காலநிலை மாற்றம் உணவுப் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம்
கோ.லீலா
காலநிலை எவ்வாறு நிகழ்கிறது என்பதை அறிந்தால்தான் காலநிலை மாற்றத்தால் பயிர்த்தொழில் எப்படி பாதிப்புறுகிறது. உணவு பாதுகாப்பிற்கு ஏற்படும் இடையூறு என்ன என்பது குறித்து தெளிவாக அறிய முடியும்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பேணி காத்தால் மட்டுமே பூமி பத்திரமாக இருக்கும். ஆனால், மனிதனோ காலங்காலமாக இயற்கையின் மீது செலுத்தி வரும் வன்முறை சொல்லில் அடங்காததது
கடலும் காடும் முத்தமிட்டு உறவாட கசியும் அமுதம் மழையென்பதை மறந்தான் மனிதன்.
கடலில் கொட்டிய குப்பைகள், கடலின் சூழலியலை முற்றிலும் சிதைத்து விட்டது. சமவெளியில் வாழ்கின்றவர்களோ கடலை ஒரு தட்டையான அறிவோடு அணுகுகிறோம். விளைவு காலநிலை மாற்றத்தோடு பல்வேறு இலவச இணைப்புகளாக நிலச்சரிவு, உப்பு நீர் உட்புகல் போன்றவையும் நிகழ்கின்றன…
கடலை பற்றி பேசும்போது, மின்னணு குப்பை பற்றி பேசாது இருக்க இயலாது…
மின்னணு இன்றைய உலகத்தை உள்ளங்கையில் தந்திருக்கிறது என்று இறுமாந்திருக்கும் நாம் மறந்து விட்டது… மின்னணு உபகரணங்களை தயாரிக்கும் போது உருவாகும் கழிவுகளையும், பயன்படுத்த முடியாத நிலையை அடைந்த மின்னணு உபகரணங்கள் குப்பையை, இவற்றையெல்லாம் எங்கே கொட்டுகிறோம்?அதன் விளைவுகள் என்ன என்பதை யோசித்திருக்கிறோமா?
மின்னணுக் குப்பைகளை கடலில் கொட்டுகிறோம், மற்றும் நிலத்தில் குவித்தும், எரித்தும் கடலை, நிலத்தை, காற்றை மாசுபடுத்தி விடுகிறோம்.
மின்னணு குப்பை என்ற ஒற்றை வரியில் விரிகின்ற செய்திகள்…
ஐ.நா.சபை அறிக்கையின்படி மின்னணுக் கழிவுகள் பிரச்சினையில் ஆசியாவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி இந்தியாவில் மின்னணுக் கழிவுகளை உருவாக்குவதில் மும்பை முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ஒரு நிமிடத்திற்கு உலகில் எட்டு டன் எடையுள்ள மின்னணுக் குப்பைகள் உருவாகுவதாக ஆய்வு அறிக்கை ஒன்று, அதிர்ச்சி தகவலை அளிக்கிறது… எதிர்காலத்தில் உலகமே ஒரு
குப்பைத்தொட்டியாக மாற்றிவிடும் அபாயம் இருக்கிறது.
2021 ல் மட்டும் தூக்கி வீசப்பட்ட மின்னணுக் குப்பைகள் 5.70 கோடி டன் எடை உடையதாக இருக்கிறது, இது சீனப் பெருஞ்சுவரின் எடையை விட அதிகம்.
கடலில் கொட்டப்படும் மின்னணுக் குப்பையை உண்ணும் கடல்வாழ் உயிரினங்கள் மூலம் மனிதர்களின் உடலுக்கு இடம் மாறும் இந்த மின்னணுக் குப்பைகள் உருவாக்கும் நோய்கள் ஏராளம்.
துசுயந்தன் வரலாற்றில் சகுந்தலை ஆற்றில் தவறவிடும் மோதிரம் மீன் வழியே துசுயந்தனை அடைவதுதான், நீர்வாழ் உயிரினம் மூலம் கன உலோகங்கள் மனிதனை அடைந்தற்கான சான்று.
கடலில் எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் கொட்டலாம் என்கிற மனிதனின் தட்டையான அறிவு குப்பையின்றி வேறென்ன.
கண்ணை விற்று சித்திரம் வாங்கும் மடமை,குப்பை அறிவுதானே.
