மீள்வதைத்தவிர வேறு வழியில்லை . . .

கோவை ஆனந்தன்

மணமேடையே கூட்ட நெரிசலில் களை கட்டியிருந்தது,

“சாப்பாடு பறிமாற ஆரம்பித்துவிட்டார்கள் வா சாப்பிட்ட பிறகு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க மேடைக்கு போகலாமென்று” கணேசனை மூர்த்தி அழைக்க இருவரும் உணவுக்கூடத்துக்குள் சென்றனர்

ஒரு பக்கம் டேபிளில் விரிக்கப்பட்டிருந்த இலைகளில் உணவு பறிமாறுவதும், இன்னொரு பக்கம் கோடை வெயிலுக்கு இதமாய் குளிர்பானமும், ஐஸ்கிரீமையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

இலையில் பறிமாறப்பட்ட உணவு வகைகளை இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எதிர் வரிசையிலுள்ள அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை பார்ப்பதும் சாப்பிடுவதுமாயிருந்த கணேசனை

“டேய் கணேசா என்ன ஆச்சு! அவரயே பாத்துட்டிருக்க அவரு உனக்கு தெரிஞ்சவரா” என்ற மூர்த்தியிடம்

“ஆமா மூர்த்தி, இப்ப நான் முன்ன ஒர்க் பண்ண கம்பெனில ஹெச் ஆரா இருந்தவரு, இப்ப ரிட்டையர்டு ஆயிட்டாரு, அதான் பார்த்தேன்”

“அப்புறமென்ன சாப்பிட்ட பிறகு போய் பேச வேண்டியது தானே”

“இல்ல மூர்த்தி, ஆயிரத்தி ஐநூறு பேருக்கு மேல வேலை செய்யுற கம்பெனில என்னை மட்டும் எப்படி ஞாபகம் வெச்சிருக்கவா போறாரு”

“அப்படி சொல்லாத கணேசா எதுக்கும் போய் பேசினாத்தானே என்னனு தெரியும்”

அதுவும் சரிதான் என மனதிற்குள் நினைத்த கணேசனுக்கு பதினாறு வருசத்துக்கு முந்தைய நாட்கள் கண்ணில் நிழலாடியது…

புறநகரிலிருக்கும் இரு சக்கர உற்பத்தித் தொழிற்சாலையில் சென்னைவாசிகளே அதிகமாக பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது, சென்னையிலிருந்து தனி வாகனத்திலோ அல்லது பேருந்திலோதான் தொழிற்சாலைக்கு செல்ல முடியும், இருப்பினும் இருபது வருசத்திற்கு முன்பே சென்னை நகரின் அத்தனை சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும், இப்படிப்பட்ட சாலையின் வழியாக பணிக்கு வரும் அலுவலர்கள் அரை மணிநேரம், ஒருமணி நேரமென தாமதமாகத்தான் வருவர், ஆனால் தொழிலாளிகள் சரியான நேரத்திற்கு வந்துவிட வேண்டுமென்பதில் அனைத்து அலுவலக அதிகாரிகளும் நிர்வாகமும் உறுதியாக இருந்தது. காரணம் அவர்களுக்கு தினமும் மூன்று ஷிப்ட் என்பதால் தொழிலாளர்கள் பெரும்பாலும் உள்ளூர்க்காரர்களாகவும், அங்கேயே தங்கி பணிபுரிபவர்களாகவுமே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர், அதனால் அலுவலக பணியாளர்களின் நேரமும் தொழிலாளர்களின் வேலை நேரமும் மாறுபட்டேயிருந்தது, இந்நிலையில் அனைத்து அலுவலர்களுமே

தாமதமாக வருபவர்கள் உட்பட கேண்டினில்தான் காலை டிபன் சாப்பிடுவதும் வழக்கமாயிருந்தது, இதெல்லாம் முடித்துக்கொண்டு எட்டு மணிக்கு தொடங்க வேண்டிய வேலையை ஒன்பது மணிக்கு மெதுவாக இருக்கையில் வந்தமர்ந்து பொறுமையாகத் தொடங்குவதே வாடிக்கையாகியிருந்தது,

