
நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்….
முன்னொரு காலம் இருந்தது. இப்போது போல லைட் ம்யூசிக் இசைக்கப்படும் வெடிங் அல்ல, திருமண மண்டபங்களில், கூம்பு ஸ்பீக்கர்களில் திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட திருமணங்கள் நடைபெற்ற காலம்.
வாராயென் தோழி வாராயோ, மணமகளே மணமகளே வா வா, பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி பாடல்கள் அத்தனை இனிமையாக ஒலித்த காலம்.
அந்தக் காலத்தில், ஒரு ஆணும், பெண்ணும் இல்லற வாழ்வில் இணைவதற்கான வழியாகவே திருமணம் இருந்தது.
தொல்காப்பியத்தின் வாயிலாகக் களவு வெளிப்பட்ட பின் வரைதல், களவு வெளிப்படும் முன் வரைதல் என்ற இரு வழிகளில் திருமணம் நடந்தேறியது என்பதை அறிய முடிகிறது. பிரம்மம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என தொல்காப்பியம் எட்டு வகைத் திருமணங்களைக் கூறுகிறது.
ஆணும், பெண்ணும் தாய், தந்தையர் விருப்பமின்றி களவு மணம் முடித்து பின் பெற்றோர் அத் திருமணத்தை ஏற்றுக் கொண்டதை குறுந்தொகைப் பாடலொன்று பேசுகிறது.
மனித சமுதாயத்தின் வரலாற்றைக் கவனமாக அவதானித்தால் எத்தனையோ மாற்றங்களை அது அடைந்துள்ளதை எளிதில் உணர முடியும். ஆனாலும், இத்தனை மாற்றங்களை அடைந்த பின்னும், ஒரு நல்ல ஆண் மகனிடம் தான் பெற்று வளர்த்த பெண்ணை ஒப்படைக்க வேண்டும். அவள் நலமாக வாழ்வதைப் பார்க்க வேண்டும் என்ற பெண்ணைப் பெற்ற தகப்பனின் தவிப்பு மட்டும் மாறவேயில்லை. அது சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, ஆண்டாளின் தகப்பனான பெரியாழ்வாராக இருந்தாலும் சரி.
பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி பாடலும் இதைத்தான் பேசுகிறது.
நெஞ்சிருக்கும் வரை, ஸ்ரீதரின் இயக்கத்தில் சிவாஜி, முத்துராமன், கே. எஸ். கோபால கிருஷ்ணன், கே. ஆர். விஜயா முதலானோர் நடிப்பில் 1967ல் வெளியான திரைப்படம்.
வேலை தேடும் சிவாஜி, முத்துராமன், கே. எஸ். கோபாலகிருஷ்ணன் கேஆர் விஜயாவின் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். சிவாஜி விஜயாவைக் காதலிக்க, விஜயாவோ, அதை அறியாமல் முத்துராமனைக் காதலிக்கிறார். முத்துராமனுக்கு அவரது பூர்வீக சொத்து கிடைக்கிறது. விஜயாவின் தந்தை இறக்கும் போது விஜயாவைத் தங்கையென நினைத்து அவளின் திருமணத்தை முடித்து வைக்க வேண்டும் என்று சிவாஜியிடம் சத்தியம் வாங்குகிறார்.
சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட சிவாஜியும், தன் காதலை மறைத்து, மறந்து அவளைத் தங்கையாகவே ஏற்றுக் கொள்கிறார்.
சந்தோஷமாக ஊர் திரும்பிய முத்துராமன், சிவாஜியையும், விஜயாவையும் இணைத்து ஊரார் பேசிய அபாண்டத்தை உண்மையென நம்பி அவர்களை வெறுக்கிறார். சிவாஜியின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ளும் முத்துராமன், விஜயாவிடம் காரணத்தைச் சொல்லாமல் அவளை வெறுத்து ஒதுக்குகிறார்.
முத்துராமனின் சந்தேகத்தை அறிந்து அதிர்ந்த சிவாஜி, தங்கள் மேல் பூசப்பட்ட கொடுங் கறையை தன் இரத்தத்தால் துடைக்கிறார்.
உணர்ச்சிகள் கொந்தளிக்கும் இந்தப் படத்தில் முக்கியமானதொரு அம்சம், நடிகர், நடிகையர்களுக்கு பெரிய அளவில் ஒப்பனை இல்லை அல்லது ஒப்பனையே கிடையாது என்பதாகும்.
உயிர் பிரியும் முன், தவறை உணர்ந்து கதறும் முத்துராமனிடம், இந்தக் கையாலதான்டா அவங்கப்பாவுக்கு கொள்ளி வச்சேன். அவ என் தங்கடா என்று சொல்லும் சிவாஜியைப் பற்றியெல்லாம் பேசித் தீருமா?
