பாடநூல் பயிற்றுவிக்கும் பண்பாட்டுக்கூறுகள்

வே. அமிர்தம்

முன்னுரை:

ஒரு தலைமுறை மக்கள் தங்களது அடுத்து தலைமுறையினருக்கு, தாம் கற்று உனார்ந்து வழங்கும் நடத்தை முறையின் தொகுப்பு பண்பாடு ஆகும். இப்பண்பாடு அறிவு, கலை, நீதி, நம்பிக்கைகள், மதிப்புகள், மொழி, கலாச்சாரம், ஒழுக்கம், நாகரிகம், வழிகாட்டுதல், சட்டம், சம்பிரதாயங்கள், பாரம்பரியம், விளையாட்டு, விருந்தோம்பல், இன்னபிற ஆற்றல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமை ஆகும். இப்பண்பாட்டின் பிரதிபிம்பங்களாகத் தொன்னெடுங்காலம் தொட்டு இன்று வரை நமக்கு பரிமளிக்கக் கூடியனவாகத் தமிழ் இலக்கியங்கள் விளங்குகின்றன “பயிற்றுப் பலகல்வி தந்து – இந்தபாரை உயர்த்திட வேண்டும்” என்ற பாரதியின் கனவை நனவாக்கவல்ல சமுதாயம் உருவாக தரமான மொழிக் கல்வி வேண்டும். கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டில் காலந்தோறும் மக்களின் தேவைகளுக்கு ஏற்பக் கற்றலும் கற்பித்தலும் பல்வேறு பரிபாணங்களைப் பெற்று வளர்த்து வந்துள்ளன. பண்டையத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை ‘ஓதற்பிரிவு’ (தொல்:அகத்:25) எனக் குறிப்பதோடு தொல்காப்பியத்தின் எண்வகை மெய்ப்பாடுகளில் கல்வியின் பொருட்டு ஒருவருக்கு, ‘பெருமிதம்’ தோன்றும் (தொல்.மெய்:9, ஆண்டு) என்றும் கூறுகிறது. திருமூலரது திருமந்திரம், ‘துணையாய் வருவது தூய நற்கல்வி” வாழ்க்கை முழுவதும் துணையாக வரும் கல்வி தனைப் பெருமைப்படுத்துகிறது. தொல்காப்பியமும் நன்னூலும் ஆசிரியர்; மாணவர்களுக்கு உரிய இலக்கணங்களையும், பாடநூல் பெறக்கூடிய அழகு; குற்றம் பற்றியும் வகை, தொகை, விரி, உத்தி உள்ளிட்ட பண்புகளென ஒவ்வொன்றுக்கும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” –

எனும் 6 ஆம் வகுப்பின் குறள் வழி அனைத்து உயிர்களும் ஒன்றாகவே எண்ணி மாணவர் கற்றிடவும் இயற்கையின் இன்றியமையாமையும் அதனைப் பயன்படுத்தும் செயல்பாடுகளும் கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட கூறுகளும் கட்டுரைக் களமாகிறது.

பண்பாடு :

“பண்புடையார்ப் பட்டுண்டு உலகமது வின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.”குறள் 99

பண்பாட்டின் வலிமையறிந்த வள்ளுவர் பண்புடைமை எனும் தலைப்பில் அதிகாரம் ஆக்கினார். இதனை

“எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.”குறள் 62

எழுபிறப்பிலும் நன்மை பயக்கப் பெற்ற மக்களை தாய், தந்தையர் நற்பண்பு உடையவனாக வளர்த்தலில் இன்றியமையாமையை உணர்த்துகிறார். இப்பண்பாடு பயிற்றுவிக்கும் வல்லுநர்கள் மாதா, பிதா, குரு, இவ்வரிசை ஆசான்கள் நாட்டை நிர்ணயிக்கும் சிற்பிகளான மாணவர்களுக்குச் சரியான பயிற்சியளிக்க வேண்டும். இப்பயிற்சிக்கான ஊன்று கோலாகச் சமச்சீர்க்கல்வித் தமிழ்பாடநூவில் அமைந்துள்ள பண்பாட்டுச்செய்திகள் தொகுப்பாகத் தொடர்ந்தமைகிறது.

பண்பாட்டுக் கல்வி:

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக” குறள் 391

கல்வி என்பது நூல்களைக் கற்பதோடு அவற்றின்படி நடத்தலையும் குறிப்பது. மனிதன் மனிதனாய் வாழ்வதற்கு கல்விதேவை. இக்கல்வி மூடநம்பிக்கைகளை அகற்றி அறிவுப் பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலை மாணவரிடம் வளர்க்கிறது. பண்பாடு என்பது மக்கள் கற்றுணர்ந்த நடத்தை முறையின் தொகுப்பு. சங்ககாலம் தொட்டு இன்று வரை கலை, விளையாட்டு, தொழில், மனித நேயம், ஒழுக்கம் உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டுக் கூறுகள் உள்ளன. பண்பாட்டின் பொதுக்கூறுகளாகப் பாடநூல்களில் கல்வி, அறிவியல், உடலுறுதி, உழைப்பின் உயர்வு, தொழில்கள், சுற்றுப்புற தூய்மை, மரம் வளர்ப்பு, மக்கள்தொகை கல்வி, பெண்ணின்பெருமை, பண்டிகைகள், ஒருமைப்பாடு, நாட்டுப்பற்று, விளையாட்டு, கடிதம் எழுதல், கலைகள், சாலைவிதிகள், கூட்டுறவு, செய்தித்தாள் சமுதாய நிறுவனங்கள், சமுதாய நண்பர்கள், சமச்சீர் உணவு உள்ளிட்ட பல பொருண்மைகளைக் கொண்டு பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