கடலின் சூழல் (Ocean Ecology) கெடுவதால் ஏற்படும் அபாயம் வனத்தை நிலைக்குலைய செய்யும்.
கடலும் வனமும் வான்வழியே பேசிக்கொள்ளும். கடல் வனத்திற்கு நிகராக 40% ஆக்ஸிஜனை கொடுத்து, கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ள கூடியவை. கடலின் மிகப்பெரிய
நீர்பரப்பிலிருந்து ஆவியாகும் நீரைதான், வனங்கள் மழையாக்குகின்றன என்ற மிக நுட்பமான அவதானிப்பை இழந்த சமூகத்திற்கு, கடலைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது இன்றைய தலையாய கடமையாகும்
கடல்வாழ் உயிரினங்களின் அழிவால், கடலின் வெப்ப நிலை மாறும்போது பெரிய காலநிலைமாற்றம் உருவாகுகிறது.
பசிஃபிக் பெருங்கடல் சூடாகி உள்ளது, காரணம் கடலின் அடியில் 14 லட்சம் சதுரகிலோமீட்டருக்கு Great pacific garbage patch ( பெரிய பசிபிக் குப்பை இணைப்பு ) உள்ளது, என்பதை சார்லஸ் மோர் 1992 ல் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார்…
ஏற்கனவே காடுகளை அழித்து விட்டோம் என்பதால் கடல் தன்னியல்பில் உறிஞ்சும் கார்பன் டை ஆக்ஸைடை விட அதிகமாக உறிஞ்சுகின்றன… இதனால் கடலின் வெப்பம் மாற்றமடைகிறது.
பசிஃபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பமடைந்து உள்ளதன் மூலம் லாநினா, எல்நினோ போன்ற காலநிலை மாற்றங்கள் உருவாகின்றன. கடற்பரப்பை குளிர செய்ய மனிதனால் இயலுமா?
ஏனென்றால், கடலுக்கடியில் கிடக்கும் குப்பையில் 46 % மீன்பிடி உபகரணங்கள், மீதமுள்ளவை
மின்னணுக் குப்பைகள்.
அதில் நெகிழி அதிகம், இவை துகள்களாக மாற 600 ஆண்டுகள் ஆகும்.
காலநிலை மாற்றத்திற்கும் அடிபோடும் இந்த மின்னணுக் குப்பைகள் பூமியின் யாவற்றையும் குலைத்து விடக் கூடியவை.
பருவம் மாறி பெய்யும் மழை, இடம் மாறி பெய்யும் மழை, மேகவெடிப்பு, குறைந்த காலத்தில் கொட்டித் தீர்க்கும் மழை, அதீத வறட்சி, கடல் மட்டம் உயர்தல், அதீத வெப்பம், காட்டுத்தீ ஆகியவை காலநிலை மாற்றம் ஆகும்.
பருவநிலை மாற்றம் என்பது உலகின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு உலகளாவிய அச்சுறுத்தலாக உள்ளது. வளிமண்டலத்தில் பசுமை குடில் வாயு வெளியேற்றம் அதிகரித்து வருவதால், பசுமை குடில் வாயுக்களின் விளைவு காரணமாக வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது. சராசரி உலக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது மற்றும் 2100 வரை 2 டிகிரி செல்சியஸ் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது உலக அளவில் கணிசமான பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும்.
பசுமை குடில் வாயுக்களின் பெரும்பகுதியைக் கொண்டிருக்கும் CO2 இன் செறிவு, ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகிறது, மேலும் அதிகரித்த ஒளிச்சேர்க்கை காரணமாக அதிக வளர்ச்சி மற்றும் தாவர உற்பத்தித்திறனுக்கு வழிவகுத்தது, ஆனால் அதிகரித்த வெப்பநிலை பயிர் சுவாச வீதத்தை அதிகரிப்பதால் இந்த விளைவை ஈடுசெய்கிறது. மற்றும் ஆவியாதல், அதிக பூச்சித் தொல்லை, களை தாவரங்களின் மாற்றம் மற்றும் பயிர் காலம் குறைதல். காலநிலை மாற்றம் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையையும் மண்ணில் அவற்றின் நொதி செயல்பாடுகளையும் பாதிக்கிறது.
