
பிறழ்வுகள்
ரபீக் ராஜா
ரங்கு எங்களை விட பத்து வயது மூத்தவன். நான் லோகு, விஜயன் மூவரும் ரங்குவிடம் இருந்துதான் பாலியல் கதைகளை கேட்டறிவோம். எங்களை விட மூத்தவன் என்றாலும் வயதுக்குரிய மரியாதையை அவன் ஒருநாளும் எதிர்பார்க்க மாட்டான். இன்னும் சொல்லப்போனால், அண்ணன் என்று சொன்னால் ரங்குவிற்கு கோபம் வரும். “அண்ணேன்னு சொல்லிட்டா மரியாதை கிடைக்கும். ஆனா அதைத்தவிர ஒரு மயிரும் கிடைக்காது. இங்க அண்ணே சொல்லிட்டு அந்த முக்குல போய் அவே, இவேன்னு சொல்லப் போறீங்க. இது எதுக்கு இந்த மயிரு மரியாதைன்னு கேக்குறேன்!” என்ற ரங்குவின் வாக்கில் எப்போதும் எதார்த்தம் பொங்கி வழியும்.
எதுவாக இருந்தாலும் ரங்குவிடம் ஒருவார்த்தை கேட்டுவிட்டு தான் முடிவெடுப்போம். ரங்கு ஒரு தொழில்முறை ஆசிரியர். அதற்குரிய அடிப்படை பண்புகள் இருக்குமா என்றால் சந்தேகம். உள்ளூர் பள்ளியில் வேலை பார்த்தான். அவனது செய்கைகளுக்கு பயந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயந்தார்கள். அரசாங்கம் அவனை பக்கத்து ஊருக்கு அனுப்பி வைத்தது. ஒருமுறை பள்ளியில் ரங்குவிற்கும் தலைமை ஆசிரியருக்கும் ஏற்பட்ட தகராறு பெரும் கைகலப்பாக மாறியது. மணி அடிக்கும் கட்டையில் தலைமை ஆசிரியரின் தலை பிளக்கப்பட ரங்கு தற்காலிகமாக வேலை இழந்தான். தலைமை ஆசிரியர் ஆளும் மந்திரியின் எட்டாம், ஒன்பதாம் சுற்றில் தூரத்து உறவினர் என்பதால் துறை ரீதியான நடவடிக்கை குற்றவியல் வழக்காக மாறிப் போனது. கிட்டத்தட்ட ஆறுவருடமாக அரசாங்கத்துக்கும் இவனுக்கும் சட்டப்போராட்டம் நடந்தது. என்றாலும் அதுதரும் பிழைப்பூதியம்தான் ரங்குவின் வாழ்வாதாரதற்கு உதவியது. இனி அதற்கும் அவசியமில்லை. ரங்கு இறந்து நான்கு மணி நேரமாகிறது.
நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போதுதான் ரங்குவின் குடும்பம் ஊருக்கு வந்தது. அவன் அப்பா வெள்ளி வியாபாரி. நயமாக பேசுவார். கிலோ கணக்கில் வெள்ளி நகைகளை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்வார். அவர் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி என்ற கேள்வி உண்டு. கால் கொலுசு மாட்டி விடும் சாக்கில் லாவகமாக தடவி பலரிடம் பணம் பெறாமல் இலவசமாக அணிந்து விட்டதாகவும் அதன் பலனை வேறுவிதமாக அனுபவித்ததாகவும் ஒரு வழக்கு உண்டு. இது தொடர்பாக ரங்கு அம்மா- அப்பாவிற்கு பலமுறை சண்டை நடப்பதை என் அம்மா சொல்வார்.
