இலக்கியத்திலும் திரைப்படத்திலும் மக்களின் நம்பிக்கைகளும் வழக்காறுகளும்

ஆய்வாளர் பெயர்
வே.அரிகிருஷ்ணன்
முனைவர்ப் பட்ட ஆய்வாளர்
தமிழ் முதுகலை & ஆய்வுத்துறை
புதுக்கல்லூரி(தன்னாட்சி), சென்னை 14

நெறியாளர் பெயர் :

இலக்கியத்திலும் திரைப்பாடலிலும் எளிய மக்களின் நம்பிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அப்படி புழக்கத்திலுள்ள பல நம்பிக்கைகளையும் வழக்காறுகளையும் திரைப்பாடலாசிரியர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் பாடலில் பயன்படுத்தியுள்ளனர். டெய்லர் என்னும் மானிடவியல் பேரறிஞர் மக்களின் அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கம், சட்டம், வழக்கம் முதலியவைதாம் பண்பாடாக மலர்கின்றன என்று கூறுகின்றார். வாழ்க்கை முறைகளின் கூட்டுச்சேர்க்கை பண்பாடு என்கிறார் மாலினோவஸ்கி. பண்பாட்டினை வாழ்முறையாகக் கருதினால் மனிதனின் சடங்குகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் இதன்கண் அடங்கிவிடுகின்றன. பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் சமுதாயத்தின் தேவைகளின் அடிப்படையில் தோன்றியவையாகும். நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் பண்பாட்டு வளர்ச்சியின் படிக்கற்கள் எனலாம். அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களை நம்பிக்கை என்பர். அவை மக்களின் வாழ்வோடு கலந்திருக்கின்றன. வழி வழியாக மக்கள் பின்பற்றி வரும் நம்பிக்கைகளையும் வழக்காறுகளையும் ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

நம்பிக்கை மற்றும் வழக்காறுகள் பிறத்தல்

நம்முடைய பாட்டன், பாட்டியிடமிருந்தோ வேறு எவரிடமிருந்தோ காலங்காலமாகப் புழங்கி வரும் கதை, கவிதை, பாடல், பழமொழி, விடுகதை, பழக்கவழக்கம் ஆகியவற்றை வழக்காறுகள் என்கிறோம். நம்பிக்கை என்பது ஒருவருக்கு ஒருவர் வேறுபடுவது. நாம் நம்புவதை இன்னொருவர் மறுப்பதால், அது நம்பிக்கை இல்லை என்று ஆகி விடாது. நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு, அம்மக்கள் சமுதாயத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

மனிதனின் தன்னல உணர்வும் சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன. நம்பிக்கைகள் காலம் காலமாகத் தொடர்ந்து வரக் காண்கிறோம். நம்பிக்கைகள் பெரும்பாலும் அச்சவுணர்வின் அடிப்படையாகத் தோன்றியதாகக் காட்சியளித்தாலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை உணராத பொழுதும் மனித மனமானது சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கிறது. அவைகளே நம்பிக்கைகளாக உருவாகின்றன. மனித மனத்தின் விளைவாக நம்பிக்கை தோன்றுகின்றது.

மனிதன் அச்சத்தின் காரணமாக இயற்கையின் தோற்றத்தினையும் செயல்பாடுகளையும் தனது வாழ்வோடு இணைத்து நோக்கிய நிலையில் தோற்றம் கொண்டன எனக் கூறலாம். நம்பிக்கைகள் காலம் காலமாக ஒரு தலைமுறையினரிடமிருந்து மற்றொரு தலைமுறைக்குப் பரவி வருகின்றன. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை பலவித நம்பிக்கைகளைக் கொண்டிருக்க காண்கிறோம். நம்பிக்கைகளே மனித வாழ்வினை இயக்குகின்றன என்று கூறுமளவிற்கு அவன் வாழ்வில் பெரும்பங்கு வகிப்பதையும் காண்கிறோம். மனித வாழ்வில் நம்பிக்கைகள் என்று தோன்றின என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. எனினும் மக்களின் நடைமுறை வாழ்வில் இந்நம்பிக்கைகள் தொடர்ந்து வருவதைக் கூர்ந்து நோக்கின், இதனைச் சமுதாயப் பண்பாட்டின் உணர்ச்சிக் கூறுகளின் தொகுதி எனலாம்.

