வரலாற்றை மீட்டுருவாக்கும் திருப்புடை மருதூர் ஓவியங்கள்
சங்கர்தாஸ்

ஆதிகாலத்தில் பாறை ஓவியங்கள் மூலம் செய்திகள் பரிமாறப்பட்டன. சங்க காலத்தில் எழுத்தைவிட ஓவியம்தான் முதன்மையான இடம் பிடித்திருந்ததாகப் படித்திருக்கிறோம். நெடுநல்வாடையில் பாண்டிமாதேவியின் படுக்கைக்கு மேல் இருந்த விதானத்தில் சந்திரன் ரோகினியுடன் இருக்கும் ஓவியம் தீட்டப்பட்டிருந்ததாகச் சொல்கிறார் நக்கீரர். அவளுடைய படுக்கை விரிப்பில் சிங்கம் வேட்டையாடுவது போன்ற ஓவியம் இருந்ததாகவும் தெரிவிக்கிறார். பாண்டிமாதேவியே புனையா ஓவியம் போலத்தான் இருந்தாள். பதிற்றுப்பத்தில் வரும் நகரம் ஓவியம்போல் ஒளிவெள்ளத்தில் இருந்துள்ளது (பதிற்றுப்பத்து 28). நன்றாகக் கட்டப்பட்ட வீடுகள் ஓவியம்போல இருந்தன என்கிறது அகநானூறு (அகம் 98) அகநானூற்றில் ஓவச் செய்தி என்ற சொல் குறிப்பிடப்படுகிறது. ஒரு தலைவன் தலைவியிடம் பிரிவை உணர்த்தும்போது அவள் அமைதியாக நிற்கிறாள். அப்படி நிற்பது “ஓவியம் ஒரு செய்தியைக் கூறுவதுபோல இருந்தது” (அகம் 5) என்கிறார் புலவர்.

ஓவியம் வரைவதற்குப் பயன்படுத்தப்பட்ட தூரிகையை நற்றிணை துகிலிகை (நற்றிணை 118) என்று குறிப்பிடுகிறது. சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று புறநானூற்றில் ஓர் அரசன் குறிப்பிடப்படுகிறான். பாண்டிய நாட்டில் ஓவியக் கூடங்கள் இருந்தன. சித்திரகூடத்தை ஏந்தெழில் அம்பலம் எனப் பரிபாடல் குறிப்பிடுகிறது. இரதி, மன்மதன், இந்திரன், கௌதமன் ஓவியங்களும்; அகலிகை சாபம் பெற்றுக் கல்லான ஓவியங்களும் திருப்பரங்குன்றத்து எழில் அம்பலத்தில் வரையப்பெற்ற செய்தியை அறிகிறோம். ஓவியர்கள் கண்ணுள் வினைஞர் என அழைக்கப்பட்டனர்.
ஓவியத்திற்கான இலக்கணத்தை ஓவிய நூல் சொல்லிக்கொடுத்துள்ளது. மாதவி ஓவிய நூலை நன்கு கற்றவள். மகேந்திரவர்ம பல்லவன் பல குகை ஓவியங்களை வரைந்தான். அவனுக்குச் சித்திரகாரப் புலி என்ற பெயரும் உண்டு போன்ற செய்திகளை எல்லாம் கல்லூரிக் காலத்தில் படித்திருக்கிறேன். “ஓவியங்களைச் சரியாகப் பராமரித்துப் பாதுகாக்கத் தவறியதால், ஓர் ஓவியம்கூட முழுமையாகக் கிடைக்கவில்லை” என மயிலை சீனி. வேங்கடசாமி கூறியதை மிகக் கவலையோடு கல்லூரிப் பருவத் தேர்வில் பதிவு செய்திருக்கிறேன்.

பேராசிரியர் சா. பாலுசாமியின் நூல்களைப் படிக்கும் முன்பாக, அவர் உரைகளைக் கேட்கும் முன்பாக ஓவியம் என்பது இப்படியான வியப்புகளாகவும், விதந்தோதல்களாகவும் மட்டுமே இருந்தன. சிற்பம் பற்றியோ, ஓவியம் பற்றியோ முழுமையான அறிவு சேகரம் நிகழவில்லை. பேராசிரியர் சா. பாலுசாமியின் சிற்ப / ஓவிய அணுகுமுறை முற்றிலும் வேறுபாடானது. அவர் ஓவிய ரசிகர்களிடமும் சிற்ப ரசிகர்களிடமும் இரண்டுவகையான வினைகளைச் செய்யும்படிக் கோருகிறார். ஒன்று: சிற்பங்களையும், ஓவியங்களையும் ஆழ்ந்து உள்வாங்கிப் புரிந்துகொள்ள முயற்சி செய்வது. மற்றொன்று: அதன்வழியாக வரலாற்றுத் தேடலை நிகழ்த்துவது. சங்கச் செய்யுளையோ அல்லது மரபுப் பாடல்களைப் படிப்பதுபோலவோ மிக எளிய உழைப்பிற்குப் பின் சிற்பங்களையும் ஓவியங்களையும் புரிந்துகொள்ள முடியாது.