வேலை தேடும் மூன்று பேரும் பாடுகிறார்கள்.
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு.
வாழ்ந்தே தீருவோம்.
பின்னாட்களில் வந்த வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படத்தில் இதே போல் வேலை தேடும் இளைஞர்கள் மூன்று பேரும் பாடுகிற
பாட்டு ஒண்ணு பாடு தம்பி
பசியக் கொஞ்சம் மறந்திருப்போம்
பாடலின் விரக்தி நினைவில் வருகிறது.
முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
பாடல் வரிகளும், காட்சியமைப்பும் எத்தனை அழகு.

முத்துராமன் விஜயாவின் திருமணத்தின் போது பாடப்படுகிற பாடல்தான் பூ முடித்தாள் இந்தப் பூங்குழலி பாடல். முத்துக்களோ கண்கள் பாடலில் விஜயாவை, காதலியாக நினைத்து தன் கனவில் பாடிய சிவாஜிதான், அதே விஜயாவை, தன் தங்கையாக வரித்து இந்தப் பாடலைப் பாடுகிறார்.
பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி
புதுச் சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
ஓங்குயூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக்கஞல் ஊரனை யுள்ளிப்
பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே.
என்று ஐங்குறுநூறிலும்,
செறி இலைக் காயா அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை நன் பொன் காலக்,
கோடல் குவி முகை அங்கை அவிழ
என்று முல்லைப் பாட்டிலும் பாடப்பட்ட கண்ணிடு மையான. அஞ்சனம் ஒரு தமிழ்த் திரைப்படப் பாடலில் வருவது எத்தனை ஆச்சர்யம்.
பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
ஒரு திருமணப் பத்திரிக்கையை ஒரு பாடலின் இடையில் வாசிப்பது எத்தனை புதுமையான பிரமிப்பான சிந்தனை.
டிஎம்எஸ்ஸின் கணீரென்ற குரலில், துல்லியமான உச்சரிப்பில் இந்த வரிகளைக் கேட்கையில், இன்றைய திரைப் பாடல்களின் பரிதாபக் குரல்கள் நினைவில் அலை மோதுகின்றன.
நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்.
திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்
தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன், ரகுராமன், ரகுராமன்.
பாடலின் பின்னணியில், நாதஸ்வரமும், மேளமும் மெல்ல மெல்ல உயர்ந்து உச்சத்திற்குச் சென்று பின் தளர்ந்து இறங்குகிற போது நம் கண்ணெதிரே ஒரு திருமணம் நடந்து முடிகிறதல்லவா.
மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க. . .
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க. . .
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர. . . .
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர. . .
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க. . .
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க. . . .
கொட்டியது மேளம். . . .
குவிந்தது கோடி மலர். . .
கட்டினான் மாங்கல்யம். . .
மனை வாழ்க துணை வாழ்க. . .
குலம் வாழ்க. .
திருமணம் இனிதே நடைபெற்றது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, என் பெண்ணை உன் கை வசம் தந்திருக்கிறேன். இனி அவளைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு என்று மணமகனிடம் சொல்லுகிற இந்த வரிகளைப் பாருங்கள்.
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
என்ற ஆண்டாளின் பாடலில் உள்ள கைத்தலம் என்கிற வார்த்தை ஒரு அழகிய ஆபரணத்தில் பதிக்கப்பட்ட வைரம் போல எப்படி மின்னுகிறது பாருங்கள்.
திருமணம் முடிந்த பின் பாடப்படுகிற இந்த வரிகளைக் கவனித்தீர்களா?
பூ முடித்தாள் இந்த பூங்குழலி
புதுச் சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவி
என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் ஒரு அற்புதம். சிவாஜியின் முகத்தில் எத்தனையெத்தனை பாவங்கள். விஜயாவிற்கு இந்தப் பாடலுக்குப் பிறகுதான் புன்னகை அரசி என்று பெயர் வந்திருக்குமோ? பாடல் முழுவதும் சிரித்துக் கொண்டேயிருப்பார். விருப்பமில்லாத் திருமணம் என்பதால் முத்துராமன் இறுக்கமான முகத்துடனே இருப்பார்.
அந்நாட்களில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடலை, கண்ணதாசனின் மகளுடைய திருமணத்தில், டிஎம்எஸ் பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பாடலை கண்களை மூடிக் கேட்கையில், நம் மனக் கண்ணெதிரில் ஒரு திருமண நிகழ்வு, தொடக்கம் முதல் இறுதி வரை நிகழ்வதை நம்மால் காண முடியும்.
பாடல் வரிகளும், இசையும், கம்பீரமான குரலும் இந்த அற்புதத்தை நம் முன் நிகழ்த்திக் காட்டுகின்றன.

Leave a comment