‘ஆள் பாதி ஆடை பாதி’

முனைவர் அ விஜயன்

ஆள் பாதி ஆடை பாதி’ டி கே சங்கரநாராயணன் என்னும் மலையாள  எழுத்தாளரால் எழுதப்பட்ட ஒரு மலையாளச் சிறுகதை.  மாதிரிபூமி இதழின்  ஓணச்  சிறப்பு இதழில் வெளிவந்துள்ளது.  பாலக்காட்டு ஐயர்களின் பின்புலத்தில்,  ஐயர் குடும்பத்தின் சூழலை வைத்து எழுதப் பெற்றது. இக் கதையின் தலைப்பு தமிழில் இருப்பது அழகு. அழகிய ஆடை அணிந்து கல்லூரிக்குச் சென்ற இளம்பெண் பெண் முகம் தெரியாத யாரோ ஒருவரால் கொலை செய்யப்பட்டு விடுகிறார். எப்படி கொலை செய்யப் பட்டார் என்பது குறித்து இந்த கதை பேசவில்லை. ஏன் கொலை செய்யப் பட்டாள் என்பது குறித்துப்  பேசுகிறது.

டி கே சங்கரநாராயணன் பாலக்காடு மாவட்டத்தைச் சார்ந்தவர். 1963-ல் பிறந்தவர். பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரி ஆங்கில மொழி இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம்  பெற்றவர்.  பிறகு தஞ்சாவூரில் ஜோதிடக் கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  ஆயினும் 26 ஆண்டு கள் மருத்துவத்துறையில் மருந்து வியாபாரியாக பணியாற்றிவர்.  பல நூல்களை வெளியிட்டுள்ளார்,  புதினங்களையும் எழுதியுள்ளார்,  இவரு டைய ’சவுண்டு’ என்ற புதினம்  பல தென்னிந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.

  மாதங்கி எனும் பெண் இங்கே முதன்மைக் கதாபாத்திரமாக இருக் கிறார். கல்லூரியில் படிக்கும் அவள்  அத்தனை அழகானவள் அல்ல. உயரம் குறைவு; கறுப்பு நிறம்; களை இல்லை ”நான் மட்டும் ஏன் இப்படி பிறந்தேனோ” என்று அவள் வருந்துகிறாள். தன்னைக் குறித்த தாழ்வு மனப்பான்மை அவளுக்கு உண்டு. ஒரு நாள் பாட்டியின் மடியில் தலை வைத்து அவள் வருந்தி அழும்போது பாட்டி,  ”இதோ இப்ப வரேன்” என்று சொல்லி ஒரு பழைய மர அலமாரியில் இருந்து ஒரு அழகிய காஞ்சிபுரம் பட்டுப் புடவையை எடுத்து வருகிறாள்;  மாதங்கியை அணியச் செய்கிறாள். மாதங்கி இப்போது கண்ணாடி முன்னே நின்று பார்க்கிறாள். தனது உருவம் அழகாகவும் பிறரைக் கவரும் விதத்திலும் இருப்பதாக உணர்கிறாள். பிறகு நவீன ஆடைகள் வாங்க தகப்பனாரை நச்சரிப்பது; அடிக்கடி அழகு நிலையம் சென்று வருவது; தனது அழகு குறித்த பிரக்ஞையில் இருப்பது என மாதங்கியின் அன்றாட வழக்கம் புதுத் திசையில் பயணிக்கிறது. 

