காடரினக் கதைகள் – 4
அயகிய (அழகிய) நல்லச்சி
தொகுப்பும் ஓவியத்தூரிகையும் :
ப.குணசுந்தரி & து. சரண்யா
ஒரு ஊரில் ஒரு அப்பா, அம்மா அவர்களுக்கு இரண்டு பசங்களும் ஒரு பெண்ணும் இருந்தாங்க. அந்தப் பொண்ணு மிகவும் அழகானவள் அதனால அவள அவங்க அப்பாவும் அம்மாவும் ஒரு ஓலாம்போயையில் அமர்த்தியிருந்தனர்.

அந்த அப்பா அம்மா நாள்தோறும் விறகு வெட்டிச் சென்று கடையில் கொடுத்து ஒரு கராண்டுகம் (அளவில் சிறியது) அரிசி வாங்கி வந்து தம் குழந்தைகளுக்குச் சமைத்துத் தருவர்.அவ்வூரில் ஒரு பெரிய பாம்பும் இருந்தது. அந்தப் பாம்பு நாள்தோறும் வேட்டைக்குச் செல்லும் வழியில் அந்த அழகிய பெண்ணின் தம்பிகள் நகரப்பழத்தின் இலையையும் அத்திப்பழத்தின் இலையையும் கொண்டு போய் குவித்து வைத்து விளையாடுவர்.
அப்போது அச்சிறுவர்கள் தங்களுடைய அக்காவின் மேனியும் இப்படித்தானே சிவந்த நிறத்தில் இருக்கும் எனக் கூறிக் கொண்டே அந்த இலைகளைக் கொண்டு வந்து குவித்து வைப்பர். ஒரு நாள் இதைக் கேட்ட அந்தப் பாம்பு அந்த அழகிய பெண்ணைப் பார்க்க வேண்டுமென நினைத்தது.

ஒருநாள் அந்தப் பாம்பு அந்தப் பெண்ணின் வீட்டின் அருகே இருந்த மரத்தின்மேல் ஏறி படுத்துக் கொண்டது. அந்தப் பெண் வெளியில் வந்தால் பார்க்க வேண்டுமெனக் காத்துக் கொண்டிருந்தது. அவள் வெளியில் வருவதாகத் தெரியவில்லை. அந்தச் சமயம் உள்ளே ஓலாம்போயையில் அமர்ந்திருந்த அழகிய நல்லச்சிக்கு வேர்க்கத் தொடங்கியது. சிறிது நேரம் சென்றவுடன் அவள் தன் தாயிடம் தன்னை வெளியே விடுமாறு கூறுகிறாள். அவள் தாயும் மகளின் நிலை புரிந்து அழகிய நல்லச்சியை ஓலாம்போயையைத் திறந்து வெளியே விடுகிறாள். அவள் வெளியே வந்ததும் விண்ணும் மண்ணும் நீரும் மரமும் சிவந்து போயின. அவளுடைய அழகைக் கண்டு பறவைகள் பறக்க மறந்து நின்றன.
அவள் அழகைக் கண்ட பாம்பு அழகிய நல்லச்சியைத் தன் மனைவியாக மாற்ற வேண்டுமென்று நினைத்தது. பிறகு அன்றே அந்தப் பாம்பு தன்னுடைய கோட்டைக்குச் சென்றுவிட்டது. அந்தப் பாம்பு மந்திரச் சக்திகளை உடையதாகவும் இருந்தது. அழகிய நல்லச்சியைத் தன் கோட்டைக்குள் எப்படியாவது கடத்திக் கொண்டு வந்துவிடவேண்டும் என்று திட்டம் தீட்டியது.
தன்னுடைய மந்திரச் சக்தியைப் பயன்படுத்தி அழகிய நல்லச்சியின் தாய்க்குக் கடுமையான காய்ச்சலைக் கொடுத்தது. ஆனாலும் அவளின் தாய் தன் கணவனுடன் விறகு எடுக்கச் சென்றாள். விறகு விற்கச் சென்றபோது கடைக்காரன் இனி அவர்களிடம் விறகு கொண்டு வருவதை நிறுத்திவிட்டு மாங்காய்களைக் கொண்டு வந்து கொடுங்கள் என்றான்.
மறுநாள் மாங்காய் பறிக்கப் போக அழகிய நல்லச்சியின் தாயினால் இயலவில்லை. அவள் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டாள். அதனால் மாங்காய்களைப் பறித்துவர துணைக்குத் தன் மகளை அழைத்துப் போகுமாறு அவள் கூறுகிறாள். அதனால் அழகிய நல்லச்சியின் தந்தை தன் மகளை ஓலாம்போயையிலிருந்து இறக்கி மாங்காய் பறிக்க காட்டுக்கு அழைத்துச் சென்றான்.
