
5.
வெட்ட வெளியில்
அலையும் காற்றும்
புழுக்கத்தில் அல்லாடும்
அறைக்குள் வர மறுக்கிறது
பரிதாப நிலையில்
மின்விசிறி
6.
குவியல் குவியலாய்
குவிந்து கிடக்கும் ஈசல்களின்
றெக்கைகளுக்குள்தான்
கொத்தித் தின்பவற்றுக்கும்
பிடுங்கித் தின்பவற்றுக்குமான
ஒருவேளை உணவு
சடலங்களாய்க் கிடக்கிறது
7.
ஈவிரக்கமற்ற
புலியிடம் தப்பித்த மானின்
இதயத்துடிப்புகளின்
வேகம் சீராவதற்குள்ளாகவே
மீண்டுமொருமுறை பதட்டமடையச் செய்கிறது
மர உச்சியிலிருந்து
வரும் பறவையின் சத்தம்.

Leave a comment