தலித்திய நோக்கில் ‘ஒரு சவரக்காரனின் மயிருகள்’ கவிதைத்தொகுப்பு
கார்த்திக்

முன்னுரை:
இந்திய வரலாற்றில் சாதி முறையில் ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த மக்களில் சிலரும், மராட்டியத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களும், எழுபதுகளில் தங்கனைத் தலித் என்று அழைத்துக் கொள்ளத் தொடங்கினர். ‘தலித்’ என்ற மராத்தியச் சொல்லுக்கு உடைந்து போனவர்கள்’ என்று பொருள். பின்னர், இந்தப் பெயர் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலைத்துவிட்டது.
மராட்டியத்திலும், கர்நாடகத்திலும் தலித் மக்களைப் பற்றிய இலக்கியங்கள் ‘தலித் இலக்கியம்’ என்ற பெயரில் தோன்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் இலக்கியத்திலும் தலித் இலக்கியம் கால் பதித்தது.
தலித் இலக்கியம் என்பது தலித் இலக்கியத்தால் மட்டுமே வரையறுக்கப் படவில்லை. சாதிப்போராட்டங்கள், சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டுக் கிளர்ச்சிகள், பொருளாதார சமத்துவத்தைப் பற்றிய பேராட்டங்கள், அரசியல் கிளர்ச்சிகள் ஆகியவற்றோடு ஒன்றாகவே தலித் இலக்கியம் எழுந்துள்ளது என ராஜ் கௌதமன் வரையறுக்கிறார். அந்த வகையில் கலைவாணன் இ.எம் எஸ் அவர்களின், “ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்” என்ற கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் ஒடுக்குமுறை, தீண்டாமை, ஆதிக்கம், மீறல் ஆகிய தலித்தியக் கூறுகளை ஆராய்ந்து வெளிப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தலித் -சொற்பொருள் விளக்கம்:
தலித் என்ற சொல் “தல்” என்ற எபிரேய மொழிச் சொல்லில் இருந்து வந்ததாக கருதப்படுகிறது. விவிலியத்தை இந்தியில் மொழிபெயர்க்கும் போது தல் என்ற எபிரேய மொழிச் சொல்லுக்குத் தலித் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். இதுவே மராட்டிய மொழிக்குச் சென்று அங்கிருந்து தமிழுக்கு இன்று வந்துள்ளது. தல் என்ற எபிரேய மொழிச்சொல் தமிழ் விவிலியத்தில் ஏழைகள் என்று மொழியாக்கம் பெற்றுள்ளது.
தலித் என்ற சொல்லுக்கு மராட்டிய மொழியில் பள்ளம் என்பது பொருளாகும். இது இடவாகுப் பெயராக நின்று பள்ளத்தில் வீழ்த்தப்பட்டவர், பள்ளத்தில் வாழ்பவர் என்று பொருள்தரக்கூடியது.
யாரெல்லாம் தலித்
தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், உழைக்கும் மக்கள், நிலமற்றவர்கள், ஏழை விவசாயிகள், பெண்கள், இறுதியாக அரசியல் பொருளாதார ரீதியிலும், மதத்தின் பெயராலும் சுரண்டப்படும் அனைவருமே தலித்துகள் தான். அந்த வரிசையில் நாவிதர்கள், வண்ணார்கள் போன்ற சேவை சாதியினரும் இடம் பெறுவர்.
ஒரு உயர் சாதியினர், தாழ்ந்த சாதியினரை ஒடுக்குவது அல்லது ஆதிக்கம் செலுத்துவது. தலித் என்பது சாதி வரிசையில் கடைகோடியில் இருக்கும் மக்களைக் குறிக்கின்றது.
தலித்தியம் விளக்கம்
தலித்தியம் என்பது கடைகோடியில் இருக்கும் மக்கள், தங்களை சாதிக் கொடுமையிலிருந்து விடுவித்துக் கொள்ள மேற்கொள்ளும் போராட்டங்களையும், போராட்டங்களுக்குத் தேவைப்படும் தத்துவங்களையும், கருத்துக்களையும் சுட்டி நிற்பது ஆகும்.
இந்தியாவிலுள்ள தீண்டாமை மற்றும் சாதி அமைப்பின் கொடுமையான சுரண்டல் முறையினை அறிதலை நோக்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தலித் இலக்கியம்.
தலித் இனம் ஒரு சாதியல்ல: அது ஒரு உணர்வுபூரனமான புரிதல்: பட்டறிவு, மகிழ்ச்சி, துயரம், போராட்டம் ஆகியவற்றோடு தொடர்புடையது. அது ஒரு கலகக் கோட்பாடு, அதன் மூலம் விடுதலையச் சாதித்தல்.