நான் லோகு, விஜயன் ஒரே கல்லூரியில் சேரும் போது ரங்கு ஒரு பள்ளியின் ஆசிரியரானான். அந்த மரியாதை இருக்கும் போது அதிகம் பேசிக்கொள்வதில்லை. ஒரு ஊர் பஞ்சாயத்து நடந்த போதுதான் எங்கள் குழுவின் தலைவராக ரங்கு அரியணை ஏறினான். அது ஒரு காதல் விவகாரம். இரண்டு குடும்பங்களும் அதிருப்தியுடன் ஊர் பஞ்சாயத்தில் நிற்க ஊர் தலைவர் சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் இருந்தார். ஆண் வீட்டார் பணியும் முயற்சியில் இருக்க பெண் வீட்டார் எந்த சமாதானத்தையும் ஏற்கவில்லை. கூட்டத்தில் புகுந்து ரங்கு பேசினான். ஆசிரியர் என்பதால் அவன் பேச்சில் நீதி, நியாயம் இருக்கும் என கூட்டம் நம்பியது. பெண் மாசமாக இருப்பதாகவும் அவர்கள் ஒன்று கூடும் சந்தர்ப்ப நேரங்கள் தனக்கு அத்துப்படி என சில்லறைதனமாக பேச பெண் சார்பு கூட்டம் வெகுண்டு எழுந்தது. ரங்குவை அடிக்க பாய்ந்தது. அதோடு ஆண் வீட்டாரும் ரங்குவின் சட்டையில் கைவைக்க பெரும் கூச்சலானது. இறுதியில் திருமணம் முடிவானது. பஞ்சாயத்து கலைந்து செல்லும் போது நாங்களும் ரங்குவும் மட்டும் இருந்தோம். எங்களை பார்த்து புன்னகைத்து ஆளுக்கொரு பீர் குப்பி வாங்கி கொடுத்து எங்கள் நட்பை உறுதி செய்தான். பெரிய பிரச்சனைகளுக்கு பெரிய தீர்வு அவசியமில்லை என்பான்.
ரங்குவின் கல்யாணத்திற்கு முன்னின்று பல வேலைகள் செய்தோம். குறிப்பாய் ரங்குவின் வெளியூர் நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்து தங்க வைப்பது போன்ற முக்கிய இலாக்கா எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதை வெற்றிகரமாக செய்தமையால் நட்பு இன்னும் இறுகியது. ரங்கு அவன் பார்த்த பாலியல் வெளிநாட்டு படங்களின் கதையை துல்லிய விவரிப்புடன் சொல்லுவான். வழக்கமாக பார்க்கும் தமிழ் படங்களில் நடக்கும் சம்பிரதாய காட்சிகள் அதில் இருக்காது. கதையின் இடையே ரங்குவின் கருத்தும் இடம்பெறும், “நம்ம ஊர்ல ஹீரோயின வில்லன் கெடுக்குற ஸீன் எப்படி இருக்கும்? வில்லன் ஓடி வந்து கதவை சாத்துவான். அதுக்கப்புறம் புலி மானை சாப்புடுற படத்தை காட்டி ஓச்சு விட்ருவான். அதுவே முதல்ல தப்பு. புலி மானை அடிக்கிறது பசிக்கு, மேட்டருக்கு இல்ல. பாரின் படத்துல இந்த ஓரவஞ்சனையே இல்ல. எல்லாமே நெத்திக்கு நெத்திதான். கெடுக்கிற ஸீனா? கெடுக்குறான். குத்தி கொல்ற ஸீனா? கொல்லுவான்!” என்பான்.
தவிர எங்களை அதுபோன்ற படங்களுக்கும் அழைத்து சென்று காட்டுவான். எல்லாம் அவன் செலவு. எப்போதும் ஒரு மாதிரியாக சிரிப்பான். கேட்டால் அப்புறம் சொல்வதாக சொல்வான்.
ரங்குவிற்கு திருமணம் முடிந்து ஆண்டுகள் பல கடந்தும் குழந்தை ஏற்படவில்லை. அதனால் குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் என்பான். அதன்பின் பள்ளியில் நடந்த பிரச்சினைக்கு பிறகு எங்களின் பெரும்பான்மை நேரம் ரங்குவுடன் தான் சென்றது. ரங்கு வேலைக்கு சென்ற போது கிடைத்த மரியாதை இப்போது ஊருக்குள் இல்லாமல் போனது. அதை அவன் எதிர்பார்க்கவில்லை என்றாலும் சில நேரம் அதுகுறித்து கவலைப்படுவான். அந்த மரியாதை குறைவுக்கு காரணம் தனக்கு குழந்தை இல்லாதது ஒரு காரணம் என்பான். ஒரு அஞ்சு நிமிஷ குழந்தை ஏற்பாட்டு வேலையில் ஏதோ ஒரு நுட்பம் குறைகிறது என சிரிப்பான்.
ரங்குவின் இறப்பு செய்தியை லோகுதான் வந்து சொன்னான். நள்ளிரவில் நெஞ்சு வலிப்பதாக சொல்லியிருக்கிறான். மனைவி சுடுநீர் கொண்டு கொடுக்கும் நேரத்திற்குள் உயிர் பிரிந்துள்ளது. ரங்குவிற்கு இருதயம் வலிமையானது என விஜயன் அடிக்கடி சொல்வான். நானும் அதை நினைத்ததுண்டு. “அந்தாளுக்கு நெஞ்சு வலி செத்தது ஆச்சரியமா இருக்கு. எப்ப பாத்தாலும் சிரிச்சிட்டே இருக்குற மனுஷனை குழந்தை இல்லாத துக்கம்தான் கொன்னுருச்சு!” என்றான்.