பண்பாடுகல்வி:

கற்பவர் மனதில் ஆழப்புதைந்துள்ள திறன்களைத் தோண்டி வெளிக்கொணர்வதால் ‘கல்லுதல்’ என்ற பொருளின் அடிப்படையில் கல்வி வழங்கல் ஆயிற்று, கல்வி பண்பாட்டின் மூலம் விதையாகத் தோன்றி சமூகத்தை ஆலமரமாகத் தழைக்கச் செய்கிறது. இக்கல்வியை குழந்தை தம் குடும்பத்திலிருந்து ‘போலச்செய்தல்’ எனும் பாங்கில் வீட்டு உறுப்பினரிடமே கற்றுத்தேர்கிறது மடியில் அமர்ந்து விளையாடும் குழந்தையிடம் தாய்சொல்லும் பாட்டாக, “கை வீசம்மா கை வீசம்மா பள்ளிக்குப் போகலாம் கை வீசு பாடம் படிக்கலாம் கை வீசு” அமைகிறது. கல்வி கற்கும் விருப்பத்தை விதையை மனத்தில் விதைக்க இப்பாடல் முதல் வகுப்பில் இடம் பெற்றுள்ளது. மேலும் இதே கருத்தை குழந்தைக்கவிஞர் அழவல்ளியப்பாவின், “துள்ளித் துள்ளி நாமும்பள்ளி செல்வோம் வாராய்” எனும் பாடலடியுடன் ‘ஓதும்செயல்’, ‘கல்விக்கற்கண்டு’, ‘வெல்லத்தமிழ் பயில்” எனும் முத்தான வாசகங்களும் ஆடல்பாடலடிகளாய் இடம் பெற்றுள்ளன 2 ஆம் வகுப்பில், “கற்பதெதுவும் கடினமென்று எங்களிடம் சொல்லாதே” எனச்சிறுவர்கள் பாடும் வசையிலமைந்த பாடவோடு பாரதியின் கல்வி பயில்வதற்கான காலமான காலை எழுந்த உடன்படிப்பு” எனும்வரிகளுடன் வைகறைச் துயில் எழு’, ‘வித்தை விரும்பு’, ‘நூல் பலகல், ‘இளமையில் கல்” எனும் வாசகங்களுடன் ‘கைப்பொருள்’ தன்னில் மெய்ப் பொருள்’ கல்வி’ என்ற ஒளவை மொழியுடன் பாடம் அமைக்கப்பட்டுள்ளது.

‘இசையோடு பள்ளி செல்வோம்’ எனத்தொடங்கும் 3 ஆம் வகுப்புதனில் படிப்பு தான் ஒருவன் உயர வழி எனக்கல்விக்கண் திறந்த காமராசர் கருத்தோடு புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக்குங்கள் எனும் அப்துல் கலாம் வழி மொழியோடு கல்வியின் இன்றியமையாமையைத் திருக்குறள் கதைளோடு இனிதே இயம்பப் பட்டுள்ளது. கல்லிப் பரிணாமத்தைத் ‘தமிழகக்கல்வி வரலாறு’ எனும் தலைப்பிட்டு 11 ஆம் வகுப்பில் தனிமனிதனைச் சமுதாயத்துக்கு ஏற்றவனாக மாற்றுதல் என்னும் சீரியபணியில் தமிழகம் கடந்து வந்த பாதை அப்படியே படம்பிடித்துக் காட்டப் பட்டுள்ளது. “பள்ளி” என்ற சொல்லுக்கும் படுக்கை என்று பொருள் படுக்கைகளின் மீது மாணவர்கள் அமர்ந்து கற்றதனால் கல்விக்கூடம், பள்ளிக்கூடம் என அழைக்கப் படலாயிற்று. பள்ளி என்னும் சொல் சமண, பௌத்த சமயங்களின்கொடையாகும். கற்ற மாணவர்களை முறையே சிறுவன், மாணவன், கேட்போன் என வகைப்படுத்தினர் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்கள் வழியில் கணக்காயர் என்போர் எழுத்தும், இலக்கியமும், உரிச்சொல்லும் (நிகண்டு), கணக்கும், ஆசிரியர் எண்போர் இலக்கணத்தையும், பேரிலக்கியங்களையும், குரவர் என்போர் சமயநூலும்;, தத்துவ நூலும் கற்பிப்போர் என மூவகைப் பிரிவினராக இருந்துள்ளனர். தமிழகத்தில் அன்று நிலவிய கல்விமுறை சிறப்பாகப் பலர்கூடி விவாதிக்கும் சங்கம், கலைகள். கல்வி போன்றவற்றைக் கற்பிக்கும் இடம் கற்ற வித்தைகளை அரங்கேற்றும் மன்றம், செயல் களைச் சீர்தூக்கிப் பார்க்கும் சான்றோர் அவை, இதுதவிர அறங்கூர் அவையம், சமணப்பள்ளி, பௌத்தப்பள்ளி போன்ற அமைப்புகள் கற்பித்தல் பணியை செய்து வந்துள்ளன. மன்னராட்சிக் காலத்தில் பயிற்சிகளைத் தருவதும் முக்கியமான கல்வியாகக் கருதப் பட்டது. 12ஆம் வகுப்புப் பாடமாக, பண்டைக் காலத்துப் பள்ளிக் கூடங்கள்’ என்ற தலைப்பு தமிழ் தாத்தா உ.வே சாமிநாதர் அவர்தம் சொற்பொழிவு இங்கு அமைக்கப்பட்டுள்ளது.இதில் மன்றங்கள் பள்ளிகள், மித்தியாரம், மையாடல், கையெழுத்து, எழுத்தின் வடிவம், மனனப்பயிற்சி, சுவடிகள், எழுத்தாணிகள், ஏடெழுதும் வழக்கம், அன்பினால் அடக்குதல், வாதம்புரிதல், சாந்துணையும் கற்றல், ஒதற்பிரிவு என்னும் உட்தலைப்புகள் பாடப்பகுதியாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

