நேர்மையான குதிரைக் காப்பாளன்
(திபெத் பழங்குடிக் கதையின் மறு ஆக்கம்)
ஷாராஜ்

ஒரு காலத்தில் திபெத் மலைச்சாரலில் இரண்டு இனப் பழங்குடிப் பதிகள் (மலையகப் பழங்குடிகளின் குக்கிராமங்கள்) இருந்தன. மேல்பதி மலையின் அடிவாரத்திலும், கீழ்ப்பதி பள்ளத்தாக்கின் அருகே நதிக்கரைச் சமவெளியிலும் அமைந்திருந்தன.
இரு பதிகளும் சமமான அளவு நிலப்பரப்பும், மக்கள் தொகையும், சொத்துகளும் கொண்டவை. இரு தரப்பு ஆண்களும் ஒரே போல திறமையும். வலிமையும் கொண்டவர்கள். இரு இனக் குழுக்களும் அனைத்து விதத்திலும் சரிநிகர் சமானமாக இருந்தன.
ஆனால், மேல்பதித் தலைவர் பொறாமை கொண்டவர். கீழ்ப்பதிப் பழங்குடி இனத்தவர்களுக்கு தங்கள் அளவுக்கு நிலப்பரப்பும் சொத்துக்களும் இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை.
ஒருநாள் அவர் கீழ்ப்பதித் தலைவரைச் சந்திக்க வந்தார். கீழ்ப்பதித் தலைவர் அவரை வரவேற்று தக்க முறையில் உபசரித்தார்.
பிறகு மேல்ப்பதித் தலைவர் “உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது? உங்கள் பதியில் எவ்வளவு குதிரைகள், யாக் எருமைகள் உள்ளன?” என விசாரித்தார்.
“எங்களுக்கு உங்களுடையதைவிட அதிகமான சொத்துகளோ, கால்நடைகளோ இல்லை. நாங்கள் எவ் விதத்திலும் உங்களைவிட மேம்பட்டவர்கள் அல்ல. ஆனால், எங்களிடம் கடவுளால் அன்பளிக்கப்பட்ட ஒரு குதிரை உள்ளது. பழுப்பு நிறமினதும், கருடனைப் போல அழகிய கண்கள் கொண்டதுமான அக் குதிரை, பாம்பு அரசனின் பேரன். அது காட்டு வெள்ளம் போல ஆற்றலுடன் பாயக் கூடியது. சிறந்த வில்லாளி விடுக்கிற அம்பைவிட வேகமாக ஓடக் கூடியது. அந்த அற்புதமான குதிரைக்கு, நேர்மையான இளைஞன் ஒருவன் பாதுகாவலனாக உள்ளான். அவன் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டான். அந்தக் குதிரையைப் போலவே குதிரைக் காப்பாளன் குறித்தும் நாங்கள் பெருமைப்படுகிறோம்.”
மேல்பதித் தலைவருக்கு அதைக் கேட்டு பொறாமையில் மனம் புகைந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “அந்த அற்புதக் குதிரை குறித்து நீங்கள் சொன்னது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால் உங்கள் குதிரைக்காரன் பொய் சொல்ல மாட்டான் என்பதை நான் நம்ப மாட்டேன்” எனச் சீண்டினார்.
இருவருக்குமிடையே விவாதமாயிற்று.
இறுதியாக மேல்பதித் தலைவர் சொன்னார். “அந்தக் குதிரைக் காப்பாளனுக்கு ஒரு சோதனை வைப்போம். அவன் உண்மையைச் சொன்னால் என்னுடைய ஆட்சிப் பிரதேசத்திலும், கால்நடை மந்தையிலும் பாதியை உங்களுக்குத் தருகிறேன். அவன் சிறிதளவு பொய் சொன்னால் கூட உங்களின் ஆட்சிப் பிரதேசத்திலும், கால்நடை மந்தையிலும் பாதியை எனக்குத் தர வேண்டும். சம்மதமா?”
கீழ்பதித் தலைவர் சவாலுக்கு ஒத்துக்கொண்டார்.
