முப்பரிமாணம் : நூல்வழிப்பயணம் 4
அன்பாதவன்
பச்சையப்பாத்திரம், செருக்களம் கீழொரு குருதிக்குழல், காயகல்பம்

அன்பாதவன்
தமிழிலக்கிய நீண்ட வரலாற்றில் புனைவுகளால் நெய்த பதினங்களின் இருப்பும், வளர்ச்சியும் மிக முக்கியமான இடத்தைக் கைக்கொள்வன. காரணம் இத்தகைய புதினங்கள் காலத்தின் பதிவுகள் என்பதோடு அந்தந்தக் காலக்கட்டத்தில் மொழி, பண்பாடு, வெகுமக்கள் வாழ்வியல், இனவரைவியல் என்கிற விழுமியங்களைப் பதிவு செய்யும் முக்கியப் பங்காற்றுகின்றன .இம்முறை மூன்று வித்தியாசமான நூல்கள் முப்பரிமாணத்தில் இடம் பெறுகின்றன.
பரிமாணம் 1
விருட்சங்களைக் குறித்த (க)விதைகள் :
பச்சையப் பாத்திரம் – சுகபாலா
சுகபாலா யாரென அறியேன்; நான் மதிக்கும் சக்தி அருளானந்தமும், பொன்-குமாரும் சேலம் சந்திப்பில் ஒரு ஹைக்கூ உரையாடலுக்கு வந்திருக்க உடன் வந்திருந்த சுகபாலா, தனது பச்சையப் பாத்திரம்’ – தொகுப்பை வழங்கினார்.
சேலத்தில் வாசிக்கத் தொடங்கி கோவை பயணிப்பதற்குள் மனசுக்கு மிகவும் நெருக்கமாகி விட்டார் சுகபாலா…!

காரணம்….. பச்சையப் பாத்திரம் நூலின் கவிதைகள்….! எனில் அது மிகையாகாது.
தமிழின் நவீனக் கவிஞர்களில் பலரும் அல்லது கவிதைகளில் பலவும் சமகாலத்திலிருந்து அந்நியப்பட்டு பயணப்படுகையில் சுகபாலா அழிந்து வரும் மரங்களைக் குறித்து கவனம் கொள்கிறார்.
எட்டுவழிச் சாலைக்காக பெருந் தருக்கள் அழிக்கப்படும் சேலத்திலிருந்து இப்படியோர் குரல் வருவது சிறப்பு.
“இருபதாண்டுகளுக்கு முன்பு குடில்களில், தெருக்களில், கோவில்களில், பொதுவிடங்களில், இருந்த அரசமரம், அத்திமரம், ஆலமரம் போன்ற பெருமரங்களை இப்போது காண முடியவில்லை” – என ஆதங்கிக்கும் சூழலியர் கோவை சதாசிவம் அவர்களின் கவலைக்கு மருந்தாய் சுகபாலாவின் ‘பச்சைய பாத்திரம்’
‘ ‘ஆதித்தாய் கடித்த
ஆப்பிளில் தொடங்கி
இன்று வரை பறித்துக் கொண்டிருக்கிறோம்
அதுவும்
கொடுத்துக் கொண்டிருக்கிறது
மரம்
வெட்ட வெட்ட துளிர்க்கின்ற
‘பச்சை’யப் பாத்திரம்’
ஒரே பாடுபொருளைக் கொண்டு ஒரு கவிதைத் தொகுப்பினை உருவாக்கும் முயற்சிகள் தமிழில் நிறையவே உண்டு எனினும் ‘மரம்’ எனும் உட்பொருள் வேறுவேறு குறியீடாக, படிமமாக விரிகிறது சுகபாலா-வின் கை வண்ணத்தில்….
‘உன் மீதான காதலை
ஒரு வரியிலோ ஒரு கவிதையிலோ
என்னால் சொல்லிவிட முடியாது
வா!
