சித்திரக்கூடம்: கண்ணெழுத்துக் குறிப்புகள்

(சா. பாலுசாமி அவர்களின் திருப்புடைமருதூர் ஓவிய நூல் அறிமுகம்)

முனைவர் சா. கருணாகரன்

பொழுதுபோக்கு என்னும் நிலையைக் கடந்து, கலைகள் ஒரு பெரும் உரையாடலை நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு நிகழ்த்துகின்றன. இவ்வுரையாடல்கள், பல்வேறு பொருண்மைகளையும், நினைவுகளையும், வரலாறுகளையும், வாழ்வியலையும், சூழலியலையும், நம்பிக்கைகளையும் இன்னும் பலவற்றையும் பேசுபொருளாகக் கொண்டு அமைகின்றன. 

இத்தகைய பேசுபொருள்கள், பல்வேறு உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, அறியாமையை விலக்குகின்றன. ஐயங்களைத் தீர்க்கின்றன.

கலைகளின் பல்வேறு வடிவங்களில் ஒன்றான ஓவியக்கலை, மேற்கூறிய பேசுபொருள்களைக் கண்களின்வழி நிகழ்த்துகின்றன. கலைகள் மற்றவற்றினும், கூடுதலாகப் பல்வேறு விளக்கங்களைத் தருகின்றன. இதற்குத் தக்க சான்றாகச் சமீபத்தில் கலையியல் ஆய்வறிஞர் முனைவர் சா. பாலுசாமி அவர்களால் வெளியிடப்பெற்றுள்ள திருப்புடைமருதூர் ஓவியங்களைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும்.

தமிழ்நாடு கி.பி.15ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை விஜயநகர, நாயக்கர் ஆட்சியின்கீழ் இருந்தது. இக்காலக்கட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு கோயில்கள் புனரமைக்கப்பெற்று, கலைகள் செழித்துவளரும் இடங்களாகத் திகழ்ந்தன. கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசை, நாட்டியம் என நிகழ்த்துக்கலைகளும், நிகழ்த்தாக்கலைகளும் விஜயநகர – நாயக்கர் பாணி என்னும் செல்வாக்கினால் அணையப்பெற்று பீடுநடையிட்டன.

இவற்றில், திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆற்றுடன் கடனாநதி என்னும் சிற்றாறு கலக்குமிடத்தில் அமைந்துள்ள திருப்புடைமருதூர் கோயில் கோபுரத்தின் நான்கு தளங்களிலும் வரையப்பெற்றுள்ள ஓவியங்கள், விஜய நகர – நாயக்கர் பாணிக்குத் தென்தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மிகச் சிறந்த சான்றுகளில் முழுமையான ஒன்றாகத் திகழ்கின்றன.

செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் வெளியிட்டுள்ள சா.பாலுசாமி அவர்களின் திருப்புடைமருதூர் ஓவியங்கள் என்னும் நூல், மேற்குறித்த ஓவிய பாணியை உள்ளவாறே ஆவணப்படுத்தியுள்ளது.

தமிழில் வந்துள்ள முழுமையான ஓவிய ஆவண நூல் இதுவொன்றே ஆகும். சா. பாலுசாமி அவர்கள் இந்நூலுக்காக 20 ஆண்டுகள் உழைத்துள்ளார் என்பதிலிருந்து இந்நூலின் முக்கியத்துவத்தை அறியமுடியும். இதற்கான அவரது முயற்சியும், உழைப்பும் பிரம்மிக்கத்தக்கனவாம்.

இந்நூலில், கோயில் இடமும் அதன் வரலாறும், கோயில் அமைப்பு, இராசகோபுரம், ஓவியம் வரையப்பெற்ற காலத்தில் அரசியல், சமய, கலை நிலைகள், விஜயநகர ஓவியங்கள், நாயக்கர் கலை மரபு, கலைஞர்கள், ஓவியங்களின் காலம் உள்ளிட்டவற்றை நுண்ணிதின் நுணுகி ஆராய்ந்துள்ளார். ஐந்து தளங்களிலும் உள்ள ஓவியங்களைக் காண்பதற்குமுன் இத்தகைய தகவல்கள், ஓவியம் வரையப்பெற்ற காலம் குறித்த பார்வையை ஆர்வலர்களுக்கு அளிக்கின்றன. பின்பு, ஒவ்வொரு தளத்தில் உள்ள ஓவியங்களும் மிக நுட்பமாகக் காட்சிப்படுகின்றன.

