பிரபஞ்சன் சிறுகதைகளில் பெண் தனித்துவாழ்தலும் சுயசிந்தனையும்

மா. ஜெகதீஸ்வரி,
முனைவர்ப்பட்டஆய்வாளர்,
தமிழ்த்துறை,
ஆர். வி. எஸ். கலைஅறிவியல்கல்லூரி,
சூலூர் – 641402.


முன்னுரை
இன்றைய வாழ்க்கைச்சூழலில் பெண்கள் அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வலுவலகங்கள் அரசு நிறுவனங்களாகவும் தனியார் நிறுவனங்களாகவும் உள்ளன. இன்றைய வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வதற்குப் பொருளாதாரம் இன்றியமையாததாக இருப்பதால் பெண்களும் பணிக்குச் செல்ல வேண்டியவர்களாக உள்ளனர். கணவனும் மனைவுயும் இணைந்து பணிபுரிந்தால்தான் குடும்பத்திற்குத் தேவையானவற்றை நிறைவு செய்து கொள்ள முடியும் என்ற நிலை இப்போது எங்கும் காணப்படுகிறது. இச்சமுதாய மாற்றத்தை இன்றைய எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளில் படைத்து வருகின்றனர். நடுத்தர வகுப்புக் குடும்பங்களில் பெண்கள் பணியாற்றுவது என்பது ஓர் அன்றாட நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது. பிரபஞ்சனும் தமது சிறுகதைப் படைப்புகளில் பணிபுரியும் பெண்களின் நிலைகளை விளக்கியுள்ளார். பெண்கள் பணிபுரியச் செல்வதால் ஏற்படும் சிக்கல்களையும் அதனால் அவர்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளையும், சுயசிந்தனைகளையும் எடுத்துரைக்கும் விதமாக,
பணிபுரியும் பெண்களின் வகைகள்
பெண்களின் சமஇயக்கஉணர்வு
தனித்து வாழும் பெண்கள்
தனித்து வாழுதலும் குடும்பமனநிலையும்
புறம்பேசுதலும் பெண்நிலையும்
என்ற பொருண்மைகளில் இக்கட்டுரை அமைகிறது.
பணிபுரியும்பெண்களின் வகைகள்
கல்வி வளர்ச்சியின் காரணமாக இன்று படித்த பெண்கள் பணிபுரியச் செல்கிறனர். பொருளாதார வளர்ச்சிக்காகவும் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காகவும் படிப்பின் பயனைத் துய்ப்பதற்காகவும் கௌரவத்திற்காகவும் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவும் மகளிர் அரசுத்துறையிலும் தனியார் துறையிலும் பணிபுரிகின்றனர். இவர்கள்பொதுவாக பணிபுரிவதற்குச் சில காரணங்கள் உண்டு.
“1. வறுமையைப்போக்குவதற்கு

  1. இழந்த பேரிழப்பைமறப்பதன் பொருட்டு
  2. பொருளாதார வசதியைப்பெருக்குவதற்கு
  3. பிறர் கையை எதிர்பார்க்காமல் சுதந்திரமாக செயல்படுவதற்கு
    என்ற நிலைகளில் பெண்கள் அலுவலகங்களில்பணிபுரியச்செய்கின்றனர். ”(கா. தெய்வானை,சட்டங்களும்மகளிரும், மாறி வரும் மங்கையர் உலகம், ப. 61)
    பிரபஞ்சன்கதைகளில் பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பொருள் சம்பாதிக்கும் நோக்கத்தோடு பணிபுரியும் மகளிரைக் காண முடிவதில்லை. சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற சமத்துவ நோக்குடைய மகளிரைக் கதை மாந்தராகப் படைத்து இவர் கதையில் உலாவ விட்டிருக்கிறார். இவர்களால் திருமணம் ஆகாத நிலையில் தனித்து வாழும் மகளிர் நிலையும் திருமணமான நிலையில் குடும்பத்தோடு வாழ்கிறபோது ஏற்படும் சிக்கல்களும் விளக்கப்படுகின்றன. ஒன்று மணமான நிலை. இன்னொன்று மணமாகாத நிலை என்ற இருவகையிலும் தாம் கண்ட அனுபவ நிலைகளைப் படைப்பாளிவெளிப்படுத்தியுள்ளார்.
