தமிழ் ஆய்வுலகில் ஓர் அரிய நிகழ்வு


முனைவர் கு. பத்மநாபன்

தமிழ் புலமை மரபுக்குச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி வழங்கியுள்ள பங்களிப்புகளை அறிவுலகம் நன்கறியும். இடையறவுபடாத அந்தப் புலமை மரபின் சமகால மையங்களுள் ஒருவர் முனைவர் சா. கருணாகரன். ஆயர் வாழ்வியலை அறியும் பொருட்டு ஆறுமாத காலம் களப்பணி செய்து, ஆயர்களுடன் மந்தைவெளிகளிலும், பொட்டல் வெளிகளிலும் தங்கியிருந்து தரவுகளைத் திரட்டியவர் அவர். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட இவர்தம் ஆய்வு, அது நிகழும் காலத்திலேயே கவனம் ஈர்த்தது.
தம்முடைய ஆய்வுகளின் பொருட்டு மிகுந்த உழைப்பை முன்வைக்கும் இளம் ஆய்வாளர்களின் நிரையை சா. கருணாகரன் பெயரினைத் தவிர்த்துவிட்டு முழுமையாக்க இயலாது. இவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூல் ‘ஆயர் வாழ்வியல் ஒரு வரலாற்றுப் பார்வை’ என்பதாகும். சங்க காலத்திலிருந்து தொடங்காமல் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தொடங்கி சமகாலம் வரை அமைந்த ஆயர் வாழ்வியலின் செல்நெறியை, அதில் ஏற்பட்டுள்ள முதன்மை மாற்றங்களை விளக்கும் கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. கருத்துகளை இணைக்கும் சரடாக வரலாற்று நோக்கு நூலெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. படித்துப் பாதுகாத்து வைப்பதோடு, மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கவேண்டிய மிக முதன்மையான நூல் இது.
குகைகளிலும், மலை இடுக்குகளிலும், பாறை மடிப்புகளிலும் மேய்ச்சல் வாழ்வை ஆயர்கள் ஓவியங்களாகத் தீட்டியிருக்கிறார்கள். இவற்றை ஆய்வாளர் தேடிப் பார்வையிட்டிருக்கிறார். மொழி என்ற ஒன்று உருவாகியிருக்காத காலத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட ஆயர் வாழ்வை உலகெங்கும் இருக்கும், இத்தகைய தொன்மையான பாறை ஓவியங்களின் துணையால் நூலாசிரியர் தொகுத்துரைக்க முயன்றுள்ளார். தேவைப்படும் தரவுகள் அல்ஜீரியாவில் இருந்தாலும் உரிய தொடர்புக் கருவிகளின் துணையால் பார்வையிட்டு, சேகரித்து ஆய்வுக்குப் பயன்படுத்தும் இயல்பை ஆய்வாளர் கொண்டிருப்பதை முதல் கட்டுரை வாயிலாக அறியமுடியும். ஆநிரை மேய்த்தல் முதன்மைத் தொழிலாகவும், உழவுக்குத் துணைத்தொழிலாகவும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் விளங்கியது. இரும்புக் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்தமையைத் தொடர்ந்து, உழவு முதன்மைத்தொழிலாகவும், ஆநிரைமேய்த்தல் துணைத்தொழிலாகவும் மாற்றமடைந்தன. இந்தக் கருத்தைச் சிறப்பாகப் புலப்படுத்துவதாக நூலில் அமைந்துள்ள முதல் கட்டுரை உள்ளது.
இடையறவுபடாத மலைப்பரப்பாகவும், உயரமானதாகவும் இருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலும், குறைந்த உயரத்தில், ஆங்காங்கு இடைவெளிகள் இருக்கும் கிழக்குத் தொடர்ச்சிக் குன்றுகளிலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஆயர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பது முதல் கட்டுரை வாயிலாகத் தெரியவருகிறது. உயர்வான மலைப்பகுதிகளைக் குறிக்க மலை என்ற சொல்லையும், உயரம் குறைவானவற்றைக் குறிக்கக் குன்று என்ற சொல்லையும் சா. கருணாகரன் அறிந்து பயன்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் அவர்தம் தெளிந்த நுண்ணிய உள்ளம் சிறப்பாகத் துலங்குகிறது.
தொல்லியல், கல்வெட்டுகள் முதலிய சான்றுகள் பெரும்பாலும் கிடைக்கப்பெறாத சூழலில் இலக்கியங்களில் காணப்பெறும் அகச்சான்றுகளையே ஆதாரங்களாகக் கொண்டு தமிழர்களின் அரசியல், பண்பாட்டு வரலாற்றை எழுதத் தொடக்ககால வரலாற்றாளர்கள் முயன்றுள்ளமை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இத்தகைய எழுத்தாக்கங்களில் முதன்மையானது திரு. கனகசபை அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள ‘ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூல். பன்மொழிப்புலவர் க. அப்பாத்துரையார் திரு. கனகசபை அவர்களின் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
சங்ககால வரலாற்று வரைவியலில் புதிய போக்குகள் அண்மையில் தெரியத்தொடங்கியுள்ளன. பெருவரலாற்றை விவரிக்கும் முயற்சிகளுடன் நுண்வரலாற்றை எழுதும் முயற்சிகளும் தமிழில் அண்மைக்காலமாகச் சிறப்பாக நிகழ்ந்துவருகின்றன. தம் முயற்சியாலும், அரிய உழைப்பாலும் தமிழின் நுண் வரலாற்றெழுத்துக்கு சா. கருணாகரன் பங்களித்துள்ளார். சங்ககால ஆயர் வாழ்வியல் குறித்த கட்டுரை நூலின் இரண்டாவது கட்டுரையாக இடம்பெற்றுள்ளது. இந்தக் கட்டுரையில், ஆயர் வாழ்வியல் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகளைச் சிறப்பாகத் தொகுக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.
மேய்ச்சல் பணிக்கு ஆநிரைகளுடன் செல்லும் ஆயர்கள் நிலத்தில் உள்ள வன்கற்களை அகற்றி நீர் ஊறி வெளிவருமாறு செய்து, ஊற்றெடுக்கும் நீரைத் தம் ஆடுகளுக்கும் புகட்டுவார்கள். ஆடுகள் நீர் பருகுவதற்காக அகழ்ந்தெடுக்கப்படும் பள்ளங்களுக்கும், அகழத்துணைபுரியும் மூங்கில் கருவிக்கும் ஆநீர்பத்தல் என்று பெயர். இந்தக் கருவி சிவகங்கைக்கு அருகில் மானம்காத்தான் என்ற சிற்றூரில் காணப்படுவதை அறிந்து, அதனை ஆவணப்படுத்திய பெருமை ஆய்வாளர் சா. கருணாகரன் அவர்களையே சாரும்.

