ஒழுக்க எல்லைகள் மீறிய கதைகள்

ப.சகதேவன்

தொட்டால்…..
ஒரு சிறுகதைத் தொகுப்பு – ஆசிரியர் கனலி விஜயலட்சுமி

எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-642002
முதல் பதிப்பு: ஜுன் 2024

தமிழ்ச் சமூகம் மரபார்ந்த சமூகம்தான். ஆனால் தமிழ்ப் பெண்கள் மரபு சார்ந்தவர்களாகவும், மரபை மீறியவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ’நீ என்னடா என்னைக் கட்டுப்படுத்துவது…நான் கவிதை பாடுபவள்.. இந்தச் சமூகத்தில் எனக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. எந்தத் திசை சென்றாலும் எனக்குச் சோறு கிடைக்கும்.’ என்று அரச நட்பையே உதறித் தள்ளியவர் ஔவையார். ’நான் அழகானவளா? இருக்கட்டும். அப்படியானால் இந்த அழகு என்னைப்படைத்த எம்பெருமானுக்கே சேரட்டும். அவன்தானே என்னைப் படைத்தான்’ என்று உலக ஆன்மீகத்துக்குத் தமிழ் அடையாளம் தந்தாள் ஆண்டாள். மன ரீதியாக அம்மாவும் கொலை செய்வாள் என்று கோபம் கொண்டார் அம்பை.

பெண்கள்தாம் என்றில்லை. பெண்ணின் பன்முக உணர்வுகளை ஆண் எழுத்தாளர்களும் சொல்லியிருக்கிறார்கள். பெண்ணின் ஆங்காரத்தை, ஆதிக்கங்களுக்கு எதிரான அவளது இயலாமையை இமயம் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். பெண் மன நுட்பங்கள் உமா மகேஸ்வரியின் எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்கின்றன. இப்போது பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் புதுத் திசைகளில் பயணம் செய்யத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக இனக்குழு சமுதாயப் பெண்களின் நுழைவுக்குப் பிறகு தமிழ் வாசக உலகம் அறிந்திராத பல புதிய புலங்கள் தெரிய வந்திருக்கின்றன. அமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள் டோனி மோரிசன், ஏலீஸ் வாக்கர் போன்றோரது எழுத்துக்களில் தெரியும் வாழ்க்கையின் குரூரம் தெரியவில்லையாயினும் சிமமந்தா அடிச்சியின் எழுத்துக்களில் தெரிவது போன்ற பண்பாட்டு வேறுபாடுகள் தெரிய வந்திருக்கின்றன. இனக்குழு சமுதாய வாழ்க்கை பல தரப்பட்ட மனிதர்களை அறிமுகப்படுத்துகிறது. பலதரப்பட்ட சூழ்நிலைகளைப் பின்னணியாகக் கொண்டிருக்கிறது. தற்காலத்தமிழ் இலக்கியத்துக்குள் இப்போது நுழைந்திருக்கிற இந்த இனக்குழுச் சமுதாயத்திலிருந்து வருபவைதாம் உண்மையான இலக்கியம் என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் அது மொடவாதம். அத்தோடு இப்போது பரவலாக விவாதிக்கப் படுகிற தலித்தியம் என்பதுவும் இனக்குழு சமுதாயத்தின்பால் பட்டதுதான். தனக்கென்று ஒரு விழுமியக் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு அதைக் கட்டிக் காத்து வருவதும், அதை மீறிப்போகிறவர்களைக் கண்காணிப்பதும் தான் இனக்குழுச் சமுதாயத்தின் பண்பு. தனிமனித வாதத்திற்கு எதிரானது இது. இரண்டுமே இலக்கியத்திற்கான களங்கள்தாம்.

இத்தகைய இனக்குழுச் சமுதாயத்தின் பெண் குரல் இப்போது இலக்கியத்தில் நுழைந்திருக்கிறது. தமிழ்ச்செல்வியின் எழுத்துக்களில் இந்தக் குரல் சற்று உரத்துக் கேட்டது. அவரைத் தொடர்ந்து இப்போது வந்திருப்பவர் கனலி விஜயலட்சுமி. தமிழ்ச்செல்வியின் கதைக்களங்கள் தொண்டை மண்டலத்தைச் சார்ந்தவை. கனலி கொங்கு மண்டலத்துக்காரர். மண்டலங்கள் கதை சொல்லலுக்கு அழகு சேர்க்கின்றன. இந்தக் கொங்கு மண்டலம் கேரள எல்லைக்குள் இருக்கிறது. அதனால் கேரளப்பண்பாட்டின் பல வகைப்பட்ட அம்சங்கள் அங்கு வாழும் தமிழர்களுக்குள் புகுந்திருக்கின்றன. இதனால் அவர்களுக்குத் தடுமாற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அது வேறு விவாதக்களம். கனலியின் கொங்கு நிலவியல் கொஞ்சம் வேறுபட்டது. மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் நிலப்பகுதியைக் களமாகக் கொண்டிருப்பது. அவரது கதைகளும் அந்த மலைகளைப் போலவே பிரமிப்பையும், அச்சத்தையும் தருபவை. அச்சத்தையும், பிரமிப்பையும் தாண்டிச் செல்வதற்கு ஒரு குருட்டுத் தைரியம் வேண்டும். கனலி படைத்திருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு இந்தக் குருட்டுத் தைரியம் இருக்கிறது.

