பின்நவீனத்துவ வளர்ச்சியும் சூழலியல் தாக்கமும்

இ.கலைக்கோவன்


கற்பனையே வளர்ச்சியும் வீழ்ச்சியும்

        மனிதன் மற்ற உயிரினங் களிலிருந்து வேறுபட்டு தோன்றுவதற்கு அவனுடைய கற்பனை ஆற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது. கற்பனை மனிதகுலத்தின் வரமும் சாபமும் ஆகும். கடந்த பல இலட்சம் ஆண்டுகளில் மனிதகுலம் தன் முன்னால் விரிந்து கிடக்கும் பொருட்களின் மீதும் பொருட்கள் அல்லாத அருபங்கள் மீதும் காலங்கள் தொடர்பாகவும் நிகழ் சாத்தியம், எதிர்நிலை சாத்தியம் என்று எல்லாவற்றின் மீதும் அவன் தன் கற்பனைகளைக் தொடுக்கத்தொடங்கினான். அக்கற்பனைவழி அவன் அடைய நினைத்த இலக்கு நோக்கி பயணப்பட கற்பனைகளை கோட்பாடுகளாக மாற்றத் தொடங்கினான். கோட்பாடுகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கடத்தப்படும் போதோ அல்லது திணிக்கப்படும் போதோ அவை வாத, எதிர்வாதங்களுக்கு உட்படுத்தப் பட்டன. வாத எதிர்வாதத்திலிருந்து அடிப்படையான கோட்பாடுகளுக்கு கிளைக் கோட்பாடுகளும், முரண் கோட்பாடுகளும், இணைக் கோட்பாடுகளும் உருவாகத் தொடங்கின. இவை அனைத்தும் உலகின் உயிருள்ள உயிரற்ற அனைத்தின் மீதும் தாக்கத்தை சில சமயங்களில் தாக்குதல்-களை ஏற்படுத்தத் தொடங்கின.

       இந்தக் கோட்பாடுகளை முன்மொழிந்து செயல்படுத்தி வெற்றியடை -கிறவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக மாறினர். அவர்களை மற்றவர்கள் பின்தொடரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த கட்டமைப்பிற்குள் இருந்து மீண்டும் புதிய கோட்பாடுகள் தேவை கருதி உருவாகின அல்லது உருவாக்கப்பட்டன. அப்புதிய கோட்பாடுகள் வலுப்பெற்றதாக மாறியபோது உலகம் புதிய கோட்பாட்டின் வழி செயல்படத் தொடங்கியது. இப்படியாக உருவாகி மறைந்து உருவாகி மறைந்து கொண்டிருந்த கோட்பாடுகள் தேவை கருதியும் அழுத்தம் கருதியும் தோன்றி மறையும் நிலையில் இருந்தன. இவற்றில் நிலைத்த கோட்பாடுகள் என்று எதுவும் ஊன்றி நின்றுவிடவில்லை. இவைதாம் இன்றைய மனிதகுலத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கும் உலகம் கிஞ்சித்தும் எதிர்பார்த்திராத மாபெரும் வீழ்ச்சிக்கும் அடிப்படையாக அமைந்திருக்கின்றன..

       இன்றைக்கும் உலகின் ஏதோ ஒரு மூளையில் யாரோ ஒரு மனிதன் கற்பனையில் ஆழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அந்தக் கற்பனை இன்னும் சில நூற்றாண்டுகள் கழிந்து புதிய கோட்பாடாக மாறக்கூடும். அத்தகைய சர்வவல்லமை பெற்றது கற்பனை.

கோட்பாடுகளின் ஆதிக்கம்

       கற்பனையிலிருந்து பரிணாமம் பெற்ற கோட்பாடுகளை நாம் கலை, இலக்கிய, பண்பாட்டு தளத்திற்கான கோட்பாடாகவும் சமூக, பொருளாதார, அரசியல் தளத்தில் இயங்கும் கோட்பாடாகவும் இரண்டாகப் பிரிக்கலாம். ஒருவகையில் இரண்டும் ஒத்துப்போகக் கூடியனவே. இவற்றின் இயங்கு தளங்கள் வேறுவேறாக இருந்தாலும் இவற்றின் இயக்கம் ஒன்றுபோலவே அமைந்துள்ளது. இரண்டு தளத்திலும் அவை எதிரெதிர் ஊடாட்டமாக பயணப்படுவதும் உண்டு, சில சமயங்களில் பரிசோதனை முயற்சியாக இலக்கியங்களில் பயன்படுத்திவிட்டு பின்பு அதை சமூகத்தளத்திற்கு விரிவுபடுத்து வதும் உண்டு. அந்த வகையில் உருவான கோட்பாடுகள் நிரம்ப உலவுகின்றன.

