மாமரம் பூக்கத் தொடங்கியது
சின்னச்சாமி
சூரிய ஒளிக்கீற்றுகள் மாமரத்தின் இலைகளில் ஊடுருவி அதனை நிலத்தில் நகலெடுத்துக்கொண்டிருந்தன. பறவைகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன. காகங்கள் மட்டும் வட்டமிட்டு கரைந்துகொண்டிருந்தன. மாடுகள் தொழுவத்தில் கத்திக்கொண்டிருந்தன. மாமரத்தின் நிழலில் உறங்கிக்கொண்டிருந்தது அந்த வீடு. காலை எட்டு மணி ஆகியிருந்தது. எப்பொழுதும் போல அந்த வீடு இருக்கவில்லை. வீடு தனித்திருந்தமையால் அதைக் கவனிப்பாரில்லாமல் விடப்பட்டிருந்தது.
காலையில் யுவனை கட்சிப் பணிகளுக்காக அழைத்துப்போக மலையன் வந்து பார்த்த பிறகுதான் தகவல் ஊர் முழுக்கப் பரவியது. இரத்த வாடையும் மூத்திர நாற்றமும் அவனது மூக்கை அச்சுறுத்தியது. யுவன், அவனது அப்பா, அம்மா மூவரும் வெட்டுபட்டு கிடந்தனர். அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பின்புதான் தெரிந்தது இவர்கள் முன்பே இறந்த போனது. யுவனின் சித்தப்பா இவர்களின் கடைசி சடங்குகளை ஏற்றுக்கொள்வதில் மும்மரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தார். காவல்துறை, உடற்கூறாய்வு என்று அனைத்தையும் அவரே கவனித்துக்கொண்டார். ஊரில் சிலரே மருத்துவமனைக்கு வந்திருந்தனர். ஊரின் முக்கியஸ்தரான வாசனிடம், ‘பொண்ணுக்குத் தகவல் சொல்லியாச்சா’ என்று சித்தப்பா ஒருமுறை கேட்டுவைத்தார். மருத்துவமனை சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து உடல் கையில் கிடைப்பதற்குக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு மேலானது. மீண்டும் ஒரு முறை முக்கியஸ்த்தரிடம், ‘பொண்ணுக்குத் தகவல் சொல்லியாச்சா? இல்லையா?’ என்று கேட்க, அவரும் சொல்லியாச்சு என்று முடித்தார்.
••••••••••••
சரோஜா யுவனின் ஆசைத் தங்கை. எப்பொழுதும் அவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வான். சரோஜாவிற்கு சமூகத்தைப் பற்றி ஓரளவு விபரம் தெரியும் வயது வந்த பிறகு அவளை அவன் பள்ளியைத் தவிர எங்கும் அனுமதிக்கவில்லை. முக்கியமாக, சமத்துவம் நகருக்குப் போகவே கூடாது என்று கட்டளையிட்டிருந்தான். அங்கிருந்து வரும் பெண்களுடன் பேசுவதை முழுவதுமாகத் தவிர்க்கச் சொல்லியிருந்தான். பசங்க ஏதாவது தொந்தரவு செய்தால் உடனே சொல்ல வேண்டும் என்று கூறியிருந்தான். ஆனால் சரோஜா தன் போக்கில் இயங்கிக்கொண்டிருந்தாள்.
சரோஜா பள்ளியில் எப்பொழுதும் லட்சுமியுடன்தான் விளையாடுவாள். படிப்பாள். சரோஜாவுக்கு ஆங்கிலமும் கணிதமும் அவள் மூலமே பரிமாற்றம் செய்யப்பட்டு வந்தன.
“இங்க பாருடி எனக்கு யாராவது சொல்லிக்கொடுக்கக் கூடாதுனு உன்னச் சொன்ன, எங்கிட்ட சொல்லிரணும் சரியா” என்று லட்சுமியிடம் பலமுறை பலநாட்கள் சொல்லியிருக்கிறாள். பதிலுக்கு அவளும்,
“இங்க பாருடி அப்படியெல்லா சொன்ன அதுக்கு அசர்ர ஆளு நானில்ல, அங்கெயே என்ன செய்யனுமோ செஞ்சுப்புடுவ, என்ன என்னப் பண்ணுவாங்க அவமானப் படுத்துத்துவாங்க அவ்வளவுதான, அவமானத்துக்கெல்லா பயந்தா வாழ முடியாது. நா அம்பேத்கரு மாதிரியாக்கும்” என்று சொல்லி விடுவாள்.