தள அறிமுகமும், சுவர் விளக்கங்களும்

ஓவியங்களைக் காண்பதற்கு முன்பு, ஒவ்வொரு தளத்தின் உள்வரைபடங்கள் இந்நூலில் கொடுக்கப்பெற்றுள்ளன. தளத்திற்குள் நுழைந்ததும் வடக்குப்புறச் சுவரிலிருந்து ஓவியங்கள் தொடங்குகின்றன. சுவர்ப் பகுதி ஒவ்வொன்றுக்கும் A, B, C என P வரை பெயரிடப்பெற்று, அப்பெயரினுள் இடம்பெற்றிருக்கும் ஓவியங்கள் காட்சிக்குக்காட்சி விளக்கப்பெற்றிருக்கின்றன.

ஓவியப்பொருண்மைகள்

சிவபெருமான் தொடர்பான புராணக் காட்சிகளும், திருமால் தொடர்பான காட்சிகளும், மகாபாரதக் காட்சிகளும், பல்வேறு திருக்கோயில்களும், கடவுளர்களது உருவங்களும், முனிவர்களது உருவங்களும், கலைஞர்களது உருவங்களும், திருப்புடைமருதூர் தலபுராணக் காட்சிகளும், வள்ளி – முருகன் திருமணக்காட்சிகளும், தாமிரபரணி போர்க்காட்சிகளும் ஓவியங்களின் பொருண்மைகளாக அமைந்துள்ளன.

சிவபெருமான் தொடர்பான புராணக்காட்சிகள்

திருப்புடைமருதூர் கோயில் கோபுரத்தின் ஐந்து தளங்களிலும் கீழ்க்காணும் திருவிளையாடல் புராணக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அனல்வாதக் காட்சிகள் (தளம் 1, சுவர் G)

அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம் (தளம் 3, சுவர் O)

இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் (தளம் 3, சுவர் G)

இந்திரன் பழி தீர்த்த படலம் (தளம் 3, சுவர் N)

இறைவன் வெள்ளியம்பலத்தில் திருக்கூத்தாடியது (தளம் 3, சுவர் O)

உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை கொடுத்தது (தளம் 3, சுவர் B)

உக்கிரபாண்டியன் திருவவதாரம் (தளம் 3, சுவர் B)

உலவாக் கிழியருளிய படலம் (தளம் 3, சுவர் I)

எல்லாம் வல்ல சித்தரான படலம் (தளம் 3, சுவர் B)

ஏழுகடல் அழைத்த படலம் (தளம் 3, சுவர் O)

ஏழுகடல் அழைத்தது: மலையத்துவனும் காஞ்சனமாலையும் நீராடும் காட்சி (தளம் 3, சுவர் B)

கடல்சுவர வேல்விட்ட படலம் (தளம் 3, சுவர் G)

கல்லானைக்குக் கரும்பருத்திய படலம் (தளம் 3, சுவர் B)

கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் (தளம் 3, சுவர் G)

கீரனைக் கரையேற்றிய படலம் (தளம் 3, சுவர் G)

குண்டோதரனுக்கு இறைவன் அன்னமிட்ட படலம் (தளம் 3, சுவர் O)

சங்கத்தார் கலகந்தீர்த்த படலம் (தளம் 3, சுவர் G)

சமணரைக் கழுவேற்றிய படலம் (தளம் 1, சுவர் G)

சுந்தரரிடம் திருடிய வேடர்களுக்குச் சேரமான் பெருமாள் பரசு வழங்கும் காட்சி (தளம் 3, சுவர் C)

சேரமான் பெருமாளும் சுந்தரரும் கயிலை செல்லும் காட்சி (தளம் 3, சுவர் C)

தடாதகைப் பிராட்டி திருமணப்படலம் (தளம் 3, சுவர் N)

தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம் (தளம் 3, சுவர் N)

தடாதகைப் பிராட்டியைச் சிவபெருமான் திருமணம் செய்யும் காட்சி (தளம் 3 சுவர் O)

தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் (தளம் 3, சுவர் G)

திருநகரம் கண்ட படலம் (தளம் 3, சுவர் N)

திருமுகங்கொடுத்த படலம் (தளம் 3, சுவர் G)

நரியைப் பரியாக்கிய படலம் (தளம் 1, சுவர் B)

