கண்ணாடி வணிகனும் புலியும்
மலையாளப் படைப்பு : சிப்பி பள்ளிப்புரம்
தமிழாக்கம் : க. சிவமணி
கண்ணன்சிறை என்னும் ஊரில் பரமன் என்னும் கண்ணாடி வியாபாரி வாழ்ந்து வந்தான். ஊர் ஊராகச் சென்று கண்ணாடிகளை விற்பனை செய்து அவன் தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான்.
அந்த ஊரில் பஞ்சம் ஏற்பட்டபோது அவனுடைய கண்ணாடி வியாபாரம் மிகவும் குறைந்து போனது. இதனால் பரமனின் குடும்பம் வறுமையில் வாடியது.
பட்டினியோடு பரமுவின் குடும்பம் போராடிக் கொண்டிருந்த போது ஒருநாள் தனது வண்டி நிறையக் கண்ணாடிகளை எடுத்துக் கொண்டு ஏழிமலைக் காட்டுப் பகுதிக்குச் வியாபாரத்திற்காகச் சென்றான். ஆனால் என்ன பயன்? அந்தப் பகுதிகள் முழுவதும் சுற்றித் திரிந்த பின்னும் ஒரு கண்ணாடி கூட விற்கவில்லை. இனி என்ன செய்வது? திரும்பிப் போக வேண்டியதுதான்.
பரமன் காட்டு வழியில் போன வழியே திரும்பிக்கொண்டிருந்தான். புலிக்குன்றுக்கு நடுவில் வந்து கொண்டிருந்தபோது பலம் வாய்ந்த புலி ஒன்று வாயைப் பிளந்தபடி பரமனைப் பார்த்துச் சிரித்தபடி,
”ஹா!ஹா! எனக்கு இன்றைக்குத் தேவையான உணவு கிடைத்து விட்டது. ஏ! மனிதா! நான் உன்னைத் தின்னப்போகிறேன்! பார்” என உறுமியது.

புலியின் மிரட்டலைக் கேட்ட பரமன் பயத்தால் கிடு கிடுவென நடுங்கினான். “ஓ! நம் கதை இன்றோடு முடிந்தது” என நினைத்துக்கொண்டான்.
திடீரென்று பரமன் சாமர்த்தியமாகச் செயல்பட எண்ணினான். அவன் புலியை நோக்கிப் பேசினான். ”ஏ! புலியே! நீ என்னோடு விளையாடாதே! நான் புலி பிடிப்பவன். இதோ இந்தச் சாக்கில் ஒன்றல்ல. ஒன்பது கொடூரமான புலிகளைப் பிடித்து வைத்திருக்கிறேன். உன்னையும் சேர்த்தால் பத்துப்புலிகள் கிடைத்து விடும் உங்களை வைத்து ஆய்வு செய்யத் துணையாக இருக்கும்” என உரத்த குரலில் கூறினான் பரமு.
”என்ன! பொய் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா?” என புலி கோபமாகக் கேட்டது.
”இது பொய்யில்லை. உனக்கு சந்தேகமாக இருந்தால் இதோ அந்த ஒன்பது புலிகளையும் நேரில் பார்த்துக்கொள்!” தனது பையைத் திறந்து ஒன்பது கண்ணாடிகளை அருகிலிருந்த கற்களின்மேல் அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்துவிட்டு ”இதோ பார்த்துக்கொள்” என்றான்.
புலி ஒவ்வொரு கண்ணாடியையும் திரும்பத் திரும்பப் பார்க்க ஆரம்பித்தது.

“ஐயோ! சரிதான். இவனிடம் ஒன்பது புலிகள் இருக்கின்றன. . இந்த இக்கட்டான சூழலிலிருந்து எப்படித் தப்பிக்கப் போகிறேனோ?” எனப் புலம்பியது.
புலியின் கால்கள் பயத்தால் நடுங்கின. பின்னர் பரமுவை நோக்கிக் கை எடுத்துக் கும்பிட்டவாறு ”தயவுசெய்து என்னைப் பிடித்துவிடாதே! நான் உனக்கு ஒரு கூடை நிறைய தங்கத்தைத் தருகிறேன். இந்த வழியாக வந்த திருடர்கள் என்னைக் கண்டு பயந்து இங்கேயே போட்டு விட்டுச் சென்றதாகும். என்கூட வா!
பாம்பு பரமனைத் தனது குகைக்கு அருகில் கூட்டிக்கொண்டு போனது.
குகையின் மூலையில் உள்ள பொருட்களைச் சுட்டிக்காட்டி “ எடுத்துக்கொள்” என்றது.

குகையின் மூலையில் ஒரு கூடை நிறையத் தங்கக் கட்டிகள் இருப்பதைப் பரமன் பார்த்தான். தன் கையை நீட்டி அதனை வெளியில் எடுத்தான். “இனி நீ! என்னை ஒன்றும் செய்துவிடாதே! மகிழ்ச்சியுடன் போய்விடு! எனக் கூறி அனுப்பிவைத்தது. ஒரு கூடை நிறையத் தங்கத்தோடு பரமன் மகிழ்ச்சியுடன் வீட்டை நோக்கி நடந்தான். அன்றிலிருந்து பரமனின் தரித்திரம், பசி எல்லாம் நீங்கியது.
பரமு தனது சொந்த ஊரில் பெரும் பணக்காரனாக வாழ்ந்தான். இதைத்தான் சமயோசித புத்தி ஒருவனை காப்பாற்றி உயர்த்தும் என்பார்கள்.

Leave a comment