மலையாளத் திரைப்படங்கள் 2024  – ஒரு மதிப்பீட்டு நோக்கு

விஜிலா விஜயன்

“மலையாளப் படங்களைப் போல் ஏன் எடுப்பதில்லை…”

பல்வேறு மொழித் திரையுலகினரும் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருந்ததில்லை. காரணம் மலையாளத்தில் நட்சத்திரங்களை மையமாக வைத்து வரும் படங்களை விட கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களே அதிகம்.

2024-ஆம் ஆண்டில் மலையாளத்தில் மொத்தம் 228 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் 15 திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி உள்ளது. அதாவது படத்தின் பட்ஜெட்டை விட பல மடங்கு லாபத்தைப் பெற்றுள்ளன. இவை வசூல் ரீதியான வெற்றி பெற்ற படங்கள் மட்டும் அல்ல. விமர்சன ரீதியாகவும் அனைவரின் மத்தியிலும் பாராட்டைப் பெற்ற திரைப்படங்கள். பொதுவாக விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் திரைப்படங்கள் வெற்றி பெறுவது அரிது. தமிழில் 2024-ஆம் ஆண்டில் மொத்தம் நான்கு படங்களே இந்த வரிசையில் அடங்கியுள்ளன. அப்படிப் பார்க்கும்போது மலையாளத் திரை உலகின் இந்த வெற்றி தமிழை விட சுமார் நான்கு மடங்கு அதிகம். இதுவே இந்திய அளவில் மலையாளத் திரை உலகம் பேசப்படுவதற்குக் காரணம்.

இவை தவிர, பல படங்கள் போட்ட முதலீட்டை எடுத்து வெற்றி வரிசையில் சேர்ந்தன. பல படங்கள் இந்திய அளவில் சிறந்த விமர்சனங்களையும் பெற்றன.

இந்த திரைப்படங்கள் குறித்து ஒரு பார்வை….

ஆண்டின் தொடக்கத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்த படமாக வெளிவந்தது ஆட்டம் திரைப்படம். 2022-ஆம் ஆண்டிலேயே தேசிய விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம். 2024- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறந்த திரைப்படமாக தேசிய விருது இப்படத்திற்கு அறிவிக்கப்பட்டது.

ஜனவரி மாதத்தில் வெளியான ஜெயராமின் ஓஸ்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் சுமார் 40 கோடி ரூபாய் வரை வசூலை ஈட்டியது. ஆனால் அதே மாதம் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த மோகன்லாலின் திரைப்படமான மலைக்கோட்டை வாலிபன், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் தோல்வியைத் தழுவியது.

பிப்ரவரி மாதத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் க்ரைம் திரில்லராக வெளிவந்த திரைப்படம் அன்வேஷிப்பின் கண்டெத்தும் (Anweshippin Kandethum). வெறும் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் சிறந்த விமர்சனங்களோடு 40 கோடி வசூலை ஈட்டியது. அடுத்தது பிரேமலு. ஒரு ஜாலியான காதல் காமெடி படமாக வெளிவந்தது. பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் இளம் நடிகர்களை வைத்து வெறும் மூன்று கோடிக்கு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 136 கோடி ரூபாயை வசூலித்தது. தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் அதிக அளவில் வசூலை அள்ளிக் குவித்தது.

மம்முட்டி நடிப்பில் வெளியான பீரியட் ஹாரர் திரில்லர் பிரம்மயுகம். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு மற்றும் மேக்கிங் அனைவராலும் பாராட்டப்பட்டது. 27 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 85 கோடி ரூபாய் வசூலைப் பெற்றது. அதே மாதத்தில் சிதம்பரம் இயக்கத்தில், சவுபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்டோர் நடிப்பில் ஒரு சர்வைவல் திரில்லராக வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ் (Manjummel Boys). வெறும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 242 கோடி ரூபாய்  வசூலை ஈட்டியது.

“படத்திற்கு கண்டன்ட் மட்டுமே போதும் எங்கு வேண்டுமானாலும் ஓடும்“ என்பதற்குச் சான்றாக இந்தப் படம் அமைந்தது. காரணம் மலையாளத்தில் படம் எடுத்தாலும் இந்தப் படம் அதிக வசூலை ஈட்டியது தமிழ்நாட்டில்தான். மலையாளத் திரைப்பட வரலாற்றில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற பெருமையையும் இந்தப் படம் பெற்றது. பிப்ரவரி மாதத்தில் வெளியான இந்த நான்கு படங்களும் விமர்சன ரீதியாக அனைவரின் மத்தியிலும் பாராட்டப்பட்டத்தோடு, நல்ல வசூலையும் வாரிக் குவித்தன.