இவளினுடைய பேச்சுதான் சரோஜாவை இன்னும் உத்வேகப்படுத்தியது. இருவரும் நன்றாகப் படித்து சிறந்த மதிப்பெண்களுடன் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தனர். அடுத்தது கல்லூரி என்பது கனவாக இருந்தது.
சரோஜாவும் லட்சுமியும் கல்லூரியில் தமிழ் அல்லது அரசியல் பொருளாதாரம் எடுப்பது என்று முடிவு செய்து வைத்திருந்தனர். ஆனால் இவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் படித்த துறை உயிரியல் துறை. அவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு அறிவியல் துறைசார் படிப்புகளில் சேர முடியும். இருப்பினும் இவர்களது இலட்சியம் அரசுப் பணிக்கு செல்வது என்றிருந்தது.
ஒருவழியாக ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியத்தில் சேர்ந்தனர். அங்குதான் தனது சொந்த ஊரைச் சார்ந்த ராஜாவும் அதே வகுப்பில் சேர்ந்திருந்தான். சரோஜாவுக்கு அவனை ஒருமுறையோ இருமுறையோ பள்ளியில் பார்த்ததாய் நினைவு. ஆனால் பேசியதில்லை. லட்சுமி அவனிடம் சகஜமாய் பேசிக்கொண்டிருந்தாள். சரோஜா எதுவும் பேசமால் தனது அண்ணனின் கட்டளையை நினைவுப்படுத்திக்கொண்டிருந்தாள்.
எப்படி அண்ணனுக்கு நான் லட்சுமியுடன் பேசுவது தெரியாமல் போச்சு. கண்டும் காணாமல் விட்டுவிட்டானா? வாய்ப்பில்லை அப்படி விடுவதற்கு அவன் சாதாரணமானவல்ல. இரத்தம் முழுக்க இவர்களின் மீதான வெறுப்பு ஊறியிருக்கிறது. அவன் ஒரு பைத்தியம், அறிவற்றவன், உலகத்தைப் புரிந்து கொள்ளாதவன் என்று மனதிற்குள் அண்ணனை கரிந்து கொண்டிருந்தாள்.
அண்ணன் இவர்களை எதிரிகளாகப் பார்க்காமல் மனிதர்களாகப் பார்த்திருந்தால் நிச்சயமாக லட்சுமியிடம் மன்றாடி அவனுக்குத் திருமணம் செய்துவைத்து எனக்கு அண்ணியாக்கி அவளை என்னுடனே வைத்துக்கொள்வேன் என்று எண்ணிய மறுநிமிடம் பளார் என்ற ஒலியுடன் அறை அவளது காதை கணக்கச் செய்தது. ராஜா கன்னத்தில் கைவைத்துக்கொண்டு ஏதும் புரியாதவனாய் நின்றுகொண்டிருந்தான். லட்சுமி டேய், சரோஜா அண்ணங்கிரதுனால சும்மா விடுற. இல்லைனா நடக்குறதெ வேற என்று எகிறினாள். பதிலுக்கு அவனும் எங்க, எங்க என்று எகிற சரோஜா லட்சுமியின் கையுடன் தனது கையை இணைத்துக்கொண்டாள். யுவன் பார்த்த பார்வையில் இணைந்திருந்த கை அனிச்சையாகப் பிரிந்தது.
“உங்கிட்ட என்ன சொல்லிருக்க, நீ என்ன பண்ணீட்டிருக்க” என்று சிறு அதட்டலுடன் சரோஜாவைத் தன்னிடம் இழுத்தான்.
“விடு நா வகுப்புக்குப் போகணும்” என்று அங்கிருந்து ஓடிவிட்டாள். ராஜாவையும் லட்சுமியையும் பார்த்து எள்ளல் புன்முறுவலுடன் யுவன் அங்கிருந்துச் சென்றான். ராஜாவுக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை.