       துன்பத்திலிருந்து விடுதலையடைய இறையை நம்பச் சொல்வது ஒரு கோட்பாடு எனில் அத்துன்பத்திற்கு காரணமே இறைதான் என்பது மற்றொரு கோட்பாடு.

அடிப்படையில் நம்பிக்கைதான் எல்லாம் என்பது ஒரு கோட்பாடு எனில் இயக்கம்தான் உண்மை என்பது மற்றொரு கோட்பாடு.

இவற்றைச் செயல்படுத்த எளிமை -யான ஊடகம் இலக்கியம். எனவே கோட்பாடு தன்னியல்பாகத் தோன்றினாலும் அதை இலக்கியம் செழுமைப்படுத்தத் தொடங்கியது. தொடர்ந்து இலக்கியத்திலும் சமூகத்திலும் ஆழம்பதித்த பின்னர் கோட்பாட்டின் ஆதிக்கம் மேலெழத்  தொடங்கியது.

       அதன் தொடர்ச்சியாக கோட்பாட்டின் வரையறைகள் மொத்த வழக்கங்களையும் தீர்மானிக்கும் கருவியாயின. அதிலிருந்து அதிகாரம் பெற்ற கோட்பாடு மேல்நிலை தன்மையுடையதாக மாறியது. அது ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு முன்னேறியது.

நவீனத்துவமும் பின்நவீனத்துவமும்

       உலகம் இன்றைக்கு இரு கோட்பாடுகளின் அடிப்படையில் பிரிந்து நிற்கின்றது. அவையாவன முதலாளித்துவக் கோட்பாடும் பொதுவுடைமைக் கோட்பாடும். இதில் தனக்கான கோட்பாடு எது என உணராதவர்கள் அக்கோட்பாட்டினை பின்பற்றுகின்றனர். ஆனால் இவ்விரு கோட்பாடும் தத்தம் வரையறைகளை பல வலையிலும் பரப்பி தனக்கான வலுவினை அதிகப்படுத்த முயற்சிக்கின்றன. இதில் இறுதி வெற்றி யாருக்கு என்பதை விடவும், இந்த பூமிக்கு எது உகந்தது? என்பதைப் பொருத்தே அந்தக் கோட்பாட்டை நாம் பின்தொடரலாம். முன்னர் கூறியது போல இவ்விரு கோட்பாடுகளிலும் தத்தம் கருத்துகளைப் பரப்புரை செய்ய மேற்கொள்ளும் வழிகளில் ஒன்று இசங்களின் வடிவம்.

       1800–களுக்குப் பின்பான உலகச் சுழற்சியில் மனிதகுல வரலாறு அதுவரை இல்லாத பல மாற்றங்களை காணத் துவங்கியது. புதியபுதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் அரசுகளின் கொள்கை களில் பல புதிய போக்குகள் ஏற்படுத்தத் தொடங்கின. அக்காலகட்ட இசங்களின் வாயிலாக அரசுகள் தங்களுக்கு வசதியான போக்குகளை உருவாக்கிக் கொண்டன. அப்படி உருவாக்கப்பட்ட அக்காலகட்ட இசங்களில் சிம்போலிசம், இம்ப்ரஷனிசம், இமேஜிசம், வோர்டிசம், ஃபியூசரிசம், எக்ஸ்பிரஷனிசம், டாடாயிஸம், சரியலிசம், கியூபிசம், போன்றவற்றைக் கூறலாம். இவை அரசுகளின் கொள்கைகளைத் தீர்மானித்தனவா என்றால் இதன் வழி அரசின் கருத்துகளைப் பொதுவெளியில் உருவாக்குவது எளிதாக இருந்தது என்பதே உண்மை. இதில் தனது வசதிக்கேற்ப அந்தந்த அரசுகள் தமது கோட்பாடுகளை உருவாக்கத் தொடங்கின. எனவே இவை அரசு கோட்பாட்டு உருவாகக் ஒரு வகையில் காரணக் காரணிகளாக இருந்தன எனலாம். இதன் ஒட்டுமொத்த மேலுறை நவீனத்துவம் என்ற சொல்லாடலால் வழங்கப்படுகின்றது.

