குணா கவிதை
எவ்வளவோ
எழுதவேண்டும்போல் உள்ளது.
எல்லாவற்றையும் எழுதமுடியுமா?
தினமும்
ஏதாவது ஒரு நெனப்பு.
நிகழ்வுகளை அசைபோட
தொலைந்துபோகிறது தூக்கம்.
இவர்களும் உடனிருக்கிறார்களே
தனியாக இருந்தால் கவலையில்லையோ
சொல்லுதல் யார்க்கும்எளிதுதான்
சரி….அனுபவத்தில் புரிந்துகொள்ளட்டும்
தினமும் யாராவது ஒருவர்
பிடிக்காமல் போகிறார்.
சின்னவர் பெரியவர்
ஆண் பெண் பேதமில்லை.
யாராக இருந்தாலும்
இவர் சம்மந்தப்படுவதால்தான்
இந்தத் தொல்லை.
என் பாதிப்பை
எப்போதும் புரிந்துகொள்வதில்லை.
நெருக்கமாய் இருப்போரின் உணர்வுகளை
இருக்கும்போது உணர்வதில்லை.
நாமும் வெளிப்படுத்துவதில்லை.
காயப்படுத்திவிடுவோம் என்றோ?
காயப்பட்டிருக்கிறோம் என்றோ?
வாழ்நாளின் என்றாவது ஒரு கணத்தில்
உணர்த்திவிடவேண்டும்.
எங்கும் சூழ்ந்திருக்கும் அமைதியிலும்
சில்லென்று மென்மையாய்
வீசும் காற்றிலும் வந்துபோகின்றன
நியாயமில்லாத யோசனைகள்
கொசுவின் ரீங்காரத்தில்
அசைந்துகொண்டேஇருக்கிறேன்
நிலையில்லாது.
உண்மைதான்.
இருப்பைப் பகிர்ந்துகொள்ளலாம்
பிரியப்படாதபோது
விட்டுவிடுவதேமேல்.
யாரும் நினைவில்
வைத்துக்கொள்ளப்போவதில்லை.
தலைகனக்கிறது.
குறைந்துபோன பசியோடு
பொழுதுகளின் ஆயுள்
கூடிக்கொண்டேபோகிறது.
சூழலைப் புரிந்துகொள்ள முயல்கிறேன்.
எந்த ஒன்றிற்கும்
தொடக்கம் இருக்கிறது.
தொடக்கத்திற்கு ஏற்றவாறு
அனுபவம் அமைகிறது.
அனுபவம் ஒவ்வொருத்தருக்கும்
வெவ்வேறுதான்.
இருக்கும் இடத்திலிருந்து
விரும்பினாலும்
தொடக்கத்திற்கோ இறுதிக்கோ
ஏன் இடையிலோ
எந்தப்புள்ளிக்கும் செல்ல இயலாது.
யாரும் துக்கப்படாதபோது
ஒவ்வொரு மணித்துளியும் முக்கியமே.
சலனமில்லாது சங்கடப்படாது
பயணிக்க முயல்கிறேன்.
விரும்பத்தகாத நிகழ்வுகள்
மறந்துபோனால்
வாழ்க்கையே புதிதாய் அமையும்.
உன் கருத்துக்களைத் தொடராது
ஆங்காங்கே தேங்கிநின்றாலும்
உன்னைத் தனியே விட்டுவிடாமல்
பயணத்தில் தொடர்ந்தேவருகிறேன்.
முனைவர் ப. குணசுந்தரி

Leave a comment