நான் பேராசிரியர் சா. பாலுசாமி அவர்களின் மனத்தில் நிற்கும் அளவிற்கு இன்னும் அறிமுகமாகவில்லை. அவரது கூட்டங்களில் கலந்துகொண்ட பிறகு கூட்டத்தோடு கூட்டமாக அறிமுகமானதை அவர் மனத்தில் வைத்திருப்பது கடினம். இந்த நிமிடம்வரைகூட என்னை யார் என்று அவருக்குத் தெரியாது. ஆனால் அவரை நான் அறிவேன். என்னுடன் பணியாற்றும் பேராசிரியர்கள் பலர் அவருடைய மாணவர்கள். அவர்மீது மாறா அன்பும் பற்றும் வைத்திருப்பவர்கள். அவர்கள், பேராசிரியர் பாலுசாமியின் நிகழ்வுகள் சிலவற்றிற்கு உரிமையோடு என்னை அழைத்திருக்கிறார்கள்.
நான் சென்ற கூட்டங்கள் சிலவற்றில், அவர் மகாபலிபுரச் சிற்பங்கள் பற்றியும், இன்றைய இமயமலைக் காட்சிக்கும் மகாபலிபுரச் சிற்பங்களுக்கும் இருக்கும் ஒப்புமை பற்றியும் கலந்துரையாடியதைக் கேட்டிருக்கிறேன். சிற்பக் கலையை ரசிக்கும் முறையை அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். அவருடைய உரைகளைக் கேட்ட பிறகு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் மகாபலிபுரம் போயிருக்கிறேன். அர்ஜூனன் தபசு ஒவ்வொரு முறையும் புதிய புரிதல்களை வழங்கியிருக்கிறது.
ஒருநாள், என்னுடன் பணியாற்றும் கவிஞர் பச்சியப்பன், “ஜெர்மன் அரங்கில் பேராசிரியர் சா. பாலுசாமி அவர்கள் பேசுகிறார்கள் நீங்களும் வரவேண்டும்” என்று என்னை அன்புடன் அழைத்தார். அந்தக் கூட்டம் திருப்புடைமருதூர் ஓவியங்கள் குறித்த அறிமுகம் பற்றியது. ஓவியத்தைப் படியெடுப்பது அவ்வளவு எளிதான பணியில்லை. “ரோம் – வாடிகன் தேவாலயங்களில் மைக்கேல் ஏஞ்சலோ தீட்டிய ஓவியங்களை ஆவணப்படுத்திய முறையிலேயே சுவர்ப்பரப்புகள் புகைப்படமாக்கப்பட்டு, அதன்மீது கட்டங்கள் வரைந்து, தொடர்ச்சியாகப் பகுதிப் பகுதியாகப் படமாக்கப்பட்டு, பின்னர் இணைக்கப்பட்டன” என்று பேராசிரியர் இந்த நூலில் கூறியிருக்கிறார்.
ஆனால், நேரில் அவருடைய உரையைக் கேட்டவர்களுக்கு மட்டும்தான் ஓவியங்களைப் ஒளிப்படம் எடுப்பதற்காக அவர்பட்ட சிரமங்களை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும். அது ஒரு தவம். அதை இருபது வருடங்களுக்கு மேலாகச் செய்திருக்கிறார். அதன்பின்தான் இந்த நூல் நம் கைகளில் கிடைத்திருக்கிறது. ஒருவேளை கவிஞர் பச்சியப்பன் அன்று என்னை அழைக்காதிருந்தால் திருப்புடைமருதூர் ஓவியங்கள் பற்றிய நல்ல அறிமுகம் எனக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே!