காரண காரியத் தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிவதை நம்பிக்கை என்றும், சான்றுகளின் அடிப்படையில் காரணகாரியத் தொடர்பின் வாயிலாகவோ விளக்க முடியாதவற்றை மூடநம்பிக்கை என்றும் வகைப்படுத்துவர். மனித வாழ்வில் காணப்படும் நம்பிக்கைகளுக்குக் காரணம் அறிய முடியவில்லை என்றாலும், மனித சமுதாயம் நம்பிக்கை வயப்பட்டு செயல்படுவதைக் காண்கிறோம். ஒரு சமுதாயத்திடம் காணப்படும் நம்பிக்கைகளைக் கொண்டு அச்சமுதாயத்தினைப் பற்றி அறிய முடிகின்றது. தனிமனித நம்பிக்கை காலப்போக்கில் சமுதாய நம்பிக்கையாக மாற்றம் பெறுவதுண்டு.         

சகுனங்கள் (நிமித்தங்கள்) பற்றிய நம்பிக்கை

சகுனம் பார்க்கும் நம்பிக்கை உலகெங்கிலும் காணப்படுகின்றது. பண்டைத் தமிழர் இதனை புள், நிமித்தம் ஆகிய சொற்களால் குறிப்பிட்டுள்ளனர். நிமித்தம் என்பது வாழ்வில் நிகழவிருக்கும் நன்மை தீமைகளைச் சில குறியீடுகளின் வாயிலாக உணர்த்துவதாகும். நிமித்தங்கள் அனைத்தும் நம்பிக்கையின் பாற்பட்டன. நிமித்தங்களை அவற்றின் செயல்பாட்டு விளைவு கருதி இருவகையாகப் பிரிக்கலாம். நற்செயலையும் நற்பயனையும் அறிவிக்கும் குறியினைத் தீ நிமித்தம் என்றும் வகைப்படுத்தலாம். இதனையே நாட்டுப்புற வழக்கில் நல்ல சகுனம் என்றும், கெட்ட சகுனம் என்றும் கூறுவர். ஒரு செயலைத் தொடங்கும்போது நல்ல சகுனம் தோன்றினால் அச்செயல் நன்மையாக முடியும் என்றும், தீய சகுனம் தோன்றினால் அச்செயல் தோல்வியடையும் என்றும் நம்புகின்றனர்.

நாட்டுப்புற மக்கள் சகுனங்களில் பெரும் நம்பிக்கையுடையவர்கள். அவற்றிற்குரிய காரண காரியத் தொடர்பு தெரியாவிட்டாலும் முன்னோர்கள் நம்பியதால் இவர்களும் நம்புகின்றனர். கன்னிப்பெண் தண்ணீர் வருதல், வண்ணான் அழுக்குத் துணியுடன் வருதல், பிணம் எதிரே வருதல், சுமங்கலியைக் காணல் போன்றவற்றை நல்ல சகுனம் என்றும், விதவை எதிரே வரல், பூனை குறுக்கிடுதல், ஒற்றைப் பார்ப்பான் எதிரே வரல் போன்றவற்றை கெட்ட சகுனம் என்றும் கருதுகின்றனர். சகுனத்தில் மக்கட்கு நம்பிக்கை உண்டு என்பதைப் பழமொழியே எடுத்துக்காட்டுகின்றன.

