பொறாட்டுகளி – ஒரு வட்டாரக்கலை
முனைவர் க.உமாமகேஸ்வரி
முன்னுரை
சமுதாயத்தின் உணர்வுவெளிப்பாடாக கலை இலக்கியங்கள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு சமூகமும் தனக்கே உரித்தான பண்பாட்டு அடையாளங்களைத் தங்களின் கலைவடிவங்களில் வெளிக்காட்டுகின்றன. கேரள மாநிலம் பல்வேறு சமூகங்களின் கலப்பிடமாக இருந்துவருகிறது. அந்தச் சமூகங்கள் அதன் கலைவடிவங்களை இயல்பு மாறாமல் இன்றளவும் காப்பாற்றி வருவதாலேயே சர்வதேச அளவில் பேசப்படும் சிறப்பைப் பெற்றிருக்கின்றன.
கேரள மாநிலத்தை நிலவியல் அடிப்படையில் தென்கேரளம், வடகேரளம் என இரண்டாகப் பிரிக்கலாம். ஏராளமான மலைப்பகுதிகளையும் இனக்குழுக்களையும் கொண்டுள்ள வடகேரளம் கலைவளர்ச்சியில் தென்கேரளத்தைவிடச் செழுமை பெற்றது. வடகேரளத்தின் ஒரு பகுதியான பாலக்காடு மாவட்டம் அதன் தனித்த கலைவடிவங்களுக்காகப் பேசப்படும் சிறப்புடன் உள்ளது. பாலக்காடு மாவட்டத்திற்கே சொந்தமான “பொறாட்டுகளி” ஒரு கலைவடிவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டாரக்கலை ஆகும்.
பொறாட்டு, பொறாட்டுகளி, பொறாட்டுநாடகம் எனப் பலபெயர்களில் அறியப்படுகிறது. இந்த வட்டாரக்கலை ஒரு நாடக வடிவம் என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
“பொறாட்டுகளி”யின் நோக்கம்
முழுமையாக பொழுது போக்குக்காகவே நடத்தப்படுகிறது. பார்வையாளர்கள் ரசிக்கவும் சிரிக்கவும் மட்டுமல்லாமல் சமூகத்தின் ஒழுக்கக்கேடுகளைச் சுட்டிக்காட்டிச் சிந்திக்கவும் இக்கலைவடிவம் பயன்படுகிறது.
ஆட்டம் நடக்கும் காலம்
“பொறாட்டுகளி” மார்கழி, தை மாதங்களடங்கிய இளவேனிற் காலத்தில் பெரும்பாலும் நடத்தப்படுகின்றது. காரணம் இது அறுவடைமுடியும் காலம். இதை நடத்தும் பாணர்கள், செறுமர்கள், பறையர்கள் போன்ற இனத்தவர்கள் வேலைகள் முடிந்து ஓய்வு கொள்ளும் காலமும் இதுவேதான்.
நிகழிடம்
“பொறாட்டுகளி” கோவில் விழா நாட்களிலும், சிறப்புக்குசிய நாட்களிலும் (எ.கா புத்தாண்டு தினம்) நடத்தப்படுகிறது. பாலக்காடு மாவட்டத்தின் சிறிய ஊர்களில் கோவில் திருவிழாக்களுக்கு நிகராக இது விளங்குகிறது. கோவில்களுக்கு அருகிலுள்ள நெல் அறுத்த வயல்களே ஆட்டம் நடக்கும் அரங்கமாக மாறுகின்றன. இரவு நேரங்களில்தான் ஆட்டம் நடக்கும்.
வடிவம்
“பொறாட்டுகளி” யில் உரையாடல், பாட்டு இரண்டின் வழியாகவும் கதை சொல்லப்படுகிறது. சோத்யக்காரன் (கேள்வி கேட்பான்) ஒரு கேள்வி கேட்பான். அதற்கான விடையினைப் பாத்திரம் கதையாகப் பாடும். இப்படி கேள்வி பதில் என்ற வடிவத்திலேயே நாடகம் தொடரும்.
