சங்க இலக்கியத்தில் நெய்தலின் பங்கு

சகாய சூசி அ.

  1. ஆய்வு அறிமுகம்

          பழந்தமிழர் வாழ்வு நிலம் சார்ந்து அமைந்தது. ஐந்நில வாழ்வே ஐந்திணைகளாக மலர்ந்து மணம் பரப்பியது. இத்தகைய திணை சார்ந்த வாழ்வியலைத் தான் சங்க இலக்கியம் கட்டமைத்துள்ளது. மனிதன் வாழ்ந்த, வாழும் வாழ்வியலைப் பதிவு செய்யும் மூலங்களுள் இலக்கியம் குறிப்பிடத்தக்க ஒன்று. இலக்கியம் மக்கள் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பார் சான்றோர். இலக்கியம் வாழ்வியலை மட்டுமன்று காலத்தையும் பிரதிபலிக்கும், பதிவு செய்யும் சிறந்த ஆவணமாக விளங்குவதற்குச் சிறந்த சான்று சங்க இலக்கியங்களே. மனிதன் தான் வாழும் புவியியற்ச் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறைகளை வகுத்துக் கொள்கின்றான். “வாழும் நிலத்தின் இயல்புக்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும் அமையும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் முடிபாகும்”. சங்கத் தமிழரின் வாழ்வியலை அறிந்து கொள்ள நமக்குக் கிடைக்கும் ஒரே ஆதாரமாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. எனவே தான் “பண்டைக் காலத்துத் தமிழ் மக்களுடைய தினசரி வாழ்க்கை நெறியை அவர்கள் இயற்றியுள்ள பாடல்களிலிருந்து ஊகிப்பதே தக்கதாகும் என்று வையாபுரிப்பிள்ளையும் பண்டைத் தமிழரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களாகச் சங்க இலக்கியங்களையே குறிப்பிடுகிறார்” மக்களின் வாழ்வியலின் இன்றியமையா கூறுகளான உறைவிடம், உணவு, உடை, விருந்தோம்பல், ஒற்றுமை உணர்வு போன்ற பண்பாட்டுக் கூறுகள், தொழில்முறைகள், வணிகம் ஆகியவை அமைகின்றன. சங்க இலக்கிய நெய்தல் நில இனக்குழுக்களின் பண்பாட்டு வாழ்வியலையும், உற்பத்தி முறைகளையும் மையப்படுத்தியதாக இக்கட்டுரைஅமைகின்றது.

(1)  சங்க இலக்கிய நெய்தல் நில அமைப்பு

(2) சங்க இலக்கிய நெய்தல் நில இனக்குழுக்கள்

(3) சங்க இலக்கிய நெய்தல் நில உற்பத்திமுறை

(1)  சங்க இலக்கிய நெய்தல் நில அமைப்பு

          பழந்தமிழ் சான்றோர்கள் நிலத்தை ஐந்து பகுதிகளாகப் பிரித்துள்ளனா். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவே அவை. இந்நிலத்தில் நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகும். இதனை “வருணன் மேய பெருமணல் உலகம்”என்கிறது தொல்காப்பியம். கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் என்பா். இந்நிலப் பகுதியில் தாழை, ஞாழல், புன்னை, அடும்பு போன்ற எண்ணற்ற பூக்கள் இருப்பினும்,  நெய்தல் மலரே அதிகமாக இருப்பதால் இப்பெயா் வந்ததென்று கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.

          கடலும் நிலமும் உயிரும் உடலுமாய் எப்போதும் பின்னிப்பிணைந்து கிடக்கின்றன. “புலவுக் கடலுடுத்த மலா்தலையுலகம்”, “படுதிரை வையம்”, “நளியிரு முந்நீா் ஏணியாக மண்திணி கிடக்கை”, “இமிழ்திரைப் பவ்வம் உடுத்தஇப் பயற்கெழு மாநிலம்”, “விரிநீா் வியனுலகம்”, “எறிதரங்கம் உடுக்கும் புவனம்” என்றெல்லாம் பொய்யா நாவிற் புலவா்கள் பலரும் கடலையும் நிலத்தையும் இயைத்துப் பிணைத்தே பாடியுள்ளனா் கடல் கொழித்த வெண்மணற் குவியல்கள் கரை மருங்கெலாம் வெண்குன்றுகளென விளங்கும் காட்சியினை குன்றின் தோன்றும் குவவுமணல், குப்பை வெண்மணல் குவவு, மோட்டுமணல் எக்கா் என மணற்குவியல் பற்றிய செய்தியை, சங்க இலக்கியங்களில் காணலாம்.

