இளையவன் சிவா கவிதைகள்
விடுதலை

பெற்றதாலோ கிடைத்ததாலோ
மகிழ்வின் கதவைத் தட்டாதீர்கள்
உறங்கியபடியே உங்கள் முன்னே
அரங்கேறும் அவலங்களைக்
கண்ணுறாமல் கடக்கும் கால்களை
சற்றே நிறுத்துங்கள்
ஏழ்மையைக் காட்டியும்
பெண்மையெனப் பிடித்தும்
சாதியின் கீழே சவுக்கடித்தும்
அடிமைத்தனத்தைக் கொடியேற்றும்
கயவர்களைக் கேள்வியுற்றும்
அசையாது நகரும் உடலை
அப்படியே நிறுத்துங்கள்
சமத்துவம் மலர
சகோதரத்துவம் நிலவ
சகலரும் நிம்மதியில் நிலைபெற
வார்த்தைகளில் ஏமாற்றி
காணாது போகும்
அரசியல்வாதியின் பின்னே
அலையும் மனதை
அடக்கி வாசியுங்கள்
நிழலுக்குள் கோடிகள் வாங்கி
நிஜங்களில் ரசிகனைக் கவனிக்காது
சுயநலத்தில் சுழலும்
கனவின் பின்னே கரையும்
அப்பாவிகளைக் கவனியுங்கள்
கொடிகளில் ஏற்றியும்
மிட்டாய் விழுங்கியும்
கொண்டாட வாய்ப்பதல்ல விடுதலை
அடிப்படை மனிதத்தில்
அனைவரும் மகிழ்ந்திடும்
அன்பின் அணைப்பில்
வீசட்டும் விடுதலைக் காற்று.
*****
உனக்குள் கடவுள்
உலகைக் கற்று உன்னை உணர
கலகம் தவிர்த்து காவியம் படைக்க
திறமை கொண்டு திசைகள் மீட்ட
வறுமை தொலைத்து வாழ்வைக் கூட்ட
கருணையை மனதில் நாளும் நிறைத்து
தருணம் யாவிலும் தன்னை உயிர்ப்பித்து
இனத்தின் பின்னே இதயம் தொலைக்காது
சனத்தைக் காக்கும் சரித்திரம் எழுதி
மதத்தின் மீதான மோகம் துறந்து
இதயத்தில் அன்பைப் பெருக்கும் வழியில்
மக்களின் உழைப்பை மதிக்கும் பண்பில்
எக்கணமும் அஞ்சாமல் ஈரப் பார்வையில்
மனிதத்தை விதைக்கும் மாண்புகள் சேர்த்து
புனிதச் செயல்களில் புண்ணியம் கூட்டி
காணும் உயிர்க்கு கருணை விதைத்து
பேணும் நட்பில் நிமிரும் தோழமையில்
இன்பத்தை வாழ்வில் எப்போதும் வளர்த்து
துன்பத்தின் தருணத்தில் துணிவினை நீட்டி
உன்னை அறிந்தே நன்மை செய்திடின்
உனக்குள் கடவுள் ஒளிர்வதை உணர்வாய்.

Leave a comment