இதற்கும் ஒரு காரணம் உண்டு, கம்பெனியின் முதலாளி ஒரு பிராமணர் என்பதால் பிராமண இளைஞர்களுக்கென்றே முக்கியத்துவமும்,பிரத்யேக சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தது, அதைத்தான் அவர்களும் சாதகமாக பயன் படுத்திக் கொண்டிருந்தனர், இப்படித்தான் காலம் காலமாக இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் புதிதாக ஒரு ஹெச் ஆர் வருவதாகவும் அவர் ஏற்கனவே கோயம்புத்தூரில் பிரபல தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த அனுபவமுள்ளவரென்றும் மிகவும் கண்டிப்பானவர் என்றும் அனைவராலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

சத்யநாரயணன் என்ற புது ஹெச் ஆர் பணியில் சேர்ந்த முதல்நாளே காலை ஏழரை மணிக்கு அலுவலகத்திற்க்கு வந்து விட்டார், ஒரு மாத காலமாக எல்லா நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவர்,

வேலைக்கு வரும் அனைவருமே சரியான நேரத்திற்கு வந்துவிட வேண்டும்,உங்களின் தாமதத்திற்கு நிர்வாகம் ஒரு போதும் விளக்கமும் கேட்காது பொறுப்பும் ஏற்காது என்றவர்,

முன்கூட்டியே வாருங்கள் என அறிவுறுத்தி ஒரு வாரம் கவனித்துக் கொண்டிருந்தார், யாரும் மாறவில்லை, முந்தைய தாமதக் கலாச்சாரமே தொடர்ந்தது, இந்நிலையில் காலை ஏழரை மணிக்கே முதல் ஆளாக வந்தவர் மெயின் கேட்டின் அருகிலேயே கைகளை கட்டி தினமும் விவேகானந்தரைப் போல நின்று கொண்டார்.

யாரிடமும் எதையும் பேசவில்லை, தாமதத்திற்கான விளக்கமும் கேட்கவில்லை, தாமதமாய் வரும் அலுவலர்களில் சிலர் இவரிடம் குட்மார்னிங் சொல்லிவிட்டு ஒரு வித சங்கடத்துடனும் பயத்துடனும் சென்றவர்களும் உண்டு,இவருக்கு பயந்தே முன் கூட்டியே வந்தவர்களும் உண்டு, பத்து நாட்களில் தாமதமாய் வருவது யாருமில்லையெனும் நிலைக்கு மாறியது.

இதன்பிறகு

காலை எட்டு மணிக்கு மேல் யாரும் காலை டிபனுக்காக கேண்டினுக்குள் போகக்கூடாதென்று கதவுகளை அடைக்கச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது, ஒரு வேளை கேண்டினில் சாப்பிட வேண்டுமென நினைப்பவர்கள் எட்டு மணிக்கு முன்னதாகவே வந்து தாராளமாக சாப்பிடுங்கள் என்றும் கூறிவிடுகிறார்,

இந்நிலையில் இவர் மீது கோபத்தில் உள்ளவர்களெல்லாம் சேர்ந்து இவருக்கு ஏழரையென்று பட்டப் பெயர் வைத்து மகிழ்கின்றனர், இந்த விசயம் இவருக்கு தெரிந்தாலும் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்காத சத்தியநாரயணன், எப்போதும் போலவே தனது வேலையில் நேர்மையோடு இருந்தார், கேண்டினில் சமைக்கப்படும் இட்லிகள் மீதமாவதை அறிந்து மதிய சாப்பாட்டுடன் இட்லியை இட்லி உப்புமாவாக மாற்றி வழங்குமாறு கேண்டின் ஊழியர்களுக்கும் வழி முறைகளை சொல்லித் தந்து நிர்வாகத்தின் வீண் சேதங்களையும் செலவுகளையும் தவிர்த்தார், அதே சமயம் ஒரு தொழிலாளிக்கு ஏதாவது பொருளாதார ரீதியில் உதவியோ, மருத்துவ உதவியோ வேண்டுமெனில் தயங்காமல் செய்யக்கூடிய நல்ல மனிதராகவே அவரால் பயன் பெற்றவர்கள் அறிவர்.


