முப்பரிமாணம்: நூல்வழிப்பயணம் 6
மலையகா,
அல்லியம்,
ஈழத்தமிழரின் புலம்பெயர் இலக்கியம்
அன்பாதவன்
anbaadhavanjp@gmail.com
”கொஞ்சநாட்கள் ஊரிலில்லை
மறந்து விட்டார்கள்
என்னை”— இது நான் எழுதிய ஹைகூ..பொய்க்கூ என்றுக்கூட சொல்லிக் கொள்ளுங்கள், இப்போது இது பேச்சில்லை..
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோமே. யாராவது கவலைப் பட்டீங்களா.. வாலிப வயோதிக அன்பர்களே..!உங்களைச் சந்திக்க மீண்டு[ம்] வந்திருக்கேன்.
இம்முறை கவிதை,கதை,கட்டுரை என மூன்று நூல்களுடன் முப்பரிமாணம் மலர்கிறது. .வாசித்து உப்பு உறைப்பு சொல்லுங்க..
சந்திப்போம்.
01.மலையகா :கசப்பு மாறாத தேநீர்க் கதைகள்

23 பெண் படைப்பாளிகளின் 42 கதைகள். ஊடறு வெளியீடாக, வந்திருக்கும், ‘மலையகா’ மலையகப் பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பாக, வாசகர் கரங்களில்…!
அனைத்துக் கதைகளும் இலங்கையின் தேயிலைத் தோட்ட வாழ்வினைப் பின்புலமாகக் கொண்டவை. அதனாலேயே பல கதைகளின் கருக்கள் / கதைப் பின்னணியில் ஒன்று போலவே இருப்பதுபோலத் தோன்றுகிறது. உன்னதமான வெளிப்பாட்டுத் தன்மையில் வாசகரை ஈர்க்கும் அழகியல் குறைவெனினும், எளிய மக்களின் அவல வாழ்வினை, கதையின் கருப்பொருளாகக் கொண்டு, எளியோரின் நல்வாழ்வினை நோக்கிய புத்துலகப் பயணம் என்ற உன்னத நோக்கந்தான், மலையகா’ கதைகளின் சிறப்பு, பெருமிதம் எல்லாமும்!
‘மலையகா’ கதைகளின் அடிநாதம் தேயிலைத் தோட்டம், அதன் உற்பத்தி, தனியார் முதலாளிகளின் வளர்ச்சி, எளிய தோட்டத் தொழிலாளர்களின், வயிற்றுப்பாடு, மருத்துவச் சிகிச்சை, மற்றும் கல்விக்கானப் போராட்டமெனில், இக்கதைகளுக்கு மூலசக்தியாக, ஆணிவேராக இருப்பது ‘சிறுகதைச் சிற்பி’ புதுமைப் பித்தன் எழுதிய ‘துன்பக்கேணி.’ சிறுகதை எனலாம்.
திருநெல்வேலி ஜில்லா, வாசவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் வறுமையின் சாட்டையடி தாளாமல், பிழைப்பு தேடி இலங்கையின் மலையகத்துக்கு பயணப்படும் கதைதான் ‘துன்பக்கேணி’.
மலையகா-வின் பெரும்பான்மையான கதைகளும் துன்பக்கேணியில் சிக்குண்டு போராடி, அல்லது கிடைத்த வாழ்வை ஏற்று, அங்கேயே அட்டைகளுக்கு தம் ரத்தத்தைக் கொடுத்து, மழை, பனி, வெய்யில் என இயற்கையின் சீற்றங்களை எதிர்கொள்ளவியலாமல் அங்கேயே சாவதுதான்! ஆம்! மரணம் ஒன்றே அம்மக்களுக்கு பெருவிடுதலையாக அமைகிறது.
‘மலையகா’ – வின் 42 கதைகளும் கூறிய செய்தியைத்தான், மிகச் சமீபத்தில், தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கின்ற, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளாரின் அவல வாழ்வு உறுதி செய்கிறது. காலங்கள் மாறினாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் மாறாத ‘அதே ருசி’ அதே தரம்-தான்.
உள்நாட்டு மக்களின் நுகர்வுக்கென விநியோகிக்ப்படும் ‘DUST TEA – எனும் மட்டரகத் தேயிலைத் தூளைப் போலவே, இலைகிள்ளுபவர்களுக்கும் DUST LIFE – யே முதலாளிகள் இன்றும் சாத்தியப் படுத்துகின்றனர்.