லட்சுமி வகுப்பிற்குள் நுழைந்ததும் சரோஜா அழத்தொடங்கியிருந்தாள். லட்சுமி அவளை சமாதானப்படுத்தப் போராடினாள். “எனக்காக ஏ பாக்குற, அவன ஓங்கி அறஞ்சிருக்கலாமல்ல” என்று சரோஜா கூற,
“இருந்தாலும் உங்க அண்ண, அதா” என்றாள் லட்சுமி தயக்கத்துடன்,
“பாவம் அந்தப் பையன், எதுக்கு அடி வாங்குனம்னே தெரியாம நின்னுட்டிருந்தா” என்று சரோஜா விம்மினாள்.
“பரவால, நா அவங்கிட்ட பேசிக்கிற”
“இல்ல, நா அவங்கிட்ட மன்னிப்பு கேட்கணும்”
“எதுக்கு, விடு” என்று லட்சுமி முடிக்கும்போது, ராஜா வகுப்பிற்குள் நுழைந்தான். அவனைக் கண்டதும் லட்சுமியை விலக்கிவிட்டு,
“என்ன மன்னிச்சுரு, நீ எங்கூட பேசிட்டிருக்கனு நெனச்சு எங்க அண்ண உன்ன அடுச்சுட்டா, தயவு செஞ்சு என்ன மன்னுச்சுரு” என்று இரு கை கூப்பினாள்.
“பரவால, நா பெருசா எடுத்துக்கல” என்று முடித்து அந்தப் பிரச்சனையிலிருந்து விடுவித்துக் கொண்டான். இந்த சந்திப்பு, பிறகு மூவருக்குமானதாக மாறிப்போனது சரோஜா, லட்சுமி, ராஜா கல்லூரி தமிழ்த்துறையில் சிறந்த மாணவர்களாகத் திகழ்ந்தனர். மூன்றாமாண்டு படிக்கும் போது லட்சுமிக்கும், சரோஜாவுக்கும் எதேச்சையாக நடந்த ஒரு சிறு சண்டையில், தீர்ப்பு சொல்பவனாக ராஜா இருந்தான். சரோஜாவின் பக்கம் இருந்த நியாயத்தின் அடிப்படையில் அவன் அவளுக்கு சாதகமாகப் பேசினான். லட்சுமி, போகிற போக்கில் சரோஜாவை ‘நீ என்ன அவன லவ் பண்றியாக்கும்’ என்றவுடன் சரோஜா எந்தத் தயக்கமுமின்றி ‘ஆமாம்’ என்று சொல்ல, ராஜாவுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான். லட்சுமியும் அந்தச் சண்டையை மறந்து ‘ஏ சரோஜா, என்ன சொன்ன’ என்று கேட்க, ‘ஆமா நா அவன லவ் பண்ற’ என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறினாள்.
ராஜாவும், லட்சுமியும் அவளிடம் ‘இது ஒத்துவராத விசயம், வா படிக்கிற வேலயப் பாப்போம்’ என்று சரோஜாவை அழைக்க, அவள் மீண்டும், ‘நா உண்மையாதா சொல்ற, எனக்கும் தெரியும் எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்கனு, ஆனா ஏனோ இவன்மேல இனம் புரியாத அன்பு, காதல்னா அவ்வளவுதானே, இனம் புரியக்கூடாது, இனம் புரிஞ்சா அது காதலா இருக்காது” என்று லௌகீகத் தத்துவம் பேசினாள்.
“அடி சாமி, போதும், நடக்கறது நடக்கட்டும், இப்ப என்னவோ அதப் பாப்போம்.”
ராஜாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவனைப்பொறுத்தவரை, “இது வெளியில் தெரிந்தால் நிச்சயம் சும்மா விடமாட்டார்கள், அசம்பாவிதம் உறுதி, அது எனது கொலையோ, ஊர்க்கொலையோ, ஊரெரிப்போ எது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த விசயத்தைப் பொறுத்தவரை நாம் இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் இல்லை. பழங்காலத்தில் இருக்கிறோம்” நான் சரோஜாவிற்கு எப்படி புரியவைப்பது. எனக்கென்று ஒரு கனவு இருக்கிறது. அதை அடைவது என் இலக்கு. இந்த ஊரே மரியாதை செய்யும் இடத்தில் நான்போய் அமரவேண்டும். நம்முடன் இயல்பாக சரோஜா பழகினாலும் அவளது சமூக அதிகார இருப்பை விட்டுத்தருவாளா? என்பது சந்தேகம்தான், என்ன செய்வது, அவளுக்கு நான் என்ன சொல்வது, இந்த விசயத்திலும் கூட நான் பேச எனக்கு உரிமை இல்லாமல் அவளே ஆக்கிரமித்துக்கொண்டாள். சரியோ, தவறோ எனது எண்ணத்தை அவளிடம் சொல்லிவிடுவது நல்லது” என்று தனது மனதிற்குள் பெருங்காற்றுக்கடலாய் அலையடித்துக்கொண்டிருந்தான்.
சரோஜாவை நேருக்கு நேர் எதிர்கொள்ள அவனுக்குத் தயக்கம் இருந்தாலும் சரோஜா எப்பவும்போல அவனுடன் பேச ஆரம்பித்தாள், ஒருநாள், “என்னடா, கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றாள்.
அவனும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “நா இதுவரைக்கு அந்தமாதிரி உன்ன நெனச்சது கிடையாது. நண்பர்களா இருந்தோ, அப்டியே இருந்துரலா, நமக்குள்ள அதெல்லாம் ஒத்து வராது” என்று பெட்ரோல் முடியப்போகும் வண்டிபோல இழுத்து இழுத்து பேசினான்.
“இது எனக்குத் தெரியாமதா இருப்பனா, நாம நல்லா படிப்போம், அரசு வேலைய வாங்குவோம், அப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று அதிவிரைவு வண்டிபோல முடித்தாள்.
“எல்லாம் சரிதான், உங்க அப்பா, அம்மா முக்கியமா உங்க அண்ணன் நெனச்சா, சமத்துவம் நகர் சின்னபின்னமாகிறும்.” என்றான்.
“எதையும் யோசிக்காத, நல்ல படிப்போம், நாம வேல வாங்கன பின்னாடி அன்னைக்கு எப்படியிருக்குதுன்னு பாத்துட்டு முடிவெடுப்பம், இப்பத்த நெலமைக்கு நாம காதலர்கள், சரியா, போய் படி” என்று இயல்பு மாறாமல் சொல்லிவிட்டுச் சென்ற சரோஜாவைப் பார்த்து வாயடைத்து அமர்ந்திருந்தாள் லட்சுமி.
மூன்றாமாண்டு இறுதித் தருவாய் நாட்களில் ஒருநாள் மூவரும் நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததை யுவன் பார்த்துவிட்டான். சரோஜாவின் மேல் அடக்கமுடியாத கோபம் ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. சரோஜா வீட்டிற்குப் போனதும் யுவன் அவளை அழைத்துப் பேசினான்.
“என்ன நீங்க மூணு பேருந்தான் நண்பர்களா”
இதுவரை அண்ணன் பேசாத ஒரு விசயத்தை இன்று பேசுவதை நினைத்து, வியப்புடன் ஆமா, இன்னும் சிலரு இருக்காங்க” என்றாள்.
“அப்படியா, அவங்கள ஒருநாள் வீட்டுக்குச் சாப்பிடக் கூப்டுவா” என்று சொல்ல, சரோஜாவுக்குத் திக்கென்றிருந்தது. இவன் மாறிவிடுவதற்கு துளியும் வாய்ப்பில்லை. இருந்தாலும் இவன் வாயிலிருந்து இப்படியொரு வாக்கியமா?” என்று நின்றிருந்தவளை, “இங்க பாரு, எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும், உன்ன நா எப்படி பாத்துக்குறேன்னு உனக்குத் தெரியும், உனக்குப் புடிச்சவங்கனா எனக்கும்தான், நா இப்பெல்லா அவங்க கீழ, நா மேலன்னு பாக்குறது கிடையாது.” என்றான். இவளுக்குப் பூரண நம்பிக்கை இல்லையென்றாலும், “அப்பா, அம்மா ஒத்துக்கணுமல்ல” என்று இழுத்தாள். “நானே ஒத்துக்கிட்ட, அவங்க ஒன்னும் சொல்லமாட்டாங்க, நீ கூட்டீட்டு வா” என்று சொல்லி முடித்தான்.
