பாட்டொன்று கேட்டேன் 7
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
ஜி.சிவக்குமார்

பாடல் : பொன்னொன்று கண்டேன்
திரைப்படம்: படித்தால் மட்டும் போதுமா?
பாடல் : கண்ணதாசன்
இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள் : டிஎம்எஸ், பிபிஸ்ரீனிவாஸ்
திருமண வாழ்விற்கு ஒரு பெண் தகுதியானவளா என்பதைத் தீர்மானிக்கும், பெண் பார்க்கும் வைபவத்தை யார் எப்போது துவக்கினார்களென்று தெரியவில்லை. பெண் பார்த்தல் என்பது அப்பா, அம்மா, சொந்தக்காரர்களுடன் சென்று சைட் அடிப்பது என்று முன்பு எங்கோ படித்தது நினைவில் மின்னுகிறது.
அலங்கரிக்கப்பட்ட பெண்ணை அழைத்து வந்து அத்தனை பேர் நடுவில் நிறுத்தி, மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பொருத்தமாகப் பதில் சொல்லி, பிள்ளை வீட்டார், “பொண்ண எங்களுக்குப் புடிச்சிருக்கு” என்று திருவாய் மலர்ந்தருள்வார்களா? அல்லது போய் லெட்டர் போடறோம் என்று சொல்லிச் சென்று விடுவார்களா? என்றெல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் உச்சக் கொதிநிலையில் இருப்பது காலகாலமாய்த் தொடர்ந்து வருகிற பழக்கம். இப்போதெல்லாம், பெண்ணை, பணி புரியும் அலுவலகத்திலோ, ஏதேனுமொரு கோவிலிலோ பார்த்து முடிவெடுத்து விடுகிறார்கள்.
உங்களுக்குப் பெண் பார்த்த அனுபவமுண்டா? உண்டு எனில் நீங்கள் பாக்யவான்கள். எனக்கு அந்த அதிர்ஷ்டமில்லை. என் தந்தையுடனான ஒரு தொலைபேசி உரையாடலில் நிச்சயிக்கப்பட்டது எனது திருமணம். என் மனைவியை மட்டுமல்ல வேறு எந்தப் பெண்ணையும், பெண் பார்த்த அனுபவமெல்லாம் எனக்குக் கிட்டவில்லை.
வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ, ஜானகி தேவி ராமனைத் தேடி இரு விழி வாசல் திறந்து வைத்தாள் என்பது போன்ற பெண் பார்க்கும் வைபவப் பாடல்கள், திரைப்படங்களில் ஏராளம் உண்டு.
இதிலிருந்து மாறுபட்ட ஒரு வித்தியாசமான காட்சியமைப்பை, பீம்சிங் இயக்கத்தில் உருவான, ‘படித்தால் மட்டும் போதுமா?’ திரைப்படத்தில் காணலாம்.
அண்ணனுக்கு மனைவியாகப் போகிற அண்ணியை, தம்பியும், தம்பியை மணம் செய்து கொள்ளப் போகிற பெண்ணை அண்ணனும் பெண் பார்க்கப் போவதாக ஏற்பாடு.
காடு, மிருக வேட்டை எனப் பழகிய, படிப்பறிவற்ற தம்பி, பி. ஏ. படித்த நாகரிகமான பெண்ணை எதிர் கொள்ளத் தயங்குகிறான். அவனுக்கு இலக்கியம் குறித்த சில கேள்விகளை எழுதித் தந்து, சில ஆங்கில வார்த்தைகளையும் கற்றுத் தந்து அனுப்பி வைக்கிறான் அண்ணன். சமாளித்துத் திரும்புகிறான் தம்பி. தம்பிக்குப் பெண் பார்க்கப் போன அண்ணனோ, குடும்பக் குத்து விளக்கான இராமாயணச் சீத்தாவையே எதிரில் கண்டு மயங்குகிறான்.
பெண்களைப் பார்த்து வந்த பின் தங்களது அனுபவங்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதாக அமைந்த பாடல்தான், ‘பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை’ பாடல்.
பாடலை, தம்பிதான் துவங்குகிறார்.
பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
கடைசி வரியைக் கவனித்தீர்களா? என்னென்று நான் சொல்லலாகுமா? ஏன் சொல்லலாகுமா? என்று கேட்கிறார்? அண்ணனுடைய மனைவியல்லவா. அவளை வர்ணிப்பது முறையாகுமா? என்ற தயக்கத்தில்தான் அப்படி ஒரு கேள்வி வருகிறது. என்ன ஒரு நயத்தக்க நாகரிகம் பாருங்கள். இப்படியெல்லாம் திரைப்படப் பாடல்கள் வந்த ஒரு காலம் இருந்ததே என்று ஒரு ஏக்கப் பெருமூச்சு வருகிறதல்லவா?
இப்போது அண்ணன் பாடுகிறார்.