குதிரைக் காப்பாளன் பள்ளத்தாக்கின் விளிம்பில் உள்ள பரந்த புல்வெளிப் பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்தான். மந்தையில் உள்ள குதிரைகள், யாக் எருமைகள் அனைத்தையும் அந்த மேய்ச்சல் நிலத்தில் மேய்த்துப் பராமரித்து வந்தான்.
ஒரு நாள் சூரிய அஸ்தமன சமயத்தில் ஒரு அழகிய இளம் பெண் அங்கே வந்தாள்.
“வழிப்போக்களான நான் வழி தவறி இங்கே வந்துவிட்டேன். நீண்ட தூரம் நடந்து வந்ததால் கால்கள் சோர்ந்துவிட்டன. கரடு முரடான பாதை என்பதால் பாதங்களிலும் வலி தாளவில்லை. சில தினங்கள் இங்கே தங்கி இளைப்பாறிவிட்டுச் செல்ல அனுமதிப்பீர்களா?” கெஞ்சுதலாகக் கேட்டாள்.
ஒரு பெண் – அதுவும் அழகிய இளைஞி – அதுவும் இப்படிக் கெஞ்சிக் கேட்கும்போது, இளைஞனான அவனால் எப்படி மறுக்க முடியும்?
இருப்பினும் சற்று தயக்கத்தோடு, “தாராளமாகத் தங்கலாம். ஆனால், நான் இங்கே தனியாகத்தான் வசிக்கிறேன். எனக்கு இன்னும் மணமாகவில்லை” என்றான்.
அவள் குறும்பாகப் புன்னகைத்தாள். “பயப்படாதீர்கள்! நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன்!”
அவன் வெட்கத்தோடும் மகிழ்ச்சியோடும் சிரித்தான்.
அன்று இரவு அவன் அவளுக்கும் சேர்த்து சமைக்கத் தயாரானபோது, “நான் சமைக்கிறேன்” என்றாள்.
அவள் சமைத்த உணவு சுவையாக இருந்தது. அவன் அதைப் பாராட்டினான். அதில் மகிழ்ந்த அவள், “நான் இங்கே தங்கியிருக்கிற வரை சமையல் வேலையை நானே கவனித்துக்கொள்கிறேன்” என்றாள்.
மறு நாள் காலையில் விடியும் முன்பே எழுந்த அவள், யாக் எருமையின் நீண்ட ரோமங்களால் ஆன குடிசையை சுத்தமாகப் பெருக்கி, தரையைச் சாணமிட்டு வழித்தாள். காலையில் குதிரைக் காப்பாளன் குதிரைகளையும், எருமைகளையும் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதற்கும், அந்தியில் அவன் கால் நடைகளோடு திரும்பியபோது அவற்றைக் கட்டுவதற்கும் உதவினாள். பகல் பொழுதில் ஓடையிலிருந்து தண்ணீர் சுமந்து வந்து நீர்க் கொள்கலன்களை நிரப்பி வைக்கவும், அவனது உடைகளைத் துவைக்கவும், சமைக்கவும் செய்தாள்.
இவை யாவும் அவனுக்கு மிகுந்த உதவியாக இருந்தன. சுவையான உணவும், சுகமான வாழ்க்கையுமாக நாட்கள் இனிதே கழிந்தன. இத்தகைய இன்பத்தை அவன் இதற்கு முன் அனுபவித்ததில்லை. அதனால் அவன் அவளிடம் அவள் போக வேண்டிய இடத்துக்குப் போகவில்லையா என்று கேட்கவில்லை. அவளும் அது பற்றிப் பேச்செடுக்கவில்லை. அவள் இங்கேயே இப்படியே இருந்துவிட்டால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என அவன் அடிக்கடி எண்ணிக்கொண்டான். அவளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் உண்டாயிற்று.