கற்றல் திறன்:

படிக்கும் மாணவர் கூர்மையான அறிவு பெற்று திகழ படிக்கக்கூடிய விதம் பழமொழியின் பண்பான விளக்கமாக,”ஆத்துவ போட்டாலும் அளந்து போடணும்” என்பதன் அழகிய பொருளை அகத்திலே (மனத்திலே ] போட்டலும் அறிந்து போடணும். எந்த செய்தியும் புரியாமல் மனனம் செய்யக்கூடாது எனத் தெளிவாக விளக்கிய ஆறாம் வகுப்புப் பாடம் மிக அருமை.

“கல்வியைக் கற்றிட வேண்டும் – அதைக்…

……கணக்கென நெஞ்சில் கூடும்” என்ற பாடல் வரிகள் மாணவன் எண்(நூல்) பயில வேண்டிய முறைமை கட்டப்பட்டுள்ளது. கற்பது அடிப்படைத்திறன்களில் ஒன்றான பேசுதலின்போது ஏற்ற இறக்கத்தால் பொருள் வேறுபடும். தன்மையைக் களைய ஏழாம் வகுப்பில் நன்னூல் அடிகளாக

“எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்

 திரியும் தத்தமில் சிறிதளஊ வாகும்.” இலக்கணவிதி பொருத்தப்பட்டுள்ளது இதே வகுப்பில் செய்யுட் பகுதியாகத் தொல்காப்பிய சிறப்புப் பாயிரம், ‘வழக்கின் இலக்கணம் இழுக்கின்று அறிதல்…. எனத் தொடரும் பாடலில் மாணவன் பாடங்கேட்கும் நிலையில் ஒருமுறை, இருமுறை மும்முறை எனப் பாடங்கேட்கும் தன்மைக்கு ஏற்ப அறியாமை அகலும் என நச்சினார்க்கினியர் அவர்களால் திறம்பட விளக்கப்பட்டுள்ளது. இதே வகுப்பில், ஆசிரியரால் சர்வ வல்லமையிலும், பாதிப்பினை ஏற்படுத்த இயலும். இவரால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாதவை” என்ற ஹென்றி ஆடம்ஸ் கருத்து இங்கு சுட்டப்பட்டுள்ளது. இங்கனம் ஆசிரியரால் கற்பிக்கப்படும் கல்வி என்பது பள்ளி, கல்லூரியில் பட்டும் பெறப்படுவதன்று கல்வி கற்பவர் இதழ்களிலும் நடைமுறை அறிவைப் பெற்றுதுடன் அதற்கேற்ப வாழ்ந்தும் சாதித்துக்காட்டியவர் படிக்காதமேதை காமராஜர். இதழாளரான பாரதி ஆங்கிலேயரின் கெடுபிடிகளால் விடுதலை வேட்கையூட்டும் கருத்துக்கள் மக்களைச் சென்றடைந்தால் போதும் என்றெண்ணி இதழ்களில் தம் பெயர்மட்டுமின்றி இளசை, சுப்ரமணியன், சாவித்திரி உள்ளிட்ட பல புனைப் பெயர்களில் எழுதியுள்ளார். எழுத்தன்றிக் கருத்தை இயம்பும் கண்ணாடியாம் கருத்துப்படம் அறிமுகம் செய்துள்ளார்’ இதழாளர் பாரதி” என்பன 11 ஆம் வகுப்புப் பாடமாய் அமைக்கப்பட்டுள்ளது.