வாழ்ந்து காட்டுகிறேன்
ஒரு மரத்தைச் சுற்றித்
தவழ்ந்து படரும் கொடிபோல’
– எனக் காதலுக்கு குறியீடாகும் மரமே வேறு கவிதையில் ஒரு விடுதலைப் போராட்டத்தை இரத்தினச் சுருக்கமாய் பதிவு செய்கிறது.
‘சிறிதேனும் வளைந்து கொடுத்திருந்தால்
அடித்த காற்றில் முறிந்திருக்காது அந்த மரம்
எதிர்த்து நின்ற மரத்தைப் பார்த்த போது
ஏனோ நினைவில் வந்தனர்
எம் மாவீரர்கள்’
ஒரு எளியகாட்சி பேரழிவொன்றினைக் குறிப்பால் உணர்த்துகிறது வாசகனுக்கு :
“பென்சில் சீவும்
ஒவ்வொரு முறையும்
உதிர்ந்து வீழ்கின்றன
உலர்ந்த மரப்பூக்கள்”
நான்கே வரிகளில் குறும்படமொன்றினைப் படைக்கும் ஆற்றல் நிறைந்தவராக சுகபாலா…
‘அசைந்து அசைந்து ஆடும்
சாய்வு நாற்காலி
நினைவுகளால் நெய்கிறது
பெருங்காட்டை’
உயிர்க் குலத்திலேயே மிக உயரமாக வளரும் இனம் மர இனம்தான். அந்த மர இனத்திலிருந்து சின்னஞ்சிறிய கவியுலகைப் பாலா படைத்துள்ளார். ஒவ்வொரு சொல்லிலும் மரவாசம்! மண் வாசம்- என மனதாரப் பாராட்டும் மூத்த கவி ஈரோடு தமிழன்பன் – காரணம் சுகபாலாவின் ஒற்றை வரி :
‘அறம் சார்ந்தே வாழ்கிறது மரம்’
யதார்த்தத்திலோ வாழ்வின் அறங்களையெல்லாம் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். கவிஞர் வைகைச் செல்வியின் ஒரு கவிதைத் துண்டு காட்டும் காட்சியில் அதிர்வு!
“ காடுகள் மறைவது தெரிகிறதா”
உடுக்கை இழந்தும் மானத்தோடு
மனிதன் வாழ்வது புரிகிறதா?
கூட்டை இழந்த பறவையோலம்
சாட்டையடி போல் கேட்கிறதா? இங்கே
கருவில் பெண்ணை அழிப்போர்க்குக்
காட்டை அழித்தல் பெரிதாமோ?”
– இதே அறச்சீற்றம் சுகபாலாவின் வரிகளிலும் எதிரொலிக்கிறது :
‘ஒரு செடியைக் கூட
வளர்க்காத நீங்கள்
மரத்தைப் பற்றி பேசாதீர்கள்
உங்களுக்கு
மரத்தின் மொழியும் தெரியாது
மரத்தின் வலியும் தெரியாது’
வாழ்விலிருந்து எவ்வித அனுபவங்களுமின்றி, வார்த்தைக் கூட்டங்களை நம்பி படைப்பாளன் எனச் சொல்லிக் கொள்ளும் போலி இலக்கியவாதிகளின் மீதான சாட்டையடியாக ஒரு கவிதை :
‘மரம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்
மரம் பற்றி எழுதி கொண்டிருக்கிறேன்
மரத்தை வரைந்து கொண்டிருக்கிறேன்
ஒரு மரத்தை வளர்க்க
எந்த முன்னேடுப்பும் செய்யாத நான்’
போராட்டமென்ற பெயரில் மரங்களை சிதைத்த கூட்டத்துக்கு மட்டுமல்ல… ஏனைய அனைவருக்கும் கவிஞர் சொல்கிற செய்தி இதுதான் :
‘எல்லா மரங்களும் போதிகளோ
எல்லோரும் புத்தனாகலாம்
நீங்கள் சித்தார்த்தன் என்பதை
உணர வேண்டும்”
பச்சையப் பாத்திரம் – பசுந்தருக்களுக்கான அட்சயப் பாத்திரம்.