பூ ஒன்று கண்டேன்
முகம் காண வில்லை
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
அணிந்திருந்த ஆண் உடையை மாற்றிப் புடவையில் எந்த விதத் தயக்கமுமின்றி நடந்து வந்து இணையாக அமர்ந்து தேவையான சர்க்கரை அளவைக் கேட்டுக் கலந்து தந்து, அண்ணன் எழுதித் தந்த இலக்கியக் கேள்விகளுக்குச் சரவெடியாய்ப் பதில் தந்த பெண்ணைத் தம்பி வர்ணிப்பதைப் பாருங்கள்.
நடமாடும் மேகம்
நவநாகரீகம்
அலங்காரச் சின்னம்
அலை போல மின்னும்
நிலத்திற்கு நோகுமோ என்று நடந்து வந்து குனிந்த தலை நிமிராமல் காபி டம்ளரை டீப்பாயில் வைத்துத் திரும்பி நடக்கையில் அவள் அழகில் பிரமித்த அண்ணன், அவளது பெயரைக் கேட்க, பெண்ணின் அண்ணன் ‘சொல்லும்மா’ என்றதும் ‘சீத்தா’ என்று சொல்லும் பெண்ணின் மயக்கத்தில் இருக்கும் அண்ணன் இப்படியல்லாமல் வேறு எப்படி அவளை வர்ணிப்பான்?
நடமாடும் செல்வம்
பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம்
உயிராக மின்னும்
தம்பி பாடுகிறார்
துள்ளி வரும் வெள்ளி நிலா
பதிலுக்கு அண்ணன்
துவண்டு விழும் கொடி இடையாள்
என்கிறார்.
தம்பி இப்படிச் சொல்கிறார்.
விண்ணோடு விளையாடும்
பெண் அந்தப் பெண்ணல்லவோ
பாடலின் முதல் பகுதி பார்த்து வந்த பெண்களின் வர்ணனை என்றால் இரண்டாம் பகுதி சகோதரர்களின் அன்பைப் பாடுகிறது. அண்ணனுக்குத் தம்பியும், தம்பிக்கு அண்ணனும் பெண் பார்க்கப் போனதைக் கவிஞர் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்.
நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்க வில்லை
உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி
நீ காண வில்லை
என் விழியில்
நீ இருந்தாய்
உன் வடிவில்
நான் இருந்தேன்
நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லையே
சென்றேன்
ஹ்ம்ம்
கண்டேன்
ஹ்ம்ம்
வந்தேன்
தம்பிக்குப் பார்க்கப் போன சீத்தாவின் அழகில் மயங்கி அவளைத் தானே திருமணம் செய்து கொள்வதற்காக ஒரு பொய்யான மொட்டைக் கடிதத்தை எழுதி, அதன் வழி சீத்தாவை அண்ணன் திருமணம் செய்து கொள்வதும், பிஏ படித்த பெண், கேட்கக் கேள்விகள் அண்ணன் எழுதித் தந்தது என்று அறியாமல் படித்தவன் என்று நம்பித் திருமணம் செய்து பின் உண்மை தெரிந்து அவனை வெறுப்பதும் எனத் தொடர்கின்ற திரைப்படம், இயக்குனர் பீம்சிங்கின் வெற்றிகரமான ப வரிசைப் படங்களின் நெடும் வரிசையில் சேர்ந்தது.
அண்ணன் கோபாலாகப் பாலாஜி. தம்பி ராஜுவாக சிவாஜி. பெரும் உருவங்களை மறந்து விட்டுப் பார்த்தால் என்ன ஒரு அழகிய பொருத்தம். பணக்கார வீட்டுப் பையனாகப் பாலாஜி, நாகரிக மங்கை மீனாவாக ராஜ சுலோச்சனா, கிராமத்துப் பெண் சீத்தாவாக சாவித்திரி, வழக்கம் போல் இயல்பாகப் பொருந்துகிறார்கள். சிவாஜியைப் பற்றி புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது? விண்ணோடு விளையாடும் பெண் அந்தப் பெண்ணல்லவோ என்று பாடிக் கொண்டே இடது கை ஆள்காட்டி விரலையும் தலையையும் அசைக்கும் ஸ்டைல் என்னவொரு அழகு.
கவியரசரின் அற்புதமான வரிகளும், விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இன்னிசையும், டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீனிவாஸின் மயக்கும் குரல்களும், சிவாஜி, பாலாஜியின் அற்புதமான உடலசைவுகளும் நம் முன்னே ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுகின்றன.
கட்டற்றுத் திரியும் வேட்டை இளைஞனான தம்பி பாடும், ‘ஓஹோஹோ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள்’, இரு வேறுபட்ட குணங்களைக் கொண்ட சகோதரர்கள் பாடும் ‘நல்லவன் எனக்கு நானே நல்லவன்’, வெறுக்கும் மனைவியிடம் தம்பி பாடும் ‘நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை’, காதல் கணவனிடம் மனைவி பாடும் ‘தண்ணிலவு தேனிறைக்க’, உச்சத் துயரில் தம்பி பாடும் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’ என இந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் முத்துகள்.
Leave a comment