பாத்திரங்கள்
“பொறாட்டுகளி” யில் தாசி, வண்ணான், வண்ணாத்தி குறவன், குறத்தி, செறுமன், செறுமி, கவரா, கவரச்சி, சக்கிலியன், சக்கிலிச்சி, பூக்காரி, அவி ஆகியவை முக்கியமான வேடங்களாக நடிக்கப்படுகின்றன. “பொறாட்டுகளி” முழுவதும் வரும் சோத்யக்காரன் முக்கியப்பங்கு பெறும் பாத்திரம். ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாய்த் தோன்றும் பகுதிகளை ஒன்றிணைத்துக் கதையில் ஒரு தொடர்பை ஏற்படுத்துவது சோத்யக்காரனின் வேலை. பார்வையாளன் நிலையில் வரும் சந்தேகங்களையும் சோத்யக்காரனே கேள்விகளாகக் கேட்டு காட்சியில் ஒன்றிப்போகச் செய்கிறான். நடிப்பவனுக்கும் பார்வையாளனுக்கும் பாலமாகச் சோத்யக்காரன் செயல்படுகிறான். இதில் ஆண்களே பெண் வேடம் ஏற்று நடிப்பார்கள்.
இசைக்கருவிகள்
“பொறாட்டுகளி”யின் கதைகளைப் பாடல்களாகப் பாடும் போது மிருதங்கம், செண்டை, ஜால்ரா, ஆர்மோனியம் போன்றவை பின்னணி இசைக் கருவிகளாக இருக்கும்.
மொழி
“பொறாட்டுகளி”யில் பயன்படுத்தப்படும் மொழிநடை சாதாரண மக்களின் பேச்சுமொழியாகயே இருக்கிறது. உயர்கலைகளுக்குரிய மேல்நிலையாக்கம் (sanskritisation) இதில் நடக்கவில்லை. ராவணன் சீதையை எடுத்துப் போனதை “மண்ணொடு கொண்டு போனான்” என்று கம்பன் கூறுவது போலவே “பூமி பிளர்ந்து கயிற்றி” என்று பாடுகிறார்கள்.
உள்ளடக்கம்
“பொறாட்டுகளி”க்கான பாடல்களில் உள்ளடக்கங்களாக இராமாயண, பாரத கிளைக் கதைகள், பாலக்காடு மாவட்ட நிகழ்ச்சிகள் போன்றவை அமைந்திருக்கின்றன. 1950-க்குப்பின் ஏற்பட்ட கம்யூனிஸ்ட் இயக்க எழுச்சியோடு பொறாட்டுகளிக்கு இன்னொரு பரிமாணம் கிடைத்தது. அதுவரை இருந்த உள்ளடக்கங்கள் மாறி சமூகத்தின் உயர்நிலையிலுள்ளவர்கள் செய்யும் அக்கிரமங்களை அடையாளம் காட்டும் புரட்சிகரக் கருத்துக்கள் பாடல்களாயின.
பொறாட்டுகளி”க்கு கதைகளைப் பாடலாக்கித் தருவதில் பாணர் என்ற இனத்தினரின் பங்கு முக்கியமானது. இயல்பாகவே பாட்டுக்கட்டும் திறமையும் மொழியறிவும் பெற்றவர்களாக பாணர்களே இருந்தனர். பல இனங்களைச் சேர்ந்த குழுக்கள் “பொறாட்டுகளி” யை நடத்தினாலும் பாடல்கள் பாணர்களுடையதாகவே இருக்கும். முன்பு பாடல்கள் மட்டுமே பாடிய பாணர்கள் நடிக்கத் தொடங்கிய போது பிறருடன் சண்டை ஏற்பட்டது. இதைக் கேட்ட “இல்லுவமன தம்புரான்” “பாணனு ஏது வேஷம் கெட்டாம்” (எந்த வேடம் வேண்டுமானாலும் போடலாம்) என்று பட்டயம் எழுதிக் கொடுத்ததாக ஒரு செய்தி உண்டு. நகைச்சுவை “பொறாட்டுகளி”யில் நகைச்சுவை என்பது பாமரத்தன்மையுடையது. சோத்யக்காரன் அந்தந்தக் காலம், இடம், மக்கள்நிலை போன்றவற்றைக் கணக்கிலெடுத்து நகைச்சுவையாகக் கேள்வி கேட்பான். பாத்திரங்கள் தம்மிடையே வரும் உரையாடலில் பாலியல் கலந்த கொச்சையான நகைச்சுவையை வெளிப்படுத்துவார்கள், “கெட்டவார்த்தைகள்” என்று படித்த, உயர்வர்க்கம் தள்ளிவைக்கும் வார்த்தைகள் சாதாரணமாகப் பேச்சில் இடம்பெறும். இது