சித்த மரபும் இரசவாதக் கோட்பாடும்
பாலு ஆனந்த்.செ
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
தியாகராசர் கல்லூரி,
மதுரை -9.
7010886364
baluanand10092000@gmail.com

மனம், புத்தி , சித்தம், அகங்காரம் என்னும் அகக்கருவிகள் (அந்தக்கரணங்கள்) நான்கினுள், மனம் நினைக்கும், புத்தி நிச்சயிக்கும், அகங்காரம் கொண்டெழுப்பும்; சித்தம் ஏனைய மூன்றுக்கு இடமாக அமையும். அத்தகைய சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள். தமிழகத்தின் பெருவெளியில் சித்த மரபென்பது வாழையடி வாழையாக வந்ததெனலாம். கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் . இம்மரபு தொடங்கி இருக்கக்கூடும் என தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். ‘ சித்தர்’ என்னும் சொல்லாடலை முதன்முதலில் திருமூலர் தன் திருமந்திரத்தில் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். இவருடைய காலம் கி.பி.ஐந்து முதல் ஆறாம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது. எனவே இவரின் காலத்தைச் சித்த மரபின் தொடக்கமாகக் கருதுகின்றோம். சித்தர்கள் எண்ணிக்கையில் எண்ணிலடங்காதோராக இருந்த போதிலும் தமிழக சித்தர்களைப் ‘பதினெண் சித்தர்கள்’ என்பது வழக்கு. திருமூலர், இராமதேவர், கும்பமுனி, இடைக்காடர், தன்வந்திரி, வான்மீகி, கமலமுனி, போகநாதர், குதம்பைச்சித்தர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதகுரு, பாம்பாட்டிச் சித்தர், சட்டைமுனி, அந்தரானந்தத் தேவர், கோரக்கர் என பதினெண் சித்தர் பெயர் பட்டியலைப் சென்னைப்பல்கலைக் கழகத் தமிழகராதி தருகிறது. சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், வெகுளி நாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திர நாதர், அநாதிநாதர், கோரக்கநாதர் ஆகிய ஒன்பது சித்தர்களை ‘நவநாத சித்தர்கள்’ என்றழைக்கும் வடமொழி மரபும் இங்கு எண்ணத்தக்கது. இவையன்றி பெரியஞானக்கோவை நாற்பதுக்கும் மேற்பட்ட சித்தர்களைப் பட்டியலிடுகிறது. இவர்கள் மக்களின் ஆழ்மன உணர்வுகளான கடவுள் நம்பிக்கை, சாதிசமயங்கள், சடங்குகள், மூடநம்பிக்கைகள் மீது கல்லெறிந்து பார்த்தவர்கள். சித்தத்தையே சிவமாக்கும் செந்நெறியே நன்னெறி என்று சிறப்புடன் வாழ்ந்தவர்கள். நீரில் நடப்பது , நெருப்பில் அமர்வது, வானில் பறப்பது , கூடுவிட்டு கூடு பாய்வது என மனிதனால் இயலாத செயல்களை செய்ய வல்லவர்கள் . அதனால் தான் பாரதியார், ‘செத்தவர் தம்மை எழுப்பித் தருகின்ற சித்தர் பிறந்த தமிழ்நாடு’ எனப் பாடிப் பரவினார். ‘தமிழ்நாட்டுச் சித்தர் நெறியில் பலவகைப்பாடுகள் உண்டு. சீர்திருத்தவாதிகள், கலகக்குரல் எழுப்பியோர், யோக நிலையில் இருந்தவர்கள், மருத்துவர்கள், ரசவாதிகள், இவர்களில் எதுவுமற்றோர் என அவர்களைப் பல வகைகயாகப் பிரிக்கலாம்’ (2008: 64) என்பது தமிழறிஞர் தொ.பரமசிவன் அவர்களின் வரையறை. கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் என்னும் நூலில்,
“யோக வயித்தியம் சொல் ரசவாதம் எலாக் கலையும்
தேக நிலைபெறும் காயகற்பங்கள் எண் சித்தியும் சொல்
போகருடன் புலிப்பாணி முதலிய புண்யரெலா
மாக முறவமர் வைகாநகர் கொங்கு மண்டலமே”
(கொங்கு மண்டல சதகம்,பாடல் எண் :36)
யோகம், மருத்துவம், இரசவாதம், தேகத்தை நலமாக்கிக்கொள்ளும் காயகற்பம், எட்டு வகையான சித்தி முறைகள் ஆகியவற்றை யெல்லாம் சொல்லும் போகர், புலிப்பாணி முதலான புண்ணியர் எல்லாரும் அமர்ந்திருந்தது கொங்குமண்டலமே என்கிறார் . அகத்தியர், போகர், புலிப்பாணி, கொங்கணர், குதம்பைச் சித்தர் ஆகியோரை இரசவாதிகளாக அடையாளம் காண்கின்றோம்.
