முப்பரிமாணம் : நூல்வழிப்பயணம் 3
அன்பாதவன்
பனித்துளியில் ஆகாயம், உதிரும் வேர்கள், உயிர்
அன்பாதவன் 7829985000

வைகாசி மாதம், கத்தரி வெய்யில் கொளுத்துகிறது, மக்களை இம்சிக்கிறது. திடீரென கோடைஇடியின் உறுமல்… கோடைமழையின் தாள ஜதி… இப்படித்தான் சட்டென மாறுது வானிலை. வாசக மனங்களும் அப்படித்தான் என நம்பி இம்முறை மூன்று வித்யாசமான நூல்கள் முப்பரிமாணத்தில் இடம் பெறுகின்றன.
உயிர் o புதினம் o ப. சிவகாமி oஅணங்கு வெளியீடு o
“வாழ்க்கை அதற்கே உரிய மர்மத்துடன் திருப்பங்களுடன் குறிக்கோளுடன் அது இல்லாமலும் எங்கு தொடங்கியது எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று ஊகிக்க முடியா வண்ணம் மக்களைப் பிணைத்து வைக்கிறது. இப்படி வரையறுக்க முடியாமல் இருப்பதில்தான் அதன் சுவாரசியம் அடங்கி இருக்கிறதோ? பிறப்பும், இறப்பும் ஒரு தெரிந்த தொடக்கமும் முடிவும் என்று கொண்டாலுங்கூட, அவையிரண்டுமே வாழ்க்கையை சிக்கலான பின்னல்களுக்குள் இட்டுச் செல்வதைக் கவனிக்காதவர் உண்டா?” – ‘உயிர்’ புதினத்தின் இடையில் ஆசிரியர் கூற்றாக ப. சிவகாமி எழுதும் வரிகள் தாம் இவை. இந்தப் பத்தியின் சில வரிகளுக்குள் தொடங்கி முடிகிறது ‘உயிர்’ என்கிற 350 பக்க புதினம்
“சமகாலப் படைப்பாளி என்பவன் மக்களின் ஊடாக வாழ்பவன். கடன்கத்திகளில் உழல்பவன். ஊஞ்சல், நாற்காலியில் குந்தி எழுதும் பொதுத் தன்மையிலிருந்து விலகி வட்டாரப் படைப்புகள் என்கிற நிலைக்கு நகர்கிறபோது இன்னார், இனியார், இந்த இடம், அந்த இடம் எனக் குறிப்பிட்டே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் படைப்பாளிக்கு ஏற்பட்டு விடுகிறது. ”-கண்மணி குணசேகரன் –[1. 1[
தலித் பெண்ணியப் படைப்பாளர்களுள் சிவகாமி படைப்புகள் ஏற்கனவே பரவலான கவனத்தைப் பெற்றுவிட்டன. பெண்ணியத்திலிருந்து பிரித்துப்பார்க்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது தலித் பெண்ணியம். என்றாலும் 1990களுக்குப் பிறகுதான் பரவலான கவனிப்பைப் பெற்றது. எனினும் சிவகாமி 1980களின் இறுதியில் இருந்து தலித் பெண்ணியம் சார்ந்து நாவல்கள் எழுதிவருகிறார்
காலம்:
புனைவுகளும் யதார்த்த உண்மைகளும் விகிதங்களில் கலந்த புதினங்கள் எனும் இலக்கிய வகைக்கு, தமிழின் இலக்கியப் பயணத்தில், வரலாற்று வாகனத்தில் மிக முக்கியமானதொரு இடமுண்டு. காரணம் புதினங்கள், பண்பாட்டு விழுமியங்களின் பதிவாகவும், காலத்தின் சுவடுகளாகவும், பாத்திரப் படைப்புகளின் வழியாக பதிவு செய்பவை. பல பாத்திரங்கள், சிறுநகரம் தொடங்கி அமெரிக்கா வரையிலான பின்புலம், சாதிய முரண்கள் எனக் கலவைகளாலான ஒரு காலப்பெட்டகமாக ‘உயிர்’ – நாவல் வெளிவந்த ஆண்டு 2016 எனினும், காலத்தின் பதிவாக எந்தக் குறிப்புகளும் புதினத்தின் ஊடாக காணப்படுவதில்லை. எனில் 2016க்கு முந்தைய பத்தாண்டுகளுக்குள் நாவலின் காலம் அமைவதாகக் கொள்ளலாம்.