கல்விச் சிறப்பு:

செங்கோல் தூக்கும் மன்னரை விடச் சுவடி தூக்கும் புலவனே பெருமதிப்பிற்கு உரியோன் என்பதை ஒளவையின் வாக்காக, மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் ன்னனின் சுற்றோன் என்றும் பெருமதிப்பிறகுரியோன் என்று மூதுரை பாடமாகவும், பெருமதிப்புடை புலவன் செல்லும் நாடெல்லாம் தன்நாடு ஆகையால் அவனுக்கு வழிநடை உணவு எனக் கூறப்படும் ஆற்றுனா வேண்டுவது இல்’ என்ற ஔவையின் பழமொழி நானூறு மொழிகள் பாடப்பின் இணைப்பாக அமைக்கப்பட்டுள்ளது. “கற்வோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம்.” எனும் குமரகுருபரர் தம் வரிகள் சிகையலங்காரம் உள்ளிட்ட பிற அணிகலன்களால் வரும் அழகை விட கல்லியால்லரும் அழகே சிறந்தது எனும் பாடவொத்து கல்வியின் அழகுச்சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பெற்றோர் தம் குழந்தைகட்கு கொடுக்க வேண்டிய செல்வம் கல்வி,

“வெள்ளத்தால் அழியது வெந்தனல்

வேகாது வேந்த ராலும்

கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்

நிறைவன்றிக் குறைவு றாது

….உள்ள பொருள் உள்ளிருக்கப் புறத்தேயேர்

பொருள் தேடி உழல் கின் றீரே” தனிப்பாடல் திரட்டு வரிகள் 7 ஆம் வகுப்புப் பாடம் கல்வி எனும் அழியாச் செல்வச் சிறப்பைச் சுட்டுகிறது. “கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறை யாகும்.” “விஜயலெட்சுமி பண்டிட் அம்மையார் ஐ.நா.அவையின் முதல் பெண் தலைவர் “ஏடன்று கல்வி; சிலர் எழும் பேசும்…. …விளை வன்று கல்வி; அது வளர்ச்சி வாயில்” என்பது கல்வியாளர் குலோத்துங்கன் கூறும் கல்லி எனும் வளர்ச்சி வாயில் எட்டாம் வகுப்பு பாடநூலுள் இணைத்துக் கற்பிக்கப்படுகிறது.

பண்பாடுஇலக்கியம்:

“எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும்.

இலக்கணநூல் புதியதாக இயற்றுதலும் வேண்டும்.

தெளிவுறுத்தும் படங்களோடு சுவடி எலாம் செய்து

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.”

என 7 ஆம் வகுப்பு சுவடி (பாட நூல்) வழி தமிழை வளர்க்கும் பாவேந்தர். இலக்கியத் தமிழ் வளர்க்கும் பண்பாட்டின் விதை திருக்குறளும், தொல்காப்பியமும் என்றால் அது மிகையாகாது. இதனை வகுப்பிற்கேற்ற வகையில் கொடுப்பதும் கொள்வதும் என்ற அமைப்பில் ஔவையின் ஓரடிப் பாடல்கள் தொடங்கி வகுப்புவாரியாக சங்ககால நூல்களான பதினென்கீழ்க்கணக்கு, மேற்கணக்குக் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு தமிழிலக்கிய, இலக்கணங்களின் பாடல்வரிகள் பாடமாக்கப் பட்டுள்ளன. தமிழின் தொன்மை, இனிமை, இளமை, தாய்மை, செம்மை உள்ளிட்ட தன்மையால் தன்னேரின்றி ஒவ்வொரு வகுப்பின் பாடத்திற்கும் முதல் பாடலாகவும் முதன்மைப் பாடமாகவும் கூறும் பாவலர்கள், பன்மொழியாளர்கள், தமிழ் மீட்பாளர்கள் எனத் தற்காத்து வந்த மாந்தர்தம் அடையாளங்களும் தமிழ்மொழியின் பெருமை உணர்த்தும் பாடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் எளிய நடையில் இணைக்கப்பட்டுள்ளன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐந்திலக்கணமும் கற்கண்டு எனும் சொல்வடிவுடன் கட்டாயமாக இயலின் இறுதி பாடமாக இணைக்கப்பட்டுள்ளது. இயல்களின் வரிசையில் இன்பத்தமிழ், தமிழ்க்கும்பி, வளர்தமிழ், எங்கள்தமிழ், பேச்சு மொழியும் எழுத்து மொழியும் சொல்வடிகள், தமிழ்மொழி வாழ்த்து தமிழ் மொழி மரபு, தமிழ்வரிவடிவ வளர்ச்சி, சொற்பூங்கா, திராவிட மொழிக்குடும்பம், தமிழோவியம், தமிழ் மொழியின் நடை அழகியல் தன்னேரில்லாத தமிழ் எனும் தலைப்புகள் பாடத் தலைப்புகளாகக் கொண்டு பயிற்றுவிக்கப் படுகின்றன.

பண்பாடுமனிதநேயம்:

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார். மனிதன் தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ வேண்டும். அவ்வாறு வாழ்வதற்கு அருள், பொறுமை, பரிவு, நன்றி உணர்வு, இன்சொல் பேசுதல் போன்றவை தேவை. இதுவே மனிதநேயம் ஆகும். ஓர் ஊன் உண்ணியை ‘அன்பான சிங்கம்’ என்ற சொல்வடியால் ஒன்றாம் வகுப்பில் அறிமுகம் செய்து பிறகு உயிர்களிடத்து அன்புபேணும் பாடம் குழந்தைகளுக்கு பாடத்திட்டமாய் அறிமுகம் செய்யப்படுகிறது. 3 ஆம் வகுப்பில் நெகிழி உண்டு இறந்த பசுவிற்காக இரங்கி நெகிழியைத் தவிர்க்கச் சபதமெடுத்து இயற்கையைப் பேணும் மாணவர்கள் என்பது பாடநேர்த்தியின் உச்சம். பசுவின் கண்ணீருக்காகத் தன்மகனை தேர்காலிலிட்டுக் கொன்று, “இளவரசனே ஆயினும் குற்றம் குற்றமே!” என்று தண்டனை வழங்கி நீதியை நிலை நாட்டிய மனுநீதிச் சோழனது வரலாறு உரையாடலாக அமைந்த பாடம் மாணவர் மனத்தில் எளிதில் பதியும் வகையில் உள்ளது