உலோகத்தை தங்கமாகும் வித்தையை இரசவாதம் என்பார்கள். அக்காலத்தில் பாதரசம் இந்தச் செயல்பாட்டில் மிக முக்கியப்பங்கு வகித்ததாலேயே இக்கலையை தமிழில் ‘இரசவாதம்’ (Alchemy) என்று அழைத்தனர். இரசம்- பாதரசம் வாதம் – உருவாக்கும் முறை. இதற்கு வகார வித்தை , ஏம வித்தை , தங்க வித்தை எனப் பல்வேறு பெயர்கள் உண்டு. பழங்கால வேதியல் முறையாக இதனைக் கருதினர். கிரேக்கம், சீனம், ஐரோப்பிய, அரேபிய நாடுகளில் தங்கம் தயாரிக்கும் முறைகள்(alchemy methods) குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர். 1403 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி ரசவாதப் பயிற்சியை தடைசெய்தார். அப்பயிற்சிகளை மேற்கொண்டோர்(Alchemist) கடுமையாக தண்டிக்கப்பட்டனர். அதேசமயம் இரண்டாம் ருடால்ஃப் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருவில் உள்ள தன்னுடைய அரண்மனையில் பல்வேறு ரசவாதிகளை(Alchemist) வரவழைத்து, அவர்களைச் சோதனைகள் செய்ய வைத்து, அவர்களது பணிக்காக பல்வேறு பரிசுகளை அளித்துள்ளார் என்பதெல்லாம் வரலாறு.
தமிழ் சித்த மரபில் இரசவாதம் தனித்த இடத்தைப் பெறுகிறது. நீர்ம வடிவத்தில் இருக்கும் பாதரசத்தை திடப்பொருளாக்கும் கலையிலும் அக்காலச் சித்தர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். எரியும் கற்பூரத்தை எரியா மருந்தாக்கல், ஓடும் பாதரசத்தை ஓடாத திடபொருளாககி குளிகை மற்றும் மருந்து செய்தல், வேதையின் ஒருபகுதி தங்கம் செதய்தல் என்று சித்தர்கள் பாடி உள்ளார்கள். இதற்கு அடிப்படையாக முப்பூ என்னும் ரசாயனத்தை பயன்படுத்தியிருக்கின்றனர் இது கிரேக்கம், சீனம், ஐரோப்பிய, அரேபிய நாடுகளின் இரசவாத முறையை விட பழமையானது. உயிரின்பங்களைக் கடந்த சித்தர்கள் உலோக மோகத்திற்கு ஆட்பட்டு தங்கைத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை கையாண்டிருக்க வாய்ப்புகள் குறைவு.