இடம்:
“ஒரு நாவல் என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக் கோவைதான் என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. நாவல் புனைகதைதான்: ஆனால் மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளிலும், நிலைகளிலும், ‘பிரத்தியட்சங்கள் எனப்படும் உண்மை வடிவங்களைத் தரிசித்த பின்னர் அந்த அனுபவங்கள் எனது’ இதயவீணையில் மீட்டிவிட்ட சுரங்களைக் கொண்டு, நான் இசைக்கப்புகும் புதிய வடிவையே நாவல் என்று கருதுகிறேன்”[2. 1]
நாவல் தொடங்குகிற பெரும்பாலான நிகழ்வுகள் நடக்கும் இடம் ஒரு சிறு நகரம் என்றே குறிப்பிடப்படுகிறது. அச்சிறு நகரம் தொட்டியம் – கிராமத்திலிருந்து 10 கி. மீ தூரத்தில், அல்லது சேலத்துக்கு அருகாமையில் இருப்பதாக குறிப்பிடப்படுவதால் பெரம்பலூர் அல்லது கெங்கவல்லியாக ஊகிக்கலாம். பின், கதை சென்னைக்கும், அமெரிக்காவுக்கும் நகர்கிறது.

”சுய அனுபவத்தின் அடிப்படையில் ஒருவர் நாவல் எழுதத் தொடங்கும்போது, சில கடந்த கால நிகழ்வுகளை எழுதும் அவசியம் ஏற்படலாம். நாவல் நிகழும் காலத்திற்கும், நாவல் எழுதும் காலத்திற்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்படுவது இயல்பு. இதை இட்டுநிரப்ப கள ஆய்வும், நூலறிவும் அவருக்குத் தேவைப்படுகின்றன. சுய அனுபவத்தின் அடிப்படையில் நாவல் எழுதுவோருக்கு இத்தகைய இடர்ப்பாடு இல்லை. ஏனெனில் அவர்கள் தேர்ந்தெடுத்த களத்துடனும், அங்கு வாழும் மனிதர்களுடனும் நிகழும் நிகழ்வுகளுடனும இணைந்த ஒன்றாக அவர்களது வாழ்க்கை அனுபவம் அமைந்திருக்கும்” எனக் குறிப்பிடும் ஆய்வர் ஆ. சிவசுப்ரமணியணின் கருத்தும் இங்கு முக்கியமானதே [2. 3]
கதைசொல்லல் வகைமை:
. பேரா. எம். ஏ. நுஃமான் கூறும் பின்வரும் கருத்தை மேற்கோளாகக் காட்டுவது பொருத்தமாய் இருக்கும். “நாவல் முழு மொத்தமான மனித அனுபவத்தையும் வாழ்க்கைமுறைகளையும் வெளிப்படுத்தக்கூடிய ஓர் இலக்கிய வடிவமாகும். காலம், இடம், சமூகம், தனி மனிதன், சமூக உறவுகள் ஆகியவை நாவலின் அடித்தளங்களாகும். ஆகவே நாவலின் மொழி ஏதோ ஒரு குறிப்பிட்ட வகை மொழியாக அமைவது சாத்தியம் அல்ல. பதிலாக காலம், இடம், சமூகம், தனிமனிதன், சமூக உறவுகள் ஆகியவற்றுக்கேற்ப வேறுபடும் எல்லாவித வகை மொழிகளையும் அது உள்ளடக்குகின்றது. இவ்வகையில், இலக்கிய வழக்கை மட்டுமன்றி எல்லா வகையான பேச்சுவழக்குகளையும் எல்லா வகையான மொழிப் பிரயோகங்களையும் நாவல் வரையறையின்றிக் கையாள்கின்றது. சுருக்கமாகச் சொல்வதானால் நாவலுக்குப் புறம்பான மொழிப் பிரயோகங்கள் எதுவும் இல்லை எனலாம். ஏனெனில் நாவலுக்குப் புறம்பான வாழ்க்கை அனுபவங்கள் எவையும் இல்லை. அவ்வகையில் மொழியும், வாழ்வும் நாவலுடன் இரண்டறக் கலந்துள்ளன. ஆகவே நாவலின் மொழி முழு மொத்தமான மொழிப் பயன்பாட்டையும் உள்ளடக்குவது தவிர்க்க முடியாததாகின்றது. ”[2. 3]
மேற்சொன்ன பின்புலத்தில் கதை சொல்லல் வழியாக வட்டாரமொழி புதினம் மற்றும் யதார்த்தவகை நாவல்களிலும் ‘உயிர்’ புதினத்தைப் பொருத்தலாம்.