அன்று மகளுடன் மாங்காய் பறிக்கச் சென்ற போது காட்டில் உள்ள ஒரு பெரிய மாமரத்தில் மாங்காய்கள் குலைகுலையாய்த் தொங்குவதைக் கண்டனர்.அழகிய நல்லச்சியை அவளுடைய தந்தை ஒரு குன்றில் போய் அமருமாறு கூறினான். அழகிய நல்லச்சியும் அவ்வாறே செய்தாள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்தப் பாம்பு அவளைக் கடத்திச் செல்ல நினைத்தது.
அழகிய நல்லச்சியை நெருங்கிவரவும் ஆரம்பித்தது. அதைக்காணும் அழகிய நல்லச்சி தன் தந்தையை நோக்கி
ஓலைகள் வருது சீட்டுகள் வருது
கீழுக்கிறங்கடி பாழுந்தன் தகப்பனாரே!
கடல் மிந்து கடிக்குது கடல் கொதுவு கடிக்குது
கீழுக்கிறங்கடி பாழுந்தன் தகப்பனாரே!
எனத் தன்னைக் கொண்டு செல்ல ஒரு பாம்பு வருவதைக் கண்டு தன் தந்தையைக் கீழே இறங்கி வரவேண்டும் என்பதற்காக தன்னைக் கொண்டு செல்ல ஓலைகள் வருகின்றன எனவும் சீட்டுகள் வருகின்றன எனவும் தன்னைக் கடல் கொசுக்கள் கடிக்கின்றன எனவும் கூறுகிறாள். ஆனாலும் தந்தை கீழே இறங்கி வருவதாக இல்லை.அவள் தந்தை மாமரத்தில் இருந்தபடியே அழகிய நல்லச்சியிடம்
தெக்கக்குப் போன தேயமணிக் கொம்பில
மாங்காய அடிச்சுதா(ன்) போடுற(ன்)
பாழுந்தன் பிள்ளையாரே!
வடக்கக்குப் போன வைரமணிக் கொம்பில
மாங்காய அடிச்சுதா(ன்) போடுற(ன்)
பாழுந்தன் பிள்ளையாரே!
என்று அவளை நோக்கித் தான் இப்போது இறங்கிவர முடியாது என்று கூறுகின்றான். சிறிது நேரத்தில் அந்தப் பெரிய பாம்பு அழகிய நல்லச்சியைத் தன் வாளால் சுருட்டியபடி சென்றுவிடுகிறது.

பாம்பு அவளைத் தூக்கிக் கொண்டு காடு மலை என எல்லாம் கடந்து செல்கின்றது. பிறகு கடலின் நடுவே அவளைக் கொண்டு சென்றபோது இருபக்கமும் நீர் விலகி வழிவிடுகிறது. அங்குதான் பம்பின் கோட்டை இருக்கின்றது. அது தன் கோட்டைக்குள் அழகிய நல்லச்சியைக் கொண்டு சென்று விடுகிறது.
மாமரத்தில் இருந்து இறங்கிய அழகிய நல்லச்சியின் தந்தை கீழே அவளைக் காணாது தேடுகிறான். அந்த மாயப் பாம்பு சிறிது நேரத்திற்குள் தன் மந்திரச் சக்தியினால் அவன் தன் மகளை மறந்து போகும்படியாக மனதை மாற்றி விடுகிறது.
மகளை மறந்ததினால் அழகிய நல்லச்சியின் தந்தை தான் பறித்த மாங்காய்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்கிறான். வீட்டிற்குச் சென்றதும் தன்னுடைய மகள் எங்கே என்று அழகிய நல்லச்சியின் தாய் ஒருவார்த்தை கேட்கிறாள். கேட்ட அக்கணமே அவளும் தன் மகளை மறந்துவிடுகிறாள். சில ஆண்டுகள் கழிகின்றன. அழகிய நல்லச்சியின் இரு தம்பியரும் வளர்ந்து ஆளாகின்றனர். அப்போது அழகிய நல்லச்சியின் தாய் கர்ப்பமாகிறாள். அப்போது அவளுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. அவன் ஒரு தெய்வப் பிறப்பாகத் தோன்றினான் என அவனுடைய தாயும் தந்தையும் நினைத்தனர். அவனை அன்பாகவும் வளர்த்து வருகின்றனர்.