‘வாதி மகன் வைத்தியன்’ என்னும் பழமொழியைக் கவனத்தில் கொள்ளும் போது, சித்தர்களின் இரசவாதக் கோட்பாட்டினை மருத்துவ முறையின் ஓர் அங்கமாக , உடலில் இருக்கும் உலோகங்களின் தன்மையை மாற்றியமைத்து பொன்னுடம்பை பெறுவதற்கான புறச் சோதனையாக , மரணமிலாப் பெருவாழ்விற்கான முயற்சியாக கருத இடமளிக்கிறது. சித்தர்களைத் தத்துவ இரசவாதிகளாகக் (philosophical Alchemist) கருதலாம். இவர்கள் போதித்த இரசவாதத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
• உடலியல் இரசவாதம் (Alchemy within human body)
• உலோகங்களின் இரசவாதம் (Alchemy of Metals)
உடலியல் இரசவாதம் வாசியோகத்தோடு தொடர்புடையது. இதில் மனிதனின் உடலாற்றல் இயற்கை அல்லது இறையின் உயர்மட்ட ஆற்றலாக மாற்றமடையும். இங்கே கந்தகம், பாதரசம், போன்ற அடிப்படை கூறுகள் ஒருமுகப்படுத்துதல் மற்றும் இடைவிடாத வாசியோகத்தினால் அமிர்த திரவமாக (ambrosial fluid) மாற்றமடையும். இது பொன்னுடம்பை அடையும் பெருவழியாகும். இதனை ‘மனம் பழுத்தால் பொன் பழுக்கும்’ என்று மறைபொருளாகச் சுட்டினர். அடிப்படை உலோகங்களைத் தங்கமாக மாற்றும் முறை உலோகங்களின் இரசவாதமாகும். சித்தர்கள் சிடிகை வேதை, மாற்றுயர்வு வேதை, கட்டு வேதை, தூம்பிர வேதை, குரு வேதை, குளிகை வேதை , பரிசன வேதை, களங்கு வேதை பல்வேறு முறைகளைக் கையாண்டுள்ளனர். இரசவாதத்திற்கு உதக நீர் என்னும் மூலிகை நீரைப் பயன்படுத்தியுள்ளனர். உதக நீரைப் பற்றி ”போகர் மலைவாகடம்”, ”கோரக்கர் மலைவாகடம்”, ”அகத்தியர் வாகடம்” போன்ற நூல்களில் விரிவாக கூறப் பட்டிருக்கிறது.
“வேதையாம் பரிசம் தன்னில்
விளங்கிய மணியைக் கேளு
ஆதையாம் லோகஞ் செங்கல்
அடைவுடன் சுக்கான் மண்ணும்
பாதையாய் காட்டு முன்னே
பளிச்சென்று தங்கமாகும்.” (கொங்கணச் சித்தர் பாடல் :173)
நாத வேதை என்பது ரசத்தை மணியாகக் கட்டி அதற்கு முறையான சாரணைகள் செய்து அதை வில்லை போல் தட்ட அந்த சத்தம் எவ்வளவு தெளிவாகக் கேட்குமோ அந்த நேரத்தில் தங்கமாகும் என்றும் இதை பரிச மணியாக மாற்றினால் அது செங்கல், சுக்கான் கல், மணல், போன்றவற்றின் முன் காட்டினால் அவற்றை தங்கமாக்கும் தன்மை பெரும் என்றும் சொல்கிறார் கொங்கணவர். பத்து வகையான உதக நீர் உள்ளதாகவும் அவற்றை அடையாளம் கண்டு பயன் படுத்தும் முறைகளைப் பாடல்களில் காண முடிகிறது. இந்த நீரை விசேடமான பாத்திரங்களில் சேமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
போகர் வைத்தியம் 700 என்ற நூலில் காந்தரசம் தயாரிப்பதைப் பற்றியும், அதனைக் கொண்டு தங்கம் செய்யும் முறையினை பின் வரும் பாடல்களில் போகர் கூறுகிறார்.
“ஆடவே காந்த ரசம் சொல்லக் கேளு
அரகரா ஏழு ஊசி பிடிக்கும் காந்தம்
தேடியே பலம் ஒன்று மண்கலசத்திலிட்டு
சிறப்பாக நீலிச்சார் நிறைய வார்த்து
வாடவே இரவிபடாது அறைக்குள் வைத்து
வன்மையுடன் நாள் மூன்று மூடிவை நீ
ஊடவே சாறு எல்லாம் காந்தம் உண்ணும்
உவகையுடன் அயக் குறட்டால் எடுத்திடாயே” (போகர் வைத்தியம் 700)
ஏழு வகையான இரும்புகளையும் ஈர்த்துக் கொள்ளும் அளவு காந்த சக்தியைக் கொண்ட காந்தத்தில் ஒரு பலம் எடுத்து, அதனை ஒரு மண் பாண்டத்தில் இட்டு அதை நீலிச் சாற்றால் நிரப்பி, மூடியால் மூடி சூரிய ஒளி போகாத இருட்டறையில் மூன்று நாள் வைத்திருந்து நான்காம் நாள் எடுத்து பார்த்தால், சாற்றை எல்லாம் காந்தம் உறிஞ்சி இருக்கும். இந்த காந்தத்தை அயக் குறட்டால் (இரும்புக் குறடு) எடுத்து ஒரு கிண்ணத்துக்குள் வைத்து மெதுவாகத் தட்டினால் சாம்பல் கொட்டுவது போல காந்தரசம் கிண்ணத்துள் விழுமாம். இந்த காந்த ரசத்தினை குடக் கரியில் போட்டு வேண்காரத்தொடு சேர்த்து உருக்கினால் தங்கமாக மாறிவிடும் என்கிறார்.
