காடரினக் கதைகள் – 3
குட்டாங்குடுங்கல்
தொகுப்பும் ஓவியத்தூரிகையும் : முனைவர் ப. குணசுந்தரி &
திரு.து.சரண்யா

ஒரு காட்டில் மூதாட்டி ஒருவர் தனியே ஒரு குடில் அமைத்து வசித்து வந்தார். அம்மூதாட்டி வறுமையில் வாடினாள். சொந்தமெனக் கூறிக்கொள்ள அந்த மூதாட்டிக்கு எவரும் இல்லை. ஒருநாள் மூதாட்டி மண்பாண்டத்தை எடுத்துக் கொண்டு ஓடையில் நீர் எடுத்து வரச் சென்றாள். ஓடையில் அவள் காலின் மேல் குட்டாங் குடுங்கல் உருண்டு போய் சாய்ந்தது. மூதாட்டி அந்தக் கல்லைத் தள்ளிவிட்டு பானையில் நீர் முகந்து தன் தலையில் சுமத்திக் கொள்ள முயன்றாள். மீண்டும் அந்தக் கல் அவள் காலின்மேல் வந்து உருண்டு சாய்ந்தது.

மூதாட்டிக்குக் கல்லைக் கண்டு கோபம் எழுந்தது. ஆகையினால் அவள் அந்தக் குட்டாங் குடுங்கலைப் பார்த்து என்ன திமிர் உனக்கு என்றாள். அத்துடன் அந்தக் கல்லைக் கொண்டு சென்றால் தேங்காய் அரைக்கவும் மிளகாய் அரைக்கவும் அம்மிக்குழவியாகப் பயன்படுத்தலாம் என்று நினைத்து அதைத்தன் முந்தானைச் சீலையில் போட்டபடியே பானையில் நீர் எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள்.
குடுங்கலைக் கொண்டு போய் அந்த மூதாட்டி ஒரு பெரிய பானையில் போட்டுவிட்டு அதனை மூடி வைத்தாள். பின்பு வெளியே சென்ற அவள் வீட்டுவாசலைப் பெருக்கினாள்.

