பாட்டொன்று கேட்டேன் 8 :

எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்


ஜி.சிவக்குமார்

இப்போது 50களில் உள்ளவர் என்றால், நீங்கள் நிறையக் கடிதங்களை எழுதியிருப்பீர்கள், வாசித்திருப்பீர்கள். பெரும்பாலான கடிதங்கள் இப்படித்தானே ஆரம்பிக்கும்.

நலம். நலமறிய ஆவல்.

ஒரு திரைப்படப் பாடல் இப்படி ஆரம்பிக்கிறது.

நலந்தானா? நலந்தானா?

சண்முக சுந்தரம், நாதஸ்வரக் கலையின் சிகரங்களில் உலவுபவர் என்றால், மோகனாம்பாள் பரதக் கலையின் அத்தனை உச்சங்களையும் அலட்சியமாகத் தொட்டவர், இருவருக்குமிடையே மோதல்கள் நிறைந்த ஒரு காதல் மலர்கிறது. தன்னுடைய முன் கோபத்தினால், சண்முக சுந்தரம் அவசரப்பட்டு எடுக்கிற தவறான முடிவுகளால் இருவருக்குமிடையேயான உறவு பாதிக்கப்படுகிறது.

ஒரு கட்டத்தில், பொறாமை கொண்ட ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு உயிர் பிழைக்கிற சண்முக சுந்தரம், தன் தம்பியுடன் கச்சேரி செய்கையில், அவருடைய நாதத்துக்கு ஆடுகிற மோகனா, சண்முக சுந்தரத்தின் கைக் காயத்திலிருந்து வழியும் இரத்தத்தைப் பார்த்துத் துடித்துப் பாடுகிற பாடல்தான் அந்த நலந்தானா? பாடல்.

கலைமணி என்ற புனைப் பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி, ஆனந்த விகடனில் 1957-58 ஆம் ஆண்டில், கோபுலுவின் ஓவியங்களுடன் தொடராக வெளி வந்த தில்லானா மோகனாம்பாள் நாவலை, 1968 ஆம் ஆண்டு, ஏ. பி. நாகராஜன் திரைப்படமாக்கினார். சிவாஜி, பத்மினியோடு, நம்பியார், நாகேஷ் என்று ஒரு பெரிய படையே இந்தப் படத்தில் நடித்திருந்தது.

நாவல்களை வெற்றிகரமான திரைப்படங்களாக்குவது இன்று வரை மிகப் பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.

மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த இத் திரைப்படம், 1969 ஆம் ஆண்டின், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருது பெற்றது. 1970 ஆம் ஆண்டு, சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதையும், பத்மினி, சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதையும், சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை மனோரமாவும் பெற்றனர்,  

ஒரு சிறு பிரிவுக்குப் பின்னான சந்திப்பில், அத்தனை தடைகளையும் உடைத்து கடலோடு கலக்கத் துடிக்கும் நதியென, மோகனாவின் உள்ளத்தில் அத்தனை துடிப்பு. சண்முக சுந்தரத்தைப் பார்த்ததில் அத்தனை பரவசம். அவ்வளவும் நொறுங்கும்படியாக, சண்முகசுந்தரத்தின் கைகளில் வழிகிற இரத்தத்தைப் பார்க்க நேர்ந்த கொடுந் துயரில், அவள் அம்மாவின் அதட்டலையும் மீறிக் கேட்கிறாள்.

நலந்தானா? நலந்தானா?
உடலும் உள்ளமும் நலந்தானா?

கவனித்தீர்களா? வெறுமனே உடல் மட்டுமல்ல, எவ்வளவோ சூறாவளிகளால் சுழற்றப்பட்ட உள்ளத்தின் நலனையும் விசாரிக்கிறாள்.

சண்முக சுந்தரத்தின் கையிலிருக்கும் நாதஸ்வரம் அவளது கேள்வியை அப்படியே எதிரொலிக்கிறது.


உடலும் உள்ளமும் நலந்தானா? என்று நாதஸ்வரத்தில் கேட்கையில், சிவாஜி, வாசித்தபடியே, இடது கண்ணைச் சிமிட்டுகிறாரே, ஆத்தீ.

நலம் பெறவேண்டும் நீயென்று

நாளும் என்னெஞ்சில் நினைவுண்டு

இலைமறை காய் போல் பொருள் கொண்டு

எவரும் அறியாமல் சொல் இன்று

என்று பத்மினி பாடியதும், சொல் இன்று என்று நாதஸ்வரத்தில் சிவாஜி சொல்கையில், அருகிலிருந்த பாலையா தன் மறந்து ஆஹா என்று கைகளை உயர்த்துகிற போது நாமும்தானே அவரோடு இணைந்து கொள்கிறோம்.

கண் பட்டதால் உந்தன் மேனியிலே

புண் பட்டதோ அதை நானறியேன்

என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே

புண் பட்டதோ அதை நானறியேன்

கண்கள் கலங்க, விரல்களும் நடுங்க பத்மினி சொல்கையில், அதை எதிரொலிக்கிற சிவாஜியின் கண்கள் கலங்கி, வழிகின்ற கண்ணீர் நம்முடையதும் அல்லவா?

புண் பட்ட சேதியைக் கேட்டவுடன்

இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்?

என்று பத்மினி தவிக்க, யாரறிவார்? என்று நாதஸ்வரம் சொல்வது எத்தனை அழகு.

பெருந் துயரில் துவங்குகிற பாடல் இப்படி நம்பிக்கையோடு முடிகிறது.

நடந்ததெல்லாம் மறந்திருப்போம்

நடப்பதையே நினைத்திருப்போம்

பொருத்திருப்போம்

காலம் மாறும் சந்திப்போம்.

