பாதம் : செருப்பால் கிடைத்த வாழ்வு

முனைவர் அ. விஜயன்

அரசுக் கல்லூரி, சிற்றூர், பாலக்காடு மாவட்டம், கேரளம்


எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் அறிமுகம் தேவை இல்லாத உலக அளவிலான ஒரு தமிழ் எழுத்தாளர்.. பல்வேறு சிறந்த கதைகளைப் படைத்துள்ளார்.

’பாதம்’ என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவன இறைவனின் திருப்பாதங்கள் ஆகும்.  பாதம் பணிந்து நடத்தல் என்பது இந்தியர்களின் பண்பாடு.  முதியோர்,  பெரியோர்களை மதித்தல் என்பது அதன் அடை யாளம். பணிந்து நடக்க வேண்டும் என்பது  இன்னொரு கருத்து. இதற்கு முந்தைய தலைமுறையினரைக் காணும் பொழுது  இளையவர்கள்  அவர்களது காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறுவது வழக்கம்.  குறிப்பாக நல்ல நாட்களில், விழாக் காலங்களில், பிறந்த நாளின் போது, புத்தாண்டின் போது அவ்வாறு செய்து ஆசீர்வாதம் வாங்குவது உண்டு. பெரியவர்கள் மனதார வாழ்த்துவதோடு தங்கள் வசதிக்கு ஏற்பவும் மனதிற்கு ஏற்பவும் பணத்தைப் பரிசாக, கைநீட்டமாகத்  தருவார்கள்.  ஆனால் இன்றைய வழிமுறையினரிடையே பெரியோர்களின் காலில் விழுந்து வணங்கும் பண்பாடு சற்றும் இல்லை என்று சொல்லும் அளவுக்குக் குறைந்துவிட்டது. அது நாகரிகத்தின் வளர்ச்சி என்றால் பண்பாட்டின் வீழ்ச்சி என்றும் பொருள் கொள்ளலாம்.

பெற்றோரையே மதிக்காதவர்கள் பெரியோரை எப்படி மதிப்பர். கற்றுக் கொடுக்கும் ஆசிரியரை மதிக்காதவர்கள் சான்றோரை எப்படி வணங்குவர்.  பெரியோரை, ஆன்றோரை மதிக்காத சமூகம் பரம்பரையாக கைமாறப்பட்டுவரும்  பல்வேறு பண்பாடுகள்   கிடைக்கப் பெறாத சமூகமாக மாறிவிடும் என்பது நிச்சயம்.  ஆசிரியரை மதிக்காத சமூகம் நல்வழி தெரியாத சமூகமாக மாறக்கூடும். இருட்டில் தேடும் சமூகமாக மாறிவிடும் என்பது காலத்தால் விளங்கும்.

 ’பாதம்’ எனும் பதம் என்பது பாதத்தின் அளவா? அல்லது பாதத்தின் / கால்களின் கனமா? விரல்களில் நீளமா? உடல் பருமனா? என்பது குறித்த சிந்தனையை நம்மில் விதைக்கின்றது.  

ஒரு சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் – மாரி –  வறுமை அல்லது ஏழ்மை,  ஏக்கம் ஆகியவற்றைப் படம் பிடித்து காண்பிக்கும் இந்தக் கதை ஒரு ஏழையின் மனநிலையை அப்பட்டமாகப் பதிவு செய்கிறது.  

வறுமை நிலையில் இருந்தாலும் பிறருடைய பொருளை அபகரிக்கக் கூடாது என்கிற எண்ணம் , தன்னிடம் ஒப்படைக் கப்பட்ட. ஒரு பொருளை – சரிசெய்யும்படிக் கொடுக்கப்பட்ட –  அதற்கு உரியவர்கள் காலம் தாழ்த்தி வந்தாலும் அவர்கள் வருவது வரையிலும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம்,  அதற்கு ஏற்படும் பல்வேறு தடைகள்  அந்தத் தடைகளைத் தாண்டுதல். அந்தப் பொருளால் தான் உயர்ந்த நிலை அடைந்த பிறகும் கூட – வறுமை நிலையில் இருந்து மீண்ட பிறகும் கூட-  அந்தப் பொருளை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்கிற பண்பாடு ஆகியனவற்றை இந்தக் கதை நமக்கு எடுத்துரைக்கிறது.

