மழை கவிதைகள் – இளையவன் சிவா

சிறுமழை பிடிக்கையில் 
அலறுகிறது அலுவலகம் 
வீடடையும் நேரத்தில் 
வீதியில் சாக்கடை ஓட்டம் 
விரையும் வாகனங்கள் 
அள்ளித் தெளித்ததில் 
மேனி எங்கும் துர்நாற்றம் 

எடுத்து வர மறந்த குடையின் மீது
எப்போதும் போல எரிச்சல் 
நிற்கவும் வழியற்று 
ஒதுங்கப் பார்க்கும் நிழற்குடைக்குள்
ஓயாமல் வீசுகிறது
மதுவின் வாசம்

நேரத்தைக் கடந்தும் 
நிறுத்தத்தைத் தாண்டியும் 
நின்றுவிட்ட பேருந்தைப் பிடிக்க 
மழையின் வேகத்தில் 
சாலையில் ஓட்டம்
 
இருக்கைகளும் நீராட 
நகரப் பேருந்துக்குள் 
நனைந்தே பயணம் 

கம்பியைப் பிடிக்கவும் 
சாய்வைத் தேடவும் 
அலையும் உடலோடு 
அவ்வப்போது உரசிப் போகின்றன 
ஆபாச மனங்களின் விரல்கள் 

எப்போதும் போலவே வரவேற்கிறது
மழலையின் விளையாட்டில் மகிழ்ந்து
வீட்டிற்குள் வெள்ளமென 
நுழைந்திருக்கும் மழை

Leave a comment

Trending