மதராசபட்டினம் ஊரும் வரலாறும் (சென்னை மாநகரின் வரலாறு)
சொ.தமிழ்வேந்தன்
முனைவர்ப் பட்ட ஆய்வாளர் (முழுநேரம்)
புதுக்கல்லூரி, (தன்னாட்சி)
இராயப்பேட்டை, சென்னை-600 014.
அலைபேசி – 9940377697
மின்னஞ்சல் – vendan568@gmail.com
முன்னுரை
முதல் மாநகராட்சியாக அமைக்கப்பட்ட நகரம் மதராசபட்டினமாகும். இந்த நகரத்திலிருந்தே காந்தி சத்தியாகிரக முழக்கத்தைத் தொடர்ந்தார். இங்குதான், இந்தியாவிலேயே முதல் முதலில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரமாகும். பம்பாய், கல்கத்தா, ஒரு தலைநகராக அமைவதற்கு முன்பே மதராசபட்டினம் உருவானது. ஆங்கிலேயர்கள் முதலில் விரும்பி குடியேறியது இங்குதான். பிறகுதான் கல்கத்தாவும், பம்பாயும் அவர்கள் கைகளில் வந்தன. பல்லவர் காலத்திலே மயிலாப்பூர் ஒரு முக்கிய துறைமுகமாக இருந்தது. நந்திக்கலம்பகத்தில் இதுபற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. தற்போது ‘ஜார்ஜ் டவுன்’ என அழைக்கப்படும் முத்தியால் பேட்டைக்கும் பெத்தநாயக்கன் பேட்டைக்கும் இடையே இருந்த இடத்தில் நெல் விளைச்சல் நடந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மூன்று பழைய கிராமங்களான எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை ஆங்கிலேயர்களால் இந்தியரான பெங்கால் கிருஷ்ண என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன. இவ்வாறு தரவுகளின் அடிப்படையில் மதராசபட்டினத்தின் வரலாற்றை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
முதலில் கால் பதித்த போர்ச்சுக்கீசியர்கள்
ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே, போர்ச்சுக்கீசியர்கள் மதராசபட்டினத்தில் கால் பதித்திருந்தனர். 1498ஆம் ஆண்டு மே 20இல் வாஸ்கோடகாமா, இன்றைய கேரளாவின் கோழிக்கோடு வந்தபோதுதான், முதன் முதலில் போர்ச்சுக்கலிருந்து இந்தியா வருவதற்கான கடல்வழிப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பாதையைப் பின்பற்றியே போர்ச்சுக்கீசிய வணிகர்கள் வியாபாரம் செய்ய இந்தியாவிற்கு வந்தனர். கோவாவைத் தலைமையிடமாகக் கொண்டு கொச்சி, கள்ளிக்கோட்டை, மயிலாப்பூர் ஆகிய துறைமுக கிராமங்களில் வியாபாரம் செய்யத் தொடங்கினர். போர்ச்சுக்கீசிய வணிகர்களுக்கு ஆட்சியாளர்கள் மற்றும் உள்ளூர் வணிகர்களால் அவ்வப்போது பிரச்சனைகள் வந்தன. ஆனாலும், அவற்றையெல்லாம் கடந்து நூறு ஆண்டுகளில் கிழக்கு கடற்கரையோரப் பகுதியிலிருந்து அவர்களுக்குப் பெரும் வருவாய் கிடைத்தது வியப்பாய் இருந்தன. அது மேலும் வியாபாரம் செய்ய ஆர்வத்தை தூண்டியது. இதையறிந்த டச்சுக்காரர்கள் 1605இல் இங்கு வந்தனர். மயிலாப்பூரில் போர்ச்சுக்கீசியர்கள் இருந்ததால், டச்சுக்காரர்கள் வடக்கே இருபத்தைந்து மைல் தள்ளியிருக்கும் பழவேற்காட்டில் வணிகத்தைத் தொடங்கினர். அங்கு, அவர்களுக்கும் நல்ல வருவாய் கிடைத்தன.
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தொடக்கம்
போர்ச்சுக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் வியாபாரத்தில் கொடிகட்டி பறந்ததை அறிந்த ஆங்கிலேய வியாபாரிகள், அதுபோல தாங்களும் வணிகம் செய்ய விரும்பினர். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் ‘ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி’ (The Company of Merchants of London Trading into the East Indies) பேச்சு வழக்கில் இதனை ‘ஜான் கம்பெனி’ எனவும் அழைப்பர். 1600இல் தொடங்கப்பட்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆள்கள், பல்வேறு கிழக்கிந்திய நாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்ய முயன்றனர். முதன் முதலில் 1609ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல்கள் சூரத் துறைமுகத்தை வந்தடைந்தன. ஆனால், அங்கு அவர்களுக்கு முன்பே டச்சுக்காரர்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தது ஆங்கிலேயர்களுக்குச் சவாலாக இருந்தது. பிறகு கோல்கொண்டா சுல்தானிடம் அனுமதி பெற்று, ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மசூலிப்பட்டினத்தில் தங்களின் முதல் தொழிற்சாலையை உருவாக்கியிருந்தது ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி. மஸ்லின் துணி நெசவு பாரம்பரியத் தொழிலாக இருந்ததால், அங்கு தொழிற்சாலையை உருவாக்கினர். கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை வணிகம் துணி சார்ந்தது என்பதால், ஆங்கிலேயர்கள் அந்த நகரைத் தேர்வு செய்தனர். மசூலிப்பட்டினத்தில் நெய்யப்படும் துணி என்பதால், அதற்கு ‘மஸ்லின்’ என்று பெயர் வைத்தனர்.