காலையில் தேநீர் அருந்துவதற்குக் கூட பணம் இன்றிப் பசியோடு இருக்கும் தொழிலாளி மாரி செண்ட்ரல் தியேட்டர் வாசலில் வழக்கம்போல அமர்ந்துகொண்டு வாடிக்கையாளர்களை எதிர்பார்க்கிறார். யாரும் வரவே இல்லை. மழை வந்து விடுகிறது. தண்ணீர் செருப்புகளை இழுத்துச் செல்ல ஆரம்பிக்கிறது. தெருவின் முனையிலிருந்து ஓடி வந்த ஒரு சிறுமி தன்னுடைய கால் செருப்புகளில் – வலது கால் –  ஒன்றைக் கொடுத்துவிட்டு தைத்து வைக்கும் படிச் சொல்லிச் செல்கிறாள் .  அவள் திரும்ப வந்தால் இரண்டு ரூபாய் கிடைக்கும். தேநீர் அருந்தலாம் என்று காத்திருக்கிறார் தொழிலாளி.  மாலை வந்துவிட்டது; ஆனால் அந்தக் குழந்தை வரவில்லை. மறுநாளும் வரவில்லை. ஒருவாரம் ஆகியும் வரவில்லை.

வருடங்கள் புரண்டன.  சிறுமி இன்னும் திரும்பி வரவில்லை. அவள் இப்பொழுது பெரிய பெண்ணாகி இருக்க்க் கூடும் என்று எண்ணிப்பர்க்கிறான் மாரி. அழகான வேலைப்பாடுகள் நிறைந்த , மென்மையான, காண்போரின் கண்களைக் கவருகின்ற அந்தச் செருப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்.

ஒரு நாள் அவருடைய மனைவி அதன் அழகைக் கண்டு அணிந்து பார்த்தாள். அது அவளுடைய பாதத்திற்கு பொருந்துகிறது. அவள் இன்னொரு கால் செருப்பையும் தேடுகிறாள். ஓசை கேட்டு ஓடிவந்த மாரி அதை வாங்கிப் பத்திரப்படுத்துகிறான். மனைவியின் முணுமுணுப்பைக் கேட்டு தானும் அதை அணிந்து பார்க்கிறான் தனக்கும் பொருந்துகிறது. என்ன அதிசயம்  ”குழந்தையின் செருப்பு பலருக்கும்  எவ்வாறு பொருத்தமாக இருக்க முடியும்”

இந்த அதிசயத்தை மறுநாள் தன் சக பணியாளனிடமும் சொல்கிறான் அவனும் அணிந்து பார்க்கிறான். செய்தி ஊர் முழுதும் பரவுகிறது. 

செய்தி எல்லாருக்கும் தெரிகிறது ஊர்க்கார்கள் மட்டுமன்றி அடுத்த ஊரிலிருந்தும் பலர் வந்து , காத்திருந்து அச் செருப்பை அணிந்து பார்க்கிறார்கள். ”

அதை காலில் அணிந்த உடன் மேகத் துணுக்குகள் காலடியில் பரவுவது போலும் பனியின் மிருது படர்வது போலவும் உதடுகளை விட மிருதுவாக தனது பாதத்தினை முத்தமிடுவதாகவும்”  (பாதம். எஸ். ரா)

பலர் கூறினர் ஆகவே அதற்கு ஒரு சிறு கட்டணம் வசூலிக்கிறார் தொழிலாளி.  அதனால் சிறிதளவு  வருமானம் கிடைக்கிறது.  அவன் இரண்டு பசுக்கள் வாங்கினான். ஒரு வீடு கட்டிக் கொண்டான்; வாழ்வின் நிலை உயர்ந்து கொண்டே போனது; இப்போதும் அந்தச் சிறுமி வரக்கூடும் என்று பலர் முகத்தின் ஊடேயும் அவளைத் தேடிக் கொண்டிருந்தார். வறுமையில் இருந்து மீண்டு வருகிறார்.

அதைத் திருடிச் செல்ல சிலர் முயற்சி செய்கிறார்கள். யாரோ அவனைக் காப்பாற்றி விடுகிறார்கள்., நல்வாய்ப்பாக அந்த அழகிய அதிசயச் செருப்பு அவரிடமே தங்கிவிடுகிறது.  .