பாண்டியன் சுரம் தீரத்த படலம் (தளம் 1, சுவர் G)

புனல்வாதக் காட்சிகள் (தளம் 1, சுவர் G)

மலையத்துவனை அழைத்தது: காஞ்சனமாலை கணவன் கரம்பற்றிக் கடலாடல்(தளம் 3, சுவர் B)

மாணிக்கம் விற்ற படலம் (தளம் 3, சுவர் I)

மாமனாக வந்து வழக்குரைத்த படலம் (தளம் 3, சுவர் G)

முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் மீட்ட கதை (தளம் 3, சுவர் C)

மெய்க்காட்டிய படலம் (தளம் 3, சுவர் I)

மேருவைச் செண்டாலடித்த படலம் (தளம் 3, சுவர் B)

யானை எய்த நிகழ்ச்சி (தளம் 3, சுவர் I)

வரகுணனுக்குச் சிவலோகம் காட்டியது (தளம் 3, சுவர் G)

வலைவீசிய படலம் (தளம் 3, சுவர் I)

வளையல் விற்ற படலம் (தளம் 3, சுவர் I)

வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் (தளம் 1, சுவர் B)

விறகு விற்ற படலம் (தளம் 3, சுவர் G)

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் (தளம் 3, சுவர் N)

இத்தகைய படல நிகழ்ச்சிகளைக் காட்சிக்குக் காட்சி எடுத்துக்காட்டி, அக்காட்சியில் இடம்பெற்றிருக்கும் உருவம் முதற்கொண்டு அவ்வுருவம் குறிப்பிடும் குறிப்புகள், ஆடைகள், அணிகலன்கள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்தையும் கூர்ந்து அலசி ஆராய்ந்துள்ளார் ஆய்வாளர் சா. பாலுசாமி. மேலும், காட்சிக்குரிய புராணக் குறிப்புரைகளை முழுமையாகத் தந்து, அக்குறிப்புரைகள் ஓவியக் காட்சிகளுக்குப் பொருந்துமாற்றையும், ஒவ்வொரு படலமும் எத்தனை காட்சிகளில் இயம்பப்பெற்றுள்ளன என்பதையும் எண்ணி உரைத்துள்ளார். காட்டாக, முதல் தளத்தில் மாணிக்கவாசகர் தொடர்பான நிகழ்வுகளுக்கு 15 காட்சிகளும், திருஞானசம்பந்தர் தொடர்பான நிகழ்வுகளுக்கு 11 காட்சிகளும் வழங்கப்பெற்றுள்ளன என்று, புராண நிகழ்ச்சிகளுக்கான காட்சி எண்ணிக்கைகளை அனைத்துக் காட்சிகளுக்கும் வழங்குகிறார்.

திருமால் தொடர்பான காட்சிகள்

திருப்புடைமருதூர் கோயில் கோபுரத்தில் சிவபெருமான் தொடர்பான காட்சிகள் அதிகம் என்றாலும், இராமயணக் காட்சிகளும், பாகவதக் கதைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இராமாணய யுத்தகாண்டத்தில் வரும் போர்க்காட்சிகள் முதல் தளத்தில் தீட்டப்பெற்றுள்ளன. இராவணன் தேர் ஏறிப் போருக்கு வரும் காட்சி (தளம் 1, சுவர் C), இந்திரஜித்தின் போர்க்கோலக்காட்சி (தளம் 1, சுவர் D), இலக்குவணனின் போர்க்கோலக் காட்சி (தளம் 1, சுவர் E), சுக்ரீவன் வீடணனுடன் போருக்கு வரும் காட்சி (தளம் 1, சுவர் E), அனுமன் மீதமர்ந்து இராமன் போருக்கு வரும் காட்சி (தளம் 1, சுவர் F) ஆகிய காட்சிகள் தீட்டப்பெற்றுள்ளன.

மேலும், மாபலிக் கதைக்காட்சி (தளம் 1, சுவர் L (iii)), திருவிக்கிரம அவதாரக் காட்சி (தளம் 1, சுவர் M), திருமால் பள்ளிகொண்ட காட்சி, திருமாலின் அவதாரக் காட்சிகள் (தளம் 3, சுவர் H), கோபாலன் குழல் ஊதும் காட்சி (தளம் 4, சுவர் C (ii)) ஆகிய ஓவியங்கள் திருமால் தொடர்பானதாக அமைந்துள்ளன.