“ஆந்தை அலறினாலும் காக்கை எச்சமிட்டாலும் தீது என்பர்

நீர் நிறைத்துவரினும் திருநீறு அணிந்துவரினும் நல்லது என்பர்”

சகுனங்களைச் சிந்தனைநிலை, சொல்நிலை, செயல்நிலை என்ற மூன்று நிலைகளில் காணவேண்டும். சிந்தனை நிலையாவது ஏதாவது ஒரு செயலைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது ஏற்படும் சகுனங்கள் செயல்நிலையானது, ஏதாவது ஒரு செயலைத் தொடங்குவதற்காகப் புறப்படும்போது காணப்படும் சகுனங்கள், இன்றைய நிலையில் பெரும்பாலும் பயணம் புறப்படும்போதுதான் சகுனங்கள் பார்க்கப்படுகின்றன.

நல்ல சகுனங்கள்

  1. அழுக்குத் துணியோடு வண்ணான் வருதல்
  2. தாயும் பிள்ளையுமாக வருதல்
  3. கோயில் மணியடித்தல்
  4. சுமங்கலிகள் வருதல்
  5. கருடனைக் காண்பது நல்லது
  6. கருடன் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் செல்லல்
  7. கழுகு இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லல்
  8. காகம் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லல்
  9. கழுதை கத்துதல்
  10. அணில் வீட்டிற்குள் வருதல்

நாம் பயணத்தை மேற்கொள்ளும்பொழுது மலர், மஞ்சள், குடை, கிளி, மான், பழம், பசு, இரட்டைப் பிராமணர், பல்லாக்கு, வெண்ணெய், தயிர், மோர், மயில், இரட்டை விதவைப் பெண்கள், யானை, தேர், தாமரை மலரைக் காணுதல் போன்றவைகள் நல்ல சகுனங்களாகும். பசு, புலி, யானை, முயல், கோழி, நாரை, புள்ளிமான், கொக்கு ஆகியவை வலப்பக்கமாக வந்தால் நினைத்த காரியங்கள் வெற்றியடையும். எருமை, பன்றி, கரடி, குரங்கு, நாய், கீரிப்பிள்ளை, ஆடு ஆகியன இடப்பக்கம் வந்தால் நல்ல சகுனங்களாகும்.

கெட்ட சகுனங்கள்

  1. பூனை குறுக்கே போதலும் எதிர்படுதலும் கெட்ட சகுனம்
  2. ஒற்றை பிராமணனைக் காணல்
  3. எண்ணெய்ப் பானை எதிர்படல்
  4. விறகுடன் வருபவரைக் காணல்
  5. மண்வெட்டியுடன் எதிர்படல்
  6. தும்மல் ஒலி கேட்டல்
  7. ஆந்தை அலறல்

பயணத்தை மேற்கொள்ளும்போது கோடரி, கத்தி, கடப்பாரை, வீட்டுக்குத் தூரமான மங்கை, பாம்பு, குரங்கு, ஆடு, கழுதை, நெருப்பு, நோயாளி, விறகு சுமை, ஏணி முதலியவற்றைக் காண்பது கெட்ட சகுனமாகும்.

பல்லி சகுனம்

மனிதரால் பார்க்கப்படும் சகுனங்களில் மிக முக்கியமானது பல்லி சகுனம். நமது சமுதாயத்தில் பல்லி சகுனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததால் ‘கௌரி சாஸ்திரம்’ என்ற நூலையே நமது முன்னோர்கள் இயற்றியுள்ளனர். பல்லி சகுனம் என்பது சொல் பலன், விழும் பலன் என இரண்டு வகைப்படும். பல்லி சொல் எண்ணிக்கையைக் கொண்டு பலன் சொல்லுவர். எண்ணிக்கை மட்டுமின்றி திசையை வைத்தும் கிழமையை வைத்தும் பலன் சொல்லுவர்.