‘சிறகின் ஓசை’ எனும் தலைப்பில் பறவைகளால் மனிதன் பெறும் நன்மைகள், மனிதனால் பறவைகள் பெறும் இடர்ப்பாடுகள். அதனை களையும் விதம், பறவை மனிதன் டாக்டர் சலீம் அலி பற்றிய உயர்வான செய்திகளின் தொகுப்பானது இங்கே பாடமாக அமைக்கப்பட்டுள்ளது. உணவுச்சங்கிலி உடையாமல் சூழ்நிலையை பாதுகாக்கும் பறவைகள் பற்றிய பாசம் பாரதியின் பாப்பாப் பாட்டு, “காக்கைக் குருவி எங்கள் சாதி” என்பதை நினைவு கூருகிறது. எட்வின் அர்ணால்டின் The Light of Asia எனும் ஆசியஜோதியில் (மொழி பெயர்ப்பு) கவிமணி தம் அடிகளாக யாகத்தில் பலியிடப்பட இருந்த உயிர்களுக்கு மாற்றாகத் தம்முயிர் கொடுக்கத் துணிந்த மாமனிதர் புத்தரின் நேயம் 6ஆம் வகுப்புப் பாடமாகப் பாடநூலில் அமைக்கப்பட்டுள்ளது. இதே வகுப்பில் மனிதநேயம் எனத் தலைப்பிட்ட பாடத்தில் மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை,

“தமக்கென முயலா நோன்றாள்-பிறர்க்கென

முயலுநர் உண்மையானே” (புறம்- 182)

என்ற அடிகளுடன் விளக்கப்பட்டுள்ளது. இப்பாடத்தில் வள்ளலாரின் மனித நேயத்திற்கு சான்றாக அவரால் வடலூரில் தொடங்கிவைக்கப்பட்ட சத்திய தருமச்சாலையின் நெருப்பு இன்றுவரை அணையாத்தீயாக எரிந்து வரும் சிறப்பு உரைக்கப்பட்டுள்ளது. மக்களுக்குச் செய்யும் பணியே இறைவனுக்குச் செய்யும் பணியெனக் கொண்டு வாழ்ந்த அன்னை தெரேசா பெற்ற அமைதிக்கான நோபல் பரிசு சிறப்பு விளக்கப்பட்டுள்ளது. “குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தை குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது.” எனும் கைலாஷ் சத்யார்த்தி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் ஆவர். “வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனத்தில் நீ வாழும் வரை” என்றார் அன்னை தெரேசா. இவ்வரிகள் கூறுவதைப் போல் இறப்புக்குப் பின் மற்றவர் மனதில் மட்டுமல்ல உடலிலும் வாழ முடியும் என்பதை விளக்கும் உறுப்பு தானம் சிறப்பு இளம் சிறார்க்கும் வலியுறுத்தும் வகையில் ‘முடிவில் ஒரு தொடக்கம்’ பாடம் இதயம் கொடுத்து உலகோர் இதயம் வென்ற ஹிதேந்திரனின் மனித நேயச் சிறப்பினை முத்தாய்ப்பாக மொழிந்துள்ளது.

8ஆம் வகுப்பில் அமெரிக்க பூஜே சவுண்ட என்ற இடத்தில் வாழ்ந்து வரும் சுருவாமிஷ் பழங்குடியின தலைவனான ‘சியாட்டல்’ இயற்கை வளங்கள் சிதையாமல் பாதுகாக்க அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதம் மாணவர் நெஞ்சை கசிந்துருகச் செய்த இயற்கையின் பாதுகாப்பு பற்றிய பாடமாக அமைக்கப் பட்டுள்ளது. மணிமேகலை கூறும் உயிர்களிடத்து காட்ட வேண்டிய அன்பான தேவைகளாக 9 ஆம் வகுப்பில் “மண்ணுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உரைகளும்” (மணிமேகலை 25,229:270) பாடமாய் ஆக்கப்பட்டுள்ளது. ‘ஏதிலிக்குருவிகள்’ எனும் தலைப்பில் அழிந்து வரும் சிட்டுக்குருவிகள் பற்றிய கவிதை மார்ச் 20 உலகச்சிட்டுக் குருவிகள் நாள் பற்றிய செய்தி 11 ஆம் வகுப்பு பாடமாகி உள்ளது. திருமுருகன் பள்ளு கூறும் “காரிதொடங்கி கருமறை யான் ஈறாக” எனும் பாடலில் பண்டைக்காலம் வாழ்ந்து தற்போது அழிந்து வரும் மாடுகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. 7 ஆம் வகுப்பில், “சிங்கம் புலி கரடி சிறுத்தை ……. இயற்கை விடுதியில!” சுரதா இயற்கை எனும் விடுதியில் எல்லா உயிர்களும் ஒன்றென உலவும் பாங்கு உரைக்கப்பட்டுள்ளது. இதே வகுப்பில் ‘விலங்கு உலகம்’ எனும் பாடமும், இந்தியவனமகன்’ ‘ஜாதவ் பயேய்’ காடு வளர்த்த விதம், காட்டின் மூலவர் எனப்படும் யானையைப் பாடத்தலைப்பாக்கி யானை டாக்டர் எனும் பாடமும் அமைக்கப்பட்டுள்ளது. கம்பனின் காவியம் எல்லைகள் கடந்த நேயப்பண்பின் படிமமாகப் படைத்திருப்பது உயர்ச்சி. வேடன் (குகன்), பறவை (சடாயு), எளிய முதியவன் (சவரி), வாணரம் (சுக்ரீவன்), எதிரியின் தம்பி (விடணன்) என இராமன் காட்டும் வேலிகள் இல்லா அன்பு சுட்டப்படுகிறது. இதனை விளக்கும் 12 ஆம் வகுப்பு பாடத்தின் செய்யுளாக குகப்படலம், சடாயு உயிர்நீத்த படலம். சவரி பிறப்பு நீங்கு படலம், நட்பு கோட் படலம், வீடணன் அடைக்கலப் படலம் பாடல்கள் மூலம் எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிராகக் கொண்டு மனிதநேயம் வளர்க்கும் பாடத்திட்டத்தைக் காண முடிகிறது.