எங்கள் ஊர் நட்பு வட்டத்தில் விழுந்த முதல் சாவு. அதற்கு எப்படி போகவேண்டும் என மூவரும் பேசிக்கொண்டோம். “ஒரு பெரிய மாலையா வாங்கி போடுவோம். மதுரையில் போன் பண்ணி சொன்னா பஸ்ல குடுத்து விட்ருவாங்க!” என்றான் லோகு. அதன்படி விபரம் சொல்லிவிட்டு மூவரும் ஊர் கண்மாயில் உட்கார்ந்திருந்தோம். இங்கிருந்து பஸ் வருவதை ஒரு கிலோமீட்டர் தொலைவில் பார்க்கலாம். பார்த்து விட்டு நடந்து சென்றால் பஸ் வருவதற்கு சரியாக இருக்கும்.
மூவரும் பேசிக்கொள்ளவில்லை. ரங்கு எங்களின் வாழ்வியல் ஆசானாக இருந்தான். எல்லாம் அவனுக்கு தெரிந்திருந்தது. இன்னும் பத்து வருடத்திற்கு பிறகு இந்த உலகம் எப்படி இருக்கும் என்ற புரிதல் அவனுக்கு இருந்தது. மேலே படிக்க சென்ற ராஜனை போட்டி தேர்வுக்கு தயார் படுத்த சொன்னது அவன் தான். படிப்பு ஏறாத லோகுவிற்கு தொழில் தொடங்க வங்கியில் பணம் வாங்கி கொடுத்தது அவன்தான். எல்லாம் செய்து கொடுத்த அவன் ஒரு நாடோடி போல தான் வாழ்ந்து கொண்டிருந்தான்.
இப்போது நாங்கள் உட்கார்ந்திருக்கும் இடம்தான் ரங்குவின் ஆஸ்தான போதிமரம். அவன் கால்களை மடித்து உட்கார்ந்திருக்கும் நெளிவு வித்தியாசமாய் இருக்கும். ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை கூட கவனமாக பார்ப்பான். அட்டை பூச்சியை பார்த்து, “யானையோட தும்பிக்கை மட்டும் தனியா ஊர்ந்து போகுற மாதிரி இல்ல?” என்பான். அவன் விவரனைகள் யாவும் எங்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்டு இருக்கும். என்றாலும் அதுதான் அவன் மீதான ஈர்ப்புக்கு காரணம். அவனுக்கென்று கொள்கை எதுவும் இல்லை. வாழ்விடம், வாழ்க்கை குறித்து அவனுக்கு பிரத்யேக திட்டம் அவனிடம் இல்லை. ஒருவகையான மர்மம் நிறைந்த அவனது செய்கை எங்களை அவனுடன் முற்றிலுமாக வேறுபடுத்தி காட்டியது. வாரத்தின் சில நாட்களுக்கு அவன் காணாமல் போவான். காரணம் கேட்டால் அதை இன்னொரு உலகம் என்பான். மேலும் பதிலறிய முற்பட்டால் சூழலுக்கு தொடர்பில்லாத முரண்பாட்டு வார்த்தைகள் வந்து விழும். கேள்விகளை மழுப்பால்களாக மாற்றுவதில் அநாசயமாக செயல்படுவான். இறுதியில் நாங்கள் தோற்று போவோம். இல்லையேல் மதுரைக்கு படத்திற்கு அழைத்து செல்வான். சாராயம் வாங்கி கொடுப்பான்.
எங்கள் வீட்டில் அவனிடம் பேசக்கூடாது என சொல்வது வாராந்திரம் நிகழும் ஒரு நிகழ்வு. அதை காதில் வாங்கிக் கொள்வதில்லை. என் அப்பா கூட ரங்குவை பார்த்து மரியாதையாக நலம் விசாரித்துக் கொள்வார். கண்டிப்பு எங்களிடம் மட்டுத்தான்.
பேருந்து வந்தது. வேகமாய் சென்று மாலையை வாங்கிக் கொண்டோம். பேருந்தில் இருந்த எல்லோரும் எங்களை வேடிக்கை பார்த்தார்கள். பின் அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். எங்களுக்கு வெட்கமாக இருந்தது. லோகு மாலையை ஒரு பிணம் போல தூக்கி சென்றான். பின்னால் நானும் விஜயனும் வந்தோம். அதுவே ஒரு இறுதி ஊர்வலத்தில் ஒத்திகை போலத்தான் இருந்தது. மௌனமாக இருந்த அந்த தருணத்தை லோகுதான் உடைத்தான். “விஜயா நீதான் லோகுவுக்கு மாலை போடணும்!” அவனுக்குள் ஏதோ ஒரு தயக்கம். அமைதியாக நடந்து சென்றோம்.