பல வழிகள் தன்னை அழகுபடுத்திக் கொள்வது,  பல்வேறு வகையான நவீன ஆடைகளை வாங்குவது குறித்து தனது தந்தையாகிய இராமையர் சலித்துக் கொள்கிறார்.  இதற்கெல்லாம் பாட்டியாகிய  சின்னம்மா தான் காரணம் என்று அவரையும் கடிந்து கொள்கிறார்.  ”ஒரு மகள் தானேடா” என்று பாட்டி சின்னம்மா பதிலுரைக்கிறாள்.  இப்பொழுது மாதங்கி அழகியாகிவிட்டாள்.  அவள் இருக்கும் தெருவில் இருசக்கர வாகனங்கள் உறுமிக்கொண்டு கொண்டு பறக்கின்றன. அவள் போகும் இடமெல்லாம் வாலிபர்கள் பின் தொடர்கிறார்கள். கல்லூரிக்குச் சென்றாலும் சிறப்பு வகுப்புக்குச் சென்றாலும் இது தொடர்கிறது. வீட்டுத் திண்ணையில் இருக்கும் பொழுது பல வாகனங்களின் உறுமல் தொடர்கிறது. ”நீ உள்ளை போ’ என்று மிரட்டுகிறார் அப்பா இராமையா. இப்படி இருந்த நாட்களில் ஒரு நாள் மாதங்கி  கல்லூரிக்குச் சென்று வரும் வழியில், மாலை நேரச் சிறப்பு வகுப்புக்கு சென்றுவிட்டு  ஆறு மணிக்கு வீடு வந்து விடுவாள். அப்பொழுது அங்கே இருக்கும் கோயின் மணியின் ஓசை கேட்கும். அவ்வேளை  வீட்டில்  தீபம் ஏற்றுவது மாதங்கிதான்.  ஆனால்  நேற்று நெடுநேரம் ஆனப்பின்னும்  கூட மாதங்கியைக் காணவில்லை.  இரவு 11 மணி ஆகியும் அவள் வீடு வந்து சேரவில்லை. சிறப்பு வகுப்புக்கும் செல்லவில்லை என்பதை ஆசிரியரோ உறுதிப்படுத்திச் சொல்லி விடுகிறார்.  தேடிப் பார்க்கிறார்கள் பலரும் பல்வேறு கருத்துக்களைச் சொல்கிறார்கள். போலீசுக்கு சொல்லி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஒரு நாள் பொறுத்து இருக்கலாம் என்று ஒருவர் பதில் சொல்லுகிறார். செய்தி ஊடகங்களில் வந்து விடக்கூடாது என்பது வீட்டாரது ஆதங்கம். “சமூக ஊடங்களில் காலமல்லவா” என்பது பலரது கவலை. யாருடனாவது……………..(ஓடிப்போயிருக்கலாம்) என்ற சந்தேகமும் எழுகிறது. ஆனால் வசீகரமற்ற, முக அழகற்ற , கறுத்த பெண்ணை யார் காதலிப்பார்கள் என்ற கவலையும் பலர் மனத்தில் எழுகிறது.  அடுத்த நிமிடங்களில் ஒரு முழுக்க தெரிந்துவிட்டது.  காலையில் விக்டோரியா கல்லூரியின் அருகில் இருக்கும் ஜெயினமேடு என்ற இடத்தில் உள்ள அழுக்கு ஓடையில் நாய்களால் குதறப்பட்ட ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாக செய்தி சொல்லப்படுகிறது. அவ்வுடலில் கீழ் தாடையில் இருக்கும் மச்சம் அது மாதங்கி தான் என்பதை உறுதிப்படுத்த உறவினர்களுக்கு உதவுகிறது. இதை யார் செய்திருக்கக் கூடும்  என்று காவல்துறையினர் வினா தொடுக்கின்றனர். யாரும் பதில் சொல்லவில்லை ஒருவன் மட்டும் அங்கிருந்து மெல்ல நகர்கிறான். அவனை காவல் துறை அலுவலர்கள் விசாரித்த பொழுது குழந்தை பருவம் முதல் இருவரும் ஒன்றாக நடந்தவர்கள்; விளையாடியவர்கள் என்பதும் அதனால் மாதங்கியின் இழப்பைத் தாங்கிக் கொள்ளாதவன் என்பதும் தெரியவருகிறது. அவன் அழுகையை மட்டுமே பதிலாகத் தருகிறான்.  எல்லாவற்றிற்கும் காரணம் பாட்டி சின்னம்மாதான்  என்று இராமையர் மீண்டும் பழியை சின்னம்மாவின் மீது திருப்புகிறார். அந்தப் பழியை ஏற்றுக் கொள்ளாத முடியாத பாட்டி தக்க பதிலை தன் மகனுக்கு உரைக்கிறார்.
” பெயிண்ட் தான் வீட்டுக்க்கு ஆடை,  பாட்டுக்காரனுக்கு சந்தம் ஆடை அரசியல்வாதிக்கு அதிகாரம் ஆடை,  சமையலுக்கு கை பக்குவம்தான் ஆடை அது மாதிரிதான் பெண்களுக்கும்” சின்னம்மா பாட்டி சொல்லி முடித்தவுடன் ஏதோ ஆலோசனையில் இராமையரின் மனத்தில் மாதங்கியின் பழைய உருவமும் புதிய உருவமும் மாறி மாறி வந்து சென்றன.