மொழி:
“கிராம வாழ்வை யதார்த்த நெறியில் நாவலில் சித்தரிக்க முயலும்போது கிராமிய மக்களின் வழக்குமொழி உரைநடையில் வந்து கலப்பது தவிர்க்க முடியாததாகும். அந்த வகையில் தமிழின் பல்வேறு பிரதேசக் கிளைமொழிகளும் சமூகக் கிளைமொழிகளும் நமது உரைநடையை வளப்படுத்தி உள்ளன. இக்கிளைமொழிக் கலப்பு உரையாடல்களில் மட்டுமன்றி விவரணங்களிலும் கணிசமாக நிகழ்ந்துள்ளதை நாம் அவதானிக்கலாம். ”[2. 4] புதினத்தின் கதை போக்கும், பாத்திரப் படைப்புகளும் திருப்பங்களை ஏற்படுத்தினாலும் எழுதப்பட்ட அசுவாரஸ்யமான மொழி வாசிப்பை ‘சப்’ பென்றாகிறது. நாவலின் கதை பாத்திரங்களின் பார்வையில் நகர்த்தப்படாமல் ஆசிரியரின் பார்வையிலேயே நகர்கிறது. கதையின் போக்கு லட்சுமி எனும் சிறுமி வளர்ந்து திருமணம் செய்துகொள்ளும் காலம் வரை சற்றேறக்குறைய 8-12 ஆண்டுகளுக்குள்ளாக நிகழ்வதாக கட்டமைக்கப்பட்டுள்ள சலிப்பூட்டும் நடையில் உயிர்
கதை மையம்:
“செய்கிற தொழிலாய் வேறுபாடைந்த சமூகம் தவிர்க்க இயலாமல் ஈரல் குழையின் மேல் ஒட்டிக்கொண்டு கடும் கசப்பைத் தரும் பிட்சியைப் போன்று இந்த சாதியைத் தன்மேல் போர்த்திக் கொண்டு விட்டது” [1. 2] எனக் குறிப்பிடும் கண்மணிகுணசேகரனின் சொற்களுக்கேற்ப குறு நகரமொன்றில் அரசின் உணவுக் கிடங்கில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவினங்களைத் திருடிப் பிழைக்கும் அதிகார வர்க்கம் / அதிகாரமில்லா கூட்டம் என்ற இரண்டு திருட்டு கும்பல்களுக்கிடையே நிகழும் ஊழல், பணம், போட்டி பெண்ணாடை எனச் சுழல்கிறது இந்நாவல்
”வட்டார நாவல்கள் என்பவை முழுக்க முழுக்கச் சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும். அதாவது, குறிப்பிட்ட வட்டாரம் சார்ந்து வாழ்கின்ற மக்களின் சாதிய அமைப்பு, அவர்களின் வாழ்க்கைமுறை, வழக்காறு மற்றும் நம்பிக்கைகள் குறித்து எழுதப்படுபவையாகும். இந்தியச் சமூகச் சூழலில் சாதியத்தைத் தவிர்த்துவிட்டு மக்களின் வாழ்வியலைப் பார்த்தல் இயலாது. எனவேதான் வட்டார நாவல்கள் மக்களின் வாழ்வியலைப் பதிவுசெய்யும்போது அவர்களின் சாதியத்தையும் சேர்த்துப் பதிவுசெய்கின்றன. [1. 3]
பாத்திரப்படைப்பு:
தன் தவறுகளை நியாயப்படுத்துவது மனசாட்சியும், எவ்வித அரசியலுமில்லாத பாத்திரங்களுக்கு நீதியும், நியாயமுமேது…?
அதிகமாக திருடி விற்று சம்பாதித்துக் கொண்டிருந்த கிடங்கு உதவி மேலாளர், மேற்பார்வையாளர், கிளர்க்குகள் ஒருபுறம் அவர்களை மிரட்டி தனக்கும் பங்கு கேட்கும் கூலித்தொழிலாளர் தலைவன், அவனுடைய போட்டித்தலைவன்.
