தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களில் அன்னதானம் குறித்த பதிவுகள்
முனைவர் கு. சுந்தரமூர்த்தி
பசித்தோர்க்கு உணவளித்தல் முஸ்லிம்களின் தனித்த பண்பாடாகும். அவர்கள் தாங்கள் ஒன்று கூடித் தொழுகை நடத்தும் பள்ளிவாசலையும் வயிற்றுப் பிணி நீக்கும் அறச்சாலைகளுள் ஒன்றாகவே எண்ணுகின்றனர். ஏனென்றால் அவர்களின் இறைபக்தி என்பது இறையை நினைந்து இறை வழிபாட்டோடு ஒன்றிணைந்திருப்பது மட்டுமல்ல. அதன்வழி சமூகத்தில் எளியோராக இருக்கிற மக்களையும் அரவணைத்துச் செல்கிற கருத்தியலாக இஸ்லாம் வெளிப்படுகிறது. அளவுக்கு அதிகமாகச் சேர்க்கிற செல்வமும் அதன் வழியே கிடைக்கிற அதிகாரமும் ஏழைகளை, கீழ்நிலையில் உள்ளவர்களை ஒடுக்க முயலும் என்பதாலேயே அதனை இறை நிராகரிப்புச் செயலாக இஸ்லாம் பார்க்கிறது. இதன் அடிப்படையில்தான் முஸ்லிம் ஒருவர் சேர்க்கிற செல்வம் தன்னுடைய உழைப்பால் வந்தது என்று கருதாமல் இறைவனின் அருட் கொடையாகக் கருத வேண்டும் என்கிறது.
’பணத்தைச் சேர்த்து வைக்காதீர்கள்; செல்வத்தால் அகம்பாவம் கொள்ளாதீர்கள்’ என்கிறது நபிமொழி.
நபிகள் நாயகமும் அதற்கான முன்மாதிரியாகவே வாழ்ந்து காட்டினார். நபிகள் நாயகம் ஒரு இனத்திற்கே தலைவராக இருந்தாலும் ஒரு நாளும் ஒருபோதும் வயிறார தனித்து உண்டதில்லை. தொடர்ந்து இரண்டு நாள் பசியோடிருந்த நபிகளாரின் நிலையறிந்து ஒருவர் இரண்டு ரொட்டிகளும் கொஞ்சம் வினிகரும் தந்து பசியாறச் சொல்ல அப்பொழுது இரு தோழர்கள் வந்து சேர்ந்தனர். தன் பசிக்கு இரண்டு ரொட்டிகளே போதாது என்றிருந்த நிலையிலும் பசியைப் பொறுத்துக் கொண்டு தோழர்களோடு பகிர்ந்து உண்டார் என நபிகளார் வரலாறு காட்டுகிறது.
இஸ்லாம் ஈமானை வற்புறுத்துகிறது. அதே நேரத்தில் சமூக அக்கறையற்ற ஈமானை இஸ்லாம் வெறுக்கிறது. ஹஜ்ஜோ, உம்ராவோ செய்ய விரும்பும் ஒரு முஸ்லிம், தன் பக்கத்து வீட்டுக்காரன் உண்ண உணவின்றி பசித்திருக்க, ஒருவேளை உணவுகூடக் கொடுக்க மனமில்லாத ஒருவனை ஈமான் கொண்டவனாகக் கருத இயலாது என்கின்றனர் இஸ்லாமிய அறிஞர்கள். இதனால்தான் உண்மையான ஈமான் கொண்டோர்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசல்கள் பசித்தோரை வரவேற்றுப் பசிப்பிணி நீக்கும் அறவாசல்களாக விளங்கியிருக்கின்றன; விளங்குகின்றன. முஸ்லிம் பெருமக்களின் இத்தகைய செயலைத் தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களாக விளங்கும் கல்வெட்டுகள், செப்பேடுகள், சுவடிகள், புலவர்களின் பாடல்கள் ஆகியன பதிவு செய்துள்ளன.