ரங்கு வீடு இருக்கும் பகுதி ஒரு முச்சந்தி. அந்த தெருவில் எதேனும் விசேஷம் என்றால் தெருவை அடைத்துக்கொண்டு கொட்டகை போட்டிருப்பார்கள். வாகனங்கள் வரத்து இல்லாததால் இந்த வசதி. ரங்கு வீட்டை அடைந்தோம். சிறிய சாமியானா போட வேலை நடந்து கொண்டிருந்தது. ரங்குவின் அப்பா சாமியானா அமையும் இடத்தை துல்லியமாக காட்டிக் கொண்டிருந்தார். விஜயன் சொன்னான், “மவே செத்து கெடகான். அப்பன்காரன் கல்லுகணக்கா திரியிறான் பாரு!” என்றது உண்மை போலவே இருந்தது. லோகு சிரித்தே விட்டான். “இவனுங்க குடும்பமே ஒரு மார்க்கமாதா இருக்காய்ங்க!” என்றான் லோகு. நண்பன் இறந்த வீட்டில் இது தேவையில்லாத உரையாடல் என்றாலும் இதுவும் ரங்குவிடம் இருந்துதான் தொற்றியது.
ஒருமுறை வெளியூர் நண்பனின் அப்பா இறப்பிற்கு செல்கையில் எங்களுடன் ரங்கு ஓட்டிக் கொண்டான். நாங்கள் மறுத்தோம். மாலை செலவு மற்றும் மதுமருத்துவ செலவு என்னுடையது என்றான். உடனே ஒப்புக்கொண்டு அழைத்து சென்றோம். ஊர் பேருந்து நிலையத்துக்கு அருகே இருந்த குடிகார மையத்தில் குடித்தோம். அன்று ரங்குவிடம் ஏற்பட்ட உரையாடல் நன்றாக இருந்தது.
“இதுக்கு முன்னாடி ஃப்ரெண்டு செத்ததுக்கு போயிருக்கீங்களாடா?” என கேட்டான். இதுதான் முதல் சாவு என்றோம்.
“நல்லா அழுவனும்டா. கத்தி கதறி அழணும். எல்லா உங்களை பாக்கணும். சாவு வீடே ஒரு கொண்டாட்டமில்லாத திருவிழா!” என்றான். இறந்தவன் உடன் படித்தவன்தான் என்றாலும் அவ்வளவாக நெருங்கி பழகாதவன். நல்ல பெரிய மாலையை வாங்கிக் கொண்டு அந்த துக்க வீட்டுக்கு சென்றோம். ரங்குதான் துடித்து போய் அழுதான். இறந்து போனவனின் தாய்மாமா ரங்குவை சமாதானம் செய்து ஒரு பன்னீர் லெமன் வாங்கி கொடுத்து ஆற்றுப்படுத்தினார். ரங்குவால் எல்லாம் செய்ய முடிந்தது. அவனுக்கு நடக்காத ஒன்று இன்னொருவனுக்கு நடந்தால் அதை தனதாக்கி உரிமை கோர முடிந்தது. அரசாங்கம் கொடுத்த பிழைப்பூதியம் அவனுக்கு எல்லா வகையிலும் சாத்தியப்படுத்தி கொடுத்தது.
ரங்குவின் வீடு ஓரளவுக்கு வசதியாக இருந்தது. வீட்டு மைய அறையில் அவனது உடல் இருந்தது. மாலையை அந்த ஐஸ் பெட்டியில் வைத்துவிட்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தோம். லோகு அழுதுவிட்டான். அவனை தொடர்ந்து விஜயனுக்கும் அழுகை வந்ததது. ஒரு பெரியவர் என்னை மட்டும் மாதிரியாக பார்க்க தொடங்கினார். நானும் அழுதேன். ரங்குவின் அம்மா எங்களை கட்டிப்பிடித்து அழுதார். “பாருங்கப்பா உங்க ஃப்ரெண்ட, எழுப்பி அவனை உங்களோட கூட்டிட்டு போங்கப்பா!” என்றார். வீட்டில் இன்னும் அழுகை கூடியது.