அவளிடம் அதைத் தெரிவிக்கலாம் என ஆசையோடு மாலையில் வீடு திரும்பினான். கால்நடைகளோடு அவன் திரும்பியதுமே அவளும் வந்து அவற்றைக் கட்டி வைப்பதற்கு உதவுவாள். இன்று ஏனோ அவள் வரவில்லை. ஏதேனும் வேலையாக இருப்பாள் என எண்ணிக்கொண்டு, கால்நடைகளைக் கட்டி முடித்துவிட்டு வீட்டுக்குள் வந்தான்.
அவள் நோய்வாய்ப்பட்டு படுத்துக் கிடந்தாள். உடல் முழுதும் வேர்த்திருந்தது. காய்ச்சல் கொதித்தது.
அவன் தனக்கு நோய்வாய்ப்பட்டபோதை விட வருந்தினான். வீட்டு வைத்தியங்கள் செய்து பார்த்தும் காய்ச்சல் தணியவில்லை. நான் இறந்துவிடுவேன் என்று அவள் ஜன்னியில் பிதற்றிக்கொண்டிருந்தாள்.
“அப்படியெல்லாம் ஆகாது. வைத்தியரை அழைத்து வந்து உன்னை குணப்படுத்துகிறேன்.”
“அப்படியானால் மேல்பதி வைத்தியரை அழைத்து வாருங்கள். அவர் எமனின் வாயிலிருந்து கூட உயிர்களைப் பிடுங்கி வரக் கூடியவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.”
அப்போது இரவு கவியத் தொடங்கிவிட்டது. வன்மிருகங்கள், பாம்புகள், வளர்ப்பு நாய்கள் ஏதும் எதிர்ப்பாட்டால் தற்காத்துக்கொள்வதற்கு கையில் கனமான கழியுடன் மலைப் பாதையில் விரைந்து நடந்தான். முற்றிய இரவில் வைத்தியரோடு திரும்பினான்.
நோயாளியின் உடல் சூடு, கண்கள், நாடி ஆகியவற்றைப் பரிசோதித்து முடித்த வைத்தியர், அவளுக்கு மூலிகைச் சாற்றையும், குளிகையையும் கொடுத்தார்.
“இது முதலுதவிதான். மற்றபடி இந்த மருந்துகளால் இவளின் நோய் தீராது. வேறு எந்த மருந்துகளாலும் தீர்க்கவும் முடியாது” என்றார்.
“ஏன்?” குதிரைக் காப்பாளன் திகைப்போடு கேட்டான்.
“இது சாதாரண நோய் அல்ல. தெய்வக் குற்றத்தால் உண்டானது. என்னாலோ, வேறு எந்த வைத்தியராலோ குணப்படுத்த இயலாது. ஒரே ஒரு வைத்தியம்தான் உண்டு. ஆனால், அதைச் செய்ய உன்னால் இயலாது என்று நினைக்கிறேன்.”
“இவளுக்காக எனது சதையை வேண்டுமானாலும் வெட்டிக் கொடுப்பேன்! எனது உதிரத்தால் அவளை அபிஷேகிக்க வேண்டுமாயினும் செய்வேன்!” அவன் காதலின் உணர்ச்சிப்பெருக்கோடு சொன்னான்.
அவளது கண்கள் மின்னின. முகத்தில் வேதனையும் பூரிப்பும் கலந்த உணர்ச்சி வெளிப்பட்டது.
“உன்னுடைய சதையாலோ, குருதியாலோ ஒரு பலனுமில்லை. கடவுள் பரிசளித்ததும், பாம்பின் பேரனுமான பழுப்புக் குதிரையின் இதயத்தையும் ஈரலையும் சாப்பிட்டால்தான் இவளது நோய் குணமாகும். அதைத் தவிர வேறு எந்த மருந்தாலும் இவளது உயிரைக் காப்பாற்ற முடியாது.”
அவன் தனது உயிரே போனது போல அதிர்ச்சியுற்றான்.
“அய்யோ…! அந்தக் குதிரையா….? வேண்டவே, வேண்டாம்! அதைக் கொன்று என் உயிரைக் காப்பாற்றுவதா? அதற்கு பதிலாக நான் இறப்பதே மேல்!” அவள் வேதனையோடு சொன்னாள்.