ஆங்கிலேயர் மசூலிப்பட்டினத்தில் தொழிற்சாலையை உருவாக்கியிருந்தாலும் அங்கு டச்சுக்காரர்களே செல்வாக்கு பெற்றிருந்தனர். அதோடு வியாபாரத்தில் ஆதிக்கமும் செலுத்திக் கொண்டிருந்தனர். இதனால், வேறு இடத்தைத் தேட வேண்டிய கட்டாயம் கிழக்கிந்திய கம்பெனிக்கு ஏற்பட்டது. ஆகவே, நெல்லூருக்கு அருகேயுள்ள ‘ஆர்மகான்’ என்ற இடத்தில் இன்னொரு தொழிற்சாலையைத் தொடங்கினர். அந்தப் பகுதி சந்திரகிரி மன்னரான வெங்கடாத்ரியின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆங்கிலேயர், இங்கு தொழிற்சாலை அமைப்பதற்கு மன்னரிடம் அனுமதி பெற்றுத் தந்த, ஆறுமுக முதலியாருக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கிழக்கிந்திய கம்பெனியினர், இந்தப் பகுதியை அவர் பெயரில் ‘ஆர்மகான்’ என்று அழைத்தனர். பின்னர் அதுவே நிலைத்துவிட்டது.
ஆர்மகான் ஆங்கிலேயர்களின் எதிர்பார்பைப் பூர்த்திச் செய்யாததாலும், அங்கு பாதுகாப்பற்றச் சூழல் நிலவியதாலும், கிழக்கிந்திய கம்பெனியினருக்கு வேறு இடத்தைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது கம்பெனியின் ஆர்மகான் பிரதிநிதியாகவும், மசூலிப்பட்டின கவுன்சில் உறுப்பினராகவும் இருந்த பிரான்சிஸ் டேவிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
மதராசபட்டினம் வருகை
ஆர்மகானுக்குத் தெற்கே வங்கக் கடலோரம் ஒரு வசதியான இடத்தைப் பிரான்சிஸ் டே தேடிக் கொண்டிருந்தார். அப்பொழுது மயிலாப்பூரில் போர்ச்சுக்கீசியர்கள் வெற்றிகரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் பிரான்சிஸ் டேவுக்கு நண்பர்களாவர். “நீங்களும் எங்கள் ஊருக்கு வியாபாரம் செய்ய வாருங்கள்” என்று அந்த நண்பர்கள் டேவுக்கு அழைப்பு விடுத்தனர். அதற்குப் பின்னால் இரண்டு காரணங்கள் இருந்தன.
ஒன்று மசூலிப்பட்டினத்திலும் ஆர்மகானிலும் கிழக்கிந்திய கம்பெனி பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் தங்களுடைய வியாபாரத்துக்குப் பெரிய போட்டியாக இருக்கமாட்டார்கள் என்று போர்ச்சுக்கீசியர்கள் நினைத்தனர். இரண்டாவது பழவேற்காட்டிலிருந்த டச்சுக்காரர்களுக்கும் மயிலாப்பூரிலிருந்த போர்ச்சுக்கீசியர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கமாக இருந்தது. டச்சுக்காரர்களால் பாதிக்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியினர் இங்கு வருவதால், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் நமக்குக் கூடுதல் பலமென்று போர்ச்சுக்கீசியர்கள் எண்ணினர். எனவே, இடம் தேடுவதற்கு பிரான்சிஸ் டேவுக்கு உதவ போர்ச்சுக்கீசியர்கள் தீர்மானித்தனர். அதனால், மயிலாப்பூருக்கு அருகிலுள்ள இடங்களை பிரான்சிஸ் டே முதலில் பார்வையிட்டார்.
“மயிலாப்பூருக்கு வடக்கில் சில மீனவ குப்பங்கள் மட்டுமே இருந்த ஒரு பொட்டல் மணல்வெளி பிரான்சிஸ் டேவுக்கு மிகவும் பிடித்துப்போனது. அதற்கு முக்கியக் காரணம் கூவம் ஆறு. மேற்கிலும் தெற்கிலும் கூவம் ஆறு அரண் போல் இருக்க, கிழக்கில் வங்கக்கடல் பரந்துவிரிந்து கிடக்க, இடையில் இருந்த அந்த நிலப்பகுதி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று டே கருதினார்.”
(சென்னை – தலைநகரின் கதை, பார்த்திபன், ப.14)
பழவேற்காட்டில் டச்சுக்காரர்களின் ஜெல்ட்ரியா கோட்டை கடலுக்கு அருகில் இருந்தது. அதுபோல ஒரு இடம் தங்களுக்கும் கிடைத்ததால் டேவுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
“அந்த இடத்தை டே பார்வையிட்ட சமயம் மழைக்காலம் என்பதால், கூவம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அப்போது கூவம் சுத்தமான, அழகான, ரம்மியமான நதி. அதனை அந்தப் பகுதி மக்கள் திருவல்லிக்கேணி ஆறு என்று அழைத்தனர். ஆற்றுக்கும் கடலுக்கும் இடையில் இருந்த நிலப்பகுதி குளிர்ச்சியானதாக இருந்ததால், தங்கள் நாட்டவரை வாட்டி வதக்கும் வெயிலுக்கு இந்த இடம் இதமாக இருக்கும் என்று நினைத்தார் டே.”