மார்ச் மாதத்தில் பல படங்கள் வெளியானாலும் அதிகம் பேசப்பட்ட திரைப்படம் ஆடுஜீவிதம் (The Goat Life) தான். இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில், பிரித்விராஜ் நடிப்பில் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படம் 82 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் 158 கோடி ரூபாய் வரை வசூலித்தது.  அதேநேரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திலீபின் தங்கமணி திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியைத் தழுவியது.

ஏப்ரல் மாதத்தில் வெளியான திரைப்படம் ஆவேசம். ஃபஹத் ஃபாசில் நடிப்பில், காமெடி கதைக்களத்துடன் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், கமர்ஷியல் என்டர்டைன்மென்டாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, 156 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. அதே மாதத்தில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வருஷங்களுக்கு சேஷம். பிரணவ் மோகன்லால், நிவின் பாலி, தியான் ஸ்ரீனிவாசன் என பலதரப்பட்ட நட்சத்திர பட்டாளத்துடன் வெளிவந்த இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், 80 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இதே மாதத்தில் வெளியான உன்னி முகுந்தனின் ஜெய்கணேஷ் திரைப்படம் இருவிதமான விமர்சனங்களுடன் வசூல் ரீதியான வெற்றியை பெற்றது. அதேநேரம் ஏப்ரல் மாதத்தில் வெளியான திலீபின் பவி கெயர்டேக்கர் (Pavi caretaker) திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

அடுத்தது மே மாதத்தில்  பிரித்விராஜ் மற்றும் பேசில் ஜோசஃப் நடிப்பில் வெளியான குருவாயூர் அம்பல நடையில். இந்தத் திரைப்படம் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. காமெடி என்டர்டைனராக  வெளியான இந்தத் திரைப்படமும், வெறும் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 90 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இதே மாதம் வெளிவந்த மம்முட்டியின் டர்போ திரைப்படம் வெவ்வெறு விதமான விமர்சனங்களுடன் வந்தாலும் நல்ல வசூலையும் பெற்றது.

அடுத்து ஆசிப் அலி மற்றும் பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த தலவன் (Thalavan) திரைப்படம். நல்ல விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியும் பெற்றது. இதேநேரம் மே மாதத்தில் வெளியான நிவின் பாலி நடித்த மலையாளி ஃபிரம் இந்தியா மற்றும் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான நடிகர் ஆகிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை.

ஜூன் மாதத்தில் வெளியான உள்ளொழுக்கு (Ullozhoku) திரைப்படம், 2024-ஆம் ஆண்டில் வெளியான  மிகச்சிறந்த மலையாளத் திரைப்படங்களில் ஒன்றாக அனைவராலும் பேசப்பட்டது. வித்தியாசமான கதைக்களத்துடன், இரு தலைமுறை பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இந்திய அளவில் மிகச்சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. இதில் நடித்திருந்த நடிகர்கள் ஊர்வசி, பார்வதி ஆகியோரின் நடிப்பு அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டது. அதே மாதத்தில் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக வெளிவந்த ககனாச்சாரி (Gaganachari) படமும் வசூல் ரீதியான வெற்றியைப் பெறவில்லை என்றாலும், வித்தியாசமான கதை அம்சம் என்று அனைவராலும் பாராட்டப்பட்டது.

அடுத்து ஜூலை மாதத்தில் வெளியான ஆசிப் அலியின் லெவல் கிராஸ் திரைப்படம். இதுவும் வசூல் ரீதியான வெற்றியைப் பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக அனைவராலும் பாராட்டைப்பெற்றது. வெறும் மூன்று கதாபாத்திரங்களை வைத்து ஒரு த்ரில்லர் படமாக எடுத்த விதம் அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டது.

இதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஆசிப் அலியின் மற்றொரு படமான அடிகொ அமிகொ (Adigos Amigo) திரைப்படமும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், நல்ல படம் என்ற விமர்சனங்களை பெற்றது. இதே ஆகஸ்ட் மாதத்தில் திருஷ்யம் படத்தின் இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கத்தில், பேசில் ஜோசப் நடிப்பில் வெளியான காமெடி திரில்லர் திரைப்படம் நுணக்குழி (Nunakuzhi). இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்துடன், வசூல் ரீதியான வெற்றியையும் பெற்றது. இந்த மாதத்தில் வெளியான மற்றொரு திரைப்படம் வாழ (Vazha: Biopic of billion boys). எந்த நட்சத்திரப் பட்டாளமும் இல்லாமல், இந்தக் கால இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். வெறும் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 40 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.

அடுத்து செப்டம்பர் மாதத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ஏஆர்எம் (ARM) திரைப்படம். கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், 30 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 106 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. அதே மாதத்தில் ஆசிப் அலி, விஜயராகவன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் திரில்லர் கதை அம்சத்துடன் வெளிவந்த திரைப்படம் கிஷ்கிந்தா காண்டம். திரைக்கதை, ஒளிப்பதிவு, காட்சி அமைப்பு என இப்படத்தில் அனைத்து விஷயங்களும் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டன. வெறும் 7 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 77 கோடி ரூபாய் வசூலை எட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற All We Imagine as Lights திரைப்படமும் இதே மாதத்தில் வெளியானது. உலக அளவில் சிறந்த விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியான வெற்றியை இந்த படம் பெறவில்லை.

அக்டோபர் மாதத்தில் குஞ்சாக்கோ போபன், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் போகன்வில்லா. கலவையான விமர்சனங்களுடன் வசூல் ரீதியான வெற்றியை இந்தப் படம் பெற்றது. இதே மாதம் ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்து வெளியான பணி (Pani) திரைப்படமும், கலவையான விமர்சனங்களுடன் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றது. சுமார் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 40 கோடி ரூபாய் வரை வசூலை ஈட்டியது.

அடுத்தது நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் சூக்ஷ்மதர்ஷினி (Sookshmadarshini). பேசில் ஜோசப்,  நஸ்ரியா நடிப்பில் வெளியாகிய திரில்லர் திரைப்படம். அனைவர் மத்தியிலும் பாராட்டைப் பெற்ற இந்தத் திரைப்படம் சுமார் 15 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு, 55 கோடி ரூபாய் வசூலைப் பெற்றது.

டிசம்பர் மாதத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் ஆக்ஷன் திரைப்படமாக வெளியானது மார்கோ. இந்தப் படமும் கலவையான விமர்சனங்களுடன் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் அதே மாதம் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான மோகன்லாலின் Barroz திரைப்படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது.

பல படங்கள் தோல்வியைத் தழுவி இருந்தாலும், வெற்றி பெற்ற படங்கள் அனைத்தும் மிக குறைந்த முதலீட்டில் பல மடங்கு லாபத்தை ஈட்டியவை. (இங்கு குறிப்பிட்டுள்ள படங்களின் பட்ஜெட், வசூல் பற்றிய விபரங்கள் அந்தந்த படங்களின் வெற்றியைப்பற்றி குறிப்பிடுவதற்காக சமூகவலைத்தளங்களில் இருந்து எடுத்தவை மட்டும்தான்.)

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட திரையுலகங்கள் பெரும்பாலும் நட்சத்திரங்களை சார்ந்தே உள்ளன. அங்கெல்லாம் நட்சத்திர நடிகர்களைத் தவிர மற்ற நடிகர்களின் திரைப்படங்கள் ஓடுவது மிக அரிதாக உள்ளது. ஆனால் மலையாளத் திரை உலகைப் பொருத்தவரை இங்கே யார் வேண்டுமானாலும் நடிக்கலாம், நல்ல கதை இருந்தால் படம் ஓடும் என்ற நிலை நீடிக்கிறது. அது மட்டுமல்ல பெரிய நடிகர்கள் கூட எந்தக் கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். பேசில் ஜோசப், டொவினோ தாமஸ், ஆசிப் அலி, உன்னி முகுந்தன் ஆகியோர் 2024இல் வெற்றிப் படங்களைக் கொடுத்தது மட்டுமல்லாமல், கதாபாத்திரத் தேர்வுகளிலும் கவனத்தைச் செலுத்தி மிக வித்தியாசமாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர். 

2024 மலையாளத் திரை உலகிற்கு ஒரு வெற்றி ஆண்டுதான். 2025 இதைவிட மிகப்பெரிய வெற்றி ஆண்டாக அமைய வாழ்த்துவோம்.

— விஜிலா விஜயன்

Leave a comment

Trending