நெற்றிக்கண்
ஜி.குப்புசாமியின் மூன்றாவது கண் : நூல் மதிப்புரை
முனைவர் சு.பாத்திமா
துணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை & ஆய்வு மையம்
அரசுக்கல்லூரி, சித்தூர், பாலக்காடு
அலைபேசி: 9400334135
ஜி.குப்புசாமியின் மூன்றாவது கண் – மதிப்புரை
மொழியாக்க கோட்பாடுகளையும் அணுகுமுறைகளையும் பின்பற்றி அயல் மொழிபெயர்ப்பில் முனைப்போடு செயல்பட்டு வரும் அயல்மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான ஜி.குப்புசாமி பல கருத்தரங்கு மேடைகளில் ஆற்றிய உரைகளின் , நேர்காணல்களின் தொகுப்பு நூலே மூன்றாவது கண். இந்நூல் அறிவொளியின் அடையாளமாகக் கருதப்படும் மூன்றாவது கண்களினூடே அயல் மொழி இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களையும் மூல நூல்களையும் உற்று நோக்கியும் அனுபவித்தும் தனது கருத்துக்களை வெளிப்படையாக உணர்த்துவதுடன் அதன் சிக்கல்களையும் போக்குகளையும் எடுத்துரைக்கிறது.
காலச்சுவடு பதிப்பகதாரால் டிசம்பர் திங்கள் 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந் நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளனர். அதன் முதல் பகுதியில் மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி பல கருத்தரங்கு மேடைகளில் பேசிய 9 கட்டுரைகளின் தொகுப்பும் இரண்டாம் பகுதியில் நான்கு நேர்காணல்களையும் உள்ளடக்கியது.
முதல் இயலில் பதிவுசெய்யப்பட்டுள்ள கோவையில் நடைபெற்ற பாரதி 125 ஆம் ஆண்டு விழா, புதுமைப்பித்தன் 100 ஆம் ஆண்டு விழா, சுந்தர ராமசாமி 75 ஆம் ஆண்டு விழா மேடைகளில் வாசித்த ஜி குப்புசாமியின் கட்டுரையில் இருபதாம் நூற்றாண்டின் மொழிபெயர்ப்பில் முன்னோடிகளாக திகழ்ந்த பாரதியார் , புதுமைப்பித்தன் , சுந்தர ராமசாமி ஆகியோரின் பணிகள் குறித்து விரிவாக பேசியுள்ளார்.
பாரதியாரின் மொழிபெயர்ப்புகளில் பகவத் கீதையின் மொழிபெயர்ப்பினை மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு என்று தமது கருத்தை முன்வைக்கிறார். அதனைக் குறித்துக் கூறும்போது “தமிழில் பாரதியின் பகவத் கீதை அளவிற்கு முழுமையான அதே நேரத்தில் இரத்தினச் சுருக்கமான மொழிபெயர்ப்பு வேறு எதுவும் கிடையாது என்றும் மொழிபெயர்ப்பின் நடுவில் எந்த ஒரு விளக்க உரையோ வியாக்கியானியத்தையோ கொண்டு வராமல் ஒரு நீளமான முன்னுரையில் பட்டினத்தார், தாயுமானவர், திருநாவுக்கரசர் ஆகியோர்களது மேற்கோள்களோடு பகவத் கீதையின் சாரம்சம் அது முன் வைக்கும் தத்துவம், வேதம், உபநிடதங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் குறித்தும் , வேதங்கள் மிகப்பழமையான சமஸ்கிருத மொழியிலும் காலத்தால் பின்தங்கிய உபநிடதங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டிருப்பது குறித்தான விளக்கங்களும் கீதை குறித்து மேம்போக்கான தப்பான அபிப்பிராயங்கள் போன்றவற்றையும் விளக்குகிறார் ” என்று மிக மிக நீளமான தொடர் அமைப்போடு ஜி.குப்புசாமி பதிவு செய்கிறார். பாரதி தாகூரின் கதைகளையும் பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் வந்தே மாதரம் கவிதைகளையும் பதஞ்சலியின் யோக சூத்திரத்தையும் அரவிந்தரின் சமூக விடுதலைக் கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார் என்ற செய்தியையும் மேடையில் பகிர்ந்து கொண்டுள்ளார்..
தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகவும் சிறுகதை மன்னனாகவும் திகழும் புதுமைப்பித்தன் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளரும் கூட என்ற செய்தியையும் ஜி குப்புசாமி எடுத்துரைக்கிறார். புதுமைப்பித்தன் ‘ உலகத்துச் சிறுகதைகள்’ எனும் பெயரில் அயல்மொழி சிறுகதைகளை மொழிபெயர்த்து இருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. படைப்பு மனம் அது உருவாக்கும் கதைகளின் உணர்வு தளம் மட்டுமல்ல அது தேர்ந்தெடுத்து வாசிப்பதும் தன் மொழியில் பெயர்த்துக்கொள்ளவும் செய்யும் என்பதற்கு இவரது ஷெகர் ஜாதியின் மொழிபெயர்ப்பைக் கூறலாம் .இது புதுமைப்பித்தனின் ‘சிற்பியின் நரகம்’ கதையை ஒத்ததாக உள்ள சிறுகதையாகும். “இலக்கியப் பிரதி தனது மேற்பரப்பு பிரதியுடன் உட்பிரதி ஒன்றையும் கொண்டிருக்கும் .இந்த உட்பிரதியை வெளியே தானாக கொண்டு வரப்பட்டு விடுமா ? “என்ற அய்யப்பபணிக்கரின் வினாவிற்கு விடை தரும் வகையில் புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார் இவரது அலெக்சாண்டர் குப்ரின் எழுதிய YAMA THE PIT எனும் நாவலின் மொழிபெயர்ப்பு, ஐந்து மேலை நாட்டு நாடகங்களின் மொழிபெயர்ப்பு , மொப்பஸானின் கதைகளின் தழுவல் மொழிபெயர்ப்பு குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் பிறநாட்டு நாகரிக சம்பிரதாயங்கள் மீது உள்ள சந்தேகத்துடனும் பயத்துடனும் கலந்த வெறுப்பைப் போக்குவதற்காக அயல்மொழி மனிதர்களின் பெயர்கள், புறச் சின்னங்கள் பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அப்படியே மொழிபெயர்ப்பில் கொண்டு வந்து புதுமையை புகுத்தியவர் என்பதை ஜி.குப்புசாமி மேடையில் பதிவு செய்திருப்பதை அறிய முடிகிறது. இதில் புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்பில் நிகழ்ந்த சிறு சிறு சறுக்கல்களையும் சுட்டிக்காட்ட தவறவில்லை.