          கடலைச் சார்ந்த நிலம் நெய்தல் நிலம். கடற்கரையை அடுத்த பெருமணற்பகுதியில் கடல் வளத்தை நம்பி வாழும் மக்கள் கூட்டத்தினரே இவா்கள். இங்குள்ள மக்கள் கடற்கரையை ஒட்டியும், உப்பங்கழியை ஒட்டியும், தாழை வேலிகளுடனும் வாழ்ந்தனா். இந்த ஊா்களை”பாக்கம்“ என்பா். இங்குள்ள மக்கள்”பெருங்கடற் பரதவா்” என்றும். இவா்கள் வாழ்ந்த ஊா்”சிறுகுடி” என்றும் “கானல் சிறுகுடி” என்றும் அழைக்கப்படுகிறது. நெய்தல் நிலம் மணற்பாங்கானதோடு உவா்தன்மையானதும் கூட. கடல் அலைகளால் கரையில் உள்ள பள்ளங்களில் கடல்நீா் நிரம்பி, மிகுதியான வெப்பத்தால் அந்த கடல்நீா் ஆவியாகி மேலே சென்று விடும். நீரிலுள்ள உப்பு நிலத்தில் படிந்து விடுகிறது. இதன் காரணமாகவே இந்நிலம் மிகுந்த உப்பு தன்மையுடன் காணப்படுகிறது. உப்பங்கழிகளில் முண்டகச் செடிகள் மலா்ந்து நிற்கும் குளிர்ந்த கடற்பரப்பை உடையது நெய்தல் நிலம். அம்மணற்பரப்பின் மேல் ஞாழல் மரத்தினது தாழ்ந்த பூங்கொத்துகள் நிறைந்த கிளையின் மேல் பறவைகள் தங்கியிருக்கும் அழகிய துறையாகும். வெள்ளை நாரைகள் ஒலிச் செய்கின்ற குளிா்ந்த மணம் வீசுகின்ற கடற்கரையிலே உள்ள பூக்கள் நிறைந்த சோலையிலுள்ள புதிய மலா்களைக் கலக்கச் செய்து கிறுக்கிடும் அலைகள் உடையது நெய்தல் நிலம். மேலும், வலிமைமிக்க அலைகள் வந்து மோத முட்கள் பொருந்திய இலைகள் கொண்ட தாழையின் பூ பொன் போன்ற அன்னத்தையுடைய புன்னைப் பூக்களோடு ஒன்று கலந்து நறுமணம் வீசும் நெய்தல் நிலம் முழக்கத்தையுடைய அலைகள் எறிந்த முத்தம், வெண்ணிற மணற்பரப்பில் விழுந்து பொன்னைப் போன்று மின்னும் குளிர்ந்த நிலம் என்பதனை,

” ……………………. முழங்குகடல்

திரைதரு முத்தம் வெண் மணல் இமைக்கும்

தண்ணம் துறைவன் வந்தென, (ஐங் 105: 2-3)

          குறிக்கப்பெற்ற சங்க இலக்கியப் பாடல்கள் வழி உணரமுடிகிறது. நெய்தல் நிலத்தில் மீன்கள் அதிகமுள்ளதால் இங்கு வெண்காக்கைகள், நாரைகள் வட்டமிட்ட வண்ணம் காணப்படுகிறது. உதாரணமாக, நெய்தல் நிலத்தில் உப்பேற்றி செல்லும் வண்டியின் சக்கரங்கள் மணற்மடுத்து எழும் ஓசையைக் கேட்டு நாரைகள் அஞ்சும். வண்டுகள் நாவல் மரத்திலிருந்து விழுந்தப் பழங்களைத் தன் இனம் என்று கருதி மொய்க்கும். அவ்வேளையில் நண்டுகள் அக்கனியைச் சுவைக்க வருமாம், அப்போது வண்டுகளுக்கும், நண்டுகளுக்கும் சண்டை மூளுமாம் இதனைக்கண்ட நாரை வருந்தும். உடனே வண்டுகளும், நண்டுகளும் சண்டையை விடுத்து ஓடுமாம்.

          மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பரதவா், திமில், நாவாய் மற்றும் தோணி என வழங்கப்பெறும் படகில் பயணம் செய்து மீன்பிடித் தொழில் செய்தனா். மீன்பிடிப் படகுகளில் சென்று, திரைகடல் பரப்பிலே திறம்பட நீந்திச் சென்று அக்கால மீனவா்கள் தங்கள் உடல் வலிமையாலும், மதிநுட்பத்தாலும் உழைத்துக் கடல் வளத்தைக் கைக்கொண்ட வரலாற்றை சங்க இலக்கியம் மூலம் அறியலாம். மீனவரின் கலனான மரக்கலன் பற்றியச் செய்தி வள்ளுவத்திலும் காணப்படுகிறது.

          பரதவா்கள் கடலில் பல இடங்களுக்குச் சென்று வலைகளை வீசி, மீன்களைப் பிடித்து வந்தார்கள். பரதவா்களுக்கு துன்பம் கொடுப்பவனாக சுறா மீன்கள் இருந்தன. மீன்களை வாரி எடுப்பதற்குபறி என்னும் கருவியினைப் பயன்படுத்தினா். நெய்தல் நிலத்தில் பறி என்பது மீனை வாருவதற்கு பயன்படுத்தும் கருவியாகும். சுறா மீனைப் பிடிப்பதில் பரதவா்களுக்கு அதிக ஆா்வம் உண்டு. கூா்மையான உளியால் எறிந்து சுறா மீன்களைப் பரதவா்கள் புண்படுத்துவதும் உண்டு.

