தாயை இழந்த குழந்தையின் படபடப்பு போல் என் உடல் மெல்ல நடுங்கும் –
இரா. செங்கொடியின் ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்

                                 சு. செல்வகுமாரன்,
                                    உதவிப்பேராசிரியர்    
                                 மாநிலக் கல்லூரி, சென்னை - 05.
                                   E.mail: mugadu.kumaran@gmail.com

1950 கள் முதற்கொண்டு இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தால் தமிழர்களுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடியும், அதனை எதிர்கொண்ட தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கும் இடையில் 1980 களில் மிகப்பெரிய கலவரமும் போரும் ஏற்பட்டு பின்னர் 2009 ல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போரில் பெருவாரியாக தமிழினம் அழிக்கப்பட்டபின் ஒரு வழியாக போர் முடிவுக்கு வந்ததெனலாம். ஆனாலும் தொடர்ந்து தமிழ் மக்கள் மீது மறைமுகமாக பல்வேறு இன்னல்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவே அங்கு வாழும், தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். 1950 – 2009 க்குமான இந்த இடைப்பட்ட கால கட்டத்தில் ஈழத் தமிழர்கள் தம் மண்ணையும், மக்களையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்ததோடு தம்மையே இழந்தார்கள் என்பதே உண்மை. தம் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டனர். இதனால் அவர்கள் வாழ்வுதேடி அந்நிய நாடுகளுக்கு இடம்பெயரத் தொடங்கினர். இதனை குடிப்பெயர்வு, புலப்பெயர்வு, புகலிடம் தேடிச் செல்லுதல் என்பதாக உலக மக்கள் பல்வேறு சொற்களால் குறிப்பிடலாயினர். இந்த பெயர்வு வாழ்வியலை, வரலாற்றை சமூகத்தின் வழியாகவும் இலக்கியத்தின் வழியாகவும் தோழியா் இரா.செங்கொடி அவர்கள் தம் ஆய்வுப் பயணத்தின் மூலம் அருமையான ஒரு நூலாக ஆக்கித் தந்துள்ளார். பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் அணிந்தரையாடு பாரதி புத்தகாலயம் இந்த நூலை வெளியிட்டுள்ளது பெருமைக்குரியதாகிறது.