சீதக்காதி வள்ளலின் அன்னக் கொடை
தமிழக வரலாற்றில் மிகவும் புகழப்படும் வள்ளல்களுள் தனித்துவ மிக்கவராக விளங்கக் கூடியவர் சீதக்காதி வள்ளல் ஆவார். ’செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்னும் சொலவடை அவரின் கொடை வண்மையை உறுதிசெய்கிறது.
வள்ளல் சீதக்காதி கிழவன் சேதுபதியின் (1678–1710) அவையில் அமைச்சராக விளங்கியவர். ’விசய ரகுநாத பெரிய தம்பி’ என கிழவன் சேதுபதி பட்டமளித்து இருப்பதன்வழி அவன் சீதக்காதியின்மீது கொண்டிருந்த நன்மதிப் பினை உணரமுடியும்.
சீதக்காதி மிகப்பெரும் வணிகராக விளங்கியவர். கடல் வணிகத்தின்வழி அளவில்லாத செல்வத்தை அவர் ஈட்டினார். அந்தச் செல்வத்தைத் தன்னை நாடிவந்தவர்களுக்கு வாரி வழங்கினார். அவர் காலத்தில் மழை பொய்த்துப் போனதால் பெரும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. ‘கார் கட்டிய பஞ்ச காலம்’ என்று அதனை வரலாற்றில் குறிக்கின்றனர். பஞ்சத்தின் விளைவால் செல்வந்தர்கள் பலரும் தானியத்தைப் பதுக்கத் தொடங்கினர். விலை உச்சத்தைத் தொட்டது. அது எந்த அளவிற்கென்றால் தங்கத்தின் மதிப்புக்குச் சமமாக நெல் விற்பனை செய்யப்படக் கூடிய அளவிற்கு உயர்ந்தது. இதனால் ஏழைகள் பலரும் பசியால் இறக்கும் நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலில் சீதக்காதி தன் கருவூலத்தில் உள்ள நெல்லை உணவாக்கிப் பசியென்று வருவோர் அனைவருக்கும் வழங்கிப் பலரின் உயிர் காத்தார். இந்நிகழ்ச்சியை மனதில் கொண்டே புலவர் ஒருவர்
ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்
கார்கட்டிய பஞ்சகாலத் திலேயோர் தட்டுவா ராமலே
யார்தட்டினும் தட்டு வாராமலே அன்ன தானத்திற்கு
மார்தட்டிய துரை வள்ளல் சீதக்காதி வரோதயனே.
என்று சீதக்காதியைப் புகழ்ந்து பாடியுள்ளார். இப்பாடலின்வழி சீதக்காதியின் வள்ளன்மையை மட்டுமன்றி அன்னம் வழங்கி உயிர்காத்த மனித நேயப் பண்பினையும் அறிந்துகொள்ள முடியும்.
ஈசா பள்ளிவாசல்
சீதக்காதியின் கொடைப் பண்பு சேதுபதி மன்னர்களைக் கவர்ந்துள்ளது. இதனால் அவர்கள் பிற மத நிறுவனங்களுக்குக் கொடை அளித்ததுபோல் பள்ளிவாசல்களுக்கும் கொடை அளித்துள்ளனர். சேதுபதி மன்னர்களின் செப்பேடுகள் இதனைப் பதிவு செய்துள்ளன.
இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுள் ஒருவரான குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி 14.01.1734 அன்று இராமநாதபுரம் நகரம் கோட்டைக் கடை வீதிப் பகுதியில் உள்ள ஈசா பள்ளிவாசலுக்கு வரும் ஆன்மீகப் பெருமக்களுக்கும் ஏழைகளுக்கும் பசியாற்றுவித்தலுக்காகக் ‘கிழவனேரி’ என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்துள்ளார். இந்த ஊர் முதுகளத்தூர் வட்டத்தில் உள்ளது.