சிரசில் – மரணம்

மூக்கில் – நோய்

வயிற்றில் – குழந்தை

குறியில் – கேடு

முழங்காலில் – கலகம்

பாதத்தில் – பிணி

இடக்கையில் – மரணம்

வலக்கையில் – பெரியசாவு

உடம்பில் – தீர்க்காயுள்

பல்லி உடம்பில் விழும் இடத்திற்கு இடம் வேறுபட்ட பலனை உணர்த்துகின்றது. இத்துடன் பல்லிகளின் வருகை, நிறம், இருப்பு நிலை முதலியவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பண்டைத் தமிழரின் நம்பிக்கைகளும் சகுனங்களும்

பண்டைக் கால முதல் மனிதன் இயற்கையோடியைந்து வாழ்ந்து வருகிறான். இயற்கை மாறுதலுக்கேற்ப மனித மனமும் மாறுபடுகின்றது. இயற்கையோடியைந்த மனித வாழ்க்கையில் நம்பிக்கைகள் தோன்றலாயின. உலகெங்கிலும் வாழும் பழங்குடி சமுதாய வரலாற்றை நோக்கினால் இவ்வுண்மை புலனாகும். அதுமட்டுமின்றி கிபி ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த ஆசாரக்கோவை மூலம் பண்டைத் தமிழரின் நம்பிக்கைகளைப் பற்றி அறிகிறோம்.

தொல்காப்பியத்திலே ‘நாளும் புள்ளும் பிறவற்றினித்தமும்’ (தொல் பொருள்-91) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘புள்’ எனக் குறிப்பிட்டது முன்னர் பறவையையும் பிற்காலத்தே சகுனங்களைப் பற்றியும் குறிப்பனவாக அமைந்துள்ளதை ‘வாய்ப்புள் பறவாப்புள்’ குறிப்பிடுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

‘கூகை அலறினால் சாவு வரும்’

என்ற நம்பிக்கை பண்டைத் தமிழரிடையேயும் இன்றும் தமிழகத்தில் நிலவி வருவதை அறியலாம். இதனை புறநானூறு நமக்கு காட்டுகின்றது.

“அஞ்சுவரு குரோஅல் குரலுந்தூற்றும்”

       (புறநானூறு, ப.276)

அதேபோன்று காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்பது அக்கால முதல் இக்காலம் வரை தமிழரிடையே காணப்படும் நம்பிக்கையாகும்.

“மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை

அன்புடை மரபினின் கிளையோடரா”

(குறுந்தொகை, ப.391) எனும் பாடல் இதனைக் குறிப்பிடுகின்றது. ஏதேனும் நல்ல காரியத்திற்கு புறப்படும் பொழுது காகம் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லுதல் நல்லது என நம்புகின்றனர். அதுமட்டுமின்றி சுப காரியங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது விளக்கு அணைந்தால், நல்ல சகுனமாகக் கருதுவதில்லை. இந்த நம்பிக்கை இந்தியா முழுவதும் உள்ளது.

“நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா”

       (புறநானூறு, ப.276) என்ற பாடல் இதனை விளக்குகிறது.

இலக்கியத்திலும் திரைப்பாடல்களிலும் நம்பிக்கை மற்றும் வழக்காறுகள் இடம் பெறுதல்

இலக்கியத்திலும் திரைப்பாடலிலும் வழக்காறுகளும் நம்பிக்கைகளும் வெளிப்படுவதை நம்மால் காண முடிகிறது. உதாரணமாக ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ என்றொரு பாடல் எம்.ஜி.ஆரின் ‘காவல்காரன்’ திரைப்படத்தில் வந்திருக்கிறது. தன்னுடைய நினைவில் வருகிறவர் எதிர்ப்படுகையில், அவருக்கு நூறு வயதை வழங்கிடும் அன்பை அப்பாடல் கொடுக்கிறது.

அதேபோல ‘குமரிக்கோட்டம்’ திரைப்படத்தில் வெளிவந்த

“நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமெனக்

காதல் தேவதை சொன்னால்” பாடலில்

“என் வலது கண்ணும் துடித்தது

உனைக்கண்டேன் இந்நாள் பொன்னாள்”

என்னும் வரிகள் குறிப்பிடத்தக்கது. வலக்கண் துடித்தால் நல்லது நடக்குமென்னும் நம்பிக்கை சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றிருக்கிறது.