நூலின் உள்ளடக்கமாக ஈழத்து புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியல் சிக்கல்களை விவரிக்கும் விதமாக 22 தலைப்புகளில் அவர் கட்டுரைகளை இடம்பெறச் செய்துள்ளார். பிரிதலும் பிரிதல் நிமித்தமும், பயண நிலை அவலம், அகதித் தஞ்சக் கோரிக்கை – குடியுரிமை – கடவுச்சீட்டுச் சிக்கல்கள், ஒதுக்குதலும் ஒதுக்குதல் நிமித்தமும் (நிறவெறிப் பாகுபாடுகள்), வசிப்பிடச் சிக்கல், புகலிடத் தொழிலாளர் நிலை, மொழி வளர்ச்சியும் மரபு மீட்டுருவாக்கமும், பெற்றோர் குழந்தைகளிடையே இணக்கமின்மை, பருவ கால இடர்ப்பாடுகள், தாய்மண் ஏக்கம், அந்நியமாதல், போதைப் பொருள் கடத்தல் – குற்றச் செயல்களில் ஈடுபடுதல், போதைப் பழக்கத்துக்கு அடிமையாதல், தற்கொலை முயற்சிகள், முதியோர் நிலை, போர் எதிர்ப்புக் குரல், புலம்பெயர் வாழ்வில் பெண்கள் எதிர்நோக்கும் இடர்ப்பாடுகள், மனக்கொடைக் கொடுமை, பெண் தனித்துவத்தைக் கட்டமைத்தல், அனைத்துலக நோக்கு, எதிர்காலம், புகலிடச் சிற்றிதழ்கள் அறிமுகம் என்பதாக பன்முகத் தளத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
புலப்பெயர்வு பற்றி குறிப்பிடும் செங்கொடி அவர்கள் “திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” எனும் பழந்தமிழர்களின் கூற்றுக்கு ஏற்ப வாணிபம் உள்ளிட்ட காரணங்களுக்காக உலகநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தன் பணியை முடித்து தாயகம் மீண்டனரேத் தவிர அங்கே தங்கிவிடவில்லை. ஆனால் ஈழப்போரின் காரணமாக தன் இன்னுயிர் காக்க அந்நிய நாடுகளுக்கு புகலிடம் தேடிச் சென்ற ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் தாயகம் திரும்ப இயலாத நெருக்கடி நிலை இருந்ததை இனங்காட்டுகின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில் புலம் பெயர்ந்து சென்ற இடத்திலேயே தங்கி வாழ்வது தமிழர் பண்பாட்டு மரபில் போற்றத்தக்கதாக இல்லை என்பதும் கவனத்திற்கு உரியதாகிறது. அது போல தமிழ்ச்சூழலில் ஒரு ஊரிலிருந்த இன்னொரு ஊரில் சென்று குடியிருப்பவர்களுக்குக் கூட போதிய மரியாதை கொடுக்கப்படாமல் இருந்ததை அசலூருக்காரன், வந்தட்டி வருத்தட்டிப் பயலுக, ஊரும் குடியும் இல்லாத பயக்க, தனக்குண்ணு சொந்த மண்ணு இல்லாதவனுக, வீடு வாச இல்லாதவனுக எனும் அடைமொழி வழி அடையாளப்படுத்துகின்றார். இதன் மூலம் புகலிடம் தேடி அயலகம் சென்ற ஈழத் தமிழர்கள் அன்னிய மண்ணில் எத்தகைய அவமானத்தை அடைவார்கள் என்பதை இனங்காட்டுகின்றார்.

தமிழ் ஈழப் போரும் புலப்பெயர்வும் எனும் பகுதியில் ஒரு இனத்தின் மண்ணையும் மொழியையும் அழிப்பதன் வாயிலாக அந்த இனத்தையே அழிக்க முடியும் என்பதை நன்குணர்ந்து மண்ணைப் பறித்த சிங்கள அரசு, மொழியையும் அழிக்கும் நோக்கில் 1956 இல் சிங்களம் ஒன்றே ஆட்சி மொழி என்று அறிவித்த செய்தியையும் நுலில் பதிவு செய்திருக்கிறார். இதன் நீட்சியே ஈழத்தில் தமிழ் மக்கள் மீது நடந்து முடித்திருக்கும் பேரினவாத தாக்குதலுக்கும், உலக அளவில் ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்துள்ள மிகப்பெரிய புலப்பெயர்வுக்கும் அடிநாதமாக விளங்கியது. இனத்துவேஷம் கொண்டிருந்த சிங்கள அரசு வரலாற்றில் ஈழத் தமிழர்களை திட்டமிட்டு அழித்தொழிக்க செயல்படுத்தப்பட்ட முதல் முயற்சியாக இது அமைகின்றது.