இந்தப் பாடலில் நான் மிகவும் வியக்கும் ஒரு விஷயம் ஒன்றிருக்கிறது. இந்தப் பாடலில் சிவாஜிக்கு இணையாக நாதஸ்வரம் வாசிக்கும் ஏவிஎம் ராஜன், நட்டுவாங்கம் செய்யும் தங்கவேலு, மேளம் வாசிக்கும் பாலையா, மிருதங்கம் வாசிக்கும் ராமச்சந்திரன், ஒத்து ஊதும் கருணாநிதி, மகளின் நாட்டியத்தை ரசிக்கும் அதே நேரத்தில், சண்முக சுந்தரத்துடனான அவளது உரையாடல்களை வெறுக்கும் தாயாக சி. கே. சரஸ்வதி என ஒரே மேடையில் எத்தனை, எத்தனை பெரிய ஜாம்பவான்கள் அமர்ந்திருக்கிறார்கள் கவனித்தீர்களா?

சிங்கார வேலனே தேவாவைப் போலவே, இந்தப் பாடலிலும் பெண் குரலும், நாதஸ்வரமும் அப்படி இழைகின்றன.

அது இருக்கட்டும். அங்கே பார்த்தீர்களா? ஒருவரையொருவர் ஏமாற்றியபடி சண்முக சுந்தரமும், அவருடைய குழுவினரும் எங்கோ போகிறார்கள். நட்டுவாங்கமும், மிருதங்கமும் ஒலிக்கிறது. வாருங்கள். நாமும் போகலாம்.


ஒரு தூணின் பின்புறம் மறைந்து சண்முக சுந்தரம் பார்ப்பதை, நடனமாடும் மோகனா பார்த்துக் கேட்கிறாள்.

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?
அழகர் மலை அழகா?
இந்தச் சிலை அழகா?

சண்முக சுந்தரம் மறைந்திருந்து பார்ப்பதை, மோகனா எப்படி அறிந்தாள்? இந்தக் கேள்விக்கான விடையை, மோகனாவே சொல்வதைப் பாருங்கள்.

எங்கிருந்தாலும் உன்னை
நானறிவேன் உன்னை
என்னையல்லால் வேறு யாரறிவார்?

பாவை என் பதம் காண நாணமா
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா
மாலவா, வேலவா, மாயவா, சண்முகா

என்றதும் சிவாஜி, அதிர்வாரே, அடடா.

நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன்

என்ற வரிகளைக் கேட்டதும் பத்மினியின் தாயான சி. கே, சரஸ்வதி குழம்புகிறார்.

அவர் குழம்பட்டும்.

மோகத்திலே என்னை மூழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்று, கள்வனைப் போல்
மாலவா, வேலவா, மாயவா, சண்முகா

புரிய வேண்டியவருக்கு புரிந்து விடுகிறதே. அது போதாதா?

கிரிக்கெட்டில் ஒரு புறம் கங்குலி அடித்து ஆட, மறுபுறம் ரோகித் சர்மா அமைதியாக  வேடிக்கை பார்ப்பதைப் போல், இந்தப் பாடல் முழுக்க பத்மினி, ராஜாங்கம் நடத்த, சிவாஜி பார்வையாளராகவே இருப்பார்.

அலங்கார பூஷிதையாய் அமர்ந்து நடனத்தை ரசிக்கும் ஜில் ஜில் ரமாமணி மனோரமா, பத்மினியின் நடனத்தோடு, அவரையும் ரசிக்கும் மைனர், அவரை முறைக்கும் ஒருவர், பாடலை மெய் மறந்து ரசித்து அருகிலிருக்கும் பெண்ணின் மேல் மேளம் வாசிக்கும், பின்னால் நிற்பது சிவாஜி என்று தெரிந்ததும் சத்தமில்லாமல் இடத்தை மாற்றும் பாலையா என ஒரு பாடலில் எத்தனை சுவாரஸ்யங்கள்.

இரண்டு பாடல்களிலும் பெண் குரல் மட்டுந்தான். ஆண் வெறும் பார்வையாளன்தான்.

கண்ணதாசனின் வரிகளும், கே. வி. மகாதேவனின் இசையும், சுசீலாம்மாவின் குரலும் அப்படியே நம்மைச் சொக்க வைக்கின்றன இல்லையா?

செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனிரசமும் என்ற பாடல் வரிகளுக்கு வாயசைக்கையில், பாடிக் கொண்டே, பாடல் வரிகளைப் பற்றிக் கவலைப்படாமல் உதட்டைக் கடிக்கும், நம்ம வாத்யார் மாதிரி, பத்மினியும் உதட்டைக் கடிக்கிறார்,

இன்னொரு இடத்தையும் கவனியுங்கள்.

ஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல் என்று பாடியபடி, கைகளைக் கட்டிக் கொண்டு தூணில் சாய, கல் குதிரை எனக் காட்டப்படும் அட்டைக் குதிரை, பத்மினியின் பாரம் தாளாமல் அசைகிறது.

அய்யா சாமிகளே, இப்போது கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி என்று சொல்கிறீர்களே, இந்தத் திரைப்படத்தில் சிவாஜிக்கும், பத்மினிக்குமிடையில் அது எத்தனை அழகாக பதிவாகியிருக்கிறது என்பதைப் பாருங்கள்.

சிவாஜியையும் பத்மினியையும் இணைத்து நிஜ வாழ்விலும் எத்தனையோ கதைகள். ஒரு முறை தொலைக்காட்சியில் பத்மினியம்மாவின் பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன், முடிந்ததும் அருகிலிருந்த என் அப்பா சொன்னார். கடைசி வரைக்கும் சிவாஜியப் பத்தி ஒண்ணுமே சொல்லலையேடா.

Leave a comment

Trending