“டேய் கணேசா! என்ன சாப்பிட்டு முடிச்சு எழாம என்ன யோசனைலயே இருக்க?

உங்க பழைய ஹெச் ஆர் கை கழுவிட்டு அப்படியே போயிடப் போறார்”

பீடா மடித்து கொடுக்கும் இடத்தில் நின்றிருந்தவரிடம்

“சார் வணக்கம், நல்லாயிருக்கீங்களா?”

சிறு புன்னகையுடன் சற்று யோசித்தவரிடம்

தான் முன்பு வேலை செய்த நிறுவனத்தின் பெயரைச் சொன்னதும் ஞாபகம் வந்தவராய்

“நீங்க…

ஆபிஸ்ல ஒர்க் பண்ணிட்டு இருந்த கணேசன்…. தானே…”

எனறவரிடம்

“ஆமாங்க சார்,

வெறும் ஆபிஸ் பாயாகவே இருந்த என்னிடம் ஒர்க் பண்ணிட்டே ஏதாவதொரு கோர்ஸ் பண்ணுனு என்னை ஊக்கபடுத்தி படிக்கச் சொல்லி ஒரே இடத்துல தேங்கியிருக்காத, தினமும் ஏதாவதொன்றை தேடிக்கொண்டே இரு, இல்லை கத்துட்டே இரு னு நீங்க சொன்ன வார்த்தைகள்தான் என்னை இந்த நிலையில உங்களோடு நின்னு பேச வெச்சிருக்குங்க சார்.”

“சூப்பர்,ரொம்ப மகிழ்ச்சிங்க கணேசன்

இப்ப எப்படி இருக்கீங்க?”

“நான் நல்ல இருக்கேன்ங்க சார்,

நீங்க?”

“ஃபைன், வெரிகுட்”

“ஒர்க்கெல்லாம் எப்படிப்போகுது?”

“எலக்ட்ரிக் வெய்க்கல்ஸ் வர ஆரம்பிச்சதால கொஞ்சம் டல்லாத்தான் இருக்குதுங்க சார்”

“எல்லாம் போக போக சரியாயிடும்,”

சில வினாடிகள் மௌனம் அதன்பின்

“காளிதாசன் னு

ஒரு பையன் ஆர் அன் டியில இருந்தானே இப்ப எப்படி இருக்கான்?”

“சார் அவருதான், இப்ப புரொடக்சன் மேனேஜரா இருக்காருனு கேள்விப்பட்டேன், நான் அங்க வேலையிலிருந்து விலகனதால

முழுசா எதுவும் தெரியலீங்க சார்”

“ஓ….அப்படியா பராவாயில்லை,

உண்மையிலேயே எதிரிகளின் சூழ்ச்சிகளால அவ்வளவு அடி விழுந்தும் திரும்பத் திரும்ப எந்திரிச்சு பீனிக்ஸ் பறவை போல முன்னேறியவன், நான் கேட்டதா சொல்லுங்க ”

“ஓகே கணேசன், பார்க்கலாம், நைட் பத்து மணிக்கு ட்ரெய்ன், இப்ப கிளம்பினாத்தான் சரியா இருக்கும்”

என சத்யநாராயணன் மண்டபத்திலிருந்து கிளம்பி வெளியே சென்றார்.

கணேசனும் மூர்த்தியும்

மணமக்களை வாழ்த்திட மேடைக்கு சென்று திரும்பிய பின்னரும் சத்தியநாரயணனின் செயல்பாடுகளே கணேசனின் மனதில் நிழலாடிக் கொண்டிருந்தது.