       நவீனத்துவம் அமைப்பின் முக்கியத் துவத்தை உணர்த்தி, மையம் நோக்கிய பார்வையை முன்வைத்தது. அது அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருதல் என்பதை முன்மொழிந்தது. நவீனத்துவம் மறுமலர்ச்சிக் காலத்தை பறைசாற்றியது. அந்த அடிப்படையில் அமைப்பாய்த் திரளுதல், ஒன்றிணைதல், கட்டமைத்தல் போன்ற வடிவங்களில் கலை, இலக்கியங்கள் உருவாகின. அது சமூக அமைப்பிலும் பிரதிபலிக்கத் தொடங்கிய ஒரு கட்டத்தில் நவீனத்துவம் முதலாளிய கோட்பாட்டிற்கும் தேவையாக இருந்தது. பொதுவுடைமைக் கோட்பாட்டிற்கும் பொருத்தமாக அமைந்தது. இவ்விரு எதிரெதிர் கோட்பாடுகள் ஒரே வண்டியில் சவாரி செய்வதென்பது இயலாத காரியம். இதிலிருந்து முதலாளியம் இன்னும் வேகமாக ஓடத் தீர்மானித்தது. நவீனத்துவத்தில் கால்வைத்து உந்திக் கொண்டு புதிய கோட்பாட்டை உருவாக்கத் தொடங்கியது. அந்த அடிப்படையில் உருவானதுதான் பின்நவீனத்துவம். உண்மையில் பின்நவீனத்துவம் என்ற பெயர்தான் பிற்பகுதியில் சூட்டப்பட்டதே யொழிய 1800-களிலிருந்தே பிரிட்டனிலும் லத்தீன் அமெரிக்காவிலும் வேறுபட்ட அர்த்தம் தரும் சொற்களாக வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. வர்க்கப் போராட்டத்திற்கு எதிரான சிந்தனைகளை யெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டிருக்க வாதங்கள் பின்னாளில் இணைக்கப்பட்டு பின்நவீனத்துவம் என்ற வார்த்தையின்கீழ் கொண்டு வரப்பட்டன. 1950-களில் இந்த பின்நவீனத்துவம் முழுமையடையாத கோட்பாடாக அமெரிக்க அறிவுச்சமூகத்தால் புழக்கத்தில் விடப்பட்டு 1967-69 காலகட்டங்களில் பொதுவுடைமை எழுச்சியின் தோல்விக்குப் பிறகாக பிரான்ஸ் உள்வாங்கிக்கொண்டு ஆங்கிலோ- சாக்ஸன் நாடுகளை நோக்கித் திரும்பியது. பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவிலும் விரிவடையத் தொடங்கியது. இப்படி உருவாகி வளரத் தொடங்கிய பின்நவீனத்துவக் கோட்பாடு முதலில் கலை, இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் செயலாற்றி, பின்பு அது அறிவியல் தொழில்நுட்ப, பொருளாதார, சமூக அமைப்புகளிலும் தன் கரங்களை விரிவுபடுத்தத் தொடங்கியது.

பின்நவீனத்துவ விளக்கம்

       பிரான்ஸ் தத்துவவாதிகள் பலரும் பின்நவீனத்துவத்திற்குப் பல வகையான விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். ஆனால் பின்நவீனத்துவமானது அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டது. அதனை செம்மைப்படுத்தும் வேலையையே பிரான்ஸ் செய்தது. அடிப்படையில் பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்றிருந்த பிரான்ஸ் முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பின்னர் புதிய புதிய சித்தாந்தங்களை உள்வாங்கத் தொடங்கி யது. அப்படி செம்மை வடிவம் கொடுக்கப் பட்ட பின்நவீனத்துவம், நவீனத்துவக் கோட்பாட்டிற்கு நேர் எதிராக வளரத் தொடங்கியது.

மையத்தை நோக்கி நவீனத்துவம் வளர்ந்தால் பின்நவீனத்துவம் விளிம்பை நோக்கி நகரத்தொடங்கியது. அமைப்பாய்த் திரளுவதை நவீனத்துவம் பேசினால் அனைத்தையும் உடைப்பது குறித்து பின்நவீனத்துவம் பேசியது. மறுமலர்ச்சி பற்றி நவீனத்துவம் முன்வைத்தால் அனைத்தையும் கேள்விக்குட்படுத்துதல் என பின்னிழுத்தது பின்நவீனத்துவம். புனிதத் திற்கு எதிரான நவீனத்துவத்தின் அனைத்து கருத்துகளையும் பின்னிழுத்தது பின்நவீனத்துவம்.

ஒரு செயல்பாட்டை நவீனம் முன்னெடுத்தால் அதை மற்றொரு செயல்பாட்டின் மூலம் தடுத்து நிறுத்தியது. செயல்படுவதற்கான வாய்புகளற்ற ஆனால் மறு செயலாக்கத்தைப் பற்றி மட்டுமே கருத்து கொண்டதாக பின்நவீனத்துவம் அமைந்திருக்கிறது. இப்படியான கட்டை உடைத்தல், அமைப்பாய்த் திரளுவதை தடுத்தல், ஒன்றிணைதல், நீர்த்துப் போகச் செய்தல் போன்றவை கொண்டு முதலாளித்துவ வளர்ச்சிக்கு பெரிய ஊக்க சக்தியாக இருந்தது பின்நவீனத்துவம் அதனால் பின்நவீனத்துவம் முதலாளித் துவத்திற்கு மிகப்பெரிய கருத்தியல் ஆயுதமாக மாறத்தொடங்கியது.

