உருள்பொட்டலுக்கு*ப் பின் பள்ளிக்கூடத்தில்

மலையாளப் படைப்பு : ரஹீம் பொன்னாடு
தமிழாக்கம் : கவிதா மணாளன்

(ரிஸாலா மலையாள கிழமையிதழில் (24 செப். 2024) வெளிவந்த கவிதையின் தமிழாக்கம்)

நாளை பாறைகளைப்பற்றி படிக்கலாமென்று சொல்லிவிட்டுச்
சென்றிருந்தார் கங்காதரன் சார்
சார் பிறகு வரவில்லை.
ஐந்தாம் வகுப்பு ‘அ’ பிரிவில் இப்போது நிறைய பாறைகள் இருக்கின்றன.

ஆற்றினைக் குறித்துள்ள கவிதையைப் பாதியில் நிறுத்திவிட்டு
ஆறுகடந்து போயிருந்தார் சாரதா டீச்சர்
டீச்சர் பிறகு வரவில்லை.
ஆறாம் வகுப்பு ‘ஆ’ பிரிவே இப்போது ஓர் ஆறுதான்.

பாத்திமாவின் ஆடு வாசித்துவரச்சொல்லிவிட்டு
ஹம்சகோயா ஐயா குன்றேறிப் போயிருந்தார்
ஐயா பிறகு வரவில்லை.
எட்டாம் வகுப்பு ‘இ’ பிரிவில் இப்போது நிறைய ஆடுகளுண்டு.

பலவகை மண்ணு மாதிரிகள் சேகரித்துவரச்சொல்லிவிட்டுத்தான்
மாணவர்களை அனுப்பியிருந்தார் தமயந்தி டீச்சர்
மாணவர்கள் பிறகு வரவில்லை.
ஒன்பதாம் வகுப்பு ‘ஈ’ பிரிவில் இப்போது நிறைய மண்ணுதான் இருக்கிறது.

மரங்களைக்குறித்து ஒரு ஆவணப்படம்
எடுக்கலாமென்றுதான் வகுப்புத்தலைவர் போயிருந்தார்
வகுப்புத்தலைவர் பிறகு வரவில்லை.
பத்தாம் வகுப்பு ‘உ’ பிரிவில் இப்போது நிறைய மரங்கள் இருக்கின்றன.

இந்தப் பள்ளிக்கூடத்தை நாம் ஒரு சொர்க்கமாக்க வேண்டுமென்று
கூறிச் சென்றிருந்தார் தலைமையாசிரியர்
தலைமையாசிரியர் மட்டும் மீண்டும் வந்திருக்கிறார்.
பள்ளிக்கூடமே இப்போது சொர்க்கத்தில்தான் இருக்கிறது.


*உருள்பொட்டல் – மண்ணின் அடியில் ஏற்படும் உருளலின் காரணமாக மண்ணின் மேற்புறமுள்ள மரங்களும் கட்டடங்களும் மண்ணிற்குள் புதைந்து உருண்டு போவதைக் குறிக்கும் மலையாளச்சொல். நிலச்சரிவு என்பதிலிருந்து வேறானது இது.

Leave a comment

Trending