நீண்ட…………….ஆசை

கனலி விஜயலட்சுமி 
kanaliviji@gmail.com 

சனிக்கிழமை வழக்கம்போல் சோம்பல் நிறைந்த காலையாக மலர்ந்தது. ஐந்து நாட்கள் நீண்ட உழைப்பிற்குப் பிறகு வரும் சனிக்கிழமை என்பதால் எந்த அவசரமும் இல்லாமல் மிக மெதுவாகப் படுக்கையில் இருந்து எழுந்து தலையணையை முதுகுக்கு வைத்து சரிந்து அமர்ந்தான் ரிச்சார்டு கார்ட்டர். காலை பத்து மணி இருக்கும் என்று தோன்றியது. குளிர்காலம் என்பதால் நேரத்தை அவதானிக்க முடியவில்லை.

அவன் எழுந்து விட்டதை உணர்ந்து மிக மெதுவாகக் கதவைத் திறந்து தயாராக வைத்திருந்த அவனுக்குப் பிடித்த எக்ஸ்பிரஸ்ஸோ காபியை கொண்டு வந்து, ஒரு சிறிய காபி மேசையை அவன் முன்னால் உயரத்திற்கு தக்கவாறு அதை சரி செய்து அதில் வைத்தான் ரிம்போ. கடந்த பல வருடங்களாக ரிம்போ ரிச்சார்டிடம் வேலை செய்கிறான். ரிச்சர்டுக்கு எது எப்போது தேவை என்பதெல்லாம் அவனுக்கு  அத்துபடி. முன்கோபியான ரிச்சார்டிடம் எல்லோரும் திட்டுவாங்கி இருந்தாலும் ஒரு நாள் கூட ரிம்போ அவன் கோபப்படும்படி நடந்ததில்லை. 

அதனாலேயே ரிச்சர்டுக்கு ரிம்போவை மிகவும் பிடிக்கும். ரிச்சாடுக்குப் பிடித்தது போல் சரியான அளவில் காப்பியும் மிகக் குறைவாக இனிப்பும் ஒரு குறிப்பிட்ட அளவில் கலக்கி மிக அழகாக நுரை வரும்படி ஆற்றி மனம் கம கமக்க அவன் கொண்டு தரும் காபிக்காகவே
 எதை வேண்டுமானாலும் அவனுக்குக் கொடுக்கலாம் என்று ரிச்சார்டு நினைப்பதுண்டு. ஒருமுறை உனக்கு என்ன வேண்டும் என்று அவன் கேட்கவும் செய்தான். ரிம்போ அதற்குச் சிரித்து விட்டு தனக்கு ஒன்றும் வேண்டாம் என்று கூறிவிட்டுப் போய்விட்டான்.

ரிம்போ போன பிறகு ரிச்சார்டு அவனது அறையை நோட்டமிட்டான். ஐந்து நட்சத்திர ஹோட்டலின் மிகப்பெரிய ஒரு சொகுசு அறை போல் மிக நேர்த்தியாக எல்லாம் அடுக்கப்பட்டு உயர்தர இருக்கைகள் போடப்பட்டு முதலில் யார் பார்த்தாலும் வாய்ப்பிழக்கச் செய்யும் ஆடம்பரத்தோடு காணப்பட்டது. சுவர்களில் எல்லாம் விலை உயர்ந்த சட்டகங்களில் அவனது மனைவி டைனா மூன்று மகன்கள் ரிச்சர்ட் ஆகியோரின் படங்கள் மிக அழகாக தொங்கவிடப்பட்டிருந்தன. அதில் அவர்கள் குடும்பத்தோடு நிற்கும் படமும் இருந்தது. 

டைனா கவலையின்றி மனம் விட்டுச் சிரிக்கும் ஒரு அழகிய படம் ரிச்சார்டின் படுக்கை அருகில் இருந்த மேசை மீது வைக்கப்பட்டிருந்தது. மிகக் கவர்ச்சிகரமான உடையில் யாரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு அவளுக்கு இருந்தது. முதலில் அந்த அழகில் மயங்கிய ரிச்சார்டு பிறகு அந்த அழகே மிகப்பெரிய ஒரு பிரச்சினையான போது அதுவே வெறுப்பாக மாறியது. காப்பி குடித்த போது இருந்த மகிழ்ச்சி போய் இப்போது அவளை நினைத்து கோபமாகவும் வெறுப்பாகவும் மாறி ரிம்போ என்று கத்தினான். 

இத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தும் தனது சுய அடையாளம் தேட வேண்டும் என்று போய்விட்ட அவளை நினைத்தபோது அவனுக்குப் பத்திக்கொண்டு வந்தது. அவளுக்குத் தேவையானது சுய அடையாளம் அல்ல வகை வகையான ஆண் குறிகள் தான் என்று ஒரு கெட்ட வார்த்தையும் கூறி உறக்கத்திட்டான்.

காலையிலேயே எதற்காகத் தனது முதலாளி இப்படி கத்துகிறார் என்று தெரியாமல் அரக்கப் பறக்க ஓடி வந்து நின்றான் ரிம்போ. என் முன்னால்  இருக்கும் இந்த நன்றி கெட்டவர்களின் படங்களை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டு  போய் உன் வேலைகளைப் பார். இந்தப் படங்களுக்குப் பதிலாக அலீனா, டோடோ, டைசன்,செலீனா படங்களை அழகாக எடுத்து என் அறையில் தூக்கு என்றான்.

ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேசாமல் முடிக்கி விடப்பட்ட ரோபோட்டை போல ஒரு பெரிய அட்டைப்பெட்டி எடுத்து வந்து புகைப்படங்களை மிகக் கவனமாகச் சுவரிலிருந்து கழட்டி ஒவ்வொன்றாகப் பெட்டிக்குள் அடுக்கி வைத்தான். ஒன்றோடு ஒன்று உரசாமல் இருக்க இடையில் சில மெல்லிய துணிகளை இட்டு அடுக்கினான். அவன் அந்தப் புகைப்படங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் அடுக்கும் நேர்த்தியையும் பார்த்தபோது ரிச்சர்டுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. 

அவசரமாகப் படுக்கையில் இருந்து எழுந்து பெட்டியோடு அந்தப் புகைப்படங்களை மேலே தூக்கி படார் என்று தரையில் இட்டான். புகைப்படங்கள் எல்லாம் சலீர் என்று உடைந்து அதன் கண்ணாடிகள் சில்லுச் சில்லாகச் சிதறின. இதைச் சற்றும் எதிர்பார்க்காத ரிம்போ செய்வதறியாமல் திகைத்து நின்றான். 

இந்த நாய்களுக்கு என் வாழ்க்கையில் இடமில்லை இவர்களின் படங்களுக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது. இவற்றை நீ எதற்காக அப்படிப் பாதுகாப்பாக எடுத்து வைக்கிறாய்? இதையெல்லாம் இப்போதே பொறுக்கி வீட்டின் முன்னால் இருக்கும் குப்பைத் தொட்டியில் கொண்டு போய் களைந்து விட்டு வா. எனக்கு அப்படி ஒரு மனைவியோ அப்படி மூன்று குழந்தைகளோ இருந்தார்கள் என்பதை நான் நினைத்துப் பார்க்கவே விரும்பவில்லை . நான் சொல்வது உனக்குப் புரிகிறதா? எனது அறையில் மட்டுமல்ல வீட்டில் எங்குமே இருக்கக்கூடாது. அப்படி அவர்களது ஏதாவது நினைவுச் சின்னங்கள் இங்கிருந்தால் அடுத்த நிமிடமே உனக்கு வேலை இல்லை. ஞாபகம் வைத்துக் கொள் என்று பொரிந்து தள்ளினான். ஒருவேளை இவர்களெல்லாம் திரும்பி வந்து விட்டால் என்று மின்னல் போல் ஒரு நினைவு அவன் மனதில் கடந்து சென்றது. அந்த நினைவையும் அவனது கழிவறைக் கதவையும் ஒருங்கே படார் என்று இழுத்து அடைத்தான்.