பின்நவீனத்துவத்தின்
அரசியல் நிலைப்பாடு

       கலை, இலக்கியத் தளத்தினைத் தாண்டி சமூக அமைப்பிற்குள் பின்நவீனத்துவக் கோட்பாடு நுழையத் தொடங்கியவுடன் அது அரசியல் கோட்பாடாக வளரத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்பாக வல்லாதிக்கம் செலுத்தத் தொடங்கிய அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்குத், தான் முன்னுதாரணம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அச்சமயத்தில் அமெரிக்காவானது நடுத்தரவர்க்க சமூக அமைப்பாக மாறியிருந்தது. அது உழைக்கும் வர்க்கத்தையும் கூடிய விரைவில் சொந்த வீடு, வாகனங்களுக்கான உடைமையற்றவர்களாக மாறக்கூடிய கனவுகளை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமல்லாமல் உழைப்பிற்கும் மூலதனத் திற்கும் இடையில் ஒருவகையான நெருக்கத்தினை ஏற்படுத்தி உற்பத்தியின் மூலம் கிடைக்கும் இலாபத்தினால் கூலியை அதிகப்படுத்த முடியும் என்று கற்பனையான வரையறையை முன்மொழிந்து பொதுவுடைமைக்கு நேர் எதிரான கோட்பாட்டை முன்வைத்தது. இது தொழிற்துறையில் பின்ஃபோர்டிய உற்பத்தி முறை என்ற சொல்லாடல்களில் அழைக்கப்பட்டது.

இந்தப் புதிய பின்ஃபோர்டிய உற்பத்தி முறையை பரவலாக்க வலுப்படுத்த பின்நவீனத்துவக் கோட்பாடு பக்கபலமாக அமைந்தது.

       பின்ஃபோர்டியத்திற்கு விளக்கம் கொடுக்கும் போது ‘அல்ஜாஸ் அகமது’ ‘”மையப் படுத்தப்பட்ட ஆலை உற்பத்தியினுடைய மிகப் பெரிய ராட்சச வடிவத்தை சிறு சிறு அலகுகளாக உடைத்து, அதனுடைய உற்பத்தி முறையின் ஒவ்வொரு குறிப்பிட்ட அம்சங்களிலும் சிறப்புக்கவனம் எடுத்துக் கொள்வதே பின்ஃபோர்டியம் எனப்படுகிறது. அதாவது, ஒரு பொருளை ஒரே ஆலையில் ஒட்டுமொத்தமாக தயாரிப்பதை உடைத்து, டஜன் கணக்கில் பரவலாக்கி, ஒவ்வொன்றையும் உதிரி பாகங்களுக்கான நிறுவனங்களாக்கி, இவற்றுக்கு சம்பந்தமில்லாத இன்னொரு இடத்தில் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் நிர்வாக எளிய முறையே பின்ஃபோர்டியம் ஆகும்.” என்கிறார்.

       இந்தச் சித்தாந்தத்தின் அடிப்படை யில் தொழில்துறை அமைப்பை ஒருங்கிணைந்த இயந்திர உற்பத்திக்கு மாறாகத் தனித்தனியாக தயாரிக்கும் உற்பத்தி முறைக்கு கொண்டு செல்லும் வேலையை அமெரிக்கா தெளிவுடன் செய்யத் தொடங்கியது. அதற்கு இந்த பின்நவீனத்துவ மைய இழப்புக்கோட்பாடு ஆதரவாக அமைந்தது. இந்தத் தொழில் முறையின் பயனாக விளைந்தவை தொழில்துறையானது உற்பத்திக்குக் கொடுக்கும் முன்னுரிமையைத் தவிர்த்து நுகர்விற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியது. நுகர்வதற்கான கடன்கள் வழங்குவதை ஊக்குவித்தது. சந்தைகளை உருவாக்க விளம்பரங்கள் செய்வதையும் அதன் மூலம் தேவைகளை உருவாக்கவும் செய்தது. இவ்வடிப்படைகளை உருவாக்க பின்நவீனத்துவக் கருத்து உதவியது. அது முதலாளிய தொழில் தன்மையை உள்ளடக்கியதாக வெளிப்பட்து. அதோடல்லாமல் மார்க்சின் உற்பத்தி முறையும் மார்க்சியமும் காலாவதியான ஒன்று எனவும் பரப்புரை செய்தது.