மூன்றாவது கண்ணில் சுந்தரராமசாமியின் மொழிபெயர்ப்பு குறித்து ஜி.குப்புசாமி கூறுகையில் சுந்தர ராமசாமிக்கு வாய்க்கப் பெற்ற தமிழும் மலையாளமும் கலந்த சூழலும் சமகால மலையாள இலக்கிய எழுத்தாளர்களான தகழி சிவசங்கரபிள்ளை, முகம்மது பஷீர் , கேசவதேவ் ஆகியோரது அறிமுகமும் அவரது மொழிக்குரிய அஸ்திவாரமாக அமைந்து சிறந்த பல மொழிபெயர்ப்புகளைத் தமிழ் இலக்கிய உலகத்திற்கு தந்துள்ளது என்பதை கட்டுரையின் வாயிலாக அறிய முடிகிறது. சுந்தர ராமசாமியின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பு மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளையின் செம்மீன் நாவலின் மொழிபெயர்ப்பு எனலாம் . ஜி.குப்புசாமி சுந்தரராமசாமியின் மொழிபெயர்ப்பு திறனை உணர்த்துவதற்காக செம்மீன் நாவலின் பிற மொழிபெயர்ப்புகளை ஒப்பீடு செய்து காட்டுகிறார் மற்றும் செம்மீனின் ஆங்கிலம் , ஹிந்தி மொழிபெயர்ப்புகள் தோல்வியைக் கண்ட மொழிபெயர்ப்புகள் என்றும் சான்றுகளோடு எடுத்துரைத்துள்ளார் . இதற்கு காரணம் மொழிபெயர்ப்பாளர்களின் திறமை குறைவன்று அது அம்மொழி சுமந்து கொண்டிருக்கும் மேற்கத்திய கிறிஸ்தவ கலாச்சார சுமையை இறக்கி வைக்கக் கூடியது அல்ல என்றும் நம் மொழியில் கீழை உணர்வுகளை எவ்வளவு இலகுவாக அளக்க முற்பட்டாலும் ஒரு தூரம் தாண்டிய பிறகு ஒன்று வழமையாக சொற்றொடர்களில் சிக்கிக் கொள்ள நேரும் அல்லது இணையான அல்லது அந்நியமான தளத்திற்கு கொண்டு சென்று விடுகிறது என்று மிக நுட்பமாக ஆய்ந்துரைத்திருப்பது மிகச் சிறப்பு. சுந்தர ராமசாமியின் கவிதை மொழிபெயர்ப்பை ஆய்வு செய்த ஜி குப்புசாமி அவரது கவனமான தேர்ந்தெடுப்பு என்கிறார். Catching the Letter by the spirit of it என்ற கூற்றின் படி ஒரு மொழிபெயர்ப்பாளன் சரியான வார்த்தையை மட்டும் தேர்ந்தெடுப்பதில்லை அந்த வார்த்தையையும் வாழ வைக்க செய்கிறார் என்று தமது கருத்தை பதிவு செய்கிறார் .
மொழிபெயர்ப்பில் மிகக்கடினமான மொழிபெயர்ப்பு கவிதை மொழிபெயர்ப்பு என்று கூறி அதற்கு காரணம் ” சில கவிதை வரிகளில் மொழிக்கு வசப்படாமல் இருக்கும் சூட்சமங்களையும் அழகுகளையும் மொழிபெயர்க்க முடியாமல் போய்விடுகிறது என்றுரைக்கிறார் . மேலும் எந்த ஒரு மொழியும் அது விளைந்த மண்ணையும் கலாச்சாரத்தையும் சார்ந்தே உருக் கொண்டிருக்கிறது .வேறொரு அந்நிய மொழியில் மூலப்படைப்பை அதன் அடி வேரோடு பெயர்த்து செய்வது சாத்தியமே இல்லை. . மொழிபெயர்க்கப்படும் மொழி கலாச்சாரப்பின்னணியும் மொழி இலக்கணம் சார்ந்த நுட்பங்களும் மூலப்படைப்பின் படைப்பெழுச்சியையும் உணர்வுதளத்து எதிர்வினைகளையும் மொழிபெயர்ப்பில் நூறு சதவிகிதம் தூய்மையாக கொண்டு வர இடமளிப்பதில்லை. கவிதைவரிகளுக்கிடையே கவிஞர் உண்டாக்கும் மௌனமும் வாக்கிய அமைப்புகளில் பொதிந்திருக்கும் நுட்பங்களும் மூலமொழியின் கலாச்சாரத்தை சார்ந்தே இருக்கும் பட்சத்தில் மொழிபெயர்ப்பு பிரெண்டன் கன்னலி கூறுவதைப் போல கவர்ச்சியான தோல்வியாக முடிகிறது” என்று மிக மிக நீளமான தொடரில் ஒரே மூச்சில் தனது கருத்தைப் பதிவு செய்திருப்பதை காண்கிறோம். இந்த தடைகளையெல்லாம் ஓரளவு கடந்து வெற்றி கண்ட மொழி சுந்தர ராமசாமியின் கவிதை மொழிபெயர்ப்பு என்றும் கூறுவதை காண முடிகின்றது.