ஆக மேற்சுட்டிய காரணங்களால் நிகழ்ந்த ஈழத் தமிழ் மக்களின் புலப்பெயர்வில் அவர்களிடம் தோன்றிய இலக்கியத்தை புலம்பெயர்ந்தோர் இலக்கியம், (Expatriate Literature), புகலிட இலக்கியம் (Exil Literature), பேரழிவு இலக்கியம், அலைவு உழல்வு இலக்கியம், புலம்பல் இலக்கியம், அகதி இலக்கியம், குடிபெயர்ந்தோர் இலக்கியம், தஞ்சம் புகுந்தோர் இலக்கியம், ஏதிலிகளின் இலக்கியம், நாடோடிகளின் இலக்கியம், இடம்பெயர்ந்தோர் இலக்கியம் என வெவ்வேறு பெயர்களால் அழைக்கின்றோம். இவற்றில் பெயருக்கு ஏற்பவே பொருளிலும் நுட்பமான வேறுபாடுகளைக் கண்டறிய முடியும் என்றாலும் பொதுநிலையில் இவை யாவும் ஒருமித்த பொதுத்தன்மையை கொண்ட கையறுநிலை இலக்கியமாகவே விளங்குகின்றன. இங்கு ஒரு விஷயத்தை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. அதாவது புலம்பெயர் இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்விக்கு புலம்பெயர்ந்த மனிதர்களால் எழுதப்படுகின்ற இலக்கியம் என்று பொருள் கொள்கின்றோம். ஆனால் ஈழத்திலிருந்து எழுதுகின்ற எழுத்தாளர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களின் துயர வாழ்வியல் குறித்த பன்முகப்பட்ட பதிவுகளை தம் படைப்புகளில் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றனர். அப்படியாயின் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்வு நிலை குறித்து ஈழத்திலிருந்தபடி பதிவு செய்கின்ற ஒரு இலக்கியம் புலம்பெயர் இலக்கியமாகாதா என்ற கேள்வியும் இங்கு முதன்மை பெறுகின்றது. ஆக புலம்பெயர் அல்லது புகலிட இலக்கியம் என்பது இடம் சார்ந்ததா அல்லது கருத்தியல் சார்ந்ததா என்ற ஒரு கேள்வி எழுவதும் அதற்கான தீர்வினைக் காண்பதும் அவசியமாகின்றது.
புலம்பெயர்ந்த தமிழர்களின் தொடக்ககாலப் படைப்புகளின் பொருண்மை பற்றி குறிப்பிடும் நூலாசிரியர், தாயக உணர்வும், தாய் மண் மீதான ஏக்கமும், இனிமையான கடந்த கால நினைவுகளும், போர்ச்சூழல் தந்த சோகத்தையுமே இவ் இலக்கியங்களில் அவர்கள் வெளிப்படுத்தினார்கள் என்று குறிப்பிடுகிறார். இவ்இலக்கியத்தில் இலக்கண இலக்கிய விதிமுறைகள் உடைக்கப்பட்டன, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன என்பதும், உண்மையான அனுபவங்களின் வெளிப்பாடாக அமைந்தன என்பதாகவும் குறிப்பிடுகிறார். மேலும், உலக நாடுகளில் யூதர்களின் அனுபவங்கள் டயஸ்போரா என்னும் இலக்கியம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது போல் தமிழில் ஈழத்துப் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்னும் இலக்கிய வகை தோன்றுவதற்கு வழிவகை செய்தது என்று குறிப்பிடுவதும் ஏற்புடையதாகிறது.
மேலும் அந்நிய மண்ணில் நிகழ்த்தப்படும் நிறவெறி பாகுபாடுகள் பற்றி குறிப்பிடுகிற போது ஒரு மனிதன் சக மனிதனை ஒதுக்கும் மனப்பான்மை கொண்டிருக்கின்றான் என்பதை சுட்டும் ஆய்வாளர் புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்குலக நாடுகளில் நிறத்தின் அடிப்படையிலான ஒதுக்குதலுக்கு ஆளாகின்றனர் என்பதை ‘இன்னோர் தேசம் இன்னோர் கனவு’, மற்றும் ‘அத்திவாரமில்லாத கட்டிடங்கள்’ உள்ளிட்ட கதைகளின் மூலம் எடுத்துரைக்கின்றார். மட்டுமின்றி நிறவாத இனவாத சாதிய சிந்தனை என்பது மனிதனின் பிறப்பிலேயே உருவாக்கப்படுவதில்லை. மாறாக குடும்ப உறுப்பினர்களும் சமுதாயமும் ஊடகங்களும் பரப்பும் கருத்துருவாக்கத்தின் மூலமாகவே இச் சிந்தனையுடைய சிறுவர்கள் உருவாக்கப்படுகின்றனர் என்ற சமூகம் குறித்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்கின்றார்.
தம்பாவின் கவிதை ஒன்று நிறவெறியை இப்படியாக பதிவு செய்திருக்கிறது.

