நபிகள் நாயகம் வழியில் : மதிப்புரை


முனைவர் சு. பாத்திமா


நபிகள் நாயகம் வழியில் எனும் நூல் இராமநாதபுரம் தமிழ்ச்சங்க நிறுவனரும் வரலாற்று ஆய்வாளர்களின் முன்னோடிகளில் ஒருவருமான எஸ் எம் கமால் எழுதிய வரலாற்று நூல்களில் ஒன்றாகும் .இது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஏர்வாடி தர்காவில் சமாதியாகியுள்ள சுல்தான் செய்யத் இப்ராஹீமின் இஸ்லாமிய சமயப் பிரச்சாரப் பயணத்தை எடுத்துரைக்கும் வரலாற்று நூலாகும். கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் சேது நாடு எனப்பட்ட இராமநாதபுரத்திற்கு வருகை தந்த சுல்தான் செய்யத் இப்ராஹிம் அவர்கள் பண்டைய பவித்ர மாணிக்க பட்டிணத்தில் ஆட்சி செய்த இளவலை வீழ்த்தி விட்டு இஸ்லாமிய ஷரீஅத் ஆட்சியை நிறுவிய விவரங்களையும் அன்னாரது தியாகத்தையும் வரலாற்று ஆதாரங்களுடன் இந்நூலில் 17 இயல்பாக பகுத்து தொகுத்தளித்துள்ளார் . இந்நூலைப் பதிப்பித்தவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சர்மிளா பதிப்பகதாராகும். இஸ்லாமிய இலக்கியச் செல்வங்களில் பயில்வதற்காக மட்டுமல்லாது பாதுகாக்கப்பட வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று. அந்த அளவில் பல வரலாற்றுச் செய்திகள் இதில் கொட்டிக் கிடக்கின்றன.
இந்நூல் சுல்தான் செய்யத் இப்ராஹிமின் வரலாற்றை மட்டுமல்லாது அவரது பாட்டனார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையை மக்களிடையே பரப்ப முயன்ற போது மக்கா மாநகரில் அவருக்கு எதிராக நடந்த கொலை முயற்சியையும் முகம்மது நபி பிறந்த ஊரான மக்காவை விட்டு தமது தோழர்களுடன் மதீனாவிற்கு இடம் பெயர்ந்ததும் அங்கு அவருக்கு கிடைத்த பெரும் வரவேற்பை குறித்தும் விளக்குகிறது. அங்கு சென்ற பிறகும் மக்கா நகரவாசிகள் துரத்தி வந்து போர் நிகழ்த்தியதும் அவ்வேளைகளில் தமது தோழர்களிடமும் மக்களிடமும் அவர் நடத்திய அறிவுறுத்தல்கள், அறவுரைகள் குறித்தும் அவரை பின்பற்றி இஸ்லாமிய மதப் பிரச்சாரம் செய்த பிற நபிகளின் வரலாற்றையும் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. மதப் பிரச்சாரப் பயணம் அரபு நாடுகளில் மட்டுமல்லாது இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் மேற்கொண்டு மேற்கொண்டு எவ்வாறு எல்லாம் இஸ்லாமிய சமயத்தைப் பரப்பினார்கள் என்பதையும் அக்காலகட்டங்களின் தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த தமிழக மன்னர்களைக் குறித்த செய்திகளையும் இந் நூலின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.
சுல்தான் செய்யது இப்ராஹிம் அவர்கள் நபிகள் நாயகம் அவர்களது ஒரே மகளான பாத்திமா நாச்சியாருக்கு பிறந்த இரண்டு ஆண் மக்களில் இரண்டாம் அவரான ஹுசைன் ரலியல்லாஹு அவர்களது வழியில் 19வது தலைமுறைகளில் பிறந்தவர் . இவர் மதினாவில் ஒரு சுல்தானாக இருந்தும் அதை துறந்து இஸ்லாமிய மக்களுக்கு என்றென்றும் உதவும் கரங்களாக, தொண்டராகவே வாழ விரும்பினார் என்பதையும் இவர் இஸ்லாமிய சமயத்தில் ஓரிறைக் கொள்கையை பரப்புவதற்காக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பட்ட கஷ்டங்களையும் தியாகங்களையும் சிந்தனையில் கொண்டு தாமும் தம்மால் இயன்றவரை மக்களுக்கு எடுத்துரைத்து நல்வழிப்படுத்த வேண்டும் எனும் உயரிய நோக்கத்தில் இந்தியாவிற்கு தங்களுடைய நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு பயணம் மேற்கொண்டதாக நூலாசிரியர் எஸ் எம் கமால் பதிவு செய்திருப்பதைக் காணமுடிகிறது .