இப்படியாகப்பட்ட ஆண்களுக்கு, பணம் எவ்விதம் வந்தது என்ற கேள்விகளின்றி எப்படி வந்தாலும் சரிதான் என கணவனே கண் கண்ட தெய்வம் என ஒத்துழைக்கும் பெண் பாத்திரங்கள்.
அடுத்த தலைமுறை படித்த சமுதாயமோ குடி, தினமொரு இணையென நவீன வாழ்க்கையை சிலாகிக்கும் வாரிசுகள் என எதிர்மறை பாத்திரங்களை இணைக்கும் வலுவில்லா நூலாய் லட்சுமி எனும் வேலைக்காரச் சிறுமி
குறு நகரத்துக்கே உரிய சாதிய பின்புலம் வாய்க்கப் பெற்ற முதல் தலைமுறை ஒருபுறமெனில் உலகமயமாக்கலின் துளிகளை நக்கி ருசிக்கும் படித்த தலைமுறை இன்னொரு புறம் என சத்தற்ற வேரற்ற பாத்திரப்படைப்புகள் வாசிப்பு சுவாரஸ்யத்தை கூட்டுவதாயில்லை
மொத்த புதினத்திலும் வித்யா என்கிற பெண் பாத்திரத்தின் உரையாடலொமொன்றே சற்று ஆறுதல் தருவது:
“நம்ம அப்பாக்களை நாம் புரிஞ்சக்கலனா அவங்க செய்யறதையெல்லாம் கிரிட்டிக்கலா பாக்கலேன்னா அதே மாதிரி தப்புகளை செஞ்சிகிட்டுதான் இருப்போம். இதெல்லாம் நான் சொல்லித்தான் உனக்குத் தெரியனும்னு அவசியமில்ல. போர்க்குற்றங்களுக்காக ஏறக்குறைய நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஜப்பான் பிரதமர் கொரியாவுல தலைகுனிஞ்சு மன்னிப்பு கேட்கலியா? அப்ப இருந்த பிரதமர் வேற. அந்த சூழ்நிலை வேறன்று வாதாட்டிக்கிட்டுதான் இருந்தாங்களா. நாம் அடுத்த தலைமுறை. . போன தலைமுறையோட கொலைவெறியை சுமந்துகிட்டு திரியக்கூடாது… நாம் சுதந்திரமா வாழணும்! அவங்கள மாதிரி நாம எல்லா விஷயங்களிலும் இருக்கக்கூடாது. (பக்கம் 231)
இனவரைவியலும்” உயிர்”நாவலும்:
ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பில் வாழும் மனிதர்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், உளவியல் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டெழுதும் நாவலானது அம்மனிதர்களினதும், சமூகத்தினதும் பண்பாடு, பழக்கவழக்கங்கள், சமய வாழ்வு மற்றும் வாழ்வியல் அம்சங்களை முழுமையாகப் பிரதிபலிப்பது அவசியமாகும். அப்பொழுதுதான் அந்நாவலைப் படிக்கும் வாசகன் அதில் இடம்பெறும் சமூகச் சூழலோடு ஒன்றிவிட முடியும். அத்துடன் அந்நாவலில் இடம் பெறும் பாத்திரங்கள் அவை சித்தரிக்கப்படும் காலச்சூழலோடு பொருந்தி நிற்கும்.
. பெண்கள் மீது நிலவுடைமையாளர்கள்/வசதிபடைத்தோர் நிகழ்த்தும் பாலியல் வன்முறை.
தலித் மற்றும் இடைநிலை சாதிகளிடையே உருவாகும் தலைவர்கள், சுயநலவாதிகளாக அமைந்து அவர்களின் பிரச்சினைகளை தமது சொந்த ஆதாயத்திற்குப் பயன்படுத்துதல்.
சொந்தமாக நிலமின்றி நிலவுடைமையாளர்களின் கூலியாட்களாக தலித்துகள் அவதிப்படுதல்
தலித்துகளுக்கு எதிராக உடைமையாளர்கள் சார்பாக செயல்படும் அரசு இயந்திரம்
தலித்துகளின் மற்றும் இடைநிலை சாதிகளிடையே ஒற்றுமையின்மை.
நேச சக்திகளை, தலித்துகள் மற்றும் இடைநிலை சாதிகள் தேடிக் கொள்ளாமை.
.