பிரகலாதன் குருவிடம் பயிலும் காட்சியும், தூணிலிருந்து வெளிப்படும் நரசிம்மர் கடும் சினத்துடன் இரணியனை நோக்கிச் சென்று, அவனைப் பற்றித் தம் மடியில் கிடத்தும் காட்சிகளும், இரணியனை மீட்க வரும் இரு தளபதிகளின் உருவம் உள்ளிட்ட இரணியவதைக் காட்சிகள் தளம் இரண்டில் தீட்டப்பெற்றுள்ளன (தளம் 2, சுவர் C, D)

காட்சிகளுடைய பல்வேறு பரிமாணங்கள், காட்சி மொழிகள், உடை, அணிகலன்கள், ஆயுதங்கள், முத்திரைகள், மரங்கள், மலர்கள் ஆகியவற்றை குறிப்பாக விளக்குகிறார் ஆசிரியர். மேலும், காட்சிகள் தொடர்பான முழு செய்திகளையும் புரிதலுக்காக வழங்கியுள்ளார்.

மகாபாரதக்காட்சிகள்

கௌரவர்களை வெல்வதற்கு அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதம் பெறவேண்டும் என்ற வியாசரின் அறிவுரையை ஏற்று, தருமரிடம் விடைபெற்றுச் செல்வது முதல், சிவபெருமானோடு சண்டையிட்டு, இறுதியில் சிவபெருமானிடமிருந்து பாசுபதத்தைப் பெறுவது வரை ஏழு காட்சிகளில் கிரார்தார்ச்சுனீய நிகழ்ச்சிகள் முதல் தளத்தில் (சுவர் N) தீட்டப்பெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சியைச் சித்திரிக்கும் ஓவியங்களில் ஒவ்வொரு உருவங்களையும் அடையாளம் கண்டு, குறிப்பிடும் ஆசிரியரின் தேடல் நுட்பம், இருபதாண்டு உழைப்பிற்கான சான்றுகளாகும்.

திருக்கோயில்கள்

ஓவியத்தைக் கண்களால் கண்டு, இது இன்ன கோயில் என்று அறியமுடியாத போதும், அறிவுக் கண்கொண்டு, கண்டு ஒவ்வொரு கோயில் ஓவியங்களையும் ஊர்ப்பெயர்களோடு அடையாளம் காட்டுகிறார் சா. பாலுசாமி அவர்கள்.

முதல்தளத்தின் சுவர் I-இல் அமைந்துள்ள கோயில்களாகத் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருவரங்கநாதர் கோயில், திருக்குற்றாலநாதர் கோயில், திருவையாறு ஐயாரப்பர் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆகிய கோயில்களைக் குறிப்பிடுகிறார். அதேதளத்தில் சுவர் Lஇல் உள்ள கோயிலைச் சிவசக்தி கோயில் என்று குறிப்பிடும் அவர், சுவர் N (i)-அமைந்துள்ள ஆறு கோயில் காட்சிகளை அடையாளம் காணமுடியாவிட்டாலும், காட்சிகளை விவரித்து எழுதியுள்ளார்.

கடவுளர்களது உருவங்கள்

பல்வேறு கடவுளர்களின் உருவங்கள், ஐந்து தளங்களிலும் ஆங்காங்குத் தீட்டப்பெற்றுள்ளன. குறிப்பாக,

இரதி – மன்மதன் (தளம் 4, சுவர் M)

எமனும் அக்கினியும் (தளம் 3, சுவர் J)

கருடாழ்வார் (தளம் 4, சுவர் J)

கலைமகள் (தளம் 5, சுவர் R)

சனீஸ்வரர் (தளம் 5, சுவர் I)

சிவ ஆனந்த நடனக் காட்சி (தளம் 2, சுவர் F)

சிவனும் உமையும் புலி வாகனத்தில் (தளம் 5, சுவர் J)

தட்சிணாமூர்த்தி (தளம் 1, சுவர் J)

திரிபுரசுந்தரி (தளம் 5, சுவர் R)

திருமால் (தளம் 5, சுவர் H)

துர்க்கை (தளம் 5, சுவர் R)

நடனமாடும் காளி தேவி (தளம் 5, சுவர் H)

மயில்வாகனன் (தளம் 5, சுவர் R)

மரத்தின்கீழ் சிவபெருமான் (தளம் 5, சுவர் K)