சரி என்று மிக பவ்யமாகத் தலையாட்டி விட்டு கண்ணாடிச் சில்லுகளைப் பொறுமையாகச் சுத்தம் செய்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு அவன் கூறியபடியே வீட்டின் முன்பாக வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய குப்பைத் தொட்டியில் கொண்டு போய் போட்டான். இந்தக் களேபரத்தை எல்லாம் கேட்ட மாமே சோவா பயந்து போய் ரிம்போவிடம் ஏதாவது பிரச்சனையா என்று கேட்டாள். உனக்குத் தெரிந்த நல்ல புகைப்படக்காரர்கள் இருந்தால் வரச்சொல் மாடுகளை படம் எடுக்க வேண்டும் என்றான் அவசரமாக. மாடுகளைப் படம் எடுப்பதற்கும் மேலே நடந்த பிரச்சனைக்கும் என்ன தொடர்பு என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள் மாமே சோவா. 

அதெல்லாம் ஒன்றும். நீ முதலாளிக்குத் தேவையான காலை உணவைத் தயாராக உணவு மேசையில் கொண்டு வந்து வை என்று கூறிவிட்டு ரிச்சார்டை உணவு உண்ணக் கூப்பிடப் போனான் ரிம்போ. 

பன்னிரண்டு பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவு உண்ணக்கூடிய மிக நீண்ட உணவு மேசை அது. அதில் ஏறக்குறைய பகுதி அளவு உணவு பண்டங்கள் நிறைந்து காணப்பட்டன. ரிச்சார்ட் கார்ட்டருக்குக் காலையில் எந்த உணவு பிடிக்கும் என்று சொல்ல முடியாது. எனவே அவனுக்குப் பிடித்த எல்லாக் காலை உணவுகளையும் செய்து வைப்பது வழக்கம். அதில் அவனுக்கு எது விருப்பமோ அதைப் பரிமாறச்சொல்லிச் சாப்பிடுவான். உணவு தயாரிப்பதற்கு முன்பாக போய் என்ன வேண்டும் என்று கேட்டால் கேட்டவர்கள் பாடு திண்டாட்டம். எனவே இப்படி செய்வது பரவாயில்லை என்று ரிம்போ நினைத்து மாமே சோவாவிடம்  செய்யச் சொல்லி விட்டான். செலவு குறித்தெல்லாம் ரிச்சார்டுக்குக் கவலையே இல்லை.

உணவு உண்டபின் வழக்கமாக அவன் தனது மாட்டுப் பண்ணையைப் பார்க்கப் போவது வழக்கம். அதேபோல் இன்றும் போவதற்குத் தயாராக அரைக்கால் சட்டையும் ஒரு டீ ஷர்ட்டும் மாட்டுக்காரத் தொப்பியும் அணிந்து சிறு பையனைப் போல் மிடுக்காக வந்தான். அவன் அணிந்திருந்த பால்மெய்ன் கம்பெனி டி-ஷர்ட்டின் அடையாளம் தெரிகிறதா என்று அவனே ஒரு முறை சோதித்துக் கொண்டான். ஃபெரிடா தொப்பியின் முகப்பு சரியாக முகத்துக்கு நேராக உள்ளதா என்பதையும் உறுதி செய்து கொண்டான். அவன் அறுபது வயதானவன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நல்ல உயரம், உயரத்துக்குத் தக்க உடல் அமைப்பு. அசப்பில் நியூசிலாந்து கிரிக்கெட்டர் பிரண்டன் மேக்குல்லனைப் போல் இருந்தான்.

பறந்து விரிந்து கிடந்த நாநூறு ஏக்கர் புல்வெளியில் நடந்து போய் மாடுகளைப் பார்ப்பது என்பது சிரமம் என்பதால் ரிம்போ தயாராக வைத்திருந்த இரண்டு பேர் அமரும் திறந்த ஒரு பேட்டரி காரில் ரிச்சர்டு  ஏறி அமர்ந்தான்.
கார் மிக மெதுவாகப் புல்வெளிகள் வழியாகக் கடந்து சென்றது. ஆங்காங்கே மரக் கூட்டங்கள் ஒரு சிறு வனம் போல் காட்சியளித்தது. மொத்தத்தில் பறந்திருப்பினும் ஆங்காங்கே குழிகளும் மேடுகளும் தனது வாழ்க்கையை போல் இந்தப் புல்வெளியிலும் இருக்கத்தான் செய்கிறது என்று நினைத்துக் கொண்டான். 

மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்ப்பதற்கு தயாராக மஞ்சள் குளித்தும் செவ்வண்ணம் பூசியும்  பளீரென்று பார்வைக்கு அழகாக காணப்பட்டன. உதிர்வதற்கு முன்னால் இப்படி அழகாக காட்சியளித்துவிட்டு நிரந்தரமாக வீழ்ந்து விடுவதுதான் இயற்கையின் அழகு போல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். டைனாவின் அழகிய புகைப்படமும் அவன் நினைவில் வந்து மறைந்தது. அவசரமாக அந்த நினைவைத் தலையாட்டி உதறிவிட்டு ரிம்போவிடம் பேச்சுக் கொடுத்தான். 

மாடுகளைப் பராமரிக்கும் அந்த மூன்று பணியாளர்களும் சரியாக வேலை செய்கிறார்களா என்று விசாரித்தான். ஆமாம் அவர்கள் மிக அக்கறையோடு பார்த்துக் கொள்கிறார்கள். அதை தான் நேரில் சென்று கவனித்தேன் என்று கூறினான். கேட்டதற்கு மட்டும் சரியான பதிலைச் சொல்லும் சேட் சிபிடி போல ரிம்போ பதில் சொல்லிக் கொண்டிருந்தான். 

இருவரும் மாட்டுப்பண்ணைக்கு வந்த போது பண்ணையில் யாரும் இல்லை. எல்லோரும் மாடுகளை ஓட்டிக்கொண்டு கிழக்கு திசையில் உள்ள ஆற்றின் கரைக்குப் போயிருந்தனர். ரிம்போ கூறியது போல நீண்டு கிடந்த அந்தப் பண்ணை மிக சுத்தமாகக் காட்சியளித்தது. பால் கறக்கவோ, அதை விற்கவோ கூடாது என்று ரிச்சார்டு கண்டிப்பாகக் கூறிவிட்டதால் சாதாரணப் பண்ணைகளைப் போல பால் கறக்கும் இயந்திரங்களோ பாத்திரங்களோ எதுவும் அங்கு இல்லை. 

கடுமையான குளிராக இருந்தால் மட்டுமே மாடுகள் கூட அந்த நீளமாக கட்டப்பட்டிருந்த மூன்று வரிசை தொழுவத்துக்குள் வந்து படுக்கும். பிற நேரங்களில் அவை புல்வெளிகளிலேயே ஆங்காங்கே படுத்து விடும். ரிச்சார்டின் அரண்மனை போன்ற வீட்டின் முன்பாக இருந்த பூந்தோட்டங்களுக்கு இடுவதற்கான சானிகளை மட்டும் இங்கிருந்து கொண்டு செல்வார்கள். அதுபோல வீட்டுத் தேவைக்கான கொஞ்சம் பால் அவ்வளவுதான் இந்தப் பண்ணையில் இருந்து பெற்றுக் கொள்வது.

நாய், பூனை வளர்ப்பது போல ரிச்சார்டுக்குப் பிடித்தமான விலங்கு மாடு. அதற்காகவே அவன் இவ்வளவு பெரிய ஒரு பண்ணையை அமைத்திருந்தான். மாடுகளுக்குப் பெயர் போன பிராங்க் போர்ட் போய் பலவகையான மாடுகளின் இனங்களை இங்கு வாங்கி வந்து வளர்த்துகிறான். வண்டியை திருப்பிக் கொண்டு மாடுகள் இருக்கும் இடத்திற்குப் போய் சேர்ந்தனர். 