       இவ்வகை சித்தாந்தக்கூறுகள் ‘சேமிப்புச் சமூகத்தை செலவாளிச் சமூகமாக மாற்றத் தொடங்கியது. உற்பத்திதான் வளர்ச்சிக்கான இயக்கவிதி என்பதை மாற்றி நுகர்வுதான் அனைத்துமென முதலாளிய சமூக அமைப்பிற்குப் பொது சமூகத்தை நகர்த்தத் தொடங்கியது. இத்தன்மை கொண்ட பின்நவீனத்துவத்தை டேனியல் பெல், ‘சுயமோகமும், ஊதாரித்தனமும் கொண்ட வழிமுறை” என்கிறார். இந்த சித்தாந்தக்கூறை ஃபுகுயமா, ‘வரலாற்றின் முடிவு’ என்ற கோட்பாட்டில், “பின்-தொழிற்துறையின் பிறப்பானது பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தின் முடிவு” என்கிறார். ஆனால் இதை பின்நவீனத்துவவாதிகள் கலை, இலக்கியத்தளத்தில் பெருமைமிகு பாத்திரமாக சித்திரிக்கத் தொடங்கினர். எடுத்துக்காட்டாக பின்நவீனத்துவவாதியான பூக்கோவைக் கூறலாம். ‘வாழ்வின் அழகியல்’ ‘தன்னையே ஆராதித்தல்’ என்ற சொற்றொடரின் மூலம் கூட்டு அரசியல் செயல்பாட்டை உடைத்து தனிப்பட்ட சுயதிருப்தி சார்ந்த அரசியலுக்கு பொது சமூகத்தை நகர்த்த நினைத்தார். இப்படியாக அறிவுஜீவிகள் என சொல்லிக் கொள்பவர்களால் முன்வைக்கப்பட்ட தத்துவம் தொழில்துறையில் நடத்திய மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக சூழலியலைச் சிதைவிற்கு உட்படுத்தத் தொடங்கியது.

சூழலியல் கருத்தாக்கமும் பின்நவீனத்துவ உருவாக்கமும்

        பிரிட்டனின் உயிரியியலாளர் ‘ஆர்தர் டான்ஸ்லே’ என்பார் 1935-ஆம் ஆண்டில் முதன்முதலாக ஆங்கிலத்தில் ஈகோசிஸ்டம்’ என்ற சொல்லை ‘ஈக்காலஜி’ ‘சிஸ்டம்’ என்ற இரு சொற்களிலிருந்து காரணப் பெயராக உருவாக்கம் செய்தார் என்று சூழலியலாளர் நக்கீரன் குறிப்பிடுகிறார். மேலும் ‘ஈகோசிஸ்டம்’ என்ற சொல்லுக்கு இணையாக தமிழில் ‘சூழல் அமைவு’ ‘சூழல் தொகுதி’ என்ற சொற்களைக் காரணப்பெயர்களாக மொழி பெயர்த்துக் கூறினாலும் உண்மையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘திணை’ என்னும் இடுகுறிப் பெயரை நம்முன்னோர் வழங்கி வந்துள்ளனர் என்றும் குறிப்பிடுகிறார்.

       உலகம் தழுவிய சூழலியல் கருத்தரங்கம் என்பது, பன்னெடுங்காலமாய் மனிதச் சமூக வழக்கத்தில்  இருந்து வந்துள்ளது என்றாலும் அது பகுதிசார்ந்து, வாழ்வியல் சார்ந்து, தேவை சார்ந்து தனித்தன்மையுடன் கூடிய துறையாக வெகுசில சமூகத்தில் மட்டுமே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.

நிலமும் பொழுதும் சார்ந்து தமிழ்ச்சமூகம் வாழ்வியலை வகுத்துக் கொண்டால் அதன் மொழியிலும் அதற்கான தனிச்சிறப்பினை  உணரமுடியும். இப்படியாக சூழலியல் கருத்தானது மனித இனத்தில் தனித்துவமான வேறுபாட்டுடன் உருவாகியது. பிரிட்டனில் ஆர்தர் சூழலியல் என்ற பதத்தின் மூலம் சூழலியல் கருத்தாக்கங்களை பரவலாக்கிய அதே சமயம் சூழலியல் என்ற தனித்துறை உருவாகும் முன்பே சூழலியல் சிந்தனையுடன் படைப்புகள் உருவாகத் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. காட்டாக ‘வோர்ட்ஸ் வொர்த்தின்’ கவிதையைக் கூறலாம்.

“ வயல்வெளிகளோ
அவன் அன்றாடம் மூச்சுக்காற்றை
ஆன்மா குதூகலிக்க
உள்வாங்கிய ஓசோன் மண்டலம்!
மலையடுக்குகளோ
அவன் அவ்வப்போது
குதித்தேறி ஆடிய ஆடுகளம்…. “ 

(தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்)

       இவ்வாறாக வோட்ஸ்வொர்த்தும் அவரின் சமகால கவிஞர்களும் சூழலியலை மையமாக வைத்து பல கவிதைகளை படைத்துள்ளனர். அதேசமயம் அக்காலகட்டம் (1793-1864) ஐரோப்பியர்கள் நாடுபிடிப் போட்டியால் புதிய புதிய குடியேற்றங்களை நிறுவத் தொடங்கிய காலகட்டம் ஆகும். குடியேறிய நாடுகளின் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு ஐரோப்பாவிற்கு கொண்டு வரப்பட்ட மூலப் பொருட்களுக்கான பெரியபெரிய ஆலைகள் பிரிட்டன் உள்ளிட்ட நகரங்களில் நிர்மானிக்கப்பட்டன. அச்சமயத்தில் நகர மயமாதலும் நகரக்கழிவுகளும் தவிர்க்க முடியாதவை ஆயின. அதனால் தூய நதிகள் பாழ்பட்டன. அதனைக் கண்ட பிரிட்டானியக் கவிஞர்கள் சூழலியல் கருத்தாக்கங்களைத் தம் படைப்புகளில் உருவாக்கத் தொடங்கினா்.