மாதொருபாகன்  (தளம் 5, சுவர் H)

முயலகன் மீது நிற்கும் சிவபெருமான் (தளம் 5, சுவர் H)

வருணனும் வாயுவும் (தளம் 3, சுவர் J)

விநாயகர் (தளம் 2, சுவர் E) (தளம் 4, சுவர் A)

ஆகிய உருவங்கள் தனித்தனிச் சுவர்களில் தீட்டப்பெற்றுள்ளன. இதற்கான முக்கியத்துவம், உருவ அமைதி, அணிகலன்கள், கைகளில் ஏந்தியுள்ள ஆயுதங்கள், ஆடைகள், தலை மகுடங்கள், மாலைகள், அமர்ந்துள்ள ஊர்திகள், மலர்கள், இவ்வுருவங்களைச் சுற்றி காணப்படும் பிற உருவங்கள், வழிபாடுகள், முத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஓவியத்தின் துணைகொண்டு ஆசிரியர் அலசியுள்ளார்.

பிற உருவங்கள்

முனிவர்கள், துறவிகள், அரக்கர்கள், பூதங்கள், துவாரபாலகர்கள், கலைஞர்கள், அதிகார நந்தி, விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு காட்சிகளை  ஐந்து தளங்களிலும் காணமுடிகின்றன.

அதிகார நந்தி: தளம் 2, சுவர் E

அரக்கர்கள்: தளம் 4, சுவர் D, J

கலைஞர்கள்: தளம் 3, சுவர் F, J

துவாரபாலகர்கள்: தளம் 5, சுவர் G

துறவிகள்: தளம் 1, சுவர் K;  தளம் 3, சுவர் F, M; தளம் 4, சுவர் A, D, O

பூதங்கள்: தளம் 2, சுவர் E; தளம் 3, சுவர் M; தளம் 4, சுவர் M

முனிவர்கள்: தளம் 1, சுவர் P; தளம் 2, சுவர் E; தளம் 4, சுவர் C; தளம் 5, சுவர் R

விலங்குகள், பறவைகள்: நாய், பூனை, ஆடு, ஓவியங்களில் வெளிவரிகளில் மயில், அன்னம், புறா, மான் ஆகிய உருவங்களும் வரையப்பெற்றுள்ளன.

திருப்புடைமருதூர் தலபுராணக் காட்சிகள்

தளம் நான்கில், திருப்புடைமருதூர் தலபுராணக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது.

தலபுராணக் காட்சிகளில் இந்திரன் பழி தீர்த்த படலம் இரு காட்சிகளாகவும், சீதரப் படலம் இரு காட்சிகளாகவும், சதுமுகப் படலம் ஒரு காட்சியாகவும், லட்சுமியும் பூதேவியும் சிவலிங்கத்தை வழிபடுவதும், மூன்று பெண்கள் மரத்திலிருந்து மலர்களை உதிர்ப்பதும், ஆதிமனு தேவ கன்னியர்களைக் கண்டு நிற்பதும் ஒவ்வொரு காட்சியாகவும், ஆலங்காண் படலம் 7 காட்சிககளாகவும் சுவர் Bஇல் தீட்டப்பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக சுவர் Nஇல் விருத்திராசுரன் வதைப்படலக் நிகழ்ச்சி வரையப்பெற்றுள்ளன. விருத்திராசுரனுக்கும் இந்திரனுக்கும் இடையே நடைபெற்ற போர், போரில் விருத்திராசுரன் வெற்றி பெற, இந்திரன் வஜ்ராயுதம் எய்ததும் விருத்திராசுரன் வீழ்ச்சியடைதல், அசுரகுலப் பெண்கள் அவலநிலையை அடைதல், இந்திரனுக்குப் பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தைத் திரும்புடைமருதூர் வந்து வழிபட்டு நீக்கிக்கொள்வது உள்ளிட்ட காட்சிகள் விரிவாகத் தீட்டப்பெற்றுள்ளன. சுவர் B, N ஆகிய இரண்டும் பெரிய பரப்புடையனவாதலால் இக்காட்சிகள் விளக்கமாகத் தீட்டப்பெற்றுள்ளன. இதன் நுட்பங்களைத் தலபுராணத்தின் துணையுடன் ஆசிரியர் விவரித்துச்செல்கிறார்.