இரண்டாவது இயலில் நவீன தமிழ் இலக்கியத்தில் இந்திய மொழிகளிலிருந்தும் பிற நாட்டு மொழிகளிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களையும் மறுவாசிப்பு செய்து இந்த அயல் மொழிபெயர்ப்புகள் நவீன தமிழ் இலக்கியத்திற்கு புதிய பாதைகளைத் திறந்து விட்டிருப்பதையும் அப்படைப்புகளைத் தமிழ் நிலத்தில் பொருத்தி வைத்து நம்முடைய கலாச்சாரத்தையும் கலாச்சாரத்தையொட்டிய நம் சரித்திரத்தையும் நம் வாழ்வையும் நமது மரபு பார்வையில் இருந்து முன்னேறி தமிழ் நாவல்களில் புதிய கதை கூறல் முறைகளையும் புதிய மொழி நடையையும் முயற்சி செய்து பார்த்து அதில் வெற்றி கண்டுள்ளனர் என்றும் பதிவு செய்கிறார் .
அயல்மொழிபெயர்ப்பு நூல்களின் தாக்கத்தால் படைக்கப்பட்ட நூல்களுக்கு மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் ,கல்கியின் அலையோசை, தியாக பூமி, சிதம்பரசுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம், ரா.சு நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் போன்றவற்றை சான்றாக்குகிறார். மேலும் சரத் சந்திரனின் நாவல்களும் காண்டேக்கரின் எழுத்துக்களும் மு.வரதராசன், நா.பார்த்தசாரதியின் படைப்புகளில் பிரதிபலிக்கிறது என்றும் அலெக்சாண்டர் டூ மாஸின் The three musketeers என்ற நாவலின் தாக்கம் கா.சி வெங்கடமணியின் தேசபக்தன் நாவலிலும் அகிலனின் வெற்றித் திருநகர் நாவலிலும் கல்கியின் பார்த்திபன் கனவிலும் வெளிப்படுகிறது என்று நுட்பமாக ஆய்துரைத்துள்ளார் .
தமிழிலுள்ள வட்டார நாவல் வகைகளிலும் அயல் மொழிபெயர்ப்பு நாவல்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு Pearl S Buck க்கின் தி குட் எர்த் , ஆர் சங்கரதாஸின் மண்ணாசையிலும் ஆர் .சண்முகசுந்தரத்தின் நாகம்மாளிலும் தென்படுவதைச் சுட்டி நிறுவுகிறார்.
தமிழிலக்கியப்பரப்பில் மிகுதியான தாக்கத்தை ஏற்படுத்திய அயல் மொழிபெயர்ப்புகள் இரஷ்ய மொழிபெயர்ப்புகளே என்று கூறி மாக்ஸிம் கார்க்கியின் தாய் , லேவ் தால்ஸ்தோயின் புத்துயிர்ப்பு போன்ற நாவல்களின் தாக்கம் தொ.மு.சி இரகுநாதனின் பஞ்சும் பசியும், கி.ரா.வின் கோபல்ல கிராமம் போன்ற இனவரைவியல் நாவல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பறை சாற்றுகிறார் ஜி.குப்புசாமி. பா. வெங்கடேசனின் எழுத்துக்களில் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் பாதிப்பும் ஏற்பட்டிருப்பதைக் கூறும் மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி , புதுயுக அமெரிக்கா கொலாஸ் எழுத்துக்களின் எதிர் குரலை சாருநிவேதிதாவின் குரலில் வெளிவரத் தொடங்கின என்றும் இந்நூலில் பதிவு செய்கிறார். இவ்வாறு அயல் மொழிபெயர்ப்புகளை வாசித்து தனக்குள் உள்வாங்கி படைப்புகளைப் படைத்தவர்கள் வெளிப்படையாக கூறுவதில்லை ஆனால் விதிவிலக்காக தேவி பாரதி இருப்பதையும் தேவி பாரதியே தமது நிழலின் தனிமை நாவலின் முன்னுரையில் தனது நாவலிற்கு காரணமாக இருந்த நாவல் ஜான் பான்வில்லின் கடல் எனும் நாவலே என்று கூறியிருப்பதையும் எடுத்துரைக்கிறார்.
