பாணனும் பொறாட்டும் (பகுதி 1)

மலையாளப்படைப்பு: டாக்டர் வி.ஆர்.ஜெயசீலன்
தமிழாக்கம் : சுஜானா அசீஸ் & அகமது கனி

(முனைவர் வி.ஆர். ஜெயசீலன் எழுதிய ரூபாந்தரம் என்னும் மலையாளநூலில் இடம்பெற்றுள்ள பாணனும் பொறாட்டும் என்னும் கட்டுரையின் தமிழாக்கம்)

பாணத்தூர் என்றொரு ஊரில்
பண்டொரு பாணன் பெரும்பாணன்
பாட்டொன்றும் பாடாமல் பாணத்தியை கட்டாமல்
பட்டுடுத்தி நடந்த பாணன்..
காண்போரெல்லாம் கேட்பார்கள்:
பாணனே, என்ன நீ பாட்டு பாடாமல் பாணத்தியை கட்டாமல் 
பட்டுடுத்தி நடக்கிறாய்?

அப்போது பாணன் சொல்வார்:

பண்டு நான் கட்டிய பாணத்தி அல்லவோ?
பண்டு நான் பாடிய பாட்டல்லவோ?
மக்களே நீங்களெல்லாம்..
பின்னொன்றுள்ளது மக்களே..
இப்பாணன் பட்டுடுத்தி நடப்பதல்ல;
அதை காணும்போது உங்களுக்கு பொறுக்கமுடியாவிட்டால்
பாணத்தூர் பாணனின்
பட்டு பட்டல்லவென்று சொல்லி
முணுமுணுத்துப் போங்களேன்.

  __ குஞ்ஞுண்ணி

பரம்பரையாக அறிவுத்துறை மற்றும் கலைத்துறை படைப்பாளிகளான இப்பாணர்கள் ஆதி கவிச்சமூகங்களாக விளங்கினர். அவர்கள், கவிதையும் வாழ்க்கையும் அல்லது பாட்டும் வாழ்க்கையும் என இரண்டறக் கலந்து வாழ்ந்த சமூகம் ஆகும். மேலும் கூடை-வட்டி முனைதல்,  பாட்டு கட்டுதல்,  குளம் வெட்டல்,  வேளாண் பணிகள்,  ஓவியம் வரைதல், நாட்டியமாடல் என இவையெல்லாம் ஆதி சமூகத்தில் ஒரே வாழ்க்கைமுறையாக இருந்தது. அதற்கு வர்க்க-வர்ண வேறுபாடுகள் இருக்கவில்லை.

—-

பொருளாதார ஆதிக்கம் சமூகத்தை சாதிகளாயும் துணைச்சாதிகளாயும் வேறுபடுத்திற்று. பாணர்கள் தீண்டாதவர்களாக ஆக்கப்பட்டனர்.

பாணன்-பாணத்தி பொறாட்டில் பாணனும் பாணத்தியும் சாட்சாத் திருவரங்கனும் தேவியும் ஆவார். பாணன் ஓண நாளிலே செழுமை முழக்கமிட்டு விழிப்பூட்டி அதே போக்கில் தொடங்குவார்:

”சூரியன் முகம் நோக்கி இருந்துகொண்டாளம்மா
சந்திரன் முகம் நோக்கி கரந்துகொண்டாளல்லோ
 முற்றத்து நில்குன்ன வரிக்கப்பிலா முறிச்சு
 வாடாத தோல்கொண்டு எண்டம்மா பால் காச்சி
 வெண்ணெயால் மூணு அடுப்பு அமச்சாளல்லோ
 தாந்தம் கொண்டு எண்டம்மா பால் காச்சி”

பறையன் – பறைச்சி பொறாட்டில், கேள்விக்காரன் பறையனிடம் சொல்வதைக் கவனிக்கவும்:

“ நீ சாதியில் பறையன் ஆவாய். இங்கு குளம், கோவில் எல்லாம் இருக்கின்றன. அவற்றைத் தீண்டி அசுத்தமாக்காதே. தூரத்தில் தள்ளி நிற்பாயாக. அதற்கு பறையனின் மறுமொழியாவது:

“ முன்னில் பிறந்ததும் எங்கள் குலம்
புதுமையாய் பூணூல் தரித்ததும் எங்கள் குலம்
 சங்கத்தை வென்றதும் எங்கள் குலம்
 பதினெட்டு சாதியாய் அவதரித்ததும் எங்கள் குலம்

என்றும்

 ஆதியிலே குருவுரு நாட்டுக்குள்ளே
 அப்புறமாம் இப்புறத்து பெரும்பாருளே
 வீதியிலே விழுந்நு சிவநாத வித்து
வெளிகிந்தாயிரத்தி எட்டினளம் பொங்கி
 சோதியிலே சொலிமுதலாய்
 தெயிந்தவாரும் சுக்லவும் சோணிதத்தால்
 எடுத்த பாண்டத்திற்கு ஏது ஜாதி?
கருக்கொண்ட நாட்டில், பெண்களின் கருப்பையில் சிவனின் வித்து விழுந்து முளைத்து வளர்ந்து; சுக்கிலமும் இரத்தமும் கொண்டு வடிவெடுத்த உடம்பில் ஏது சாதி?

ஏது தீண்டாமை?

அடுத்துவரும் இரண்டு வரிகள் மிக உயரிய மனித நேயத்தை குறிக்கின்றன.