அடுத்த நாள் லட்சுமி விடப்பிடியாக மறுத்தாள். சாரோஜாவும் விடாப்பிடியாக அவர்களை சம்மதிக்க வைக்க முயற்சி செய்தாள். ஒரு கட்டத்தில் முடிவு சரோஜாவுக்கு சாதகமாக அமைந்தது.
கல்லூரித் தேர்வுகள் முடிந்த கடைசி நாளில் மதியம் இரண்டு மணிவாக்கில் ராஜா மட்டும் வரப்பின்மீது நடந்து வந்து கொண்டிருப்பதை சரோஜா மாமரத்தின்கீழ் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். கருமேகக் கூட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வானத்தில் ஒட்டிக்கொண்டிருந்தன.
அவன் அருகில் வந்ததும் ‘டேய் அவ எங்க,” என்று கமுக்கமாகக் கேட்டாள். “அம்மாவுக்கு ஒடம்பு முடியலயாமா, பாத்துட்டு பின்னாடியே வந்தர்றே, நீ முன்னாடி போனு சொல்லி அனுப்பிவிட்டா.”
“சரி, டேய் இந்த மாமரத்தப் பாத்துக்க, நா வெச்ச மரம், எப்படி வளந்துருக்குனு பாத்தியா, எனக்கு போர் அடிக்கிறப்பயெல்லா இதுகூடதா பேசிட்டிருப்ப, உன்ன எப்பிருந்து காதலிக்கிறேங்கிறது இதுக்கு மட்டும்தா தெரியும்” என்றாள் கொஞ்சம் புன்முறுவலுடன்.
“அப்படியா, அப்ப எனக்கு மச்சினிச்சி” என்று சொல்லிமுடித்ததும், “சரோஜா” என்று அம்மா சத்தமிட்டபடி அவளை நோக்கி வந்தாள். “வாப்பா, நம்மூரு பைய, காலேஜ் போற, பெரிய விசயம்பா, சாப்பாடு ரெடியாயிடுச்சு, இன்னொருத்தி வரலயா” என்று கேட்டபடி அவள் சமயலறையில் நுழைந்தாள். இவன் வாசப்படிக்குள் நுழையலாமா? வேண்டாமா? என்று யோசித்தபடி நின்றிருந்தான். “உள்ள வாடா” என்று சரோஜாவின் அப்பா கரிசனையோடு அழைக்க, அவனும் உள்ளே வந்தான். இப்பொழுது எங்கு உட்காருவது. தரையிலா? நாற்காலியிலா? என்ன யோசன இங்க வா, இந்த சோபாவுல உட்காரு என்றான் யுவன்.
மனிதர்கள் மாறிவிடுகிறார்கள். தவறு என்று தனக்கு போதிக்கப்பட்ட விசயங்கள் இப்பொழுது மாறி நடக்கின்றன. காலம் சரிசெய்கிறதோ என்று மனதிற்குள் அலைபாய்ந்து கொண்டிருந்தான். சாப்பாடு தயாராக டேபிள் பரிமாற காத்துக்கொண்டிருந்தது. வெளியே கருமேகங்கள் ஒன்றிணைந்து பகலுக்கு உருவம் கொடுத்துக்கொண்டிருந்தன. சரோஜா லட்சுமிக்காகக் காத்திருந்தாள். அவள் வருகை குறித்து ஏதும் தகவலில்லாததால் அனைவரும் சாப்பிடுவது என்று முடிவானது. உடல், மனம் இலகுவாகுமாறு உணவு அவர்களை அச்சமயத்தில் ஒன்றிணைத்து வைத்திருந்தது. மழை பெரிய துளிகளை பூமிக்குப் பரிமாறிக்கொண்டிருந்தது.
