சக்தி கவிதைகள் ஐந்து
யாவரும்
நிறைந்திருக்கும்
ஓர் அறையில்
யாரும் நம்மை
தேற்றமாட்டார்கள்
யென்றான போது
தனக்குத் தானே
தன்னையே தேற்றிக்கொள்ளும்
சிறு புன்னகைக்குப்
பெயர்தான்
அழுகை
அழுங்கள்
யாருக்கும் தெரியாதபடி
அழுங்கள் ,
*
நீயே முதலில்
போயென்று
குட்டி யானைக்கு
வழிவிட்டு இரண்டாவதாய்
நான் நுழைகிறேன்
எரிவது
கனவா கானகமா
யென்று யோசித்தபடி
இறந்து கிடக்கிறது கனவு
தன் இருப்பிடம்
தேடிய படி ஓடி வரும் தாய் யானை
பிளிரும் சத்தம்
ஆங்கோரமாய்க் கேட்கிறது
பல யானைகளின் சாபத்தின் மொழி ,
*
நூலிழையில்
தப்பியோடி
தன் பெரும் மூச்சொன்றை
மேலுக்கும் கீழுக்குமாய்
உயிர்க் காற்றை
இழுத்து விடுகிறது
அகால சாலையில்
அவசரமாய்
என் வாகனத்தின் குறுக்கில்
ஓடிய அணில் குஞ்சு ஒன்று
நானுமாய் பெரும்
மூச்சொன்றை
அலாதியாக்குகிறேன்
கூடும் வீடுமாய்த்
தனித்தனியாய்க் காத்திருக்கிறது
அணிலுக்கும் எனக்குமான
அவரவர் சொந்தங்கள் ,
*
எப்பொழுதாவது
பெய்யும் மழை போல் அவ்வப்பொழுதெல்லாம் எனக்குள்ளிருந்து
பொழியத் தொடங்குகிறது
ஓர் கரிய மேகம்
நான் மரமாய் நின்றிருக்கிறேன்
பூ பூக்கும்
காய் கனியாகும்
கனி பலருக்குப் பசியாறும்
உச்சி கிளையிலிருந்து
உதிரும் ஓர் சருகாகவே
உதிர்ந்து கொண்டிருக்கிறது என்னுடைய
பால்ய நினைவுகளின் வயது ஆறு ,
*
கண்கள் வழியாக
கனவு நுழையும்
அதிபகல் நேரம்
சிட்டுக்குருவியாய்
வந்து அமரும்
அச்சிறு பட்சியிடம்
யாசகமாய்க் கையளவு தானியம்
வேண்டுமென்று கேட்கிறேன்
கொடையளவு
கொடுத்து விட்டுப் பறக்கும் அச் சிட்டுக்குருவியின்
சிறகிலிருந்து விழும்
சிறு தானியமாய் உருண்டோடுகிறது
என் உயிரின் அணு
பசி நீக்கியாய்
*

Leave a comment