ரிச்சார்டின் வண்டியைக் கண்ட உடனேயே தாயைக் கண்ட குழந்தைகள் ஓடி வருவது போல குட்டியானைகள் போல் இருந்த அந்த மாடுகள் ஓடி வந்து அவனை சுற்றிக் கொண்டன. மாடுகள் அவனை நாக்கால் நக்கியும் அவன் மீது உறைந்தும் தங்கள் பாசத்தை வெளிக்காட்டிக் கொண்டன. ரிச்சார்டு சிறு குழந்தை போல அவற்றை அணைத்து முத்தமிட்டு அதுவரை இல்லாத ஒரு ரிச்சார்டாக பாசமே உருவான ஒரு மனிதனாக மாறி அவற்றின் மீது அன்பைப் பொழிந்தான். 

ரிம்போ தயாராகக் கொண்டு வந்திருந்த பல வகையான பழங்களையும் மிட்டாய்கள் போன்ற மாடுகளுக்கு விருப்பமான வில்லைகளையும் எடுத்து கொடுக்க அவற்றை அன்போடு மாடுகளுக்கு ஊட்டினான் ரிச்சார்டு. அவன் முதன் முதலில் வாங்கி வந்த சியென்னினா ரோமன் காளை இப்போது வளர்ந்து பெரிதாகி தான் தான் இந்தக் குடும்பத்தில் மூத்தவன் என்பது போன்ற ஒரு ஆணவத்தில் அவன் அருகே வந்து தனது அதிகாரத்தைக் காட்டிக்கொண்டது. 

குத்துச்சண்டை வீரர்களைப் போல உடல் முழுவதும் தசைகள் உருண்டிருந்த பெல்ஜியன் ப்ளூ இனக்காளை டோடோ தானும் சளைத்தவன் அல்ல என்பது போல் ரிச்சார்டிடம் உரிமை கொண்டாடியது. இந்தப் போட்டிக்கு எல்லாம் நான் இல்லை என்று அலீனா என்ற அவன் அன்போடு அழைக்கும் அமெரிக்கன் பிராமின் இன மாடு தனது பங்கை வாங்கிக்கொண்டு முன்னால் சென்றது. மிக உயரமான திமில்களை ஆட்டி கொண்டு எத்தியோப்பியா அழகன் டின்டோ எத்தனை மாடுகள் தன்னை கவனிக்கின்றன என்பதை நோட்டமிட்டுக்கொண்டே ரிச்சார்டிடம் வந்து தனக்கு தந்த பழம் போதாது என்று இன்னும் வேண்டுமென்று கேட்டுக் கொண்டு தலையாட்டி தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.

அங்கிருந்த அறுபதுக்கும் மேற்பட்ட மாடுகள், கன்றுகள் காளைகள் எல்லாவற்றையுமே ரிச்சார்டுக்கு அடையாளம் தெரியும். மிகச் சிலவற்றிற்கு மட்டுமே அவன் தனிப்பட்ட பெயர் வைத்திருந்தான். அவற்றைத் தடவி, தழுவி, முத்தமிட்டு ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் கவனித்தான் அலீனாவின் மூத்த மகன் குறும்புக்கார காளைக் கன்றின் சப்பையில் பெரிய காயம் இருப்பதை. ரிச்சார்டுக்குப் பகிர் என்றது.

கோபத்தோடு ரிம்போவைத் திரும்பிப் பார்த்தான் ரிச்சார்ட். அவன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட ரிம்போ இந்தக் காளைக் கன்றைப் பார்ப்பவன் யார் எனறு விசாரித்து, செடோவை முன்னால் கொண்டு வந்து நிறுத்தினான். செடோ ஐம்பது வயதான ஒரு மெக்சிகன். நடுங்கிக் கொண்டே முன்னால் நின்றான். நிறைய சம்பளம் கொடுக்கும் தனது முதலாளியின் கடுமையான குணத்தை அவன் கேள்விப்பட்டு இருக்கிறான்.

எப்படி இவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டது என்று ரிச்சார்டு கேட்டான். காளைக் கன்றுகள் இரண்டும் சண்டை போட்டுக் கொண்டன, அதில் ஒன்று சறுக்கி ஒரு குழியில் விழுந்தது. அந்த இடத்தில் ஒரு கல் இருந்ததால் உறைந்து விட்டது என்று நடுங்கிக் கொண்டே கூறினான். அவை சண்டை போடுவதை நீ பார்த்து ரசித்து கொண்டு இருந்தாயா? நீ பெரிய கிளாடியேட்டர் பார்வையாளனா? இன்று முதல் உனக்கு வேலை இல்லை. ரிம்போ அவன் கணக்கைப் பார்த்து அனுப்பிவிடு என்று கூறி, திரும்பி பிற இரண்டு வேலைக்காரர்களை அழைத்து உடனடியாக மருந்து வைத்துக் கட்டும்படி கூறினான். 

சேடோ அவனைப் பார்த்து கெஞ்சுவதற்குத் தொடங்கிய போது ரிம்போ வேண்டாம் என்று கை காட்டினான். தன்னைப் பற்றி எடுத்துக் கூறும்படி அவன் ரிம்போவிடம் சைகை காட்டினான். ஆனால் ரிம்போவுக்கு அவன் பதில் தெரியும் என்பதால் பேசாமல் இருந்தான். மற்ற இரு வேலைக்காரர்களும் கண்ணிலேயே ரிம்போவிடம் கெஞ்சியதால் ரிம்போ மெதுவாக இவன் கடந்த ஆறு வருடங்களாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருப்பவன் என்று கூறி இழுத்தான்….. என்ன ரிம்போ உன் கணக்கையும் தீர்க்கச் சொல்லவா? என்று ரிச்சார்டு கேட்டதோடு ரிம்போ வாயை மூடிக் கொண்டான். 

சேடோவுக்கு ஒரு நிமிடம் தான் நின்றிருந்த நிலம் திடீரென்று கரைந்து போய் அதளபாதாளத்திற்குள் விழுந்தது போல் இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்து விட்டான்.

ரிச்சார்ட்டுக்கு அங்கு இருக்கப் பிடிக்காமல் வண்டியைத் திருப்பும் படி கூறி கோபத்தோடு வீடு வந்து சேர்ந்தான். வரும் வழியில் அவன் எதுவும் பேசவில்லை. வீடு வந்து சேர்ந்தபோது மாமே சோவா மிகப் பவ்யமாக மிஸ்டர் ரிச்சார்ட் கார்டர் மதிய உணவு தயாராக இருக்கிறது வந்து சாப்பிடுங்கள் என்று கூறினாள். 

காலை உணவு போலவே மதியமும் அமெரிக்க உணவு வகைகள், சைனா, தாய்லாந்து, மெக்சிகன் உணவு வகைகள் என பல வகையானவை கண்ணைக் கவரும் படி அடுக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து ஒவ்வொரு வாய் எடுத்துச் சாப்பிட்டு விட்டு தனக்கும் போதும் என்று கூறி தனது அறைக்குப் போனான். 

சேடோ தலையில் கை வைத்து இயலாமையில் உடைந்து போய் பூமியில் அமர்ந்த அந்தக் காட்சி அவன் மனதில் என்னவோ செய்தது. ஒருவேளை அவன் கெஞ்சிக் கேட்டு இருந்தால் தான் மனது மாறி அவனைத் தொடர செய்திருப்பேனோ என்று தன்னையே கேட்டுக் கொண்டான். வேண்டாம் சொன்னது சொன்னது தான் அப்படியே இருக்கட்டும் தன்னை இதுபோல் எத்தனை முதலாளிகள் காரணம் இல்லாமல்  திடீரென்று வேலையில் இருந்து பிரித்து விட்டிருக்கிறார்கள்.அப்போது தனக்கு யார் வந்து துணை நின்றார்கள் என்று நினைத்துத் தன் மனதைத் தானே கல்லாக்கிக் கொண்டான். 