இரவுமுழுவதும் பார்வையாளர்களைக் (பெரும்பாலும் ஆண்கள்) கட்டிப்போடும் கவர்ச்சி கொண்டதாக இருக்கும். உரையாடலில் மட்டுமே நகைச்சுவையைக் காணமுடியும். நாடகத்தில் வரும் கதைப்பகுதிகளில் நகைச்சுவைக்கான கூறுகளே இல்லை எனலாம். “பொறாட்டுகளி” யின் பிரிவுகள் பொறாட்டு என்பது “பொறாட்டுகளி” யிலிருந்து சிறிது மாறுபடும். இதில் சோத்யக்காரன் பாத்திரம் இருக்காது. இதில் வரும் பாத்திரம் மலைவேடன், முக்குவன், மாப்பிள்ளை, ஜோதிடன், தட்டான், பட்டாணி, யோகி போன்றவை. இந்தப் பொறாட்டு பாலக்காட்டைத் தாண்டி பையனூர், நீலேஸ்வரம் போன்ற இடங்களிலும் நடத்தப்படுகிறது. ஆடும்முறை “பொறாட்டுகளி” பல குழுக்களால் நடத்தப்படுகிறது. உறுப்பினர்களின் எண்ணிக்கை குழுவைப் பொறுத்து மாறுபடும். குறைந்தது 5 பேர்களாவது இருப்பார்கள். ஒரேவிதமான காலடிவைப்புகள் உண்டு. கதைபாடும் முறைக்கேற்பவும். பாத்திரத்தின் உணர்ச்சி வெளியீட்டிற்கேற்பவும் காலடிவைப்புகள் மாறும். நடித்தல் என்பது இதன் ஒரு பகுதி. “பொறாட்டுகளி” நடக்கும் நாளின் மாலை நேரத்தில் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புச் செய்யப்படும். இது ‘கேளிகொட்டு” எனப்படும். முதலில் வண்ணாத்தி அரங்கத்திற்கு வந்து குரு, கணபதி, சரஸ்வதி, இஷ்ட தெய்வங்கள், இறுதியாக சபையோரையும் வணங்கும் ஒரு விருத்தத்தைப் பாடுவாள். கடவுள் வாழ்த்து குழுக்களிடையே மாறுபடும். அடுத்து சோத்யக்காரனின் கேள்வியோடு நிகழ்ச்சி தொடங்கும். மற்ற பாத்திரங்களின் அறிமுகம் நடக்கும். ஒரு கதையை ஒரேநாள் நடத்தாமல் பாகம் பாகமாகவே நடத்துவார்கள். “சீதயக் கொண்டு வருவான் போய காரணம் கேட்கணும் இந்நு” பொறாட்டுகளியில் தொன்மக்கூறுகள் தெளிவான சமூகஅமைப்பு இல்லாத மக்கள்குழு தனக்கென தொன்மங்களைக் கொண்டுள்ளன. தொன்மம் உருக்கொள்ளுதல் என்பது நாட்டுப்புறக்கதைகளில் தவிர்க்க முடியாத ஒரு கூறாகும். அறிவுபூர்வமான மனிதச் செயல்பாடுகளின் விளைவல்ல தொன்மங்கள். அவை மனிதனின் அடிமனதில்தான் தோற்றம் கொள்கின்றன” என்கின்றனர் பிராய்டு போன்ற உளவியலாளர்கள் (கோவிந்தன், கோவிந்தன்ட உபன்யாசங்கள், ப.342). இதையே, “மனிதன் சிந்திக்கத் தொடங்கு முன்னரே அவனுக்குள் ஏற்பட்ட மனவிகாரங்களே தொன்மங்கள்” என்கிறார் லிலிபுருஸ் (மேற்கோள், மேலது ப342) ஒவ்வொரு தொன்மத்திற்கும் அது உருவாகக் காரணமான அடிப்படை நிகழ்ச்சி என்பது மனித சமுதாய வரலாற்றில் வெரு தொலைவு பின்னோக்கிப் போகும் போது கண்டெடுக்க முடியும். அந்த மூலநிகழ்ச்சி பரம்பரையாகக் கைமாற்றப்படும் போது மூல நிகழ்ச்சிக்கு ஏற்படும் வளர்ச்சிதைமாற்றமானது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாகவும் வியப்பாகவும் இருக்கிறது. தினசரி வாழ்வில், தான் எதிர் கொள்கிற நிகழ்வுகள் குறித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வராமல் மனிதனால் வாழமுடியாது. அந்தக் குறிப்பிட்ட