சத்தியநாரயணன் பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளில் புதிதாக திறக்கப்படவுள்ள புது யூனிட்டிற்கு தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப கல்லூரிகளுக்கே சென்று திறமையான மாணவர்களை தேர்வு செய்து வாருங்களென ஜி எம் கூறியதால் தமிழ்நாட்டிலுள்ள சிறந்த கல்லூரிகளில் மாணவர்களைத் தேர்வு செய்ய மூன்று பேர் அடங்கிய குழுவில் சத்தியநாராயணனும் இடம்பெற்றிருந்தார், அவர்களின் உதவிக்காக ஆபிஸ் பாயாக இருந்த கணேசனும் அவர்களோடு வெவ்வேறு ஊர்களுக்கு பயணப்பட வேண்டியிருந்தது, அப்போது பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளை பார்த்ததுண்டு,

அப்படித்தான் கோயம்புத்தூரிலுள்ள பிரபல இன்ஜினியரிங் கல்லூரியிலும் கேம்பஸ் இண்டர்வியூக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,

பத்து மணியிலிருந்து இண்டர்வியூ நடந்து கொண்டிருந்தது, பல்வேறு திறமையாளர்களை தேர்வு செய்து கொண்டிருந்தவர்கள் மதிய உணவுக்குப்பின் தேர்வானவர்களின் விவரத்தையும் மற்ற விதிமுறைகளையும் தெரிவிக்கலாமென முடிவு செய்யப்பட்டு கல்லூரிக்கு அருகிலுள்ள உணவகத்தில் சாப்பிடலாமென்று அனைவரும் வெளியே கிளம்பினர் அப்போது,

“ஐயா சாமீ…. எங்க கொல தெய்வமே நீதான்யா என் புள்ளக்கு ஒரு வேல தரணும்,” என அழுக்குப் படிந்த ரேசன் சேலையணிந்திருந்த

பெண்மணி ஓடிவந்து சத்தியநாராயணனின் காலில் விழுந்து அழுதாள்,

“அம்மா… ம்மா…

எந்திரிங்க கால்ல எல்லாம் விழக்கூடாது, என்ன விவரமுனு பொறுமையா சொல்லுங்க,”

பக்கத்தில் நிற்கும் ஒரு மாணவனைக் காட்டி “இவன்தான்யா என் புள்ள காளிதாசன், சின்ன வயசுலிருந்தே நல்லா படிப்பானுங்க அதனாலதான் இந்தக் காலேஜ்லயும் எடம் கெடச்சுதுங்க, நானும் இவன் அப்பனும் ஊர்ல துப்புறவு வேல பாக்குறமுங்க ஐயா,அதனாலதான் இவனாவது ஒரு நல்ல வேலைக்கு போகனுமுனு ஆசப்படுறமுங்கய்யா,இவன நம்பித்தான் நாங்க இருக்குறமுங்கய்யா”எனச் சொன்னவளிடம்

“சரிங்கம்மா உங்க பையன் இண்டர்வியூ அட்டன் பண்ணிருக்கான்ல ஒன்னும் கவலப்படாதீங்க, தகுதியும் திறமையும் இருந்தா கண்டிப்பா வேலை தர்றோம்” எனச்சொல்லிய சத்யநாராயணனுக்கு நேர்காணலின் போது கேட்ட கேள்விக்கெல்லாம் எவ்வித பதற்றமுமின்றி தெளிவாகவே பதிலளித்த காளிதாசனின் முகம் கொஞ்சம் கூடுதலாகவே மனதின் ஓரத்தில் நினைவிலிருந்தது, சாப்பிட்டு வந்தவுடன் இவனுடைய பேப்பர்களை தேடிப்பார்த்தார், தேர்வுக்குழுவின் அனைவராலும் அவன் தேர்வு செய்யப்பட்டிருந்தான், அவனது அம்மா இவரோடு பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த மற்ற அதிகாரிகள் காளிதாசனின் ஜாதியைக் குறிப்பிட்டு தேர்வு செய்திருப்பதை நிராகரிப்பதாக முடிவு செய்தனர். சத்தியநாராயணன் அதற்கு உடன்படாமல் அவர்களது முடிவை ஏற்க மறுத்து மறுபடியும் தேர்வு செய்கிறார்.