குதிரைக் காப்பாளன் அப்படியே சிலையாக உறைந்திருந்தான்.
வைத்தியர் இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, “என்ன செய்வது என்று யோசித்து முடிவெடு. எனக்கு நேரமாகிறது” என்று, காணிக்கை வாங்கிக்கொண்டு கிளம்விட்டார்.
அவன் உயிருக்குயிராக நேசிக்கிற குதிரை அது. ஆனால், இப்போது அதைவிட இந்தப் பெண்ணை நேசித்தான். அவளுக்காகத் தன் உயிரையும் கூட பலியாகக் கொடுக்கத் தயாராக இருந்தான்.
அவனது கண்களிலிருந்து கண்ணீர்த் தாரைகள் வழிந்தன.
“உங்களின் குதிரையை எண்ணித்தான் அழுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். வருந்தாதீர்கள். வைத்தியர் சொன்னதைச் செய்ய வேண்டாம். சில நாட்கள் பழக்கமுள்ள இந்த அபலைக்காக, உங்களின் உயிருக்கு உயிரான தெய்வீகக் குதிரையைக் கொல்ல வேண்டாம்! நான் இறந்த பிறகு உங்கள் கையாலேயே என்னைப் புதைத்தால் போதும். நீங்கள் என்னை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பது தெரியும். நான் இறந்தாலும் உங்களை விட்டுப் போக மாட்டேன். ஆவியாக இங்கேயேதான் சுற்றிக்கொண்டிருப்பேன்.” அவளும் கண்ணீரோடு சொன்னாள்.
அவன் அவளது படுக்கை அருகே அமர்ந்து அவளது கைகளைப் பற்றிக்கொண்டான். “இல்லை! எனக்கு உன்னைவிடப் பெரியது எதுவும் இல்லை. நான் உன்னை சாக விட மாட்டேன்…!”
அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டு விரைவாக எழுந்தான். வீட்டில் வைத்துள்ள அரிவாள், பட்டாக் கத்தி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, குடிசையை விட்டு வெளியேறினான்.
*******
சற்று நேரம் கழிந்த பின் தூரத்தில் ஓடைப் பக்கமாக குதிரைக் கனைப்புச் சத்தமும், பிறகு அதன் மரண ஓலமும் கேட்டது. நள்ளிரவு வேளையில் குதிரைக் காப்பாளன் உடல் தளர்வோடும், ஆற்றவியலாத வேதனை கொண்ட முகத்தோடும் திரும்பினான். அவனது ஒரு கையில் கழுவப்பட்ட அரிவாளும், பட்டாக் கத்தியும் இருந்தன. மறு கையில், காட்டுச் சேம்பு இலையில் பொதியப்பட்ட குதிரை இதயமும், ஈரலும்.
அவனே அடுப்பு மூட்டி அதைச் சமைத்து எடுத்து வந்தான். நோயாளிப் பெண்ணை எழுப்பி அமர வைத்து, மாமிச வறுவலைக் கொடுத்தான். ஜன்னிக் காய்ச்சலில் நடுங்கியபடியே அவள் அதைத் தின்னத் தொடங்கினாள். நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவளால் சரியாக சாப்பிட இயலவில்லை. வாய்க்கு ருசியும் தெரியவில்லை. குமட்டிக்கொண்டு வரவும் செய்தது. இதய இறைச்சியில் ஒரு துண்டு, ஈரல் இறைச்சியில் ஒரு துண்டு மட்டுமே தின்றவள், “பசியில்லை. போதும். குமட்டுகிறது” என்றாள்.
“பசியோ ருசியோ இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இது உணவல்ல. உன் நோயை குணமாக்கி, உயிர் காக்கவிருக்கிற அருமருந்து. என்னுடைய உயிரும் கூட. சாப்பிடு.” வற்புறுத்தினான்.
அவள் மேலும் சில துண்டுகளைத் தின்றாள். அதற்கு மேல் முடியவில்லை என மறுத்துவிட்டாள்.
“சரி, மிச்சத்தை நாளைக்கு சாப்பிட்டுக்கொள்ளலாம்” என அவனும் விட்டுவிட்டான்.