கிழவனேரியில் உள்ள நன்செய், புன்செய், மாவிளை, மரவிளை, திட்டு, திடல், ஏந்தல், பிறவிடை, குடி, படை, பள்ளு, பறை, கிணறு, மரம் முதலிய பலவும் பள்ளிவாசல் உடைமையாகும் என அச்செப்பேடு பதிவு செய்துள்ளது. செப்பேட்டில் காணப்படும்,
‘தமிழனாலும் நாலுவருணத்திலே உள்ளபேரும், இசுலாமானவர்களும் பரிபாலனம் பண்ணின பேர்கள் கெங்கைக் கரையிலேயும் சேதுவிலேயும் மக்க மதினத்திலேயும் புண்ணியத் தலங்களி லேயும் அன்னதானமும் சொன்னதானமும் வெகு குடும்ப பிரதிட்டையள் பண்ணின பலத்தை அடைவாராகவும்’
என்னும் காப்புச் செய்யுள் புதுமையானதாக உள்ளது.
சேதுபதி மன்னரிடம் பள்ளிவாசலுக்கான கொடையைப் பெற்று அன்னதானங்கள் வழங்கிச் சிறப்பாக நிர்வாகம் செய்தவர் சர்தர் வேசலி மகன் சார்மூசா பாப்சா என்கிற தகவலையும் செப்பேட்டில் காணமுடிகிறது.
ஏர்வாடி பள்ளிவாசல்
குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி ஏர்வாடி பள்ளிவாசலுக்கு ‘மாயாகுளம்’ என்னும் ஊரை 01.11.1742 இல் கொடையாக அளித்ததையும் ’சேதுபதி மன்னர் செப்பேடுகள்’ பதிவு செய்துள்ளன. இச்செப்பேட்டில் ஏர்வாடி என்னும் ஊர்ப்பெயர் ‘ஏறுபாடி’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொடையைப் பெற்றுப் பள்ளிவாசலை நிருவகித்து அன்னதானமும் செய்தவர் முசாபர் நல்ல இபுறாகீம் என்பவராவார். சேதுபதி மன்னர் ஏர்வாடி பள்ளிவாசலுக்கு ‘மாயாகுளம்’ என்ற ஊரைக் கொடையாக அளித்த செயல் மீமிசல் வண்ணக்களஞ்சியப் புலவர் பாடிய ‘தீன்நெறி விளக்கம்’ என்னும் நூலில்,
தேறல்கொள் சரோருகப்பூந் திருவடித் தொழும்பாய் முன்னங்
கூறல்மான் மேலைமாய குளமெனும் கிராமம் தன்னை
மாறலில் லாத பானு மதியுள நாள்மட் டாகச்
சாறுவ பூமன் விட்டான் உருவமா நிய மதாக(பா.எ – 23)
என்பதாக ’சேதுபதி சந்ததி பெற்ற படல’த்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செப்பேட்டில் காணப்படும், ‘இந்த தர்மத்துக்கு யாதாமொரு இசுலாமானவர்கள் பரிபாலனம் பண்ணியவர்கள் கோடி அடிமை கொண்டு உரிமைக்கு விட்ட பலனும் கோடி ‘கச்சு’ செய்த பலனும் அடைவராகவும்’ என்கிற காப்புரை மிக முக்கியமான தகவல் ஒன்றைக் காட்டி நிற்கின்றது. நபிகள் நாயகம் அடிமைகளை விலைக்கு வாங்கி விடுதலை செய்த வரலாற்றையும் தன் தோழர்களை அவ்வாறே செய்யக் கூறிய நிகழ்ச்சியையும் இக்காப்புரை காட்டி நிற்கின்றது. ’ஹஜ்’ செய்தலைக் ’கச்சு’ என்கிற சொல்லால் இச்செப்பேடு குறித்துள்ளதும் இங்கு நோக்கத்தக்கது.
