பாட்டொன்று கேட்டேன் 9
பூ விழிக் கண்ணன்
ஒருவருக்காகவா? இருவருக்காகவா?
ஜி. சிவக்குமார்

பாடல் : புன்னகை மன்னன் பூ விழிக் கண்ணன்
படம் : இரு கோடுகள்
இசை : வி.குமார்
பாடல் : கவிஞர் வாலி
நவராத்திரி என்றால்,ஒன்பது இரவுகள் என்று பொருள். மகிஷாசுரனை துர்க்கை அம்மன் கொன்றொழித்ததைக் கொண்டாடும் பண்டிகை. அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்களும்,துர்க்கையின் ஒன்பது வடிவங்களுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
கொலு என்றால் அழகு என்று பொருள். கொலு என்பது நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து. பெரும்பாலும் இந்தியாவின் தென் பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் செய்யப்படுகிற வழிபாட்டு முறையாகும்.
பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான இரு கோடுகள் திரைப்படத்தில்,நவராத்ரியில் கொலு மண்டபத்தில் எனத் துவங்கும் பாடல்,காளையர்க்கு ஓரிரவு சிவராத்திரி.ஆனால் நங்கையர்க்கோ ஒன்பது நாள் நவராத்திரி என்ற பாடலைப் போல், நவராத்திரியைப் பற்றியதோ,கொலுவைப் பற்றியதோ அல்ல.
இரு பெண்களின் உணர்வுகளின் கொந்தளிப்பைப் பேசுகிற பாடல்
ஜானகி,கோபிநாத்தின் முதல் மனைவி.காசியில் வசித்த இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து விடுகின்றனர். கோபிநாத்திற்கு ஜெயந்தியுடன் மறுமணம் நடக்கிறது.அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை ஜெயந்தியும் மற்றவர்களும் அறியாத சூழலில்,கோபிநாத் உதவியாளராகப் பணிபுரியும் அலுவலகத்திற்கே மாவட்ட ஆட்சியராக ஜானகி வருகிறார்.அவர்கள் இருவருக்குமிடையே உறவு இருப்பதாக பரப்பப்பட்ட வதந்தி, ஜெயந்தியை வந்தடைய அவள் அதிர்கிறாள்.அந்த அதிர்வுகளுடனே, ஜானகியின் அழைப்பை ஏற்று ஜானகியின் வீட்டுக்கு கொலு பார்க்கச் செல்கிறாள். கொலுவில் பாடல்கள் பாடும் வழக்கத்திகேற்ப இருவரும் பாடுவதாக அமைந்த பாடல்.
நவராத்ரியில்
கொலு மண்டபத்தில்
இவள் பாடலிலே ஒரு கேள்வி பிறக்கும்
என்று கண்ணீர் வழிய ஜெயா பாட,
நவராத்ரியில்
கொலு மண்டபத்தில்
இவள் பாடலிலே பதில் மறைந்திருக்கும்
என்று ஜானகி பாடுகிறாள்.
ஜெயா பாடலை இப்படித் தொடர்கிறாள்.
புன்னகை மன்னன் பூ விழிக் கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
ஜானகியின் பதிலைப் பாருங்கள்
புன்னகை மன்னன் பூ விழிக் கண்ணன் இருவருக்காக
இந்த பாமா, ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக
போராட்டம், ஒரு ஆடவனை மணந்த இரு பெண்களுக்கிடையே நடக்கிறது.பாமா,ருக்மணி என இருவரை மணந்த கண்ணனையும்,முருகனையும் தவிர வேறு யார் இந்தப் பாடல் சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்க முடியும்?
தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
இப்படி ஜெயா பதட்டத்தில் அடுத்து துணைக்கழைக்கிற கடவுள் முருகனும்,வள்ளி,தெய்வானை என இரு மனைவியரோடு வாழ்பவன்தானே.
அதனால் ஜானகியின் வேலை சுலபமாகிறது.
அவன் தேவானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே
தடுமாறிய ஜெயா,மிகத் துல்லியமாக பெண்களின் பலவீனமானதொரு புள்ளியைக் குறி வைத்துக் தாக்குகிறாள்.
மாலையிட்டால் அது ஓர் முறை தான் என நினைப்பது பெண்மையன்றோ
சட்டென்று ஜானகி,பழியை இறைவன் மேல் போடுகிறாள்
ஒரு மாலையை இரு தோளுக்கு சூடுதல் இறைவன் தன்மையன்றோ
அது ஏட்டில் உள்ள கதை என்று குமுறும் ஜெயாவிடம்,
இது இன்றும் தொடரும் கதை என்கிறாள் ஜானகி.
இருக்கட்டுமே.அது கதைதானே என்கிற தொனியில், அது பொம்மை கல்யாணம் என்கிற ஜெயாவுக்கு இப்படியொரு பதில் வருகிறது.
இது உண்மைக் கல்யாணம்
கணவன் தவறு செய்து விட்டான்.தன்னைப் போன்ற ஒரு அப்பாவிப் பெண் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அதற்காக அவளை ஏற்றுக் கொண்டால் தன் வாழ்வு என்னவாவது?இறுதி வரை போராடத் துணிந்த ஜெயா,தன் உரிமையை இப்படி நிலைநாட்டுகிறாள்
கொஞ்சும் கணவன் குங்குமம் வைப்பது ஒருத்தியின் நெற்றியிலே
ஜானகியிடமும் சரியான ஆயுதமிருக்கிறதே.