பூம்புகாரில் இந்திரவிழா நடந்தபொழுது கண்ணகியின் இடக்கண்ணும் மாதவியின் வலக்கண்ணும் துடித்ததாக இளங்கோவடிகள் எழுதியிருக்கிறார். பெண்களுக்கு இடப்புற உறுப்புகள் துடித்தால் கெடுதலென்றும், வலப்புற உறுப்புகள் துடித்தால் நம்மையென்றும் நம்பப்பட்டிருக்கின்றன. இதற்கு நேர்மாறாக ஆண்களுக்கு வலப்புற உறுப்புகள் துடித்தால் கெடுதி. இடப்புற உறுப்புகள் துடித்தால் நன்மை என்றும் கருதப்பட்டிருக்கின்றன.

கண்ணகியின் இடப்புறக் கண் துடித்ததால் வெகுவிரைவில் மாதவியிடமிருந்து கோவலன் பிரிந்து, கண்ணகியைச் சேர இருப்பதாக இளங்கோவடிகள் சிந்தித்திருக்கிறார்.

“கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்

உண்ணிறை கரந்தகத் தொளித்து நீருகுத்தன

எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன

விண்ணவர் கோமான் விழவுநா ளகத்தென்”      

(புகார்க் காண்டம், ப.114)

எனும் வரிகளில் இரண்டுபேரின் மனவோட்டத்தையும் ஒரே பாடலில் தெரிவித்திருக்கிறார் இளங்கோவடிகள். இதனை உள்வாங்கிய வாலி ‘குமரிக்கோட்டம்’ திரைப்படத்தில் குறித்திருக்கிறார். அதேபோலத் ‘தெலுங்கு அகநானூறு’ எனச் சொல்லப்படும் ‘காதா சப்த சதியிலும்’ வலக்கண் மற்றும் இடக்கண் குறித்த நிமித்தங்கள் இடம்பெற்றுள்ளன.  

              “துடிக்கும் இடக்கண்ணே தொடர்பயன் ஆக

                இப்பொழு திங்கே இனியன் வருமேல்

                வருத்தம் தீர வலக்கண் மூடி

நீண்ட நேரம் நின்னைக் கொண்டே

கண்டு மகிழ்வேன் காதலன் தலையே”

       (அகத்திரை, ப.47)

எனும் சக்தி ஹஸ்தன் பாடல் ஒன்றில், இடக்கண் தலைவனின் வருகையைச் சொல்லித் துடிக்கிறது. அவன் வந்த பிறகு வலக்கண்ணை மூடிக்கொண்டு இடக்கண்ணால் மட்டுமே நெடுநேரம் பார்ப்பேன் என்கிற நயத்தை மு.கு ஜகந்நாதராஜா விளக்க உரையாகத் தந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் நடித்த காவல்காரன் மற்றும் குமரிக்கோட்டத்தில் இடம் பெற்ற பாடல்கள், வெறும் திரைப்பாடல்தானே எனக் கடந்து விடாமல் கவனித்துக் கேட்கும்போதுதான் அவ்வரிகளின் நுட்பத்தை உணரமுடியும். ஜெயலலிதா பாடும்போது, ‘என் இடது கண்ணும் துடித்தது’ என்றும் அதே வரியை எம்.ஜி.ஆர் பாடும்போது ‘என் வலது கண்ணும் துடித்தது’ என மாற்றிப் பாடியிருப்பதில் இலக்கிய அழகியல் ஒளிந்திருக்கிறது.