அன்னதானம் செய்வதற்கும் மராமத்துப் பணிகள் செய்வதற்கும் நிர்வாகப் பணிகள் செய்வதற்கும் ஏற்ப அளிக்கப்பட்ட மாயாகுளம் 50 கலம் நெல் விதைக்கக் கூடிய நன்செய்யும் 4 கலத்து 3 கலம் விதைக்கக் கூடிய புன்செய்யும் அடங்கியது. இத்துடன் உத்தரகோச மங்கைக்கு அளிக்கப்பட்டிருந்த தட்டு, 32 அரைக்காணி, சதுர செவ்வல் மணக்காடும் பள்ளிவாசலுக்கு அளிக்கப்பட்டன. உப்பளம், சந்தை வரிகளும் அளிக்கப்பட்டன என்கிற தகவலும் இச்செப்பேட்டில் இடம் பெற்றுள்ளது.
மராட்டிய மன்னர் ஆவணத்தில் அன்னதானத் தகவல்
தஞ்சையில் வாழ்ந்த இஸ்லாமியர்களுக்கு உதவும் வகையில் சேதுபதி மன்னர்களைப் போன்றே நாயக்க மன்னர்களும் மராட்டிய மன்னர்களும் பல கொடைகளை அளித்துள்ளனர். தஞ்சை வட்டாரத்தில் மட்டும் 42 பள்ளிவாசல்கள், தர்காக்கள் இருந்துள்ளன. அவற்றிற்குப் பல வகையில் மராட்டிய மன்னர்கள் உதவி புரிந்துள்ளனர்.
கி.பி. 1773இல் மல்லிம் சாகேப் என்பவர் கடைவீதியின் கோட்டையின் பக்கம் ஒரு மசூதி கட்டினார். அந்த மசூதியில் ஏழைகளுக்கும் பக்கீர்களுக்கும் உணவு வழங்கி வந்துள்ளார். இதனைக் கண்ட மன்னரும் அந்த மசூதியை மேலும் சிறப்பாக நடத்தி அன்னதானம் வழங்கும் வகையில் சாலிய மங்கலம் வட்டத்தில் கடதம்பட்டு என்ற ஊரில் 10229 குழிகளும் வல்லார்பட்டு என்ற ஊரில் 2419 குழிகளும் ஆக 12648 குழிகள் இனாமாக அளித்தார். அங்கு ஓர் ஊர் அமைத்து ’முகமதுபுரம்’ என்று பெயரிடப்பட்டது. இந்தத் தகவல்களைத் ’தஞ்சை மராட்டிய மன்னர்கள் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்’ என்னும் நூல் பதிவு செய்துள்ளது.
சேகு அலாவுதீன் சாயபு மஜீத் தர்கா
ஈரோடு மாவட்டம் ஈரோடு நகரக் காவிரிக் கரையில் உள்ள சேகு அலாவுதீன் சாயபு மஜீத் தர்கா நுழைவாயில் வலப்புறம் ஒரு குத்துக்கல் நடப்பட்டுள்ளது. அதில் உள்ள கல்வெட்டில் மைசூர் மன்னன் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் காலத்தில் ஈரோடு கோட்டை அதிகாரியாக இருந்த ரங்கய்ய நாத திம்மராசய்யன் என்பவரும் நான்கு அதிகாரிகளும் காவிரிக்கரை சேகு அலாவுதீன் தர்காவிற்கு வரும் அரதேசி, பரதேசி, பக்கீர்களுக்கு நாள்தோறும் அன்னமிடவும் அவர்களுக்கு ஆடை கொடுக்கவும் காலிங்கராயன் பாசன நன்செய் நிலத்தில் 4 மா நிலம் கொடையாகக் கொடுத்தனர். கல்லும் காவிரியும் சந்திரர் சூரியர் நட்சத்திரங்கள் உள்ளவரை இந்தத் தர்மம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்கிற விருப்பத்தையும் அதில் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கல்வெட்டுச் செய்தி குறிக்கும் நாள் 12.06.1761ஆகும். இது ஹைதர் அலி முழு அதிகாரத்தைப் பெற்ற ஆண்டாகும். ஆகவே அவருடைய ஆணையின்கீழ் இந்த அன்னதானம் வழங்கக் கூடிய வகையில் தர்காவிற்கு இக்கொடை அவரால் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதாக ஊகித்தறிய முடிகிறது.