ஐஸ்பெட்டியில் ரங்குவின் முகம் வெளிறி போயிருந்தது. இப்போது எழுந்து வந்தால் என்னென்ன பேசுவான் என்பது கற்பனையாக ஓடியது. அவனது கடவுள் பக்தி எங்களுக்கு புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது. கழுத்தில் சிலுவை அணிந்திருப்பான். தவிர தீவிர சிவன் பக்தனாக சிலநேரம் காட்டிக் கொள்வான். என்றாலும் நெற்றியில் எந்த மாதிரியான திலகத்தையும் அவன் இட்டு பார்த்ததில்லை. இப்போது நெற்றியில் பட்டை அடித்திருந்தார்கள். எப்படியோ உள்ளே புகுந்து ஒரு ஈ ரங்குவின் முகத்தின் முன் ஆடிக்கொண்டிருந்தது.
அவனது மனைவியை தேடினோம். இந்த சாவிற்கு பின் நிகழப்போகும் அத்தனை அசௌகரியமும் அவளுக்குதான். வடக்கு பக்கம் ஒரு மூலையில் உட்கார்ந்து இருந்தாள். அழுதே செத்தவள் போல இருந்தாள். எங்களை விட ஓரிரு வயது பெரியவளாக இருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் கல்யாண நாளை கொண்டாடினார்கள். ரங்கு எங்களை கூட்டி கொண்டுதான் மனைவிக்கு பூ வாங்கினான். கொஞ்சம் இனிப்பு, ஒரு சேலை. பின் எங்களை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு ரகசியமாக ஒரு சில பொருட்களை வாங்கினான். லோகுதான் அதை கவனித்து சொன்னான். அந்த நேரத்தில் கேட்கும் அளவிற்கு ஆர்வம் இல்லை. காரணம், மாலை எங்களை குடிக்க கூட்டி போவதாக சொல்லியிருந்தான் ரங்கு.
எப்போதும் எங்களுடன் சேர்ந்து குடிக்கும் அவன் அன்று குடிக்கவில்லை. குடிக்க பணம் கொடுத்துவிட்டு அவன் வேறு எங்கோ போனான். எல்லாம் முடிந்து நாங்கள் மூவரும் தனியாகவே வீடு வந்து சேர்ந்தோம். கடைசியாக உயிருடன் பார்த்ததும் அப்போதுதான்.
சற்று நேரத்தில் தாரைதப்பட்டை முழங்க ஆரம்பித்தது. ரோஜாப்பூ மாலைகளை வெளியே வந்து போட்டார்கள். அதை இரண்டு ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. உண்மையில் ஒரு நல்ல தோழனை இழந்து நிற்கிறோம். அதற்கேற்ப துக்கம் மனதில் துடைத்து போட்டது போல இருந்தது. இதையும் ரங்குதான் சொல்வான், “உலகத்துலேயே ரொம்ப உண்மையான விஷயம், சாவு மட்டும்தான். நம்ம ஊர்ல கழுத்து நிறையா ஜெயின் போட்டுட்டு புல்லட்ல போறான் பாரு அவனுக்கு சாவுபத்தி நல்லாவே தெரியும். ஆனா நம்மள தவிர எல்லாரும் செத்து போயிருவான்னு ஒரு குருட்டு நம்பிக்கை இருக்குறதாலதான் இன்னும் மிடுக்கா சுத்தமுடியுது. உயிரோட இருக்குறத விட சாவு நிம்மதியா இருக்கும்ன்னு நினைக்கிறேன். அதான் செத்தவனுங்க யாரும் உயிரோட எந்திரிச்சு வர மாட்றாய்ங்க!” என்பான்.
அவன் ஒரு ஆசிரியர் என்பதாலோ என்னவோ அநாகரிகமான விஷயத்தை கூட சீர்மிகு ஒப்பனையாக பேசிட முடிந்தது. எல்லா சராசரி மனிதன் போல அவனும் கவலைப்பட்டது ஒரு குழந்தைக்காகதான். அந்த ஏக்கத்தை எதாவது ஒருவகையில் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தான். “நம்ம இருந்துட்டு போனோம்ன்னு விட்டுட்டு போற ஒரே அடையாளம் நமக்கு பிறக்குற குழந்தைதான்டா!” என்பான்.
கடைசி ஒரு வருடம் குழந்தை பற்றி ஏதும் பேசுவதில்லை. ஆனால் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பொருட்கள் பற்றி விசாரிப்பான். அது குறித்து ஒருமுறை கேட்டிருக்கிறேன். அது ஏழை குழந்தைகளுக்கு என்பான். ஒருமுறை நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு பிச்சைக்காரியில் குழந்தைக்கு நூறு ரூபாய் கரடி பொம்மை கொடுத்தான். பிச்சைக்காரிதான் “அதை காசாக கொடுத்திருக்கலாமே” என வருத்தம் கொண்டாள்.