எழுபதுகளில் வெளிவந்த குமரிக்கோட்டத்தில் இடம்பெற்ற இப்பாடலின் இன்னொரு சாயலை, ஆர்.வி.உதயகுமார் தன்னுடைய ‘சின்ன கவுண்டர்’ திரைப்படத்தில் எழுதியிருக்கிறார். நல்ல படங்களையும் பாடல்களையும் தமிழ்த் திரையுலகிற்குத் தந்த ஆர்.வி.உதயகுமார் ‘கூண்டுக்குள்ள என்ன வச்சு’ எனத் தொடங்கும் பாடலில் சிலப்பதிகாரத்தையும் குமரிக்கோட்டத்தையும் இணைத்து எழுதியிருப்பதை இரசிக்க முடிகிறது. எதார்த்தத்தில் மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்துக் கொண்டே இலக்கியத்தரம் வாய்ந்த கற்பனைகளையும் உவமைகளையும் அவர் அலாதியாகச் செய்திருக்கிறார்.

‘கூண்டுக்குள்ள என்ன வச்சு’ என்னும் பாடலில்,

“கண்ணு வலது கண்ணு தானா துடிச்சதுன்னா

ஏதோ நடக்குமின்னு பேச்சு

மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு

வீணா கதை முடிஞ்சு போச்சு

ஈசான மூலையில லேசான பல்லிச் சத்தம்

மாமன்பேரைச் சொல்லி பேசுது

ஆறாது சோகம் தன்னைத் தீராம சேத்துவச்சு

ஊரும் சேந்து என்னை ஏசுது”

என்று எழுதியிருக்கிறார். கதையின் பின்னணியிலிருந்து இவ்வரிகளை யோசித்தால் சூழலுக்கு எழுதப்பட்டதாகத் தோன்றினாலும் அவர் கையாண்டுள்ள உத்தி அபாரமானது. இலக்கியங்களை நன்கு கற்ற ஆர்.வி.உதயகுமார், அதைத் திரைப்படங்களில் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வலக்கண் துடித்தால் வரக்கூடிய நிமித்தம் என்னவென்று தனது பாடலில் சொல்லிய உதயகுமார், அடுத்த வரியில் “ஈசான மூலையில லேசான பல்லிச் சத்தம்” என மற்றொரு நம்பிக்கைக்குத் தாவியிருக்கிறார். பல்லிச் சத்தத்தையும் சகுனமாகக் கருதும் பழக்கம் நம்மிடமுண்டு. பல்லியின் நன்நிமித்தக் குறியைப் பற்றி எண்ணும்போது, கல்லாடனார் எழுதிய ‘கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறு புழுகின்’ எனும் அகநானூறு பாடல் நினைவுகூரத்தக்கது.

தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் காரியமாற்றிவிட்டு ஊர் திரும்புகிறான். தேரேறி வருபவன் பாகனிடம் சொல்வதுபோல அமைந்த பாடலில், “தேரில் பூட்டப்பட்ட குதிரைகளை வில்லைவிட வெகுவிரைவாக எய்து” என்கிறான். தலைவியைப் பிரிந்த அவன் அவளைப் பார்க்கும் ஆர்வத்தில் பாகனை வேகப்படுத்துகிறான். அதைவிட அவனுடைய சிந்தனைகள் தலைவியைத் தழுவுகின்றன. நெட்ட நெடிய வீட்டில் பல்லியின் நன்நிமித்த ஓசையை இசையாக இரசித்துக் கொண்டிருப்பாள் தலைவி. அவ்வோசையை அவள் கேட்டு முடிப்பதற்குள் ஓடிப்போய் கட்டிக்கொள்ள வேண்டும் என எண்ணுகிறான் தலைவன்.