நிகழ்வு பற்றி அறிவின் துணை கொண்டு காரணகாரியங்களை உண்டாக்க முடியாத போது கற்பனையின் துணையோடு மனிதசெயலுக்கு மீறியதாக சம்பந்தப் படுத்துகிறார்கள். பிரபஞ்ச நடைமுறைகளை அறிவோடு சேர்த்து ஆராய்ந்தறிய முடியாத நிலையில் தொன்மங்கள் தோற்றம் கொள்கின்றன. “பொறாட்டுகளி”யில் வண்ணார் இனம் பற்றிய ஒரு கதை உண்டு. ஒரு வண்ணான் துணி துவைப்பதைப் பார்த்த ஆசாரிப் பெண்ணொருத்தி, அவனிடம், “கல்லைச் சாய்வாக வைத்து அடிச்சுத் துவைச்சு கஞ்சியும் நீலமும் போட்டுக் காயவைத்துக் கொட்டி கொண்டு அடிச்சுத் தேய்த்து மடி” என்று சொல்லித்தந்து போகிறான். அந்தமுறை சலவையைப் பார்த்த ‘தம்புரான்’ “இது யாருடைய சலவை” என்று விசாரிக்கும் போது பெண்ணைப் பற்றிச் சொல்கிறாள் வண்ணான். “அவளையே திருமணம் செய்” எனத் தம்புரான் உத்தரவு போடத் தட்டமுடியாத ஆசாரிமாரும் பெண் கொடுக்கச் சம்மதிக்கிறார்கள். கல்யாணதினம் கல்லிலே பந்தல் போட்டு வண்ணார் இனம் வந்து இருந்ததும் பாவையந்திரம் மூலம் பந்தலை போட்டு விழச்செய்து கொன்றுவிட்டார்கள். அதில் தீண்டாதவளாயிருந்த வண்ணாத்தியொருத்தி திருவரங்கன் என்ற பாணனோடு கூடி ஒரு ஆணும் பெண்ணும் பெற்றெடுத்து வண்ணார் இனத்தை விருத்தி செய்ததாகக் கதை சொல்கிறார்கள். (திருவரங்கன், தம்புரானை அதிகாலையில் பாட்டுப்பாடி எழுப்புபவன்) வண்ணார் இறந்த காரணம் தெரியாத போது கல்பந்தம் என்ற கற்பனை கலந்து காரணம் தேடிக்கொண்டனர். வேலைக்குப் போனவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த பாடலில் கூட வேலைக்குப் போகும் போது, “கந்தும் கரியும் சகனம் வந்நு” என்று சகுனம் பற்றிய நம்பிக்கையைப் பேசுகிறார்கள். கம்யூனிசத் தாக்கம் பாணன் தனக்குத் தெரிந்த புராணக்கதைகளைப் பாட்டுகளாக்கித் தன் மக்களுக்கு எடுத்துச் சொல்லப் பயன்பட்ட “பொறாட்டுகளி” கம்யூனிஸ்ட் இயக்கத்தாரின் கையில் வந்தபோது புரட்சிகரமாகச் செயல்பட்டது. சாதாரண மக்களிடம் விழிப்புணர்வைக் கொண்டுவர அவர்களின் தொடர்பு சாதனங்களாகிய கலைவடிவங்களிலேயே பிரச்சினைகளைப் பேசுவது என்ற செயல்பாட்டின் மூலமே கம்யூனிஸ்ட் இயக்கம் தன் எழுச்சியைச் சாதித்துக்கொள்ள முடிந்தது. “பொறாட்டுகளி” ஒரு சிறந்த பிரச்சார வடிவமாகக் கட்சியின் தேவையை நிறைவேற்றி வைத்தது. அதுவரை எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்றே தெரியாமலிருந்தவர்கள் தங்கள் உரிமைகளை, “நாழியரிபோலும் தந்நில்ல முதலாளி நாலணா காசுபோலும் தந்திட்டில்ல ஒந்நாலு தொழிலாளிகள் முதலாளிக்கிந்நல்லே ஓர்ம வந்து” என முதலாளிவர்க்கத்தின் மோசமான அடுத்த பக்கத்தைப் பொறாட்டுகளியில் பேசினர். நீலி என்ற பெண்ணைக் கூடிய தம்புரான், அவள் தாயான போது தலைமறைவாகிறார். நீலியைச் சாதியிலிருந்து தள்ளி வைக்கிறார்கள். அவள் குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள். தங்களைச் சார்ந்த