தனது பக்கத்து அறையில் இருக்கும் தியேட்டருக்குள் போய் ஒரு சினிமா பார்க்க எண்ணினான். ரிம்போ ஓடிவந்து என்ன படம் பார்க்க வேண்டும் என்று கேட்டு படத்தை ஓட்டினான். ரம்யமாக இருந்த அந்த அறையின் பின் சுவரில் பலவகையான மதுபானங்கள் ஒரு சிறு பார்போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததில் அவனுக்கு பிடித்த வேன் விங்கிள் விஸ்கியை எடுத்து ஒரு அழகிய கிளாஸில் ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் கொண்டே படம் பார்த்தான். ஆனால் மனம் ஏனோ ஒன்றவில்லை.

இந்த மனநிலையை மாற்ற வெளியே எங்காவது சென்றால் நன்றாக இருக்கும் என்று அவனுக்கு தோன்றியது. அவன் எழுந்து தனது அறைக்கு போய் பல வகையான யோசனைகளுடன் சற்று நேரம் படுத்திருந்தான். திடீரென்று எழுந்து குளிக்கச் சென்றான்.

குளித்துவிட்டு வந்து அவனது அலமாரியைத் திறந்த போது மிக நேர்த்தியாக அவனது உடைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அதில் டன்கில் கோட்டையும் பேண்டையும் எடுத்து அணிந்து அதற்கு பொருத்தமான ஒரு கூச்சி சூவையும் அணிந்து கொண்டான். அவனது வாட்ச்கள் வைத்திருந்த டிராயரை இழுத்த போது அதில் புகாட்டே முதல் கார்டியர், டிஷோட், ரோலக்ஸ் எனப் பலவகையான கம்பெனி வாட்சுகள் மின்னின. அதில் கார்ட்டியரை எடுத்துக் கட்டிக்கொண்டு சற்று நீல நிறத்தில் இருந்த ஒரு ரேபன் கண்ணாடியையும் வைத்து கண்கொண்டான். 

மொத்தத்தில் பார்ப்பதற்கு ஒரு ஹாலிவுட் சினிமா நடிகனைப் போல அழகாக இருப்பதாக அவனுக்கே தோன்றியது. அதற்கு  முத்தாய்ப்பாக டியோர் ஸாவெஜை எடுத்து உடலேகமாக அடித்துக் கொண்டான். அந்த வாசனை அவனையே மதி இழக்கச் செய்தது. அவன் கதவைத் திறந்து வெளியே வந்த போது அவன் வெளியே போகப் போகிறான் என்பதை உணர்ந்த ரிம்போ ஓடிச் சென்று டிரைவர் அறையில் சீருடையோடு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மோரியோவை அழைத்து வந்தான்.

திடீரென்று ஓடி வந்ததன் பதட்டம் மோரியோவிடம் காணப்பட்டது. அவன் ஓடிச் சென்று கார் பார்க்கிங் லாட்டை தானியங்கியை வைத்துத் திறந்தான். ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம், லம்போர்கினி, பகானி சோன்டா, மெர்சிடஸ் பென்ஸ், பி எம் டபில்யு என வரிசையாக ஐந்து சொகுசுக்கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எல்லா கார்களுமே துடைத்து அப்போதுதான் கம்பெனியிலிருந்து இறக்கியது போல் பலப் பல என்று இருந்தன. இன்று தனது முதலாளி எந்தக் காரைத் தேர்வு செய்யப் போகிறார் என்று தெரியாமல் மோரியோ தயங்கி நின்றான். 

ரிச்சார்டு நேராக ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காரின் முன்பாக போனபோது மோரியோ ஓடிச்சென்று அந்தக் காரை திறந்து அவனை பின் சீட்டில் அமரச் செய்தான். ரிச்சர்ட்க்கு ரோல்ஸ் ராய்ஸ்  காரின் அடையாளச் சின்னமான சிறகுள்ள பறக்கும் மனிதனின் அந்த வடிவம் மிகவும் பிடிக்கும். அதைப் பார்க்கும் போதெல்லாம் இன்னும் வானில் நிறையப் பறந்து உலகைக் கையடக்க வேண்டி இருக்கிறது என்ற ஒரு எண்ணம் அவனுக்கு ஏற்படுவதுண்டு. அதனாலயே இந்தக் கார் அவனுக்கு பிற சொகுசு கார்களை விட மிகவும் பிடிக்கும்.

மாரியோ ஒரு சிறு குலுக்கம் கூட இல்லாமல் வண்டியை வெளியே எடுத்து ஓட்ட தொடங்கினான். ரிம்போவைப்போலவே இவனும் மிக மரியாதையாக நடந்து கொள்பவன். வெளியே குளிர் கூடுதலாக இருந்ததால் காருக்குள் ஹீட்டரை ஆன் செய்தான். ரிச்சார்ட்க்கு ஏனோ வெளிக்காற்றைச் சுவாசிக்க வேண்டும் போல் இருந்தது. எனவே கார் கண்ணாடியைக் கீழே இறக்கினான்.

இயற்கையின் ஒட்டுமொத்த மணங்களும் குளிரும் முண்டியடித்துக்கொண்டு காருக்குள் புகுந்தன. முதலில் திக்கு முக்காடிப் போன ரிச்சார்டு சற்று நேரத்தில் அதற்குத் தன்னை பழக்கப்படுத்திக் கொண்டான். ஓக்குமரங்கள் கரும்பச்சை நிறத்தில் வரிசை வரிசையாக நின்றன. அவற்றை இந்த குளிர் ஒன்றும் செய்வதில்லை என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் மேப்பில் மரங்களால் இந்தக் குளிரைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை போலும் அதனால் இலைகள் எல்லாம் பழுத்து விழுந்து பல மரங்கள் மொட்டையாக நின்றன. வேறு சில மரங்கள் ரத்தச்சிவப்பு நிறத்தில் இலைகளை களையத் தயாராகிக் கொண்டிருந்தன. 

கிராமங்களாக இருந்தாலும் கூட மிக அழகாக வீடுகளுக்கு முன்னால் புல்தரைகள் வெட்டப்பட்டு ஒரு ஒழுங்கு அமைப்போடு இருப்பதாக அவனுக்கு தோன்றியது. ஹூயூஸ்டன் நகரத்தை நோக்கி மோரியோ வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். ஆனால் எங்கு செல்வது என்பதில் அவனுக்கு ஒரு உறுதி இலலை. கேட்பதற்கும் பயம். அவனாகச் சொல்லட்டும் என்று காத்திருந்தான். ஆனால் அவன் இயற்கையை ரசிப்பதில் ஒன்றி இருந்தான். எதுவாக இருந்தாலும் நகரத்திற்கு போய் சேர்ந்த பிறகு கேட்போம் என்று முடிவு செய்து  காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்களுக்கு ஒரு முறை விமானம் போகும் இரைச்சல் திறந்த ஜன்னல் வழியாக உள்ளே வந்து தொந்தரவு செய்தது. இந்த விமானங்களுக்கிடையில் தனது அரகன்சியா விமானமும் இருக்கும் என்பதால் அந்தத் தொந்தரவை பொறுத்துக் கொண்டான். அமெரிக்காவின் பிரைவேட் ஜெட் விமான கம்பெனிகளில் முன்னிலையில் இருக்கும் அரகன்சியாவின் வளர்ச்சி எல்லோரையும் ஆச்சரிய படச் செய்ததை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டான்.

முக்கால் மணி நேரத்தில் கார் டவுன்டவுன் பக்கம் வந்துவிட்டது. இன்னும் இரண்டு சிக்னல்கள் தாண்டினால் டவுன் டவுனுக்குள் போய்விடலாம். என்ன செய்வது என்பது போல மோரியோ திரும்பிப் பார்த்தான். அதைப் புரிந்து கொண்டு ஹையத் ரீஜென்சி ஸ்பிண்டில் டாப்புக்கு போ என்றான். 