தலித்திய ஒடுக்குமுறை:
தாழ்த்தப்பட்ட சாதியினரை உயர் சாதியினர், தங்களது அதிகாரத்தினாலும், பொருளாதாரத்தினாலும் இழிவுப் படுத்த நினைப்பது. கவிஞர் இ.எம்.எஸ்.கலைவாணன்,
பிச்சையெடுத்தாலும்
பார்பர் ஷாப் வேலைக்கு
போக கூடாதுன்னு
சொல்லிட்டா அம்மா
லாரில கிளியா இருக்கும் போது
விருதுநகர் பஸ்டாண்டு
குளிரூம்ல
நான் குளிச்ச பொறவு
நீ குளில் நாசுவ தாயிளின்னுட்டு
என்னை வெளிய வரசொல்லி
டிரைவர் குளிக்கப் போனான்
என்று நாவித சமுதாயத்தை சேர்ந்தவரை இழிவுபடுத்திய நிகழ்வை தன் கவிதையில் பதிவு செய்துள்ளார்.
திருமணத்திற்கு நாவித சமூகத்தைச் சார்ந்த ஒருவர் தனது அம்மாவுடன் செல்கிறார். அப்பொழுது பந்தியில் அமர்ந்திருக்கும் பொழுது அங்கிருந்த உயர்சாதியினர் அவர்களை இழிவு படுத்திய நிகழ்வை,
களை கட்டியிருந்தது
பிச்சாண்டி ஆசாரியரின்
கல்யாண வீடு
முதல் பந்தியில
பக்கத்து கோவிந்தன் நாயர்
முதல் பந்தியில
பக்கத்து கோவிந்தன் நாயர்
இப்பவே யாம்புல இருந்தியன்னு
சோறு விளம்புன ஞானபிறகாசம்
ஓடுங்கல நாசுவ தாயளின்னு
எழுப்பி விட்டான்
என்னையும் என் அம்மாவையும்
எல்லா விசேஷ வீட்டுலயும்
ஒரு ஞானபிறகாசம் இருப்பான்
எங்களை
விரட்டி விடுகதுக்கு (பக்கம் 18)
உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளார்.
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்க்கு அடிப்படையானது உணவு அதிலும் கூட உயர் சாதியினரின் அதிகாரம் காண்பிக்கப்பட்டுள்ளது.
தலித்திய நாவலாசிரியர்களில் ஒருவரான பாமா, தனது கருக்கு நாவலின் முன்னுரையில்,
வாழ்க்கையின் பல நிலைகளில் பனங்கருக்குப் போல என்னை அறுத்து ரணமாக்கிய நிகழ்வுகள், என்னை அறியாமையில் ஆழ்த்தி முடக்கிப் போட்டு மூச்சு திணற வைத்த அதீத சமுதாய அமைப்புகள், இவற்றை உடைத்தெறிந்து அறுத்தொழித்து விடுதலை பெறவேண்டும் என்று எனக்குள் எழுந்த சுதந்திரப் பிரளயங்கள். இவை சிதறடிக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எனக்குள் கொப்பளித்துச் சிதறிய குருதி வெள்ளங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இப்புத்தகத்தின் கரு.’
எனக் குறிப்பிட்டிருப்பார். அது போன்ற உணர்வேயே கலைவாணனின் இக்கவிதையும் வெளிப்படுத்தியுள்ளது. தனது உணர்வுகளை கவிதையாக வடித்துள்ளார்.
மற்றொரு கவிதையில் ஒரு மனிதன், தனது வாழ்க்கையை மேம்படுத்துவற்கு இன்றியமையாதது கல்வி. அனைவரும் சமம் என்று கூறும் ஆசிரியரும் கூட நாவிதன் என்னும் தொழிலை வைத்து சாதி பிரிவினை ஏற்படுத்தி இழிவுபடுத்துகின்றார். இதை,
படிப்பு வரலைன்னா
உங்கப்பன் கூட
செரைக்க போக வேண்டியது
தானலேன்னு
கூரை பள்ளி கூடத்த மொழுவ
சாணங்கி பொறக்க
அனுபிவச்ச
நடாராஜ பிள்ளை வாத்தியாரை
அன்னைக்கு ஒரு நாளு
செயர்ல இருத்தி வச்சு
அப்பா ஷேவ் பண்ணுகாரு
கிருதால இருந்து
கத்தி கீழ இறங்கி
கழுத்துக்கு கிட்ட வரும்போது தோணுகு
அப்படியே வச்சு
ஒரு இழுப்பு இழுத்தர மாட்டாரான்னு
தாயினி சாவட்டும்.. (பக்கம் 16)
என்று கலைவாணன் தனது கவிதையில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
இது போன்ற கவிதைகளின் மூலம் ஆசிரியர் தனது சொந்த வாழ்க்கையில் நடந்த மனகுமுறல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
தீண்டாமை:
தீண்டாமை என்பது சாதி மற்றும் தொழில் அடிப்படையில், மக்களை சில குழுக்களாகப் பாகுபடுத்தி, அவர்களுக்கு சம உரிமைகளை வழங்காமல் தடுக்கும் முறை. தீண்டாமை என்றால் தொடாமை என்பது பொருள்.