    பெண்களின் சம இயக்க உணர்வு
    ஆண்களைப் போல மாத ஊதியத்தை தங்கள் விருப்பப்படி செலவு செய்ய வேண்டும். தன்னுடைய சுதந்திரத்தில் வேறு யாரும் தலையிடக் கூடாது என்ற நோக்கத்தோடு திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் அலுவல் மகளிரில் நிஷா கதாபாத்திரம் முக்கியமானது. இவள் சிறுவயது முதலேயே பாரதியாரின் புதுமைப் பெண்கள் இயல்புகளை மனதில் பதிய வைத்துக் கொண்டும் குழந்தைப் பருவத்திலேயே அவள் உள்ளத்தில் விடுதலை உணர்வு இருந்து வந்தமையால் தானாகச் சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டாலும் அப்பண்பு மேலோங்கி விட்டது. அதனால் அவள் உடன் பணியாற்றும் மோகன் இந்த நடுத்தர வயதிலும் திருமணம் செய்ய வந்தபோது மறுத்துவிட்டாள். சுதந்திர உணர்வு காரணமாக மணமாகாமலேயே தனிமையாக வாழ்கின்றாள். ஓர் ஆடவன் மணமாகாமலேயே வாழ்ந்து காட்டுவதற்குச் சமமாக ஒரு பெண்ணும் வாழ்ந்து காட்ட முடியும் என்ற குறிக்கோளைப்பிரபஞ்சன்இக்கதை மூலம் உணர்த்துகிறார்.
    “அவனும் அவளும்” என்ற தலைப்பிலமைந்த கதையில் நிஷா அலுவலகத்தில் பணிபுரியும் பெண். முதுநிலைப் பட்டதாரி. ஆய்வுப் பட்டம் கூட வழிகாட்டியோடு ஒத்துப் போகாத நிலையிருந்ததால் காலங்கடந்துபெற்றதுதான். முப்பத்திரெண்டு வயது வரை மணமே செய்து கொள்ளவில்லை. மோகனின் காதலை சடங்கு சம்பிரதாயங்களிலிருந்து வேறுபட்டு நண்பனாக வாழ்தல் என்ற கூட்டுக்குள் செல்வதாக அவன் வாழ்க்கை முடிகிறது. விடுதலை உணர்வோடு தானே சிந்தித்து முடிவு எடுக்கும் ஆற்றல் பெற்றவள். மரபுக்குஅடிபணியாதவள். அதனால் ஏற்படுகின்ற தடைகளுக்குக் கூட விடை கண்டு நேர்த்தியாக வாழ்வை அமைத்துக்கொண்டாள்.
    ஓர் ஆணுக்குச் சமுதாயத்தில் எத்தகைய விடுதலை உணர்வு இருக்கின்றதோ அதே விடுதலை உணர்வைப் பெற்றுத் திகழ்கிறாள் நிஷா. உடன் பணியாற்றும் மோகனும் இவளும் ஒரே சாதியைச் சார்ந்தவர்கள். மோகன் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் மீதான தனது எண்ணத்தை
    “நீ…. அந்த ஆசாரங்கள்,சடங்குகள், சம்பிரதாயம் என்பவற்றின்மீது உனக்கு மரியாதை இருக்கிறது. எனக்கு இல்லை, அதனால் உன்னுடைய நம்பிக்கைகள் தவறு, அதை நீ மாற்றிக் கொள் என்று சொல்ல மாட்டேன். எனக்கு அது உடன்பாடில்லை… மரபு வழிபட்ட மனிதனாய் இருப்பதில் பாதுகாப்பை நீ உணர்கிறாய். நல்லது, எனக்கு இவைகள் எல்லாம் அர்த்தம் இழந்தவையாகப்படுகிறது மோகன். நெருப்பை வளர்த்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, நீ கட்டுகிற தாலியைக் கழுத்தில் ஏற்றுக் கொண்டு உனக்குப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு, உன்னைச் சார்ந்து உன் மனுஷியாக வாழ என்னால் முடியாது மோகன். எதை ஆதாரமாக வைத்து நாம் குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளுகிறோமோ, அந்த ஆதாரத்தின் மேலேயே எனக்கு நம்பிக்கையில்லாமல், நான் உனக்கு உண்மையான மனைவியாக எப்படி இருக்க முடியும்? உனக்காக நான் உன் வழிப்பட்டால், என் கருத்துக்கள், உன் சிந்தனைகள், உன் உலகம் என்னாவது? யாருக்கு வேண்டுமானாலும், பணம் கொடுக்காமல், ஆனால், வாழ்க்கையைத் தாக்கிக் கொடுக்க முடியுமா?”(பிரபஞ்சன், விட்டு விடுதலையாகி…,பக். 19-20)
    என்று வெளிப்படுத்தி சுயமரியாதைச் சிந்தனை உடையவளாக நிஷா கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. பெண் கல்வியினால் விளைந்த விளைவுதான் நிஷாவின் நிலை ஆகும். தனி நிலையில் வாழும் நிஷாவிற்கு உற்றார், உறவினர் இல்லாததால் ஊரலர் எழாமல் இருந்தது. அதனால் அவள் கொண்ட குறிக்கோளை நிறைவேற்ற முடிந்தது என்பது அறியமுடிகிறது.