தேர்வானவர்களோடு காளிதாசனும் தொழிற்சாலையினுள் உற்பத்திப் பிரிவில் பணியமர்த்தப்படுகிறான்,

ஆனால் அங்குள்ள அனுபவம் வாய்ந்த அதிகாரிகளும் மற்ற அலுவலர்களும் காளிதாசனோடு பணிபுரிய விரும்பாததால்

தொழிற்சாலையின் ஒவ்வொரு துறைகளாய் பந்தாடப்படுகிறான், இதையெல்லாம் கவனித்த சத்யநாராயணன், ஜி எம்மின் அனுமதியோடு ஆர் அன் டி பிரிவுக்கு காளிதாசனை பணியிட மாறுதல் செய்கிறார்,

“காளிதாசன் நீங்க இந்தக் கம்பெனிக்கு புதுசுங்கறதால இங்க நடக்கறது எல்லாமே அச்சமூட்டுற மாதிரி இருக்கலாம், நானும் உங்கள மாதிரிதான் ஆரம்பத்துல குழப்பமாகவும் அச்சத்தோடும்தான் என்னோட கேரியரை இங்க ஆரம்பிச்சேன், ஒவ்வொரு பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் போதெல்லாம் அப்படியே அதே இடத்துல ஸ்தம்பித்து நிற்காம

அதிலிருந்து மீண்டு வந்துடனும், அது கஷ்டமாத்தான் இருக்கும் இருப்பினும் மீள்வதைத்தவிர வேறு வழியில்லை

இங்க இருக்குற பெரும்பாலானோர் உன் வளர்ச்சியையும் திறமையையும் பொறுத்துக்கொள்ள முடியாதவங்க, அதனால ஏதாவதொரு வகையில தொந்தரவு கொடுத்துட்டேதான் இருப்பாங்க, அதையெல்லாம் கடந்து நம்ம இலக்கினை நோக்கி போயிட்டே இருக்கனும்” என சத்யநாராயணன் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த காளிதாசன்,சிறு புன்னகையோடு தலையாட்டியவாறு அங்கிருந்து கிளம்பி நேராக

ஆர் அன் டி பிரிவுக்கு சென்றான், அங்கும் காளிதாசனின் மேற்ப்பார்வையின் கீழ் பணிபுரிய சிலர் விரும்பவில்லை யென்றாலும்

ஜி எம் இந்த விசயத்தில் நேரிடையாக தலையிட்டிருப்பதால் மேற்கொண்டு யாரும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை,

காளிதாசனின் புதிய தொழில் நுணுக்கங்ஙளை வெளிப்படுத்த ஆர் அன் டி பிரிவு பெரும் வரப்பிரசாதமாக அமைந்து புது உத்வேகத்தையும் அளித்ததால்

முந்தைய காலங்களில் தயாரிக்கப்பட்ட வாகனங்களைக் காட்டிலும் நவீன உத்திகளோடு உருவாக்கப்பட்ட வாகனங்கள் திறனிலும், விற்பனையிலும் வெளிநாட்டு நிறுவனங்களோடு போட்டியிடுமளவிற்கு முன்னேறியது. இதனால் மேலதிகாரிகளின் கவனத்தையும் ஈர்த்த காளிதாசன் திடீரென நான்கு நாட்களாய் எவ்வித தகவலுமின்றி பணிக்கு வரவில்லை,

காளிதாசன் மீது ஏற்கனவே வன்மத்திலிருந்த அதிகாரிகள் சிலர் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு

ஜி எம்மிடம் நேரிடையாகவே இல்லாததும் பொல்லாததுமாக கூறி வேலையிலிருந்து நீக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்,

இந்நிலையில்தான் சத்தியநாராயணனை ஜி எம் அழைத்து

“காளிதாசனுங்கற ஜூனியர் இன்ஜினியர் நாலு நாளா வர்லைனு சொல்றாங்க இதப்பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? ஏன் இதைப்பத்தி என்கிட்ட நீங்க பேசல?”

