தமிழ்த் திரைப்படங்கள் 2024  – ஒரு மதிப்பீட்டு நோக்கு

விஜிலா விஜயன்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் சுமார் 200 திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 218 படங்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதில் ஹிட் அடித்த படங்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணும் அளவுக்குத்தான் உள்ளன. இவற்றிலும் வசூல் ரீதியான வெற்றித் திரைப்படங்கள், வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் சுமாரான திரைப்படங்கள், சிறந்த திரைப்படங்கள், வசூல் ரீதியாக வெற்றி பெறாத சில நல்ல படங்கள் என பல வகைப் படங்கள் 2024-இல் வந்துள்ளன. இவை பற்றி ஒரு பார்வை…

2024 ஜனவரி… பொங்கல் திரைப்படங்களாக பல படங்கள் வந்தாலும், தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜயின் மிஷன் சாப்டர் ஒன் உள்ளிட்ட திரைப்படங்கள் மட்டுமே ஓரளவு வசூல் ரீதியான வெற்றியைத் தக்கவைத்தன.

பிப்ரவரியைப் பொறுத்தவரை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த லால் சலாம் திரைப்படம்தான். ஆனால் அந்தத் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. அதேநேரம் அந்த மாதம் வெளிவந்த மணிகண்டனின் லவ்வர் திரைப்படம் ஓரளவுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து லாபத்தை ஈட்டியது.

இதையடுத்து மார்ச், ஏப்ரல் என இந்த இரண்டு மாதங்களிலும் பல்வேறு படங்கள் வந்திருந்தாலும் எந்த படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை.

2024 ஆம் ஆண்டின் முதல் கால் பகுதியைப் பொருத்தவரை தமிழ்த் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. இது திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திரையரங்க உரிமையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஆறுதலாக, சொல்லப்போனால் தமிழ்த் திரையுலகிற்கு புத்துயிர் தந்த மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது மலையாளத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்தான்.  இந்தப் படம்  பல திரையரங்குகளை மூடாமல் காப்பாற்றியதாக திரையரங்க உரிமையாளர்களே தெரிவித்துள்ளனர்.  சிதம்பரம் இயக்கத்தில் சர்வைவல் திரில்லராக உருவான இந்தத் திரைப்படம் கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்ததாலும் அதில் வைக்கப்பட்ட குணா படத்தின் பாடலாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது. இதனால் யாரும் எதிர்பாராத விதமாக கேரளத்தை விட தமிழ்நாட்டில் அந்தப் படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.  இப்படத்தைத் தொடர்ந்து ஏப்ரலில் வெளியான மலையாள திரைப்படமான பிரேமலுவும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது.

மலையாளப் படங்கள் தமிழகத்தில் நன்றாக ஓடினாலும் “அட என்னடா எந்தத் தமிழ்ப் படமும் இன்னும் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லையே“ என்ற ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில் வெளியான திரைப்படம்தான் சுந்தர்.சி-யின் அரண்மனை 4. இது சிறந்த திரைப்படமா என்று கேட்டால் சந்தேகமே. ஆனால் கமர்ஷியல் ஹிட் என்று சொல்வார்களே அந்த வரிசைக்குள் அடங்கிய திரைப்படம் இது. வழக்கமான பேய் சாமி டெம்ப்ளேட் தான். ஆனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 100 கோடிக்கு மேல் வசூலித்தது.

இதைத் தொடர்ந்து தமிழ் சினிமா சற்று ஏற்றத்தை காணத் தொடங்கியது. அந்த வகையில் மே மாதம் வெளியான கவினின் ஸ்டார், ஹிப் ஹாப் ஆதியின் பி.டி சார், நடிகர் சூரியின் கருடன் ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. இதில் கருடன் திரைப்படம் சூரியின் நடிப்புக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது.