சாகித்திய அகாடமி தமிழ் பல்கலைக்கழகம் இணைந்து 16 ஆகஸ்ட் திங்கள் 2019-ல் நடத்திய கரத்தரங்கில் தமிழ் நவீன தமிழிலக்கியத்தில் சிறந்தவையாகப் போற்றப்பட்ட அனைத்து எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் ஆய்ந்து அவற்றிலெல்லாம் அயல் மொழிபெயர்ப்புகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளன என்று ஜி.குப்புசாமி ஒரு பெரிய பட்டியலை எடுத்துரைத்து பேசியிருப்பதை காண முடிகின்றது.
மூன்றாவது கண்ணின் மூன்றாவது இயலில் மொழிபெயர்ப்புகளை மட்டும் தேடி வாசிக்கும் வாசகராக குப்புசாமி இருந்திருப்பதை அறிய முடிகிறது. பல அயல் மொழி மொழிபெயர்ப்புகளை முன்வைத்து அதன் சிறப்பம்சங்களையும் எடுத்துரைத்துள்ளார். மிக முக்கியமான படைப்புகள் விளாமெதிர் கொரலென்காவின் கண் தெரியாத இசைஞனையும் லேவ்தால்ஸ்தாயின் புத்துயிருப்பையும் மொழிபெயர்த்த ரா. கிருஷ்ணய்யாவின் எழுத்துத்திறனை வெளிக் கொணருகிறார் . அவர் மொழிபெயர்ப்புத் துறையை தேர்ந்தெடுப்பதற்கு காரணமான படைப்புகள் என்று போற்றுவதையும் காணலாம் .
பிரெஞ்சு மொழியில் அந்துவான் து செந்த் எக்ஸஞ்பெரியால் எழுதப்பட்ட குட்டி இளவரசனை வெ. ஸ்ரீராம், ச.மதன கல்யாணி ஆகியோரின் மொழிபெயர்ப்பு , ஆர்.சிவகுமாரின் மொழிபெயர்ப்பான ஃபிரான்ஸ் காஃப்காவின் உருமாற்றம், சுகுமாரன் மொழி பெயர்த்த துருக்கி நாவலான அஸிஸ் பே சம்பவம் , ஓ.வி.விஜயனின் கசாக்கின் இதிகாசம் போன்றவற்றை சான்றாக்கியிருப்பது ஜி.குப்புசாமியின் வாசிப்பு பரப்பைக் காட்டுகிறது.
அதற்கு அடுத்த இயலில் மொழிபெயர்ப்புகளினூடாக நவீன தமிழ் இலக்கியங்கள் மறுவாசிப்புச் செய்ய வேண்டிய தேவைகளை வலியுறுத்தி செல்கிறார் . பல்வேறு இந்திய மொழிகளிலும் நவீன இலக்கியங்கள் அவற்றின் சகோதர மொழிகளில் பெயர்க்கப்பட்டு வரும் நீண்ட மரபும் நம்மிடையே இருப்பதை உணர்த்தி அதில் மொழிபெயர்ப்பாளர்கள் தம்முடைய கலாச்சார பரிவர்த்தனை செய்வதையும் சுட்டிக் காட்டுகிறார் . மொழிபெயர்ப்பாளர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்ட படைப்பை மீண்டும் மீண்டும் மொழிபெயர்ப்பது தான் என்கிறார் ஜி குப்புசாமி. தன் மொழியின் கலாச்சாரம் சார்ந்த பண்பாட்டு அம்சங்களை அயல்நாட்டு இலக்கியத்தை மொழிபெயர்க்கும் போது சேர்த்துவிடுவதால் மொழிகளுக்கிடையேயான பரிவர்த்தனைகளும் பண்பாடுகளுக்கிடையேயான புரிந்து கொள்ளலும் மறுக்கப்படுகிறது. ஒற்றைப் பண்பாட்டில் அடைத்து விட எழுத்தாளர்கள் முயற்சிப்பதும் புதிய பிறசாத்தியப்பாடுகளை அனுமதிக்காது இருப்பதும் அபாயகரமானதாகும் என்று எச்சரிக்கை விடுகிறார் ஜி குப்புசாமி . இத்தகைய மொழிபெயர்ப்புக்கு அன்னா கரீனினா நாவலை வெ. சந்தானம் மொழிபெயர்த்தைச் சான்றாக்குகிறார் .
