அலை கவிதைகள்

கவிஞர் அலை

1. எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே

உன் வாய் அளவற்று அளித்த
வார்த்தைகளை
காதுகளில் பதிவேற்றி வைத்திருக்கிறேன்
எப்போதும் வேண்டுமானலும்
நீ அழைப்பதாய்
ஒலியை நிறைக்கும்
ஆற்றல் கைவசம்

ஒரேயொரு வார்த்தையின்
உரிமை வாங்கி வைத்துக்கொள்ள
மறந்து போனதால்
மறந்தும் அழைக்கப்படுகிறேன்
வேரறுக்க வேண்டும்

நுண்ணிய சுமைகளைத் தாங்க முடியாமல் தடுமாறி விழுகிறேன்
கேட்க முடியாத ஆயுள் தண்டனைக் கைதியின்
உண்மையான கடைசி ஆசையாகிப் போனது
உன் குரல் பேசும் என் மொழி

00000

2.

கால் நனைக்க காத்திருக்கும் நாட்களை கடல் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிக் கொள்கிறது

ஒவ்வொரு முறையும் கரையின் அனுமதி பெற்று தழுவிக் கொள்ளும் அலைகள்

மீன் வாசனை
உப்புக் காத்து
விலகியிருந்தும் தொட்டுவிடும் நேசம்

பிரிவாற்றாமையில் அல்லல்படும் எனக்கு
நினைவு தான் கள்ளச்சாவி
கனவு தான் பொக்கிஷ அறை

மதியம் சாப்பிட்டதும்
சொக்கி விழும் குட்டித் தூக்கங்களின் போதெல்லாம் என் கால்கள் சில்லிட்டு போய்விடுகிறது

ஏதேதோ எனக்குள்ளேயே பேசிக்கொண்டு
சாலையில் நடக்கும் போதெல்லாம்
காதில் கேட்கும் இரைச்சல்கள் என்னை
களைப்பாக்கி அயர்த்துகின்றன

நீரின் பேரிரைச்சல் வேண்டி செவிகள் தவிக்கின்றன
மணல் துகள்கள் என் கால்களில் தஞ்சம் புகுகின்றன

இந்த இரவில் உன்னைத் தவிர யாரையும்
வேண்டேன்,
விரும்பேன்

ஒவ்வொரு முறையும் அனுமதி பெற்று
தழுவிக் கொள்ளும் அலைகள்
கைகளில் உரசி முகத்தில் தெளிக்கும் துளிகள்
கடலின் அணைப்பில் பாசத்தின் மிகுதி வசமாகிறது

Leave a comment

Trending