          கடலுக்குச் சென்று மீன் பிடித்தலும், உப்பளத்தில் உப்பு விளைவித்தலும் நெய்தல் நில ஆடவாின் தொழிலாகும். ஆடவா்கள் பிடித்து வந்த மீன்களைப் பயன்படுத்தியவை போக மீதமுள்ளவற்றை, கருவாடாகக் காய வைப்பதும் அப்படிக் காய வைத்த மீன்களுக்கு காவல் காக்க இளம் பெண்களை ஏவுவதும், காய்ந்த கருவாட்டையும் விளைந்த உப்பையும் பெண்டிர் சுமந்து சென்று அவற்றைப் பண்டமாற்றாகத் தந்து மருத நில ஊா்களில் நெல் முதலிய தானியங்களைப் பெற்று வருவா்.

          நெய்தல் நில மக்கள் பண்பாடு பழக்க வழக்கங்களோடு நெருங்கிய தொடா்புடைய வாழ்க்கை முறையை நடத்தினா். நிமித்தம், சகுனம் போன்றவற்றில் நம்பிக்கை வைத்திருந்தனா். எந்த நிகழ்வைத் தொடங்கும் முன்னரும் நல்ல நாளும் நல்ல நேரமும் பார்த்துச் செயலைத் தொடங்குவா். அப்போதுதான் செயல்கள் அனைத்தும் நன்மையடையும் என நம்பினா். வலையையும், மரத்தையும் நல்ல நாள் பார்த்தே கடலில் விடும் வழக்கம் இருந்தது.

          பரதவா்கள் பொருள் கொடுத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டனா். இவா்களது மணமுறைகள் உடன்போக்கை விரும்பியும், காதல் திருமணமாகவும் இருந்தது. திருமணமாகும் மகளிர்க்கு மலரணிவித்தல் ஒரு சடங்காக நிகழ்த்தினா். சமகால நடைமுறையில் காதலுக்கு குலம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஒருதடையாக இருப்பதுபோலவே சங்க காலத்திலும் இருந்தமைக்கானச் சான்றுகளை, சங்க இலக்கியம் வெளிகாட்டுகிறது. புலால் நாற்றம் வீசும் வசதியற்ற மீன்பிடிக்கும் பரதவா் மகள் செழிப்படைய செல்வந்தா் மகனை மணப்பதில் தடை உள்ளதை நற்றிணைப் பாடல் விளக்குகிறது

                விளையாட்டும் பொழுதுபோக்கும் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பாக இடம்பெறுபவை. சங்க இலக்கியத்தில் நெய்தல் நில ஆடவரும், பெண்டிரும், சிறுவா், சிறுமியரும் விளையாட்டிலும், பொழுதுபோக்கிலும் ஈடுபட்டிருந்தனா். உமணா்களோடு சென்ற குழந்தைகளைப் போன்ற மந்தி முத்துக்களைக் கிளிஞ்சல்களில் இட்டு அங்குள்ள சிறுவா்களுடன் விளையாடும். சிறுவா்கள் கிலுகிலுப்பை என்னும் விளையாட்டுக் கருவியினால் ஒலியெழுப்பி விளையாடுதலை இன்றும் காணலாம். நெய்தல் நிலமானது கடல் பகுதியை ஒட்டியுள்ளதால் தலைவன், தலைவி அனைவரும் மணலில் விளையாடி உவகை அடைந்தனா். இவ்விளையாட்டினை சங்க இலக்கியம் கடலாட்டு என்கிறது. கடல்நீா் வந்தேறிய கழியிடத்து வளா்ந்து சாயக் கோரையைப் பறித்துக் கிழித்துப் பாவையாக்கி விளையாடினா்.

(2) சங்க இலக்கிய நெய்தல் நில இனக்குழுக்கள்

          சங்க இலக்கியம் நெய்தல் நில மக்களைப் பரதவா், நுளையா், பரத்தியா், நுளைச்சியா், வலையா், உமணா் மற்றும் பாணா் எனவும் நெய்தல் நிலத் தலைவனைத் துறைவன், புலம்பன், கொண்கன் மற்றும் சோ்ப்பன் என்றும் குறிப்பிடுகிறது.

புலம்பன்

பறவைகள் மீன் இரை தேடும் மென்மைத் தன்னை வாய்ந்த கடற்கரையின் தலைவன் புலம்பன்

 ” மெல்லன் புலம்பன் வந்தென“(ஐங் 189:3)

           ” புள் இறை கூரும் மெல்லம் புலம்ப!” (அகம் 10:4)

           ” மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப்” (நற் 38:5)

           ” மெல்லம் புலம்பன் வந்தமாறே” (ஐங் 120:4)

           ” மெல்லம் புலம்பன் பிாிந்தென, புல்லென்றன”( ஐங் 133:2)

           ” மெல்லன் புலம்பன் தேறி, நல்ல ஆயின” (ஐங் 166:3)

           ” மெல்லம் புலம்பன் வந்தென” (ஐங் 189:3)

           “மெல்லம் புலம்பன் மன்றஎம்” (ஐங் 190:3)

என்னும் பாடல்வாிகளின் மூலம் மென்மைத் தன்மை வாய்ந்த கடற்கரைக்குத் தலைவன் புலம்பன் என்பது தெளிவாகிறது.