“என்னாச்சுனு இப்பவே பார்க்குறேன்ங்க சார்”

“ஓகே இம்மிடியட்டா பாருங்க

உங்ககூட ஆபிஸ் பாய கூட்டிட்டு போங்க” என்றார் ஜி எம்

“ஓகே சார் பார்க்குறேன்”

காளிதாசன் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தால் அங்கு வீடு பூட்டியிருந்தது, அக்கம் பக்கத்தில் விசாரித்த போது யாரோ ஒரு கர்ப்பிணி பெண்ணை அழைத்துக் கொண்டு நாலு நாளைக்கு முன்னாடியே வெளியில கிளம்பி போனதாக கூறினார்கள், வேலைக்கு சேர்ந்து ஒன்றரை வருசமாகுது இவனுக்கு கல்யாணம் ஆன மாதிரியும் தெரியல, எப்படி? யாரா இருக்கும் என யோசித்துக்கொண்டே மருத்துவமனைகள் ஒவ்வொன்றாய் சத்யநாராயணனும் கணேசனும் தேடினர் காளிதாசன் மீது கடும் கோபத்திலிருந்த சத்தியநாரயணன் கடைசியாக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் விசாரிக்கும் போது இவர் சொன்ன தகவல்களின் அடிப்படையில் இங்கு ஒருவர் மனைவியுடன் பிரசவ வார்டில் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்,

பிரசவ வார்டெங்கும் மருந்து வாசனையாலும், குழந்தைகளின் அழுகை சத்தத்தாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது, அங்கு வரிசையாக இருந்த கட்டில்களில் திரும்பிய பக்கமெல்லாம் கணவன் மனைவி சகிதமாக இருந்தனர்,இதில் அஞ்சாறு கட்டில்கள் தாண்டி இருண்ட முகத்தோடும் முகச் சவரம் செய்யமலும் அழுக்கு சட்டையோடுமிருந்த காளிதாசனைப் பார்த்ததும் பாவமும் பரிதாபமுமாக இருந்தது, ஒரு நிமிடம் பேச எதுவுமேயில்லாமல் நின்ற சத்தியநாராயணனுக்கு இதுவரை மனதினுள் கொப்பளித்த கோபமெல்லாம் அணைந்து அமைதியானது.

“என்ன காளிதாசன், எப்படி இங்க? யாரு இவங்க?”

“சார் இது நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுங்க ரெண்டு வருசமா லவ் பண்றோம்”

என பேசும் போதே கண் கலங்கிய காளிதாசனின் தோளில் கை வைத்த சத்தியநாராயணன்

“எவ்வளவு தெளிவா நிதானமா இருக்குற உன்னைப் பார்த்து பல தடவை

நானே வியந்திருக்கேன், ஆனா ஒரு பொண்ணோட வாழ்க்கைல நீ இப்படி பண்ணியிருப்பதைப் பார்க்கும் போது, எனக்கே வருத்தமா இருக்கு”

எனப் பேசிக்கொண்டிருக்கும் போதே படுக்கையிலிருந்த அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள், உறக்கத்திலிருந்த குழந்தையும் விழித்து விட்டது இதை கவனித்த சத்தியநாராயணன் மேற்கொண்டு இதைப்பற்றி எதுவும் பேசாமல்

“அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம் எனச்சொல்லிவிட்டு, நீ இங்கயே இரு,

நான் வந்துடறேன்”

என சொல்லிவிட்டு வெளியில் கிளம்பிப் போனவர் அரை மணி நேரத்தில் கையில் இரு பார்சலோடு திரும்பி