”ஓர் இலக்கியப் படைப்பு சிறந்து விளங்க வேண்டுமானால் அதில் இடம்பெறும் மாந்தர்களும், அம்மாந்தர்களின் பின்புலத்திலுள்ள சகல இயக்கங்களுமுரியப் பொருட்களும் மிக நுனுக்கமாக சித்தரிக்கப்படவேண்டும். . இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய இனவரைவியல் செய்திகள் அவ்விலக்கியத்தில் இடம் பெறும் பாத்திரங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் பொருத்தமான பின்புலத்தை உருவாக்க உதவுகின்றன“என்பார் ஆய்வர் ஆ. சிவசுப்ரமணியன் [2. 5]
அந்த வகையில் ப. சிவகாமியின் ‘உயிர்’ புதினத்தை ஒரு இன வரைவியல் நாவலெனக் கருதலாம், அதே நேரம் புதினத்தின் பாத்திரங்கள் வேறு வேறு திசைகளில் இலக்குகள் இன்றி பயணிப்பதையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
000000000
பேருந்து பயணங்களில் பின்னோடும்,
வாழ்வின் ஒளி மங்கிய தரிசனங்கள். .
உதிரும் வேர்கள் / சிறுகதைகள் / க. அம்சப்ரியா
கவிதை, கட்டுரை, விமர்சனம் என ஓயாச்சிந்தனைக்கும், சாயா விரல்களுக்கும் சொந்தக்காரரான அம்சப்ரியா, ‘உதிரும் வேர்கள்’ – நூல் வழியாக சிறுகதை உலகிலும் நுழைந்திருக்கிறார்.

இப்படிக் குறிப்பிடக்காரணமிருக்கிறது! கவிதைக்கு சிறுதாள் போதும்! கட்டுரைக்கோ உண்மைகள் வேண்டும், புள்ளி விவரங்களோடு! எனில், கதையென்பது, ஒரு நிகழ்வு, சில பாத்திரங்கள், அவர்தம் உரையாடலின் மொழி இவற்றால் கட்டமைக்கப்படுவது!
கலை மக்களுக்கானதா, அன்றி கலைக்காக மட்டுமா என்பது தேய்ந்து போன பழையக் கேள்வி! கலை இலக்கியம்யாவும் மக்களுக்கானதே! மக்களைப் பற்றி, அவர்தம் வாழ்நிலை குறித்த விளாக்களால், விசாரங்களால் புனையப்படுவதே கதைகள் என்பதை எவரும் மறுக்க வியலாது!
கதைகள் வழியாக, கதாபாத்திரங்கள் வழியாக, உரையாடல்கள் வழியாக உணர்வது, உணர்த்தப்படுவது ஒன்றுதான்! அது ஆன்ம விழிப்புணர்வு! அது மனம் சார்ந்தது.
ஆன்ம விழிப்புணர்வு என்பது வேறொன்றுமில்லை! மவுனத்தையும் சப்தத்தையும் சரி சமமாய் பாவிப்பது என்கிற புரிதலில் அம்சப்ரியாவின் புனைவுத்தளம், பெரும்பாலும் எளிய மக்களை மையமாக கொண்டதாக இருக்கிறது.
‘உதிரும் வேர்கள்’ – அம்சப்ரியாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. 17 கதைகள்! வேறு வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவை. பெரும்பான்மையானக் கதைகள் ‘யதார்த்த வகை’ எனும் சுநயடளைவiஉ ளுவடிசல கூநடடiபே வகையிலேயே படைக்கப்பட்டுள்ளன.
அம்சப்ரியாவின், இந்த 17 கதைகளிலும் இடம் பெறும் பெண் பாத்திரங்கள் மிக முக்கியமானவை. அவர் வாழும் கொங்குப் பகுதியான பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரம் சார்ந்தவை.