காட்டாக ஜான் கிளேரின் கவிதையைக் கூறலாம்.

“ ஒருகாலத்தில்
வழிகளை அமைப்பது இயற்கையின் சுதந்திரம்!
பாதைகள் வகுத்தன பள்ளத்தாக்கு வளைவுகள்!
அடைப்புகள் வந்தன ஆண்டைகள் தந்திரம்
பாதையை மறித்தன பாதகர் சுளுவுகள்
மீறினால் தண்டனை மருட்டின பலகைகள்
அவரிட்ட ஆணைகள் நீதியை வகுத்தன
நெடுஞ்சாலை ஒவ்வொன்றும் கேட்டினைத் தொகுத்தன…”
(தமிழில் – பொன்.சின்னத்தம்பி முருகேசன்)

       இப்படியான சூழலியல் பார்வை கொண்ட கவிதைகள் ரஸ்கின், மோரிஸ், கார்பென்டெர் போன்ற கவிஞர்களிட மிருந்தும் வெளிப்படத் தொடங்கின.

       இவ்வாறாக 1800–க்குப் பிறகான குடியேற்றங்களைத் தொடர்ந்து உலகம் முழுவதும் சூழலியல் கருத்தாக்கம் கொண்ட படைப்புகள் மெல்ல எழத்தொடங்கின. என்றாலும் அவை எதுவும் அப்போது பொதுச்சமூகத்தில் பெரிய தாக்கத்தினை முழுமையாக ஏற்படுத்திவிடவில்லை. பின்னே எப்போது சூழலியல் கருத்தாக்கம் கவனத்திற்கு உட்பட்டது? தேவை சார்ந்த உற்பத்தி முறையை பின்நவீனத்துவம் நுகர்வு சார்ந்த உற்பத்தி முறைக்கு மாற்றத் தொடங்கிய பின்பு கவனத்திற்குள்ளாக்கப்பட்ட்டது.

“மேற்கத்திய நாடுகளின் செயல்முறையைப் பின்பற்றி இந்தியா தொழில்மயமாக்கப் படுவதை இறைவன் தடுத்து நிறுத்தட்டும்! தனிப்பட்டதொரு குட்டித் தீவான இங்கிலாந்து பொருளாதார மேலாதிக்கம் பெற்றதாலேயே இன்றைக்கு உலகம் முழுவதும் சங்கிலிகளால் பிணைக்கப் பட்டுள்ளது. முப்பது கோடி மக்களைக் கொண்ட இந்தியா போன்ற மிகப்பெரிய நாடு அதே போன்ற பொருளாதாரச் சுரண்டலில் ஈடுபட்டால், வெட்டுக்கிளிகள் வேட்டையாடிய விளைநிலம் போல உலகமே வெறிச்சோடிப் போய்விடும்!”

1928-ல் காந்தி மேற்கூறிய கருத்தினை மேற்கத்திய நாடுகளின் தொழில் மயமாக்கலுக்கு எதிராக முன்வைக்கிறார்.

       இக் காலகட்டத்திலிருந்து அடுத்த இருபது ஆண்டுகளுக்கு உள்ளாக முதலாளியமானது நவீனத்துவ சிந்தனை அமைப்பினை முறித்துக் கொண்டு பின்நவீனத்துவத்தின் சிந்தனை முறையினை ஏற்றுக்கொண்டது. இவற்றையெல்லாம் முன்பே சிந்தித்தவராக மார்க்ஸ் விளங்குகின்றார். ‘குடியேற்ற மயமாக்கல் பற்றிய நவீன கோட்பாடு’ என்பதில் எட்வர்டு வேக்பீல்ட் முன்மொழிவதைச் சுட்டிக்காட்டி மார்க்ஸ் கூறும்போது ‘வருங்காலங்களில் அந்நியமாதல் என்பது முதலாளித்துவம் கைக்கொள்ளும் உத்திகளில் ஒன்றாக இருக்கும்’ என்கிறார். அதாவது தொழிலாளர்களை நிலத்திலிருந்து அந்நியப்படுத்துதல். அதன் மூலம் இயற்கையின் மீதான அதிகாரத்தை வலுப்படுத்துதல் என்பதை முதலாளியம் மேற்கொள்ளும் என்றார். இதனை பின்நவீனத்துவத்தின் உருவாக்கம் நமக்கு 1950-களுக்குப் பிறகு வெளிக்காட்டத் தொடங்கியது.