தனித்து வாழும் பெண்கள்
வறுமை காரணமாகப் பணிபுரியச் செல்லாத, செண்பகராஜலெட்சுமி கதாபாத்திரம் படித்து விட்டுத் தனியாக வீட்டிலிருக்கப் பிடிக்காமல் வேலைக்குச் சென்று தன் செலவுகளுக்காகச் சம்பாதிக்க கல்லூரியில் பணிபுரிந்து வந்தாள். தன் சொந்த வாழ்க்கையின் மேம்பாட்டிற்காகவே வாங்கிய ஊதியமனைத்தையும் செலவு செய்து வந்தாள். அவள் இவ்வாறு வாழ்வதைக் கண்டு பொருமிய நெருங்கிய உறவினர்களின், இவ்வளவு வயதாகியும், பணமிருந்தும் வாழக்கையை அமைத்துக்கொள்ளவில்லையே என்ற ஏசலுக்கு அவள் அஞ்சவில்லை. இருந்தாலும் மனதில் ஏற்பட்ட வருத்தத்தை அழுதுதீர்த்துக்கொள்கிறாள். அவளுடைய மனப்புழுக்கத்திற்கு அழுகை வடிகாலாக அமைகிறது. தன் உறுதி மனப்பான்மையிலிருந்து இறுதிவரை அவள் மாறவே இல்லை. பிரபஞ்சன், தூற்றப்படாத நிலையில் ஒரு பெண்ணையும், அவர் தூற்றப்பட்டும் அதனைப் பொருட்படுத்தாத ஒரு பெண்ணையும் இருவேறுகதைகளில் படைத்துள்ளார். இவ்விரு மகளிரும் ஆணுக்கு நிகர் பெண்கள் எனக் காட்டும் புதிய சமுதாயத்தை உருவாக்கும் கதைமாந்தர்களாக விளங்குகின்றனர். குடும்பச்சுமையின்றித் தனிவீடெடுத்து இவ்விரு அலுவல் மகளிரும் வாழ்ந்து வருகின்றனர்.
செண்பகராஜலெட்சுமிக்கு வயது முப்பத்தாறு ஆகியும் திருமணம் நடைபெறவில்லை. மனம் செய்யாமல் வாழ வேண்டுமென்ற குறிக்கோள் வாழ்க்கை உடையவனாக அவள் இருந்ததால் அவளைப் பொறுத்தவரை வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்தது. உறவினர் என்ற முறையில் அடிக்கடி அவளைப் பார்க்க வரும் சித்திக்கோ அவள் மணம் புரியாமலிருப்பது பிடிக்கவில்லை.