சாப்பிட்டு முடித்ததும் ராஜா மழையைப் பொருட்படுத்தாது கிளம்புவது என்று முடிவெடுத்து அனைவரிடமும் கூறிவிட்டு திரும்புகையில் அவன் தலையில் பெரிய இடியொன்று விழுந்தது. அது அவனைத் தடுமாறச் செய்து நிலைகுலைய வைத்துவிட்டது. சரோஜா பெருங்கூச்சலுடன் அவனை வாரி அணைக்கப் போகையில் அவளது அம்மா அவளை உள்ளே இழுத்து தாளிட்டாள். கையில் பெரிய இரும்புக் காம்பியுடன் யுவன் நின்றிருந்தான். மழை நீர் தேங்கி ஓடும் தருவாயை அடைந்திருந்தநிலையில் அவனை வீட்டு வாசலிலிருந்து இழுத்து வந்து மாமரத்தில் அமர்ந்த நிலையில் கட்டிப்போட்டனர். சரோஜாவின் அப்பாவும், யுவனும் மாறி மாறி அடிக்கத் தொடங்கினர். சரோஜா தனது மொத்த பலத்தையும் கைக்கொண்டு அவளது அம்மாவை உதறித் தள்ளிவிட்டு ராஜாவிடம் ஓடி வந்தாள். அவளின் அப்பா இறுக்கமாக அவளை அணைத்துப் பிடித்து அருகிலிருந்து மாடு கட்டும் கயிற்றில் அவளது கைகளை இறுக்கி முடிந்தார். அவளது கண் முன்னால் அவனின் கதறல் விண்ணை முட்டி மின்னலை எழச் செய்தது. இப்பொழுது அம்மாவும் இணைந்து கொண்டு தாக்கினாள். சிறிய புல்லின் இதழ் மீது ஓயாமல் விழும் மழைத்துளியை அது எப்படி தாங்கும். அது தனது முழு ஆற்றலையும் இழுந்து மழைத்துளிக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டதுபோல் ராஜாவின் குரல் இருந்தது. மாமரங்கள் அவனின் கதறலையும், சரோஜாவின் அழுகையையும் செவிமடுத்துக் கேட்டு ஆத்திரம் தாங்காமல் அவர்களின் மீது இலைகளை உதிர்த்தியது. அது அவர்களை ஒருதுளியேனும் காயப்படுத்தவில்லை. மாமரமும் தனது இயலாமையால் கண்ணீர் துளிகளைச் சிந்தின. இரண்டு மணிநேர தாக்குதலுக்குப் பிறகு அவர்கள் ஓய்ந்து போனார்கள். மேகங்கள் அழுது வற்றிப்போய் மீதமிருந்து கண்ணீர் துளிகளை சிந்திக்கொண்டிருந்தன.
“டேய் அவ இப்படியே கெடக்கட்டு, காலைல நேரமா கொண்டுபோய் வாய்க்காமேட்டுல போட்டுட்டு வந்துரு” என்று சரோஜாவின் அப்பா யுவனுக்கு கட்டளையிட்டுவிட்டு சென்றான். யுவனும் தலையசைத்து அப்பாவைப் பின்தொடர்ந்தான். அம்மா சாரோஜாவை விடுவிக்கப் போகும்போது “விடுமா அவ இந்த மழையிலு, குளிரிலு கெடக்கட்டு, அப்பதா அறிவு வரும்” என்று யுவன் சொன்னதைக் கேட்டு சரோஜா பெருங்கோபத்துடன் துடித்தாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்க மேகங்கள் மீண்டும் கண்ணீரைச் சிந்துவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தன.