அவன் வளர்ந்து ஆளானான். பின்பு ஒரு நாள் தன் தாயிடம் தன்னுடன் இரண்டு சகோதரர்கள் மட்டுமே பிறந்துள்ளனரா? வேறு யாரும் இல்லையா? என்று கேட்கின்றான். அதற்கு அவன் தாய் இல்லை மகனே உனக்கு ஒரு அக்கா இருந்தாள். அவள் பெயர் அழகிய நல்லச்சி. அவளை ஒருநாள் உன் அப்பா மாங்காய் பறிக்க துணைக்குக் கூட்டிச் சென்றபோது காட்டில் உன் அக்காவைத் தொலைத்துவிட்டு வந்துவிட்டார் என்று அவனிடம் கூறுகிறாள்.
அன்றிலிருந்து தன் அக்காவை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென நினைத்தான். அதற்காக அவன் தினமும் வேட்டைக்குச் சென்றான். அப்போது அங்கு ஓரிடத்தில் பெரும் பாம்பு சென்ற வழியைக் காணுகின்றான்.
தன் அக்காவை அந்தப் பாம்புதான் கொண்டு போயிருக்க வேண்டுமென்று நினைத்து அதனைக் கொன்று எப்படியாவது தன் அக்காவை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்துவிடவேண்டும் என்று திட்டம் போடுகிறான். அதற்காக அவன் விசம் கொண்ட பூச்சிகளையும் பாம்பு, தேள் போன்ற கொடிய விலங்குகளைக் கொன்று அதன் நெய்யை எடுத்துக் கொண்டான்.
ஒருநாள் தன் தந்தையிடம் பலகாரம் செய்ய மாவு வாங்கி வருமாறு கூறினான். அவன் தந்தையும் அவ்வாறே வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். அவன் அதைக் கொண்டு போய் பலகாரம் செய்தான். அந்தப் பாம்புக்காக இரண்டு பலகாரம் செய்தான். அந்தப் பலகாரத்தை விசம் உள்ள பூச்சிகளிடமிருந்து எடுக்கப்பட்ட நெய்யை விட்டுச் செய்தான். மீதமுள்ள நெய்யில் இரண்டு பீடிகளையும் புகையிலையையும் தயாரித்தான். தன் அக்காவிற்கும் தாய் தந்தை சகோதரர்களுக்கும் விசம் கலக்காத பலகாரங்களைத் தயாரித்துக் கொடுத்தான்.
தன் அக்காவிற்கான பலகாரத்தையும் அந்தப் பாம்பிற்கான பலகாரத்தையும் எடுத்துக் கொண்டு தன் அக்காவைப் பார்க்க விரைந்தான். போவதற்கு முன் தன் தாயிடம் அவன் சென்று தனக்கு கட்டுச்சோறு வேண்டுமெனக் கேட்டான். அவளும் அவனுக்குக் கட்டுச்சோறு கட்டிக் கொடுத்தாள். அவன் தன் தாயிடம் அன்று வீட்டிற்கு வரப் போவதில்லை என்று கூறிவிட்டுச் சென்றான்.
தன் அக்காவைக் காண அவன் காடு மேடுகளை எல்லாம் கடந்து சென்றான். பின்னர் கடலைப் பிளந்து சென்று அந்தப் பெரிய பாம்பின் கோட்டையை அடைந்தான். அங்கே அவன் அக்கா அழகிய நல்லச்சி இருப்பதைக் கண்டான். அவன் சென்ற வேளையில் அந்தப் பெரிய பாம்பு வேட்டைக்குச் சென்றிருந்தது. அந்தப் பாம்பு வருவதற்கு முன் தன் தம்பியைக் குளித்துவிட்டு அறையில் அமர்ந்திருக்குமாறு கூறினாள். அவன் குளித்து முடித்தவுடன் உணவு கொடுத்து அவன் இருந்த அறையைப் பூட்டினாள்.
வேட்டைக்குப் போன பாம்பு திரும்பியது. வந்ததும் இளைப்பாறியது. சிறிது நேரம் சென்றவுடன் அழகிய நல்லச்சி அந்தப் பாம்பிடம் நான் ஒரு விசயம் கூறுவேன் நீ கோபம் கொள்ளக் கூடாது. அவ்வாறன்றி என் மேல் கோபப்பட்டால் நான் இறந்து விடுவேன் என்று கூறுகிறாள்.