ஒரு மழை இரவில் பார்வையாளர் யாவரும் வந்து போய் முடிந்த பின்பு கதவை மூடி மாரி உள்ளே திரும்பும்போது அந்தச் சிறுமி வந்தாள். ”ஒரு பெண்ணாக திரும்பி இருந்தாள் பணிவான குரலில் அவனிடம் கேட்டாள் வெகு தாமதமாகிவிட்டது எனது செருப்பை தைத்து விட்டாயா? இல்லையா?”

      எடுத்துக் கொடுக்கிறார். தனது உயர்விற்குக் காரணமான அந்தப் பெண்ணை தன் மரணத்திற்கு முன் ஒருமுறை பார்த்துவிட வேண்டுமென்ற மாரியின் ஆசை நிறைவேறிவிட்ட்து. அவளைக் குறித்து அறிந்துகொள்ள வினவுகிறான். அவள் சிரித்த படியே வாங்கிச் செல்கிறாள் சற்று தூரம் சென்ற பின் அதை அணிந்து பார்க்கிறாள். இட்து கால் செருப்பு சரியாகப் பொருந்துகிறது. தைத்து வாங்கிய வலது கால் செருப்பு.  பொருந்தவில்லை. ஊர் மக்களின்  பாதங்களுக்கு பொருந்திய ஒரு செருப்பு உரியவரின் பாதத்திற்கு மட்டும் பொருந்தாமல் போகிறது என்பது கதையின் முடிவாக அமைகிறது. யாரும் எதிர்பாராதது.


            இன்றைக்கு செருப்பு அணியாமல் பெரும்பாலும் யாரும் வீட்டுக்கு வெளியே வருவதில்லை. விரதம் இருப்பவர்கள் கூட ’மனசில் சுத்தம் இருந்தால் போதும்’ என்று செருப்பை அணிந்து கொள்கிறார்கள்.  ஏனென்றால் நம்முடைய பாதங்கள் அத்தனை தூய்மையாக இருக்க வேண்டும் என்ற விருப்பம்தான் காரணம்.  செருப்பு ஒருவருடைய உடல் நலத்திற்கு மிகவும் பயனுள்ளது என்பதைத்  தாண்டி இன்று செருப்பு ஒரு அழகுப் பொருளாக மாறிவிட்டது.  ஆடைகளின் நிறங்களுக்கு ஏற்றவாறு பல வண்ணங்களில், பல வடிவங்களில், செருப்புகள் மக்களால் வாங்கி அணியப்படுகின்றன. தங்கத்தில் கூட காலணி செய்து அணியப்படுகிறது. இன்று  பள்ளிக்கூட மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரையிலும் ஆண்கள் அணிவது போல ஷூ அணிந்து கொள்கிறார்கள். காலுக்குப் பொருந்தினாலும் பொருந்தாவிட்டாலும் அது நவீன கால அழகு என்று தவறாக அவதானிக்கிறார்கள். குளிர்பிரதேசத்திற்கு பயன்படுத்தப்படும் இத்தகைய காலணிகளை வெப்ப மண்டலப் பகுதியில் வாழும் மக்கள்  பயன்படுத்துவது முட்டாள்தனம் என்பதை நாம் ஒருவரும் உணருவதில்லை. அடுத்த தலைமுறைக்கு உணர்த்துவதுமில்லை. அதைக் கேட்கும் மனோபாவத்திலும்  யாரும் இல்லை.  ஏனென்றால்

இந்தியாவில் இன்னும்

விஞ்சி நிற்பது

உபதேசமும் உபவாசமும்தான்

கேட்காவிட்டாலும் உபதேசம் கிடைக்கிறது

வேறுவழியின்றி உபவாசம் நடக்கிறது

(திருவிழாவில் ஒரு தெருப்பாடகன். மு.மேத்தா)