வந்தார், அப்போது குழந்தை மற்றும் அந்தப்பெண்ணுடன் வெளியே வந்த காளிதாசன்

“சார், இன்னிக்கே டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு போகச் சொல்லிட்டாங்க”

என்றான்

வாங்க கார்லயே போய்க்கலாமென அவரது காரில் ஏற்றிக்கொண்டு போன சத்யநாராயணன் ஒரு பிள்ளையார் கோயில் அமைந்துள்ள அரச மரத்தருகே காரை நிறுத்தினார், ஒன்றும் புரியாமல் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்,

“என்னப் பார்க்குறீங்க, எல்லாம் நல்ல விசயம்தான் வாங்க”

அழைத்துக்கொண்டு பிள்ளையார் முன் மஞ்சள் தாலியை வைத்து சாமி கும்பிட்டு வந்த சத்தியநாராயணன்

“குழந்தையை எங்கிட்ட கொடுத்துட்டு இந்தா இந்த தாலிக் கயிற்றை அந்தப்பொண்ணு கழுத்துல கட்டு, இனி எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்”

என சொல்லி வாழ்த்தியவர் மூன்று பேரையும் வீட்டில் விட்டுக் கிளம்பும் போது

“காளிதாசன் நீ ரெண்டொரு நாள்ல ஆபிஸிற்கு வந்து லீவு சொல்லிடு, நீ எதிரிகளின் கூடாரத்துக்குள்ளதான் இருக்கறங்கறதை ஒரு போதும் மறந்துடாதே, எனச்சொல்லி விட்டு

“இந்தா செலவுக்கு கொஞ்சம் பணம், தேவைப்படறதை வாங்கிக்கொடு”

என அவனது சட்டைப் பையில் ஆயிரம் ரூபாயை திணித்துவிட்டு அங்கிருந்து நேரிடையாக ஆபிஸிற்கே சென்றார்.

“என்ன சத்தியநாராயணன் அந்தப் பையனிடமிருந்து இன்னிக்கு வரைக்கும் எந்தத் தகவலும் வராததால வேலையிலிருந்து நீக்கிடலாமுனு டிசைடு பண்ணியிருக்கேன்” என்று

ஜி எம் சொல்ல

“பரவாயில்லீங்க சார் அதுதான் உங்க விருப்பம்னா தாராளமா அதை செய்யுங்க, ஆனா ஒரு விசயம் நீங்க வேலையிலிருந்து நீக்கினது தெரிஞ்ச அடுத்த நிமிசமே மூன்று உயிர்கள் போயிடும் அதுக்கு மேல உங்க விருப்பம்

அவன் இருக்குற நிலைமையில ஆபிஸ்க்கு தகவல் சொல்லத்தோணாதுங்க சார்

யாரோட சப்போர்ட்டும் இல்லாம மயக்கத்திலிருக்குற மனைவியையும் குழந்தையையும் ஜி ஹெச் ல வெச்சுட்டு ஒரு அனாதை மாதிரி இருக்கானுங்க சார், எதற்கும் ஒரு தடவை பரிசீலனை பண்ணுங்க ”

“என்ன சொல்றீங்க”

“ஆமாங்க சார்”

என நடந்த எல்லா விசயங்களையும் சொன்ன பிறகு

“சரி, எல்லாம் பார்த்துட்டு வரச்சொல்லுங்க”

என்ற ஜிஎம்மிடம்

“தேங்க்யூ சார்”

எனச்சொல்லி விட்டு கேபினிலிருந்து வெளியே வந்த சத்தியநாரயணனின்

நினைவுகளாகவே கணேசனுக்கு இருந்தது,

“டேய் கணேசா, என்ன மறுபடியும் பழைய நியாபகமா?

வீட்டிற்கு போக நிகழ் காலத்துக்கு வாடா” என்ற மூர்த்தியிடம்

“மீள்வதைத்தவிர வேறு வழியில்லை” என நினைத்தவாறு தனது காரினை நோக்கி இருவரும் நடந்தனர்.

Leave a comment

Trending