உடனே பாம்பு இல்லை இல்லை நான் கோபம் கொள்ளமாட்டென். நீ என்ன சொல்லப் போகிறாய் என்றது. அதற்கு அழகிய நல்லச்சி என்னைப் பார்க்க என் தம்பி வந்திருக்கிறான். அவனை நான் ஒரு அறையில் அமரவைத்திருக்கிறேன் என்றாள். அதற்குப் பாம்பு அப்படியா! அவனை வரச் சொல்லு நானும் அவனைப் பார்க்கிறேன் என்றது.
உடனே அழகிய நல்லச்சி தன் தம்பியை அழைத்து வந்தாள். அவன் தான் கொண்டு வந்த பலகாரங்களை எடுத்துச் சென்று தன் அக்காவிற்கு நல்ல பலகாரத்தையும் விசம் கலந்த பலகாரத்தை அந்தப் பாம்பிற்கும் கொடுத்தான். அவன் தன் அக்காவிடம் உனக்குக் கொடுத்த பலகாரத்தை நீ மட்டுமே சாப்பிடு, உன் கணவனுக்குக் கொடுத்த பலகாரத்தை அவர் மட்டுமே சாப்பிடட்டும் என்று கூறிக் கொடுத்தான்.
இருவரும் பலகாரங்களை உண்டு முடித்தனர். அப்போது பாம்பிற்குப் புகையிலை வேண்டுமெனத் தோன்றியது. ஆனால் அவர்கள் வீட்டில் சிறிதளவு கூட புகையிலை கிடைக்கவில்லை. அதனால் அழகிய நல்லச்சி தன் தம்பியிடம் புகையிலை இருக்கிறதா? என்று கேட்டாள். அவன் விசம் கலந்த புகையிலையைக் கொடுக்கிறான். அதைப் பாம்பு முழுவதுமாகத் தின்று முடித்தது. அனைவரும் உறங்கச் சென்றனர்.
சிறிது நேரம் ஆனதும் பாம்பிற்குப் பீடி குடிக்க வேண்டுமெனத் தோன்றியது. ஆனால் அன்று அவர்கள் வீட்டில் பீடியும் இல்லை. மீண்டும் அழகிய நல்லச்சி தன் தம்பியிடமே சென்று பீடியைக் கேட்டாள். உடனே அவன் விசம் கலந்து கொண்டு வந்த பீடியைக் கொடுத்தான். அந்தப் பாம்பு பீடியையும் முழுவதுமாகக் குடித்து முடித்தது. விசம் அந்தப் பாம்பின் உடலில் கலக்கத் தொடங்கியது. பாம்பு விண்ணுக்கும் மண்ணுக்கும் எழுந்து தன் வால் நுனியில் நின்று தரையில் விழுந்தது.

சற்று நேரத்தில் பாம்பு இறந்தது. தன் அக்காவைக் கூட்டிக் கொண்டு அவன் அந்தக் கோட்டையை விட்டு வெளியேறினான். அந்த நேரத்தில் அவள் கருவுற்றிருந்தாள். அவர்கள் தங்கள் வீட்டை நோக்கி சோகத்தில் நடக்க ஆரம்பித்தனர்.அவர்கள் சென்ற வழியில் எல்லாம் அழகிய நல்லச்சி முட்டையிட ஆரம்பித்தாள். அவள் இட்ட முட்டைகளை எல்லாம் தம்பி உடைத்துக் கொண்டே வந்தான்.
கடைசியாக ஒரு முட்டையை மட்டும் அவனால் உடைக்க இயலவில்லை. அதன்மேல் விறகுகளைப் போட்டு தீ மூட்டி உடைக்க முயன்றான். அந்த முட்டை உடைந்து அதில் இருந்து ஒரு துளி சிதறிப்போய் ஒரு பாறையின் அடியில் நுழைந்தது. அது தன் தந்தைக்கு விசம் கொடுத்துக் கொன்றதற்காக அந்தப் பெண்ணின் வம்சம் தொடரும் வழியில் எல்லாக் குழந்தைகளுக்கும் தலைவலி, காதுவலி,சளி போன்ற நோய்களைக் கொடுப்பேன் என்று கூறி மறைந்தது.

அழகிய நல்லச்சியும் அவளுடைய தம்பியும் வீட்டிற்குச் சென்றனர். அவளைப் பார்த்த பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊரைத் தேடிச் சென்று மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.
……………..
(தகவல். மங்கம்மாள் பாட்டி, வயது72. வில்லோனி செட்டில்மென்ட். 08.09.2018.)
அருஞ்சொற்பொருள்
- ஓலாம்போய் – சூரல் கொடியால் பின்னப்பட்ட ஒரு பெரிய பை
- கராண்டுகம் – அளவில் சிறியது.

Leave a comment