திண்டுக்கல் பேகம்பூர் பள்ளிவாசல் வரலாறு
ஹைதர் அலியின் தங்கையான ஹஜ்ரத் பேகம் சாகிபா அவர்களுக்கு, நந்தன வருடம் ஆனி மாதம் 13ஆம் நாள் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஏழாம் நாள் ஹஜ்ரத் பேகம்(1772) காலமானார். அவரை அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி நன்செய், புன்செய் நிலங்கள் அதற்கு மானியமாக வழங்கப்பட்டன.

இந்தப் பள்ளிவாசலில் தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இப்பள்ளிவாசலில் நாள்தோறும் பக்கிரிகள், வழிப்போக்கர்கள் என வருகிற பேர்களுக்கு சோறு வழங்கப்பட்டு வந்துள்ளது என்கிற தகவல் தமிழ்நாடு அரசு கீழ்த்திசை சுவடி நூலத்தில் உள்ள சுவடி மூலம் (எண். ஆர். 8275; டி. 3021) அறியமுடிகிறது.
அம்மாபாளையம் தர்கா
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் என்ற ஊரின் தெருவில் நடப்பட்டுள்ள ஒரு கல் செப்பேட்டின் நகல் என்று எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. 1759 – 1761 இல் அதிகாரத்திற்கு வந்த ஹைதர் அலி மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையாரின் காரிய கர்த்தராக இருந்தாலும் 1759ஆம் ஆண்டிலேயே தனியாகக் கொடை கொடுக்கும் உரிமையும் பெற்றிருந்தார். அவர் 1759இல் அம்மாபாளையத்தில் உள்ள அகாவல்ல சாயபு தர்காவுக்குப் பராமரிப்புச் செலவு, நிர்வாகச் செலவு, பக்கீர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உணவு அளிக்கவும் அம்மாபாளையத்தில் உள்ள சில ஊர்களைக் கொடையாகக் கொடுத்துள்ளார். மேலும் மைசூர் அரண்மனைக் கருவூலத்திலிருந்தும் இதற்குரிய பணம் கொடுக்கப்பட்டதாக இந்தக்கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.
இதே ஆண்டு ஹைதர் அலி பெங்களூரின் அருகில் உள்ள பிங்கிபுரம், சென்னபட்டணம் அருகில் உள்ள மோஹெ ஹள்ளி ஆகிய ஊர்களில் உள்ள தர்காக்களில் பக்கீர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் அன்னதான தர்மம் செய்யும் வகையில் கொடைகள் கொடுத்துள்ளார் என்னும் செய்தியும் அச்செப்பேட்டில் காணப்படுகிறது.
இவ்வகையில் பள்ளிவாசல்கள், தர்காக்கள் இறைச்சிந்தனையை மேம்படுத்தும் இடங்களாகவும் தொழுகை செய்யும் இடங்களாகவும் மட்டுமல்லாமல் வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், பக்கீர்களுக்கும் பசியாற்றும் அற மடமாகவும் இருந்துள்ளன என்பதனை வரலாற்று ஆவணப் பதிவுகளின்வழி அறிய முடிகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் தற்காலத்திலும் இயற்கைப் பேரிடர்கள் நிகழும் காலங்களில் எல்லாருக்கும் முன்பாக முஸ்லிம்கள் முன்வந்து தங்கள் பள்ளிவாசல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடம்தந்து உணவு வழங்கிப் பிற உதவிகளும் செய்யும் பண்பாட்டினைக் காணமுடிகிறது. பள்ளிவாசல்களின் இத்தகைய செயல்பாடுகள் மதத் தளங்கள் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றன என்று கூறலாம்.
(கட்டுரைக்குத் துணை நின்ற நூல்:
தமிழக வரலாற்று இஸ்லாமிய ஆவணங்கள், புலவர் செ. இராசு, கே.கே.எஸ்.கே. கல்வி அறக்கட்டளை, ஈரோடு)
Leave a comment