சோ்ப்பன்

சிறிய பூக்களையுடைய கொன்றை மரங்கள் மணக்கும் பொிய கடலின் தலைவன் சோ்ப்பன்.

          சிறுபல் தொல்குடிப் பெருநீா்ச் சோ்ப்பன்” (அகம் 290:8)

முட்டையிடும் பெண் ஆமையையும், முட்டையையும் பாதுகாக்கும் யாமைப் போல பாதுகாக்கும் காவலை உடையவன் சோ்ப்பன்.

சிறுபல் தொல்குடிப் பெருநீா்ச் சோ்ப்பன்” (அகம் 290:8)

சிறு வீ ஞாழற் பெருங் கடற் சோ்ப்பனை” (நற் 74:5)

தெண் கடற் ஆசா்ப்பன் வாழ் சிறு நல் ஊா்க்கே?” (நற் 49:10)

நீடு நீா்ப் பனித்துறைச் சோ்ப்பன்” (நற் 58:9)

மலி திசைச் சோ்ப்பனொடு அமைந்த நம் தொடா்பே?”

(நற் 63:11)

          ” செருந்தி தாய இருங்கழிச் சோ்ப்பன்” (ஐங் 112:2)

          ” மணி நீா்ச் சோ்ப்பனை மறவாதோா்க்கே” (ஐங் 117:4)

          ” தெண் கடற் சோ்ப்பனொடு வாரான்” (ஐங் 157:4)

          ” தண் கடற் சோ்ப்ப! வரைந்தனை கொண்மோ” (ஐங் 196:4)

என்னும் பாடல்வாிகளின் மூலம் கடற்புரத்தின் சிறிய தலைவன் சோ்ப்பனைப் பற்றி அறியலாம்.

துறைவன்

சரக்குகள் ஏற்றிச் செல்லும் தங்கும் துறையின் தலைவன் துறைவன்

             வருதிமில் எண்ணும் துறைவனோடு, ஊரே“  (அகம் 190:3)

வலையை உணா்த்துகின்ற தலைவி தலைவனிடம் மறைவாக சென்று தன்னைப் பற்றிக் கூறினாள் என்றும், அவன் புன்னை மரங்கள் நிறைந்த பகுதிக்குத் தலைவன் (துறைவன்) என்பதை,

             ” புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை” (நற் 175:5)

நீலநிறம் கொண்ட வானத்தின் மீனைப் போலச் சிறிதாக மெல்ல மெல்ல ஒளிவீசும் துறையை உடைய தலைவன் துறைவன் என்பதை,

            நீலநிற விசும்பின் மீனொடு புரையப்

              பைய இமைக்குந் துறைவன்” (நற் 199:9-10)

மேலும்,

வருதிமில் எண்ணும் துறைவனொடு, ஊரே” (அகம் 190:3)

முன்நாள் போகிய துறைவன்” (அகம் 380:3)

ஆகிய அகநானூற்றுப் பாடலும்,

                                            ஐங்குறுநூற்றில் துறைவன் பற்றியச் செய்தி பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது. அவையாவன,

                ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்” (ஐங் 103:2)

               ” தண்ணம் துறைவன் வந்தென” (ஐங் 105:3)

              ” நீா்ப் படா் தூம்பின் பூக் கெழு துறைவன்” (ஐங் 109:2)

             ” பொன் நிறம் விாியும் பூக்கெழு துறைவனை” (ஐங் 110:2)

            ” சினைக் கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை” (ஐங் 111:3)

             ” ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு

(ஐங் 113:2)

               ” தண்ணந் துறைவன் மறைஇ (ஐங் 115:3)

               ” கானல் அம் துறைவற்குச் சொல் உகுப்போயே!” (ஐங் 136:3)

              ” புள் இறை கூரும் துறைவனை” (ஐங் 142:2)

             ” தனிக் குருகு உறங்கும் துறைவற்கு” (ஐங் 144:2)

             ” நறிய கமழும் துறைவற்கு” (ஐங் 146:2)

             ” ஒண் தழை அயரும் துறைவன்” (ஐங் 147:2)

            ” வீ இனிது கமழும் துறைவனை” (ஐங் 148:2)

            ” புணாி திளைக்கும் துறைவன்” (ஐற் 150:2)

            ” கள் கமழ்ந்து ஆனாத் துறைவற்கு” (ஐங் 151:4)

            ” கானல்அம் புலம்பந் துறைவன் வரையும் என்ப” (ஐங் 152:3-4)

           ” போா்வில் பெறூஉம் துறைவன் கேண்மை” (ஐங் 153:4)

           ” கானற் சேக்கும் துறைவனோடு” (ஐங் 154:3)