தக்கவும் தரவுமில்ல ஜாதியில் பேதமில்ல பங்குவான் போல் ஆணும் பெண்ணும் பாரிதில் ஜாதி ரண்டு

பாலக்காட்டில் பாணர் சமூகத்திலிருந்து உருவாகி வந்த ஒரு கலைவடிவம்தான் புறாட்டு நாடகம் என்கிற புறாட்டுகளி. புறாட்டுகளி – புறத்துள்ள ஆட்டம் என்பது மருவி புறம்+ஆட்டம் புறாட்டமாக மாறியிருக்கலாம். கிராமம் என்பது சமூகத்தின் உயர்குல் சாதியினரின் மையமாக இருந்தது. அத்தகைய கிராமத்தின் புறம்பே இருந்து கீழ்நிலை மக்கள் வசித்து வந்தனர்.

‘கிராமத்தின் புறத்திங்ஙு வசிக்குன்ன /
‘சாமர்’ நாயகன் தன்டே கிடாத்தி ஞான்’

என்கிற ‘சண்டாளபிக்ஷுக’ எனும் நூலில் காணப்படும் இவ்விரண்டு வரிகள் கீழ்நிலை மக்களுடைய வாழ்விடம் ஊருக்குப் புறம்பே இருந்ததாக குறிப்பிடுகிறது.

பாணர்களின் ‘ஏழுவட்டம்களி’யில் விறகு சேகரிக்க காட்டிற்குச் சென்ற பாணனையும் பாணத்தியையும் குறித்து கூறப்படுகிறது. வழிதவறி காட்டில் அகப்பட்டு திரும்பி வர முடியாத அவர்களை தாய்த்தெய்வம், இரவு முழுவதும் மரக்கொடிகள் சூழக் கட்டி காப்பாற்றியுள்ளது. இந்த ஓர் அனுபவத்தை நினந்து தெய்வீக துதிகளும் சுலோகங்களும் கொண்டதாகும் இவ் ஏழுவட்டங் களி ஆகும். விளக்கேற்றி முண்டு பிடித்து தொடங்கும் ஏழுவட்டங்களி உண்மையில் ஒரு மரபாக இருக்கிறது. இரவு ஒன்பது மணி தொடங்கி விடியும் வரை சுலோகங்கள் மட்டும் சொல்லப்படுகிற வட்டங்களி பார்வையாளர்களுக்கு அலுப்பூட்டியது என்கிற காரணத்தால் பிற்காலத்தில், புறாட்டுகள் பாட்டு கட்டி உருவாக்கப்பட்டிருக்கலாம்.

மரபிலிருந்து சிதைந்தது என்கிற அர்த்தத்திலும் இது புறாட்டுகள் ஆகின்றன.

பாலக்காட்டிற்கே உரிய கலைகளில், “கண்ணியார்களி புறாட்டு” “புறாட்டுகளி நாடகம் என்கிற பாணப்புறாட்டு” ஆகிய இரண்டும்  முதன்மையானவை.

தமிழ்க் கலாச்சாரம் விரவி நிற்கிற பாலக்காடு மாவட்டத்தின் கிழக்குப் பிரதேசங்களான சித்தூர், ஆலத்தூர் பகுதிகளில் தமிழ் மொழியும் தமிழ் ஆச்சாரங்களும் புறாட்டு நாடகத்தில் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. தமிழகத்தில் வழங்கிவரும் நிலக்குத்தி என்று அறியப்பட்ட தெருக்கூத்தின் பாதிப்பை புறாட்டு நாடகத்தில் தெளிவாக காண முடியும். மேற்குடி ஆதிக்கத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட மக்கட்பிரிவுகள் புறஜனங்கள் ஆனார்கள் என முன்னரே குறிப்பிட்டிருந்தோம். அவர்களின் வாழ்க்கையும் அனுபவங்களும்தாம் புறாட்டு நாடகங்களில் சொல்லப்படுகிறது. அதில் வெளிப்படும் நகைச்சுவையும் விமர்சனங்களும் தங்களை நோக்கியதாக இருந்தன. இருப்பினும் அவர் கண்டு அனுபவித்த சில மேற்குடிப்பண்புகள் இதில் சில இடங்களில் பொதிந்து கிடப்பதை காண இயலும். இந்த புறஜனப் பிரிவுகளில் ஒவ்வொரு சாதியைக் குறித்தும் புறாட்டுகள் உண்டு. அந்தந்த சாதியினரின் பிரதேசமும் மொழியும் தொழிலும் வாழ்க்கையும் அதில் உரிய சோடனைகளுடன்  படைக்கப்பட்டுள்ளன. அதற்கு ஏற்றவாறு பாட்டும் ஆட்டமும் கொட்டும் ஒருங்கே அமைந்தன. பழைய தமிழ் நாடக சங்கங்கள் போல பாட்டுக் கச்சேரியும் மேடையில் தவிர்க்க முடியாதது ஆயிற்று. ஒவ்வொரு புறாட்டும் ஓர் ஓரங்க நாடகமாக உருக்கொண்டது. கோவிலின் மதிலுக்கு அப்பால் வயலிலும் பறம்பிலும் இவ்வகை நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. அவர்களது குலதெய்வங்களான காளி, கூளி, கண்டாகர்ணன், மூக்கன்சாத்தன், முனியப்பன், விழத்தன்மார் முதலான தெய்வக் கணங்களின் சன்னிதியிலும் இந்த கலைவடிவங்கள்  இடம்பெற்றன.

அறிமுகம்

இரவு சுமார் எட்டு மணியளவில் ‘கேளி’ கொட்டு தொடங்கும். செண்டை, இலைத்தாளம் எனும் இரண்டு இசைக்கருவிகள் இதில் பயன்படுத்தப் படுகின்றன.