விடலைப் பருவத்தில்தான் இந்தக் குருட்டுத் தைரியம் மிகுதியும் வெளிப்படுகிறது. குறைந்த அளவு நிலம் வைத்துக்கொண்டு விவசாயம் செய்து வாழக்கூடிய இனக்குழு சமுதாயத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் காட்டுக்குள் வேலை செய்வது நடைமுறை. அது ஒரு நிர்ப்பந்தமும் கூட. நீரிறைக்கும் மின்னிறைப்பான் பழுதடைந்து விட்டால் கிணற்றுக்குள் இறங்கி அதைச் சரி செய்யக்கூடிய வேலையும் கூட இருக்கும். அதுவும் குடும்பத்தில் ஆண் இல்லாவிட்டால் ஒரே பெண் பிள்ளையாகவும் இருந்து விட்டால் போச்சு. எல்லாம் அவள் தலையில்தான். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதற்கு அவள் வேறு வகையான இலக்கணங்களை வைத்துக் கொள்ள வேண்டும். இப்படிக் காட்டில் எல்லா வேலைகளையும் செய்யக்கூடிய ஒரு பெண் பக்கத்து நகரத்திலுள்ள ஒரு கல்லூரியில் சேர்வதற்குத் தானே தனியாகப் புறப்பட்டுப் போய் அங்கு நேரக்கூடிய பிரச்சினைகளைச் சமாளித்துக் கல்லூரியில் சேர்கிறாள். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கிடையில் தான் ‘மகடூஉ முன்னிலை’ என்கிற சிறுகதை புகுந்து வந்து ஒரு நல்ல இலக்கியமாகியிருக்கிறது. பெண்களை முன்னிறுத்திச் சொல்வது ‘மகடூஉ முன்னிலை’ என்பது தமிழ் மரபு. இந்தக் கதையினூடாக ஒரு இனக்குழுச் சமுதாயப் பெண்ணின் பரிணாம வளர்ச்சி அதன் பதட்டங்களுடனும், தவிப்புகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் சொல்லப் பட்டிருக்கிறது.

கனலி தனது கதைகளுக்கு இப்படி தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலிய நூல்களிலிருந்து தலைப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்ச் சமூகத் தளங்களில் இப்போது நாம் பார்க்கும் பெண்கள்தாம் சங்க காலத்திலும் இருந்திருக்கிறார்கள், பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை என்பது கனலி சொல்ல வரும் செய்தியாக இருக்கலாம். தாம் ஒரு தமிழாசிரியராக இருப்பதால் மட்டுமே விஜயலட்சுமி இப்படி எடுத்துக் கொண்டிருந்திருக்க மாட்டார். மனித இயல்புகள் பற்றிய தமிழர்களின் புரிதல் இப்படித்தான் இருந்திருக்கிறது. மிகக் குறைந்த பழைய நாகரிகங்களே இத்தகைய புரிதலை வெளிப்படுத்தியிருக்கின்றன. அவையும் கூட தொன்மங்கள் வழியாகவே அவற்றைச் செய்திருக்கின்றன. நடைமுறை வாழ்வியல் வழியாகப் பேசியவை ஒரு வேளை தமிழ் நாகரிகம் மட்டுமாகவே இருக்கக் கூடும்.