————————————————-
பரிமாணம் 2
ஞாபகப் பட்சிகளின் வலசைப் பயணம்
செருக்களம் கீழொரு குருதிக்குழல்– கவிதைகள் – தீம் விக்னேஷ்
தொண்ணூறுகளில், ஆசான் அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவினைத் தொடர்ந்து புதிய பாய்ச்சலாய் எழுந்த தலித் இலக்கியம், கவிதையில் சூல் கொண்டாலும், ‘தன் வரலாறு‘ எனும் சுயசரிதை வகையிலேயே சிறப்பு பெற்றது.
மராத்திய, கன்னட தலித் படைப்பாளிகளுள் பலரும் ‘தன் வரலாறு‘ வழியாகக் காலத்தின் பதிவை தலித் இலக்கியத்துக்கு வழங்கினர்.
தமிழில் அப்படியொரு முயற்சியாக முனைவர் கே.ஏ.குணசேகரன் (கவிஞர், நாடக செயற்பாட்டாளர், மக்களிசைக் கலைஞர்) அவர்களின் ‘வடு‘ எனும் நூலே முதன்மையான நூலாகக் கருதப்படுகிறது.
பாமா-வின் கருக்கு சிலுவை ராஜ் சரித்திரம் போன்றவற்றில் படைப்பாளிகளின் வாழ்க்கை புதைந்திருந்தாலும், ‘புனைவு‘ – என்கிற வகையில், அந்நூல்கள் புதினங்களாகவே வகைப்படுத்தப் பட்டன.
கே.ஏ.குணசேகரனுக்கு, அடுத்ததாக, தீம் விக்னேஷ் கவிநடையில் தன் கல்லூரி கால வாழ்வினை ‘செருக்களம் கீழொரு குருதிக்குழல்‘ எனும் கவிதைத் தொகுப்பாக வடித்துள்ளார்.
கவிஞர் விக்னேஷ், விழுப்புரம் நகரின் புகழ்பெற்ற ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியான ‘பெரிய காலனி‘ எனும் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். தமிழில் M.A., M.Phil., படித்து, இன்று நாமக்கல் நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரியும் இளைஞர்.
‘நெடும்பாதையே
இன்னமும் வேதனை தா! சோதனை தா!
இன்னமும் காயம் தா! அவமானம் தா
வலிக்கத்தான் செய்யும்
இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன்‘ (பக். – 5)
என யதார்த்தமுணர்ந்த விக்னேஷ், தனது வாழ்வனுபவப் பதிவுகளினால் நூலின் பெரும்பாலான கவிதைகளில் வாழ்கிறார்.
‘நான் எழுத வேண்டுமென்று பெரு விருப்பம் கொள்வதில்லை. இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த வெப்பமே என்னை எழுத உந்துகிறது. நான் என் கதையை விவரிக்கும் வேளையில் மொழி வழியே கடந்த காலங்களுக்குச் சென்று வந்த அனுபவம் அற்புதமானது, அவஸ்தையானது‘ – என முன்னுரைக்கும் தீம் விக்னேஷ் – சொற்றொடர்களில் உறைந்திருக்கிறது கசப்பான உண்மை.
விழுப்புரம் நகர் தந்த, பிரபல எழுத்தாளர் விழி பா. இதயவேந்தனின் கதைகளை வாசித்தவர்கள் அறிவார்கள். பல கதைகளிலும் அவரே பாத்திரமாகி இருப்பார். காரணம் இந்த வாழ்வு தந்த கசப்பு அத்துனைப் பெரியது! அளவிட முடியாதது! போலவேதான் தீம் விக்னேஷ் கவிதை வரிகளுக்குள் தன் (கல்லூரி கால வாழ்வு வரை) இருப்பைப் பதிவு செய்கிறார்.
‘வரமாய் நிற்கும் மரம்‘ – விக்னேஷின் பள்ளிப் பருவமான விழுப்புரம் T.E.L.C. பள்ளிக்கூடப் பதிவெனில், ‘ராஜகாவியம்‘ – அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி – வாழ்வின் ஓரங்க காட்சி!