பண்பாடு, கலைகள்:

கண்ணுக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சியளித்து நற்பண்புகளை வளர்ப்பது கலைகளின் இயல்பாகும். ஆயகலைகள் அறுபத்து நான்கும் தொன்மையான பண்பாட்டுக்கூறுகளையும் எடுத்துக் காட்டுகின்றன. நாட்டுப்புற கைவினைக் கலைகளாக பானைவனைதல், சுடுமண் சிற்பங்கள், மூங்கில்கலை, கோரைப்பாய், பனையோலை, பிரம்புக்கலை என்பன பற்றிய படங்களுடன் செய்முறை விளக்கமும் 8ஆம் நிலைப் பாடமாக்கப்பட்டுள்ளன. மக்கள் வாழ்வியல் நிகழ்வு பண்பாட்டுப் பதிவுகளாகத் திகழும் நிகழ்கலைகள் கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், ஒப்பனை, உரையாடல் வழி அமையும் செய்திகள் 10 ஆம் வகுப்பு பயிற்றுப் பாடமாக்கப் பட்டுள்ளது. மக்கள் உள்ளத்தெழும் உணர்ச்சி குரல்வழியாக அல்லது செயற்கைக் கருவி ஒன்றின வழியாக வெளிப்படுத்தக்கூடிய கலையாக இசை என்றாகிறது. இவ்விசை குரல்வழியாக மட்டுமின்றி தோல்கருவிகள் முழவு, முரசு, நரம்புக் கருவிகள் யாழ், வீணை, குழல், கஞ்சக் கருவிகள் சலரா சேகண்டி போன்ற தமிழர்தம் இசைத்தமிழ்ப்பண்பாடு மாணவரிடம் வளர்க்க, ‘தமிழர் இசைக் கருவிகள்’ எனும் பாடமாக 8 ஆம் வகுப்பில் வைக்கப்பட்டுள்ளது.

“பேசும் ஓவியங்கள்” என்ற தலைப்பில் 7 ஆம் வகுப்பில் ஒரு கருத்தைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ஓர் ஓவியத்தாள் மிகநுட்பமாகப் புரியவைக்க முடியும் என்ற திண்மையில் கற்கும்களம் உருவாக்கப் பட்டுள்ளது. இவ்வோவியங்கள் குகை, சுவர், துணி, ஓலைச்சுவடி, செப்பேடு, தந்தம், கண்ணாடி, தாள், கருத்துப்படம், கேலிச்சித்திரம், நவீன ஒவியம் எனக்காலத்திற்கு ஏற்றவாறு தீட்டப்பட்டு வந்துள்ளன. “சிற்பக்கலை” என்ற தலைப்பில் 9 ஆம் வகுப்புப்பாடமாக வடிக்கப்பட்டுள்ளது.

“கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்

மண்ணும் சதையும் தந்தமும் வண்ணமும்

கண்ட சருக்கரையையும் மெழுகும் என்றிவ

பத்தே சிற்பத் தொழிற்கு உறுப் பாவன”