ரங்கு அப்பாவின் செய்கைகள் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது. லேசாக குடிவாடை அடித்தது. எங்கள் அருகில் வந்து “லேசா சாப்பிடுறீங்களா?” என கேட்டார். லோகு எழுந்தான். நான் அவனை முறைத்துக் கொண்டு உட்கார வைத்தேன்.
சாமியானா பந்தல் போட்ட பலன் மதியம் பனிரெண்டு மணிக்குதான் கிடைக்கும் போல இருந்தது. வெயில் சுளீரென முகத்தில் அறைந்தது. நல்ல மே மாத வெயில். அவனுடன் வேலைபார்த்த ஆசிரியர்கள் இருவர் ஒரு நடுத்தர மாலையை போட்டுவிட்டு எங்கள் அருகில் அமர்ந்தார்கள். ரங்குவின் ஆசிரியர் வேலை அவர் மனைவிக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தை அவர்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள். ரங்கு மனைவியின் கல்வி நான்காம் வகுப்பு என அவனே சொல்லியிருக்குறான். அதை அவர்களிடம் விஜயன் சொன்னான். எங்களை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். பின்பு அந்த கல்வி தகுதிக்கேற்ப ஒரு வேலை கொடுப்பார்கள் என்றார் அதில் பெரிய மூக்கு கண்ணாடி போட்ட ஒருவர்.
ஒரு பெண் தூரத்தில் அழுது கொண்டு வருவது தெரிந்தது. அதுவரை சரியாக நடந்து வந்தவள் நேரமாக நேரமாக நடையில் வேகம் கூட்டினாள். பெரும்குரலுக்கு தன்னை தயார்படுத்தி கொண்டவள் போல இருந்தது. லோகுவிடம் அவளை காட்டினேன். யாராவது தூரத்து தங்கையாக இருக்கும் என்றான். வாய்ப்பில்லையே! இருந்தால் ரங்கு சொல்லியிருப்பான் என நினைத்தேன். பெரும் குரலில் கத்தினாள். ரங்குவின் அப்பா அவளை கைதாங்களாக அழைத்து சென்றார்.
வெளியே அவள் கதறும் சப்தம் கேட்டது. இழவு வீட்டுக்கு அழகே இந்த பெரும்குரல் கொண்ட கதறல்தானே என்பது போல எல்லோரும் இயல்பாக இருந்தார்கள். நேரம் செல்ல செல்ல அந்த கதறலுடன் ஒரு பெரும் உரிமை கோரல் இருந்தது. நாங்கள் மூவரும் தயக்கத்துடன் அதை பார்த்துக் கொண்டிருந்தோம். உள்ளே ஒரு குழப்பம் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. சிலர் உள்ளே சென்று போய் பார்த்தார்கள். நாங்கள் உள்ளே சென்றவர்கள் வெளியே வந்து தகவல் பரிமாறும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தோம்.
பெரிய மூக்குத்தி அணிந்த ஒரு பெண் வெளியே வந்த போது சொன்னாள், “எவளோ ஒருத்தி ரங்குவோட ரெண்டாவது பொண்டாட்டின்னு சொல்ற!” என சொல்லிவிட்டு சென்றாள். நாங்கள் எழுந்து நின்றோம். ரங்கு எங்கள் கூட்டாளிதான் என்றாலும் இதை எங்களிடம் பூடாகமாக கூட சொன்னதில்லை.
காரணமறிந்து ஒரு பெரிய தகராறு எதிர்பார்த்து கூட்டம் கூடியது. நாற்பது வயதை நெருங்காத ஒருவனின் மரணம். அதற்கு உரிமை கோரும் இன்னொரு மனைவி! சம்பவத்தை கேள்விப்பட்டு துக்கம் கேட்க வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமானது. கூட்டத்தினர், “ரங்கு இப்படி பண்ணுவான்னு தெரியாது. அவனை நல்லவன் என நினைத்தோம்!” என்பது பொதுவான கருத்தாக இருந்தது. ரங்குவின் மீதான இரங்கல் குறைய தொடங்கியது. அவன் மீதான விமர்சனங்கள் குறித்தும் அவனது ஒழுக்க குறைபாடும் குறித்தும் அங்கு பேசு பொருளானது.