வள்ளி திருமணம்

நான்காம் தளத்தின் சுவர் I பரப்பில், வள்ளி – முருகன் திருமணக் கதை மிக விரிவாகத் தீட்டப்பட்டுள்ளன. வள்ளி மான் வயிற்றில் பிறப்பது, தினைப்புனம் காப்பது, முருகன் பல்வேறு வடிவங்களில் வந்து வள்ளியோடு உரையாடுவது, விநாயகர் யானை வடிவில் வருவது, வள்ளி – முருகன் திருமண நிகழ்ச்சி ஆகியன 22 காட்சிகளில் தீட்டப்பெற்றுள்ளன. இக்காட்சிகளை நுணுகி நுணுகி விவரித்துள்ளார் சா. பாலுசாமி அவர்கள்.

தாமிரபரணி போர்

வரலாற்று நிகழ்வுகளை ஓவியமாகத் தீட்டி வைப்பது இந்திய மரபில் மிகத் தொன்மையானதாகும். விஜயநகருக்கும் திருவிதாங்கூருக்கும் இடையே நடைபெற்ற போர் நிகழ்ச்சிகளையும், போர்ச்சுகீசியரின் கடல்வழி குதிரை வணிகத்தையும் குறிப்பிடும் மிக முக்கியமான ஓவியங்கள் கோபுரத்தின் இரண்டாம் தளத்தில் தீட்டப்பெற்றுள்ளன.

இவ்வோவியங்கள் குறித்து ஆய்வு செய்த ஆய்வறிஞர்கள் பலரும், இது ஒரு போர்க்காட்சி என்றும், குதிரை வணிகம் என்றும் குறித்துச்சென்ற நிலையில், ஒரு மிகப்பெரிய வரலாற்று நிகழ்வைப் பல காலம் ஆய்ந்து அதன் உண்மைத்தன்மையை வெளிக்கொணர்ந்துள்ளார் கலையியல் ஆய்வறிஞர் சா.பாலுசாமி அவர்கள்.

வரலாற்றில் தாமிரபரணிப் போர் என்று குறிக்கப்பெறும் இப்போர்க் காட்சிகளை அரிதின் முயன்று, அச்சுதராயப்யுதயம் என்னும் சமஸ்கிருத நூலின்வழி, விளக்கத்திற்குக் கொண்டு வந்துள்ள பெருமை அவரையே சாரும். கி.பி. 1532ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜுலைக்குள் நிகழ்ந்திருக்கும் இப்போர் நினைவுகளைத் திருப்புடைமருதூர் கோயில் கோபுரத்தின் இரண்டாவது தளம் சுமந்து நிற்கிறது. அது 492 ஆண்டுகளுக்குப் பிறகு சா. பாலுசாமி அவர்களால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இப்போருக்கான காரணங்களைப் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் இந்நூலின் இரண்டாம் தளக்காட்சிகளின் தொடக்கத்தில் விவரித்துள்ளார். இரண்டாம் தளத்தின் 16 சுவர் ஓவியப் பிரிவுகளில், C, D, E, F ஆகிய நான்கு சுவர்கள் தவிர, மற்ற 12 பகுதிகளில் போர்க்காட்சிகள் மிக விரிவாகத் தீட்டப்பெற்றுள்ளன.