”மொழிபெயர்ப்புகள் சந்திக்கும் மற்றுமொரு சவால் அவை ஒரு காலத்தில் ஏற்புடையவையாக இருந்து பிந்தைய காலத்தில் ஏற்புடையதல்லாமல் போய்விடும்” என்ற லாரன்ஸ் வெனுதியின் வார்த்தைகளைக் குறிப்பிட்டு சான்றாக காஃப்காவின் ‘ தி காஸ்டில் ‘ என்ற நாவலைக் குறிப்பிடுகிறார். இலக்கியத்துக்கு நிதானமான வாசிப்பும் கவனமான வாசிப்பும் அடிப்படைத் தேவைகள் ஆகும் . அவ்வாறு வாசிக்கும்போது தான் வாசகனின் வாழ்க்கை அனுபவங்களும் அவன் கற்பனைகளும் இலக்கிய படைப்பின் உயிர்நாடியை தொட்டு விடும்போது அக்கணத்தில் படைப்பாளியும் வாசகனும் அவ்விலக்கியப் பிரதியோடு ஒன்று கலந்து விடுகின்றனர். இலக்கியத்தின் நோக்கம் முழுமை பெறுவது இச்சங்கமத்தில் தான் என்றும் ஜி குப்புசாமி பதிவு செய்கிறார்.
காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும் எனும் தலைப்பில் அமைந்த இயலில் ஜி குப்புசாமி தமது மொழிபெயர்ப்புகளையும் மொழிபெயர்த்த நூல்களைக் குறித்தும் வெளிப்படுத்துகிறார். ஜி.குப்புசாமியின் முதல் மொழிபெயர்ப்பு அருந்ததிராயின் கட்டுரை மொழிபெயர்ப்பே. அருந்ததிராயின் ஸ்மால் திங்ஸ் என்ற நூலை சின்ன விஷயங்களின் கடவுள் என்ற பெயரில் மொழிபெயர்த்து தந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. இம்மொழிபெயர்ப்பின் போது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கடுமையாக உழைக்க வேண்டி யிருந்தது. இம்மொழிபெயர்ப்பை நிறைவு செய்ய 14 மாதங்கள் ஆயிற்று என்றும் தமது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் .
ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளனுக்கும் ஏதேனும் ஒரு உந்து சக்தி யார் மூலமாவது கிடைக்கும் என்பதற்கு ஜி குப்புசாமியை அயல் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபடச் செய்த உந்து சக்தியாக நண்பர் காலச்சுவடு கண்ணன் இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. இவரே அயர்லாந்து நாட்டு இலக்கியங்களைப் மொழிபெயர்ப்பதற்கான உரிமத்தை பெற்று தந்தவர் என்று நன்றி பாராட்டுவதையும் காண முடிகிறது. ஜி குப்புசாமி அயர்லாந்து எழுத்தாளர் பாமுக்கின் தீவிரவாசகர் . இவர்மீது இருந்த பித்து தான் இவரது படைப்புகளைப் மொழிபெயர்க்கத் தூண்டியது என்று கூறி ஜான்பான் வில்லின் Sea என்ற நாவலை மொழிபெயர்த்ததோடு பாமுக்கின் பனி, வெண்ணிற கோட்டை , கருப்புப் புத்தகம் ஆகிய நான்கு நாவல்களை மொழிபெயர்க்கும் உரிமத்தை ஒரே சமயத்தில் காலச்சுவடு கண்ணன் பெற்றுக் கொடுத்திருப்பதை நினைவு கூறுகிறார். அதில் மூன்று மட்டும் மொழி பெயர்த்து முடித்து கொடுத்ததாகவும் பதிவு செய்துள்ளார். ஜி.குப்புசாமி பாமுக்கின் நாவல்களை மொழிபெயர்க்கும் போது ஐயங்களை தீர்த்து வைக்க காலச்சுவடு கண்ணன் பேருதவி செய்திருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஜி. குப்புசாமி நாவலில் வரும் பெயர்ச்சொற்கள் உச்சரிப்பிலிருந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் பாமுக்கு உட்கிடையாக பொதிந்து வைத்திருக்கும் நுட்பங்கள் குறித்து நன்கறிந்த பிறகு மொழிபெயர்த்துள்ளார் என்பதை அறிய முடிகிறது .