       அதனைச் செயல்படுத்துவதற்கு ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின்   ஒற்றுமைக்கு மாற்றாக வர்க்கப்பிளவு வாதத்தையும், சமூக ஒருங்கிணைப்புக்கு மாறாக துண்டுதுண்டான அடையாள அரசியலையும் பின்நவீனத்துவம் உருவாக்கியது. இதுதான் உலகளவில் பின் நவீனத்துவத்தின் தோற்றமாக இருந்தது. பின்பு அது பிரான்சிற்கு சென்று, ‘தெரிதோ’, ‘பூக்கோ’ போன்றோர்களின் வழியாக பொதுவுடைமையாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட சொல்லாடல்களுடன் இந்தியாவிற்குள் நுழைந்தது. வர்க்க அமைப்பை பிளவுபடுத்திக் கூறுபோட பின்நவீனத்துவம் ‘பவுண்டேசன்’களை நிறுவத்தொடங்கியது. இந்திய அறிவுச் சமூகமாகத் தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட பலரும் பின்நவீனத்துவத்தை இப்பவுண்டேசன்களின் ஆதரவுடன் தூக்கிக் கொண்டாடத் தொடங்கினா். விளைவு வர்க்கப் போராட்டம் நீர்த்துப்போக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சூழலியல் மீதான குறைந்தபட்ச மனித கரிசனம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. பெரிய பெரிய நிறுவனங்கள் சூறையாடும் இயற்கை வளங்கள் மறைக்கப்பட்டு வீட்டுக்குழாயில் தண்ணீர் சொட்டுவது, தெருவில் குப்பை கொட்டுவது போன்ற தனிமனிதத் தவறுகளால் இயற்கை பாழ்படுத்தப்படுவதாக கருத்தாக்கம் சித்திரிக்கப்பட்டது. பின்வாசல் வழியாக நுழைந்த பின்நவீனத்துவம் தனிமனிதர்-களையெல்லாம் குற்றவாளியாக்கிவிட்டு தனது ஆக்டோபஸ் கரங்களால் மலைகளையும், காடுகளையும் தன்பசிக்கு இரையாக்கிக் கொண்டிருக்கிறது.

       ‘மனிதன் இயற்கையின் ஓர் அங்கம்’ என்கிறார் மார்க்ஸ். எனவேதான் அவர் ‘தேவை சார்ந்த கூட்டு உற்பத்தி’ என்ற வாதத்தினை முன்வைத்தார். உற்பத்தியில் இயற்கையின் பங்கை இதன் மூலம் விளக்க நினைத்தார். இதற்கு நேர் எதிராக நுகர்வை முன்வைத்த உற்பத்தியை பின்நவீனத்துவ முதலாளிய சிந்தனை முன்வைத்தது. இரண்டும் உற்பத்திதான் என்ற அளவில் ஒன்றிணைந்தாலும் எவ்வளவு உற்பத்தி?, யாருக்கான உற்பத்தி? என்கிற இடத்திலிருந்து வேறுபடுகின்றன. அதுதான் சூழலியல் மீதும் பெரிய தாக்குதல்களை நிகழ்த்தவும் தொடங்கியது. தொழில்துறை வளர்ச்சிக் காலகட்டத்தில் ‘ஒருங்கிணைந்த இயந்திரத் தொழில்முறை’ இருந்தது. அது முதலாளிய அடிப்படையைக் கொண்டிருந்தாலும் உழைப்பின் பாத்திரத்தினை முன்னிருத்தி தொழிலாளியின் குறைக்கப்பட்ட உரிமைகளையும் சூழலியல் சுரண்டல்களையும் பேசியது.

       இவ்வகை அமைப்பில் முதலாளியம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளம் கொழிப்பது இயலாததாக இருந்தது. எனவேதான் முதலாளித்துவ நாடுகள் பின்நவீனத்துவ சமூகத்தையும் பின்-நவீனத்துவ பாணியிலான தகவல் தொழில்நுட்ப சமூகத்தையும் முன்னிலைப் படுத்தத் தொடங்கின. விளைவு, ஒருங்கிணைந்த இயந்திரத் தொழிலுக்கு மாற்றாக ஒவ்வொரு பாகங்களையும் தனித்தனியாகத் தயாரிக்கும் நிறுவன முறைகளை பரவலாக்கத் தொடங்கின. இந்த உடைக்கப்பட்ட உற்பத்திமுறையில் முன்பைவிட பல மடங்கு அதிகமாக உற்பத்தியினை மேற்கொள்ள முடிந்தது. உலகின் பல்வேறு பகுதிக்கும் உற்பத்தி செயல்பாடுகளைப் பிரித்தளிக்க முடிந்தது. மனித ஆற்றலும் உற்பத்திக்குத் தேவையான இயற்கை மூலமும் முன்னெப்போதும் இருந்ததை விடவும் அதிகம் சுரண்டப்பட்டது.

       இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மேற்குமண்டலம் பின்நவீனத்துவம் பரவிய காலகட்டத்தில், தீவிர தொழில் மயமாக்கலில் தன்னை இணைத்துக்கொண்டது. அதன் காரணமாக பெரிய அளவிலான பொருளாதார வாய்ப்புகள் வந்து சேர்ந்ததாக நம்பவைக்கப்பட்டன. ஆனால் அதே தொழில் மயம்தான் கேம்ப் கூலிகளாக தொழிலாளர்களை மாற்றத்தொடங்கியது. ஒரு பக்கம் மிதமிஞ்சிய செல்வச் செழிப்பையும் மறுபக்கம் வறியவர்களை யும் உருவாக்கிக் கொண்டிருந்தது.

இந்த பொருளாதார ஏற்றத்தாழ்விற்குள் சமூகம் ஊசலாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் வேளையில் வெளியே தெரியாமல் நடந்த பெரிய அழிவு, சூழலியல் அழிவு. தமிழக மேற்குமண்டல திருப்பூர், பல்லடத்தை அடையாளமாகக் கொண்டிருந்த  காலம்போய், இந்தியாவின் அடையாளமாக மாறிக்கொண்டிருந்த அதே வேளையில் நொய்யல் என்ற நதி காணாமல் போகத்தொடங்கியது.

மியான்மரின் இயற்கை வளங்கள் இன்றைக்கு பின்-தொழிற்துறை வளர்ச்சியின் காரணமாக காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. பிலிப்பைன்சின் காடுகள் முழுவதும் அழிவுக்குட்படுத்தப் பட்டதும் இவ்வகைச் சித்தாந்தத்தின் உதவியினாலேயே நடந்தேறியது. பின்நவீனத்துவம்   தொழில்துறையில் மட்டும் தன் ஆதிக்கத்தை நிறுத்திக் கொள்ளாமல் அது அரசின் உருவாக்கத்திலும் கொள்கை முடிவிலும் ஆதிக்கம் செலுத்தியதால் நினைத்ததை யெல்லாம் செயல்படுத்துவது முதலாளியத் திற்கு சுலபமானதாக அமைந்தது.

அழிவும் தீர்வும்

       கூறப்பட்ட திருப்பூரோ, மியான்மரோ, பிலிப்பைன்சோ அறியப்பட்ட அழிவின் அடையாளங்கள். இன்னும் இவைபோன்று வெளி உலகம் அறியாத ஆனால் சூழலியல் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் பெரியபெரிய மலைகள், ஆறுகள், கடல்கள் அனைத்தும் பொது வெளியில் பொதுவிவாதத்திற்கு வரவில்லை. அவற்றைப் பொது விவாதமாக ஆக்கவிடாமல் தடுத்து நிறுத்துவதில் பின்நவீனத்துவத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது.

       இந்தியா போன்ற வேளாண் சமூகம் கொண்ட அமைப்பில் பின்-தொழிற்துறை என்பது சாத்தியம் இல்லாததாகவே இன்று இருக்கிறது. இதன் உற்பத்தி முறை என்பது தேவை சார்ந்ததாகவும், பிராந்தியம் சார்ந்ததாகவும் மாற்றியமைக்கப்பட வேண்டு்ம

       உற்பத்தியின் மூலவளங்கள் மறு ஆக்கத்திற்கு உட்பட்ட அளவிலேயே பயன்படுத்தப்பட வேண்டும்.

       தாராளமய பொருளாதாரமும் ஊக வணிகமும் சார்ந்த சந்தை முறையை முற்றிலும் தடுக்கவேண்டும்.

       இவ்வகைச் சந்தைப்படுத்தலில் நகரமயமாதல் முக்கிய பங்குவகிக்கிறது. அது தவிர்க்கப்பட்டு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரவலான பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

       உற்பத்தியில் உழைப்பிற்கான பாத்திரம் மதிப்பிடப்படுவது போல இயற்கையிடமிருந்து எடுக்கப்படும் மூலங்களுக்கான பாத்திரமும் மதிப்பிடப்பட வேண்டும்.

       கூறுகளாகப் பிரித்து நடத்தப்படுகிற மிகை உற்பத்தியானது தடை செய்யப்பட வேண்டும்.

       பின்ஃபோர்டியம், பின்தொழிற்துறை யைத் தூக்கிச் சுமந்துவரும் பின்நவீனத் துவத்திற்கு மாற்றான கூட்டு உற்பத்திமுறை சார்ந்த கோட்பாடுகளை பரவலாக்கப்பட வேண்டும். பொது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட  வேண்டும்.

Leave a comment

Trending