என அதனையும் கூறாயோ

ஜி. சிவக்குமார்

காதல் கொண்ட தலைவன், தன் மீது காதல் கொண்ட தலைவியை, தன் ஊருக்கு அழைத்துச் செல்வதை தொல்காப்பியர் கொண்டுதலைக் கழிதல் என்கிறார். காதலனுடன் காதலி சென்றாள் என்னும் பொருள்படப் பிற்கால இலக்கணங்கள் அதனை உடன்போக்கு எனக் குறிப்பிடுகின்றன.

சொந்த மதத்தில், சொந்த ஜாதிக்குள்ளேயே பெற்றோர்களும் உறவினர்களும் கூடி நிச்சயம் செய்த திருமணங்களைப் போலல்லாமல், ஆணும் பெண்ணும் வீட்டாரின் சம்மதம் இல்லாமலே திருமணம் செய்து கொண்டு வாழ்வதென்பது நீண்ட காலமாகவே நம்மிடையே இருந்து வருகிற வழக்கம்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

என்று குறுந்தொகைப் பாடல் சொன்னது இதைத்தான்.

உனக்கும் எனக்கும்
ஒரே ஊர் –
வாசுதேவ நல்லூர்
நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக் காரர்கள்
மைத்துனன் மார்கள்
எனவே
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

என்று கவிஞர் மீரா எழுதிய வரிகள், நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் பிறக்கும் கட்டாயக் காதலைப் பகடி செய்கின்றன.

வெவ்வெறு சாதியைச் சேர்ந்தவர்கள் காதலித்து மணம் புரிந்தால், சொந்த மகளென்றும் பாராமல் வெட்டிப் புதைக்கின்ற ஆணவக் கொலைகள், மனிதர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய கொடுஞ் செயல்கள் அல்லவா?

சில நாட்களுக்கு முன், திருநெல்வேலியில் கலப்புத் திருமணம் செய்து வைத்ததற்காக, கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடப்பட்டதை அறவீர்கள்தாளே?

திரைப்படங்களில், நாவல்களில் காதல் காட்சிகளைப் பரவசத்துடன் ரசிப்பவர்கள் கூட தங்கள் வீட்டுப் பெண்ணோ, ஆணோ காதலித்தால் வெறி கொண்டு எதிர்க்கிறார்கள்.

இப்படியான சூழலில், பெண்ணின் காதலுக்கு அவளது வீட்டாரே ஆதரவாயிருந்தால், அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மகிழ்வாக இருக்கும்.

தமிழ்த் திரைப்படங்களில் இது போன்ற காட்சியமைப்புகள் மிகப் பெரிய மகிழ்வைத் தருகின்றன.

காதலனை நினைத்து காதலி பாடிக் கொண்டிருக்கும் போது, அவளது அண்ணனோ, சித்தப்பாவோ இடையில் பாடுவது என்பது எத்தனை அழகிய கற்பனை.

“போலீஸ்காரன் மகள்” திரைப்படத்தில், தன் காதலனின் நினைவில் ஒரு பெண் பாடிக் கொண்டிருக்கும் போது, இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந் தென்றலைக் கேட்கின்றேன். என் கண்ணுக்குக் கண்ணாகும் இவள் செய்தது சரிதானா? என்று அவள் அண்ணன் கேட்பதில் எத்துணை இனிமை.

தன் காதலனுக்கு தென்றலைத் தூது விடுகிறாள் நாயகி. அதுவும் எப்படியான தென்றல்? இளந் தென்றல்.

இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தைக் காண்பாயோ?

நறுமணம் வீசும் மலர்களில் அரும்பாகவும், அவன் மனதுக்கு கரும்பைப் போல் இனிமையாகவும் இருந்த நான், இன்று பொங்கி எழுகின்ற அலைகள் சீறும் ஆழ்கடலில் ஒரு துரும்பைப் போலத் தத்தளிக்கிறேன் என்ற தன் வேதனையை அவனிடம் சொல்வாயா? என்று கேட்கிற வரிகளில் எத்தனை தவிப்பு. அரும்பாவாள், கரும்பாவாள், துரும்பானாள் என எப்படி வார்த்தைகள் வந்து விழுகிறது பாருங்கள்

வண்ண மலர்களின் அரும்பாவாள்
உன் மனதுக்குள் கரும்பாவாள்
இன்று அலைகடல் துரும்பானாள்
என்று ஒரு மொழி கூறாயோ

காதல், இயல்பு வாழ்வை ஒரு சூறாவளியைப் போல் சுழற்றிப் போட்டு விடுகிறது. உண்பது, உறங்குவது எல்லாமே தலைகீழாய் மாறி விடுகிறது. பரவசத்தாலும், துயரத்தாலும் மாறி மாறி அலைக்கழிக்கப்படும் மனது, ஒரு பெருஞ் சுமையாக மாறி விடுகிறது. அதைத்தான் இந்தப் பேதைப் பெண்ணும் பாடுகிறாள்.

நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
அவள் விடிந்த பின் துயில்கின்றாள்
என்னும் வேதனை கூறாயோ

அந்தப் பெண் பாடிக் கொண்டிருக்கும் போதே,

இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளந்தென்றலைக் கேட்கின்றேன்
என் கண்ணுக்குக் கண்ணாகும்
இவள் சொன்னது சரிதானா?

என்ற ஆண் குரல் கேட்கிறது

திகைத்த அவள் அந்தக் குரலைத் தேடித் தேடிக் கண்டடைகிறாள். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் அவளது அண்ணன். திகைப்பு, அச்சம், நாணம், மகிழ்ச்சி என்று பொழியும் உணர்வுகளில் தடுமாறியபடி அவள் அண்ணன் பாடுவதைக் கேட்கிறாள்.