மேலும், ஆயர்களின் கார்கால வாழ்வியலைச் சோழவந்தான் பகுதியில் கள ஆய்வுசெய்து இவர் பதிவுசெய்துள்ளார். மூங்கில் குழாயில் தாம் எடுத்துச்செல்லும் எளிய உணவைச் பசியில் நலிந்துவரும் மற்றவர்களுடன் ஆயர்கள் பகிர்ந்துகொள்வதை அகநானூற்றில் காணலாம். வாடிப்பட்டிக்கு அருகில் ஒரு வழிப்போக்கருக்குப் பால் வழங்கும் மூதாட்டியின் செயல் வாயிலாக ஆயர்களின் உயர்வான வாழ்வியல் விழுமியம் இன்றளவும் இடையறவுபடாமல் தொடர்வதை சா. கருணாகரன் நிறுவியுள்ளார். மானுடப்புலம் சார்ந்த ஆய்வுகளில் ஆய்வாளரிடம் சமகாலத்துடன் தம்முடைய ஆய்வைப் பொருத்திவிளக்குதல் என்னும் பண்பு வேண்டப்படுகிறது. வழிப்போக்கருக்குப் பால் வழங்கும் மூதாட்டியின் செயலை விவரிப்பதன் மூலம் தாம் ஆய்வுக்கு உட்படுத்தும் ஒரு களத்தை, இன்றியமையாத சமகால விழுமியங்களுக்குப் பங்களிக்கும் ஒன்றாகப் பொருத்தும் சிறந்த பணியை ஆய்வாளர் சா. கருணாகரன் செவ்வனே செய்துள்ளார்.