பெரும்பாலான கதைகளின் நடை, மொழி, வடிவம், செய்நேர்த்தி ஆகிய நுணுக்கங்கள் யாவும் படைப்பாளியின் உள்ளுக்குள் இறங்கிய வாழ்வின் சாரமும், அனுபவமும் முடிவு செய்யும், மட்டுமின்றி, அவர்தம் அனுபவமும் OBSERVATION- ம் தீர்மானிக்கின்றன என்பவையே இச்சிறுகதைகளின் வழியாக வெளிப்படுகின்றன.
இந்தியாவைப் போலவே, இலங்கையும் ஆங்கிலேயர்களின் ஆட்சியதிகாரத்துக்குட்பட்ட 19ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரையிலும் தேயிலைத் தோட்டத்து வாழ்வியலான உழைக்கும் கூலிகளான தமிழ் மக்கள், ரத்தம் உறிஞ்சும் அட்டைகளுடனான வாழ்வு, உழைப்புக்கேற்ற ஊதிய மறுப்பு, சுகாதாரக் குறைபாடுகள், போதுமான மருத்துவ வசதியின்iமை, உயிர்ப் பாதுகாப்புக்கு உத்தரவாதமின்மை, பாலியல் வன்கொடுமை, உழைப்புச்சுரண்டல், தாயகம் செல்ல அனுமதி மறுப்பு என குறிப்பிட்ட அடைவுகளுக்குள்ளேயே மலையகா-வின் கதைகள் சுழல்கையில் தொகுப்பாக ஒரு சேர வாசிக்கையில், கூறியது கூறலும், சில சம்பவங்கள் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டிருப்பதும், படைப்பில் பலவீனக் கதைகளும் இணைக்கப்பட்டிருப்பதும் வாசகனுக்குச் சலிப்பூட்டினாலும், அந்த கசந்த வாழ்வுதான் நிஜம் என்பதும் புரிகிறது.
குடும்பத் தலைவனான கணவன் அகால மரணம் தழுவிட, மனைவியே, குடும்பம், குழந்தை என சிலுவை சுமப்பது பல கதைகளிலும் நிகழ்கிறது.
கூலித் தொழிலாளர்- கங்காணி – துரை (முதலாளி அல்லது முதலாளியின் பிரதிநிதி) – இம் மூவருக்குள் சுற்றி வருகிற கதைகளில், முதலீடு, இலாபம், குறைந்த கூலி என்பவை சொல்லப்படாமல் உணர்த்தப்படுகின்றன.
தேயிலைத் தோட்ட வாழ்வியலில், ஆண்களின் வாழ்க்கைப்பாடு, உழைப்பு, உடலின்பம், மது, நோய், போராட்டம் என்ற திசைகளில் பயணிக்கிறதெனில், பெண்கள், அதே வாழ்வியலில் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களையும் ஒடுக்குமுறைகளையும், மலையகா-வின் பல்வேறு கதைகள் உளவியல், உடலியல், சமூகவியல், பண்பாட்டுவியப் பின்னணியில் பேசுகின்றன. சமூகக் காரணிகள் உழைக்கும் பெண்கள் மீது மிக வலுவான தாக்கத்தினைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.
‘மலையகா’ காட்டுகிற தேயிலைத் தோட்ட வாழ்வியல் அனுபவங்கள் பெருவாரியான தமிழ் வாசகர்களுக்கு புதியன. யதார்த்த வகை, நடை, எளியவர்களின் வாழ்வை வாசகர் கண்முன் நிறுத்துகிறதெனில், மொழி வாசகனுக்குள் ஊடாகச் சென்று புதிய தரிசனங்களைக் காட்டுகிறது.
‘மலையகா’ கதைகளின் பின்புலமாகிய ‘தோட்டங்கள்’ எனப்படும் ESTATEகள் – இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அது சிக்மகளுர் பிரதேசத்தில் காஃபி தோட்டங்களாக ,கேரளத்தில் ஏலக்காய், இரப்பர் தோட்டங்களாக…. வேறு முகம் காட்டக் கூடும். ஆனால் வாழ்வியல் என்றும் ஒன்றுதான் எங்கும் ஒன்றுதான். அந்த உலகத்தின் இயக்கம் நிற்கவோ, மாறவோ போவதில்லை.