நான்கு கால்கள் நடப்பட்டு மேல்பக்கமும் பின்பக்கமும் மறைக்கப்பட்ட ஒரு பந்தல். அதுதான் ஆட்ட நிகழ்விடம். பந்தலின் உயரம் ஏறத்தாழ ஏழடி இருக்கும். அப்பந்தலின் பின் பக்கம் சேர்த்து அமைத்த ஒப்பனை அறை. ஒரு குத்துவிளக்கு (இப்போது அது ஒரு கியாசு விளக்காகவோ, மின்விளக்காகவோ மாறியிருக்கும்). பாடகர் குழுவின் மிருதங்கம், ஆர்மோனியம் என இவை வைத்து வாசிப்பதற்கு ஒரு பெஞ்சு. என இந்த அளவுக்கு ஏற்பாடு ஆனவுடன், நிகழ்ச்சி தயார்நிலை  அடைந்துவிடும்.

பாடகர்கள் ஒவ்வொரு கதாபாத்திரம் வருவற்கு முன் அந்த புறாட்டுக்கு ஏற்ப ஆலாபனை செய்வார்கள். கதாபாத்திரங்கள் ஒப்பனை அறையிருந்தே தங்களை  அறிமுகப்படுத்தி பாடத் தொடங்குவார்கள்.. @@@@ மீதப் பாடலை நிகழ்ச்சிப் பந்தலில்    

பாடி முடிப்பார்கள். ஆசானை வணங்கி, சபையோரை வாழ்த்தி ஆட்டத்திற்கு தயார் ஆவார்கள். பாடகர்கள் குறைந்தது ஐந்துபேர் இருப்பார்கள். செண்டை, ஆர்மோனியம், மிருதங்கம், இலத்தாளம் ஆகியவற்றை பக்கவாத்தியங்களாக பயன்படுத்துவார்கள்.

ஆண்கள்தாம் பெண் கதாபாத்திரம் ஏற்று நடிப்பார்கள். ஓர் ஆட்டக்குழுவில் பதிநான்கு நபர்களுக்குக் குறையாமல் இருப்பார்கள். ஒரே ஆளே ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதுமுண்டு. ஒவ்வொரு புறாட்டும் வித்தியாசமானதும் நிறைவானதும் ஆகும் விதத்தில் அதில் வசதியுண்டு. ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்து அறிமுகம் செய்யும் கால அளவு முக்கால் மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை பிடிக்கும். ஆட்டக்காரரின் மனப்போக்கும் கேள்வித்தரங்களின் வித்தியாசங்களும் கொண்டு ஒரு ஆட்டம்(களி) மூன்று நான்கு மணிநேரம் அளவுக்கு நீண்டுபோகும் தருணங்கள் இயல்பானது.

பிடித்த ஆட்டக்காரர்களுக்கு பார்வையாளர்கள் வெகுமதி அளித்து ஊக்கப்படுத்துவதும் உண்டு. வெகுமதி அளிக்கும் பார்வையாளர்கள் கையுயர்த்தி காட்டுவதும் கதாபாத்திரங்கள் கைகள் வீசி வெகுமதி பெற்றுக்கொள்ள ஓடிவருவதும் பிரத்தியேக உடல்மொழியாக இருக்கும்.

வெகுமதி அளித்தவர் குறித்து அப்போதே புகழ்ந்து பாடுவதும் ஒரு வழக்கமாகும். கதாபாத்திரங்களின் எண்ணிக்கை மற்றும் கதைக்கருவில் வருகிற வித்தியாசங்களைப் பொறுத்து பொறாட்டுகளை – ஒற்றப்பொறாட்டு, இரட்டுப்பொறாட்டு (மிதுனப் பொறாட்டு), கூட்டப்பொறாட்டு என மூன்றாக தரம் பிரிக்கலாம்.

ஒற்றப்பொறாட்டுகள்

பொறாட்டில் கேள்விக்காரன் எனும் கதாபாத்திரம் நாடகத்தை நெறிப்படுத்தும் பங்கு வகிக்கிறது. காரணம், ஆட்டம் உண்டாக்கித் தொடங்குவதும் அதனை முன்னெடுத்துச் செல்வதும் கேள்விக்காரன்தான். ஒரே சமயம் சிந்தனையில் உதித்த கேள்விகளை கேட்பதும் ஆபாசம் கலந்த கொச்சைச் சொல்லாடலும் இரட்டை அர்த்தத்தில் பேசுவதும் கேள்விக்காரன்தான். சாதியிலும் தொழிலிலும் பிரதேசங்களிலும் வித்தியாசத்தை உணர்த்துகிற கதாபாத்திரங்களோடு அதனதன் வட்டார வழக்கோடு கேள்விக்காரன் குறுக்கிட்டுப் பேசுவான். வட்டார மொழி வழங்கும் சமுதாயம் மற்றும் பிரதேசத்தின் தனித்துவத்தை நிலைநிறுத்துவதை நாம் இங்கே காணலாம்.

கேள்விக்காரனின் வேடம் நகைச்சுவையாளனை ஒத்ததாக இருக்கும். கூம்புத்தொப்பியும் விசித்திர வண்ணங்களாலான குப்பாயமும் ஒரு கால் சுருட்டி வைத்த காற்சட்டையும் எல்லாமுமாக இவனின் ஒவ்வொரு சலனமும் பேச்சும் சபையினரை இரசிக்கவும் சிந்திக்கவும் செய்யும். இனி தனிக் கோமளியாய் கேள்விக்காரனின் பேச்சு வரம்பு மீறும் இடங்களில் அவனை கட்டுப்படுத்தி சரியான வழிக்குக் கொண்டுவர களி ஆசான் மேடைக்கு வருவார். மடக்கிக் கட்டிய கமுகின் பாளையோ வாழை மட்டையோ பயன்படுத்தி கேள்விக்காரனை அடிப்பதற்கும் ஆசான் தயங்கமாட்டார். சில நேரங்களில் ஆசானிடமிருந்து  அந்த கமுகுப் பாளையை பிடுங்கி மற்ற கதாபாத்திரங்களை நோக்கி கேள்விக்காரன் அடிப்பான்.