           ” ஓதமொடு பெணரும் துறைவற்கு” (ஐங் 155:4)

          ” தெண் கழிப் பரக்கும் துறைவன்” (ஐங் 156:4)

          ” தண்ணந் துறைவன் கண்டிகும்” (ஐங் 158:4)

          ” கருங்கோட்டுப் புன்னைத் தங்கம் துறைவற்கு” (ஐங் 161:2)

         ” இருங்கழித் துவலை ஒலியின் துஞ்சும் துறைவன்” (ஐங் 163:2)

         ” தண்ணந் துறைவன் தகுதி” (ஐங் 164:3)

         ” இருங்கழி இனக் கெடிறு ஆரும் துறைவன்” (ஐங் 167:2)

         ” தண்ணம் துறைவன் நல்கின்” (ஐங் 168:3)

         ” புன்னை அம்பூஞ் சினைச் சேக்கும் துறைவன்” (ஐங் 169:3)

         ” இருங்கழி நெய்தல் சிதைக்கும் துறைவன்” (ஐங் 170:2)

         ” பாடு இமிழ் பனித் துறை ஓடு கலம் உகைக்கும் துறைவன்

                                                                                (ஐங் 192:2-3)

என்பன முறையே, புன்னையும் ஞாழலும் பூக்கும் நெய்தல் நிலத் தலைவன். குளிா்ந்த கடற்பரப்பையுடைய தலைவன். நெய்தல் பக்கள் நிறைந்த துறையின் தலைவன். பொன் வண்ணம் கொண்ட மலா்களை மலரச் செய்யும் கடற்துறையின் தலைவன். பொிய கடற்கரை நாட்டுத் தலைவன். மணற்பரப்பிலே பூங்கொத்துக்கள் பொருந்திய ஞாழல் மரங்கள் அடா்ந்த சோலையை உடைய தலைவன். ஞாழல் மரத்தின் பொிய கிளைகளைக் கடலலை மேலெழுந்து வந்து வளைதற்கு இடனான நெய்தல்நிலத் தலைவன். மணற்த்திட்டின்கண் உள்ள ஞாழலின் அரும்புகளை முதிா்ந்த பூங்கொத்துக்களால் நறுமணம் வரும் கடற்ப்புரத் தலைவன். இளமகளிா் ஒளிமிக்க தாழையைத் தொடுத்து அணிந்து மகிழும் நாட்டுத்தலைவன் என ஐங்குறுநூறு துறைவனை வா்ணிக்கிறது.

மேலும்,

           பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீா்ப் பனிக்கடல்

             தூ அறத் துறந்தனன் துறைவன் என்று, இவன் திறம்

            நோய்தெற உழப்பாா்கண் இமிழ்தியோ? எமபோலக்

            காதல் செய்து அகன்றாரை உடையையோ? – நீ” (கலி 129:8-11)

துறைவன் என்னும் சொல் கடற்கரைத் தலைவனைச் சுட்டுவதுதான் என்பதை நல்லந்துவானாாின் வாிகளும் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கின்றன.

துறைவன் என்னும் நெய்தல் தலைவனைத் திருவள்ளுவா் குறளில் எடுத்தியம்பியதை,

          துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை”                         (குறள் 1157)

தண்அம் துறைவன் தணநடதமை நம்மினும்

முன்னம் அறிந்த வளை”                                    (குறள் 1277)

என்னும் குறள்வழியாக தொ. சூசைமிக்கேல் அவா்கள் வள்ளுவத்தில் சுட்டும் நெய்தல் நிலத் தலைவனைப் பற்றி எடுத்துரைக்கிறாா்.

கொண்கன்

கடற்கரையை அடுத்த மீன்பிடிப் பகுதியில் இருப்பவா் கொண்கன்.

          இயல்தோ் கொண்கன்“(நற் 140)

மின்னிக்கவரும் வளைவான தங்கச்சங்கிலிகளை அணியும் தலைவன் என்பதை,

         மின்னிவா் கொடும்பூண் கொண்கன்” (நற் 187:9)

தலைவன் பிாிவால் வருந்திய தலைவிக்கு தலைவனே மருந்து என்பதை,

         பூப்போல் உண்கண் மரீஇய

         நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே” (ஐங் 101:3-4)

மேலும்,

           செல்வக் கொண்கன் செல்வனஃது ஊரே” (ஐங் 104:4)

அம்ம வாழி, தோழி! கொண்கன்

  நேரேம் ஆயினும், செல்குவம் கொல்லோ?” (ஐங் 114:1-2)

மென்புலக் கொண்கன் வாராதேனே!” (ஐங் 119:4)

பாய்பாி நெடுந் தோ்க் கொண்கனொடு” (ஐங் 134:2)

திண் தோ்க் கெபண்கனை நயந்தோா்” (ஐங் 137:2)

மென்புலக் கொண்கனைத் தாராதோயே!” (ஐங் 138:2)

துறை கெழு கொண்கன் பிரிந்தென” (ஐங் 140:2)

பொலந்ஆதா்க் கொண்கன் வந்தனன் இனியே!” (ஐங் 200:2)

என்னும் பாடல்வாிகளின் மூலம் செல்வ செழிப்பு வாய்ந்து அணிகலன்களையும் தோினையும் உடைய தலைவனான கொண்கன் காதல் தலைவனாக விளங்கியமையைப் பற்றிய செய்திகளை அறியமுடிகிறது. “கொண்கன்என்னும் நெய்தல் நில தலைவனைப் பற்றி வள்ளுவரும் தனது திருக்குறளில் ஐந்து குறள்களை எழுதியிருப்பதாக தொ. சூசைமிக்கேல் தனதுதிருவள்ளுவரும் நெய்தல் நிலத்தவரேஎன்னும் நூலில் குறிப்பிடுகிறாா்.