தன் சொத்துகளை, பெண் பிள்ளைகளுக்கு எழுதி வைத்து, இறுதி காலத்தில் இருக்க இடமின்றி, உணவின்றி, பெருமழை நாளில் உயிர்விடும் பொன்னம்மாக் கிழவி ஒரு தலைமுறையின் குறியீடெனில், தாயை பசியில் ஒரு தலைமுறையின் குறியீடெனில், தாயை பசியில் பரிதவிக்க விடும் மகள்கள் வேறு தலைமுறையின் குறியீடெனலாம். (உயிர்ப் பிணங்கள்)
இழந்த சொர்க்கத்தின் நினைவுச்சின்னமாய், பெட்டியில் இருக்கும் குடை ஒரு உணர்வைத் தருகிறது, கூடவே தலைதுவட்ட துண்டு எடுத்து தரும் சாந்தி – அன்பான ஆதரவான தாம்பத்யத்தின் அடையாளமாய் மிளிர்கிறாள். (குடை)
‘அம்மாவின் கல்யாணம்’ – கதை நாயகியான அம்மாவின் அதிரடிக்குரல், இந்த நூற்றாண்டின் குரல்! “மனசுக்கு திருப்தியில்லாத வாழ்க்கையில் இந்த மாதிரி இது பொருமலா* போர்க்குரலா*. ?
குடிகாரனிடம் மனைவியாய்ச் சிக்கிய கவிதா, அப்பாவால் புறக்கணிக்கப்பட்டு, அம்மாவால், வளர்க்கப்பட்டு, வழி நட்டதப்படும் ‘சுனாமிகா’ -வின் மனக்கிலேசங்கள், கொரோனா காலத்தில் ஆசிரியப்பணி கணவனை, இட்லி மாவு வியாபாரத்துக்கு மடை மாற்றும் விசாலாட்சி, கணவன் நோய்வாய்ப்பட சிறு வாகனத்தில் காய் கறி விற்பனை செய்யும் இளம் பெண் (நினைவில் காடுள்ள மிருகம்) புத்தகங்கள் இல்லாத வீடு மயானத்துக்கு சமம் மயானத்தில் பிணங்களின்றி மனிதர்கள் ஏது’ – என தனிமையில் விசாரிக்கும் கல்யாணி (சிறை) அரசியலில் தன்னைத் தொலைத்த கணவனை வேறு வழியின்றி கசித்து கொண்டிருக்கும் விசாலாட்சி (கணவன்) கடன் வாங்கிய நூறு ரூபாயை கண்டக்டரிடம் ஏமாந்த கிழவி (ஞாபகம்) மகன்கள் இருவரும் சிறகுகள் முளைக்க அவரவர் திசைகளைத் தீர்மானித்துக்கொண்டு நிலத்தையும், வீட்டையும் ஆக்ரமித்து கொள்ள, வாழ்க்கைத் தகிப்பில் பொசுங்கும் கீரைக்கார தெய்வானையம்மாள்.
- என வாழ்க்கையெனும் கடுமையான எந்திரத்தால் சக்கையாய்ப் பிழியப்பட்ட பெண்கள். இந்தப் பெண் பாத்திரங்களை வாசித்துணர்கையில் புரிந்தவை :
- பெண்களின் அரசியலின்மை, எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படுத்தி விடுகிறது.
- குடும்பமும், தனிச்சொத்தும் பிரிக்க முடியாதவையெனினும், பெண்களுக்கான சொத்துரிமை என்பது மிக முக்கியமானது.
- பெண்களின் தன்மானம் காப்பதற்கும், சுயசார்புக்கும் ஒரே வழி, கல்வியும், நிலையான வருமானம் தரும் ஏதாவதொரு பணியும் தான்.
இவற்றை சொல்லாமல் சொல்லியிருப்பது தான் அம்சப்ரியா-வின் உத்தி; வெற்றி!
அம்சப்ரியா-வின் கதைகளில் ‘பேருந்து’ மிக முக்கியமானதொரு பங்கு வகிக்கிறது. அது விடுதலையின் குறிப்பாக பெண்களுக்கான மகிழ்வின் குறியீடாக பல கதைகளில் பயணிக்கிறது. உண்மையில் ‘வீடு’ என்பது பெரும்பாலானப் பெண்களுக்கு களராக்கிருகமாகவே அமைந்து விடுகிறது; எப்போதாவது கிட்டும் பயணங்கள், புதியக் காற்றை சுவாசிக்க ஏதுவாகின்றன; புதிய வெளிச்சந்தைப் பூசுகின்றன எனில் மிகையாகாது.
ரவிவாமனின், முன்னுரை, அம்சப்ரியாவின் கதைகள் மற்றும் கதை மாந்தர்கள் மீதான விரிவான ஆய்வாகவே உள்ளது சிறப்பு!