முக்கால் மணி நேர மன உளைச்சலுக்கு ஒரு தீர்வு கிடைத்தது போல் நிம்மதியாக மோரியோ பெருமூச்சு விட்டான். கார் ஒரு பெரிய ட்ராபிக் சிக்னலில் நின்று கொண்டிருந்தது. அவனது காருக்கு முன்னால் இருபத்தைந்துக்கு மேற்பட்ட கார்கள் நின்றிருந்தன. ரிச்சார்டு ஜன்னல் கண்ணாடியை மேலே உயர்த்தி கண்ணாடி வழியாக வெளியே பார்த்தான்.  புல்வெளி வெட்டி அழகு படுத்தப்பட்டு ஆங்காங்கே பூச்செடிகள் ஒரே நிறத்தில் சிரித்தன. இந்தக் குளிரிலும் அழகாக பூத்து நிக்கும் புதர் செடிகளைப் பார்த்து வியந்து கொண்டே முன்னால் பார்த்தபோது ஒரு புதருக்குக் கீழ் ஒரு ஹோம்லெஸ் மனிதன் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவன் யாரிடமும் யாசிப்பதாகத் தெரியவில்லை. கையில் ஏதோ ஒரு வாக்கியம் எழுதிய அட்டையை பிடித்திருந்தான். ஹெல்ப் என்ற இறுதிச் சொல் மட்டும் சற்றுப் பெரிதாக இருந்தது.

திடீரென்று ரிச்சார்டு என்ன நினைத்தானோ தெரியவில்லை. மோரியாவிடம் நீ ஓடிச் சென்று அந்த மனிதனைக் கூட்டி வந்து காரில் ஏற்று என்று சொன்னான். ஒரு வினாடி மோரியோவுக்கு ஒன்றும் புரியவில்லை. ரிச்சார்டு சற்று கோபமாக அதையே திரும்பச் சொன்ன போது. பதறிப் போய் காரை சிக்னல் என்று கூட பார்க்காமல் நிறுத்திவிட்டு ஓடிப்போய் அந்த மனிதனிடம் காரில் வந்து ஏறும்படி கூறினான்.

முதலில் அவன் மோரியோவை பார்த்து இவன் உளறுகிறானோ என்று நினைத்தான். திரும்பிப் பார்த்தபோது மிக ஆடம்பரமான ரோல்ஸ் ராய்ஸ் கார் சிக்னல் விழுந்தும் போகாமல் பின்னால் இருக்கும் கார்களின் ஹாரன் ஒலிகளை பொருட்படுத்தாமல் நிற்பதைப் பார்த்தபோது உண்மைதானோ என்று சந்தேகித்தான். ஒரு நிமிடம் யோசித்து விட்டு தன்னிடமிருந்த ஒரு சிறிய பொக்கனத்தையும் எடுத்துக்கொண்டு மறக்காமல் அந்த அட்டையையும் பிடித்துக் கொண்டு காரின் பின்னால் சுற்றிப் போய் அமரப் போனான். போகும்போது வண்டியின் ஒன்று என்று எழுதிய ரெஜிஸ்ட்ரேசன் எண்ணைப் பார்த்த போது சற்றே பிரமித்தான்.

மோரியோ பதறிப்போய் வேண்டாம் முன்னால் வந்து அமருங்கள் என்றான். ரிச்சார்டு பரவாயில்லை அவன் என்னிடமே இருக்கட்டும் என்று கூறி அவனை பின் சீட்டில் அமர்த்திக் கொண்டான். மோரியாவுக்கு இதெல்லாம் கனவு போல தோன்றியது வந்து ஏறியவனுக்கு இதில் ஏதோ சூது இருப்பதாக தோன்றியது.

உள்ளே வந்து அமர்ந்தவன் காரினுள் இருந்த சொகுசுத் தன்மையையும் ஆடம்பரத்தையும் பார்த்து வாய் பிளந்து போனான். அவன் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஜென்டில்மேன் நீங்கள் எனது கிட்னியை அல்லது கண்ணை தானம் பெறுவதற்காகவா அழைத்துச் செல்கிறீர்கள்? என்றான்.

ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கையில் ஒருநாள் கடவுளாக, அவன் ஆசைகளை நிறைவு செய்ய வேண்டும் என்று திடீரென்று தோன்றிய எண்ணத்தைச் செயல்படுத்திய ரிச்சார்ட்க்கு, அவனிடம் தானம் பெற அழைத்துச் செல்வதாக அவன் கூறியது செருப்பைக் கழட்டி அடித்தது போல் இருந்தது. அவனைக் கூறியும் குற்றமில்லை உலக நடப்பை தெரிந்த மனிதன் அவன் என்று நினைத்துக் கொண்டான்.

அதற்கு அவசியமில்லை நண்பரே உங்கள் பெயர் என்ன என்று கேட்டான். தனது பெயர் எல்வின் ரியான் என்று கூறினான். ஏறக்குறைய ரிச்சார்டின் வயது தான் அவனுக்கும் இருக்கும். ஒரு கிழிந்த கோட்டை அணிந்திருந்தான். அவன் குளித்துப் பல நாட்கள் ஆகி இருக்க வேண்டும். அவனிடமிருந்து வந்த நெடி முன்னால அமர்ந்திருந்த மோரியாவை முகம் சுளிக்கச் செய்தது. அடிக்கடி மூக்கை தடவிக் கொண்டான். ரிச்சார்டுக்கு அது பெரிய பிரச்சனையாகத் தோன்றவில்லை. 

எல்வின் உனக்கு என்ன வேண்டும் தயங்காமல் கேள் என்றான். நான் நல்ல முறையில் சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டன. எனக்கு ஏதாவது ஒரு நல்ல ஹோட்டலில் கொண்டு போய் உணவு வாங்கிக் கொடுங்கள் என்றான். சரி அப்படியே செய்யலாம் என்று கூறி மோரியோவிடம் முதலில் அவனை கலேரியா பக்கம் உள்ள பெரிய கோல்டன் ஸ்பாவுக்குக் கொண்டு செல்லச் சொன்னான்.

தனது முதலாளிக்கு மூளை குழம்பி விட்டதா என்று சந்தேகத்தோடு ரிச்சார்டு எப்போதும் போகும் பிளாட்டினம் மெம்பர்ஷிப் உள்ள கோல்டன் ஸ்பாவுக்குப் போக வண்டியைத் திருப்பினான். வண்டியைப் பார்க் செய்தவுடன் எல்வினைக் கையோடு அழைத்துக் கொண்டு ரிச்சார்டு ஸ்பாவுக்குள் நுழைந்து போது அங்கு இருந்த பணியாளர்கள் வித்தியாசமாக ரிச்சார்டைப் பார்த்தனர்.

இன்னும் சிறிது நேரத்திற்குள் இவனைச் சுத்தம் செய்து தன்னைப் போலவே ஆடை ஆபரணங்கள் அணிவித்து கொண்டு வரும்படி கூறிவிட்டு முன்னால் காத்திருப்பு அறையில் அமர்ந்து கொண்டான். அந்த ஸ்பாவின் முதலாளிக்கு ரிச்சார்டை நன்கு தெரியும். எனவே மறுபேச்சு இல்லாமல் எல்வினை அழைத்துக் கொண்டு உள்ளே போனான். 

அரை மணி நேரம் கழித்து எல்வின் திரும்ப வந்தபோது அவனை ரிச்சர்டுக்கே அடையாளம் தெரியவில்லை. ஒரு வினாடி அவன் தன்னைவிட அழகாக, பணக்காரத்தனமாக இருப்பதாக ரிச்சர்ட்க்கு தோன்றியது. டன்ஹில் கோட்டு, நைக் ஷு,  பிரதா கண்ணாடி, ரோலக்ஸ் வாட்ச் என்பவை ஒரு பிச்சைக்காரனை அரை மணி நேரத்தில் பணக்காரனாக்கிவிட்ட அதிசயத்தை வியந்து கொண்டு எழுந்து நின்றான். 