‘சிற்றுண்டி‘ கவிதை, கனவுக்கும், யதார்த்தத்துக்கும் உள்ள இடைவெளியைச் சொல்வது, அதாவது முட்டை பப்ஸ்-க்கும், கடலை மிட்டாய்க்குமான தொடர்பு அது! அத்தனைக்கும் ஆசைப்பட இயலாதவர்கள் ஆதிகுடியினர்!
‘குண்டடிச்சா ராசு குழிபூந்தா ராசு‘ – எனும் நீள் கவிதை பால்யத்தின் ஒரு துண்டு! சின்ன வயதில் கோலி குண்டு விளையாட்டின் ஞாபகங்கள் வரிகளாய் உருள, கவிதையின் வெற்றியாய்ப் பேச்சுமொழி! உண்மையில் விக்னேஷ், இந்தப் பேச்சுமொழியை, கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். கவிதைக்குள் புதியதொரு அனுபவம் தந்திருக்கும்.
‘பெரிய காலனியிலிருந்து ஒரு தமிழாசிரியர்‘ – தன் பேச்சுமொழியை விமர்சிக்கும் கல்லூரி நிர்வாகம் குறித்தானது. உண்மையில், வட மாவட்ட பேச்சுமொழி – பெரும்பாலும் ‘ஒருமை‘யினாலானது. ‘நீ‘, ‘வா‘, ‘போ‘ – என்பது வெகு சாதாரணம், ஆனால் பிற மாவட்டங்களில் இம்மொழி ‘ஒருமை‘த் தன்மையினாலேயே கேலி செய்யப்படுவதும், புறக்கணிக்கப்படுவதாகவும் உள்ள கசப்பின் பதிவு.
‘அது ஒரு அழகிய தெரு‘ – கவிதையில் தூய்மைப் பணியாளரின் அல்லல் பதிவு செய்யப்பட்டுள்ளது. கவிதைக்குள் ஒரு சிறுகதை ஒளிந்திருக்கிறது.
யோசிக்கிற எல்லாவற்றையும் கவிதைக்குள் சொல்லிவிட வேண்டும் என்பது கூட ஒரு பேராசை (அ) சரியான திட்டமிடலின்மை. படைப்புக்குள் இருக்கும் பருப்பொருளுக்கு (Content) ஏற்ப, படைப்பே தன் வடிவத்தை தகவமைத்துக் கொள்ளும். கவிஞரும் இதை உணர்வது படைப்புவெளிக்கு நல்லது.
தீம் விக்னேஷ் ஒரு சில கவிதைகளில் சுயசாதி விமர்சனங்களையும் பதிவு செய்வது சிறப்பெனில், கவிதை நடையொன்றே ‘கவிதைகள்‘ எனும் முத்திரை பெற்றுவிடாது என்பதையும் உணர்ந்து தன்னை இன்னமும் வளமாக்கிக் கொள்ளல் அவசியம்.
‘வார்த்தைகளுக்குப் பின் நிலவும் மவுனம் தான் இலக்கியம். படித்து முடித்த பிறகு உங்கள் சமநிலையைக் குலைக்க வேண்டும், அல்லது வாசகனை முன்பை விட மேன்மையடையச் செய்ய வேண்டும், அல்லது பிரமிக்க வைக்கவும், அதிசயிக்க வைக்கவும் வேண்டும், சலிப்படைய வைக்கவும் வேண்டும்‘ என்கிற எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷின் அறிவுரை, தீம் விக்னேஷ் போன்ற இளைய படைப்பாளிகளுக்கு வழிகாட்டுவது.
எவ்வழி நல்வழியென, தமிழ் போதிக்கும் கவிஞர் அறிவார்; வெல்வார்!
