சீ.பாஸ்கர் கவிதைகள்

வானத்தின் வாசிப்பு

வாசலில் வீசிச்சென்ற நாளிதழை
காற்று புரட்டியதும்
வாசிக்கத் தொடங்குகிறது
வானம்

பூக்களின் பக்தி

கோயில் வளாகத்தில்
உதிர்ந்திருக்கும் பூக்கள்
உருண்டு செல்கிறது காற்றில்
என்ன வேண்டுதலோ
இப்படி பக்தியுடன் செய்கிறது
அங்கப்பிரதட்சணம்

காற்றுக்கும் உன் மீது காதல்

மழை நின்றபின்
நனைய வேண்டுமென்று
சொன்ன உன்னை
மரத்தினடியில் நிற்கச் சொல்கிறேன்
என்னை முந்திக்கொண்டு
கிளைகளை அசைத்து விடுகிறது
நான் சொன்னதை எப்படியோ
காதில் வாங்கிய காற்று

உதிராத புன்னகை

சற்று முன் உதிர்ந்த பூ ஒன்றை
குழந்தை மிதித்து சென்றதும்
புன்னகைக்கத் தொடங்கியது மலர்
அம்மாவிடம் முத்தம் பெற்ற
மழலை போல

கையசைத்தல்

கோடை விடுமுறைக்கு
ஊருக்குச் சென்றிருக்கும்
இந்த வேளையில்
காற்றிலசையும் செடியின் கிளைகளை
பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வருகிறது வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கையசைத்து வழியனுப்பி வைக்கும் குழந்தையின் மலர்முகம்

அம்மா அம்மாதான்

அன்னையர் தினம் பற்றி
அறியாத அம்மாவுக்கு
அன்னையர் தின வாழ்த்துகள் சொன்னேன்
அதெல்லாம் இருக்கட்டும்
நேரமாச்சு வந்து சாப்பிடு என்றாள்

கைக்குள் வந்த வானம்

மேலே பார்த்து
நம்பிக்கையுடன்
கைகளை விரிக்கிறது குழந்தை
அழகாய் வந்தமர்ந்து கொள்கிறது
வானம்

துயிலெழுப்புதல்

தூங்கியெழுந்த குழந்தை
எழுப்புகிறது
தூங்கிக் கொண்டிருக்கும்
எல்லா பொம்மைகளையும்

விடுதலை

கிளிக் கூண்டை
திறந்துவிடுகிறாள் மகள்
வானத்தை வரைந்து முடித்ததும்

கண்ணீரில் ஆனந்தம்

உடைந்த தொட்டியிலிருந்து
வெளியேறியதும்
புதிய உலகத்தை பார்த்த மகிழ்ச்சியில்
துள்ளி குதிக்கின்றன மீன்கள்
ஆனந்த கண்ணீரில்

உயிர்த்தெழுந்த அப்பா

இறக்கும்வரை மரக்கன்றுகள் நட்டுக்கொண்டிருந்த அப்பாவை
புதைத்த இடத்தை
சிலநாட்கள் கழித்து சென்று
பார்க்கிறேன்
அங்கும் முளைத்திருக்கிறது
ஒரு மரக்கன்று

அன்புப் பரிசு

தத்ரூபமாக செடியை
வரைந்த சிறுமிக்கு
மலரொன்றை புதிதாய் பூக்கச்செய்து பரிசளிக்கிறது காகிதம்

பிஞ்சு மலர்கள்

அம்மாவுடன் அமர்ந்திருக்கும்
குழந்தையின் புன்னகையை
நீண்டநேரமாக ரசித்துக்கொண்டிருக்கும்
செடி ஒன்று
புதிதாய் பூத்த மலரை பரிசளித்ததும்
பதிலுக்கு நன்றி சொல்லி
கை குலுக்குகிறது குழந்தை
ஒரு பூவினை கொடுத்து
ஐந்து மலர்களை தொட்டுக்கொண்ட மகிழ்ச்சியில் பேரின்பமடைகிறது
அந்தச்செடி

Leave a comment

Trending