மேடயில் ஒவ்வொரு கதாபாத்திரமும் எடுக்கிற சுதந்திரமும் சிறு குறும்புகளும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் ஒதுக்க முடியாது. இயல்பான கெள்விகளுக்கான உடல்மொழிக்கும் பேச்சுக்கும் அங்கே இடமுண்டு. எந்த ஒரு நாட்டார் கலைக்கும் சிறப்பாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றுதான்.

தாசிப்பெண்

ஆரம்பப்பொறாட்டு என்று சொல்லப்படும் தாசிப்பெண்ணு என்னும் ஒற்றப்பொறாட்டில் விளக்கத்திற்குப் பின் கேள்விக்காரன் வருவான். இந்த வருகை நகைச்சுவையோடும் பாட்டொடும் அதிரும் வேகத்தில் ஆட்டமுமாக இருக்கும்.

பேயாத மழ பேஞ்சுக் கிட்டா – அது
பரியதண்ணி வந்துகிட்டா
ஆறு நிறைய தண்ணி வரா – அது
ஆறாமீனும் துள்ளி வரா
சின்னச்சூண்டி எடுத்தாளா – அது  
பெரிய மீனு பிடித்தாளா
அருகாமணியெ குறுக்கப்பெய்து
அறுத்தறுத்து பாத்தாளா

இதுவரை பெய்யாத அளவுக்கு மழை பெய்தது. ஆற்றில் பெரும் வெள்ளம் வந்தது. ஆறு நிறைய வந்த புது வெள்ளத்தில் பிழைத்து வந்த மீன்களை சிறிய தூண்டில் கொண்டு பிடித்தோம். ”அவற்றை அரிவாள்மணையில் நறுக்கி..” என்று சொல்கிறார்கள். அதுவல்லாமல் வேறு பாடல்களும் பாடுவார்கள். பாட்டுக்குழுவும் அவர்களோடு சேர்ந்து பாடும். களி முடிந்து சோர்வாக நிற்கிற கேல்விக்காரனைப் பார்த்து தாசி அழைப்பாள்: வாங்கய்யா ஒருநாள் படுத்துக்கிட்டு போலாமய்யா.. இந்த கேள்வி நேருக்கு நேராக கேட்கப்படுவது. தாசியின் முகபாவம், நோக்கம், செய்கை எல்லாம் இந்த ஒற்றை வாக்கியத்தில் அடங்கிவிடும். இது எந்த விதத்திலும் ஒளிவுமறைவில்லாத செயல் ஆகும். கேள்விக்காரன்: நான் படுத்தால் நீ குட்டி குடும்பத்தோடு சிரமப்படுவாயோ?

இங்கே — கேள்விக்காரன் படுத்தால்.. – என்பது, ”கூடப் படுப்பதற்கு” என்பதல்ல. இந்த மாதிரியான இரட்டை அர்த்த வசனங்கள் இந்த களியின் போக்கையே மாற்றிவிடும். அதற்குப் பின்  பெயர், இடம், தொழில், இவற்றைக் குறித்து கேள்விகள் கேட்கப்படும்  (இது பெரும்பாலும் எல்லா புறாட்டுகளிலும் இருக்கும். ஆனால், கேள்வி கேட்கும் முறையும், பேச்சு வழக்கும் ஒவ்வொரு புறாட்டுக்கேற்ப மாறுபடும்).

கேள்விக்காரன்: நீ எந்த ஊருக்காரியம்மா?
தாசி: நான் தஞாவூர்க்காரி தானய்யா.

இங்கேயும் உரையாடல் இரட்டை அர்த்தத்தில் ஊன்றிச் செல்லும். அங்கே ஆசானின் தலையீடு கண்டிப்பாக இருக்கும். அதற்கு அப்புறம் கேள்விக்காரன் இயல்பான உரையாடலுக்கு வந்த

கேள்விக்காரன், “ ஓ சரி உம்பேரு.. வந்து.. என்ன?”
தாசி: எம்பேரு வந்து தாசியாள் தானய்யா
கேள்விக்காரன்: நீ இங்க வரப்பட்ட நியாயமென்னா?
தாசி: என்னமோ எனக்குத் தெரியும் படியாக
ஆட்டம் பாடடம் சங்கீதமெல்லம் நடித்து
பெரியவர்கள் கொடுக்கின்ற பகுமதிகள்
எல்லாம் வாங்கி போலாமென்று தானய்யா.

திடீரென்று கேள்விக்காரனுடைய பேச்சுவழக்கு மாறுகிறது.

கேள்வி: ஓகோ.. நீ ஆட்டமும்  பாட்டமும் படிச்சவளாணல்லே எந்நால் அதொக்கெ காணிக்கி.

பிறகு தாசி பாடி, ஆடுவாள். இந்த நேரத்தில் புதிய பாடல்களும் பாடி ஆடுவதுண்டு.

