தமிழ்த் திரையுலகின் புதிய போக்குகள்

(New Trends of Tamil movies)

முனைவர் க. ஜெயபாலன்.

மெட்ராஸ் திரைப்படத்திலும் கருடன் திரைப்படத்திலும் அதிகாரம் மிக்கவர்களின் பேராசைகளால் எவ்வாறு சராசரி மனிதர்கள்  வீழ்த்தப்படுகின்றனர் உட்பகைகளை உருவாக்கி அவர்கள் எவ்வாறு காலி செய்யப்படுகின்றனர் என்பதை மிக நன்கு வெளிக்காட்டி உள்ளனர் இயக்குநர்கள்.

விளையாட்டில் உள்ள மாபெரும் அரசியலை வெண்ணிலா கபடிக் குழு தொடங்கி குத்துச்சண்டை வீரராக ஜெயம் ரவி நடித்த பூலோகம் திரைப்படம்,  தனுஷ் அடிமுறை வீரராக நடித்த பட்டாஸ் திரைப்படம், ப்ளூ ஸ்டார் வரையில் விளையாட்டுக்குள் இருக்கும் சர்வதேச அரசியலைப் பலரும் விரிவாக தமிழ்த் திரை உலகில் பேசி வருகின்றனர்.

மாபெரும் முதலாளித்துவ நிலவுடமை ஒடுக்கு முறையின் கீழ் ரஷ்ய எழுத்தாளர்கள் வாழ்ந்த பொழுது அதாவது புதிய ரஷ்யா உருவாவதற்கு முன்னர் இருந்த எழுத்தாளர்கள் டால்ஸ்டாய் தொடங்கி மக்சீம் கார்க்கி, இவான் துர்க்கேனிவ், அலெக்சி தல்ஸ்தோய், மாபெரும் சிறுகதை மன்னர் ஆண்டன் செகாவ் வரையில் அனைவரும் நேரடியாக அரசியல் செயல்பாடுகளுக்கு விளக்கம் அளிக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் படைப்புகள் வழியே  காலம் கடந்து அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கும் உன்னதப் படைப்புகளை உருவாக்கினார்கள். 

இவ்வாறு தான் எந்தமொழியிலும் தோன்றியுள்ள உன்னதமான படைப்பாளர்களும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் திரைப்பட இயக்குநர்களும் தாங்கள் வாழும் சமூகத்தின் மீது ஆழமான விமர்சனங்களை வைக்கின்றார்கள். நேரடியாக ஒரு மனிதர் மட்டுமே குற்றவாளி அல்ல இந்த சமூக கட்டமைப்பு குற்றமாக இருப்பதால்தான் மாபெரும் அநீதிகள் நிகழ்கின்றன என்பதை தங்கள் படைப்புகள் வழியாக அவர்கள் எழுதிக் காட்டுகின்றனர். அதனால்தான் படைப்புகள் காலம் கடந்தும் நிற்கின்றன. 

அக வாழ்க்கையில் “சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்” என்பது சங்க இலக்கியம் காட்டுகின்ற தமிழ் மரபின் உயர்ந்த ஒரு கூறாகும். அதே வகையில் தான் புற வாழ்க்கையில் கூட அநீதியாளர்கள் ஒருவராக மட்டுமல்ல சுரண்டுபவர்கள், ஒடுக்குபவர்கள் ஒருவராக இல்லை பலரும் இங்கு இருக்கிறார்கள். நமக்கும் அதில் பங்கு இருக்கிறது என்று அனைவரையும் கேள்விக்கு உட்படுத்துவதே படைப்பின் மகத்தான வேலை.

கர்ணன், மாமன்னன், அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் நுட்பமான அரசியலைப் பேசுகின்றன. எவ்வாறு மிக நுட்பமாக அதிகார மையங்கள் அதிகாரம் அற்றவர்களைத் தொடர்ந்து வெளியே நிறுத்துகின்றன அதற்கான வேலைகளை எவ்வாறு தொடர்ந்து செய்து வருகின்றன என்பதை இயக்குனர்கள் சொல்ல முயலுகின்றனர். 