“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்” என்பது கலித்தொகை.
அலங்காநல்லூரில் கலித்தொகை வலியுறுத்தும் மரபின் எச்சங்கள் உயிர்ப்புடன் காணப்பெறுவதை நாம் நூல் வாயிலாக உணரலாம். நூலகப்பணி, களப்பணி இரண்டையும் ஓர் ஆய்வாளர் சிறப்பாக மேற்கொள்ளும் நிலையில் எத்தகைய நற்பயன்கள் விளையும் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்று. எருமைகளைக் கிடைவைக்கும் வழக்கத்தை இலக்கியங்கள் பதிவுசெய்யவில்லை. ஆனால் திருநெல்வேலி அருகில் உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் இந்த வழக்கம் இன்றளவும் நிலவுகிறது. இவ்வாறு, மரபின் வெளித்துலங்காத கூறுகளைத் தம்முடைய கள ஆய்வின்வழி ஆய்வாளர் துலங்கச்செய்கிறார்
ஓர் ஆய்வாளரிடம் அதிகம் விரும்பப்படும் புறநிலைநோக்கு சா. கருணாகரனிடமும் காணப்பெறுவதை இதுபோன்ற இடங்களில் நாம் உணரலாம்.
சங்ககாலத்தைத் தொடர்ந்து சிலப்பதிகாரம் தோன்றிய காலத்தில் ஏறுதழுவும் நிகழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிய நாம் ஆயர் வாழ்வியல் வரலாற்றுப்பார்வை என்ற இந்த நூலைத் தவறாமல் வாசிக்கவேண்டும். அதிகார மையங்களின் செல்வாக்குச் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றிருக்கும் ஏறுதழுவுதல் நிகழ்வில் மிகவும் தீவிரமாகக் காணப்படுகிறது என்பது இவர்தம் நிலைப்பாடு.
ஆயர்களின் திருமணம் சங்ககாலத்தில் மலர்களை மையமிட்டதாகவும், சீவகசிந்தாமணி காலத்தில் நீரினை மையமிட்டதாகவும் மாற்றமடைந்துள்ளது. இத்தகைய பல செய்திகள் ஓரிரு வாக்கியங்களில் நூலில் விரவியுள்ளன.
மற்றவர்களுக்குப் புலப்படாதது, சிறந்த ஆய்வாளரின் விழிகளுக்கு எவ்வாறு தவறாமல் புலப்படக்கூடும் என்பது தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரத்துக்கு இவர் தரும் புதிய விளக்கத்தால் உறுதிப்படுகிறது.
திருவரங்கச்சோலையை “அண்டர்கோன் அமரும் சோலை” என்று ஆழ்வார் சிறப்பாகக் கொண்டாடுகிறார்.
இதில் உள்ள அண்டர் என்ற சொல்லுக்குப் புதிய ஒரு விளக்கத்தை சா. கருணாகரன் முன்வைத்துள்ளார். அண்டர் என்பது உலகத்தவர்கள் என்பதாக மட்டுமின்றி அண்டர் என்னும் ஆயர் இனத்தின் உட்பிரிவையும் குறிக்கலாம் என்பது ஆய்வாளரின் கருத்து. இந்தக் கருத்தை இவருக்கு முன்பு தமிழில் எவரும் வெளிப்படுத்தியிருக்கவில்லை.
இவ்வாறு வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி, சங்ககாலம், சங்கம் மருவியகாலம், பக்தி இலக்கிய காலம் ஆகிய காலப்பகுதியில் காணப்பெறும் ஆயர் வாழ்வியலை விளக்கும் ஆய்வாளர் சா. கருணாகரனின் நோக்கு இயல்பாகவே சிற்றிலக்கியங்களின் மீது படிகிறது. முக்கூடற் பள்ளு, எட்டையபுரம் பள்ளு எனத் தமக்குக் கிடைக்கும் சிற்றிலக்கியப் பனுவல்களின் துணைக்கொண்டு கிடை வைத்தல் வழக்கம் சங்ககாலம் முதல் இடையறவுபடாமல் தொடர்வதை நூலாசிரியரால் நிறுவமுடிந்துள்ளது.