காலநிலை மாற்றம், உணவு உற்பத்தி, அதற்காகும் செலவுகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் அதன் ஆதிக்கத்துடன் உணவு பாதுகாப்பு சவால்களுக்கு மேலும் சவாலாக உள்ளது.
அதிகப்படியான வெப்பம் அல்லது தண்ணீர் பற்றாக்குறை பயிர் வளர்ச்சியைத் தடுக்கலாம், விளைச்சலைக் குறைக்கலாம், மேலும் நீர்ப்பாசனம், மண்ணின் தரம் மற்றும் விவசாயம் சார்ந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்பை பாதிக்கலாம். இயற்கை பேரிடர்கள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் உணவு பாதுகாப்பு அபாயத்தை பாதிக்கின்றன.
வானிலை பாங்கு மாற்றம் ( Changing Weather Pattern)
இங்கு காலநிலை மாற்றத்திற்கும் வானிலை மாற்றத்திற்குமான வேறுபாடை அறிய வேண்டியது அவசியமாகிறது…
வானிலை என்பது குறுகிய கால வளிமண்டல நிலைமைகளைக் குறிக்கிறது, அதே சமயம் காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் வானிலை நீண்ட காலத்தின் சராசரியாக இருக்கும். காலநிலை மாற்றம் என்பது நீண்ட கால மாற்றங்களைக் குறிக்கிறது.
அதீத மழைப்பொழிவினால் ஏற்படும் வெள்ளம், அல்லது அதீத வறட்சியினால் பயிர் விளைச்சலில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது.
விவசாய உற்பத்திக்கும், காலநிலை மாற்றம் மற்றும் வானிலை மாற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறது…
உலக வங்கியின் கூற்றுப்படி, உள்நாட்டு உணவு விலைகள் உலகளாவிய உணவு விலைகளின் உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இது வறட்சியால் மோசமாகிவிட்டது.
இந்தியாவின் உணவு விலை பணவீக்கம் அண்டை நாடுகளான
பங்களாதேஷ், பூடான், நேபாளம் மற்றும் இலங்கை உட்பட பல அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது.
2008 இன் பணவீக்க காலத்தில் இந்தியாவில் உள்நாட்டு தேவை அதிகரித்தது மற்றும் 2009 இல் எல் நினோ வானிலை முறையால் மோசமாகியது, இது வறட்சியின் விளைவாக உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தியது.
அதே போன்று காலம் மாறி கொட்டித் தீர்க்கும் மழையால் விளைந்த பயிர்கள் அறுவடைக்கு முன் நாசமாதலும், அறுவடைக்குப் பின் விற்பனை கூடங்களின் பற்றாக்குறை, குடோன் பற்றாக்குறை ஆகியவற்றால் பயன்படுத்த முடியாத அளவிற்கு தானியங்கள் முளை விடுதல், அழுகுதல் போன்ற காரணங்களாலும் உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. அதீத மழையின் வேகத்தால் மண்ணரிப்பின் மூலம் மண்ணின் வளமும் அடித்து செல்லப்படுவதும், அந்தந்த காலத்திற்கான பூச்சியினங்கள், பூச்சிகளை கட்டுப்படுத்தும் பறவையினங்கள், மகரந்த சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வண்ணத்துப்பூச்சிகள், விதைகளை பரவச் செய்யும் உயிரினங்கள் ஆகியவையும் பருவநிலை, மற்றும் வானிலை மாற்றத்தை எதிர்கொள்ள இயலாது அழிவிற்கு உட்படுவதும் உணவு விளைச்சல் மற்றும் பாதுகாப்பிற்கு சவலாக இருக்கிறது.