வந்தபோது எல்வினுக்கு இருந்த பசிக்களைப்பும் தொய்வும் இப்போது அவன் முகத்தில் இல்லை. மிக மிடுக்கோடு இருப்பது போல் தோன்றியது. ஸ்பாவின் முதலாளி பவ்யமாக நூற்றி முப்பத்தி ஐந்து கே டாலர் பில்லை ரிச்சார்டிடம் கொண்டுவந்து கொடுத்தான். அது எவ்வளவு என்று கூட பார்க்காமல் தனது கருப்பு பிளாட்டினம் டெபிட் கார்டை எடுத்து நீட்டினான் ரிச்சார்டு. 

சற்று நேரத்தில் முப்பது மாடிக்கு மேல்  இருந்த சுழலும் ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்தனர் எல்வினும் ரிச்சார்டும். என்ன சாப்பிடுவதற்கு வேண்டுமென்று கேட்டான். தின்றால் திருப்பி கடிக்காத்த எதைத் தந்தாலும் சாப்பிடுவேன் என்றான் எல்வின். ரிச்சார்டு வெயிட்டரை அழைத்து இன்று இந்த ஹோட்டலில் செய்த எல்லா மெனுவில் இருந்தும் ஒரு தட்டை கொண்டு வந்து இங்கு நிறைக்கும்படி கூறினான். இதுவரை ஹோட்டலுக்கு வந்த யாருமே சொல்லாத இந்த மாதிரியான ஒரு ஆர்டரை கேட்டு வெயிட்டர் குழம்பிப் போனான். 

சந்தேகமாக இருந்தாலும் தலையாட்டி விட்டுப் போனவன் மேனேஜரிடம் இதைச் சொன்ன போது அவன் சிரித்துக் கொண்டே வந்தது அரகன்ட் ரிச்சார்டாக  இருக்கும் என்றான். சந்தேகம் வேண்டாம் அவன் அப்படித்தான் நீ அவன் சொன்னபடி செய். இரண்டு மூன்று  மேசைகளை அடுத்து பிடித்துப்போட்டு உணவை பரிமாறு. பில் அடைக்கும் அளவு உனக்கு டிப்பும் தருவான் என்றான். சற்று நேரத்தில் எல்வினின் கண் விரிந்த அகன்று ஆச்சரியத்தில் மூழ்கியது. எதை சாப்பிடுவது எதை விடுவது என்று தெரியாமல் அவன் முன்னால் இருந்த எல்லாவற்றையும் பார்த்த போதே வயிறு நிறைந்த மனநிலை அவனுக்கு வந்து விட்டது. 

பசியின் உந்துதலில் அவசரமாக எடுத்து நாகரீகம் இல்லாமல் தின்பான் என்று ரிச்சார்டு எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாகக் கரண்டிகளையும் குத்தூசிக்கரண்டிகளையும் கத்தியையும் எடுத்து மிக நாசுக்காக நாகரீகமாக ஆனால் வேகமாக உணவை அவன் சாப்பிட்டதைப் பார்த்தபோது நிச்சயமாக இவன் ஒரு நல்ல குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன் தான் என்பதை ஊகித்தான்.

இவ்வளவு நாகரீகமாக நடந்து கொள்ளும் இவன் ஏன் இப்படி பிச்சைக்காரன் ஆனான் என்று தெரிந்து கொள்ள ரிச்சார்டுக்கு ஆர்வமாக இருந்தது. ஆனால் அதைக் கேட்டு, தற்போது அவன் இருக்கும் ஆனந்தமான மனநிலையைக் கெடுத்து, அவனது மனதை வருத்தப்படச் செய்ய வேண்டாம் என்று பேசாமல் இருந்தான். ஒருவேளை ஏதாவது மருத்துவ சிகிச்சை செய்து அந்த நேரத்தில் காப்பீடு செய்யாமல் இருந்து குடும்பம் விற்று கொடுக்க வேண்டி வந்திருக்கலாம். தான் கூட ஒருமுறை ஒரு அறுவை சிகிச்சை செய்த போது அந்த நேரத்தில் காப்பீடு செய்யவில்லை என்று சொல்லி ஒரு மில்லியன் டாலர் மருத்துவ பில் வந்ததை நினைத்துக் கொண்டான். தன்னிடம் பணம் இல்லாமல் இருந்திருந்தால் எல்வினைப் போல ஹோம்லெஸ் ஆக சிக்னலில் இருந்து பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். 

வயிறார உணவு உண்டபின் எல்வின் கண்களை மூடி சற்று நேரம் அதை அனுபவிப்பதை உணர முடிந்தது. ரிச்சார்டுக்கு அது மகிழ்ச்சியை தந்தது. சரி இனி உனக்கு என்ன ஆசை என்று கேட்டான். சுற்றிலும் யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து விட்டு எல்வின் மெதுவாக
 ரிச்சார்டிடம் தனக்கு ஒரு நைட் கிளப் போக வேண்டும் என்று ஒரு ஆசை என்றான். சொல்லும்போதே கொஞ்சம் வெட்கப்படுவது தெரிந்தது. 

மறைவிடம் என்ற பொருள்படும் அந்த நைட் கிளப் நகரத்திலிருந்து சற்று தூரத்திலிருந்து.வெளியில் இருந்து பார்க்கும் போது சாதாரண ஒரு கட்டிடமாகத் தோன்றியது. அங்கு இறங்கிய போது எல்வின் முகம் வாடிவிட்டது. அதைக் கண்டு கொள்ளாமல் ரிச்சார்டு அவனை உள்ளே அழைத்துச் சென்றான். நுழைவாயிலில் துப்பாக்கியோடு நின்றிருந்த இரண்டு பாதுகாவலர்கள் அவர்களது வயதைக் கேட்டனர். இன்னும் தனக்கு இருபத்தொரு வயது ஆகவில்லை அதற்கு மூன்று வருடங்கள் இருக்கின்றது என்று ரிச்சார்டு கிண்டலாகக் கூறினான்.

உள்ளே இருந்து ஓடி வந்த ஒருவன் மிக மரியாதையாக ரிச்சார்டையும் எல்வினையும் உள்ளே அழைத்துச் சென்றான். உள்ளே போனதும் எல்வினுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மிகப்பெரிய ஒரு அறையின் நடுவே ஒரு கொடிக்கம்பம் போல் ஒரு கம்பம் நிறுத்தப்பட்டு இருந்தது. அதை சுற்றிலும் வட்டமாக நாற்காலிகளும் மேசைகளும் இட்டு அதிலிருந்து கொண்டு ஆண்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் அந்தக் கம்பத்தில் பலவர்ண மின்விளக்குகள் ஒளிர்ந்து அந்த இடத்தை மிகப் பிரகாசமாக செய்தது. அப்போது பலத்த ஆரவாரங்களுடன் இரண்டு பெண்கள் மிகக் குறைவான ஆடைகள் அணிந்து அந்த கம்பத்தை கையில் பிடித்துக் கொண்டு ஒருவகையான கவர்ச்சி நடனம் செய்தனர். எவ்வளவு தூரம் அவர்களது புட்டத்தையும் மார்பையும் காட்ட முடியுமோ அந்த அளவு அவற்றைக் காட்டி குலுக்கி ஆண்களை உசுப்பேத்திக் கொண்டிருந்தனர். கொஞ்சம் பணக்கார ஜொள்ளு கிழவன் ஒருவன் அந்தக் கம்பத்தின் மிக அருகில் இருந்த படிக்கட்டில் போய் அமர்ந்த போது, ஆடிக்கொண்டிருந்த ஒரு பெண் அவனுக்கு மிக அருகில் வந்து தனது உடல் பாகங்களை அவன் மீது லேசாக உரசி அவனை உணர்வுச்சம் செய்ததோடு பிற ஆண்களை பொறாமைப்படவும் செய்ய வைத்தாள். ஒவ்வொரு முறை அவள் அவனை உரசிய போதும் அவன் கோட்டுப் பாக்கெட்டில் இருந்து டாலர் நோட்டுகளை அவள் மீது தூவினான்.