(சென்னை – தலைநகரின் கதை, பார்த்திபன், ப.15)
இங்கு ஆர்மகானை விட இருபது முதல் முப்பது சதவீதம் குறைந்த விலையில் துணி கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, அந்தப் பகுதியின் ஆளுநர்கள் மிகவும் நட்புடன் இருப்பதால், கிழக்கிந்திய கம்பெனி நிம்மதியாக வியாபாரம் செய்வதற்குப் பொருத்தமான இடமாக இருக்குமென்று மசூலிப்பட்டினத்திலிருந்த தனது மேலதிகாரி ஆண்ட்ரூ கோகனுக்குத் தெரிவித்தார். அவரும் அதற்கு ஒப்புதல் அளித்தார்.
பிரான்சிஸ் டே தேர்வு செய்த பகுதியை, அப்போது தமர்லா வெங்கடாத்ரி நாயக் (ஆளுநர்) பழவேற்காட்டிலிருந்து தெற்கே சாந்தோம் வரை விஜயநகர மன்னரின் பிரதிநிதியாக ஆண்டு வந்தார். அதன் தலைநகராக வந்தவாசி இருந்தது. அவர் சகோதரர் ஐயப்பா வெங்கடாத்ரி பூவிருந்தவல்லியை ஆண்டு வந்தார். ஐயப்பாவைச் சந்தித்த பிரான்சிஸ் டே, அவர் மூலமாக தமர்லா வெங்கடாத்ரியிடமிருந்து ‘ஃபிர்மான்’ என்று குறிப்பிடப்படும் ஒரு உரிமைப் பத்திரத்தை வாங்கினார்.
1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் நாள், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தத் தினமே சென்னைத் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு சென்னையின் 385வது பிறந்த நாளாகும். பேரி திம்மப்பா என்ற தெலுங்கர் அந்தப் பேச்சு வார்த்தை நடத்த உதவினார். மசூலிப்பட்டினம் அருகே துணி வியாபாரம் செய்து வந்த திம்மப்பா, ஆங்கிலம் சரளமாகக் பேசக்கூடியவர். ஆகவே, அவரைத் தன்னுடைய துபாசியாக (மொழிபெயர்ப்பாளராக) வைத்துக் கொண்டார் பிரான்சிஸ் டே.
பேரி திம்மப்பா
பேரி திம்மப்பா மொழிபெயர்ப்பாளராகவும் திறமையான தரகராகவும் செயல்பட்டு, பிரான்சிஸ் டேவுக்கு ஃபிர்மான் எனும் உரிமைப்பத்திரத்தைப் பெற்று தந்தார். அதற்குக் கைமாறாக ஆங்கிலேயர்கள் பேரி திம்மப்பாவுக்கு ஒரு பெரிய நிலப்பரப்பை அன்பளிப்பாகக் கொடுத்தனர். பேரி திம்மப்பா கோட்டைக்கு வெளியே அந்த நிலத்தில் குடும்பத்துடன் குடியேறினார். அவரின் குடும்பத்தினர், ஆங்கிலேயரின் தலைமை வணிகர்களாகப் பல ஆண்டுகள் இருந்தனர். கருப்பர் நகரத்தின் தந்தையாகப் பேரி திம்மப்பா திகழ்ந்ததை,
“இதற்கிடையே பேரி திம்மப்பா கோட்டைக்கு வெளியே ஒரு சிறிய நகரத்தையே உருவாக்கிவிட்டார். நெல்லூர், மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து நெசவாளர்கள், சாயம் தோய்ப்போர் என நெசவுத் தொழிலோடு தொடர்புடைய பலரையும் அழைத்து வந்து குடியேற்றினார். இப்படி கோட்டைக்கு வெளியே உள்ளூர் மக்களால் உருவான நகரை ஆங்கிலேயர்கள் கருப்பர் நகரம் என்று அழைத்தனர். அந்தக் கருப்பர் நகரத்தின் தந்தை பேரி திம்மாப்பாதான்”
(சென்னை – தலைநகரின் கதை, பார்த்திபன், ப.78) இதன்மூலம் அறியமுடிகிறது.
பேரி திம்மப்பாவைப் பின்பற்றி, ஆந்திராவிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் குடியேறியதால், மதராசபட்டினத்தில் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர், முதன் முதலில் 1953இல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரா பிரிக்கப்பட்டது. அப்போது ‘மதராஸ் மனதே’ என்று தெலுங்கர்கள் உரிமை கொண்டாடியது பேரி திம்மப்பாவால்தான்.