கி.பி. 1000-க்குப் பிறகு போர்கள் குறைந்த காலமாகத் தமிழகம் இருக்கிறது. போர்கள் குறையும்போதுதான் நிலையான அரசுகள் உருவாகும். வம்சா வழிப் பிரச்சனைகளைத் தவிர மிகப் பெரிய பிரச்சனை இருக்காது. இதுபோன்ற சமயங்களில் உயர்சாதியினர் மகிழ்ச்சியாக இருப்பர். தங்கள் மகிழ்ச்சிக்குப் பங்கம் வரக்கூடாது என எண்ணிப் பெரும்பாலும் அண்டை நாடுகளுடன் சமாதானப் போக்குகளைக் கடைபிடிப்பர். மன்னர்களில் ஒருசிலர் கல்வியிலும் கலைகளிலும் நாட்டத்தைச் செலுத்தினாலும் பெரும்பாலோர் சிற்றின்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர்.
தஞ்சை மராட்டிய மன்னர்கள் காலத்தில், ஒரு பெண்ணைத் திருமணம் முடிக்க அரசர்கள் போக வேண்டிய தேவையில்லை. அவர்களின் உடைவாள் போனால் போதும். அந்த உடைவாளை வைத்து ஒரு பெண்ணிற்குத் தாலி கட்டி அரசரின் மனைவியாக்கிவிடுவார்கள். அதற்குக் கத்திக் கல்யாணம் என்று பெயர். மன்னர்களின் மனைவியரைக் கவனிப்பதற்கு மட்டும் தனித் துறையே செயல்பட்டிருக்கிறது. கடைசியாக வெறும் 230 ஆங்கிலேயச் சிப்பாய்கள் தஞ்சை மராட்டிய அரசைக் கைப்பற்றிவிட்டனர் என்கிறார்கள் (ஆனந்தவல்லி நாவல் – லட்சுமி பாலகிருஷ்ணன்)
நாயக்க மன்னர்கள் காலத்திலும், அதனை அடுத்த மராட்டியர் காலத்திலும் தமிழகத்திற்குக் கிடைத்த நன்மைகளில் ஒன்று சிற்பம், ஓவியம், சிற்றிலக்கியம் போன்ற கலை இலக்கியங்களின் வளர்ச்சியாகும். இந்தக் காலங்களில் அச்சுதராயன் போன்ற கூர்மதி படைத்த தளவாய்கள் மக்களால் புகழ்ந்து பாடப்பட்டுள்ளனர். திருமலை நாயக்கர் காலத்தில் ராமப்பய்யன் என்ற தளவாயும் இதுபோல புகழ்பெற்றவர் என்பதைக் கருத்தில் கொள்ளலாம். திருப்புடைமருதூர் ஓவியங்களைப் புரிந்துகொள்ள சா. பாலுசாமி தரும் பின்வரும் குறிப்புகளையாவது மனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என நினைக்கிறேன்.
- சிற்பம், ஓவியம் போன்ற கலைகளில் தஞ்சையைச் சார்ந்த கலைஞர்கள் பலர் இடம் பெற்றிருக்கின்றனர். கி.பி. 15 முதல் 18 வரை நாயக்க மன்னர்களின் காலத்தில் ஓவியம் வளர்ச்சியடைந்திருக்கிறது. ஓவியத்தில் விஜய நகர மன்னர்களின் வேணாட்டுப் பாணி தமிழகத்தில் நுழைந்திருக்கிறது. தமிழகத்தில் நாயக்கர் காலத்தில் உருவான ஓவிய மரபு என்பது நாட்டுப்புறத் தன்மைகளையும், தமிழகக் கலைமரபுகளின் செல்வாக்கையும், பல்வேறு கலை மரபுகளையும் உட்கொண்ட சதிக்கல் மரபு எனக் குறிப்பிடுகின்றனர். கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு வரை தென் தமிழகக் கோயில்களில் ஒரு குறிப்பிட்ட ஓவியக் கலைப் பள்ளியை (School of Art) சேர்ந்தவர்கள் இதுபோன்ற கோயில் ஓவியங்களை வரைந்திருக்க வேண்டும் என்கிறார் பாலுசாமி.
- உருண்டை முகம், கூர்மையான நாசி, கூரிய முகவாய்க் கட்டை, துருத்திய விழிகள், திரண்ட உடல்வாகு, அலங்காரம் மிகுந்த ஆடை, மிகுந்த அணிகலன்கள் ஆகியவை இந்த ஓவியங்களின் தன்மைகளாக அமைகின்றன. புராணப் பாத்திரங்கள் மிகு உணர்ச்சி வெளிப்பாடுகளுடன் படைக்கப்பட்டுள்ளன.