***
பரிமாணம் 3
அமெரிக்க வாழ்வின் மீதான ஆக்டோபஸ் பார்வை
காயகல்பம் O புதினம் O அமர்நாத்
மக்களின் வாழ்வியல் சார்ந்த பண்பாட்டு அடையாளங்களைப் பரந்த தளத்தில் பதிவுசெய்வதற்கு ஏற்ற வடிவமாக நாவல் திகழ்கிறது. எனவேதான் தொடக்ககாலப் படைப்பாளர்கள் எல்லோராலும் கவனிக்கப்பட்ட இலக்கியவகையாக நாவல் இருந்துள்ளது. நாவல் என்கிற இலக்கியவகை ஐரோப்பியர்கள் வருகையால் 19ஆம் நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த நவீன வடிவமாகும்.
சென்னை, அண்ணாசாலையில் உள்ள அமெரிக்கத் தூதரக வாசலில் விசாவுக்காகக் கால்கடுக்க வரிசையில் நிற்கும் உள்நாடு வாழ் இந்தியர்களைப் பார்த்திருக்கிறீர்களா… கண்களில் டாலர் கனவுகள்! அமெரிக்கா குறித்த ஆயிரமாயிரம் கற்பனை! பச்சை அட்டை பசி! நல்லது! அவரவர் தேவைகள்; அபிலாசைகள்!
அமெரிக்க தேசத்தின் BRENTWOOD மாநிலத்தில் வசிக்கும் படைப்பாளி அமர்நாத்தின் காயகல்பம் புதினம், அமெரிக்காவில் குடியேறி வாழ்வினைத் தொடரும் சிலரின் கதைகள் மூலம் இதுகாறும் காட்சிப்படுத்தாத அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வசிக்கும் தமிழர் வாழ்வின் மீதானதொரு ஆக்டோபஸ் பார்வை வழியாகப் பேசுகிறது. ‘வெல்லும் சொல்’ புதினமிது.
“நாவல் என்பது முழு மொத்தமான மனித அனுபவத்தையும் வாழ்க்கை முறைகளையும் வெளிப்படுத்தக்கூடிய ஓர் இலக்கிய வடிவமாகும். காலம், இடம், சமூகம், தனி மனிதன், சமூக உறவுகள் ஆகியவை நாவலின் அடித்தளமாகும். ஆகவே நாவலின் மொழி ஏதோ ஒரு குறிப்பிட்ட வகை மொழியாக அமைவது சாத்தியம் அல்ல. பதிலாக காலம், இடம், சமூகம், தனிமனிதன், சமூக உறவுகள் ஆகியவற்றுக்கேற்ப வேறுபடும் எல்லாவித வகை மொழிகளையும் அது உள்ளடக்குகின்றது. இவ்வகையில், இலக்கிய வழக்கை மட்டுமன்றி எல்லா வகையான பேச்சுவழக்குகளையும் நாவல் வரையறையின்றிக் கையாள்கின்றது. சுருக்கமாகச் சொல்வதானால் நாவலுக்குப் புறம்பான மொழிப் பிரயோகங்கள் எதுவும் இல்லை எனலாம். ஏனெனில் நாவலுக்குப் புறம்பான வாழ்க்கை அனுபவங்கள் எவையும் இல்லை. அவ்வகையில் மொழியும், வாழ்வும் நாவலுடன் இரண்டறக் கலந்துள்ளன. ஆகவே நாவலின் மொழி முழு மொத்தமான மொழிப்பயன்பாட்டையும் உள்ளடக்குவது தவிர்க்க முடியாததாகின்றது.” என்பார் பேராசிரியர் எம். ஏ. நுஃமான்.
காயகல்பம், எனும் தமிழின் தொன்மையான சங்கதியிலிருந்து ஒரு நூலிழையை எடுத்துக்கொண்ட அமர்நாத் சமகால அறிவியல் கண்டுபிடிப்புகளோடு கலந்து தந்திருப்பதில் வாசகனுக்கு கிடைப்பது புதியதொரு உள்ளடக்கம்!
காயகற்பம் என்பது பல்லாயிரம் ஆண்டுக்காலம் உடலினை வாழ வைக்கும் முறையாகும். காயம் என்ற சொல் உடல் என்பதை குறிக்கிறது. அழுகணிச் சித்தர் பாடல்களில் இந்த காயகற்பம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும்.