இதன் முதற் பகுதியில் முகம்மது நபியின் அரும்பெரும் பணிகளைக் குறித்து செய்யத் இப்ராஹிம் நினைத்துப் பார்ப்பது போன்று நனவோடை உத்தியில் அமைத்திருப்பதும் ஆங்காங்கே மிகச் சிறப்பாக வர்ணனைகளை எடுத்துரைப்பதும் நாவல் படைப்பாக்கம் போன்ற தோற்றத்தைத் தருகிறது. ஒரு நாள் வைகறை தொழுகையின் போது பள்ளியில் தனித்திருக்கும் வேளையில் ஒரு ஒளிப்படலம் தெரிந்ததாகவும் அது முஹம்மது நபி ஸல்லல்லாஹு தோன்றி ” எனதருமை பேரரே ” என விளித்து , இளம் வயதில் இறைவன் மீதும் தன் மீதும் கொண்ட பற்றினை பாராட்டி , ” உங்களது கடமை இன்னும் முடியவில்லை. அரபு நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பாரதம் எனும் மிகப்பெரிய கண்டம் ஒன்று உள்ளது. அதன் தென்பகுதியில் உள்ள தமிழகத்திற்கு ஏற்கனவே இங்கிருந்து பல்வேறு சமயத் தொண்டர்கள் சென்று சமயப் பணியாற்றியுள்ளார்கள். இருப்பினும் இன்றும் அங்குள்ள மக்களில் பலர் பல தெய்வ வழிபாட்டிலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பழக்கவழக்கங்களிலும் தங்களை பிணைத்துக் கொண்டு அஞ்ஞானத்தில் வாழ்கின்றனர் . அவர்களை எல்லாம் வல்ல இறைவனின் வழிபாடுகளில் மாற்றம் கொள்ளச் செய்ய வேண்டும் .அவர்கள் நல்ல மனிதர்களாக அண்டை அயலாரை மதித்து நட்பும் தோழமையும் பாராட்டும் குடிமக்களாக சகோதரர்களாக மாற்றும் பணியில் ஈடுபடுக” என்று அறிவுறுத்தியதன் காரணமாக இப்ராஹிம் அவர்கள் தமிழகத்திற்கு வந்தார் என்று பதிவு செய்து இருக்கிறார் .
தமது பாட்டனாரது வழியை பின்பற்றி அவரது அறிவுரையை தலைமேற்கொண்டு பாண்டிய நாட்டுப் பயணத்திற்கு ஆயத்தமாகிறார். அதற்காக பல கூட்டங்கள் நடத்தி தொண்டர்களைத் திரட்டி கடல் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்கிறார். பயணத்திற்கு தேவையான உணவு பண்டங்களைச் சேகரிப்பது மற்று அரபு நாடுகளிலுள்ள உள்ள இஸ்லாமிய இளைஞர்களுக்கு மடல் அனுப்புவது போன்ற பயண ஏற்பாடுகள் அனைத்தையும் செய்வதற்குள் வருடங்கள் பல கடந்தன. எனினும் தமது எண்ணத்தில் தோன்றிய இலட்சியத்தைக் கைவிடாது அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்துடன் ஜித்தா துறைமுகத்திலிருந்து பயணம் மேற்கொண்டு ஒரு மாத கால கடல் பயணத்திற்குப் பிறகு கண்ணூர் துறைமுகத்தை அடைந்தனர். அங்கிருந்து கோழிக்கோடு துறைமுகத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களைச் சந்தித்து பிறகு பாண்டிய நாட்டுக்கு வந்தடைந்தார்கள் என்று ஆசிரியர் செய்யது இப்ராஹீம் பாண்டிய நாட்டுக்கு வந்த செய்தியை கூறியுள்ளார்.