அந்தக் குங்குமம் வைத்தவன் சங்கமமானது இருவரின் நெஞ்சினிலே
உன் பக்கம் நியாயமிருக்கலாம்.அனால்,ஒரு வீட்டில் இரு பெண்கள் ஒருவனின் மனைவிகளாக எப்படி சேர்ந்து வாழ முடியும்? என்பதைத்தான் இப்படிக் கேட்கிறாள் ஜெயா.
ஈருயிர் என்றும் ஓர் உடல் தன்னில் இருந்திட வழியுண்டோ?
இத்தனை பதில்களைச் சொன்ன ஜானகியிடம் இதற்காக பதிலிருக்காது.
ஒரு முகத்துக்கு இரண்டு விழிகளை வைத்த இயற்கையில் தவறுண்டோ?
செய்தவதறியாத விரக்தியில்,ஜெயா கேட்கிறாள்.
இந்த கேள்விக்கு பதில் ஏது?
நீ கேள்வி கேட்கும் உரிமையுள்ள இடத்தில் இருக்கிறாய்.என் நிலைமை எவ்வளவு மோசம் என்பதை இப்படிக் கேட்கிறாள் ஜானகி.
சிலர் வாழ்வுக்கு பொருள் ஏது
கையறு நிலை கோபமாக மாறுகிறது.உன்னுடையது முறை தவறிய உறவு என்று கடைசி ஆயுதத்தைப் பயன்படுத்துகிறாள் ஜெயா
அது உறவின் மாறாட்டம்
தன் வாழ்வுக்காக மன்றாடும் ஜானகியும் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்துகிறாள்.
இது உரிமைப் போராட்டம்
இருக்குமோ இருக்காதோ என்ற குழப்பத்தில் வந்த ஜெயா, புன்னகை மன்னன் பூ விழிக் கண்ணன் ருக்மணிக்காக.அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக என்று பாட,உடனே ஜானகி, புன்னகை மன்னன் பூ விழிக் கண்ணன் இருவருக்காக.இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக என்று பாடியதுமே ஜெயாவுக்கு உண்மை தெரிந்து விடுகிறது.பெண்ணின் காலை பெண் அறிவாளல்லவா?
அது பொம்மைக் கல்யாணம் என்று ஜெயா சொன்னதற்கு,இது உண்மைக் கல்யாணம் என்று ஜானகி சொன்னதும் அதிர்ந்த போன ஜெயா பாடலை நிறுத்தி விட்டு அழுகிறாள்.கொலுவிற்கு வந்தவர்கள் எல்லாம் இதைப் பார்க்கிறார்களே என்று ஜானகி,ஜெயாவைத் தொடர்ந்து பாடச் சொல்லி வற்புறுத்துகிறாள்.புன்னகை மன்னன் பூ விழிக் கண்ணன் என்று ஜானகி மீண்டும் தொடங்கியதும்,இருவருக்காக என்று அவள் சொல்லுமுன் வேகத்தோடு ருக்மணிக்காக என்று தன் உரிமையை நிலை நாட்டுகிறாள்.
பாடல் வரிகளுக்கான இடைவெளி, குழந்தைகளின் அழகான நடனங்களால் நிரப்பப்படுகிறது.கொலு மண்டபத்தில் என்று படியிறங்கி வரும் ஜானகி பாடுகையில் கண்ணாடிக்குள் கொலுவின் பிம்பம் தெரிவது,வீட்டினுள் இருக்கும் சிறு, நீர் நிலையில் இருவரின் பிம்பங்களும் தெரிந்து கலைவது. தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே என ஜெயா,முருகனின் அருகில் வள்ளியின் சிலையை நெருக்கமாக நகர்த்தி வைக்க, அவன் தேவானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே என்று ஜானகி,தெய்வானையின் சிலையை எடுத்து முருகனின் வலப் பக்கம் வைப்பது என இயக்குனர் பாலச்சந்தர் நானும் இருக்கிறேன் என்கிறார்.
ஜெயாவாக ஜெயந்தியும்,ஜானகியாக சௌகார் ஜானகியும் கிட்டத்தட்ட சொந்தப் பெயரிலேயே நடித்திருக்கின்றனர்.இருவரின் நடிப்புமே,சபாஷ்,சரியான போட்டி என்று நம்மைச் சொல்ல வைக்கின்றன.
பாடல் முழுவதுமே ஜெயந்தியின் குரலும்,உடல் மொழியும் ஓங்கி ஒலிக்க,நேர் மாறாக சௌகார் ஜானகியின் குரலும்,உடல் மொழியும் மன்றாடுதலாக அமைக்கப்பட்டிருக்கும்.கதைப்படி,சௌகார் ஜானகி,ஜெயந்தியின் கணவனின் உயர் அதிகாரி என்பதை நினைவில் கொண்டால்,இந்த முரணை, இன்னும் முழுமையாக உணர முடியும்.
மிகப் பெரிய ஆச்சர்யமாக ஜெயந்திக்குப் பாடுகிற ஜமுனா ராணியின் குரலும்,சௌகார் ஜானகிக்குப் பாடுகிற சுசீலாவின் குரலும் கூட மேற்சொன்னதற்குப் பொருத்தமாக இருக்கிறது.
ஒரு ஆணுக்காக இரண்டு பெண்கள் உரிமை கோருகிற இந்தக் காட்சியமைப்பும்,பாடல் வரிகளும்,இசையும் பிரிக்க முடியாதபடி ஒத்திசைந்து பாடலை,மிகத் தீவிரமான உணர்ச்சிக் கொந்தளிப்புக்குள்ளாக்குகின்றன.
சரி,நீங்கள் சொல்லுங்கள்.
பூவிழிக் கண்ணன் உரிமை கொண்டாடும் ருக்மணிக்காகவா? மன்றாடும் பாமாவுக்காகவா? அல்லது இருவருக்காகவா?

Leave a comment