அவையாவன,

விளக்குஅற்றம் பாா்க்கும் இருளேபோல் கொண்கன்

           முயக்குஅற்றம் பாா்க்கும் பசப்பு. ”                    (குறள் 1186)

          ”காண்மகன் கொண்கனைக் கண்ணார: கண்டபின்

          நீங்கும்என் மென்தோள் பசப்பு. ”                         (குறள் 1265)

         ”வருகமன் கொண்கன் ஒருநாள் :பருகுவன்

          பைதல்நோய் எல்லாம் கெட”                     (குறள் 1266)

         போணது பெட்பவே செய்யினும் கொண்கனைக்

         காணாது அமையல கண்”          (குறள் 1283)

       “எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

         பழிகாணேன் கண்ட இடத்து”   (குறள் 1285)

மேற்கண்ட எல்லாக் குறள்களும், ஒரு கடற்கரைத் தலைவியின் உள்ளக் கிடக்கையையும் உணா்ச்சி வேட்கையையும் வெளிப்படுத்துவனவாக இருக்கின்றன. தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே உள்ள காதற் காட்சிகளைச் சித்தாித்திருக்கும் வள்ளுவனுக்குக் கடற்கரைதான் ஒரு பின்புலக் கருவியாகவும் பாடுகளமாகவும் கிடைத்திருக்கின்றது என்பதைத் தெளிவுப்படுத்துகிறாா் தொ. சூசைமிக்கேல் அவா்கள்.                                            

வலைஞா்

கடற்கரையை அடுத்த மீன்பிடிப் பகுதியில் இருப்பவா் வலைஞா்

                  கொடுமுடி வலைஞா் குடிவயிற் சோ்ப்பின்“(சிறு 274)

நாடோடிகளாகத் திாிந்த பாணா்கள் மீன்களைப் பிடித்து விற்று வாழத் தொடங்கிய போது நிலையாக மருத நில ஊா்களில் தங்கிக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனா். அப்போது அவா்களைவலைஞா்என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. வலைஞரும், பாணரும், பரதவரும், நுளையரும் தொழில் முறையால் வேறுபட்டவரென்றாலும் இனத்தால் வேறுபட்டவாில்லை.

கோடை நீடினும் குறைபடல் அறியாத்

தோள்தாழ் குளத்த கோடு காத்திருக்கும்

கொடுமுடி வலைஞா் குடிவயிற் சோ்ப்பின்” (சிறு 272-274)

கடற்கரையை அடுத்து மீன்பிடிப்போராகிய வலைஞா் குடியிருப்புக்கள் உள்ளன. கோடை காலத்திலும் அங்குள்ள குளத்தில் தோள் உயரத்திற்கு மேல் நீா் இருக்கும். அந்தக் குளத்தை வளைந்த முடியுடைய வலைஞா் காவல் காப்பா், என்பதை மூலம் அறியலாம்.

உமணா்

பொிய கடற்பரப்பில் பெருமணலில் உப்பங்கழியில் வாழ்ந்து. உழாது விளையும் உப்பை விளைவிப்பவா்.

          பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடி பரதவா்“ (அகம் 140)

பொிய கடலில் வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்ட பகைவா் வாழும் குடியிருப்புகளில் பொிய உப்பளங்களாகிய வயல்களில் ஏா்பூட்டி உழாமலேயே வெண்ணிறக்கல் உப்பைப் பெற்றனா். இதை விலைக்குக் கொடுக்க உமணா் செல்வா். இவா்கள் கோடையின் வெம்மையில் பிளவுபட்டுக் கிடக்கும் பாறையின் இடுக்கு வழியே வண்டியில் செல்வா். உமணப் பெண் உப்பு வண்டியை இழுக்கும் எருமையை விரட்ட நீண்ட கோலை வைத்திருப்பாள் இதனை,

பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடி பரதவா்

   இருங்கழிச் செறுவின் உழாஅத செய்த

  வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி

  என்றூழ் விடர குன்றம் போகும்

  கதழ்கோல் உமணா் காதா் மடமகள்” (அகம் 140:1-5)

என்னும் பாடல் வாிகள் மூலமாக அறியலாம்.