வாழ்வின் கசப்புகளை அப்படியே ஏற்றுக்கொண்டு பயணிக்கும் அம்சப்ரியாவின் பெண் கதாபாத்திரங்களையும், தன்மானத்துக்கு இழுக்கு நேரும் போதெல்லாம் பொங்கி எழுந்து போராடயத்தனிக்கும் விழி. பா. இதயவேந்தனின் பெண் பாத்திரங்களையும் ஒப்பாய்வு செய்ய யாரேனும் வரவேண்டும்.
எளிய மனிதர்களுக்கான ஆதரவுக் குரல்களில், அம்சப்பிரியாவின் குரல், முக்கியமானது. முற்றத்துப் பறவையின் இசைக் குறிப்புகள்
+++++
பனித்துளியில் ஆகாயம் – ஹைகூக்கள். – ஆர். தேவகி

“இலக்கிய வடிவங்களில் ஹைக்கூ எளிமையானது. ஆனால் நுண்ணிய உணர்வுகள் கொண்டது. இது கலை நயத்தோடும், இயற்கையின் எழிலோடும் இணைந்து நம்மை மயக்கவைக்கும் தன்மையுடையது. இந்த எளிமை ஜென் பவுத்தம் உருவாக்கிய ஒன்று” என்பார் கவிஞர் பல்லவி குமார்.
‘பனித்துளியில் ஆகாயம்’ – எனும் வித்யாசமானத் தலைப்போடு தன் ஹைகூக்களை நூலாக்கி வாசகருக்கு வழங்கி இருக்கும் ஆர். தேவகி, தமிழ் இலக்கியத்துக்குப் புதியவரல்ல! நூல்களோடு வாழும் வரம் பெற்றவர். நிவேதிதா பதிப்பகத்தின் செயலாற்றல். “நெடுங்கவிதைகளை வாசிக்கையில் ஏற்படும் தாக்கம், ஹைகூக்களைப் படிக்கையில் ஏற்படும் தாக்கம் இரண்டுக்கும் வேறுபாடு ஒன்றேயொன்று தான். தாக்கத்தை ஏற்படுத்தும் நேர வித்யாசம் தான். சட்டென நொடிக்குள் ஏற்பட்டு விடுகிறது ஹைகூவின் தாக்கம். அத்தாக்கமே நம்மை நீண்ட நேரம் சிந்திக்க வைக்கிறது. ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. வாசிப்பு அனுபவம் தந்த அந்த சிலிர்ப்பே என்னை ஹைகூ எழுதத் தூண்டியது” என, வாக்குமூலம் தந்திருக்கும் தேவகி-யின் ஹைகூக்கள், இயற்கை நேசம் மிக்கவை. பெருநகரத்தின் வாழ்வியல் அனுபவத்தை பதிவு செய்பவை. ‘சில்வண்டுகளின் இசைக்கு நடனமாடும் அணிற் பிள்ளைகள் பூட்டிய கிராமத்து வீடு’ (ப. 23) சில் வண்டுகளின் ரீங்காரமெலாம் சமகாலத் தலைமுறைக்குத் தெரியுமா? பெருநகரத்தில் அணில்களைத்தான் காண முடிகிறதா? ஏன் கிராமத்து வீடு பூட்டியிருக்கிறது? தற்காலிகமாவா? அன்றி நிரந்தரமாகவா? இப்படி கேள்வி அலைகளை வீசும் அர்த்தம் பொதிந்த ஹைகூ இது. ‘மீண்டும் தீப்பிடிக்குமா காடு ஒன்றையொன்று கேட்டுக்கொண்டன பாறையிடுக்கிலிருந்த பறவைகள் (ப. 36) மேற்சொன்ன ஹைகூவில், ‘மீண்டும்’ என்ற சொல் தருகிற அச்சமும், பாதுகாப்பின்மையும் ஹைகூவை வெகு உயரத்துக்கு கொண்டு செல்வதை வாசகன் உணர முடியும். ‘வாகன வெளிச்சம் குளிக்காமல் திரும்பியது நிலவு’ (ப. 50) இந்த ஹைகூ காட்டும் காட்சியேப் புதுமையும் வித்யாசமானப் பார்வையும் கொண்டது. நிலவே ஒளி தானே. . ! அது ஏன் குளிக்க இருள் தேடுகிறது? நிலவாயிருப்பினும் அந்நியர் முன் குளிப்பது துச்சமன்றோ* இப்படி வினா ஊர்வலம்! ஆனால் துயரம் பாருங்கள்! குளிக்காமலே திரும்புகிறது நிலவு! காட்சியொன்றின் சீவல்கள் எத்துணைப் பொருண்மையைத் தருமென்பதற்கு, இஃதோர் எடுத்துக்காட்டு.