ரங்கு வித்தியாசமானவன். அவனது சாவும் கொஞ்சம் வித்தியாசமாக தொடங்கியது. உடலுக்கு வரும் மாலை வரத்து சுத்தமாக குறைந்து போனது. அவனை விட அவனது இரண்டாவது மனைவியை பார்க்க கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. யார் என்ன பேசுகிறார்கள் என்ற சுவாரஸ்யம் நிலவியதால் அவன் இறப்புக்கு அடிக்கப்பட்ட தாரை தப்பட்டை அவசரமாக நிறுத்தப்பட்டது.
ரங்குவின் இரண்டாவது மனைவிக்கும் முதல் மனைவிக்கும் ஒரே வயதிருக்கலாம். ரங்குவின் மூத்த மனைவி அழுவது முற்றிலும் குறைந்து போனது. அவ்வப்போது அழுதாலும் அது கணவனின் உரிமைக்காக இருந்தது. சாவு வீட்டில் ஏற்பட்ட பிணக்கிற்கு ரங்குவை தூக்கி அடக்கம் செய்த பின் பேசி தீர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. இரண்டாவது பெண் சற்று படித்தவள் போல இருந்தாள். அவளிடம் விபரம் கேட்காமலே அவளை ஒரு ஆசிரியர் என்று கூட்டம் பேசி முடிவு செய்தது. அது பள்ளியில் ஏற்பட்ட காதலாக இருக்கலாம் என விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் பேசுபொருள் எங்கள் பக்கமாய் திரும்பியது. ஒரு பெரியவர், “இவனுங்க கூட்டாளி பசங்கள விசாரிச்சா எல்லா உண்மையும் தெரியும்” என்றார். ஊரில் எனது அப்பாவும் லோகுவின் அப்பாவும் ஒரு தவிர்க்க முடியாத தலகட்டுகள் என்பதால் அதற்குரிய வார்த்தைகளை கவனமாக கையாண்டார்கள். லோகு அப்பாவிடம் பல பஞ்சாயத்து யோசனைகள் பெறப்பட்டதால் அதன் பலனை இப்போது அனுபவித்துக் கொண்டிருந்தோம். என்றாலும் அதன் தாக்கம் நீண்ட நேரத்திற்கு இருக்காது என்பதையும் அறிந்தோம்.
இரண்டாவது மனைவியின் பெயர் ஸ்டெல்லா என்றார்கள். கிறிஸ்தவர் என்றாலும் அது என்ன ஜாதி என்பதில் ஒரு ஆர்வம் கூட்டத்தில் நிலவியது. முதல் மனைவிக்கு வாரிசு இல்லை. ஏமாற்ற வேண்டும் என நினைத்திருந்தால் இரண்டாவது மனைவி என்பவள் ஒரு குழந்தையோடு வந்திருக்கலாம். அதற்கு தகப்பன் ரங்கு என நியாயம் கேட்டிருக்கலாம். அவள் அழுதது தவிர தீவிர அமைதியில் இருந்தாள். அந்த அமைதியில் ஒரு தீர்க்கம் இருந்தது. மொத்தத்தில் ரங்கு சொந்த வீட்டில் அனாதை பிணம் போல கிடந்தான். நாங்கள் கிளம்புவதற்கு முடிவு செய்தோம். கூட்டாக கிளம்பினால் கவனம் திரும்பும் என்பதால் ஒவ்வெருவராய் இடத்தை காலி செய்தோம். மூவரும் வழக்கமான கண்மாய் கரையில் சந்திப்பதாக திட்டம்.
அதற்கு முன்னதாக ஸ்டெல்லா வெளியே அழைத்து வரப்பட்டாள். அவளை ரங்குவின் அப்பாதான் அழைத்து வந்தார். தன் தோளில் சாய வைத்து கூட்டி வரப்பட்ட அந்த காட்சியில் மாமனார்- மருமகள் பண்பு அறவே இல்லை. சிலர் அதையும் கண்டறிந்து ரகசியமாக பேசிக் கொண்டார்கள். ரங்குவின் அப்பா ஸ்டெல்லாவை அங்கீகாரம் செய்தது போல நடந்து கொண்டது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.
ரங்கு இறந்தது போல தெரியவில்லை. பெரிய புதிரை போட்டுவிட்டு விடையை தவிர்க்க அவன் எங்கோ மறைந்தது போல இருந்தது. ரங்கு இல்லாத நட்பில் எப்படி நாட்களை கடத்த போகிறோம் என்ற தவிப்பு மறைய தொடங்கியது. இதிலிருந்து ரங்குவின் பிணம் மீண்டால் போதும் என தோன்றியது. கண்மாய்க்கு நான்தான் முதலில் வந்தேன். பின்பு விஜயன் வந்தான். இருவரும் அமைதியாக இருந்தோம். பின் வெறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். ரங்குவின் உடல் இந்த பக்கம் தான் ஊர்வலமாக வரும் அதில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்துவிட்டால் யார் முகத்தையும் நேருக்கு நேர் பார்ப்பது தவிர்க்க ஏதுவாக இருக்கும்.