அப்போது திடீரென ஒரு ஆண்குரல் அவள் வீட்டிலிருந்து ஒலித்தது. அது
பாட்டி குடி குடி!
பாட்டி குடி குடி!
என்றது. (பாட்டி எனக்கு மனைவி வேண்டும் என்னும் ஒலி கேட்டது.) இதைக் கேட்ட மூதாட்டி வேகமாக வந்து அந்தப் பானையைப் பார்த்தாள். பானையில் போட்ட குடுங்கல் அழகிய ஆண்மகனாக உருப்பெற்றிருந்ததைக் கண்ட மூதாட்டி மனம் மகிழ்ந்தாள். தனக்குப் புதிதாக ஒரு பேரன் கிடைத்துவிட்டான் என்று.
குட்டாங்குடுங்கல் மனிதனாக உருப்பெற்ற நேரம் முதல் மூதாட்டியின் வீட்டில் குடிகொண்டிருந்த வறுமை மறைந்து போனது. அந்தக் குட்டாங் குடுங்கல் தனக்கு ஒரு மனைவியைத் தேடிக் கொடுக்குமாறு அந்த மூதாட்டியிடம் முறையிட்டான். கிழவியும் அதற்கு இசைந்தாள். மறுநாள் காலையில் மூதாட்டி குட்டாங் குடுங்கல்லுக்குப் பெண்பார்க்கக் கிளம்பினாள்.
நெடுந்தூரம் காட்டுப் பாதையில் பயணித்தாள். அதன்பின் அவள் ஒரு கிராமத்தை அடைந்தாள். அந்தக் கிராமத்தில் தலைவலி தீராத ஒரு பெண்ணும் மற்றொரு அழகியும் இருந்தனர். கிராமத் தலைவரின் மகள்தான் அந்த அழகி. அவள் வீட்டை விட்டு வெளியே வந்து நின்றால் வானும் மண்ணும் நீர், மரம், செடி, கொடி என அனைத்தும் அவள் மேனி வண்ணத்தைக் கண்டு சிவந்து போய்விடுமாம். அப்படிப்பட்ட அழகிய மேனியை உடையவளாக அந்தப் பெண் இருந்தாள். மூதாட்டி கிராமத்தில் இருந்த எல்லா வீடுகளுக்கும்போய்
நான் குட்டாங் குடுங்கல்லுக்கு குடியும்
படையும் தேடி வர்ற(ன்)
நான் குட்டாங் குடுங்கல்லுக்கு மனைவியைத் தேடி வருகிறேன் என்று சொல்கிறாள். ஆனால் அந்தக் கிராமத்தில் ஒருவரும் பெண் கொடுக்கவில்லை. கடைசியாக ஊர்த்தலைவரின் வீட்டுக்குச் செல்கின்றாள். அங்கே அவர்கள் அந்த அழகிய பெண்ணை ஓலாம்போயை என்னும் ஒரு பெரிய புறையினுள் அமர வைத்திருந்தனர்.
மூதாட்டி அவள் வீட்டிற்குச் சென்றபோது, அந்த அழகி மூதாட்டியைப் பார்க்க வேண்டுமென அடம்பிடிக்கிறாள். அழகியின் தந்தையோ தன் நண்பர்களுடன் தேன் எடுக்கப் போயிருந்தார்.
அன்று இரவு மூதாட்டி அழகியின் வீட்டிலேயே தங்கினாள். தான் அந்தக்கிராமத்திற்கு வந்த காரணத்தையும் அவர்களிடம் கூறுகிறாள். மறுநாள் காலையில் மூதாட்டி தன் வீட்டுக்குப் புறப்பட்டாள். உடனே அழகியும் மூதாட்டியுடன் செல்ல வேண்டும் என்று தாயிடம் கூறுகிறாள்.
அழகியின் தாய் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அழகியின் தந்தை வந்து, தன் மகளைக் கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும் என்று மூதாட்டியிடம் சொல்கிறாள். ஆனால் அழகியோ மூதாட்டியுடன் போய்த்தான் ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கின்றாள். வேறு வழியில்லாமல் அழகியை மூதாட்டியுடன் அனுப்பி வைக்கிறாள் அழகியின் தாய். அப்பொழுது அவள் மூதாட்டியிடம் தன் மகளுக்கு நடக்கும் வழியில் காலில் கல்லும் முள்ளும் குத்தாமல் இருக்க இலைகளைப் பறித்துப்போடுமாறு கூறுகின்றாள். மேலும் சேறும் சகதியும் உள்ள இடங்களில் கற்களைப் பதிக்குமாறும் கூறுகின்றாள். அழகியின் தாய் சொன்னபடியே மூதாட்டியும் செய்து அழகியை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றாள்.