“விழுப்புரம் பெரியம்மாகிட்டே அவ கிடக்கிறா துடைகாலி, பொண்ணா அவள்? பொண்ணுன்னா காலாகாலத்தில ஒரு கல்யாணத்தைப்பண்ணிட்டு, குழந்தை குட்டி பெத்து குப்பை கொட்ட வேண்டாமா? இது என்ன, சாமியார் வாழ்க்கை, பொண்ணு தனியா இருக்கிறதாவது? கண்ட கண்ட தடியனோடெல்லாம் சிரிச்சுப் பேசிக்கிட்டு, இனிச்ச இழைஞ்சிவிட்டு, தூ” (பிரபஞ்சன், ஒரு மனுஷி, ப. 198)
வாழ்க்கைக்கு வேண்டிய பொருளாதார வசதி அவ்விடத்தில் இருந்தது, பொருட்கள் அத்தனையும் வாங்கி வீட்டை நிறைத்திருக்கின்ற அவளுக்குக் கணவன், பிள்ளைகள் என்ற நிலையில் எந்தவொரு ஆசையும் ஏற்பட்டிருக்கவில்லை.
தனித்துவாழுதலும் குடும்பமனநிலையும்
திருமணமான மற்ற ஆசிரியைகள் இவள் மீது பொறாமை கொண்டார்கள். பிள்ளை குட்டிகளுடன் குடும்ப வாழ்க்கையில் துன்பமடையும் சில பெண்களும் செண்பகாவின் வாழ்க்கையைக் கண்டு பொறாமையடைந்தார்கள். திருமண வயது கடந்து அவள் வாழ்ந்து கொண்டிருப்பதால் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள், அவளை அறிந்தவர்கள் ஆளுக்கொரு காரணம் கூறி விளக்கம் கொடுத்துத் தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொண்டார்கள்.
“செண்பகாவிற்கும் மனித உடம்புதானே, அவளுக்கென்ன நோய் விதிவிலக்கா, மருத்துவரைப் பார்க்க எண்ணுகிறாள். அன்று பாட ஒதுக்கீடு நாள், கல்லூரி முதல்வர் வேறு ஒரு ஆசிரியையை அழைத்தபோது, பிரம்மசாரியத்திலிருக்கும் செண்பகாவை அழைத்துக்கொள்ளுங்களேன் என்று நழுவி விடுகிறாள். செண்பகாவைக் கூப்பிட வேண்டியதுதானே? குடும்பமா, குழந்தையா, குட்டியா, ஒண்டிக்காரி வானாவருவாள்”(பிரபஞ்சன், ஒரு மனுஷி, ப. 204) என்று கூறுகிறாள். இவ்வாறு ஒரு பெண் தனித்திருத்தலைக் குடும்பமாகக் கருதாத மனநிலை சமூகத்தில் புரையோடிக்கிடப்பதை இது புலப்படுத்துகிறது.
தனக்கும் ஒரு குடும்பமிருக்கிறது, அது உள்ளத்திலிருக்கிறது, தாலி கட்டினால்தான் குடும்பமா? ஆடவர் துணையிருந்தால்தான் குடும்பமா? என்றெல்லாம் எண்ணிப் பார்த்து மருத்துவர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி விடுபடுகிறாள்.
“மேடம் எனக்கு குழந்தை, குட்டி இல்லை, ஒப்புக்கறேன். ஆனால் குடும்பம் இல்லாமே இருக்குமா? நான் நடத்துவது குடும்பம் இல்லையென்றால் பின் வேறு என்ன? நான் நடத்துவதற்கு என்ன பெயர்? விபச்சாரமா? விடுதியா? அல்லது சாராயக்கடையா?”(பிரபஞ்சன், ஒரு மனுஷி, ப. 204) எனச் சக ஆசிரியையின் கருத்தை மறுதலித்துப் பேசுகிறாள். தனி ஒருத்தியாக வாழ்வதிலும் மனத் துன்பத்தை அனுபவிக்க வேண்டி இருக்கிறது. சமுதாயச்சூழல்தான் அதற்குக் காரணம் என்பதை பிரபஞ்சன் இக்கதையில் காட்டுகிறார்.