படைவீரர்களும், படைப்பாணர்களும் செல்லும் காட்சி (சுவர் A), பூதலவீர உதயமார்த்தாண்டவர்மன் முப்படைத்தளபதிகளுடன் ஆலோசனை செய்யும் காட்சி, தளபதி ஒருவர் படையை நடத்திச் செல்லும் காட்சி, உதயமார்த்தாண்டவர்மர் போர்ச்சுகீசியரிடம் குதிரை வாங்கும் காட்சி (சுவர் B), விஜயநகரப் பிரதிநிதிகள், பூதலவீர உதயமார்த்தாண்டவர்மரைச் சந்தித்து பாண்டிய நாட்டை விடுத்து, பேரரசுக்குப் பணியுமாறு மன்னர் அச்சுதராயர் அனுப்பிய செய்தியைக் கூற, அதனை மார்த்தாண்டவர்மர் மறுக்கும் காட்சி, அடுத்து, திருவிதாங்கூர் படைக்கும் விஜயநகரப் படைக்கும் இடையே நிகழ்ந்த கடுமையான போர்க்காட்சி, திருவிதாங்கூர் படைகள் பின்வாங்கிச் செல்வதும், அவர்களை விஜயநகரப் படைகள் துரத்தியவாறே முன்னேறி வரும் காட்சி (சுவர் G), வெற்றிக்குப் பிறகு தளபதி முதலானோருடன் சின்னத்திருமலை உரையாடுவதும், விஜயநகரப் படைகளும் தளபதிகளும் அணிவகுத்துச் செல்வதுமான காட்சி (சுவர் I), விஜயநகரத் தளபதிகள் திருப்புடைமருதூர் வந்து, நாறும்பூநாதரை வழிபடும் காட்சி (சுவர் J), விஜயநகரப் பிரதானி சலக்கராஜு, பாண்டிய மன்னனை அழைத்துவருமாறு கட்டளையிடுவதும் (சுவர் K), பாண்டியன் சீவல்லபன் பல்லக்கில் வருவதும் (சுவர் L), அச்சுதராயர் பாண்டிய இளவரசியை மணப்பதும், பாண்டியன் முடிசூடுவதையும் சித்திரிக்கும் காட்சி (சுவர் M), பிறகு, பிரதிநிதிகளுடன் அச்சுததேவராயர் ஆலோசிப்பதும், ஒரு தளபதியை முன்கூட்டியே அனுப்பி வைப்பதும், வீரர்கள் புடைசூழ மன்னர் விஜயநகரம் திரும்பும் காட்சி (சுவர் N), படைகள் நாடு திரும்பும் நிகழ்ச்சிகள் எட்டுக் கட்டங்களில் (சுவர் O, P) விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

சுவர் Hஇல் தீட்டப்பெற்றுள்ள குதிரை வணிகக் காட்சி மிகப் பெரிய அளவில் சித்தரிக்கப்பெற்றுள்ளது. அரேபியர்களிடமிருந்த குதிரை வணிகம், போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்துக்குள் சென்றதையும், தென்னிந்தியாவோடு போர்ச்சுகீசியர் கொண்டிருந்த கப்பல் வணிகம் குறித்தும்  மிக விரிவான  தரவுகளோடு விளக்கி, இவ்வோவியக்காட்சியின் முக்கியத்துவத்தை சா. பாலுசாமி எடுத்துரைக்கிறார்.

காட்சி விளக்கங்கள்

ஓவியங்களில் இடம்பெற்றுள்ள, குருந்த மரம், பலா மரம், வேங்கை மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள், மத்தளம், மிருதங்கம், குடமுழா, உருமி, திருச்சின்னம், கைத்தாளம், கின்னரம் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகள், போர்க் கருவிகள், துப்பாக்கிகள், பல்வேறு அணிகலன்கள், ஆடை வகைகள், கூந்தல் முடிப்புகள், மீன்கள், பூ வேலைப்பாடுகள், தீபாராதனைகள், கழுவேற்றம்,  புலி, பூனை, பன்றி, ஆடு, மான், குதிரை, யானை உள்ளிட்ட விலங்குகள், யானை அலங்காரம், குதிரை அலங்காரம், திருமணக்காட்சி, வழிபாட்டுக்காட்சி, ஆலோசனைக்காட்சிகள், பட்டாபிசேகக் காட்சிகள் போன்றவை மிகத் துல்லியமாக இந்நூலில் விளக்கப்பெற்றுள்ளன.

மாந்த உருவ விளக்கங்கள்

ஓவியங்களில் காணப்படக்கூடிய பிற மனித உருவங்களை அடையாளம் கண்டு, ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். மன்னர்கள், தளபதிகள், அமைச்சர்கள், வீரர்கள், கடவுளர்கள், பெண் உருவங்கள், துறவிகள், அர்ச்சகர்கள், இடையர்கள், பரதவர்கள், வேடர்கள், குறவர்கள், குதிரைப்பாகர்கள், யானைப்பாகர்கள், சமணர்கள், தொன்ம மாந்தர்கள்,  பூசாரிகள், பல்லக்குத்தூக்கிகள், ஓலை நாயகம், வாத்தியக்காரர்கள், கோயில் அர்ச்சகர்கள், அடைப்பைக்காரர்கள், பாதுகாவலர்கள், வீரர்கள், தேவரடியார்கள் ஆகியோர் அனைவரையும் விவரித்து, அவர்களது உருவ அமைப்பு முதற்கொண்டு, அணிகலன்கள், ஆடைகள், அசைவுக்குறிப்புகள் முதலியவற்றையும் இந்நூலில் விவரித்துள்ளார்.