எல்வினுக்குத் தலைகால் புரியாத மகிழ்ச்சி. அவனை இன்னும் சற்று மகிழ்ச்சியடைய செய்ய ரிச்சார்டு தனது பாக்கெட்டில் இருந்து ஒரு நூறு டாலர் நோட்டுக் கட்டை எடுத்து எல்வினிடம் கொடுத்து நீயும் அதே போல் அந்த கம்பத்தின் அருகே போய் அமர்ந்து அனுபவி என்றான். ஒரு நூறு டாலர் நோட்டைப் பார்த்தே பல வருடங்கள் ஆகி இருந்த அவனுக்கு நூறு நோட்டுக்களை ஒன்றாகப் பார்த்தபோது என்ன செய்வதென்றே தெரியாத அளவு மதி மயங்கிப் போனான். இருப்பினும் ஆசை அவனை அந்த கம்பத்தினருகே அழைத்தது.

எல்வினும் போய் அந்தப் படிக்கட்டில் அமர்ந்த போது கம்பத்தைப் பிடித்துக் கொண்டு ஆடிக் கொண்டிருந்த மற்ற அழகி இவனை நோக்கி வந்து மிகக் கொச்சையாக சில அசைவுகளை செய்தாள். ஒரு நூறு டாலர் நோட்டை எடுத்து அவள் மீது எறிந்த போது இதை சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெண் அவன் மீது படுத்து உறவு கொள்வது போன்ற அசைவுகளைச் செய்தாள். சுற்றிலும் இருந்த எல்லோரும் ஒரே நேரத்தில் அவர்களையும் அறியாமல் கூவி விட்டனர்.

எல்வின் இன்னும் ஒரு நோட்டை எடுத்து அவளுக்குக் கொடுக்க இதைப் பார்த்த முதலில் ஆடிக்கொண்டிருந்த பெண் அவனைக் களைந்து விட்டு வந்து எல்வினை வேறொரு கோணத்தில் உரசினாள். அவளுக்கும் ஒரு நோட்டை எடுத்து கொடுத்தான். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அவனை பாலியல் எழுச்சி செய்து கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் எல்வினுக்கு களைப்பு ஏற்பட்டது. மெல்ல எழுந்து வந்து களைப்போடு ரிச்சார்டிடம் அமர்ந்து கொண்டான். தன்னிடம் மீதம் இருந்த தொன்னூறு நோட்டுக்களை திரும்ப  ரிச்சார்டிடம் கொடுத்தான். 

எல்வினின் நாகரீகமான நடத்தையை வியந்து கொண்டே இல்லை அதை நீயே வைத்துக் கொள் என்றான் ரிச்சார்டு. அவன் களைப்பைப் போக்குவதற்குத் தேவையான மது கொண்டு வந்து கொடுக்கும்படி சைகை செய்தான். மது கொண்டு வந்து வைத்த பையனை பார்த்த போது அசப்பில் அவனது இளைய மகனைப் போல் தோன்றியது. சிக்காகோ போனபோது ஏதோ ஒரு மதுக் கடையில் தனது மகனை பார்த்ததாக ரிச்சார்டின் செக்ரெட்டரி பாபி சொன்னது நினைவில் வந்தது. அந்த அளவு கெதிகெட்டும் கூட தனது கட்டு திட்டங்களுக்கு ஏற்ப வாழ அவர்கள் வர விரும்பாததை நினைத்து எரிச்சல் பட்டான். அதே நேரத்தில் ஏனோ தனது தந்தை கார்ட்டரின் ஆஸ்திரேலியாவில் உள்ள பல கோடி மதிப்புள்ள கார்ட்டர் வைண்யாடும் அவரது ஒரு அதட்டலில்  ஒடுங்கிப் போகும் அம்மாவும் நினைவுக்கு வந்தனர். அந்த நினைவைக் களைந்து நிகழ்காலத்துக்கு வந்தான்.

 சற்று நேரத்தில் எல்வினுக்கு முன்னால் வகை வகையான மதுபானங்கள் நிறைந்தன கூடவே உணவுகளும். இப்போது எல்வினின் கவனம் மது அருந்துவதில் இருந்தது. 

எவ்வளவு குடித்தான் என்று அவனுக்கே தெரியாது எல்வின் இப்போது ஆனந்தத்தின் உச்சியில் இருந்தான். வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக்கொண்டு இடையே ரிச்சார்டின் கன்னத்தைச் சிறு குழந்தைகளைப் பிடிப்பது போல பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான். ரிச்சார்டு அவன் வாழ்வில் வந்த ரட்சகன் என்றும் இத்தனை நீண்ட நாட்கள் தான் வேண்டிக் கொண்டதற்கு இணங்க கடவுள் அனுப்பி வைத்த ஏஞ்சல் என்றும் பலவாறு கூறி மகிழ்ந்தான். 

நடக்க முடியாமல் தள்ளாடிய எல்வினை அழைத்துக் கொண்டு காருக்குள் போய் அமர்ந்தான் ரிச்சார்டு. நேரே தனது அரகன்சியா ஹெட் கோட்டேர்சுக்குக் கொண்டு போகும்படி மோரியோவிடம் கூறினான். இருபத்தைந்து மாடிகள் உள்ள அந்த மிகப்பெரிய கட்டிடத்தில் மேல் மாடி முழுவதுமாக ஒரு குடியிருப்பாக மாற்றப்பட்டு இருந்தது. அதுதான் ரிச்சார்டின் குடியிருப்பு. வாரக் கடைசிகளில் மட்டுமே அவன் பண்ணை வீட்டுக்குப் போவான். மயக்கத்தில் இருந்தும் கூட அந்த வீட்டின் ஆடம்பரத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனான் எல்வின். 

எல்வினுக்கு வந்த உறக்கத்தை அவன் உதாசீனப்படுத்திவிட்டு ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்க முடிவு செய்தான். தனது போதை மாறுவதற்கான நல்ட்ரெக்ஸோன் மாத்திரை ஒன்றைத் தரும்படி கேட்டான். அந்த வீட்டின் வேலைக்காரன்  ஷெரின் ஒரு நாளும் இல்லாமல் இப்படி ஒரு விருந்தாளியோடு வந்த முதலாளியின் செயலை வியந்து கொண்டு, ஓடிச் சென்று மருத்துவப் பெட்டியை எடுத்து வந்தான். அதிலிருந்து அவன் கேட்ட அந்த மாத்திரையை எடுத்து ரிச்சார்டு எல்வினுக்கு கொடுத்தான். சற்று நேரத்தில் எல்வின் பழையபடி குஷியாகி விட்டான்.

சரி உனக்கு அடுத்து என்ன வேண்டும் என்றான் ரிச்சார்டு. வேண்டாம் ஒன்றும் வேண்டாம் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொன்னான் தலையைச் சொரிந்து கொண்டே. இல்லை நீ ஏதோ தயங்குகிறாய் தைரியமாகக் கேள் நான் ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டேன் என்றான். ரிசார்ட் ஒன்றும் நினைக்க மாட்டான் என்று உறுதி செய்துவிட்டு தனக்கு பாலுறவு கொள்ள வேண்டும் என்று பொருள்படும்படி கையை அசைத்துக் காட்டினான். 

இதை எதிர்பார்த்த ரிச்சார்டு சிரித்துக் கொண்டே உனக்கு இப்படிப்பட்ட பெண் தான் அல்லது ஆண் தான் அல்லது திருநங்கை தான் என்று ஏதாவது தனிப்பட்ட விருப்பம் இருக்கிறதா? என்று கேட்டான். எனக்கு எல்லாம் நிறைவாக இருக்கும் ஒரு கருப்பு அழகி வேண்டுமென்றான் கண்ணை சிமிட்டிக்கொண்டே. அவனது தேர்வை எண்ணி சிரித்துக் கொண்டே ரிச்சார்டு ஒரு எண்ணுக்குப் போன் செய்தான். சிறிது நேரத்தில் மிகக் கவர்ச்சியான ஒரு அழகி வந்து சேர்ந்தாள். 