வயோதிகமும் மூப்பும் மரணமும் மனித வாழ்வில் சாஸ்வதம்; நிலையாமையே நிலையானது; மாறுதல் ஒன்றே மாறாதது. மரணத்தை ஒத்திப்போடலாம்; சாவிலிருந்து விடுபட, புத்தன் சொன்ன கடுகு வாங்கி வந்தால் மட்டுமே சாத்தியம்
உயிர் வேதியியல் விஞ்ஞானி சாமிநாதன் கண்டுபிடிப்பான சாவிஸில்அமின் ஒரு வரப்பிரசாதம் நன்றாக சுத்திகரித்து தினம் கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டால் மங்கும் இளமை பொங்கும்; மூப்பு தள்ளிப்போகும்.
ஆய்வுக்கு உதவிய அனைவரின் பெயரையும் குறிப்பிடுவது அறிவியல் மரபு! வெறுமனே பன்னிரெண்டு மணிநேர உழைப்பை நல்கி வேதியியல் பொருளைத் தந்த சாமிநாதனை பெரும் சபையில் நன்றியோடு பாராட்டும் ஜெர்ரிஒரு புறமெனில் , மரபு மீறலாய்ப் பெருமளவு உதவிய சாமிநாதனைப் பற்றிக் குறிப்பிடாத, நன்றி மறந்த தெல்மா மறுபுறம். நிகழ்ந்திருக்கும் அறமீறலுக்கு எதிராக சாமிநாதனால் எதுவும் செய்ய இயலாது; போராட்டக் களமல்லவே ஆய்வுக்காலம்! இருவேறு மனிதர்களின் அறமும், அறமீறலும் ஒரே நேரத்தில் பதிவு செய்யப்படுகிறது; எதிர்பாராத தருணங்கள் தானே வாழ்வின் சுவாரஸ்யம்!
முதுமையின் கரையினில் நிற்கும் சாமிநாதனுக்கு ஒர் சிந்தனை ”ஓய்வு என ஒயத்தான் வேண்டுமா?” (பக்26). ஆனால், அமர்நாத் அற்புதமான காட்சி ஒன்றினால் இயற்கையின் வலிமையை வரைகிறார்.
“உதிர்ந்த இலைகளை சேகரிக்கும் இயந்திரத்தின் ஒசை எங்கிருந்தோ காதில் வந்து விழுந்தது. சாமியை நிகழ்காலம் அழைத்தது. காலத்தின் ஒட்டத்தை யாரும் நிறுத்தமுடியாது” (பக் 26)
ஆராய்ச்சி விஞ்ஞானி எந்த மருந்தையும் பரிந்துரைக்க இயலாது; அதிலும் தனக்கே மருந்தாக உட்கொள்வது பெருங்குற்றம் என்கிறது ஆராய்ச்சி அறிவியல் அறம்.
“மக்களுக்குப் பயன்படக் கூடிய ஆபத்தில்லாத ஒரு மருந்து பெரும் அளவில் எளிதாகத் தயாரிக்கக் கூடிய அதை இலவசமாக, இல்லை மலிவாக மக்களுக்கு வழங்குவதுதான் சமுதாய நீதி, அமெரிக்க வர்த்தக – அரசியல் சூழ்நிலையில் அவனால் அதைச் சாதிக்க முடியாது. சுயநல சக்திகளுக்கு எதிராகப் போராட முடியாத இயலாமையின் கனம் அவன் இதயத்தை அழுத்தி வருத்தியது.”[பக் 36]
ஒரு படித்த விஞ்ஞானியின் கையாலாகா இயலாமையை மிக எளிமையான மொழியில் அமர்நாத் பதிவிடும் வேளையில் இயக்குநர் ஜனநாதனும் ”ஈ” திரைப்படமும் வாசகர் நினைவில் வந்து போவது தவிர்க்க முடியாதது.