மொழிபெயர்ப்பாளனுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான தகுதிகளில் இதுவும் ஒன்று . மொழிபெயர்ப்புப்பணியை ஓர் இயந்திரத்தனமான செயல்பாடாக கருதாமல் முடிந்தவரை மூலப்படைப்புக்கு அருகில் கொண்டு செல்வதற்கும் படைப்பாளியின் குரலையும் படைப்பின் தொனியையும் சிதைக்காமல் மறு உருவாக்கம் செய்வதற்கும், பேருழைப்பு தேவைப்படுகிறது. இது வாசகனுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லையெனினும் பதிபகத்தாருக்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வகையில் காலச்சுவடு பதிப்பகம் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கின்றது என்று பாராட்டுகின்றார் .
மூன்றாவது கண் நூலின் இரண்டாம் பகுதி மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமியின் நான்கு நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. அவரது புகழ் பெற்ற மொழிபெயர்ப்புகளான அருந்ததிராயின் தி மினிஸ்ட்ரி ஆஃப் அட்மோஸ்ட் ஹாப்பினஸ் என்ற நூலை பெரு மகிழ்ச்சியின் பேரவை என்ற மொழிபெயர்த்துள்ளதையும் வெண்ணிற கோட்டை, என் பெயர் சிவப்பு என்ற மொழிபெயர்ப்புகளும் தி சீ எனும் நாவலை கடல் என்று மொழிபெயர்த்த போதும் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து இருப்பதை காண முடிகின்றது. முற்பகுதியில் பல கருத்தரங்க மேடைகளில் பேசியவையே இங்கும் பல இடங்களில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது.
இந்நூலை நிறைவு செய்யும் கனலி நேர்காணல் வழியாக மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமியின் அயல் மொழிபெயர்ப்பு அனுபவங்களும் தற்கால மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை . மூன்றாவது கண் எனும் நூலின் வாயிலாக வாசகர்களுக்கு பல அயல்மொழி நூல்களின் அறிமுகம் கிடைக்கின்றது .மொழிபெயர்ப்பு நுட்பங்களையும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தெரிந்து கொள்வதற்கான ஒரு வாயிலாக இந்நூல் அமைகின்றது .பிறமொழியிலிருந்து தமிழ் மொழிக்கு பெயர்த்த நூல்களை மட்டுமே ஜி குப்புசாமி இந்நூலில் பதிவு செய்திருப்பது சற்று வருத்தமாகவே உள்ளது . பரந்த வாசிப்பு அனுபவமிக்க மொழிபெயர்ப்பாளரான ஜி குப்புசாமி தமிழ் மொழியில் இருக்கும் சிறந்த இலக்கியங்களை அயல் மொழிக்கு கொண்டு செல்லும் பணிகளை செய்துள்ளாரா? செய்கிறாரா? என்ற வினாக்களுடன் எனது மதிப்புரையை நிறைவு செய்கின்றேன்.

Leave a comment