ரங்குவை தூக்குவதற்கு முன்பு வெடி போடுவார்கள். அதை கணக்கு செய்து காத்திருந்தோம். லோகு வரவு இன்னும் தாமதப்பட்டது. அவன் இருந்தால் நிலைமையை சற்று இலகுவாக்க ஏதாவது பேசுவான். இல்லையேல் உதவாத யோசனை என்றாலும் அதை உபயோகப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது போல தீவிரமாக விவாதிப்பான். அவனை எதிர்பார்த்து காதிருந்தோம். ஆளுக்கு ஒரு திசையில் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தோம்.
லோகு வருவது தெரிந்தது. அவன் நடையில் நிதானம் இல்லை. ஏதோ ஒரு மேன்மைதாங்கிய செய்தியை அறிவிக்க வந்தவன் போல பரபரப்பாக வந்தான். எங்களை பார்த்ததும் அவன் நடை இன்னும் வேகமெடுத்தது. ஒரு செய்தி இருக்கிறது. நிச்சயம் அது நல்ல செய்தியாக இருக்க வாய்ப்பில்லை என தெளிவாக இருந்தது. “பஞ்சாயத்துக்கு இப்பவே கூப்பிடுறங்க?” என்பதை உளறலாக சொன்னான்.
லோகு வந்துவிட்டான். எழுந்து நின்றோம். “டேய், இன்னொரு பொண்ணு வந்து ஒப்பாரி வச்சிட்டு இருக்காடா. அது ரங்குவோட மூணாவது பொண்டாட்டின்னு ஊர்காரனுங்க பேசிக்கிறானுங்க!” என்றான். கையில் ஒரு குழந்தை இருப்பதாக சொன்னான். ஊர் பெரியவர்கள் எங்கள் மூவரையும் அழைத்து வர சொல்லியிருக்கிறார்கள்.
ரங்கு நிகழ்த்தி போன சம்பவங்களின் அரிச்சுவடி அறியாமல் என்ன சாட்சி சொல்வது என்ற குழப்பத்தில் மூவரும் நடந்ததோம். ரங்குவின் மீது கோபம் வந்தது. விஜயன் கெட்ட வார்த்தையின் ஏதோ பேசிக்கொண்டு வந்தான். லோகு இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவனாக இருந்தான். எங்களுடன் எங்கள் குடுபத்தினரும் சேர்ந்து கொண்டார்கள். அப்பா மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்டுக்கொண்டு வந்தார். “இந்த விஷயம் உங்களுக்கு முன்னாடியே தெரியுமாடா? எதுவா இருந்தாலும் சொல்லுங்கடா!” என்று.
எங்கள் குடும்பத்திற்கு பிரச்சினை ரங்குவின் மூன்று மனைவிகள் பற்றியதல்ல. அவனை போல நாங்களும் ஒரு விபரீதம் செய்வோமோ என்ற பதட்டம் அதிலிருந்தது. ரங்குவின் சிஷ்யர்கள் போல நடந்து கொண்ட எங்களை அவர்கள் இப்படி நினைப்பது தவறில்லைதான்.
ரங்குவின் வீட்டை நெருங்கினோம். கூட்டத்திற்கு ஒரு சாமியானா பந்தல் போதவில்லை. வெயில் உச்சியில் இருந்தது. வேடிக்கை பார்க்கும் ஆர்வம் அதை யாருக்கும் பொருட்படுத்தவில்லை. கூட்டம் எங்களுக்கு வழிவிட்டது இன்னும் பதட்டமாக இருந்தது. மூன்றாவது மனைவியை பார்த்தோம். அவளை வேறு எங்கும் பார்த்தது போல இல்லை. கையில் வைத்திருந்த குழந்தை அவள் மார்பில் சாய்ந்து கிடந்தது. கூட்டம் இங்கிருக்க ரங்குவின் உடல் அருகே யார் இருப்பார்கள் என்ற ஒரு யோசனை ஓடியது. எல்லோரும் அமைதியாக இருந்த நேரத்தில் அந்த குழந்தை எங்கள் பக்கம் திரும்பியது. அதற்கு ரங்குவின் சாயல்!

Leave a comment