செத்த வீட்டுக்கும்
பார்பர்ஷாப்புக்கும்
போனவங்க
குளித்த பிறகுதான்
வீட்டுக்குள் வரணும்
ஒட்டிய
முடிகள் போவதற்கும்
நாசுவன் தொட்டதற்கும். (பக்கம்17)
முடி வெட்டிய பிறகு உடனடியாக குளிப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும். நமது உடலில் ஒட்டியிருக்கும் சிறு முடிகளை கூட உடனடியாக சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும். காரணம் நமது உடலில் இந்த வெட்டப்பட்ட முடிகள் பாக்டீரியாக்களுக்கு உணவாக மாறிவிடும். ஆனால் நாவிதர் தொட்டு விட்டான் என்று குளிக்கும் சில உயர் சாதியினர் இப்பொழுதும் நம் சமூகத்தில் காணப்படுகின்றனர்.
மற்றொரு கவிதையில் ஆதிக்க சாதியினரின் வீட்டின் முன் வாசலில் நாவிதன் வந்தால் தீட்டு என்று பின் வாசலில் வழியாக வரச் சொல்வதைப் பற்றித் கூறுகிறது.
காலைல
முடிவெட்டி அக்குள் வழிக்க சொன்ன
சொக்கலிங்க செட்டியாரு
டேய்னு கூப்பிட்டா வீட்டைச்சுத்தி
பொற வாசல் வழியா வந்து
கையெடுத்து கும்பிட்டு
சொல்லுங்க சாமின்னு தான்
சொல்லணும். (பக்கம் 71)
என்று மேல் சாதியினர், நாவித சமுதாயத்தினரை எவ்வாறு நடத்துகின்றனர் என்பதை பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
ஆதிக்கம்:
ஆதிக்க சாதியினரின் பொருளாதார சுரண்டல், பண்பாட்டு அடக்குமுறை என்பனவற்றை ஆதிக்கம் எனலாம் ஆதிக்க சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நாவிதர்களும் மனிதர்கள் தான் என்று எண்ணுவதில்லை.
ஒரு சவரத் தொழிலாளிக்கு வாழ்வாதாரம் என்பது அவர்களுக்கு கிடைக்கும் கூலியைப் பொருத்து அமையும். அதிலும் கூட சுரண்டப்படுகிறார்கள் என்பதை.
சபரிமலை
சப்பி போட்ட பளங்கொட்டை மாதிரி
தலைமுடியும் தாடியுமா வந்த
தங்கப்பன் நாயரை
வரணம் வரணம்னு சொல்லி
பல்லுகாட்டி
செயர்ல இருத்தி
முன்னால கொஞ்சம் முடிவிட்டு
சைடெல்லாம் பொடியா வெட்டி…..
அவரு சுருட்டி கொடுத்த
அஞ்சு ரூபாய
அப்பா முதுகு வளைஞ்சு
வாங்கும் போது
ராஜ ராஜ சோழன் சிலைய செய்தவன்
பிச்சையெடுத்தது போல இருந்தது (பக்கம்22)
இவ்வாறு வெளிப்படுத்துகிறார் கவிஞர்.
ஒரு பிரிவினர் வேறொரு பிரிவினராக மாற முடியாத நிலையையும், பிறப்பினால் சாதி நிர்ணயிக்கபடுகிறது என்பதையும், அதை பற்றிய ஆதிக்கத்தையும் கவிஞர் மற்றொரு கவிதையின் மூலம் கூறுகிறார்.