மற்ற பொறாட்டுகளிலிருந்தும் தாசி பொறாட்டு வேறுபட்டு நிற்கின்ற ஒரு வகையாகும். காரணம் அது மக்களின் இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்காத – அவர்களது வாழ்க்கையுடன் தொடர்பில்லாத ஒன்றாகும். தமிழ்நாட்டில் முற்காலத்தில் கோவில்களோடு தொடர்புடைய தேவதாசி எனும் கருத்தாக்கம் இந்த புறாட்டில் இடம்பெயர்ந்திருக்கலாம்.  மன்னராட்சிக் காலத்திலும் ஜமீந்தார்கள் காலத்திலும் தேவதாசிகளுக்குரிய இடத்தை சமூகத்தின் மனப்பான்மையும் ஏற்றுக்கொண்டிருந்தது. இது ஒரு ஆரம்ப புறாட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு தாசிக்குரியதாக இருந்த தெய்வீகப்பாங்கும் கலை மேன்மையும் காரணமாக இருக்கலாம். மேலும் “வேசியாள் தரிசனம்” ஒரு நல்ல சகுனம் எனக் கருதப்பட்டதால், மங்கலகரம் என நினைத்து இது புறாட்டில் முதல் நிகழ்வாக சேர்க்கப்பட்டிருக்கலாம்.

பூக்காரி, குசவன், மாதுச்சி எனும் புறாட்டுகள் ஒற்றைப் புறாட்டுகளாகும். தாசியும் பூக்காரியும் மாதுச்சியும் பெண் கதாபாத்திரங்களாக இருப்பதால் குசவன் மட்டும் ஆண் கதாபாத்திரம் ஆகும். ஒற்றைப் புறாட்டுகளிலும் கேள்விக்காரனுடைய விசாரிப்புகளின் ஊடாக புலப்படுவது வாழ்க்கைமுறை, தொழில், ஊர்வரலாறு முதலியனவாகும்.

பூக்காரி

பூக்காரி பாலக்காட்டை ஒட்டியுள்ள தமிழ்நாட்டிலிருந்து பாலக்காட்டு பட்டணத்திற்கு வந்தவளாவாள். தமிழருடைய வியாபார மையங்களும் அதனைச் சார்ந்த தெருக்களும் தமிழ் பிராமணர்களின் அக்ரகாரங்களும் நிறைந்துள்ள பாலக்காட்டிற்கு தமிழ்நாட்டிலிருந்து இன்றும் பூக்காரிகள் வருகிறார்கள். பூத்தெருக்கள் என்று அழைக்கப்படுகிற தெருக்கள் இன்னும் பாலக்காட்டில் உள்ளன. ”சாமந்தி, முல்லை, மரிக்கொழுந்து, … பூவே… பூவே” என்று அதிகாலையிலேயே கத்திக்கொண்டு பூக்காரிகள் பாலக்காட்டிற்குள் வருவார்கள். பூக்காரி மேடைக்கு வரும் சமயத்தில் இசைக்குழுவின் விருந்தாக எழும் பாட்டில் …”பதியினால் ஈன்றெடுத்த மதுராபுரி பட்டினத்தில் சதிராடும் பூக்காரி சபைதனில் வருகின்றாரே” என்று ஒலிக்கும். பதியினால் (கணவனால்) மீட்டெடுத்த மதுராபுரி பாண்டிய மன்னர் பரம்பரையிலிருந்து கண்டறிய வேண்டிய ஒன்று. ————— வரவு கானத்திற்குப் பிறகு உரையாடலில் நின்று இடம் காலம் தொழில் சரித்திரம் சொல்லப்படுகிறது. இது எல்லாப் பொறாட்டிலும் இது ஒரே முறையில்தான். அப்புறம் தரித்திரனாகிய கேள்விக்காரன் எட்டணாவுக்கு பூக்கரியிடம் பூ கேட்கிறான். எட்டணாவுக்கு பூ இல்லை எண்ரு முதலில் சொன்னாலும் ஆசானுடைய தலையீடு காரணமாக அவள் பூ கொடுக்கிறாள். வாங்கின பூவை மூக்கில் வைத்து முகர்ந்து பார்த்தபோது எட்டணா கேள்விக்காரணுடைய மனைவி உப்பு வாங்க கொடுத்தது என்று கேள்விக்காரணுக்கு ஞாபகம் வந்தது. பணத்தை பூக்காரியிடம் திருப்பி கேட்கிறான். பூக்காரி மறுத்துவிடுகிறாள். “விற்ற பூவை திருப்பி வாங்க முடியாது” என்று சொல்கிறாள். ஆசானுடைய தலையீடு காரணமாக பணத்தை திருப்பிக் கொடுக்கிறாள். பூக்காரி பொறாட்டில் புதிய சினிமா பாடல்களும் சேர்ந்திருக்கின்றன. தமிழ் சினிமா பாடல்கள் பாடி ஆடுவதும் உண்டு.

குசவப் பொறாட்டு

குசவப் பொறாட்டு ஆண் கதாபாத்திரத்தில் இருக்கிற ஒற்றப் பொறாட்டு. மனித வாழ்க்கையை ஒரு நிழல் மாதிரி புலப்படுத்துகிற பொறாட்டு. குசவனுடைய வாழ்க்கைதான் என்றாலும் திருப்தி இல்லாத மனித வாழ்க்கையின் ஒரு குரலை இதில் கேட்கலாம். குசவனாகிய குழந்தைவேலுவின் சரித்திரத்தைப் பற்றிச் சொல்லித்தான் பொறாட்டு தொடங்குவது. மலைநாட்டுக்காரனாகிய அவனது தாத்தா, நாடுநகரம் தேடி குழந்தைவேலுவுக்கு ஏற்ற ஒரு பெண்ணை கண்டுபிடித்துக் கொடுத்தார். மிகவும் சிரமப்பட்டு மண்ணைத் தேர்வு செய்வது போலத்தான் இந்த பெண்ணைக் கண்டுபிடித்தார் அவர். திருமணம் முடிந்து எட்டு மாதமே ஆகியிருக்கிறது. ஆனால், அவளுக்கு பத்து மாதம் வயிற்றிலிருப்பது தெரிந்துவிட்டது. அவளை வேஏண்டாமென்று சொல்லி தேனூர் என்கிற ஊரிலிருந்து வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். sஇல காரணங்களால் அந்த தேனூர்க்காரியையும் கைவிடுகிறார். அதற்கப்புறம் கூடலூர்க்காரியை திருமணம் செய்கிறார். பெண்ணுடைய விடயத்தில் இப்படி இருக்க தொழிலின் காரியம் அதைவிட கஷ்டம்.