தற்போது உயர்நீதிமன்றம் இருக்கும் இடத்தில், 1940இல் உள்ளூர் மக்களுக்காகப் பேரி திம்மப்பா, மதராசபட்டினத்தின் முதல் கோயிலான சென்னகேசவப் பெருமாள் கோயிலைக் கட்டினார். அது ‘பட்டனம் பெருமாள்’ என்று அழைக்கப்பட்டது. பிறகு பிரெஞ்சுப் படைகளுடன் நடந்த போரின்போது, இந்தக் கோயில் இடிக்கப்பட்டு சற்றுத் தள்ளி, இப்போதுள்ள பூக்கடை பகுதியில் மீண்டும் கட்டப்பட்டது.
பேரி திம்மப்பாவின் சகோதரமான பேரி சின்ன வெங்கடாத்ரி, கிண்டியில் ஒரு பெரிய தங்கும் விடுதி (லார்ஜ்) நடத்தி வந்தார். ‘கிண்டி லார்ஜ்’ என்று அழைக்கப்பட்ட அந்தக் கட்டடம்தான் தற்போது ஆளுநர் மாளிகையாக மாறியிருக்கிறது. திம்மப்பாவைப் போல செல்வாக்குடன் வாழ்ந்த அங்கப்ப நாயக்கன், லிங்கி செட்டி போன்றவர்கள் பாரிமுனையில் தெருப்பெயர்களாக நிலைத்து நிற்கின்றனர்.
ஆனந்தரங்கம் பிள்ளை
ஆனந்தரங்கப் பிள்ளை 1709இல் பெரம்பூரில் பிறந்தார். திம்மப்பாவைப் போல துபாஷியாக (மொழிபெயர்ப்பாளர்) இருந்து, படிப்படியாக உயர்ந்து அரசின் முக்கிய பதவிகளை வகித்தார். ஆனந்தரங்கப் பிள்ளையின் டைரிக் குறிப்புகள், அக்கால மதராசபட்டினம் பற்றிய அரிய தகவல்களைக் கொண்ட கருவூலமாக விளங்குகின்றன.
புதுச்சேரியின் பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளேவின் துபாஷியாகத் தொடக்கத்திலிருந்த ஆனந்தரங்கப் பிள்ளை, பின்னர் பிரதம மந்திரியாகவும், இராணுவ ஆலோசகராகவும் உயர்ந்தார். அவர் வாழ்ந்த 1736 முதல் 1761ஆம் ஆண்டு வரை நாள்குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். அதற்கு ‘சொஸ்த லிகிதம்’ என்று பெயரிட்டுள்ளார். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, சமஸ்கிருதம், போர்ச்சுகீசு போன்ற பல மொழிகளை அறிந்திருந்தார். தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிம்ம மகாராஜாவுக்குப் பணம் கொடுக்கும் அளவுக்கு பெரும் செல்வந்தராக இருந்திருக்கிறார். ‘ஆனந்த புரவி’ என்னும் கப்பல் ஒன்றையும் சொந்தமாக வைத்திருந்தார். அவரைப் புகழ்ந்து நிறைய பாடல்களும் எழுதப்பட்டுள்ளன.
தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடிய அக்காலத்தில், பல்லக்கில் மேள வாத்தியத்தோடு ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும், தங்க கைத்தடி வைத்திருக்கவும், செருப்பு அணிந்து ஆளுநர் மாளிகை அலுவலகத்துக்குப் போகவும் ஆனந்தரங்கப் பிள்ளைக்குப் பிரெஞ்சு அரசால் சிறப்புரிமை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொன்மை வாய்ந்த மயிலாப்பூர்
பல்லவர் காலத்தில் மயிலாப்பூர் செழிப்பான துறைமுக நகரமாக இருந்தது. கி.மு முதல் நூற்றாண்டில் வாழ்ந்த திருவள்ளுவர் மயிலாப்பூரில் வசித்ததாக வரலாறு கூறுகிறது. மயிலாப்பூரைப் போன்றே திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், பல்லாவரம், வேளச்சேரி, திருவான்மியூர், குன்றத்தூர், மாங்காடு, பூவிருந்தவல்லி, பாடி, திருமுல்லைவாயில், புழல், புலியூர் (கோடம்பாக்கம்) போன்ற இடங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தவை. இங்குள்ள பழமை வாய்ந்த கோயில்களே அதற்குச் சான்றாகும்.
மதராசபட்டித்தைக் கரிகால் சோழன் காலத்தில் தொண்டைமான் இளந்திரையன் வென்றதால் ‘தொண்டை மண்டலம்’ என்று கூறப்படுகிறது. சோழர்கள் ஆண்ட பகுதி என்பதால் ‘சோழ மண்டலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அதுவே பின்னாளில் மருவி ‘கோரமண்டலம்’ என்றாகிவிட்டது. மயிலாப்பூர் செழிப்பான பகுதியாக காணப்பட்டதைச்,
“இங்கே மெட்ராஸில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு இரண்டு மைல் தூரத்தில் மயிலாப்பூர் என்ற பகுதியில் திராட்சை பயிரிடப்படுகின்றது”
(மெட்ராஸ், பெஞ்சமின் சூல்ட்சே, ப.181) சமயப்பணியாளர் பெஞ்சமின் சூல்ட்சேவின் நாள்குறிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.