அகத்தியர் தனது “அகத்தியர் பரிபூரணம்” என்ற நூலில் பித்தளையைத் தங்கமாக மாற்றும் இரசவாத முறையொன்றை அருளியிருக்கிறார்.
‘கரு மருவு குகையனைய காயத்தின் நடுவுட்
களிம்புதோ செம்பனை யான்
காண்டக விருக்க நீ ஞான அனல்மூட்டியே
கனிவு பெற உள்ளுருக்கிப்
பருவமறிந்துநின் னருளான குளிகைகொடு
பரிசித்து வேதி செய்து
பத்து மாற்று தங்கமாக்கியே பணி கொண்ட
பட்சத்தை என் சொல்லுவேன்?’ (அகத்தியர் பரிபூரணம் 1200)
தண்ணூரல் அற்று விட்டால் தாமிரமும் தங்கமாகும் என்பது சித்தர் வாக்கு. அதாவது தாமிரம் என்கிற செம்பில் இருந்து பச்சை நிற களிம்பை நீக்கி விட்டால் செம்பு தங்கமாகும் என்கிறார் சித்தர். இந்த பச்சை நிற களிப்பை நீக்கிவதற்கான வழி முறையையும் கூறியுள்ளார். கூத்தன் குதம்பை சாற்றில் ஒன்பது முறை உருக்கி ஊற்றினால் செம்பு தங்கமாகும் என்கிறார்.
• காரம் விட்டால் உருக்கினம் போச்சு : No Fusion without Flux
• வீரம் விட்டால் நீற்றினம் போச்சு : No calcination without corrosive sublimate
• புடம் விட்டால் சாரணை போச்சு : No Animation without conflagration
• உப்பை விட்டால் கட்டு போச்சு : No Fixation without salt
• இரசம் விட்டால் வாதம் போச்சு : No Alchemy without mercury
• சாரம் விட்டால் செயநீர் போச்சு : No Strong water without sal-ammoniac
• துரிசு விட்டால் குருவே போச்சு :No Quintessence without blue vitriol
• கெந்தி விட்டால் வர்ணம் போச்சு : No Coloration without sulfur
• ஊதுதல் விட்டால் சுண்ணம் போச்சு : No Calcium compounds without blowing
• சிராவணம் விட்டால் சத்து போச்சு : No Essence without sravanam (an ointment prepared from the bile of various living creatures mixed with other secret ingredients.)
மேலும் சித்தர்கள் விளக்கிய இரசவாதப் பொதுவிதிகள் இன்றைய வேதியல் முறைகளோடு பொருத்திப் போவது வியப்பிற்குரியதே!
பார்வை நூல்கள்:
• பரமசிவன்.தொ, 2008, வழித்தடங்கள், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை.
• முத்துச்சாமி.தி.அ.(உ.ஆ), 1923,கொங்கு மண்டல சதகம்,சாது அச்சுக்கூடம்
• ஆறுமுகதேசிகர்(ப.ஆ),1932,போகர் வைத்தியம் 700, வாணீ விலாஸ அச்சுக்கூடம்.
• குப்புசாமிநாயுடு.த(ப.ஆ),1934, அகத்தியர் பரிபூரணம் 1200 , ராமசந்திர விலாச அச்சியந்திர சாலை , மதுரை
• தமிழ்ப்பிரியன்,(ப.ஆ) , 2010 பதினெட்டு சித்தர்களின் முக்கியப் பாடல்கள், நர்மதா பதிப்பகம் , சென்னை

Leave a comment