தன் காதலனைத் தேடி, அவனிடம் தன் காதலைச் சொல்லும் தங்கை, உடன் பிறந்த அன்பான தன் அண்ணனான தன்னை மறந்து விட்டான் என கேலி செய்வது எத்தனை ஆச்சர்யம்.

தன் கண்ணனைத் தேடுகிறாள்
மனக் காதலைக் கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்து விட்டாள்
என அதனையும் கூறாயோ

இந்த அண்ணனை மறந்து விட்டாள் என்று அண்ணன் பாடுகையில் தங்கை மறுத்துத் தலையசைக்கிறாள்.

தங்கை காதலிக்கிறாள் எனத் தெரிந்ததும் அரிவாளைத் தேடுகிற அண்ணன்களுக்கு மத்தியில் இந்த அண்ணன் எத்துணை வித்தியாசமானவன். எத்துணை அன்பானவன்.

இந்தப் பாடல் இடம் பெற்ற போலீஸ்காரன் மகள் திரைப்படத்தோடு என்னை நான் நெருக்கமாக உணர்வதற்குக் காரணம், நிறைய திரைப்படங்கள் பார்க்கும் பழக்கமுடைய என் அம்மா, கடைசியாகப் பார்த்த திரைப்படம் போலீஸ்காரன் மகள்தான். அதோடு, என் அம்மாவும் போலீஸ்காரன் மகள்தான்.

தங்கையாக விஜயகுமாரியும், அண்ணனாக முத்துராமனும் இணைந்து நடித்திருக்கும் இந்தக் கருப்பு வெள்ளைப் பாடல், கண்ணதாசனின் வரிகளில், விஸ்வநாதன் இராமமூர்த்தியின் இன்னிசையில், பி.பி.ஸ்ரீனிவாசின், ஜானகியின் குரல்களில், எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் சலிக்காத அற்புதம்.

தங்கை பாடும் போது அண்ணன் பாடியதைப் பார்த்தீர்கள் இல்லையா, இப்போது அண்ணன் மகள் பாடுகையில் அவளது சித்தப்பா பாடுவதைப் பாருங்கள்.

கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள்
காதல் மனம் ஒரு தேனருவி

இளம்
வயது வளர்ந்து வர
கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ

நெஞ்சம், மஞ்சம், செண்டு கொஞ்சும் என்று தொடரும் பாடலில் எத்தனை அழகிய வரிகள் பாருங்கள். காதலி உள்ளம் வெள்ளமாம் அதில் காதலின் ஓடம் செல்லுமாம்
மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் அதில்
மல்லிகை(ச்) செண்டு கொஞ்சும்.
காதலி உள்ளம் வெள்ளம் அதில்
காதலின் ஓடம் செல்லும்
இளம்
வயது வளர்ந்து வர
கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ

பாடிக் கொண்டிருக்கையில், நெஞ்சமெனும் ஆலயத்தில் நின்றதெல்லாம் என் அண்ணன் மகள் என்ற ஆண் குரல் கேட்டு திகைத்து, யாரென்பதை அறிந்து மலர்ந்து சிரித்து, ஜன்னலின் வழி பாடிக் கொண்டிருக்கும் சித்தப்பாவைப் பார்த்து மகிழ்கிறாள்.

நெஞ்சமெனும் ஆலயத்தில்
நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
என் மனதைத் தன்னுடனே
எடுத்துச் செல்வாள் அந்த அன்பு மகள்

புதுமனையில் புகுந்து
மணவறையில் கலந்திருக்க
கல்யாண நாள் வருமோ
கல்யாண நாள் வருமோ…

மாட்டு வண்டியில் செல்கையில், அருகில் மற்றொரு மாட்டு வண்டியில் சென்று கொண்டிருக்கும் தன் மனதிற்கினியவனை, சித்தப்பா என்று அழைத்துக் காட்டுகிறாள். மகிழ்வில் விம்மிய மனதிலிருந்து பிறக்கும் நல்வாழ்த்துகளைப் பாருங்கள். நம் கால்களில் விழுகின்ற இணையை, அள்ளியெடுத்து நிறைந்த மனதுடன் இப்படித்தானே நாமும் ஆசிர்வதிப்போம்.

ஆயிரம் காலத்தைக் கடந்து
விழி நீரினைக் கண்கள் மறந்து
அன்பெனும் வானத்தில் பறந்து- நீ
வாழ்ந்திட வேண்டும் இருந்து

இளம் பருவ மழையில்
இரு உருவம் நனைந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ

நாகேஷ், மணிமாலா, ஸ்ரீகாந்த் நடிப்பில், வாலியின் வார்த்தைகளில், ஆர்.பார்த்தசாரதியின் இசையில், கே.ஜே. ஜேசுதாஸ், ஜானகியின் தேன் குரல்களில், கல்யாண ஊர்வலம் திரைப்படத்தின் இந்தப் பாடல் காட்சியும் பார்க்கவும், கேட்கவும் திகட்டாத பாடல்தான். அதுவும் பாடல் முடிவமையும் போது ஜானகியம்மாவின் ஹம்மிங்கும், சலங்கை ஓசையும் ஒத்திசைவது அத்தனை இனிமை.

கூந்தலிலே நெய் தடவி பாடலில், மணிமாலாவின் நடனம் அவ்வளவு இயல்பாக அவ்வளவு பொருத்தமாக, அவ்வளவு அழகாக இருக்கிறது.

இந்த வகையான பாடல்கள் என்றால், என் நினைவில் மேலெழுந்து வருவது இந்த இரண்டு பாடல்கள் மட்டுந்தான். வேறு இருந்தால் நீங்களும் சொல்லலாம் நண்பர்களே.

Leave a comment

Trending