நிர்வாகத்தில் இருப்பவர்கள்தான் அரசை இயக்குகிறார்கள் அல்லது வேறு விதமாகச் சொன்னால் அதிகார வர்க்கத்தின் அல்லது ஆட்சி வர்க்கத்தின் செயல்பாடுகளை நடைமுறையில் மாற்றி வைப்பவர்கள் நிர்வாகிகள்தான். இந்த நிர்வாகிகள் ஆட்சி அதிகாரத்திற்கு எவ்வளவு சாதகமாகவும் மக்களுக்கு விரோதமாகவும் இருக்கிறார்கள் என்பதை நீண்ட நெடுங்காலமாக பல திரைப்படங்கள் தமிழ்த்திரையுலகில் காட்டியுள்ளன. ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் இன்னும் ஆர்டிகல்14, எம் எல் ஏ வீட்டில் பலாப்பழம் திருடு போன கதை உள்ளிட்ட பல ஹிந்தி திரைப்படங்கள் யாவும் புதிய அணுகுமுறைகளில் நிர்வாகத் துறை எவ்வாறு செயல்படுகிறது என்று காட்டின. 

அதிகாரத்தில் இருப்பவர்கள் எவ்வளவு அச்சப்படுகின்றனர் தங்கள் நிலை தாழ்ந்து விடும் என்று அது அதற்காக எவ்வளவு கொடிய வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் என்பதை நன்கு இத்திரைப்படங்களில் வெளிப்படுத்துகின்றனர். அதேநேரம் ஜனநாயக சக்திகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்க எவ்வாறு முயலுகின்றன என்பதையும் இத்திரைப்படங்கள் நன்கு காட்டின.

அந்த வகையில் அண்மையில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் சாதிய ஒடுக்கு முறையின் வடிவங்களை நுட்பமாக வெளிக்கொணர தமிழ் திரைப்பட இயக்குனர்கள் தயாராகி உள்ளனர். பண்டித அயோத்திதாசர், தந்தை பெரியார், மகாகவி பாரதியார் அகில இந்திய அளவில் சாதிய கட்டுமானம் குறித்து உன்னதமான ஆய்வுகளை செய்து உலக அளவில் பேரறிஞராக நிற்கின்ற டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட மகத்தான சிந்தனையாளர்களின் சிறப்பான கூறுகளை உள்வாங்கிக் கொண்ட வெற்றி என்று கூறுகின்ற வகையில் பல திரைப்படங்கள் சாதிய கட்டுமானம் குறித்து கேள்விகளை எழுப்ப தொடங்கி இருப்பது நல்ல ஒரு போக்காகும்.

“தனக்கு லாபம் வரும் போது எனில் தனக்குத்தானே கூட சவக்குழி வெட்டக்கூடத் தயாராக இருக்கும் முதலாளித்துவம்” என்பது பேரறிஞர் காரல் மார்க்ஸ் அவர்களின்  கருத்தாகும். அவ்வகையில் இந்த கலை படைப்புகள் வியாபாரம் ஆகிறது என்று உற்பத்தி ஆகிறதா என்ற ஒரு கருத்தும் கூட ஒரு பக்கத்தில் இருந்தாலும் உண்மையில் மக்கள் மத்தியில் பேசப்படாத கருத்துக்களைத் தைரியமாகப் பேச வருவது பாராட்டிற்குரியது. ஊழலை எதிர்த்து நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் இந்திய அளவில் உருவாகி இருக்கின்றன ஆனால் சாதிய கட்டுமானம் எதிர்த்து அது ஒரு தர்மம் என்று பேணப்பட்டு வருகின்ற இந்திய சமூக சூழலில் அதை எதிர்த்து எத்தகைய படைப்புகள் உருவாகி இருக்கின்றன என்றால் மிக குறைவாகவே உள்ளன எனலாம். 

அவ்வகையில் தமிழ்த் திரை உலகில் பல புதிய அலை போக்குகளை அண்மைக்காலமாக பல இயக்குநர்கள் உருவாக்கி வருகின்றனர். அவர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். இத்தகு அரசியல் சூழலில் உருவாவதற்கு தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக சமூக நீதியை முன்மொழிந்து அநீதிகளை அரசியல் களத்தில் எதிர்த்து போராடிக் களம் கண்டு வருகின்ற அத்தனை தலைவர்களும் அறிஞர் பெருமக்களும் பாராட்டுக்குரியவர்கள் என்பதை இங்கு முன்மொழிய வேண்டும்.

Leave a comment

Trending