சரண் சங்கீதராஜ்! கொள்கை பிடிப்புடன் கூடிய ஒர் முக்கிய பாத்திரம்
அமெரிக்க சந்தைப் பொருளாதாரமும், அறிவியல் கண்டுபிடிப்புகளும், வர்த்தகர்களின் சாமர்த்தியமும் சேர்ந்து செய்த சாதனையே நுகர்வுப் பண்பாடு (CONSUMERISM) கைக்கு வந்த டாலரை மனம் போல செலவழிக்கிறது.
இன்று நமக்கு எத்தனை அழைப்பு வருகிறது.? உங்களுக்கு கடனட்டை வேண்டுமா… பெர்சனல் லோன் வேணுமா… அது வேண்டுமா இது வேண்டுமா.. என அதுவும் 0% வட்டி என்ற மஹாபொய்யோடு நுகர்வுக்கலாச்சாரமென்பது நம் மீது வீசப்பட்டிருக்கும் மாயவலை! விஷவலை”
“அவசியத்துககு மேல பணம் சம்பாதிக்க காரணம் இருக்கனும் அதுவும் நல்லதா இருக்கனும்” (பக் 86)
என்ற தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என வாழ்பவர்… அதுவும் நுகர்வியம் பார்த்தீனியமாய் பரவியிருக்கும் அமெரிக்காவில்.
”உலகப் போருக்குப் பின் வந்த முப்பது ஆண்டுகளில் நடந்த பொருளாதார வளர்ச்சி, சூழலியலாளர்களின் குறுக்கீடு இல்லாமல், அதே வேகத்தில் தொடர்ந்து இருந்தால்…. இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் அதிகப்படியாக 30 000 டாலர். அப்பணத்தை எப்படியெல்லாம் செலவழிக்கலாம்? இன்னும் சொகுசான ஊர்தி, சௌகரியமான பெரிய வீடு, பூமியின் வரைபடத்தில் பார்க்கும் இடங்களுக்கு எல்லாம் பயணங்கள்.”[ பக் 94]
சரண் வழியாக அமர்நாத் விவாதப் பொருளாக ஆக்கியிருக்கும் ஒரு சங்கதி விருப்பச்செலவுகள்!
”விருப்பச் செலவுகள் ஒரு மனிதனின், ஒரு சமுதாயத்தின், ஒரு நாட்டின் பொருள்வளமைக்கு அளவுகோல், அடிப்படைத் தேவையான உணவுக்கே வீட்டில் சான்ட்விச் செய்து தின்பதா, பீட்ஸா வரவழைப்பதா, இல்லை ஐந்து நட்சத்திர உணவகம் போவதா என்ற கேள்வி, வளமான நிதி நிலைமையின் அடையாளமாகத் கருதப்படுகிறது. அதையும் தாண்டி….. எந்தவித ஊர்தி, எவ்வளவு பெரிய வீடு, உலகின் எந்த மூலையில் எவ்வளவு பெரிய வீடு, உலகின் எந்த மூலையில் எவ்வளவு நாட்களுக்கு விடுமுறைப் பயணம் – என எல்லையற்ற விருப்பங்கள் வளர்ந்துவிட்ட நாட்டு மக்களின் நடைமுறையில் பழகிவிட்ட வாழ்க்கைமுறை[பக் 91]
”கூடுதல் வருமானத்தை எப்படியெல்லாம் செலவழிக்கலாம் அல்லது சேமிக்கலாம்” வாழ்தலின் கோட்பாடு குறித்து வாசகன் சிந்தனை விவாதம் செய்ய நல்தளம்.