அந்தியாவோளம் சட்டி வித்து
சாளியடிச்சு நடக்கும்
அந்திக்கவனு கஞ்ஞி இல்லங்கில்
சட்டியெடுத்து நடக்கும்

பகலில் சட்டி விற்ற காசு கையில் அதெல்லாம் கள்ளு குடித்து தீர்ப்பார். sஆயங்காலம் வீட்டு வரும்போது கஞ்சி வைக்காவிட்டால் சட்டி எடுத்து மீண்டும் நடக்கும் — ஒன்று சட்டி விற்க; அல்லது பிச்சை எடுக்க. கொசவப்பொறாட்டில் கொசவனுடைய மனம் வாடுகிரது மாதிரி சில வரிகள் உண்டு.

அந்தியவோளம் சட்டி வித்தா
நாளுகளியாத உலகம்
அந்திக்கே நானு வீட்டி வந்தா
எண்டெ பெண்ணும் நானும் கலகம்
பொழம்பள்ளிப்போயி மண்ணு சுமக்குணா
எண்டெ ஒரு கொடும
வீட்டி வந்நு நோக்குமெண்டெ
உச்சியில குடும

குசவனின் வாழ்க்கை இந்த எட்டு வரியில் எவ்வளவு கவித்துவமாய் சொல்லப்பட்டிருக்கிறது – தெலுங்கு கலந்த மலையாளம்தான் கொசவப் பொறாட்டின் மொழி.

இறக்கின்ற போது கைகளிலும் கால்களிலும் குத்துகிற பச்சை தவிர வேறொன்றும் கொண்டுபோக முடியாது என்பது குசவனின் நம்பிக்கை. பாலக்காடு மாவட்டத்தில் ஈழுவர்களின் பிரதிநிதியான மாதுச்சி என்கிற ஒற்றப்பொராட்டு வருகிறது. இந்தப் பொராட்டில் முழுவதுமாக ஈழுவர்களுக்கு மட்டுமான பேச்சுமொழி பார்க்க முடியும். எக்கி, நிக்கி, நல்ல, நிங்ங, வருவே, போயவே — இந்த பேச்சுவழக்கு ஞானக்கும்மியின் அதே ஒழுங்கில் விருத்தமாக பாடப்படுவது.

தந்தின தா நா தின தானை தன்னானெ
தானை தந்தினை திண்ணானம்
திந்தின தானா தின தானைதண்ணானெ
தானை தந்திணை திண்ணானம்
ஆன வருண்ணு பெண்ணே
ஆன வரணு பெண்ணே
நம்பட தம்புராண்ட ஆன வருண்ணு

இந்த பொராட்டில் உழவர்கள் மற்றும் பிற தொழிலாளர்களின் வாழ்க்கைமுறையும் சடங்குகளும் குறிப்பிடப்படுகின்றன. இந்த பொராட்டுகளியின் முடியும் அடுத்த நாள் காலையில் இந்த (நாயர்) பொராட்டு அரங்கேறும். கேள்விக்காரனும் மாதுச்சியும் சேர்ந்து பேசுகிறபேச்சும் தக்க சமயத்தில் ஆசானின் தலையீடுகளும் பார்வையாளர்களை மிகவும்ஈர்க்கும். இனி சொல்லப்போவது இரட்டைப் பொராட்டுகளைப் பற்றியதாகும். மண்ணான், மண்ணாத்தி, செருமன், செருமி, சக்கிலியன், சக்கிலிச்சி, குறவன், குறத்தி, கவரன், கவரச்சி, தொட்டியன், தொட்டிச்சி என்பவரெல்லாம் சேர்ந்ததுதான் இரட்டைப்பொராட்டு அல்லது மிதுனப்பொராட்டு ஆகும்.

மிதுனப் பொராட்டுகளுக்கும் சில பொதுவான குணங்கள் உண்டு. இங்கு முதலில் அரங்கத்திற்கு வருவது பெண் கதாபாத்திரங்கள் ஆகும். அவரகளின் பிரச்சனைகள் எல்லாம் கணவனின் பிரிவு குறித்ததாகும். திருவிழா காண்பதற்காகவே இல்லை வேறு ஏதாவது தேவைகளுக்காகவோ சொந்த ஊரிலிருந்து புறப்படுகிற தம்பதிகளில் இந்த மனைவிகள் கூட்டமாக செல்வார்கள்: தத்தம் கணவரகள் எங்காவது உள்ளனரா எனும் தேடலுக்காக.

செருமன் செருமி

செருமன் செருமி என்கிற இரட்டைப் பொராட்டில் பாடல்களுக்குப் பிறகு, செருமி அரங்கிற்கு வந்து ஆசானையும் அமர்ந்நதிருக்குற பிறரையும் வணங்குவர்.