பெருமையும் உரனும் ஆடூஉமேன

என்பது ஒரு தொல்காப்பியச் சூத்திரம். பழி பாவத்துக்கு அஞ்ச வேண்டும். அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும் என்பவற்றை ஆண்களுக்குரிய தகுதிகளாக தொல்காப்பியர் கூறுகிறார். ’ஆடூஉமேன’ எனத் தலைப்புக் கொண்ட ஒரு கதையில் அவை இல்லாத ஓர் ஆண் தனக்குக் கணவனாக அமைந்து விட்டால் அந்தப்பெண் என்ன செய்வாள் எனச் சொல்கிறது. இந்தப் பெண் ஒரு தன்பால் உறவுக்காரியாகவும் இருக்கிறாள். பெருமையோ, உரனோ, அறிவுத்திறனோ இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை. மாமிசத்தை மட்டுமே நினைக்கக் கூடியவனை, சதாகாலமும் அதையே தேடுபவனை என்ன செய்ய வேண்டும் என்று இந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்கிறது. கவிஞர் சிற்பி சொல்வது போல கனலியின் கதைகள் சாதாரண வாசகனுக்கு அதிர்ச்சியூட்டுபவை. கனலி தரும் அதிர்ச்சிகளை வேறு சமூகப் பின்னணிகளில் எழுதப்பட்ட தமிழ்க்கதைகள் தந்திருக்கலாம்.. ஆனால் இனக்குழு சமுதாயப் பின்னணியில் சொல்லப்படுகிறபோது அதன் அழுத்தத்தையும், காரத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.
’மகட்பாற்காஞ்சி’ என்னும் துறை தமிழர் முதுகுடியைப் பற்றி, தன்மான உணர்வுக்கு அவர்கள் தந்த முக்கியத்துவத்தைச் சொல்லும் முக்கியமான துறை. இந்தப் பண்புக்கு முதன்மையான எடுத்துக்காட்டு பாரிவேந்தன்தான். மூவேந்தர்கள் வெட்கங்கெட்டவர்கள் என்பதை நமக்கு உணர்த்தியவனும் வேள்பாரிதான். இந்தத் தலைப்பில் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் கனலி. ‘மகட்பாற்காஞ்சி’ ஒரு சிறுகதை சாதாரணமாக உணர்த்தும் பொருள் எல்லைகளைத் தாண்டிச்செல்கிறது. மலை மேல் இருக்கும் வனத்துக்குள் செல்லும் ஒரு முதியவரும், ஓர் இளைஞனும் மூங்கில் வெட்டி எடுத்து வரப்போகிறார்கள். அவர்களது தேடும் மூங்கில் தனித்துவமானது. ‘வறண்ட இடத்தில் வளர்கிற மூங்கில் உறுதியாக இருக்கும்’. முதியவர் மூப்பனுக்கு மலையும், காடும் பரிச்சயமானவை. அங்குள்ள உயிரினங்களையும் தெரியும். தன்னைத்தாக்க வரும் யானையின் தும்பிக்கையையே வெட்டிப் போடக் கூடிய துணிவு அவருக்கு உண்டு. ஆனால் கூட வரும் மணியனுக்கு இவை எல்லாம் புதியவை. அச்சம் தருபவை. இது மனிதனுக்கும், இயற்கைக்கும், மனிதனுக்கும், விலங்குக்கும் நடக்கும் நித்தியப் போராட்டம். இதை அவன் தவிர்க்க முடியாது. எதிர்கொண்டே ஆக வேண்டும். காடு பற்றிய மூப்பனின் ஒவ்வொரு தகவலும் மணியனை வேறு ஒரு உலகத்திற்கு இட்டுச் செல்கின்றன. இப்படிச் சொல்லும் கதைகள் தமிழில் மிகுதியாக இல்லை. ‘மகடூஉ முன்னிலை’ கதையைப் போலவே இந்தக் கதையும் இரண்டு தளங்களில் நடக்கிறது. மூப்பனும், மணியனும் காட்டில் இருக்கிற போது இங்கே கிராமத்தில் மணியனின் மனைவி வெள்ளச்சி தன்னைக் கெடுக்க வந்த பண்ணையார் முத்துராசுவின் ஆண் குறியை அறுத்து விடுகிறாள். இது வேறு ஒரு வகையான ‘மகடூஉ முன்னிலை’
’மகட்பாற் காஞ்சி’யும், ’மகடூஉமுன்னிலை’யும் உலா வரும்போது ’கையறு நிலை’ மட்டும் சும்மா இருக்குமா? தான் இழந்துபோன இளமையைப் பற்றி ‘இனி நினைந்து இரக்கமாகின்று’ (புறநானூறு: 243) என்று பாடிய தொடித்தலை விழுத்தண்டினாரின் ஏக்கம் ‘தொட்டால்..’ கதையில் மீண்டும் தெரிகிறது. எண்ணும வடிவில் கையடக்கமான அலைபேசியில் பார்க்கக் கிடைக்கும் பிம்பங்கள் முதியவர்களுக்கு இளமையின் தாண்டவங்களை நினைவு படுத்தி அலைக்கழிக்கின்றன. எவ்வளவு தான் ‘திறந்த சமுதாயமாக’ மாற முயற்சித்தாலும் தமிழ்ச் சமுதாயம் சில ஒழுக்கக்கதவுகளை நிரந்தரமாக மூடித்தான் வைத்திருக்கும். அதனால் தான் இந்தப் பெரியவர் ‘இழந்ததைப் பெற நினைக்கும் எனது எத்தனிப்புகள் எல்லாம் சமூக மனசாட்சிகளின் சங்கடங்களாகின்றன’ என்று உணர்கின்றார். கடைசியில் மிஞ்சி இருப்பது தான் என்ன? ‘உடல் உபாதைகளைக் கடந்து மனதின் சஞ்சார எல்லையை எட்டிப்பிடிக்கும் தருணம் வாழ்வில் ஒரே ஒரு முறை தான் வரக்கூடியது’ என்ற பெரும் உண்மையை அவர் மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. டீக்கடை ராஜியின் தொடுதலுக்காக அவர் காத்துக் கொண்டே இருக்கிறார்.
தொகுப்பில் இருக்கும் ஒன்பது கதைகளில் ஆறு கதைகள் இயற்கைப் பின்னணியில் இனக்குழு சமுதாயப் பிர்ச்சினைகளைப் பேசுபவை. கதைகளில் வரும் எல்லாப் பெண்களும் ’தங்களுக்கான சரி’ களைத் தேடிக்கொள்கிறார்கள். அவற்றை அடையவும் செய்கிறார்கள். சொல்லப்போனால் இவையெல்லாம் காலங்காலமாக அங்கே நடப்பவைதாம். பொதுவெளிக்கு வருவதில்லை. பொதுவெளி அதை ஒப்புக்கொள்வதில்லை. சாராயக்கடை இருக்கிறது. ஆனால் ஊருக்கு வெளியேதான் இருக்கும். இது போன்ற சங்கதிகள் தமிழ்ச் சமூகத்தின் பாசாங்கித்தனம். பாசாங்கித்தனம் இல்லாத சமூகம் எங்கே இருக்கிறது? இங்கே கனலியின் அக்கறை இனக்குழு சமுதாயம் வகுத்து வைத்திருக்கும் ஒழுக்க வரையறைகளை ஒரு விவாதத்துக்குக் கொண்டு வருவதுதான். அத்தோடு அவர் வேலை முடிந்து விடுகிறது. அந்த வேலையை அவர் நன்றாகவே செய்திருக்கிறார். பிரச்சினைகளை மீறியும் செல்லும் அவரது பார்வையை சில கதைகளில் பார்க்க முடிகிறது. பார்வை தூரமாகச் செல்கிறது. பிரச்சினைகளுக்குள்ளேயே முழுகிப்போகாமல் அவற்றைத் தாண்டிப் போய் ஒரு மலை மீது நின்று கொள்கிறது. மலை மீது நின்று பார்க்கும்போது எல்லாமுமே எவ்வளவு சிறியவையாகத் தெரிகின்றன. நாமும் சிறியவர்களாகித்தானே ஆகி விடுகிறோம். ’தூரத்தில்’ கதை போன்ற கதைகளைத் தொடர்ந்து எழுதினால் கனலி தனக்கான ஒரு மெய்யியலை உருவாக்கிக் கொள்ளக் கூடும். மௌனி அப்படித்தான் தூரத்திலிருந்து பார்த்தே தனக்கான ஒரு மெய்யியலை உருவாக்கிக் கொண்டார்.