- சிற்பிகளும் ஓவியர்களும் விஜயநகர மன்னர்களாலும், நாயக்க மன்னர்களாலும், திருவிதாங்கூர் மன்னர்களாலும் ஆதரிக்கப்பட்டுள்ளனர். கி.பி. 1544-இல் மதுசூதனப் பெருமாள் கோயிலில் செண்பகராம மண்டபத்தின் மேற்குச் சுவரில், “கிழார் மங்கலத்து நயினார் மதுசூதன விண்ணவர் பெருமாள் சீபண்டாரக் காரியஞ் செய்வார்கள் கோட்டாரான மும்முடிச் சோழபுரத்தில் இருக்கும் சிற்பிகளின் தலைவனான கொம்மண்டை நயினான் என்படும் சிற்பபுத்திரனுக்குச் சிற்ப விருந்திற்காக நிலம் கொடையாக அளித்தான்” என்ற குறிப்பு காணப்படுகிறது. இதன்மூலம் சிற்பிகள் மிக உயர்வாக மதிக்கப்பட்டனர் என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது.
- இங்குத் தீட்டப்பட்டுள்ள திருவிளையாடல் புராண ஓவியங்கள் குறித்து எழுதும்போது அவை வேப்பத்தூரார், பரஞ்சோதி முனிவர் ஆகியோரால் இயற்றப்பட்ட திருவிளையாடல் புராணங்களை அடிப்படையாகக் கொள்ளவில்லை என்பதையும், நாட்டுப்புற மரபிலான ஏதோ ஒரு திருவிளையாடல் புராணத்தை அடிப்படையாகக் கொண்டவை
சா. பாலுசாமியின் மேற்சுட்டிய ஆய்வுக் கருத்துகள் இல்லாமல் திருப்புடை மருதூர் ஓவியங்களைப் புரிந்துகொள்வது கடினம். திருப்புடை மருதூர் கோயில் ஐந்து தளங்களில் ஐந்து தளங்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் விஜயநகரப் பேரரசுக்கும் திருவிதாங்கூருக்குமிடையே நடந்த தாமிரபரணிப் போர் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. முதல் நான்கு தளங்களிலும் திருவிளையாடல் புராணங்கள் இடம்பெற்றுள்ளன, திருமால், இராமாவதாரம், திருப்புடை மருதூர் கோயில் புராணம், வள்ளி திருமணக் காட்சிகள் ஆகிய ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. ஐந்தாம் தளத்தில் தனித் தெய்வங்கள் வரையப்பட்டுள்ளன.
திருவிளையாடல் புராணத்தில் வாதவூரடிகள் உபதேசித்த படல நிகழ்ச்சிகள், நரியைப் பரியாக்கிய நிகழ்ச்சிகள், பாண்டியன் சுரம் தீர்த்த படலம் , அனல் வாதம், புனல் வாதம் , சமணரை கழுவேற்றிய படலம் போன்ற தெரிந்த கதைகளும்; ஏழுகடல் அழைத்தது, மலையத்துவனை அழைத்தது, உக்கிரபாண்டியன் திருவவதாரம், உக்கிர பாண்டியனுக்கு வேலைவளை கொடுத்தது, மேருவைச் செண்டாலடித்தது, அட்டமா சித்தி உபதேசித்த படலம் போன்ற அதிகம் கேள்விப்படாத கதைகளும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இராமாயணப் போர்க் காட்சிகள், திருமாலின் திரிவிக்கிரம அவதாரம் போன்ற ஓவியங்களும் காணப்படுகின்றன.
திருவிளையாடல் புராணக் கதைகளிலும், இரண்டாம் தளத்தில் வரும் விஜயநகரப் போர்க்காட்சிகளிலும் வீரர்கள் இடுப்புக்குக் கீழ் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். பெரும்பாலும் இந்த ஆடைகள் தெலுங்கு தேசத்தவர்களின் ஆடைகளை நினைவூட்டுகின்றன. புராணக் கதை மாந்தர்களின் தலைப்பாகைகளும், கிரீடங்களும்; தாமிரவருணி போர்க்காட்சியில் வருபவர்களின் தலைப்பாகைகளும் கிரீடங்களும் வேறுவேறு மாதிரியிருக்கின்றன. புராணக் கதைகளிலும், அரச மண்டபக் காட்சிகளிலும் அரசருக்கு அருகில் கட்டாயம் அடைப்பைக்காரர்கள் என்னும் வெற்றிலைப் பாக்கு மடித்துக் கொடுப்போர் இடம்பெற்றுள்ளனர். கேடயங்கள் எல்லாக் காலங்களிலும் பெரும்பாலும் ஒரேமாதிரியான வடிவத்தில் இருக்கின்றன.