எரக்ட்டின் ஏதாவது வேண்டுமா என்று ரிச்சார்டு கேட்டான். வேண்டாம் இவன் அரேபியக் குதிரை என்றான் எல்வின் அவனது குறியைத் தட்டி காட்டிக்கொண்டு. குதூகலத்தோடு அவன் படுக்கை அறையை நோக்கிச் சென்றான். சற்று நேரத்தில் சிரிப்பொலிகளும் முனகல்களும்  என அந்த வீடு கலகலப்பானது. ஷெரின் இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் சற்று தூரத்திலிருந்து இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான்.அந்த மதுக்கடை வெயிட்டரைப் பார்ப்பது வரை இருந்த மகிழ்ச்சி ஏனோ குன்றி முகம் வாடி அமர்ந்திருந்தான் ரிச்சார்டு. பையன்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டேனோ?.தன் அம்மா ஒலினாவைப் போல் ஒரு பெண்ணாக டைனாவை எதிர்பார்த்தது தவறோ? என்றெல்லாம் யோசித்தான். 

அப்போது எல்வினும் அந்த அழகியும் அறையிலிருந்து வெளியே வந்தனர். அவள் எல்வினை இறுதியாக ஒரு முறை அணைத்து அவன் உதட்டில் முத்தமிட்டு விட்டு ரிச்சாடையும் முத்தமிட வந்தாள். ரிச்சார்டு கையசைத்து வேண்டாம் என்று கூறிவிட்டு, ஒரு கட்டு பணத்தை அவள் கையில் திணித்தான். அடிக்கடி அழைக்கும்படி கூறிவிட்டு எதிர்பார்த்ததை விட எல்வின் மிகவும் ஹாட் என்று சொல்லிச் சிரித்துக் கொண்டு போனாள்.

ரிச்சார்டு அப்போதுதான் கவனித்தான் எல்வின் ஆடை இல்லாமல் நிற்பதை. போய் ஆடை அணிந்து கொண்டு வா என்று கூறினான். இல்லை இப்படி இருப்பதில் ஒரு சுகம் இருக்கிறது என்று கூறி ரிச்சார்டின் எதிரில் அமர்ந்து கொண்டான். அவனது நீண்ட குறியைப் பார்த்த போது எல்வின் கூறியது போல் அரேபிய குதிரை தான் என்று நினைத்து சிரித்துக் கொண்டான். 

என்ன தூங்கும் எண்ணம் இல்லையா? இன்னும் ஏதாவது ஆசை பாக்கி இருக்கிறதா? என்றான். ஜன்னல் வழியாக வெளியே பார்த்த போது ஒரு விமானம் பெரிய ஓசை எழுப்பிப் போய்க்கொண்டிருந்ததைக்  காட்டி அதில் ஒரு முறை போக வேண்டும் அதுவும் ஒரு தனிப்பட்ட விமானம் என்றான். இவ்வளவுதானா என்று ரிச்சார்டு கேட்டபோது எல்வினுக்கு ஆச்சரியமாகப் போனது. இரவு ஒரு மணிக்கு மேல் ஆகி இருந்தது. இந்த நேரத்தில் ஒரு பிளைட் சார்ட் செய்வது என்பது இயலாத காரியம். ஆனால் அவன் பேசுவது அரகன்சியாவின் ஓனரிடம்  என்பதை உணராமல்  பேசிக் கொண்டிருந்தான். 

நீ சொன்னபடி ஒரு சார்ட்டட் விமானத்தில் போகலாம் ஆனால் இப்படி ஆடை இல்லாமல் போக முடியாது நீ போய் மரியாதையாக உனது ஆடைகளை அணிந்துவா என்றான். எல்வினுக்கு தனது காதுகளை நம்ப முடியவில்லை. சற்று நேரத்தில் இருவரும் விமானத் தாவளத்தில் இருந்தனர். ரிச்சார்டின் தனிப்பட்ட விமானம் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. மிக பவ்விமாக வந்த பணியாளர்கள் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றனர். அந்தச் சொகுசான சிறு விமானம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளே அனைத்து வகையான வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

எல்வின் ஒருமுறை தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான். அவன் ஆசைப்பட்டது போல பைலட்டின் பக்கத்து சீட்டில் போய் அமர்ந்து ஆகாயத்திலிருந்து பூமியை பார்த்துக் கொண்டிருந்தான். அவனது ஆனந்தத்தை கூட்டும் நோக்கத்தோடு விலை உயர்ந்த மதுவை பரிமாறச்சொல்லி கை காட்டினான் ரிச்சார்டு. பைலட்டுக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு மது அருந்து கொண்டே அமெரிக்காவை சுற்றிப் பார்ப்பேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை என்று சிறு குழந்தை போல ஆ…. ஊ…. என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான். 
அவனது அந்த ஆனந்தம் கூட இருந்தவர்களைச் சிரிக்கச் செய்தது. எதிர்பாராமல் ஒரு நாள் டைனாவும் குழந்தைகளும் தன்னோடு வாழ வந்துவிட்டால் தானும் இப்படித்தான் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வேனோ ? என்று நினைத்தான்.

திடீரென்று ஏதோ ஒரு கூர்மையான பொருள் பறந்து வந்து ரிச்சார்டின் கன்னத்தில் மோதியது. சுரீர் என்று வலித்தது. காயம் ஏற்பட்டு ரத்தம் வருகிறதோ என்று கூட தோன்றியது. இவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் இந்த விமானத்திற்குள் அப்படி என்ன வந்து புல்லட் போல் தன் கன்னத்தை தாக்கியது என்று  கன்னத்தை தடவி பார்த்து அந்த மோதிய பொருளை கீழே தேடிப் பார்த்தான். அது ஒரு டாலர் நோட்டை சுருட்டிய உருண்டை. எடுத்துப் பிரித்துப் பார்த்தான் பத்து டாலர் நோட்டு அது. இது எப்படி விமானத்திற்குள் வந்தது? என்று குழம்பிப்போய் சுற்றிலும் பார்த்தான். நெரிசலான அந்தச் சாலை போக்குவரத்து சிக்னலின் அருகில் உள்ள பூச்செடிப் புதரின் கீழ் அமர்ந்திருப்பதை உணர்ந்தான்.

அவனைக் கடந்து ரெஜிஸ்ட்ரேஷன் எண் ஒன்று என்ற எண்ணிட்ட ஒரு கருத்த ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் மிக மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. அதன் பின் சீட்டில் கண்ணாடி இறக்கப்பட்டு அதனுள் இருந்தவன் தான் இந்த நோட்டை தன் மீது எறிந்திருக்கிறான் என்பதை ரிச்சார்டு புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தபோது கார் ஜன்னல் வழியாக அந்த நோட்டை எறிந்தவன் எட்டிப் பார்த்து கார்டியர் வாச் குலுங்க கையசைத்தான். ஐயோ…. அது எல்வின் அல்லவா? என்றான் அவனையும் அறியாமல். அப்படியானால் தான் பகல் கனவு கண்டு கொண்டு இருந்தோமா?. என்று யோசித்தான். தனது வாழ்க்கை நிகழ்வுகள் எல்லாமே கனவு போல் தானே நிகழ்ந்தன? இதோ போகும் இந்த எல்வின் கூட எப்போது என் பக்கத்தில் வந்து அமரப் போகிறானோ என்னவோ? என்று நினைத்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டான். அப்போது எதிர்பாராமல் அடித்த ஒரு குளிர் காற்று அவன் கையில் இருந்த பத்து டாலர் நோட்டை அடித்துக் கொண்டு போனது. யோசனையைக் களைந்து, அந்தப் பத்து டாலரை பிடிக்க அவசரமாக எழுந்து ஓடினான்.

Leave a comment

Trending