ஆச்சரியப்படும் வகையில் அவளுக்கு அப்போதே ஜன்னி நடுக்கம் நின்றுவிட்டிருந்தது. காய்ச்சலின் சூடும் தணிந்திருந்தது.
“அருமருந்து வேலை செய்யத் தொடங்கிவிட்டது. விரைவில் குணமாகிவிடுவாய். அமைதியாகத் தூங்கு” என்றான்.
அவளும் படுத்து அமைதியாகத்ப் தூங்கலானாள்.
அவன் உறங்கவில்லை. எப்படி உறக்கம் வரும்? கடவுளின் அன்பளிப்பும், அவனது உயிர் நேசத்துக்கு உரியதுமான அற்புதக் குதிரையைத் தன் கையாலேயே வெட்டிக் கொன்றுவிட்டானே….! குற்ற உணர்ச்சியோடு நினைத்து நினைத்து மௌனமாகக் கண்ணீர் உகுத்தபடியே விடிகிற வரையில் விழித்துக்கொண்டிருந்தான்.
நோயாளிப் பெண் விழித்தெழுந்தாள். அப்போது அவளுக்கு காய்ச்சல் பெருமளவு குணமாகியிருந்தது. அதைக் கண்டு அவன் மிக மகிழ்ந்தான். குற்ற உணர்ச்சியும் சற்று மட்டுப்பட்டது.
“மீதமுள்ள இறைச்சியைக் காலையில் சாப்பிட்டால் முற்றிலும் குணமாகிவிடுவாய்” என்றான்.
“உங்களின் முகம் வீங்கியிருக்கிறதே…! கண்களும் வீங்கிச் சிவந்துள்ளன. இரவு முழுதும் தூங்கவில்லையா?” அவள் விசாரித்தாள்.
“அது பரவாயில்லை. நீ குணமானதே போதும்.”
அவள் வழக்கம் போல வீட்டு வேலைகள் செய்ய முற்பட்டாள்.
“உனக்குப் பூரண குணமாகிறவரை நீ ஒரு வேலையும் செய்யக் கூடாது. எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்ற அவனே வீடு, வாசல் பெருக்கி, சமையலும் செய்தான். மீதம் இருந்த குதிரை வறுவலை சூடு படுத்தி அவளுக்குத் தின்னக் கொடுத்தான்.
“இப்போதுதான் சுவை தெரிகிறது. அற்புதக் குதிரையின் இதயம், அமிர்தம் போல் சுவையாக இருக்கிறது” என்றவள், வெட்கப்பட்டபடியே, ”என்றாலும் உங்களின் இனிமையான இதயத்துக்கு அது ஈடாகாது” என்றாள்.
அவனுக்கு அதைக் கேட்கையில் இதயம் துள்ளியது.
என்றும் இல்லாதபடி அதீத உற்சாகத்தோடு அன்று கால்நடைகளை ஓட்டிச் சென்றான். மேய்ச்சல் நிலத்தில் சீழ்க்கையடித்தும், நடனமாடியும் களித்தான்.
மாலையில் அவன் ஆவலோடு வீடு திரும்பினான்.
வீட்டில் அவளைக் காணவில்லை.
தண்ணீர் எடுக்கவோ, விறகு பொறுக்கவோ சென்றிருப்பாள் என்று காத்திருந்தான். நெடு நேரமாகியும் அவள் திரும்பவில்லை. ஓடைக்கும், சுற்று முற்றும் சென்று கூவி அழைத்துத் தேடிப் பார்த்தான். கிடைக்கவே இல்லை. குழப்பமும் பதற்றமுமாகக் குடிசைக்குத் திரும்பினான். அதன் பிறகுதான் அங்கே அவளின் உடைமைகளோ, உடைகளோ எதுவும் இல்லை என்பது தெரிந்தது.
அவள் வீட்டை விட்டும், அவனை விட்டும் சென்றுவிட்டாள் என்பதைப் புரிந்துகொண்டான்.