‘தினமும் ஓர் இசைக்குறிப்பை
விட்டுச் செல்கிறது
முற்றத்தில் குடியேறியப் பறவை’
இது அசலான ஹைகூ! பெரிதாக எதையும் பேசிடாமல், சொல்லாதன சொல்லி ஜென்னின் எளிமையை ஹைகூவின் அடர்த்தியோடு கலந்து நெய்த அக்மார்க் ஹைகூ!
தேவகி-யின் ஹைகூக்களில் இயற்கை, மனிதர், வாழ்வியல் சங்கதிகள் நிறைந்தே இருந்தாலும் மாநகரப் பதிவுகள் சிலவும் புதிய அனுபவத்தைத் தருவன.
மாநகர வாழ்வை, வாழ்வென்பது உயர்வு நவிற்சி! ‘இருப்பு’ எனலாம். மாநகர வாழ்க்கையில் தினந்தோறும் காண்பதெல்லாம் தவிப்பும், பாதுகாப்பின்மையும், அசர வேகமும், சக மனிதர் குறித்த அக்கறையின்மையும், மாசடைந்த காற்றும், வாகனங்களின் பேரோசையும் பொங்கி வரும் பெருங்கூட்டமும் , பெருங்கூட்டத்தில் ஒரு முகமாய் அடையாளமின்மையும் – என விரியும் பெருநகர வாழ்வின் அவல முகங்கள்.
‘மழை அறிவிப்பு
காகிதக்கப்பல் ஏக்கத்தில்
அடுக்குமாடிக் குழந்தைகள்’ (ப. 24)
அடுக்குமாடிகள் குழந்தைகளை முடக்கிப் போடுபவை, விளையாட இடம் ஏகாடாதவை. பால்ய அனுபவங்கள் தாராதவை; எங்கோ விலக்குகள் இருக்கலாம்.
‘வெள்ளம் வடிந்த பின்னும்
விடாமல் பேசிக் கொண்டன
ஓதுங்கியக் காலணிகள்’ (ப. 26)
2015-வெள்ளத்தை, சென்னை மறக்கக் கூடுமா. எத்தனைக் குடும்பங்கள், எத்தனை உயிர்கள். எத்தனை அஃறிணைகள் வீதிகளில் புகுந்த வெள்ளம் வீட்டுக்குள் புகுந்தது. உடைமைகள் மூழ்கிய’ துயரத்தின் பேரோசை இவ்வளவு சோகத்திலும் நம்பிக்கை வார்ப்பவை தேவகியின் காட்சி வரிகள்.
‘பூங்கா இருக்கைகள்
காலியாகவே இருக்கின்றன
அடுக்கு மாடி குடியிருப்பு’ (ப. 38)
மாநகர வாழ்வின் முக்கிய அம்சமாக, இடநெருக்கடியின் பெருகிவரும் பெருநகரமயமாதலின், குறியீடுகளாக இருப்பவை அடுக்கங்கங்கள்! நீண்டுயர்ந்து, விறைத்து நிற்கும் இந்த கட்டடங்கள் மாநகரத்தை, கட்டட வனமாய், அடுக்கக ஆரண்யமாய் மாற்றி விட்டன. மரங்களுக்குiடமில்லை, இடமே இல்லை. எங்கோ விதிவிலக்காக பூங்காவே சமைத்திருப்பினும் அங்கு வர மாநகர மானுடர்க்கு நேரமும், மனதும் இல்லை.
தேவகியின் ஹைகூக்களின் பதச்சோறு தான் இவை. ‘பனித்துளியில் ஆகாயம்’ பார்க்கும்/ காட்டும் கவிஞரின் ஏனையக் கவிதைகளும் புது ருசி தருவன. தமிழுக்கு புதியன தரும். தேவகி. இன்னமும் எழுத வேண்டும்.
@னதாகப்படுகிறது. அம்சப்ரியா-வில் யதார்த்தம்* காட்டும் அசல் வாழ்க்கை, அசல் மனித எனத் தூள் நிறை வாழ்வின் ஒளி மங்கியத் தருணங்களின் பின்னோட்டம்.

Leave a comment