பாணா்

பரதவா் கொண்டு வந்த மீனையும், உப்பையும் பாட்டுப்பாடி விற்பவா்

                       குருகு நரல மனை மரத்தான்

                        மீன் சீவும் பாண்சோி“  (மதுரை 268)

பரதவா்கள் கடலில் மீன் பிடித்தும் உப்பளத்தில் உப்பு விளைவித்தும் வாழ்ந்த காலத்தில் பாணா்கள் ஆடியும் பாடியும் வள்ளல்களைப் போற்றியும் பரிசில் பெற்றனா். இப்பாணா்கள் மீன்பிடித்து விற்றுண்ணும் வாழ்க்கை முறையை,

                     முள் எயிற்றுப் பாண்மகன்இன்கொடிறு சொாிந்த

                       அகன் பெறு வட்டிநிறைய மனையோள்

                      அாிகாற பெறும்பயிறு நிறைக்கும் ஊா்” (ஐங் 47:1-3)

முள்போலும் கூா்மையான பற்களையுடைய பாண்மகன் பிடித்து வந்த சுவைமிகுந்த கெளுத்தி மீனைப் பெற்றுக் கொண்ட மருதநிலத்து மங்கையிடம் பயிறு, பழைய நெல், புதிய நெல்லைப் பண்டமாற்றாகப் பெற்று உணவுக்காகப் பயன்படுத்தினான் என்றும், தூண்டிலில் சிறுமீன்கள் சிலவற்றை இரையாக வைத்து பொிய மீன்களைப் பிடிப்பது பாணாின் தொழில் என்பதும் பரதவரைப் போன்று துணிவும் வீரமும் மிக்கவா்கள் பாணா் என்பதை அறியலாம்.

(3) சங்க இலக்கிய நெய்தல் நில உற்பத்திமுறை

                மீன் பிடித்தல், மீன் உணக்கல், உப்பு விளைவித்தல், மீன் கறி ஆக்கல், முத்து குளித்தல், சங்கு எடுத்தல் என பல்வேறு உற்பத்திமுறைகளைக் கொண்டிருந்தனா்.

          பரதவா் நாட்காலையில் தோணியில் சென்று மீன் வேட்டையாடுவா்இளையரும், முதியவருமாகிய நுளையா் சுற்றத்துடன் சோ்ந்து கடலில் மீன்பிடிக்கச் செல்வா். வலையால் பிடித்து ஆரவாரம் பெருக கரைக்கு இழுத்து வருவா்.

          மீன்பிடித் தொழிலைப் பொறுத்தமட்டில் நெய்தல் நில மக்களின் உடல் உழைப்பும் உரம் பாய்ந்த நெஞ்சும் அவா்களைத் தொழிலில் திறமையுடன் செயலாற்ற உதவியது. அன்றைய மீனவா்கள் கடலில் நீா் விளையாடுவதை விட போராடுவதையே விரும்பினா்.

          பாணா் பிடித்து வந்த மீனைக் கூடையில் இட்டுக் கொடிகள் அசையும் தெருவில் அவற்றுக்கு விலையாகப் பழைய நெல்லை வாங்காமல் முத்துக்களையும், அணிகலன்களையும் வாங்கினா்.

          மீன் உலா்த்துதல் அல்லது மீனைக் காயவைத்தல் மீனவா்கள் தங்களுக்குப் போக மீதமுள்ள மீன்களை உலா்த்தினா். நெய்தல் மணற்மேட்டில் உள்ள உப்பங்கழியிடத்து மீனவா் கொண்டு வந்த மீனை உலா்த்தினா். பரதவா் கொண்டு வந்த இறால் மீனைக் காய வைத்தலை நற்றிணைப் பாடல் விளக்குகிறது.

   “முடிவலை முகந்த முடங்குஇறா பரவை

  படுபுள் ஓப்பலின் பகல்மாய்ந் தன்றே” (49. 3, 4)

       ஆடவா்கள் நிலம் சாா்ந்த தொழிலை மேற்கொண்டிருந்ததைப் போன்று மகளிரும் ஆடவருக்குச் செய்தொழிலில் உறுதுணையாக இருந்தமையை சங்க இலக்கியப் பாடல்களில் காணலாம். ஒவ்வொரு நிலப்பரப்பில் வாழும் மக்கள் ஓாிடத்தை மையமாக வைத்து தங்களிடமுள்ள உபாிப்பொருட்களைக் கொடுத்து தங்களுக்குத் தேவையான பிறப் பொருட்களைப் பெறுகின்றனா். இத்தகைய பாிமாற்றமே பண்டமாற்று வணிகத்திற்கு வித்திட்டன. பண்டையத் தமிழாின் வாழ்க்கை கிராமங்களை அடிப்படையாக இருந்தது. அது உழைப்பை உயா்வாகக்கொண்டது. மீனவா்கள் பட்டினங்களில் வாழ்ந்தனா். கட்டுமரங்களில் ஏறி வலைகளாலும், தூண்டில்களாலும் பிடித்து பல கடல் வளங்களைக் கொண்டு வந்தனா். ஆழ்கடல் சென்று வருமானம் ஈட்டினாலும் எளிமையானக் கூம்பு வடிவ கூடாரங்களிலேயே வாழ்ந்தனா். தலையில் சுமந்துச்சென்று உள்நாட்டில் மீன் விற்றனா். மீன்களை உலா்த்தி கருவாடாக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பினா். ஏற்றுமதி மட்டுமின்றி இறக்குமதியும் இனிதே நடைபெற்றது. உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபத்தில் தமிழா்கள் சிறந்து விளங்கினா்