          ஒரு தமிழ் பிராமணரின் குடும்பச் சூழலை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த கதையின் தலைப்பே தமிழிலேயே அமைக்கப்பட்டிருப்பது நோக்கத்தக்கது.  ஆள் பாதி ஆடை பாதி.  மூன்று வாரங்களுக்கு முன்பு சுற்றுலா சென்ற இடத்தில் நன்றாக – சிறப்பாக – ஆடை அணிந்திருந்ததன் காரணமாக ஒரு மாணவன் ஒரு கும்பலால் கடத்தப்பட்டான். கடத்தல் காரர்கள் 15 லட்ச ரூபாய் கேட்டு பெற்றோரை மிரட்டினார்கள். காவல் துறையின் உதவியுடன் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த அந்தப் பையன் மீட்கப்பட்டார். இப்படி ஆண்களே  ஆடையைக் கண்டு  கடத்தப்பட்டால் இளம்பெண்களின் நிலையை என்னென்பது. வாலிபப்பெண்கள் பாலியல் துன்பங்களுக்கு ஆளாகுதல் போன்ற குற்றச்செய்திகள் நம் நாட்டில் தொடர்ந்து நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக பெண்கள் மீதும் சிறுமிகள் மீதும் ஏவப்படும் பாலியல் வன்கொடுமைகள் பாலியல் சீண்டல்கள் எல்லாம் நமது பண்பாட்டை நாற்றம் அடிக்கச் செய்கின்றன யாரும் திரும்பிப் பார்க்காத, பார்க்க விரும்பாத,  முக வசீகரம் இல்லாத கறுப்பான ஒரு பெண் என்று பெற்ற தந்தையே கடிந்து கொள்ளும் ஒரு யுவதி ஆடைகளை மாற்றி அலங்காரத்தை மாற்றிப்பின் தானே அழகாக விடுவதாக உணர்கிறாள். இங்கே 16 வயதினிலே ஸ்ரீதேவி புத்தாடை அணிந்து கண்ணாடிமுன் நின்று தன்னைத்தானே ரசித்துக்கொண்டதை போல மாதங்கி ரசித்துக் கொண்டதாக எழுதுகிறார் கதையாசிரியர்.  தமிழ் குடும்பம் என்பதால் தமிழ் தொடர்பான செய்திகளை அவர் இணைத்துக் கொள்கிறார். புதுமை புகுத்தும் உத்தியாக ஆசிரியர் இதைச் செய்திருக்கலாம். எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் முதல் சிலர் இவ்வுத்தியைப் பின்பற்றியிருக்கிறார்கள்.   இங்கே அழகு ஒருபுறம் இருக்க ஆடை இன்னொரு புறம் பெண்களை வசீகரமானவர்களாக மாற்றுகிறது. வாலிபர்கள்,   பள்ளி பருவத்தில் எல்லா இந்தியர்களும் எனது சகோதர சகோதரிகள் என்று உறுதிமொழி எடுப்பதோடு நிறுத்தி விடுகிறார்கள். அதைத் தொடர்ந்து பின்பற்ற முடிவதில்லை.  எனவே பாலியல் சமத்துவம் குறித்து நம்முடைய குழந்தைகளுக்கு நாம் கற்றுத் தர தவறிவிட்டோம் அல்லது அந்த பண்பாடு சற்று புறந்தள்ளப் பட்டு விட்டது. ஒருபுறம் எளிதாக கிடைக்கக்கூடிய போதை பொருட்கள்; இன்னொரு புறமும் எல்லாவற்றையும்  பெரிதாக காணக்கூடிய திறன் பேசிகள்.  திறந்து பேசி யுகத்தில் பிறந்து வளர்ந்த தலைமுறையினர் சுய சிந்தனை இல்லாதவர்கள்; பிறரைக் கண்டு செயலாற்றுபவர்கள்;  பிறரைப் பார்த்து காப்பி அடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதை வழக்கமாக்க் கொண்டவர்கள்; சொந்தச் சமூகம், சொந்த பண்பாடு, உறவினர், நாட்டார் குறித்துத் தெரிந்து கொள்ளாதவர்கள்.  சமூகத்தில் இப்படிப்பட்ட செயல்கள் தலைவலியை  ஏற்படுத்துகிறது; அதை மேலும் மிகுவிக்கிறது. 

இந்த செயலைச் செய்தது யார்? யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வினாவும் விடையும் கடையில் சொல்லப்படுகிறது. ஒரு வேலை போதைக்கு அடிமையான ஒரு வாலிபன் செய்திருக்கலாம் அல்லது ஒரு வடநாட்டு தொழிலாளி செய்திருக்கலாம்.  ஒரு கும்பல் கூட அந்த செயலை செய்திருக்கலாம். எனவே பெண்களின் பாதுகாப்பு நம் நாட்டில் கேள்விக்குறியாகிவிட்டது. இந்தத் தருணத்தில் நம் குழந்தைகளை இழந்து விட்டு, அல்லது இப்படி அகாலமாகப் பலி கொடுத்துவிட்டு இப்படி ஒரு பெரும் கொண்டாட்டம் கொண்டாட வேண்டியதன் அவசியம் என்ன என்ற வினா ஆசிரியர் கதையில் தொனிப்பதை நாம் காணலாம்.