ஆனால் கனலி அவ்வளவு எளிதாகத் தன்னிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியுமா? தற்போது அவரது கதைகள் ஒழுக்க எல்லைகளைத் தாண்டிய எழுத்து (Transgressive writing) என்னும் வகைமைக்கு உதாரணமாக நிற்கின்றன. அதையும் ஆர்ப்பாட்டமாகச் செய்யாமல் மிக அமர்ந்த முறையில் செய்திருக்கிறார். இதைத் தமிழ் வாசகர்கள் கண்டு பிடித்து கனலியை அப்படிப்பட்ட எழுத்தாளர் என்று முத்திரை குத்தி விடுவார்களோ அப்படி முத்திரை குத்தி விட்டால் கனலி அந்தப் போக்கிலேயே சென்று விடுவாரோ என்ற அச்சம் வருகிறது. ஒழுக்க வரையறைகளை மீறும் கதைகள் எழுதுவது மிக எளிது. ஒழுக்க எல்லைகளை மதித்து அதே சமயம் அதற்குள்ளேயே கிடந்து அதன் போதாமைகளை தங்கள் வாழ்வியல் அனுபவத்திலிருந்தே எடுத்துச்சொல்வதுதான் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும். அந்தப் போக்கில்தான் கனலியின் கதைகள் செல்கின்றன. அவரது அடுத்த பயணம் நோக்கிக் காத்திருக்கிறோம்.

Leave a comment

Trending