மதராசபட்டினத்தின் தொன்மைக்குப் பல்லாவரத்தில் கிடைத்த பழைய கற்கால கைக்கோடரி மிகச்சிறந்த வரலாற்று ஆதாரமாகும். 1863ஆம் ஆண்டு ‘இந்திய தொல் பழங்கால வரலாற்றின் தந்தை’ என்று போற்றப்படும் சர்.இராபர்ட் புரூஸ்புட், இந்தப் பகுதியில் நடத்திய அகழ்வாய்வில், இந்தியாவிலேயே முதல் முறை கண்டெடுக்கப்பட்ட பழைய கற்கால கருவியாகும்.
மதராசபட்டினம் உருவாவதற்கு முன்பே சென்னப்பட்டினம் என்ற கிராமம் இருந்ததை,
“ஆங்கிலேயர்களின் கோட்டை மதராசபட்டினத்தில் வருவதற்கு சில வருடங்கள் முன்பு, வெங்கடபதி நாயக், தனது முன்னோர் பெயரில் சென்னப்பட்டினம் என்ற சிறிய கிராமத்தை மதராசபட்டினத்தின் வடக்கில் உண்டாக்கியிருந்தார்”
(மதராசபட்டினம், கே.ஆர்.ஏ. நரசய்யா, ப.34) என்றுஇதன்வழி உணரமுடிகிறது.
சுமார் இண்டரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆதிமனிதர்கள் வாழ்ந்த சில குகைகளைத் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அருகிலுள்ள அல்லிக்குழி என்ற ஊரின் மலைத்தொடரில் இராபர்ட் புரூஸ்புட் கண்டுபிடித்தார். இதன்மூலம் பழைய கற்காலத்தில் மதராசபட்டினத்தைச் சுற்றி மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. பல இலட்சம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் கூவம் ஆறும், கொற்றலை ஆறு எனப்படும் பழைய பாலாறும் ஆதிமனிதனின் தாகம் தணித்தற்கான சான்றாக விளங்குகின்றன. இதனை,
“கொற்றலையாற்றுப் படுகையில் உள்ள குடியம், அத்திரம்பாக்கம், நெய்வேலி, பூண்டி ஆகிய பகுதிகள் மனிதகுல வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தன. இங்கு தொல் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக அத்திரம்பாக்கம் பகுதிகளில் கண்டறியப்பட்ட தொல்லுயிர்த் தடயங்களின் வயது 15 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது” (கூவம், அடையாறு, பக்கிங்காம், கோ.செங்குட்டுவன், ப.26) என்பதனைத் தொன்மையான வரலாற்றுச் சான்றுகளுடன் கோ.செங்குட்டுவன் விவரிக்கிறார்.
ஆங்கிலேயர்களுக்கு வாரி வழங்கப்பட்ட சலுகைகள்
ஆங்கிலேயர்கள் நம்மிடம் காட்டிய நல்லுணர்வுக்காக அவர்கள் வணிகம் செய்து கொள்ளவும், வங்கக்கடலோரம் கோட்டை கட்டிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு இங்கு வணிகம் செய்யலாம். அதன்பின் உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அதுவரை, இந்த இடத்தின் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தைக் கம்பெனி எடுத்துக்கொள்ளலாம். அப்படி வசூலிக்கப்பட்ட பணத்தில் பாதியை நாயக்கிடம் கொடுக்க வேண்டுமென்று ஃபிர்மான் ஓ.சி எண் 1690இல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி வங்கக்கடலை ஒட்டி ஐந்து கிலோமீட்டர் நீளம், இரண்டு கிலோமீட்டர் அகலம் கொண்ட மண்திட்டு, கிழக்கிந்திய கம்பெனிக்கு மானியமாகக் கிடைத்தது. ஆங்கிலேய வணிகர்களின் வரவால், தனது நாடு வளமடையும் என்று நாயக் கருதினார். ஆங்கிலேய கப்பல்கள் மூலம் அருகிலுள்ள நாடுகளிலிருந்து குதிரை, உள்ளிட்ட மிருகங்கள், பறவைகள் முதலியவற்றை இறக்குமதி செய்யலாம் என்றும் எண்ணினார். மேலும், அண்டைநாட்டுடன் போர் வந்தால், ஆங்கிலேயர்களின் உதவி உறுதுணையாக இருக்குமென்றும் நாயக் கருதினார். இவ்வாறு ஆங்கிலேயர்களுக்கு நிறைய சலுகைகள் கொடுத்ததற்கு நாயக் தரப்பில் பல காரணங்கள் இருந்தன.
ஆண்ட்ரூ கோகன் தலைமையில் பிரான்சிஸ் டே மற்றும் சில உயரதிகாரிகள், எழுத்தர்கள், மருத்துவர்கள், தச்சர்கள், கருமான்கள், பீப்பாய் செய்யும் தொழிலாளிகள், மெய்காப்பாளர்கள், எடுபிடி ஆள்கள், சமையல்காரர்கள், நாகபட்டன் என்னும் வெடிமருந்து தயாரிப்பவர் என்று ஒரு கூட்டமே ஈகிள், யூனிட்டி என்ற இரு கப்பல்களில் வந்து இறங்கினர்.