மூதாட்டி தன் வீட்டிற்குப் போனவுடன் பேரனை அழைக்கின்றாள். உடனே குட்டாங் குடுங்கல் பானையுள்ளிருந்து கீழே இறங்கி வந்து நிற்கின்றான். அவனுடைய அழகு முகத்தைக் கண்ட அந்தப் பெண் மயங்கி கீழே விழுகின்றாள். உடனே அவன் ஓடிவந்து அவளைத் தாங்கி முகத்தில் நீர் தெளித்து எழுப்பி விடுகின்றான். இருவரும் அந்த நாளில் இருந்து கணவன் மனைவியாகச் சிலகாலம் அந்தக் காட்டில் வாழ்ந்தனர்.
ஒருநாள் அந்த குட்டாங் குடுங்கல் வாலிபன் தன் மனைவியின் பெற்றோரைக் காணவேண்டுமென விரும்புகின்றான். தன் பாட்டியையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு மனைவியின் பெற்றோர் வாழும் அந்தக் கிராமத்திற்குச் செல்கின்றான். தன் மனைவியின் குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் ஒரு புறையில் போட்டுக்கொண்டு அதைத் தன் சுண்டுவிரலினால் தூக்கிக் கொண்டு நடக்கின்றான்.
அந்தக் கிராமத்தை நெருங்கியவுடன் ஒரு மரத்தின் அடியில் தான் தூக்கிச் சென்ற புறையை வைக்கின்றான். பின்பு வெறும் கையுடன் தன் மனைவியின் பெற்றோர் இருக்கும் வீட்டை நோக்கி நடக்கின்றான். போகும் வழியில் தீராத தலைவலி உடைய பெண்ணின் வீட்டைக் கடக்கும் போது, அங்கிருந்த ஒரு மரத்தின் வேரில் கால் இடறுகின்றான். பிறகு அதைக் கடந்து சென்று தன் மனைவியின் பெற்றோர் இருக்கும் வீட்டை அடைகின்றான்.
தங்கள் மருமகனைக் கண்டு அந்த அழகியின் வீட்டில் அனைவரும் வியக்கின்றனர். வீட்டில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருந்த போது குட்டாங் குடுங்கல் தான் கொண்டு வந்து வைத்த புறையை யாரேனும் எடுத்து வருமாறு கூறுகின்றான். முதலில் அழகியின் மூத்த சகோதரன் போய் அந்தப் புறையைத் தூக்குகின்றான். ஆனால் அவனால் தூக்க இயலவில்லை. முடிந்த அளவு அவன் முயற்சி செய்கின்றான். ஆனாலும் முடியவில்லை. அவன் வீட்டிற்கு வெறுங்கையுடனே திரும்பி வருகின்றான்.
பின்னர் இரண்டாவது சகோதரன் செல்கின்றான். அவனாலும் எடுத்துவர இயலவில்லை. இறுதியாக அழகியின் தந்தையே சென்று முயற்சிக்கின்றார். முடியவில்லை. அந்தப் புறையை எவராலும் எடுத்துவர முடியவில்லை. எனவே குட்டாங் குடுங்கல்லே தன்னுடைய புறையைப் போய் எடுத்து வருகின்றான். அந்தப் புறையிலிருந்த பொருட்களை எல்லாவற்றையும் எடுத்து வைக்க புதிதாய் ஒரு கூரையை வேயும்படி கூறுகின்றான். அழகியின் சகோதரர்கள் வேகவேகமாக ஒரு கூரையை வேய்ந்தனர். புறையிலிருந்த பொருட்களை எல்லாவற்றையும் எடுத்து அந்தக் கூரையில் குவித்து வைக்கின்றனர்.
அந்தக் கிராமத்தில் இருந்த அனைவருக்கும் தேவையான அளவு பொருட்களைக் குட்டாங் குடுங்கலின் புறையிலிருந்து எடுக்கின்றனர். பின் அந்தத் தலைவலி தீராத பெண்ணின் தாய் குட்டாங் குடுங்கலிடம் வந்து ஏதாவது மருந்து தெரிந்தால் கூறு என்று கேட்கின்றாள். உடனே குட்டாங் குடுங்கலின் பாட்டி அவனிடம் அவன் வந்த வழியில் அவன் காலை இடறிவிட்ட மரத்தின் பட்டையை அவளுடைய நெற்றியில் அரைத்துத் தேய்க்குமாறு கூறுகின்றாள். அப்பெண்ணின் தாய் அவ்வாறே செய்யவும் அவளுடைய மகளின் தீராத தலைவலி தீர்ந்து போகின்றது. குட்டாங் குடுங்கலை அந்தக் கிராமத்து மக்கள் இறைவனை மதிப்பது போல போற்றுகின்றனர். பின்னர் அனைவரும் அந்தக் கிராமத்தில் குட்டாங் குடுங்கலுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
……………………………….
கதைத் தொகுப்பு – முனைவர் ப. குணசுந்தரி, செல்வி து. சரண்யா.
(கதை சொல்லி மங்கம்மாள் பாட்டி, வயது72. நெடுங்குன்றுச்சேரி, வில்லோனி 02.06.2018.)
ஓவியம் செல்வி. து. சரண்யா.
அருஞ்சொற்பொருள்
குட்டாங் – குற்றுதல்.
குடுங்கல் – குழவி.
குடி – மனைவி
ஓலாம்போய் , புறை – பை

Leave a comment