அப்படி இருக்காது என்று அவனது மனம் சொன்னது. இருக்கக் கூடாது என அவனது இதயம் விரும்பியது. அடுத்த நாள் திரும்பி வந்துவிடுவாள் என நம்பினான்.
போனவள் போனவள்தான். திரும்பி வரவே இல்லை.
*******
அதற்கு அடுத்த நாள் மேல்பதித் தலைவர் தனது பரிவாரங்களோடு கீழ்ப்பதித் தலைவர் வீட்டுக்கு வருகை புரிந்தார்.
“உங்கள் குதிரைக் காப்பாளன் நேர்மையானவன் என்றீர்களே…! அவன் நேர்மையானவனாக இருக்க மாட்டான் என்று நான் சொன்னது நிரூபணம் ஆகிவிட்டது.”
“எப்படிச் சொல்கிறீர்கள்?”
அவர் நடந்த சம்பவத்தைத் தெரிவித்தார்.
குதிரைக் காப்பாளனின் வீட்டுக்கு வந்து தங்கியிருந்த அழகிய பெண் அவரது மகள்தான். அவர் அனுப்பித்தான் அவள் அங்கு வந்திருந்தாள். அவளுக்குக் காய்ச்சலும், ஜன்னியும் வந்ததெல்லாம் விஷப் பூடு மூலமாக அவளே ஏற்படுத்திக்கொண்டது. மேல்பதி வைத்தியரை வரவழைக்க வைத்ததும், அவரது சிகிச்சையுமெல்லாம் தலைவரின் ஏற்பாடே. வாஸ்தவத்தில் வைத்தியர் அவரது மகளுக்குக் கொடுத்த மூலிகைச் சாற்றினாலும், குளிகையாலும்தான் அவளின் நோய் குணமாயிற்று. அவளது காய்ச்சல் தெய்வக் குற்றத்தால் உண்டானது என்றும், அற்புதக் குதிரையின் இதயமும், ஈரலும் மூலமே அதை குணப்படுத்த இயலும் என்றும் அவர் சொன்னது பொய். அந்தக் குதிரையைக் கொல்ல வைக்க மேல்பதித் தலைவர் செய்த சதி.
கீழ்ப்பதித் தலைவருக்கு அதைக் கேட்டு தலையில் இடி விழுந்தது போலாயிற்று.
“ஏன் இப்படிச் செய்தீர்கள்? தெய்வாம்சம் கொண்ட குதிரையை, வஞ்சகமான முறையில் கொன்றுவிட்டீர்களே….! எங்களின் ஊருக்கே நல்லதிர்ஷ்டம் கொடுத்து வந்தது அந்தக் குதிரைதான். அதைக் கொல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது? எதற்காக இப்படிச் செய்தீர்கள்?” ஆற்றாமையும் கோபமுமாக அவர் கேட்டார்.
“சவாலில் ஜெயிப்பதற்காகதான்…!” மேல்பதித் தலைவர் வஞ்சகச் சிரிப்போடு சொன்னார்.
“உங்கள் குதிரைக் காப்பாளன் நேர்மையானவணாக இருந்தால் இப்படிச் செய்திருப்பானா…?”
கீழ்ப்பதித் தலைவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
“அவன் அவ்வாறு செய்ததற்கு ஏதாவது காரணம் இருக்கும். அவனைக் கேட்டால்தான் தெரியும்” என சமாளிக்க முற்பட்டார்.
“யாரோ ஒரு பெண்ணுக்காக அப்பேர்ப்பட்ட குதிரையைக் கொல்பவனிடம் என்ன நேர்மை இருக்க முடியும்? நீங்களே கூப்பிட்டுக் கேளுங்கள். என்ன சொல்கிறான் என்றுதான் கேட்போமே…! நடந்த சம்பவத்தை அறிந்ததாகக் காட்டிக்கொள்ளாமல் அந்தக் குதிரை பற்றி விசாரியுங்கள். அதைக் கொன்றதைக் கூட சொல்ல மாட்டான். ஏதாவது பொய் சொல்லித் தப்பிக்கத்தான் பார்ப்பான். நான் சொன்னது முழுமையாக நிரூபணம் ஆகிவிடும்.”