என சிற்பம் உருவாக்க பயன்படும் பொருட்களை திவாகர நிகண்டு குறிப்பிடுகிறது. சிற்பங்கள் முழு உருவச் சிற்பங்கள், முன்பகுதி மட்டும் அமைந்த புடைப்புச் சிற்பங்கள் என இருவகையில் அமைக்கப்படுக்கின்றன். தொல்காப்பியத்தில் கூறப்படும் நடுகல்லில் போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரனின் உருவம் பொரிக்கப் பெறும் என்பது தமிழரின் தொடக்க கால சிற்பத்திற்கு சான்றாகும். சிற்பங்களை பல்லவர்கள் (பஞ்ச பாண்டவ இரதங்கள்), பாண்டியர்கள் (பிள்ளையார்பட்டி), சோழர்கள்  (தாராசுரம்) ஐராவதம்), நாயக்கர்கள் (மதுரை மீனாட்சி அம்மன்) போன்ற மன்னர்காலச் சிற்பங்குகளும் பௌத்த சமணச் சிற்பங்களாகத் தமிழகம் முழுவதும் காணமுடிகிறது. தற்போது சிற்பம் குறித்து, “சிற்பச் செந்நூல்” என்ற நூலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கரிகால்சோழன் காலத்து வலுவான கட்டுமானத் தொழில் நுட்பத்தால் கட்டப்பட்ட கல்லணை கலைப்பண்பாட்டின் ஓர் உன்னத வளர்ச்சி ஆகும். பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட கல்லணையை ஆய்வுசெய்தவர் நீர்ப்பாசனத் தந்தையென அறியப்பட்ட “சர் ஆர்தர் காட்டன்” கல்லணையில் கட்டுமானப் பிணைப்பு, அடித்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள குமிழித்தூம்பு (தூர்வாரும் அவசியமின்றி செய்வது) உள்ளிட்ட பழந்தமிழரின் அணைக்கட்டும் திறனை மெச்சும் வகை 9 ஆம் வகுப்பின் கற்பிக்கும் களமாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாய்க் காட்சியளிக்கும் தஞ்சைப் பெரியகோவிலின் கட்டடக்கலை நுட்பம் “காலத்தை வென்ற கலை” என்ற பெயரில் 11 ஆம் வகுப்புப் பாடமாய் உள்ளது. இந்தியக் கட்டடக் கலைகளான நாகரம், வேசரம், திராவிடம் என்ற வகைகளும் இக்கோயில் திராவிடத்தால் உருவாக்கப்பட்டது. இக்கோவிலினை 1886 இல் ஓரறிஞர் ஆராய்ந்து இராஜராஜனால் கட்டப்பட்டது என்று அறிவித்தார். இக்கோயிலின் சிறப்பாக அகநாழிகை (கருவறை) மேலமைந்த தட்சிணமேரு (விமானம்) 216 அடி உயரமுடையது. ஒற்றைக் கல்லாலான நந்தி, ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் உள்ளிட்ட சிறப்புகள் சுட்டப்பட்டுள்ளன.

பண்பாடுதேசிய ஒருமைப்பாடு

“ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்று 5 ஆம் நூற்றாண்டிலே அறிவித்தார் திருமூலர். இதனை ஏற்கும் வகையில் இந்தியாவில் சமயசார்பற்ற அரசு செயல்படுகிறது. தமிழக அளவில் (மாநில) பொதுவான கூறுகளாக மாணவர் அறியும் வகையில் 4 ஆம் நிலையில் தமிழக அரசுச் சின்னங்கள் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அவை, சின்னம் – வில்லிப்புத்தூர் கோவில் கோபுரம், பறவை- மரகதப்புறா, பாடல்- நீராடுங்கடலுடுத்த (தமிழ்த்தாய் வாழ்த்து), மலர் – செங்காந்தள், நடனம் – பரதநாட்டியம், மரம் – பனைமரம், விலங்கு – வரையாடு, விளையாட்டு- கபடி ஆகியனவாகும். மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகப் பார்க்கப்பட வேண்டும் என்று ‘சீருடை’ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கருத்து கல்லியிலும் அமைய வேண்டுமெனச் சமச்சீர்க்கல்வித்திட்டம் உள்ளிட்ட பல செயல்பாடுகளை அரசு மேற்கொண்டு உள்ளது.

பண்பாடுஉடல்நலம் பேணுதல்:

சுவரின்றிச் சித்திரம் ஏது? பண்பாடு வளர்க்கும் “மாலை முழுவதும் விளையாட்டு “என பாரதியும்

காலை மாலை உலாவி நிதம்

காற்று வாங்கி வருவோரின்

காலைத் தொட்டுக் கும்பிட்டுக்

காலன் ஓடிப் போவானே!” எனும் கவிமணியின் பாடலும் உடலினை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியம் 8 ஆம் வகுப்புப் பாடமாய்ச் சேர்க்கப்பட்டுள்ளது. ‘தமிழர் மருத்துவம்’ எனும் தலைப்பில் வருமுன் காக்கும் வாழ்க்கைக்கு சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றின் இன்றியமையாமையுடன் அதனை பேண வேண்டியதன் அவசியம் பாடமாக்கப் பட்டுள்ளது.

“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” திருமூலரின் வரிகளுடன் மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட பல செய்திகள் இடம்பெற்று உள்ளன, பிற்கால ஔவையார்தம் குறளில் வாயுதாரணை எனும் அதிகாரத்தில்,

“வாயு ஒழுக்கம் அறிந்து செ றிந்தடக்கில்

ஆயிள் பெருக்கம் உண்டாம்”, என்பனவும் 10 ஆம் வகுப்பில் குறிப்பிடப் பட்டுள்ளன. உடல் பேணுதலில் ஒருவகையாக விளையாட்டுகள், மல்யுத்தம், ஏறுதழுவுதல், குதிரை ஏற்றம் உள்ளிட்டன பண்டைத் தமிழர் பின்பற்றி உள்ளனர். இதில் ஏறுதழுவுதல் தன்மையை 11 ஆம் வகுப்பு ‘வாடிவாசல்’ குறுநாவலில் சி.சு.செல்லப்பா படம் பிடித்துக் காட்டுகிறார். கலித்தொகை கூறும் ஏறுதழுவலாக,

“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்

புல்லாளே, ஆயமகள்.”(கலி 103:63,64) மகளிர் மாண்பும் இடம் பெறுகிறது.