என்ற கவிஞர் மு.மேத்தாவின் கவிதை வரிகள் அதற்கு விடைதருகிறது. யாரோ  அணிகிறார்கள் எங்கோ அணிகிறார்கள். பார்ப்பதற்கு அழகாக, நாகரிகமாக இருக்கிறது எனவே நாமும் அதையே பின்பற்றலாம் என்று எண்ணமே அதற்குக் காரணம். நம்முடைய உணவுப் பழக்கம் ஆடை அலங்காரம்    (பாரம்பரியமான ஆடை அலங்காரம் அதற்கான காரணம், உணவுப் பண்பாடு) ஆகிய பண்பாட்டுக் கூறுகள் பழக்க வழக்கங்கள் போன்ற எதைக் குறித்தும் இந்தத் தலைமுறையினர் கவலைப்படுவதில்லை.  தங்களுடைய சுயநலம், சிறிது நேர மகிழ்ச்சி மட்டுமே அவருக்கு பெரிதாகப்படுகிறது. நூறு, இருநூறு ரூபாய் கொடுத்து பாட நூல் வாங்க முடியாதவன் ஐந்நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் செருப்பை வாங்கி அணிந்து கொள்கிறார். ஆடை அலங்காரம் குறித்தான நமது பார்வையை மறுபரிசீலனை செய்வதற்கு வழி கூறுகிறது இந்தக் கதை.  

செய்யும் தொழிலே தெய்வம்

அந்தத் திறமைதான் நமக்குச் செல்வம்

கையும் காலும்தான் உதவி

கொண்ட கடமைதான் நமக்கு பவி

(பட்டுக்கோட்டை திரையிசைப் பாடல்கள்)

என்ற பட்டுக்கோட்டை பாடல் வரிகளை நமக்கு இது நினைவூட்டுகிறது.

அன்றாடம் வாழ்வில் சாலையோரங்களில் நாம் பார்க்கக் கூடிய ஒரு தொழிலாளி, வெயிலுக்கு ஒதுங்க இடமில்லாமல் ஒரு ஓலையாலோ   அல்லது ஒரு கோணிப் பையாலோ அமைத்த ஒரு பந்தலின் உள்ளே அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். மழைக்கு ஒதுங்கவும் இடம் இருக்காது. அத்தகைய ஒரு கதாபாத்திரத்தை காவியத் தலைவனாக்கும் பாங்கு ஆசிரியரின் சிறப்பு.  

ஒரு கதை எழுதுவதற்கான பொருளைத் தேடி நாம் ஐந்து நட்சத்திர உணவகத்தில் குளிரூட்டும் அறை எடுக்க வேண்டிய தேவை இல்லை. சுற்றுலா இடங்களுக்கு பயணப்பட வேண்டிய தேவையும் இல்லை. அன்றாட வாழ்வில் நாம்  பார்க்கும் பொருளை வைத்து, கதாபாத்திரத்தை வைத்து ஒரு கருத்தைச் சொல்ல முடியும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் கதை ஆசிரியர்.  ஆனால் ஒரு கதையில் எப்படி ஒரு சிக்கலை உருவாக்குவது? கற்பனையை எவ்வாறு கலப்பது? அந்தக் கற்பனை வாசகர்களுக்கு புதிதாகவும் எதிர்பாராததாகவும் இருக்கும்படி எப்படிச் சொல்லுவது? அதனுடைய முடிவு எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்தான புரிதல்களை இந்தக் கதை அழகாகச் சித்திரிக்கிறது.  

\முகத்தையும் மொழியையும் அழகு செய்வதற்கு ஆயிரம் செலவிடும்போது ஆலமரத்தைத் தாங்கும் ஆணிவேர் போல ஒரு உடலை தாங்கும் பாதங்களை பாதுகாப்பதற்கு நம் மக்கள் மறந்து விடுகிறார்கள் என்ற கருத்தை வலியுறுத்தும் ஆசிரியர் தமது அங்கலாய்ப்பினையும் பதிவு செய்கிறார்.

மனிதர்கள் பொதுவாக ஏதேனும் உடல் நலக்குறை வந்த பிறகுதான் அதைக்குறித்துக் கவலைப் படுகிறோம்.  பாதத்திற்கு ஒரு சிக்கல் வந்ததென்றால் அந்தப் பாதத்தைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்குகிறோம்.  சர்க்கரை நோய் முற்றிவிட்டதாகச் சொல்லி கால் விரல்களுள் ஒன்று அல்லது இரண்டை நீக்கி விடுகிறார்கள் அல்லது ஐந்து விரல்களையும் நீக்கி விடுகிறார்கள். சிலருக்கு  கால் முழுவதையும் கூட நீக்கி விடுகிறார்கள் மருத்துவர்கள்.  அதற்கும் காரணம் பாதம்.. நடைபயிற்சியில்லை , நடைபயிலவில்லை; நடைப்பழக்கமும் இல்லை; அதை  விரும்பவுமில்லை.