ஆயராக ஆய்வாளர் நூலாசிரியர் கருணாகரன்

தற்கால ஆயர் வாழ்வியலை விவாதிக்கும் மிக நீண்ட கட்டுரை எட்டாவது கட்டுரையாக நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளது. பொதுவாக இந்தியாவிலும், சிறப்பாகத் தமிழகத்திலும் காணப்பெறும் ஆயர்களின் தற்கால வாழ்வியலை இந்தக் கட்டுரையில் விரிவாகக் காணலாம். ஒரு குறிப்பிட்ட சமூகம் தற்போதிருக்கும் நிலையிலேயே வரலாற்றுக் காலகட்டம் நெடுகிலும் திகழ்ந்திருந்தது என்று கருதுவது பிழை. இந்தப் பிழையான புரிதலைக் களைவதாக நூலின் இறுதிக் கட்டுரை உள்ளது. மேலும், ஒரே சமூகத்துள்ளும் குறிப்பிட்ட காலம் மற்றும் இடச்சூழலுக்கு இசைய நுண்ணிய மாற்றங்களும் பண்பாட்டு வெளியில் நிகழ்கின்றன. விருதுகள், அடையாளங்கள் வாயிலாகப் புலப்படும் அத்தகைய மாற்றங்களை ஆயர்களின் வாழ்வியல் துணைகொண்டு ஆய்வாளர் விளக்க அறிகிறோம்.
`சிறிய ஊர்களை ஆட்சிசெய்யும் பொறுப்பில் உள்ள ஆயர் சமூகக் குழுவுக்குக் கறையார் என்று பெயர். சிறிய ஆலயங்களை நிர்வாகம் செய்யும் ஆயர் சமூக உட்பிரிவுக்கு மணியக்காரர் என்னும் விருதுப்பெயர் வழங்கப்படுவதுண்டு. நீதிவிசாரணை செய்யும் அதிகாரத்தில் இருக்கும் ஆயர்களின் உட்பிரிவுக்கு மன்றாடியார் என்று பெயர்.
வயல்வெளிகளில் அலைந்துதிரியும் ஆயர் இனத்தில் காணப்பெறும் பண்பாட்டு, அதிகாரக் கட்டமைப்பைப் புரிந்துகொள்ள இத்தகைய நுட்பமான விளக்கங்கள் துணைபுரிகின்றன. ஆயர் சமூகத்திலிருந்து தோன்றிய எழுச்சிகள் சோலங்கி, படேல் ஆகிய அரசமரபுகளைத் தோற்றுவித்தன. தம்முடைய அரிய உழைப்பால் ஆய்வாளர் சா. கருணாகரன் வழங்கும் தகவல்கள் இவை.
தென்னிந்தியாவில் விஜயநகரப் பேரரசின் தோற்றம் சமூக அடுக்கில் பிற்படுத்தப்பட்ட சமூகப் பின்னணியைக் கொண்ட சிலருடைய எழுச்சியின் விளைவு. இது ஒருபுறம் இருக்க, சுங்கப் பேரரசு சமூகத்தின் மேலடுக்கில் இருந்த பிராமணர்களாலும் நிகழ்ந்துள்ளது. இருவகை இயல்புகளுக்கும் வரலாற்றுப் பக்கங்களில் சான்றுகள் உள்ளன. இவற்றின்வழி அதிகார மையத்துக்கும், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் இடையே உள்ள உறவு ஒரே வண்ணம் திகழவில்லை என்பது உறுதிப்படுகிறது.
காவல்பணியை மேற்கொள்ளும் கள்ளர் என்ற சமூகத்தைச் சேர்ந்த சில குடும்பங்கள் சில வரலாற்றுச் சமூகக் காரணிகளால் ஆநிரை மேய்க்கும் பணியைத் தொடர்ந்து செய்துவரும் நிலையில், அவர்களின் மரபுத்தோன்றல்கள் கள்ள ஆயர்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்கள் என்னும் செய்தி ஆய்வாளர் சா. கருணாகரன் அவர்களால் தெரியவருகிறது. இவை யாவும் சமூக அசைவியக்கங்களை நாம் இயன்றவரை புறநிலை நோக்கில் அணுகவேண்டும் என்பதை வலியுறுத்தும் கூறுகள். இவ்வாறு ஆயர் சமூகத்தின் தற்கால வாழ்வியலை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
மிகச்சிறந்த ஓர் அணிந்துரையைப் பெற்றிருப்பது நூலின் மற்றொரு சிறப்பு. சென்னைக் கிறித்துவக் கல்லூரி தமிழ்த்துறையின் மேனாள் தலைவர், பேராசிரியர் சா. பாலுசாமி அவர்களின் அணிந்துரையுடன் நூல் வெளிவந்துள்ளது. ஓர் இன வரலாற்றை அறியும் பொருட்டும், நிகழ்ந்துள்ள மாற்றங்களை அறியவும் மானுடப்புல ஆய்வுகள் மிகப்பெரும்பாலும் மேற்கொள்ளப்படுவதாக அணிந்துரையில் கூறப்பட்டுள்ளது. பேராசிரியர். சா. பாலுசாமி அவர்களின் நெறியாள்கையில் முனைவர்ப் பட்டம் பெற இயன்றமை ஆய்வாளர் சா. கருணாகரனுக்குக் கிடைத்துள்ள சிறந்த பேறுகளுள் ஒன்று.
கருணாகரனைப் போன்றவர்கள் தமிழ் ஆய்வுலகில் ஓர் அரிய நிகழ்வு என்று உலகறிந்த கலை வரலாற்றாளர் பேராசிரியர் சா. பாலுசாமி அவர்கள் சான்றளித்துள்ளார்கள். நிகழ்வின் சாட்சிகள் நாம். இதனைவிடவும் பெரிய விருது கருணாகரனுக்குக் கிடைக்கும் நிலையில் ஆசிரியர் ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பார்.
யாவும் நிகழ்க!
[11. 12. 2021 அன்று நடைபெற்ற தாம்பரம் நகர இலக்கிய வட்டத் தொடக்கவிழாவில் ஆற்றப்பட்ட உரையின் எழுத்துவடிவம் இது. இந்தப் பணியில் என்னை ஈடுபடுத்திய நண்பர்களுக்கு நன்றி! ]

Leave a comment

Trending