இந்திய நாட்டு வருகையில் சேரநாட்டில் இப்ராஹிம் அவர்களுக்கு கிடைத்த வரவேற்பு கிடைத்தன் காரணம் அதற்கு முன்னரே அங்கு வந்திருந்த முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் தொண்டர்கள் தான் . அவர்கள் ஏகத்துவ கொள்கையை பரப்பும் பணியை சிறப்பாக மேற்கொண்டது மூலம் இஸ்லாமிய சமயம் பரவி இருந்தது. சேர நாட்டின் அரசர் சேரமான் பெருமாள் நாயனார் இஸ்லாமிய மதத்தைத் தழுவியது, மக்காவிற்கு சென்றது போன்ற செய்திகளையும் சான்றுகளுடன் ஆசிரியர் இந்நூலில் பதிவு செய்திருப்பது சிறப்பு சேர்க்கிறது.
சுல்தான் செய்யது இப்ராஹீம் தமிழகத்திற்கு வருகை தந்த வேளையில் மதுரையில் ஆட்சி செய்து கொண்டிருந்த பராக்கிரம பாண்டியன் குறித்தும் திருநெல்வேலி பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்த சடையவர்மன் குலசேகர பாண்டியன் குறித்தும் இந்நூலில் பதிவு செய்திருப்பதைக் காணலாம். மேலும் சுல்தான் செய்யது இப்ராஹீம் இப்பகுதியில் மதப் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரினார். பாண்டியன் மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாது இஸ்லாமிய மதப் பிரச்சாரம் செய்ய வந்தவர்களுக்கு எதிராக போர் தொடுக்க அதில் பாண்டிய மன்னன் தோற்கடிக்கப் பட்ட செய்தியும் விளக்கியுள்ளார். பின்னர் பத்து வருடகாலம் மதுரை இராமநாதபுரம் பகுதிகள் சுல்தான் செய்யது இப்ராஹீமின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பதை ஆசிரியர் தக்க சான்றுகளுடன் நிறுவுவதனைக் காணமுடிகிறது. ஆனால் இது மறைக்கப்பட்ட வரலாறாக மாறியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். மதுரையை ஆட்சி செய்த வீரபாண்டியன், விக்கிரமன் பாண்டியன் இலங்கை மன்னர்களான பராக்கிரம பாகு, வல்லபன் , மாணபரணன் போன்றோரின் குறிப்புகளும் கிடைக்கின்றன.
இந்நூலில் கிரேக்க நாட்டின் மாலுமிகளான பிளினி , தாலமி , பெரிப்பிளூஸ் ஆகியோரின் குறிப்புகள் , புத்த துறவிகளான பாஹியான், யுவான் சுவாங் ஆகியோரது குறிப்புகள், பயணிகளான மார்க்கோ போலோ, இபுன் பதூத்தா போன்றோரது குறிப்புகள், பாதிரியார்கள் அந்தோணி கிரிமிநாலிஸ், பிரான்சிஸ் சேவியர், ஜான் டி பிரிட்டோ , மார்ட்டினஸ் ஆகியோரின் பயணக் குறிப்புகள் , சேரமான் பெருமாள் நாயனாரின் பிரதிநிதியான மாலிக் இப்னு தீனார் என்ற அரேபியரின் குறிப்புகள் எழுத்தாளப் பட்டுள்ளது. ஆசிரியர் தமது கூற்றை நிறுவும் வகையில் கல்வெட்டுச் சான்றுகளாக திருப்புல்லாணி திருக்கோயில் கல்வெட்டு, சேரமான் பெருமாள் நாயனாரின் பிரதிநிதியான மாலிக் இப்னு தீனாரின் அரபி மொழிக்கல்வெட்டு போன்ற கல்வெட்டுச் சான்றுகளையும் வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களிலுள்ள பதிவுகளையும் சான்றாதாரமாக்கியுள்ளார்.
இவ்வாறு சுல்தான் செய்யது இப்ராஹீம் ஏகத்துவக் கொள்கைகளை முழுமையாக தனக்குள் உள்வாங்கிக் கொண்டு தமிழகத்தில் மதப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டதாக பதிவு செய்யும் நபிகள் நாயகம் வழியில் எனும் இந்நூல் பல வரலாற்றுப் பதிவுகளைத் தன்னகத்தே கொண்ட சிறந்த வரலாற்று ஆய்வு நூல் என்பதில் ஐயமில்லை.

Leave a comment

Trending