பெண்ணின் இந்த நிலையை, “கேக்குவின் கூட்டரே நாட்டிலே ஜன்மிமார் செய்யந்ந அக்ரமங்கள்” என எல்லோரிடமும் எடுத்துப் போகிறார்கள். “பொறாட்டுகளி” யில் தலித்கூறுகள் “பொறாட்டுகளி”யில் தலித் பண்பாட்டின் கூறுகள் விரிவாக ஆராயுமளவு உள்ளன. இப்பொழுதுள்ள பொறாட்டுகளியைப் பார்க்கும் போது அதில் தலித்துகளின் எதிர்ப்பண்பாடு என்ற நிலையின் கூறுகளைக் காணமுடியும். இதற்குக்காரணம் கம்யூனிச இயக்கம் தந்த அறிவே ஆகும். அறிவைத் தாண்டிய (irrational) உந்துதலின்படி வாழ்வது எப்போதுமே வித்தியாசங்களைத் தாண்டி ஒருங்கிணைவை நோக்கிச் செல்லுவது, விலக்குகளை மீறுவது, இன்பக்கொள்கைப்படி களிப்பாக வாழ்வது, மிதமிஞ்சிய நுகர்வு (Excess) கூட்டு வாழ்வைப் போற்றுவது” என்று எதிர்நிலைப் பண்பாட்டைப் பற்றி ரிச்சர்டு லன்னாய் (Richard Lannoy) கூறியிருக்கிறார் (ராஜ்கௌதமன். தலித் பண்பாடு, ப.29) “பொறாட்டுகளி”யில் வரும் வண்ணாத்தி நான்கு பேரை மணந்த கதை வருகிறது. இன்பக்கொள்கை என்பதே அவர்களின் கொச்சையான நகைச்சுவையாக வெளிப்படுகிறது. தலித்துகளின் எழுச்சிக்காகச் செய்ய வேண்டியன பற்றி ராஜ்கௌதமன் பின்வருமாறு கூறுகிறார். “தலித் மக்களிடம் தன்னம்பிக்கைகளை வளர்க்கும் முகமாக மேற்சாதியார்களின் அசிங்கங்களை, கீழ்மைகளை அம்பலப் படுத்தவேண்டும்; அதோடு தலித் இளம் தலைமுறையினரின் ஆற்றலை வளர்ச்சியை எடுத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் (தலித் பண்பாடு, ப.30). இதைப் பொறாட்டங்களி நல்ல முறையில் சாதித்துள்ளது.
கூலிகொடுக்காத முதலாளியை,
“தாப்பினை தல்லிப் பொளிக்கும் ஞங்கள்”
என மிரட்டுமளவு கொண்டு சேர்த்திருக்கிறது.
“வெட்டிப்பணி செய்யனமெந்நு முதலாளி பறஞ்சு
வெறும்பணி செய்யுலாந்நு தொழிலாளி உறச்சு”
என்று வரும் வரிகளில் எதிர்கலகப் பண்பாட்டினை அடையாளம் காண முடிகிறது.
வட்டார நிகழ்ச்சிகள்
பாலக்காட்டில் தேர்தல் வந்தது. மலம்புழா அருகில் ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்குப் போன ஆண்களும் பெண்களும் நீரில் மூழ்கி இறந்தது போன்ற நிகழ்ச்சிகளும் பொறாட்டுகளியின் உள்ளடக்கங்களாயிருக்கின்றன. எனவே பொறாட்டுகளி ஒரு வரலாற்றுப் பதிவான ஆவணமாகவும் செயல்படுகிறது.
முடிவுரை
பொறாட்டுகளி தாழ்த்தப்பட்ட மக்களின் கலையாகவே இருந்து வருகிறது. நாட்டுப்புறக்கலைகள் குறித்த ஆய்வு என்பது ஒரு சமுதாயத்தின் கலை வெளிப்பாடுகளை ஆய்ந்தறிகிற சிந்தனை. ஆதலால் இன்றைக்கு நிகழில் இருக்கிற கலைவடிவங்களோடு செய்யும் அணுகுமுறை கூட அந்தக் குறிப்பிட்ட சமுதாயத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் குறித்துள்ள வேர்களைத் தொட்டறிகிற முயற்சியாகவே உள்ளது. பொறாட்டங்களியை இன்னும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தும் போது தலித் பண்பாட்டின் வேர்களைக் கண்டறிய முடியும்.

Leave a comment