மிக அருகில் இருக்கும் இடத்திற்குக்  கூட வாகனத்தில் செல்லுகிறொம்.. காலாற நடப்பது கால்களுக்கு மட்டும் பலன் தருவதில்லை முழு உடலுக்கும் பலன் தருகிறது. மூளை சுறுசுறுப்பாகச் செயல்பட வழி செய்கிறது.  உடல் இயங்கும்பொழுது மூளை புதிய செயல்களைச் செய்வதற்கான உத்வேகத் தையும் மனிதனுக்கு அளிக்கிறது. அதனால் சாதனைகள் செய்ய வழி பிறக்கிறது..  இவ்வளவுக்கும் காரணம் அந்தப் பாதம்தான் அதனால்தான் இறைவனின் பாதத்தைத் தொட்டு வணங்குகிறொம் . தவிர யாரும் இறைவனின் கையைத் தொட்டோ தலையைத் தொட்டோ வணங்குவதை விட அதிகமாக. (இயலாதவர்கள் சிலர் அவ்வாறு செய்வது உண்டு) இறைவனின் திருப்பாதங்களைத் தொட்டுப் பணிகிறோம். சில கோயில்களில் பாதங்களே தெய்வமாக இருப்பதைக் காண்லாம் .  

இராமனின் செருப்புகளை அரியணையில் அமர்த்தி பரதன் நாட்டை ஆண்டான். நாடு சிறந்தற்கான உயர்வு அங்கே சொல்லப்படுகிறது.  ஒரு செருப்பு என்பது ஒரு அணிகலன் மட்டுமல்ல அது ஒரு ஆளின் அடையாளம். ஒருவருடைய மன ஓட்டத்தைக் கூட ஒரு செருப்பு காட்டி விடும்.

பெயர் சுட்டப்படாத அந்தச் சிறுமி செருப்பைக் கொடுத்து விட்டுச் செல்கிறாள். பல நாட்களாக அதைத் திருப்பி  வாங்க வரவில்லை.  அவருடைய வருகை எப்படி இருக்கிறது இனி இந்த கதை எவ்வாறு நகர்த்தப்படும் என்று நாம் யோசிக்கும் பொழுது தான் ஒரு கற்பனையை உள்ளே திணிக்கிறார் கதையின் ஆசிரியர்.  அந்தச் செருப்பை  யார் அணிந்தாலும் அவர்கள் பாதத்திற்கு அது சரியாகப் பொருந்தி விடுகிறது.  சிறுவர்கள் அணிந்தாலும் பெரியவர் அணிந்தாலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்  அந்த செருப்பு  அந்தந்த நபருக்குப் பொருத்தமானதாக மாறிவிடுகிறது. இதை அறிந்த ஊர் மக்கள் திருவிழாக் காலமென வந்து அதை அணிந்து பார்ப்பது நடக்கிறது. அதை ஒரு வியாபாரம் ஆக்கி இந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளி விழித்துக் கொள்கிறார்.

முடிவில் செருப்பு கொடுத்த சிறுமி பருவ மங்கையாகத்  திரும்பி வருகிறாள் ஆனால் அந்தச் செருப்பு அவளுக்கு மட்டும் பொருந்தாமல் போகிறது என்று எதிர்பாராதமாக முடிப்பது இந்தக் கதையின் சிறப்பாகும். எஸ் ராமகிருஷ்ணனின் மொழிநடையும் தடங்கல் இல்லாமல் நம்மை வாசிக்கத் தூண்டுகிறது.  ஒரே மூச்சில்  வாசித்து விடலாம். அவருடைய சிறந்த கதைகளுக்கும் நல்ல எழுத்துக்களுக்கும் பாதம் முடியும் பதமாக அமைகிறது.

Leave a comment

Trending