ஒவ்வொரு தானியமும் பல கட்டங்களை கடந்தே உண்ணக் கூடிய தரத்திற்கு தட்டு வந்து சேர்கிறது எடுத்துக்காட்டாக சோறு வரும் வழியை பார்ப்போம்
சோறு வரும் வழி…
- வயல் காட்டைச் சீர்செய்தல்
- ஏர் பிடித்தல்
- உழவு ஓட்டுதல்
- பரம்படித்தல்
- விதை நெல் சேகரித்தல்
- விதை நேர்த்தி செய்தல்
- விதைகளை நீரில் ஊற வைத்தல்
- நாற்றங்காலில் விதைத்தல்
- நாற்றாக வளருதல்
- நாற்று எடுத்தல்
- முடிச்சு கட்டுதல்
- வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல்
- நடவு நடுதல்
- களையெடுத்தல்
- உரமிடுதல்
- எலியிடம் தப்புதல்
- பூச்சியிடமிருந்து பாதுகாத்தல்
- நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல்
- கதிர் முற்றுதல்
- கதிர் அறுத்தல்
- கட்டு கட்டுதல்
- கட்டு சுமந்து வருதல்
- களத்துமேட்டில் சேர்த்தல்
- கதிர் அடித்தல்
- பயிர் தூற்றல்
- பதறுபிரித்தல்
- மூட்டை கட்டுதல்
- நெல் ஊறவைத்தல்
- நெல் அவித்தல்
- களத்தில் காயவைத்தல்
- மழையிலிருந்து பாதுகாத்தல்
- நெல் குத்துதல்
- நொய்யின்றி அரிசியாதல்
- அரிசியாக்குதல்
- மூட்டையில் பிடித்தல்
- விற்பனை செய்தல்
- எடை போட்டு வாங்குதல்
- அரிசி ஊறவைத்தல்
- அரிசி கழுவுதல்
- கல் நீக்குதல்
- அரிசியை உலையிடல்
- சோறு வடித்தல்
- சோறு சூடு தணிய வைத்தல்
- சோறு இலையில் இடல்.
முதல் 37 காலக்கட்டங்களில் நிலவும் பருவநிலை மற்றும் வானிலை மிக முக்கிய பங்காற்றுகிறது.
ஒவ்வொரு பட்டமும் முதல் அடியிலிருந்து, இறுதி அடி வரை நீடிக்கும் வானிலை மற்றும் பருவநிலைக்கு தக்கவாறே நம் பழந்தமிழர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த ஒரு காலக்கட்டத்திலும் ஏற்படும் பருவநிலை மாற்றமும் பயிர்கள் தாங்கி வரும் ஊட்டச்சத்துக்களை, உற்பத்தியை, பயன்பாட்டை குறைத்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவாசயத்தில் மாற்று தழுவல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில், இந்தியாவில் மானாவாரி அரிசி விளைச்சல் 2050 இல் 20% ஆகவும், 2080 சூழ்நிலைகளில் 47% ஆகவும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் 2050 இல் 19.3% ஆகவும், 2080 இல் 40% ஆகவும் குறிப்பிடத்தக்க இடஞ்சார்ந்த மற்றும் தற்காலிக மாறுபாடுகளுடன் நூற்றாண்டின் இறுதியில் கோதுமை விளைச்சலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலநிலை மாற்றம் 2050 மற்றும் 2080 சூழ்நிலைகளில் சம்பா/ மானாவாரி சாகுபடி காலத்தில்(காரீஃப்) மக்காச்சோள விளைச்சலை முறையே 18 மற்றும் 23% குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறுவை சாகுபடி( ரபி) குளிர்க்கால பயிர்கள் என்றாலும் அறுவடைக்கு முன்பான மூன்று மாதங்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வறண்ட காலமாகும்.
தக்க நேரத்தில் நீர் வழங்க இயலாவிடில் பயிர் கருகி உற்பத்தியை வெகுவாக பாதிக்கும்.
சுருக்கமாக நன்செய் நில பயிர்கள் அதீத மழையாலும், புன்செய் நில பயிர்கள் நீண்ட வறட்சியாலும் அழிவை சந்திக்கும் என்பது பொது விதியாக இருக்கிறது. நன்செய் நில பயிர்களுக்கு தஞ்சை டெல்டா பகுதியை கூறலாம்.
காலநிலை மாற்றம் பயிர் விளைச்சலைக் குறைக்கிறது மற்றும் உற்பத்தியின் ஊட்டச்சத்து தரத்தை குறைக்கிறது. வறட்சி போன்ற தீவிர நிகழ்வுகள் உணவு மற்றும் ஊட்டச்சத்து நுகர்வு மற்றும் விவசாயிகள் மீது அதன் தாக்கத்தை பாதிக்கிறது.
இவ்வகை நிகழ்வுகள் உணவு பற்றாக்குறையை விளைவிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இக்கட்டுரை விரைவில் வெளிவரவிருக்கும் சோறு நூலிலிருந்து ஒரு பகுதி. தீர்வுகள் சோறு நூலில்

Leave a comment