போலில லல்லீலா… லல்லீலா..
போலில லல்லீல்லேல லல்லீலம்
என்னக்களி படிப்பிக்க என் குருநாதரே
ஞானிதா கைதொழுந்நேன் (போலிலல்லீ… லல்லீத)
இவிட இரிக்குந்ந சபையோரோடெல்லாம்
பாதம் ஞான் தொழுந்நேன்
வருண்ணு வருண்ணெண்ட முத்தப்பன்மார் (போலி..)
ஞானும் வருண்ணெண்ட தம்புரான்மாரே ( போலீ..)
தெக்கு மலயாளிக்கு படிஞ்ஞாறு (போலீ..)
வல்லிச்சிறயாணு எண்ட பிறந்ந நாடு (போலீ..)
வல்லிச்சிற நாட்டி வலிய தம்புரான் (போலீ..)
வல்லிப்பணிக்காரி எண்டெ பேரு வெள்ளாச்சி (போலீ..)
காளியும் நீலியும் கண்ணையும் ரக்தியும் (போலீ..)
இங்ஙன நாலஞ்சு பெண்ணுகள் உண்டம்மே (போலீ..)
காளிக்கு நித்யம் களத்தில் பணியாணு (போலீ..)
களத்தில் பணி செய்து கஞ்ஞிக்கு ஞான் வரும்போ (போலீ..)
குளத்தில் இறக்கி குளியும் கழிஞ்சு ஞான் (போலீ..)
சாலயி போயொரு சந்தனப்பொட்டும் தொட்டு (போலீ..)
வேலைக்கு போகான் செறுமனோடும் சோதி (போலீ..)

மிகவும் இயல்பாகத்தான் செறுமி தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறாள். களங்கமில்லாத – சுற்றிவளைக்காத பண்பினை இங்கே நாம் பார்க்க முடியும். வல்லிச்சிற பாலக்காடு மாவட்டத்தில் இருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் அது தொலைதூரந்தான்.

உடலை வளைத்தும் நெளித்தும் ஆடி, குனிந்து நிமிர்ந்தும் அவள் பேசத் தொடங்குகிறாள்.  செறுமி முத்தப்பன்மாரோ நட்டப்பன்மாரோ குறியப்பன்மாரோ ஆரெங்கிலும் இண்டீ.. ஆசானுடைய பதில், ‘எல்லாரும் இருக்காங்க உனக்கு யாரைப்பார்க்கணும்’

செறுமி, எனக்கு முத்து தாத்தாவை காட்டித்தாருங்கள்

ஆசான்: ஓ காமிச்சுத் தரேன். முத்துவோ…

கேள்விக்காரன்.. ஓ

முத்து அரங்கத்திற்கு வருகிறான். ஆனால், அவரைப் பார்த்த போது தான் நினைத்த ஆளாக செறுமிக்குத் தோன்றவில்லை.

செறுமி: நீங்க நல்ல ஆளுங்க முத்து தாத்தாவை வரச்சொன்னா இந்த கிறுக்கன யார் வரச்சொன்னது?

ஆசான்: இவன் கிறுக்கனும் கிடையாது முட்டாப்பயனும் கிடையாது. நல்லாப் பார்த்துச் சொல்லு.

அப்படிப் பேச்சு நீண்டுகொண்டே செல்கிறது. முளையங்காவில் திருவிழா பார்க்கப் போனதும் அங்கே ஓருத்தர் பெரிய பலாப்பழத்தை இரண்டாக பிளந்து விற்க வைத்திருந்ததும் அவருக்குத் தெரியாமல் அதை எடுக்கப் பார்த்த்தும் அவர் அதைக் கண்டுபிடித்ததும் பிடரியைப் பிடித்துத் தள்ளியதையும் பேசிக்கொள்கிறார்கள்.

கேள்வி: அப்படி பிடரியைப் பிடித்து தள்ளு வாங்கவேண்டிய அவசியம் எதற்கு?

அதற்கு செறுமி சொல்கிற பதில்: நீங்க கொஞ்சம் பேசாம இருங்க.. அவரு தள்ளியதனால் எனக்கு அவ்வளவு தூரம் நடக்கத் தேவையில்லாமல் போச்சே?

கிடைத்த தண்டனை அவளுக்கு ஒரு பிரச்சனையே கிடையாது. அவள், அதனை ஒரு மேன்மையாகத்தான் பார்க்கிறாள். மேட்டுக்குடியினரான ஜன்மிகளின் திட்டும் அடியும் குத்தும் வாங்கி அவர்களது காலடியில் கிடந்த அனுபவம் கொண்ட அவளுக்கு அப்படித்தான் சொல்ல முடியும். செறுமன் அரங்கத்திற்கு வருவதற்கான பாடலை குழு பாடத்தொடங்கிய உடன் செறுமன் வருகிறான். பாட்டும் ஆட்டமும் நன்றாக இருந்தது. ஆனால், கொட்டுபவர்கள் ரொம்ப மோசம் என்கிறான். செறுமன் இங்கு வருவதற்கான காரனம் என்னவென்றும் என்ன வேலையென்றும் கேள்விக்காரன் கேட்கிறான்.

செறுமன்: என்  நாடு மேற்குக்கும்மேற்கே சீனிக்குளம். கல்லடிக்கோடு காரியக்காரன் தம்புரானின் பட்டியிலே பணியாள் செறுமன் என்று சொன்னால் தம்புரானுக்கு மேலான தம்புரான்.

கேள்விக்காரன்: என்னது தம்புரானுக்கு மேலான தம்புரானா?

செறுமன்: தம்புரான் அந்த பட்டியை பூட்டிவிட்டுப்போய்விடுவார். அதன் சாவியை என் கையில் தருவார். அப்போது நான்தானே தம்புரான்.

கேள்விக்காரன்: சாவியை திருப்பிக்கொடுத்தால்?

செறுமன்: அப்பவும் நான்தான் தம்புரான்

கேன்விக்காரன்: ஓகோ.. அப்போ உன் பேரென்ன?