“கற்றுக்கொள் கறுப்பு நாயே
சாகப் பிறந்த பன்றியே
தொழுவத்தை விட்டு ஏன் வந்தாய்?
கறுப்பர் அழிந்தால் மட்டும் புனிதம் அடையும் பூமி”
(சுவடுகள், சித்திரை -1994, பக்கம்- 56)

புகலிட நாட்டில் நிறவெறி மட்டுமின்றி அங்கு வசிப்பதற்கான குடியுரிமை பெறுவது அதாவது வசிப்பிடம் முதற்கொண்டு மொழி, உணவு, உறவுகளைப் பேணுதல், பாதுகாப்பு, தொழில் என எல்லாமே ஈழத் தமிழன் ஒருவனுக்கு சிக்கலாகவே அமைகின்றது. புகலிடத் தொழிலாளர்களின் நிலை பற்றி குறிப்பிடுகின்ற போது தொழிலாளர்கள் ஆவணமற்ற அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர் என்றும், முறைசாரா வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றும், ஆபத்தான பாதுகாப்பற்ற வேலைகளை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படு கின்றனர் என்பதையும் படைப்புகள் மற்றும் சமூக சான்றுகளோடு நூலில் செங்கொடி அவர்கள் எடுத்தாண்டுள்ளார். “ஐரோப்பிய நாடுகளில் செயல்படும் பெரும்பாலான உணவகங்கள் ஆசிய ஆப்பிரிக்க அகதிகளை நம்பியே செயல்படுகின்றன. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் உணவகங்களில் உணவு தட்டுகளைக் கழுவுவது, உணவகத்தை சுத்தம் செய்வது போன்ற வேலைகளையே செய்து பிழைக்கின்றனர். இது மட்டுமல்லாமல் எரிவாயு நிரப்பும் மையங்கள், தொழிற்சாலை பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரும்பாலான ஈழத் தமிழர்கள் உடல் உழைப்பை பிரதானமாகக் கொண்ட தொழில்களிலேயே ஈடுபடுத்தப்படுகின்றனர். இத்தகைய வேலைகளும் இவர்களுக்கு உடனே கிடைத்து விடுவதில்லை.” இவ்வாறாக வேலை தேடும் முயற்சிகளில் ஈடுபடும் போது மேற்கொள்ளும் சிக்கல்களை அ. மார்க்ஸ் தமது வெள்ளைத் திமிர் நூலில் குறிப்பிடுவதையும் ஆசிரியர் இந்நூலில் நினைவு படுத்தியிருப்பது வலிமை சேர்ப்பதாய் உள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு புகலிட நாடுகளின் இயற்கையும் எதிராகவே அமைகிறது. குறிப்பாக பருவகால இடர்பாடுகளைப் பற்றி பேசுகிற போது தனக்கு முற்றிலும் மாறுபட்ட காலநிலையை எதிர்கொள்ள பறவைகளுக்காவது வலசை மேற்கொள்ளுதல் எனும் வாய்ப்புள்ளது. ஆனால் ஏதிலிகளாய் பனி போர்த்திய தேசத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்ட புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கு இதனை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பழக்கமில்லாத கடும் குளிரால் உடல் விரைப்பு அடையும் துயரை புகலிடத்தமிழர்களின் படைப்புகளில் பரவலாக காணமுடிகிறது எனும் அவர், அதற்கு சான்றாக நளாயினி தாமரைச்செல்வனின் கவிதை ஒன்றினை முன்வைக்கின்றார்.

“கூர் முனைகள் ஊசியாய்
குளிர் என்னைத் தாக்க
போரில் கண் முன்னே தாயை இழந்த
குழந்தையின் படபடப்புப் போல்
என் உடல் மெல்ல நடுங்கும்”

என்று தாங்க முடியாத பனிக் குளிரின் துயரினை பதிவு செய்கி்றார்.