1640ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் நாள் ஆங்கிலேயர்கள் மதராசபட்டினத்தில் கால் வைத்ததும், தங்களின் குடியிருப்புக்கான வேலையைத் தொடங்கினர். மார்ச் 1இல் புனித ஜார்ஜ் கோட்டைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கோட்டையின் ஒரு பகுதி ஏப்ரல் 23இல் கட்டி முடிக்கப்பட்டது. அன்றைய தினம், கிறித்துவ துறவியாகப் போற்றப்படும் புனித ஜார்ஜின் பிறந்தநாள், ஆதலால் கோட்டைக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. 1953இல் கோட்டை முழுவதும் கட்டி முடிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியினர் இங்கு வந்த செய்தி பரவியதால், நெசவாளர்கள் பலர் குடும்பத்துடன் கோட்டையைச் சுற்றிக் குடியேறினர். கோட்டைக்குள்ளும், வெளியிலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால், புனித ஜார்ஜ் கோட்டை ஒரு வியாபார மையமாக உருவாகத் தொடங்கியது.
வெள்ளை மற்றும் கருப்பர் நகரம்
மதராசபட்டினத்தில் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே ஆங்கிலேயர்கள் வசித்தது ‘வெள்ளையர் நகரம்’ எனவும், கோட்டைக்கு வெளியே இந்தியர்கள் வசித்தது ‘கருப்பர் நகரம்’ எனவும் அழைக்கப்பட்டது. 1640இல் கோட்டைக்குள் சுமார் எழுபது வீடுகள் இருந்தன. இங்கு அதிக நாள் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரான்ஸ் டே இங்கிலாந்துக்குச் சென்றுவிட, ஆண்ட்ரூ கோகன் கோட்டையின் முதல் ஆளுநராகப் செயல்பட்டார். பதவிக்கு வந்த கையோடு, மசூலிப்பட்டினத்திலிருந்த கம்பெனியின் தலைமையகத்தை மதராசபட்டினத்திற்கு மாற்றினார். அதன் விளைவாக, மதராசபட்டினத்தில் சிறிது சிறிதாக வணிகச் செயல்பாடுகள் அதிகரித்தன.
ஆற்றில் மிதந்து வந்த பிணம்
ஒரு நாள் எழும்பூர் ஆற்றில், ஒரு பெண்ணின் பிணம் மிதந்து வந்தது. அந்தப் பிணத்தை வெளியே எடுத்துப் பார்த்தபோது, உடலில் காயங்கள் ஏதுமில்லை. அதனால் தவறுதலாகவோ அல்லது தற்கொலையோ செய்து கொண்டிருக்கலாம் என்று நினைத்துப் பிணத்தைப் புதைக்க ஏற்பாடு செய்தனர். அப்போது பிணத்தை ஆற்றிலிருந்து தூக்க உதவியவனின் ஆடையில் சிறு இரத்தக்கறை இருந்தது. ஏற்கனவே உயிரிழந்த பெண்ணுக்கும், பிணத்தை வெளியில் எடுத்தவனுக்கும் தொடர்பு இருந்தது ஊருக்கே தெரியும். பின்னர், அவனிடம் விசாரித்துப்போது கொலை செய்த உண்மையை ஒப்புக்கொண்டான்.
உள்ளூர் நீதி நிர்வாகத்தைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள்
கொலை பற்றிய விவரங்களை உள்ளூர் நாயக்கிடம் கூறிய ஆங்கிலேயர்கள் அடுத்து என்ன செய்வது? என்று கேட்டனர். நாயக்! நீங்களே இங்கிலாந்து விதிமுறைப்படி ‘அவனுக்குத் தண்டணை வழங்குங்கள்’ என்று பெரிய மனதுடன் கூறிவிட்டார். மேலும், ‘இங்கு சரியான நீதி வழங்கப்படவில்லை’ என்றால் உங்கள் பெயர்தான் கெடும். அதன்பின் யாரும் உங்களுடன் வியாபாரம் செய்ய வரமாட்டார்கள். எனவே நீங்களே தீர்ப்பளிங்கள் என்று சொல்லிவிட்டார். கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திய ஆங்கிலேய வியாபாரிகள், குற்றத்தைத் தீவிரமாக விசாரித்து அவனுக்கு உடந்தையாக இருந்த மற்றொருவனையும் பிடித்து இருவரையும் தூக்கிலிட்டனர். அடுத்தடுத்த நடந்த குற்றச்சம்பவங்களுக்கு அவர்களே நீதி வழங்கினர். பின்னர் அதுவே வழக்கமானது. இப்படி வியாபாரம் மட்டுமின்றி, உள்ளூர் நீதி நிர்வாகமும் அவர்கள் கைக்குச் சென்றன.