மங்கையர்க்கரசி உள்பட புராணக் கதை மாந்தர்களாக வரும் பெண்கள் மேலாடை இன்றி இருக்கிறார்கள். போர்த்துக்கீசியர்களும், விஜயநகர வீரர்களும் முழுக்கைக் சட்டையையும், இன்றைய கால்சராயை ஒத்த கீழாடையும் அணிந்துள்ளனர். பெரும்பாலும் ஓவியங்கள் நேருக்கு நேராக வரையப்படவில்லை. இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் திரும்பிய நிலையில் வரைந்துள்ளனர். இன்றும்கூட கிராமங்களில் முத்தாலம்மன் திருவிழாக்கள் போன்றவற்றில் காணப்படும் மண்குதிரைகளின் அலங்காரமும் திருப்புடைமருதூர் ஓவியங்களில் காணப்படும் குதிரைகளின் அலங்காரமும் ஏறத்தாழ ஒரேமாதிரி இருக்கின்றன. வேணாட்டு வீரன் ஒருவனை விஜயநகரப் படைவீரன் வீரன் ஒருவன் துப்பாக்கியால் சுட முனையும் ஓவியம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. துப்பாக்கியின் பயன்பாடு தமிழகத்திற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே வந்துவிட்டது என்பது புதிய செய்தியாக இருந்தது.
நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த மக்களின் பண்பாட்டு வரலாற்றை இந்த நூலின்மூலம் வெளியில் கொண்டுவரமுடியும். ஆடைகள், ஆபரணங்கள், ஓவியக் கலைகள், தனி உருவங்கள், சிற்பங்கள் என ஒவ்வொருன்றையும் தனித்தனியே ஆராய்ச்சி செய்ய முடியும். மறைந்துபோன ஒரு வரலாற்றுப் பொக்கிஷத்தைச் சா. பாலுசாமி வெளியில் கொண்டுவந்துள்ளார் என்று கூறுவதைவிட அழிந்துகொண்டிருக்கும் ஓவியத்தை ஆவணப்படுத்தியுள்ளார் என்று கூறுவதே சரியானதாகும். இந்த நேரத்தில், சிறு வயதில் எனக்கு நடந்த ஒரு நிகழ்வை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
அப்போது எனக்கு வயது ஐந்து இருக்கும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடந்த என் அத்தையின் திருமணத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். மீனாட்சி அம்மன் கோயிலில், நீண்ட சுவர்களில் அழகழகான ஓவியங்கள் வரைந்து வைத்திருந்தார்கள். விதானங்களிலும் வண்ண ஓவியங்கள் தீட்டியிருந்தனர். அவற்றைப் பார்த்துக்கொண்டே ஒரு முனையிலிருந்து அடுத்த முனைவரை சென்றுவிட்டேன். ஒவ்வொரு பத்தடிக்கும் ஓரு திருமணக் கூட்டம் அமர்ந்திருந்தது. அந்தக் கூட்டத்தில் என் குடும்பத்தார் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னைக் காணாமல் குடும்பத்தார் பதறிப்போய்விட்டனர். கடைசியாக ஒர் உறவினர் வந்து என்னைத் தூக்கிக்கொண்டுச் சென்றார். ‘நான் தொலைந்துபோய்விட்டதாகவும், அவர்தான் கண்டுபிடித்ததாகவும்’ என்னை இழுத்துச் சென்று என் அப்பாவிடம் ஒப்படைத்தார்!
மதுரையில்தான் கல்லூரிப் பட்டப் படிப்பு படித்தேன். அந்தக் காலகட்டத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் முழுவதும் வெள்ளை வண்ணம் தீட்டியதில் சுவரோவியங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓவியங்களை எல்லாம் அழித்துவிட்டார்கள் என்று பலர் கண்டனங்கள் தெரிவித்தார்கள். இதற்காகக் கோயில் நிர்வாகிகள் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. கோயில் ஓவியங்களை ரசிக்க குழந்தையாக இருக்க வேண்டும். அல்லது வரலாற்று ஆய்வாளராக இருக்க வேண்டும். எதுவும் இல்லாத பக்திமான்களால்தான் கோயில் ஓவியங்களும் சிற்பங்களும் அழிவுக்குள்ளாகியுள்ளன. மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் போல திருப்புடை மருதூரிலும் நடந்திருந்தால் நாம் எவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்திருப்போம். சா. பாலுசாமி போன்ற ஒருவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஓவியங்களை எல்லாம் ஒளிப்படம் எடுத்திருந்தால், அதைப் பார்க்கும் தருணத்தில் குழந்தையாகி இன்னொரு முறை தொலைந்துபோகும் வரம் கிடைத்திருக்கும்…!

Leave a comment