ஜூன் மாதத்திலிருந்து வெளியான திரைப்படங்கள் பலவும் கலவையான தாக்கத்தை ஏறு்படுத்திய திரைப்படங்களாகவே இருந்தன. சில மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன… சில மிகப்பெரிய தோல்வியைத் தழுவின…

ஜூன் மாதம் வெளியான அஞ்சாமை திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை வாங்கி இருந்தாலும் வசூல் ரீதியான வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அதே மாதம் குரங்கு பொம்மை திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் அனுராக் காஷ்யப் நடிப்பில் மகாராஜா திரைப்படம் வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரையும், வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியையும் கண்டது.  2024-ன் முதல் சிறந்த திரைப்படமாகவும் பிளாக்பஸ்டர் திரைப்படமாகவும் அமைந்தது மகாராஜா. இந்திய அளவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படி 2024 ஆம் ஆண்டில் முதல் பகுதி முடிய, ஜூலை மாதம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகிய திரைப்படம் இந்தியன் 2. சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு வெளிவந்த படம் இந்தியன் 2. ஆனால் இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. அதுமட்டுமல்ல யாரும் எதிர்பாராத விதமாக மிகப்பெரியத் தோல்வியையும் தழுவியது. இந்த படத்தைப் பார்க்கும் போது சில நேரம் கிளாசிக் திரைப்படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்காமல் விடுவதே நல்லது என தோன்றியது. இப்படி ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் இருந்த நிலையில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் வெளிவந்த திரைப்படம் தனுஷின் ராயன். தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் ராயன். இது தனுஷின் ஐம்பதாவது திரைப்படம். கலவையான விமர்சனங்கள் இந்த படத்தின் மீது இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரை பல திரைப்படங்கள் வெளிவந்தன. சுதந்திர தினத்தை ஒட்டி விடுமுறையாக அமைந்ததால் பல பெரிய மற்றும் சிறிய திரைப்படங்கள் இந்த மாதத்தில் வெளியாகின. இதில் மிகச்சிறந்த திரைப்படமாக வெளியானது ஜமா. வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடையவில்லை என்றாலும் எல்லார் மத்தியிலும் மிகச்சிறந்த பெயரை இந்த படம் பெற்றது. புதுமுக இயக்குனரான பாரி இளவழகன் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான திரைப்படம் ஜமா. தெருக்கூத்துக் கலைஞர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் இந்திய அளவில் நல்ல பெயரைப் பெற்றது.

அடுத்தது அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்டி காலனி 2 திரைப்படம். இது கலவையான விமர்சனங்களுடன் வசூல் ரீதியான வெற்றியை பெற்றது. அதே நேரத்தில் பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரமின் நடிப்பில் உருவாகிய தங்கலான் திரைப்படம் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. விமர்சனங்களும் இரு விதமாகவே இருந்தன. அதில் பேசப்பட்ட மையக்கருத்து நன்றாக இருந்திருந்தாலும் அது எளிய மக்களுக்கு புரியாமல் போனது படத்தின் மிகப்பெரிய குறையாக இருந்தது. இது படத்தின் வசூலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதே மாதம் கூழாங்கல் இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில், சூரியின் நடிப்பில் வெளியான திரைப்படம் கொட்டுக்காளி. இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகப் பல தரப்பினரின் வரவேற்பையும் பெற்றது. ஏற்கனவே இந்தத் திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் வென்றுள்ளது. ஆனால் திரையரங்கில் வெளியாகிய போது சற்று ஏமாற்றமே கிடைத்தது. படம் நல்ல படமாக இருந்தாலும் திரையரங்க ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் போனது. ஃபெஸ்டிவல் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் அந்த விமர்சனங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் இப்படிப்பட்ட படங்களும் திரையரங்குகளில் வெளியானால் மட்டுமே, இது போன்ற முயற்சிகள் நிறைய எடுக்கப்படும். இப்படிப்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்த ஒரு நல்ல முயற்சியாகத்தான் இந்த திரைப்படத்தைப் பார்க்கலாம்.

அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாழை. இதுவும் ஃபெஸ்டிவல் திரைப்படம் போல எடுக்கப்பட்ட ஒரு படம் தான். ஆனால், வாழைக் கூலிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது.

அடுத்து செப்டம்பர் மாதம், வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில், கோட் திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் 2024ன் மிகப்பெரிய வெற்றித் திரைப்படம் கோட் தான். இதை நான் கூறவில்லை, அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் ஒப்புக்கொண்ட விஷயம் இது. லாஜிக் இல்லாமல், திரையரங்க ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக எடுக்கப்பட்ட படமாக அமைந்தது கோட். 2024-ல் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் முதல் இடத்தில் இருப்பது கோட் (வசூல் – சுமார் ரூ.450 கோடிக்கு மேல்)

சினிமாவில் சில நேரம் நம்மை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு சில படங்கள் வெளியாகும்.  அதாவது சிறிய பட்ஜெட்டில் பெரிய பிரமோஷன் எதுவும் இல்லாமல் வெளியாகி, நல்ல கதை மூலமாக மிகப் பெரிய வெற்றியை பெறும். அப்படி அமைந்த ஒரு படம் தான் லப்பர் பந்து. 2024-இன் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாகவும் இந்தப் படம் அமைந்தது. தமிழரசன் பச்சமுத்து தான் இயக்கிய முதல் படத்திலேயே சிக்சர் அடித்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். கிரிக்கெட்டை மையமாக வைத்து ஹரிஷ் கல்யாண், தினேஷ் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் எல்லாத் தரப்பிலும் பாராட்டுக்களை அள்ளியது. இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த கதாபாத்திர அமைப்புகள், திரைக்கதை, வசனங்கள், அரசியல் என அனைத்தும் அனைவர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றன.

அடுத்து செப்டம்பரில் வெளியான திரைப்படங்களில் பேசும் அளவுக்கு இருந்த படம் மெய்யழகன். 96 இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான படம் மெய்யழகன். விமர்சன ரீதியாக அனைவரிடமும் நல்ல பெயர் பெற்றிருந்தாலும் தொடக்கத்தில் வசூலில் சற்று தடுமாற்றம் இருந்தது. அதேநேரம் ஓ.டி.டி. யில் வெளியான பிறகு இந்தத் திரைப்படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பலரும் திரையரங்கில் பார்க்காமல் விட்டு விட்டோமே என வருத்தத்துடன் சொன்ன திரைப்படம் மெய்யழகன். என்ன செய்வது! சில சமயங்களில் சினிமாவில் இப்படியும் நடக்கும்.

அடுத்தது அக்டோபர் மாதத்தில் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையன்.  மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம். படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வெற்றிப் படமாக அமைந்தாலும் ரஜினியின் திரைப்படங்கள் வசூலிக்கும் மிகப்பெரிய வசூலை ஈட்டவில்லை என்பது குறையாகக் கூறப்பட்டது.

அடுத்து ஜீவா நடிப்பில் வெளியான ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படம் பிளாக். இந்தத் திரைப்படம் ஓரளவுக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது. 