புலம்பெயர் இலக்கியத்தில் தாய்மண் குறித்த ஏக்கங்களும் அது போல் தான் அன்னியப்படுத்தப்பட்டிருக்கின்ற அவலமும் நிரம்ப பதிவாகி இருப்பதை பார்க்க முடிகிறது. ஆயுர்வேதமும் அகதி மனிதனும் என்னும் சுகனின் கவிதையில் மரத்திலிருந்தும் வேரிருந்தும் ஒவ்வொரு அங்கத்திலும் நான் பிரிக்க முடியாதவனாய் இருந்தேன். குப்பைமேனியும் வெட்டொட்டியும் நாயுருவியும் பிரண்டையும் எனது சூழலில் எது முளைத்தாலும் என்னோடு வளர்ந்தன. எனக்கு மருந்தாக இருந்தன. எதுவுமே அழிந்து ஒழியவில்லை என்பதாக நகரும் அந்த கவிதையில் நான் எதுவுமற்ற இரும்பு நகரத்திற்கு இப்போது வர நேர்ந்துள்ளது என்பதாக குறிப்பிடுவதன் மூலம் தான் தாய் மண்ணில் இருந்து பிடுங்கி எறியப்பட்டு இருப்பதை, அன்னியப்படுத்தப்பட்டிருப்பதை, விரும்பப்படாத விருந்தாளியாய் அயலகத்திற்கு தாம் வந்திருக்கும் அந்நியம் தமக்கு ஒவ்வாமையாக இருப்பதை இந்த கவிதையின் மூலம் அவர் பதிவு செய்திருக்கின்றார்

அன்னிய மண்ணில் நிச்சயம் அற்ற சூழலில் வாழும் இவர்கள் போதைப் பொருள் கடத்தல், வன்முறை என தாம் விரும்பாத வாழ்வியல் முறைகளை தேர்ந்தெடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருப்பதையும் புலம்பெயர் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன மட்டுமல்லாமல் புகலிட நாடுகளிலே முதியோர்களின் நிலை என்பதும் மன அழுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளாக்கப் பட்டிருப்பதையும் செங்கொடி முதியோர் நிலை என்ற கட்டுரையிலே மிகத் தெளிவாக எடுத்துரைக்க காண்கிறோம். அது போலவே புலம்பெயர் வாழ்விலே பெண் எதிர்நோக்கும் இடர்பாடுகளும் மிக அதிகமாக இருப்பதை தனது கட்டுரை ஒன்றிலே பதிவு செய்திருக்கின்றார்.

“தேசங்கள் தாண்டினோம்
வாழ்நிலை மாறினும்
அகதியாகவும் பெண்ணாகவும்
என்னைக் கண்கள் நோக்கிய வண்ணம் ”

என்னும் பிரியதர்ஷினியின் கவிதை முக்கியத்துவப்படுகிறது. இப்படியாக புகலிடத் தமிழர்களின் வாழ்வினை வெவ்வேறு களங்களின் வாயிலாக மிக நுட்பமாக இந்நூலின் வாயிலாக எடுத்துரைத்துள்ளார் என்றால் மிகையல்ல.
தமிழ்ச் சூழலில் புலம்பெயர் இலக்கியம் குறித்த நூலான சு.செல்வகுமாரனின் – புலம்பெயர் இலக்கியம் பன்முக வாசிப்பு (2008) தெ. வெற்றிச் செல்வனின் – ஈழத் தமிழா் புகலிட வாழ்வும் படைப்பும் (2009) எனும் நூலினை அடுத்து, புதுவரவாய் வந்துள்ள இரா. செங்கொடியின் – ஈழத்தமிழரின் புலம்பெயர் இலக்கியம் எனும் நூலினையும் தமிழுலகம் வாசிக்கட்டும், கொண்டாடட்டும். வாழ்த்துக்கள்.

Leave a comment

Trending