உத்தி அமைப்பு பாணி

சுவர்கள் காட்சிகளுக்கு ஏற்ப ஒதுக்கப்பெற்றுள்ளதையும், சுவர்ப் பரப்பு முழுமையாக ஓவியத்திற்குப் பயன்பட்டுள்ளதையும் குறிப்பிடும் சா. பாலுசாமி அவர்கள், சுவர்ப்பகுப்புகள் காட்சிப்பகுப்புகளுக்கு உதவுமாற்றை விவரித்துள்ளார். கதைபுரிதலுக்காகத் தனித்தனிக் காட்சிகள், ஒரே வரிசையில் அடுத்தடுத்த காட்சிகள், உள்காட்சிகள், கற்பனைக்காட்சிகள், கதையோட்டத்துக்கு ஏற்ப ஓவியங்கள் இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும், மேலிருந்து கீழாகவும், இரண்டு, மூன்று, நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பெற்றும் விளக்கப்பெற்றுள்ளதைத் துல்லியமாக எடுத்துரைக்கிறார். ஓவியக்காட்சிகளுக்கான எண்ணிக்கைகளையும், ஓவியங்களில் இடப்பெற்றுள்ள கோடுகளின் அழுத்தங்களையும், ஓவியங்களின் வண்ணங்களையும் தனித்தனியே விவரித்துள்ளார். திருப்புடைமருதூர் ஓவியங்களில் லெபாக்ஷி பாணியின் செல்வாக்கு மிக்கிருப்பதைத் தம் தெள்ளிய அறிவினால் நிறுவுகின்றார். வெளிப்பயன்பாடு, ஓவியத்தின் பல்வேறு கோணங்கள், உயிரியக்கங்கள் ஆகியவை ஐந்து தள ஓவியங்களிலும் பயிலும் முறைகளை விவரித்து அலசியுள்ளார். ஓவியங்கள் குறித்த இவரது விவரிப்பு முறைகள் (பாணி) புதுமையானதாகும். இத்தகைய பாணி, பல்வேறு கலையியல் ஆய்வறிஞர்களால் பின்பற்றப்பட்டுவருகின்றன.

பின்னிணைப்புகள்

நூலின் பின்னிணைப்பாகத் திருப்புடைமருதூர் கோயில் கோபுரத்தளங்களில் அமைந்துள்ள மரச்சிற்பங்களை ஆவணப்படுத்தியுள்ளார். தளங்களையும், விதானங்களையும், தூண்களையும், கதவுகளையும், தூண் சிற்பங்களையும், தெய்வ உருவங்களையும், துறவியர் உருவங்களையும், மகாபாரத, திருவிளையாடற்புராணக் காட்சிகளையும், காளைச்சண்டை, சேவல் சண்டை, கூத்து, பாம்பாட்டி உருவம், நடனம், போர்ச்சுகீசிய வணிகம், இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், வேட்டைக்காட்சிகள், போர்க்காட்சிகள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உருவங்களையும் நிகழ்வுகளையும் மரங்களால் இழைத்து, மரச்சிற்பக் கூடமாகக் கோபுரம் திகழ்வதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக திருப்புடைமருதூரில் பெயரில் உள்ள பள்ளு, அந்தாதி, மாலை, கோவை போன்ற பல்வேறு இலக்கியங்களையும், திருப்புடைமருதூருக்கு அருகில் உள்ள தலங்களில் உள்ள ஓவியங்களையும், செழுமையான சொல்லடைவினையும் அளித்துள்ளார்.

நிறைவாக

காணுந்தோறும் கண் சுழல்கின்ற பணியைக் கண்ணயராது இருபதாண்டுகாலம் இதே வேலையாகக் கொண்டு, மிகப்பெரும் பணியை மிக அமைதியாகச் செய்துள்ளார் சா. பாலுசாமி அவர்கள். அவரோடு உடனிருந்து பல்லாற்றானும் அருந்துணையாயிருந்த முனைவர் கோ. உத்திராடம் அவர்களை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். இந்நூல் வெளிவருவதற்கு சா. பாலுசாமி அவர்களோடு நின்ற அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இந்நூல், தமிழ்நாட்டு ஓவியக்கலை மரபில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப்பெறும் என்பதோடு, பல்வேறு விருதுகளும் பெறும் என்பதில் ஐயமில்லை.

Leave a comment

Trending