சிங்களக் கவிதைகள் இரண்டு தமிழில்
சிங்களப் படைப்பு – அசேல லக்ஷான்
මෙව්වා සිරා සිද්ධි දොරේ
மேவா சிரா சித்தி தொரே
‘இவை உண்மைச் சம்பவங்கள் தோழா’ தொகுப்பிலிருந்து
தமிழாக்கம் – ஜெஃப்ரி தங்கராஜ்
காலை 07.40

அம்மா….
இன்று 7.35 ஆயிற்று
பாடசாலை நுழைவில்
மாட்டிக்கொண்டோம்…
கண்களில் மந்திரம் போட்டபடி
கதவருகே சிரித்திருந்தோம்..
பள்ளியின் ‘பெரிய’ அண்ணா
முறைக்கும் வரை.
எங்கெளுக்கென்றே
காடுகொண்டிருந்தது பள்ளி வெளிமதில்
தொட்டாற் சுருங்கியும்
மானாப் புல்லும்
மகுட வாசகத்தை மறைத்திருந்தன.
‘ஒற்றைப்புல்லும் விடக்கூடாது’
பிடுங்குங்களடா…
பெரிய அண்ணாவின் கட்டளையும்
முதலாம் பாடத்திற்கான
மணியும் ஒன்றாக ஒலித்தது
அம்மா…
புழுதி கிளம்ப ஒரு
வெள்ளைக்காரொன்று..
‘இங்கிலிஷ் மிஸ்’ என்றனர்
அக்காமார்.
கார் எங்களைத்
தாண்டிச் செல்ல
ஒரு வெண்ணைக்கட்டித்
தாளொன்று பறந்து
நிலம் தொட்டது.
புத்தகங்கள், தோற்பை
சகிதம் மகன் நிமலுடன்
மிஸ் இறங்கி
‘டாட்டா’ காட்ட
கார் விரைந்தது..
கேட் மூடப்பட்டது..
அம்மா…
வகுப்பிற்குள் நுழைந்தோம்
நிமல் முன்வரிசையில்..
நாங்கள்
முட்குத்திய கை கால்களுடன்
அரிப்பின் மிகுதியில்…
அம்ம்மாஅ…
நீ ஒரு ‘மிஸ்’
ஆக முடியாதா ?
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்

வளர்ந்தது குறைக்க
தேவையென்றால் அழகாக்க
யாசகன் முதல் போஷகன் வரை
யாரையும் ஏற்றி இறக்கும்
தலை குனிய நிமிர வைப்பதே
அவன் தொழில்
வெட்டுக்குத்து ஆயுதங்களுடன்
விளையாட்டுக் காட்டும்
வித்தை தெரிந்தவன்
சுருளாக நேராக
கனமாக கூராக
எப்படியிருந்தாலும்….
வெளியாக்கி
கான் வெட்டி
பாத்தி கட்டி பயிர் நட்டு
சரி செய்யும் வேலையது
கட்டணம் மட்டும்
‘எல்லோருக்கும்’
ஒன்றே..
சேவற் கொண்டை
ரத்த நிறம்
வெள்ளைச் சாம்பல்
நரைத்த நிறம்
அளிக்கப்படும், மறைக்கப்படும்
ஞாயிறன்றும்
கடை திறந்திருக்கும்..
வார இறுதிகளில்
இளையவர்கள்
கோடிட்டு
‘பங்க்’கிட்டு
கொண்டாடும் அவன்
கலை
நாட்டுத் ‘தலைவன்
தலையையும்…
சில மணிநேரம்
சிறைப்பிடிக்கும்….
கத்தியும் கத்திரியும்
அவனிடம் மட்டும்
தானிருக்கும்….

Leave a comment