பண்பாடுவிழாக்கள்:

பண்பாட்டின் ஒரு பகுதியான விழாக்கள் தேசிய விழாக்கள், சமயவிழாக்கள் என இருவகை உண்டு. 5 ஆம் வகுப்பில் ‘உழவுப்பொங்கல்’ எனும் தலைப்பில் நாமக்கல் கவிஞரின் பாடலும், இயற்கையை பேணினால் மட்டுமே வாழமுடியும் என்று கூறும் விதைத்திருவிழா, வனவிலங்கு வாரவிழா, சுதந்திரதின விழா உள்ளிட்ட விழாக்கள் கவிதை வடிவில் பாடமாக்கப்பட்டுள்ளன.

பண்பாடுவிருந்தோம்பல்

சுற்றத்தாரோடு, ‘மருந்தே ஆயினும் விருந்தொடு உண்’ என்ற பிணைப்பு நம் பண்பாட்டுக் கூற்றுகளுள் ஒன்றாகும். தமிழர் விருந்தோம்பலின் மாண்பை உணர்ந்து பெருமிதத்துடன் பின்பற்றுதல். “அல்லில் ஆயினும் விருந்து வரின்உவக்கும்” (நற்றிணை 142) இவ்வாறு விருந்து போற்றும் சிறப்பு கம்பராமாயணம், கலிங்கத்துப் பரணி, புறம், நற்றிணை, ஆற்றுப்படை, சிலப்பதிகாரம், குறுந்தொகை உள்ளிட்ட நூல்களின் பாடல்கள் பாடமாக இடம்பெற்றுள்ளது. தமிழர் பண்பாடாக அமெரிக்க மின்னசோட்டா தமிழ்ச்சங்கம், ‘வாழை இலை விருந்துவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடிவருகின்றது. ‘விருந்து போற்றுதும்’ 10 ஆம் வகுப்புப்பாடமாய் உள்ளது. விருந்தினர் இல்லம் எனும் தலைப்பிலான ஜாலுத்தீன் ரூமியின் கவிதைப் பேழை 12 ஆம் வகுப்பில் இணைக்கப் பட்டுள்ளது.

பண்பாடுதமிழர் குடும்ப முறை

குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்ற பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்ப அமைப்பு ஏற்பட திருமணம் அடிப்படையாகிறது. குடும்பமும் திருமணமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். சங்ககாலத்தில் தாய் வழிக் குடும்பமுறை பின்பற்றப்பட்டமையை 12 ஆம் வகுப்புப் பாடமாக வைக்கப் பட்டுள்ளது. இதனை, “என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்” (கலி,பாலை.8) எனும் வரிகள் மட்டுமின்றி புறநானூற்று 270,276,277,278 வரிகள் கொண்டு சான்று காட்டப்பட்டுள்ளது. பின்னாளில் தந்தைவழிக் குடும்பமாக மாற்றம் பெற்றது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை, தாய் சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்பமுறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் (279) கூறுகிறது.

தமிழர் பரம்பரை (வரைபடமாகத்  தரப்பட்டுள்ளது)

பரன்  பரை

சேயோன் சேயோள்

ஒட்டன் ஒட்டி

பூட்டன் பூட்டி

பாட்டன் பாட்டி

தந்தை தாய்

நாம்

மகன்

பெயரன் பெயர்த்தி

கொள்ளுப்பெயரன் கொள்ளுப்பெயர்த்தி

எள்ளுப்பெயரன் எள்ளுப்பெயர்த்தி

முடிவுரை:

“சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் – என்றன்

சாம்பலும் தமிழ் மணந்து வேகவே ண்டும்.”- கா.சச்சிதானந்தம். அவர்களின் தாய்மொழிப்பற்று 11 ஆம் வகுப்பின் பாடமாயுள்ளது. நமது தாய்மொழியாம் தமிழ் மொழி கல்வியில் தொடங்கும் பண்பாடு மனித நேயமாகத் தொடர்ந்து கலைகளாக விரிவடைந்து விழாக்களையடுத்து விருந்தோம்பல் சிறப்பைக் கூறி தமிழர் குடும்பமுறை பற்றி விளக்கிக்கூறி தமிழரின் அடையாளங்கள் (பண்பாடு). அவை வளர்ந்த விதம் வளர்க்க வேண்டிய அவசியத்தால் எளிதில் விளங்கும் பாடமாகச் சமச்சீர்க்கல்வியில் வடிவமைக்கப் பட்டுள்ளன

ஆய்வாளர் :
வே.அமிர்தம்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,

நெறியாளர் :
முனைவர் க.செந்தில் ராஜா,
தமிழாய்வுத்துறைத் தலைவர்,
தமிழாய்வுத்துறை ,
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி
பெரம்பலூர்- 621220 தமிழ்நாடு, இந்தியா

அலைபேசி எண்-6374753185
மின்னஞ்சல்: vamirtham30@gmail.com

Leave a comment

Trending