“அது தான் அமெரிக்க வர்த்தகத்தின் தந்திரம். எந்தப் பொருளுக்கும் முழுவிலை சொல்லமாட்டாங்க. நாம் அதைப் பயன்படுத்தி நமக்கு அது பழக்கமான பிறகு தான் நமக்கு அது தெரியவரும். அப்ப நம்மால அதிலேர்ந்து விடுபட முடியாது. டெலிவிஷனும் அப்படித்தான். ஆரம்பத்தில் நம்மகிட்ட சுலபமாவந்து ஒட்டிக்கும். அப்பறமா அதுக்குக் கொடுக்கப்போற விலை – அவசியமில்லாத பொருள்கள் மேல ஆசை, வீடு நிறைய தேவையில்லாத சாமான்கள்” [பக் 112]
$ 1959களின் இறுதியில் திருச்சி வானொலி நிலையத்தில் இருந்து வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவுக்கு நீண்ட தரலாம் அமெரிக்கா வந்து Orbe with wiNd என்ற நதிவழிபோகும் கொள்கையோடு வாழும் மரியதாஸ் மற்றுமொரு சுவாரஸ்ய மனுஷர்.
“அது மட்டுமில்ல, இது தான் அமெரிக்க வாழ்க்கைன்னு ஒரு போலியை தினம் காட்டினாங்க, இப்பவும் செய்யறாங்க, அதை நம்பி அதில என்னை இழந்துட்டேன். ஜேம்ஸ் மரியதாஸ் என்கிற தனிப்பட்ட மனிதனுக்கு பதிலா அடையாளம் சொல்லமுடியாத ஒன்பது இலக்க சோஷியல் செக்குரிட்டி நம்பர், குழந்தைகளையும் எளிமையில திருப்திப்படும் மனப்பான்மையோடு வளர்க்கத் தவறிட்டேன். ஒருவன் மட்டும் தப்பிட்டான். அதுகூட என்னால இல்ல. குடும்பத்தில் மத்தவங்களைப் பார்த்து, அவனுக்கே சுயமா ஞானம் வந்தருக்கணும்.”
“மேல்மனம். “வேலைவிலகல் ஒன்றும் பிரமாதம் இல்லை” என்கிற சமாதானத்தைக் கேட்கும். ஆழ்மனம் சண்டித்தனம் செய்யும் குழந்தையைப் போல. அதற்கு நாள்முழுக்க வீட்டில் அடைந்து கிடக்கணுமோ என்கிற சந்தேகம்.”[பக் 122]
“நல் எழுத்தின் அறங்காவலர் அவர். அடிப்படையில் அமர்நாத்தின் மனம் இந்திய ஆன்மிக மனம். அறத்தைப் புறந்தள்ளி அவரால் ஒரு வாழ்க்கையைக் கற்பனை செய்யக் கூட இயலாதிருக்கிறது. இலக்கியத்தின் ஆகப் பெரும் பயன் அறன் வலியுறுத்தல் என்பது அவரது துணிபு. வறுமையிலும் அவர் பாத்திரங்கள் சீர்பட நேர்பட வாழ்கிறார்கள். வாய்ப்புகள் வந்தபோது ஒருவர் செல்வம் நோக்கி நகர்ந்தால், அவர் கூடவே வரும் இன்னொரு பாத்திரம் செல்வம் மற்றும் புகழ் வரும் வழியின் நேர்மையை, அதன்வழி நியாயத்தை உரக்க முழங்குகிறது. மனசாட்சியின் குரல் எழுவது அங்கே தவிர்க்க முடியாததாகி, முக்கியமானதாகி விடுகிறது. சற்று திரிந்தாப் போல அமைகிற பாத்திரங்களும், அறன் விலகி ஆனால் இறுதியில் மீளவும் தர்ம சிந்தனை வயப்பட்டு விடுகின்றன.
மென்மையான மனிதர் அமர்நாத் அவரது பாத்திரங்களும் லட்சியங்களும் அதுசார்ந்த கனவுகளும் அந்தக் கனவுகளைச் செயலாக்கும் வேகமும் உக்கிர முனைப்பும் கொண்ட பாத்திரங்கள் அவை. லட்சியவாதிகள் அற்ற சமூகம் சவலைப்பிள்ளை அல்லவா!”-
என முன்னுரைக்கும் மூத்த எழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணன் சொற்களில் உண்மையின் பிரகாசம்.
மனிதர்களின் அறம் கூட காயகல்பம் போலத்தான்; மரணிப்பதில்லை.

Leave a comment