குதிரைக் காப்பாளன் வரவழைக்கப்பட்டான்.
“அற்புதக் குதிரை எப்படி இருக்கிறது?” கீழ்ப்பதித் தலைவர் கேட்டார்.
அவனது முகம் தாழ்ந்தது. அவர் முன்பு மண்டியிட்டவன் குற்ற உணர்ச்சியோடு சொன்னான். “ஒரு பெண்ணின் கொடூரமான நோயை குணப்படுத்தி அவளது உயிரைக் காப்பதற்காக நான் அதைக் கொல்ல வேண்டியதாகிவிட்டது. நான் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அது தெய்வக் குற்றமும் கூட. அதற்கு என்ன தண்டனையோ, அதைக் கொடுங்கள்!”
கீழ்ப்பதித் தலைவரின் முகம் வேதனையிலும் புன்னகையோடு மேல்பதித் தலைவரையும், அவரது பரிவாரங்களையும் திரும்பிப் பார்த்தது. “இவன் நேர்மையானவன், பொய் சொல்லாதவன் என்பது இப்போது நிரூபணம் ஆகிவிட்டதல்லவா?”
மேல்பதித் தலைவர் ஏமாற்றத்தோடும், வருத்தத்தோடும் ஒப்புக்கொண்டார்.
மறு நாள் அவர் தனது ஆட்சிப் பிரதேசத்திலும், கால் நடைகளிலும் பாதியை கீழ்ப்பதித் தலைவருக்கு வழங்கினார்.
குதிரைக் காப்பாளன் நிரபராதி என்பதால் அவனுக்குத் தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை.
அது மட்டுமல்ல. அவனது நேர்மையையும், வாய்மையையும், தனது மகள் மீது அவன் கொண்ட மெய்க்காதலையும் மெச்சிய மேல்ப்பதித் தலைவர், அவனுக்கே அவரது மகளை மணம் முடித்துக் கொடுத்து, தனக்கு அடுத்த வாரிசாக ஆக்கிக்கொண்டார்.
கொல்லப்பட்ட தெய்வீகக் குதிரையின் ப்ரம்மாண்டமான சுதைச் சிற்பம் கீழ்ப்பதிக் கோவிலில் வடிக்கப்பட்டு, மக்கள் வழிபாட்டுக்கு உரியதாக ஆயிற்று.
இரவுப் பொழுதுகளில் அந்தக் குதிரையின் ஆவி, பள்ளத்தாக்கின் விளிம்பில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் சுற்றித் திரிவதாகவும், அதன் குளம்படிச் சத்தங்களும், கனைப்பொலிகளும் வெகு தூரத்துக்குக் கேட்பதாகவும் பழங்குடி மக்கள் இன்னமும் பேசிக்கொள்கிறார்கள்.
*******
பின் குறிப்பு:
மூலக்கதையில் இடம்பெறும் பெண், மேல்பதித் தலைவரின் மனைவியாவாள். அதனால் கதையில் காதலோ, முடிவில் திருமணமோ இராது. இவை இருந்தால் சுவையாகவும், பொருத்தமாகவும் இருக்குமே என்பதற்காக நான் அப் பெண்ணைத் தலைவரின் மகளாக மாற்றியுள்ளேன்.
மூலக் கதையில் வைத்தியர் பாத்திரம் இல்லை. மாறாக, நோய்வாய்ப்பட்ட பெண்ணே அற்புதக் குதிரையின் இதயமும், ஈரலும்தான் உரிய மருந்து என்று சொல்வதாக இருக்கும். அது அவ்வளவாகப் பொருந்தாது என்பதால் வைத்தியர் பாத்திரத்தைச் சேர்த்து, அவர் அதைச் சொல்வதாக மாற்றினேன். கொல்லப்பட்ட தெய்வீகக் குதிரைக்கு சிற்பம், வழிபாடு ஆகியவையும் நான் கூடுதலாகச் சேர்த்தவை.

Leave a comment