ஆங்கிலேயர்கள் மதராசபட்டினத்தை,
“1742-ல் தனது முடிசூடும் வைபவத்தைக் கொண்டாடும் வகையில், கர்நாடக நவாப், வேப்பேரி, பெரம்பூர், புதுப்பாக்கம், எர்ணாவூர், சடையான்குப்பம் ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர்களுக்குக் கொடுத்தார். கோல்கொண்டாவுடன் இருந்த உடன்படிக்கையின் அடிப்படையில், பிரான்ஸுக்கு எதிராக கொள்ள, 1742-ல் சாந்தோமையும் மைலாப்பூரையும் ஆங்கிலேயர்கள் அபகரித்தனர். இவ்வாறு சிறு குடியிருப்பு ஊராகி, ஊர் நகரமாகி, நகரம் மாநகரமானது”
(சென்னை – மறுகண்டுபிடிப்பு, எஸ்.முத்தையா, ப.24) கைப்பற்றிய செய்தியை இதன்மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
கோட்டையில் நிகழ்ந்த புகழ்பெற்ற திருமணங்கள்
கோட்டைக்குள் வசித்தவர்கள் பெரும்பாலானோர் கிறித்துவர்கள் என்பதால், அவர்களுக்காக ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. புனித மேரியின் அவதார தினமான 1678ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று கட்டுமானப்பணிகள் தொடங்கியதால், தேவாலயத்துக்குப் புனித மேரியின் பெயரே சூட்டப்பட்டது. செங்கல், கருங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றால் கட்டப்பட்டு, இரு ஆண்டுகளில் பணி முடிக்கப்பட்டது. 1680ஆம் ஆண்டு அக்டோபர் 28இல் தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது.
பிரெஞ்சுப்படைகளின் அச்சுறுத்தல் இருந்ததால் பீரங்கிக் குண்டுகள் துளைக்காத வகையில், தேவாலயத்தின் கூரை சுமார் இரண்டடி கனத்தில் மிக உறுதியாகக் கட்டப்பட்டது. வெளிப்புறச் சுவர்கள் சுமார் நான்கடி கனத்தில் உறுதியாக அமைக்கப்பட்டன. தீ விபத்து ஏற்படாமல் தடுக்க மரம் பயன்படுத்துவதைத் தவிர்த்துள்ளனர். தேவலாயத்திற்கு அருகில் இன்று காட்சியளிக்கும் நீண்ட கோபுரம் 1701இல் கட்டப்பட்டதாகும்.
அன்றைய மதராசபட்டினத்தில் பல பெரிய மனிதர்களின் திருமணங்கள் இந்தத் தேவாலயத்தில்தான் நடந்துள்ளன. முதன் முதலில் எலிஹு யேல் என்பவரது திருமணம் நடந்தது. அவர்தான், அமெரிக்காவின் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு அடித்தளமிட்டவராவார். அதேபோல ஆங்கிலேய இந்திய வரலாற்றில் மறக்க முடியாத மற்றொரு திருமணம் இராபர்ட் கிளைவின் திருமணமாகும்.
கல்கத்தா நகரை நிர்மாணித்த ஜாப் சார்னாக்கின் மூன்று மகள்களுக்கும் இங்குதான் ஞானஸ்தானம் செய்யப்பட்டது. பீகாரில் கணவன் இறந்ததும் அதன் சிதையில் விழுந்து இறக்க முயன்ற, ஒரு இந்து விதவையைக் காப்பாற்றி வாழ்வளித்தார் ஜாப் சார்னாக். அதன்பின், அவர் அந்தக் கைப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குப் பிறந்தவர்களே மேற்சொன்ன மூன்று மகள்கள். மதராசபட்டினத்தின் புகழ்பெற்ற ஆளுநர்களான லார்ட் பிகட், தாமஸ் மன்றோ ஆகியோர் கல்லறைகளும் இங்குதான் உள்ளன.
கோட்டை வேகமாக வளர வளர புதிய நகரம் உருவாகத் தொடங்கியது. அப்படி உருவானதுதான் கருப்பர் நகரம். வெள்ளையர் நகரமும் கருப்பர் நகரமும் என இரண்டும் சேர்ந்ததுதான் அன்றைய மதராசபட்டினம். கம்பெனியின் வியாபாரம் பெரும்பாலும் துணி சார்ந்ததாக இருந்ததால், அதற்குத் தேவையான ஆள்களை மதராசபட்டினத்தில் குடியேற்றம் செய்யும் பணிகள், ஒருபுறம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. நெசவாளர்களை ஊக்குவிப்பதற்காகக் கம்பெனி செலவிலேயே வீடுகட்டிக் கொடுக்கப்பட்டு, அங்கேயும் வாழ அனுமதியும் வழங்கப்பட்டது. அதனால், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் மதராசபட்டினம் நோக்கி வரத் தொடங்கினர். அப்படி உருவானதுதான் வண்ணாரப்பேட்டை (வண்ணார்கள் வசித்த பேட்டை), சின்னதறிப்பேட்டை (சிந்தாதிரிப்பேட்டை), காலடிப்பேட்டை போன்ற பகுதிகள்.
கருப்பர் நகரம் அழிப்பும் உதயமும்
1746இல் பிரெஞ்சுக்காரர்கள் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றியபோது, கருப்பர் நகரத்தை அழித்தார்கள். மூன்று ஆண்டுகளுக்குப்பின் கோட்டையை மீண்டும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். அப்போது கருப்பர் நகரத்தை மீண்டும் உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக முந்தைய நகரத்துக்குச் சற்றுத் தள்ளி, ஒரு ‘புதிய கருப்பர் நகரம்’ உருவானது. அதுதான் இன்று ‘ஜார்ஜ் டவுன்’ என அழைக்கப்படுகின்றது.
“இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் இளவரசராக இருந்தபோது (1910இல் மன்னரானார்), 1906இல் மெட்ராஸுக்கு வந்தார். அவரின் நினைவாகத்தான் இந்தப் பகுதி ஜார்ஜ் டவுன் என்று பெயர் மாற்றப்பட்டது. பூக்கடைத் திருப்பத்தில் இந்த ஐந்தாம் ஜார்ஜின் ஆளுயர சிலையை இன்றும் பார்க்கலாம்.”
(சென்னை – தலைநகரின் கதை, பார்த்திபன், ப.32)
இந்தப் புதிய நகரத்தைப் பாதுகாக்க, ஒரு மதில் சுவர் கட்ட முடிவெடுத்தனர். அதற்கான வேலையும் மந்தமாக நடைபெற்று வந்தது. 1758இல் ஜார்ஜ் கோட்டை மீண்டும் பிரெஞ்சுப் படையால் முற்றுகையிடப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து மைசூர் மன்னர் திப்பு சுல்தான் மதராசபட்டினத்தின் மீது படையெடுத்தார். அதன்பிறகுதான் கருப்பர் நகரத்துக்கு மதில் அவசியமென ஆங்கிலேயர்கள் உணர்ந்து கொண்டனர்.
ஓராண்டு கடின உழைப்பில் புதிய மதில் சுவர் கட்டப்பட்டது. கருப்பர் நகரத்தைச் சுற்றிலும் பதினேழு அடி அகலத்துக்கு பாதுகாப்புச் சுவர் உருவாக்கப்பட்டது. எதிரிகளிடமிருந்து பாதுகாக்க உதவும், இந்தச் சுவற்றுக்கான வரியை பொதுமக்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தினர். ஆனால், இந்த வரி விதிப்பை மக்கள் கடுமையாக எதிர்த்ததால், இறுதிவரை அவர்களிடமிருந்து வரி வசூலிக்க இயலவில்லை. இதனால்தான் அந்தத் தெருவிற்கு வால்டாக்ஸ் (Wall Tax Road) சாலை என்று பெயர் வந்தது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி கருப்பர் நகரத்தின் மேற்குச் சுவர் அமைந்துள்ளது. மேற்கே வால்டாக்ஸ் சாலை, கிழக்கே வங்கக்கடல், வடக்கில் நகர எல்லையின் இடிந்த சுவர், தெற்கே எஸ்பிளனேடு போன்றவை புதிய கருப்பர் நகரத்தின் எல்லைகளாகும்.
முடிவுரை
ஆயிரத்து அறுநூறுகளில் மதராசபட்டினம் தெரியாமல் இருந்தது. ஆனால் கிரேக்கர் காலத்திலேயே மயிலாப்பூர் அறியப்பட்டிருப்பதைத் தாலமி குறிப்புகளிலிருந்தே தெரிய வருகிறது. முன்பு மயிலாப்பூரின் ஒரு பகுதியாகத் திருவல்லிக்கேணி இருந்தது. ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருவல்லிக்கேணியும், நாயன்மார்களால் பாடப்பெற்ற திருவொற்றியூரும் மதராசபட்டினம் உருவான இடங்களாகும். இந்த நகரைப் பற்றிய உண்மைகளில் ஆங்கிலேயர் வாய்வழியாக வந்தவைகளும், அவர்கள் எழுதி வைத்து சென்றவைகளும் மட்டுமே நம்மிடம் உள்ளன. அதுதவிர தமிழர்களாலோ, சிறந்த தெலுங்கு வணிகர்களாலோ எழுதப்பட்ட குறிப்புகள் ஏதுமில்லை. ஆனந்தரங்கப் பிள்ளை எழுதிய சில குறிப்புகள் மட்டுமே உள்ளன. ஆனால், ஆங்கிலேயரின் ஒவ்வொரு குடும்ப சரித்திரமும், அவர்கள் நிறுவிய கல்லறையிலும் நினைவுச் சின்னங்களிலும் காணப்படுகின்றன.
துணைநின்ற நூல்கள்
- மதராசபட்டினம்,
(சென்னைப் பெருநகரத்தின் கதை 1600 – 1947)
கே.ஆர்.ஏ. நரசய்யா
பழனியப்பா பிரதர்ஸ் (மூன்றாம் பதிப்பு – 2010)
25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 600 014. - சென்னை – மறுகண்டுபிடிப்பு
எஸ்.முத்தையா (தமிழில் சி.வி. கார்த்திக் நாராயணன்)
கிழக்கு பதிப்பகம் (இரண்டாம் பதிப்பு – 2014),
177/103, முதல்மாடி, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை,
இராயப்பேட்டை, சென்னை – 600 014. - சென்னை (தலைநகரின் கதை), பார்த்திபன்
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (மூன்றாம் பதிப்பு – 2017)
10/2 போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை,
தியாகராயநகர், சென்னை – 600 017. - மெட்ராஸ் 1726, பெஞ்சமின் சூல்ட்சே
(தமிழில் க. சுபாஷிணி)
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (இரண்டாம் பதிப்பு)
669, கே.பி சாலை, நாகர்கோயில் – 629 001. - கூவம், அடையாறு, பக்கிங்காம்
கோ.செங்குட்டுவன்
கிழக்கு பதிப்பகம் (இரண்டாம் பதிப்பு – 2014),
.

Leave a comment