அடுத்தது அக்டோபர் இறுதியில் தீபாவளி படங்களாக மூன்று திரைப்படங்கள் வெளியாகின. இதில் கவின் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர் மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் பெரும் தோல்வியைத் தழுவின. அதேநேரம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மகாராஜாவிற்கு அடுத்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற படமாக அமரன் மாறியது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 2024-ன் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. கோட் திரைப்படத்திற்கு அடுத்து அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் அமரன் (வசூல் – ரூ.335 கோடி). 2024-ன் மிகச்சிறந்த திரைப்படங்களில் டாப் 5-ல் இந்த படம் உள்ளது. இந்த திரைப்படமும் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்திய திரைப்படம் தான். காரணம் இந்தத் திரைப்படம் ராணுவ கதைக்களத்தையும், காதல் மற்றும் குடும்ப பின்னணியையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். தமிழ் சினிமாவில் ராணுவம் சார்ந்து பெரிய அளவில் திரைப்படங்கள் எதுவும் வரவில்லை.  அதுமட்டுமல்லாமல் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் என்னவென்று அனைவருக்கும் தெரியும். பொதுவாக ஒரு படத்தில் ஹீரோ இறந்தால் படம் ஓடாது என்பது தமிழ் சினிமாவில் உள்ள ஒரு மூடநம்பிக்கை. அதை மாற்றிய திரைப்படமாக அமரன் அமைந்தது. என்ன கதை என்று தெரியும், கிளைமாக்ஸ்சில் ஹீரோ இறப்பார் என்றும் தெரியும் ஆனாலும் படத்தின் திரைக்கதை, எடுத்த விதம், அதிலிருந்த எமோஷனல் கனெக்ட் அனைவரையும் ஈர்த்தது. கிளைமாக்சில் அனைவரும் அழுதாலும் அந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கு ரசிகர்கள் திரையரங்குக்குச் சென்றனர். இதுவே இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இந்தப் படம் சற்று தவறினாலும் மிகப்பெரிய தோல்வியைத் தழுவி இருக்கும். ஆனால் இயக்குநரின் நல்ல மேக்கிங்கால் மிகச் சிறந்த படைப்பாக மாறியது. சிவகார்த்திகேயனின் சினிமா கரியரிலும் இந்தப் படம் முக்கிய படமாக அமைந்துள்ளது. வெறும் என்டர்டெய்னர் கதாபாத்திரங்களில் மட்டுமே சிவகார்த்திகேயன் நடிப்பார் என்பதை மாற்றி சீரியஸ் ரோல்களிலும் அவரால் நடிக்க முடியும் என்பதை இப்படம் நிரூபித்துள்ளது.

அடுத்து நவம்பரில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்த திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம். ஜெய் பீம், சூரரைப் போற்று ஆகிய இரு திரைப்படங்களும் ஓடிடியில் தான் வெளிவந்தன. இதனால் திரையரங்கில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவரும் சூர்யாவின் திரைப்படமாக கங்குவா இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்தியன் 2 எப்படி தோல்வியை தழுவியதோ, அதேபோல கங்குவா திரைப்படமும் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. சூர்யாவின் உழைப்பு படம் முழுக்கத் தெரிந்தாலும் படத்தில் அது மட்டுமே இருந்ததால் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஈர்ப்பைப் பெறவில்லை.

கடைசியாக 2024 டிசம்பர் மாதத்தில் வெளியான திரைப்படங்களில் விடுதலை 2 மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், ஓரளவுக்கு வசூலை ஈட்டியது.

தொடக்கத்தில் சொன்னது போலவே ஒரு ஆண்டில் 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானாலும் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே சிறந்த திரைப்படங்களும், வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களும் அமைந்துள்ளன.

இதில் மகாராஜா, லப்பர் பந்து, வாழை மற்றும் அமரன் ஆகிய நான்கு படங்கள் மட்டுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஒருசேர வெற்றியை ஈட்டி உள்ளன. அதாவது 218 படங்களில் வெறும் நான்கு படங்கள் மட்டுமே உண்மையான வெற்றியை ஈட்டி உள்ளன!

இதை சொல்வதற்கு கடினமாக இருந்தாலும் இதுவே உண்மை.  2024 மட்டுமல்ல கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான். சினிமா ரசிகர்கள், சினிமாவில் வேலை பார்ப்பவர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த நிலை மாற வேண்டும் என்பதையெ விரும்புகின்றனர். நாமும் அப்படித்தான் விரும்புகிறோம். 2025-இலாவது நிறைய வெற்றிப் படங்களை தமிழ் சினிமா கொடுக்கட்டும் என்று வாழ்த்துவோம்.

— விஜிலா விஜயன்

Leave a comment

Trending