செறுமன்: எம்பேரு வாழ்கரன்.. அப்படி பேச்சு நீள்கிறது. அவன் ஊர்விட்டுப்போன கதைகள் அந்த காலகட்டத்தில் செய்த வேலைகள்.. அது முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கலியாணம் செய்துகொண்ட காரியங்கள்… இதைப் பற்றியெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். செறுமனும்அவனது மனைவியும் சேர்ந்து திருவிழா பார்க்கப்போனதும் வட்டத்தூரி ஆட்டம், ஆனை-மயில்-ஒட்டகம் விளையாட்டு, பீப்பீ ஊதல் எல்லாம் பார்த்து, ரசித்தது, நடந்தது எல்லாம் சொல்கிறார்கள். அங்கே வைத்து, பிரிந்துபோன தன் மனைவியை தேடித்தருமாறு வேண்டிக்கொள்கிறான். அவனைப் பிரிந்த காலத்தில் அவள் யாருடனாவது போயிருப்பாளோ என்று அவனுக்கு சந்தேகம். செறுமியை கேள்விக்காரன் காண்பித்துக் கொடுக்கிறான். செறுமனும் மனைவியும் சண்டைபோட்டுக்கொள்கிறார்கள். கடைசி கட்டத்தில் செறுமி கையிலிருந்த துடைப்பத்தைக் கொண்டு செனுமனை அடிக்கிறாள். அதிலொன்றும் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. காரணம், மானங்கெட்ட தோலில்தானே அடி விழுந்தது. அதற்கென்ன? என்று கேட்கிறான்.. ஆனால், கேள்விக்காரன், நீ ஒரு ஆம்பளையா? என்று கேட்கிறான். அப்போது செறுமனுக்கு ரோஷம் வருகிறது. அவன் உடனே கேள்வி கேட்கத் தொடங்குகிறான்.. மறுபடியும் சண்டை உருவாகிறது. இந்த சண்டை முழுக்க இரண்டு பாட்டும் அதற்கு மறுபாட்டும்தான். இந்த சண்டையின் முடிவில் மறப்பதற்கும் பொறுப்பதற்கும் இருவருமே தயாராகி ஒன்றுசேர்கிறார்கள்.

சின்னச்சின்ன பிரச்சினைகளை பெரிதாக நினைத்து வாழ்க்கையில

 நடக்கிற சில விசயங்களை இங்கே பாரக்க முடிகிறது.–

—–

போகுண்ணு போகுண்ணு ஞங்களு ஞங்கடே நாட்டோளம்

முளையங்காவிலே வேல காணான் ஞங்களு ரெண்டாலும்

மறுபடியும் திருவிழாவுக்குப் போவதுதான் அவர்களுடைய லட்சியம். வாழ்க்கையில் அவர்களுக்கு இருக்கிற ஒரே சந்தோசம் அது மட்டும்தான். அந்த செறுமக்களின் மொழியின் தன்மை இந்த பொராட்டில் இருக்கிறது. மற்ற சமுதாயங்களிலிருந்து மாற்றான பேச்சுமொழிகளும் மேலே கொடுக்கப்பட்ட பாட்டிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.

செறுமனும் செறுமியும்  மிதுனப் பொராட்டின் பொதுவான பண்புகளை காண்பிப்பதுண்டு. இருந்தாலும் சாதி மொழி தொழில் வாழக்கை முறை இவற்றிலிருக்கும் வேறுபாடுகள் ஒவ்வொரு பொராட்டிலும் அதனதன் தன்மையில் வித்தியாசமாக காட்டுவதாகும்.

குறவன் குறத்தி

வடக்கன் பாட்டுகளில் காணப்படுகிற குறவனும் குறத்தியும்தான் பொராட்டுகளில் குறவன் குறத்தி ஆவார்கள். கை பார்த்து குறி சொல்வதில் இவர்களுக்கு பிரத்தியேகமான திறமை இருக்கிறது. குறவனுக்கு இரண்டு மனைவிகள் இருப்பது சாதாரண விசயந்தான். இரண்டு மனைவிகளும் மேடைக்கு வருவார்கள். குறவருக்கு சித்தனர் என்கிற பேரும் உண்டு. பண்டைக் காலத்தில் சமண மதம் ஏற்றுகொண்ட ஆதி திராவிடர்கள்தான் குறவர்கள். கேள்விக்காரனுடைய கூள்விகள் மூலமாக குறவனுடைய மனைவிகளின் எண்ணம் வெளிப்படுகிறது. குறவனே சொல்லுகிறான்: எனக்கு இரண்டு மனைவிகள் இளங்குடியும் முதுகுடியும். sரண்டு மனைவிகளைக் கட்டினால் இவர்களை யார் பார்த்துக்கொள்வது என்ற கேள்விக்காரனுடைய கேள்விக்கு குறவனிடம் பதில் இருக்கிறது.

இருகுடி கெட்டியராளுகளெ ஞான்

ஓரோண்ணாயிட்டும் செய்திடாம்

வேலர்க்கில்லே  ரண்டாளச்சா

வள்ளியென்னும் தைவானயுமாயி

பரமசிவனில் பார்யமாராயி

சிரசில் வச்சு நடந்நிட்டில்லே

கங்காதேவிய சிரசிலிருத்தி

பார்வதிதேவியக்கூட நடத்தி

இந்திரனில்லே நாலாளச்சா

ஊர்வசி மேனக ரம்ப திலோத்தம

பதினாறாயிரமெட்டும் ஸ்த்ரீகளெ

கிருஷ்ணன் கெட்டிவலிச்சிட்டில்லே?

Leave a comment

Trending