கேரளாவின் சினிமா துறையில் எழுப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரித்த ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளிவந்த பிறகு நாள்தோறும் ஊடகங்களில் வரும் செய்திகள் சினிமாத்துறையில் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களை எடுத்துரைக்கின்றன. இது கேரள சினிமாத்துரைக்கு மட்டுமல்லாது பொதுவாக இந்திய சினிமாத் துறையின் நிலைமைக்கு ஒரு சான்று எனில் அது மிகையன்று.  பெண்ணின் பெருமை பேசும் நம் நாட்டில் தான் இத்தகைய தீமைகள் நடந்தேறுகின்றன. அதைத்தொடர்ந்து தெற்கு முதல் வடக்கு வரை எல்லா மொழிகளில் உள்ள திரை துறை நடிகைகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேச துணிந்து விட்டார்கள். இது வரவேற்க வேண்டிய நல்ல தொடக்கம். புரட்சி.  75 ஆண்டுகள் கடந்தப் பின்னும் சுதந்திர நாட்டில் பெண்களுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது நம் நாட்டின் பெரிய வெட்கக்கேடாக இருக்கிறது என்பதை மறைமுகமாக எடுத்துரைக்கும் கதைதான் இந்த ஆள் பாதி ஆடை பாதி

இனிமேலேனும் மாதங்கி போல நிர்பயா போல யாரும் இறந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் ஆசிரியரின் இந்த கதையின் வழியே வலிமையாக முன் வைக்கப்படுகிறது. எளிமையான கதை தான், அறிந்த செய்தி தான், தெரிந்த இடம் தான், இதில் என்ன புதிதாக சொல்ல வேண்டியது இருக்கிறது என்று நாம் நினைக்கலாம் ஆனால் அந்தச் செய்தியில் இருந்து நாம் என்ன சிந்திக்க வேண்டும்; அதை தெரிந்து கொண்டு எப்படி செயலாற்ற வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாகவே  இந்தக் கதையை நாம் பார்க்க வேண்டும். 

கதையில் சில இடங்களில் தமிழ் பேச்சு மலையாளத்தில் தவறாகவும் எழுதப்பட்டிருக்கிறது மாதும் நீ உள்ளே போ என்பதற்கு பதிலாக உள்ளை போ (பாட்ஷா பட வசனம்) என்று எழுதப்பட்டிருக்கிறது அது ஆசிரியரின் புரிதலா, புரிதல் தவறா என்ற எண்ணத்தை மலையாள வாசகருக்கு, குறிப்பாக பாலக்காட்டு வாசகருக்கு ஏற்படுத்துவதாக இருக்கலாம்.  பாலக்காட்டுத் தமிழுக்கென்று ஒரு அழகு இருக்கிறது அதைப்போல பாலக்காட்டு மலையாளத்திற்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. கதாசிரியர் தமிழழகை கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறார். இந்த ஆசிரியர் மட்டுமல்ல பல எழுத்தாளர்கள் இந்நாட்களில் தமிழ்ப் பதங்களைப் பயன்படுத்துகிறார்கள்; தமிழ் பண்பாடுகளைப் பயன்படுத்துகிறார்கள் தமிழ் சொற்றொடர்களை பயன்படுத்துகிறார்கள். மலையாளம் தமிழின் சகோதரி மொழி என்பர்.  தமிழில் இருந்துதான் தென்னிந்திய மொழிகள் தோன்றின என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு.  எனவே சங்க இலக்கியம் என்பது தமிழர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல அது திராவிடர்களுக்குச் சொந்தம் எனவே தங்களுக்கும் சொந்தமானது என்று கொண்டாடிக் கொண்டிருக்கிற இருக்கிறார்கள் நம் அண்டை மாநிலத்தவர்கள் – குறிப்பாக் மலையாள அன்பர்கள்.  நாமே அவர்களைப் பார்த்து , அவர்கள் வடமொழியில் இருந்து கடன் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சில பதங்களை எடுத்து எடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் மலையாள தினசரிகளிலும் இதழ்களிலும் தமிழ்ச் சொற்களை அவர்கள் வரிந்துகட்டிக் கொண்டு பயன்படுத்துவதை நாம் காணலாம் அதை ஒரு கொள்கையாகவும் கொண்டுள்ளர் எனில் அது மிகையன்று.  

Leave a comment

Trending