இருள் அண்டிக்கிடந்தது. பெருங்காற்று வீசத் தொடங்கியது. மாமரம் சலசலத்து இலைகளில் தேங்கிய துளிகளை உதிர்த்தியது. சரோஜா தன்னால் முடிந்தளவு பலத்தைப் பயன்படுத்தி தன்னை விடுவித்துக் கொண்டாள். தனது காலில் உள்ள கொலுசை மெதுவாகக் கலட்டி வைத்துவிட்டு ராஜாவை நோக்கி அந்த இருளில் இடரி இடரி சென்று அவனையும் விடுவித்தாள். அவன் முழு பலத்தையும் இழந்து பஞ்சுபோல மாறிப்போயிருந்தான். சரோஜா தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தாள். அவனை தனது முதுகில் மூட்டை போல் தூக்கி கிடத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள். கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் அவனை முதுகில் சுமந்தவாறு வந்து விடிவதற்குள் ரயில் ஏறி கிளம்பிவிட்டனர். அவனை இவ்வளவு தூரம் முதுகில் சுமந்துவர என்னால் எப்படி சாத்தியப்பட்டது என்று எண்ணிக்கொண்டே பயணித்தாள்.
••••••••••
மூவரின் உடலும் மருத்துவனைச் சடங்குகள் முடிந்து வீட்டிற்கு வருவதற்கும் சரோஜா வருதற்கும் சரியாக இருந்தது. சரோஜாவைக் கண்டதும் அனைவரும் திகைத்து நின்றனர். அவள் இப்பொழுது வட்டாச்சியர். ராஜாவும் வட்டாச்சியர். யாரும் எதையும் பேசவில்லை. நேராக வீட்டிற்குள் வந்தவள் மூவரின் உடலையும் ஒருமுறைப் பார்த்துவிட்டு எந்தச் சலனமும் இல்லாமல் மாமரத்தின் கீழ் வந்து அமர்ந்துகொண்டாள். லட்சுமி பக்கத்து ஊரில் கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றுகிறாள். அவளும் அங்கு வந்து சம்பிரதாயக் கடனை நிறைவேற்றினாள். அன்று அவள் வராததை நினைத்து சரோஜா நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
மனிதர்கள், மனித இனத்துக்கு ஒவ்வாத ஒரு விசயத்துக்காக ஏன் இப்படி வெறிகொண்டு அலைகிறார்கள். சக மனிதனை புரிந்து கொள்ளாதவன் எப்படி ஒரு மனிதனாக இருந்துவிட முடியும். அன்புணர்ச்சியற்ற சமூகத்தை வளர்தெடுப்பதில் என் அண்ணனைப்போன்றவர்களுக்கு என்ன இலாபம் கிடைத்துவிடப்போகிறது. இதோ தனது சாதிக் காட்சியின் செயலாளர் பதவி போட்டியில் சொந்த சாதியினரே இவனை வீழ்த்திவிட்டனர். அப்பா, அம்மா. ஒரு மனித உயிரினத்தை உலக்கிற்கு கொண்டுவரும் ஊற்றல்லவா. கொண்டுவந்ததற்காக அந்த உயிரினத்தின் முழு உரிமையையும் தனது பிடிக்குள் கட்டுப்படுத்துவது முட்டாள்தனமல்லவா? ஏன் இவர்களுக்கு மனிதர்களைவிட சாதி, ஆணவம் அவசியமென்று தோன்றுகிறது. அது அவர்களை இப்போது உயிர்ப்போடு வைத்து விட்டதா? எனக்கு ஏன் கண்ணீர் வரவில்லை? அன்று இரவோடு வற்றி மறைந்த போன கண்ணீர். இன்றுவரை வந்ததில்லை. உங்களுக்காக நிச்சயம் வராது’ என்று யோசித்தவாறு அண்ணாந்து பார்த்தால் மாமரம் பூக்கத் தொடங்கியிருந்தது.
காவலர் ஒருவர் சரோஜாவிடம், “மேடம், என்ன நடந்துச்சுன்னு உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும். கேஸ் குடுக்குற ஐடியா இருக்கா?” என்று கேட்க,
“இவர்களைக் கொன்றவர்களுக்கு, இன்னொருவன் சதி தீட்டிக் கொண்டிருப்பான்” என்று சொல்லிவிட்டு, “காலம் தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுக்கிறது. பயன்படுத்தாவிட்டால் அது நம்மை தின்று விடுகிறது” என்று சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்காமல் அங்கிருந்து வெளியேறினாள் சரோஜா.

Leave a comment