“எம்மினும் விரைந்தவில் எய்தி பல்மாண்

ஓங்கிய நல்இல் ஒரு சிறை நிலைஇ

பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி

கன்று புகு மாலை நின்றோள் எய்தி

கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகி

பிடிக்கை அன்ன பின்கைம் தீண்டி

தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ”

              (அகநானூறு, ப.46)

என்னும் வரிகள் நினைந்து வியக்கத்தக்கவை. அதேபோன்று அகநானூற்றில் இன்னொரு பாடலும் பல்லியின் ஒலிகுறித்த பதிவைச் சொல்கிறது. தலைவனைப் பிரிந்த தலைவி, அனுதினமும் அவனை நினைத்துத் தவிக்கிறாள். சுவரில் கோடு வரைந்து நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறாள். மெல்லிய காற்று வீசினாலும் அவள் அவனுடைய ஞாபகத்தில் அவிழ்ந்து போகிறாள். ‘சிலை ஏறபட்ட கணைவீழ் வம்பலர்‘ எனத் தொடங்கும் அப்பாடலில்,

“மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்

பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி

நல்ல கூறு என நடுங்கி

புல்லென் மாலையொடு பொரும் கொல்தானே?”

(அகநானூறு, ப.388)

தனித்து ஏங்கும் சந்தர்ப்பங்களில் பல்லி ஒலியெழுப்பியதும் தலைவனைக் குறித்து நல்ல சேதியைக் கூறு என அவள் கேட்டதாக எயினந்தை மகன் இளங்கீரனார் எழுதியிருக்கிறார். பல்லி என்றில்லை, காகம், கருடன், கூகை, ஆந்தை, வௌவால் போன்றவையும் சங்க மரபில் சகுனத்திற்கு உதவியுள்ளன. ‘தமிழரின் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்’ என்னும் நூலில் முனைவர் க.காந்தி இதுகுறித்து விவரமாக எழுதியிருக்கிறார்.

எண்பதுகளில் வெளிவந்த அந்நூலில் வலமும் இடமும் குறித்த தனி ஆய்வையே நிகழ்த்தியிருக்கிறார். வலது காலை எடுத்து வைத்து மணமகளை வீட்டுக்கு அழைக்கும் வழக்கத்திலிருந்து, வலங்கை இடங்கை பாகுபாடுகள் தோன்றியதுவரை மிக விரிவாக அந்நூலில் அவர் பகிர்ந்திருக்கிறார். வலக்காலை எடுத்து வைக்கும் அதே பெண்ணுக்கு, இடக்கண் துடித்தால் மட்டுமே நன்நிமித்தம் என்பது பெண்ணுக்கான பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அதேபோன்று அரங்கேற்றுக் காதையில் வரக்கூடிய ‘குயிலுவ மாக்க ணெறிப்பட நிற்ப’ என்பதில் தொடங்கி முழுப்பாடலையும் வாசித்தால் வாத்தியக் கருவிகளை வாசிப்பவர்களிலும், எவர் உயர்வு எவரெவர் தாழ்வு என்னும் விவரணைகள் வருகின்றன.

“குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப

வலக்கால் முன்மிதித் தேறி அரங்கத்து

வலத்தூண் சேர்தல் வழக்கெனப் பொருந்தி

இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த

தொன்னெறி இயற்கைத் தோரிய மகளிரும்

சீர் இயல் பொலிய நீர்அல நீங்க”

                     (சிலப்பதிகாரம், புகார் காண்டம் ப.76)

‘குயிலுவ மாக்க ணெறிப்பட நிற்ப’ எனில் நரம்புக்கருவிகளை வாசிப்பவர்கள் எந்நெறியில் நின்றனர் என்பதைக் குறிக்கிறது. குயிலுவர், இடக்கை முதலான கருவியாளர் மற்றும் இசைவாணர்களில் தோல் கருவிகளை வாசிப்பரும், நரம்பிசைக் கருவிகளை மீட்டுபவரும் ஒரே மாதிரியாகக் கருதப்படவில்லை. வலதும் இடதுமாக அவர்கள் நிறுத்தப்படுவதில் தராதரமும், உயர்ந்தவர்கள் இன்னொருவருக்குத் தராத இடமும் உணர்த்தப்பட்டிருக்கின்றன என்பது புலனாகிறது.