புறம்பேசுதலும் பெண்நிலையும்
இரண்டு, மூன்று நாட்களாக ஒரு இளைஞன் கவிதை எழுதி வருகிறான். அவன் எழுதுவதெல்லாம் காதல் கவிதைகள், செண்பகாவிடம் சரிபார்க்கக் கொண்டு வருகிறான். ஒரே கருத்தில் எழுதுவதை விடுத்து வேறு பல துறைகளையும் கருவாகக் கொண்டு கவிதை எழுதும்படி அறிவுரை கூறி அனுப்புகிறாள். இளைஞன் ஒருவன் வந்துபோவதைத் தூரத்துக் கண்கள் பார்க்கின்றன. தூற்றுகின்றன. அதனை செண்பகா அறிகிறாள். அவளைப் பொறுத்தவரை தூய மனதுடையவள். இருப்பினும் அக்கம் பக்கத்துக் குடும்பத்தினர் ஆளுக்கொருவராக அவளைச் சுற்றிக் கதை வளர்க்கிறார்கள்.
“சுத்த பஜாரிங்க கல்யாணம் கட்டிக்கிட்டு ஒருத்தனோட வாழறதுக்கு என்ன? —- கல்யாணம் கட்டிக்கிட்டா ஒரு புருஷன்தானே”(பிரபஞ்சன், ஒரு மனுஷி, ப. 207) என்று வசைபாடுகிறது.
இச்சமுதாயச் சூழல்களை விடுத்து உண்மையான தோழி மதனா வீட்டிற்கு ஆறுதல் பெறச்செல்கிறாள். அவளுக்குத் திருமணம் ஆகியிருக்கிறது. செண்பகா கவலையில்லாமல் வாழ்கிறாளே என்ற பொறாமையில் சமுதாய மக்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் இவளைப்பற்றிப் புறங்கூறுகிறார்கள் என்று மதனா அறிவுரை கூறுகிறாள். தனியாக ஒரு பெண் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியுமா,அமைத்துக்கொண்டால் விளையும் பயன் என்ன என்பதை விளக்கும் கதையாக“வாசனை”விளங்குகிறது.
மதனா வீட்டுப்புல் வாசனையுடையவளாகவும், செண்பகா காட்டுப்புல் வாசனையடைவளாகவும் இருப்பதால் கதைத் தலைப்பு பொருத்தமுடையதாகிறது. வீட்டுப்புல் காலில் மிதிபடுகிறது. வளைந்து கொடுக்கிறது, காட்டுப்புல்லை யாரும் மிதிப்பதில்லை, நிமிர்ந்து நிற்கிறது. இரண்டிற்கும் வாசனை உண்டு. காட்டுப்புல்லாக வாழ்ந்து காட்ட முடியும் என்று குறியீட்டுப் பொருள் மூலமாக சிக்கலுக்குத் தீர்வு காண்கிறார் படைப்பாளி. சமூகத்தில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை செண்பகாவிரும்பவில்லை. ஆண்களுக்கு அடிமையாக வாழ விரும்பாததால் விடுதலை உணர்வோடு வாழ்கிறாள். அவளைப் பற்றிய எண்ணப்போக்குகளைப் பிற மாந்தர் வழி உணர்த்துகிறார். செண்பகாவிற்குப் பணிபுரியும் இடத்தில் உள்ள தொல்லைகளை விட ஊரார் கண்ணோட்டத்தில்தான் சிக்கல்கள் அதிகம் எழுகின்றன.
முடிவுரை
இன்றைய நாகரிக உலகில் ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாகப் பெண்கள் அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்றனர். பெற்றோரின் துணையின்மை காரணமாகப் பணிபுரிவதோடு தங்களுக்கெனத் தனிவீடு அமைத்துத் திருமணம் செய்து கொள்ளாமலேயே தனித்து வாழ்கின்றனர். அவ்வாறு வாழும் சிலருக்கு ஊர் மக்களால் தொல்லைகள் நிகழ்ந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் தனக்கான கருத்தியலோடு தலைநிமிர்ந்து வாழ்பவர்களாய் விளங்குகிறார்கள் எனப் படைத்துக்காட்டுகிறார் பிரபஞ்சன்.
துணைநின்ற நூல்கள்
கா. தெய்வானை, 2015, சட்டங்களும் மகளிரும், மாறி வரும் மங்கையர் உலகம், கிழக்கு பதிப்பகம், சென்னை.
பிரபஞ்சன், 2017, பிரபஞ்சன் சிறுகதைகள், கவிதாபப்ளிகேஷன், சென்னை 17.

Leave a comment

Trending