பாண்டியனுக்க
பழக்கடையில வச்சு
நான் பழம் வாங்குக
கடையில் தான்
நாசுவ பயலுக்கும் வாங்கணுமான்னு
அக்கானி குமாரதாசு
கேட்டதுனால
வாழைப்பழ குலைய
தூக்கி அடிச்சான்
புலிப்பனம் வெள்ளை குமாரு
போலீசுக்கு போயும்
பிரயோஜனம் இல்லாதுனால
அரேபியாக்கு ஒடி போனாள்
ஆறு வருஷம் கழிச்சு
காரும் வாங்கி
மேட்டுக்கடை முக்குல
இப்ப ஹோட்டலுவச்சிருக்கான்
அன்னா
இட்லி தின்னுட்டு போற
வேலப்பன்
சொல்லிட்டு போறான்
நாசுவலுக்க சட்னியில
அஞ்சாறு மயிரு கிடக்குனு. (பக்கம்24)
மீறல்:
சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் அதிகாரம் நீக்கமற நிறைந்து கிடக்கிறது. அந்த அதிகாரம் தலித்துகளுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டது. இந்த ஆதிக்க கருத்தாக்கங்களை சிதைத்தழிக்க முயலுகிறது தலித்திய எழுத்து முறை. அது மீறலை ஆன்மாகவாக கொண்டுள்ளது.
எப்பொழுதுமே தனக்கான மொழியை உருவாக்காமல் தனக்கான அழகியலை வடிவமைக்க முடியாது என்பதை உணர்ந்து தலித் இலக்கியம் உயிரோட்டமுள்ள பேச்சு மொழியை, அதனுடைய எல்லாவிதமான கூறுகளோடும் பயன்படுத்த முயலுகிறது. பேச்சு மொழிதான் உண்மையான தாய்மொழி, எழுத்துமொழி, செய்கைமொழி. அதிகார வர்கம் அதிகாரம் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மொழி பொதுமொழி, மொழியைக் கையாளுவதிலும் தலித் இலக்கியம் தனித்து இயங்குகிறது. தடுக்கப்பட்ட வார்த்தையாடல்களை உச்சரிக்கக் கூசுகின்ற உயிர்ச் சொற்களை எல்லாம் கவனத்தில் கொண்டு தலித் இலக்கியம் படைக்கப்படுகிறது. இதன் மூலம் அறியப்படாதிருந்த, கவனிப்பாரற்றுக்கிடந்த ஒரு மூடுண்ட உலகம், தமிழ் வாசகர்களின் முன் வரித்துப்போடப்பட்டிருக்கிறது என்கிறார் க.பஞ்சாங்கம். (இன்றைய இலக்கியம் என்பது தலித் இலக்கியமே, பக் -1)
இந்த வகையில் கலைவாணன் அவர்கள் தாயிளி, மயிரு, போன்ற கெட்ட வார்த்தைகளை பல கவிதைகளில் பயன்படுத்தியுள்ளார். கெட்ட வார்த்தை பேச வேண்டும் என்பது கவிஞரின் நோக்கம் அல்ல. அந்த வார்த்தைகளை ஆதிக்க சாதியினர் அவர்களை அதிகாரம் செய்வதற்கும். ஒடுக்குவதற்கும் பயன்படுத்துகிறார்கள் என்பதை காண்பிப்பதற்கும், அவற்றை பயன்படுத்தி வாசகர்களின் கவனத்தை பெற வேண்டும் என்பதும், அதன் மூலம் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது அம்மக்களின் தேவையாகும்.
முடிவுரை:
இ.எம்.எஸ். கலைவாணனின் கவிதைகள் தலித்தியக் கூறுகளைப் பேசும் ஒரு களமாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு கவிதையிலும், தலித்தியக் கூறுகளோடு நாவிதர்களின் வாழ்க்கை நிலை, சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் அவமானங்கள், வேதனைகள், சிக்கல்கள், ஆதிக்க சாதியினரின் கொடுமைகள், போன்றவற்றை ஆசிரியர் தனது சொந்த அனுபவத்தில் நின்று அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார் என்பதை உணர முடிகிறது.
தலித் படைப்பாளர்கள் தலித் மக்களின் வாழ்வியல் சிக்கல்களை இடக்கரடக்கல் இல்லாமல் முரட்டுத்தனத்துடன் நையாண்டிக் கலந்த சொல்லாடல்களுடன் படைத்து வருகின்றனர் என்பதற்கு இக்கவிதை பொருத்தமாக அமைகிறது.
பயன்படுத்தப்பட்ட நூல்கள்:
ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்- கலைவாணன் இ.எம்.எஸ்.
இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும்- முனைவர்.க.பஞ்சாங்கம்
இன்றைய இலக்கியம் என்பது தலித்திய இலக்கியமே-முனைவர்.க.பஞ்சாங்கம்

Leave a comment