காணப்போவது நல்லதா? கெட்டதா? எனத் துடிக்கும் கண்களைப் பற்றி இராமாயணத்திலும் சில குறிப்புகள் காணப்படுகின்றன. அசோகவனத்தில் சீதைக்கு வாய்த்த ஒரே துணையான திரிசடையிடம்,

              “முனியொடு மிதிலையில் முதல்வன் முந்துநாள்

                துனி அறு புருவமும் தோளும் நாட்டமும்

                இனியன துடித்தன, ஈண்டும் ஆண்டு என

                நனி துடிக்கின்றன, ஆய்ந்து சொல்வாய்” என்கிறாள்.

                     (அகத்திரை, ப.52)

       அதாவது முதன் முதலாக இராமன் விசுவாமித்ர முனிவருடன் மிதிலைக்கு என்னைக் காண வருகையில் என்இடக் கண்ணும் தோளும் புருவமும் துடித்தன. அதேபோல தம்பி பரதனுக்கு நாட்டை அளித்துவிட்டு வனம் புகுந்த நாளிலும் இராவணன் என்னை சிறைக்கொண்ட நொடியிலும் என் வலக்கண், தோள், புருவம் ஆகியன துடித்தன. ஆனால் தற்போதோ இடக்கண் துடிக்கிறது. இடக்கண் துடித்தால் நன்மையென்று சொல்வார்களே! அப்படி ஏதேனும் என் வாழ்வில் நடக்க இருக்கிறதா? எனத் திரிசடையிடம் சீதை கேட்கிறாள். இங்கு சீதையின் வலக்கண் துடிப்பதைத் தீமைக்கும், இடக்கண் துடிப்பதை நன்மைக்கும் கம்பர் உருவகம் செய்திருக்கிறார். ஒரு சின்ன நம்பிக்கையை வைத்து காவியத்தின் இரசத்தைக் கூட்டிவிடும் அசாத்திய ஆற்றல் கம்பருடையது.

முடிவுரை

       தமிழிலக்கிய பரப்பெங்கும் வலது, இடது கண்கள் துடிப்பதைப் பற்றியும் பல்லி பற்றிய சமிக்ஞையையும் காண முடிகிறது. வழக்காறும் நம்பிக்கையும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டுள்ளன. தமிழர்களின் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட திரைப்பாடல்களின் வழியே பன்னெடுங்கால வழக்காறுகளையும் நம்பிக்கைகளையும் மீட்டெடுக்க முடியும். ஒரு திரைப்பாடலை ஊன்றிக் கேட்கும்போது நம்மையும் அறியாமல் சில வரிகளைச் சிலாகிக்கிறோமெனில் அது நிச்சயம் நம்முடைய தொன்மத்தின் மிச்சம் எனலாம்.  

துணைநின்ற நூல்கள்

  1. அகத்திரை, யுகபாரதி

நேர்நிரை வெளியீடு (முதல் பதிப்பு-2021),

இரண்டாம் தளம், சி.வி.ராமன் தெரு,

ஆழ்வார் திருநகர், சென்னை- 600 087.

  • சங்க இலக்கியம், அகநானூறு தெளிவுரை

ச.வே.சுப்பிரமணியன்

மெய்யப்பன் பதிப்பகம், 53 புதுத்தெரு,

சிதம்பரம் – 608 001.

  • சிலப்பதிகாரம் தெளிவுரை

ஜெ.ஸ்ரீசந்திரன்

வர்த்தமானன் பதிப்பகம்

ஏ.ஆர்.ஆர் காம்ப்ளக்ஸ், 141, உஸ்மான் சாலை,

தி.நகர், சென்னை – 600 017.

  • புலியூர்க்கேசிகன் – புறநானூறு தெளிவுரை

ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

32, பி கிருஷ்ணா தெரு,

பாண்டி பஜார், சென்னை – 600 017.

Leave a comment

Trending