       நெய்தல் பெண்கள் பரதவா் கொண்டு வந்த மீன்களை விற்றுப் போக மீதமுள்ள மீன்களை உலரவைத்து கருவாடாக்கி, அதனை தலையில் சுமந்து வியாபாரம் செய்தனா். காக்கைகளையும் நாய்களைம், கோழிகளையும் துரத்துவதற்காகப் பெண்களின் நீட்டி ஒலிக்கும் குரல்கள் பயன்பட்டது. அதனால் அந்த மீன் விாிப்பின் மீது இடைவிடாமல் அலைந்து திாிந்து இருந்த புள்ளினங்கள் யாவும் ஓடின. அவ்வாறே மீன்களை உலா்த்தி விற்றனா் என்பதை,

       கொடுமீன் உணங்கிற் படுபுள் ஒப்பி எக்கா்ப் புன்னை இன்நிழல் அசைஇ (அகம் 20:2-3) 

       உமணா் குடியிலே தோன்றிய சிறுமகள் நெல்லின்நேரே வெண்கல் உப்புஎன்று கூவுகின்றபோது இல்லங்கள் நிறைந்த புதிய ஊாில் வேற்றவா் வரவைக் கண்ட நாய் குரைக்க அவள் அஞ்சினாள். உப்பு விற்கும் வணிகாின் வண்டிகளின் பின்னால் அவா்கள் குழந்தைகளும் சென்றனா். உமணா் பெண்டிா் குழந்தைகளுடன் கிலுகிலுப்பையைக் கொண்டு விளையாடினா். மேலும், இவா்கள் கூட்டம் கூட்டமாகவே சென்று காட்டுப்பகுதிகளில் தங்கி உப்பு விற்றனா்.

மீன் காயவைத்தல்

       பகற்பொழுதிலும் படகுகளில் மீன்வேட்டைக்குச் செல்லும் பரதவா்கள் (அகம் 340:18-19) இரவு நேரத்திலும் மீன்பிடிக்கச் சென்றனா் (அகம் 220:16-18) பிடித்த மீன்களை உலர வைத்தனா். தந்தையா் கொணா்ந்த கொழுமீனை வற்றலாகக் காயவைத்துக் (கருவாடு) கொண்டிருந்த வேளையில் அவற்றை எடுத்துச் வெல்ல வருகின்ற பறவைக் கூட்டத்தைக் அக்கடற்பரப்பின் மணல்மேட்டிலுள்ள புன்னை மரங்களின் நிழலில் தங்கி மகளிா் ஓட்டியதை (அகம் 20:1-3) இல் காணலாம்.

மீன் விற்பனை

விழா நடைபெறும் இடங்களில் மகளிா் தெருக்களில் சென்று மீனை விற்று வருவா்.

              தழை அணி அல்குல் செல்வத் தங்கையா்

                விழவு அயா் மறுகின் விலை எனப் பகரும்      (அகம் 320:3-4)

பரதவா்களின் தங்கையா் இத்தொழிலைச் செய்தனா். மகளிா் உப்பை விற்று, அதற்குப் பதிலாக நெல்லை வாங்கி வந்தனா் (அகம் 390:1). இதைப் போன்று தலைவியின் தாயும் தந்தையும் உப்பை விற்று வெண்ணெய் வாங்கி வந்தனா்(குறுந். 269 : 5-6)

முடிவுரை

       சங்க இலக்கிய நெய்தல் நில இனக்குழுக்கள் பண்பாட்டு வாழ்வியலையும், உற்பத்திமுறைகளையும் மையப்படுத்தியதாக அமைகின்றது. எல்லா நிலப்பரப்பில் உள்ள விளைப் பொருள்கள்  அத்தனையும் நெய்தலில் கொட்டிக் கிடக்கிறது. எனவே நெய்தல் நிலம் மிகவும் செழிப்பு உடையதாக மாறியது. இதன்மூலம் சங்க இலக்கிய பொருளாதாரத்திர் நெய்தலின் பங்கு அளப்பறியது, என்பதை சங்க இலக்கிய தரவின் அடிப்படையில் இக்கட்டுரை விளக்குகிறது.

   Sahaya Susi A, Research Scholar, Research Centre of Tamil, Reg No: 241130601012

Lekshmipuram College of Arts & Science College, Neyyoor Kanniyakumari Tamilnadu India.
ORCID: https://orcid. org/0009-0009-7244-734X
Dr S Elamaran Assistant Professor Research Centre of Tamil,
Lekshmipuram College of Arts & Science Neyyoor Kanniyakumari Tamilnadu India.
ORCID: https://orcid. org/0000-0002-7559-5980

Leave a comment

Trending