‘மலையகா’ – கதைகள் வழியாக, வாசகன் நோக்குங்கால், இந்தக் கதைகள் மட்டும் தேயிலைத் தோட்டத் தொழிலைப் பெருமிதமாகவும், தோட்டத் தொழிலாளர்களைப், பெருமை மிக்க கதாபாத்திரங்களாக, ஆளுமை நிறைந்த மனிதர்களாக, சிறந்த பேராளிகளாக, மாற்றுப் பண்பாடுகளுடன் இசைந்து வாழும் விசால மனங்கொண்டவர்களாகப் பார்க்கின்றன. தேயிலைத் தோட்டத்தின் ஆண்களையும், பெண்களையும் அவர்களின் வாழ்க்கையையும் கடைசி மனிதன் கோணத்திலிருந்து பார்க்கின்றன.
“இன்றும் ஒரு நாளைக்கு 18 கிலோவிலிருந்து 22 கிலோ தேயிலைக் கொழுந்து எடுத்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் மலையகப் பெண்கள், ஆண்களை விட இரண்டு மணி நேரம் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கிறது” (மீனாள் நித்தியானந்தன், இலக்கியங்களில் பெண்மொழியும் புனைவும் பக்- 256)
உழைக்கும் மகள் ஒருத்தி, தன் மீதான அடக்குமுறைகளை, அலட்சிய பாவங்களை அவமான வலிகளைத் தாங்கிக் கொண்டால் ‘தெய்வம்’ எனக் கொண்டாடும் சமூகமே, அவள் கோபத்தை, எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினால அடங்காப் பிடாரி என்றும் பேய் என்றும் அழைக்கிறது. மலையகப் பெண்களின் வாழ்க்கையும் இவ்வாறே கழிகிறது.
மலையகத்தின் பிரத்யேக மொழியாளுமை வாசகனை கதைகளுக்குள் ஈர்ப்பதில் வியப்பேதுமில்லை.
லொரி (LORRY),
கல்வித் திணைக்களம் (UNIVERSITY),
டொக்டர் (DOCTOR),
கதிரை (CHAIR),
எம்புலன்ஸ் (AMBULANCE),
இயக்கி (REMOTE),
ரோயல் (ROYAL),
கேம்பிரா (CAMERA)
தீவிரமான போராட்டம் குறித்த அரசியல் அறிவின் பின்புலம் இல்லாதவர்களாய், மலையகத் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை பல கதைகளிலும் பதிவாகின்றது. நடுத்தரவர்க்க மனோபாவத்துடனும் கும்பல் மனோபாவத்துடனும் பிரச்னைகள் பெரிதாகும் போது விலகி, ஓடி, ஒளியும் பல கதைப்பாத்திரங்கள். சிங்களச் சிறுவனோ தமிழனோ, மானுடர்க்குள் மொழிபேதம் இல்லாமையை- செந்தாமலை- கதை விவரிக்க.
“வீட்டிலுள்ள குளிர்ச் சாதனப் பெட்டி நவீனரக அலமாரிகள் அவற்றை நிறைத்துள்ள அலங்காரப் பொருட்கள் யாவும் அவளுக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை” – தாய்ப் பாசம் கதை நாயகிக்கு பிள்ளைகளின் முகங்களைக் காண்பது தான் இன்பம் எனும் உறவு மேன்மையின் உன்னதம் விளக்குகிறது.
போதுமான மருத்துவ சிகிக்கைகளும், ஆம்புலன்ஸ் உதவிகளும் கிடைக்காத சூழலே மலையகத்தில் எனினும், … கடும் நோய்களுக்கும் பூசாரியை அழைத்து விபூதி பூசினால் சரியாகி விடும் என நம்பும் அப்பாவி மக்களின் மூட நம்பிக்கையும், தாய் மண்ணிலிருந்து கொண்டு சென்ற மாரியம்மன் வழிபாடு போன்ற பண்பாட்டுப் பதிவுகளும் நூலில் உண்டு.. கூடவே, ஒரு படைப்பாளியின் பெயர் சற்றே அதிர்வையும் தந்தது ‘சுகந்தி வெள்ளையக் கவுண்டர்’ எங்கே சென்றாலும் தம்மோடு சாதியையும் துணைக்கழைத்தது செல்லும் போக்கு மலையகத் தமிழர் மத்தியிலும் இருப்பது வேதனையா… விநோதமா…?
உழைப்புச் சுரண்டலுக்கெதிரான உதிரிகளின் கதைகளில், முறையான சரியான அரசியல் பார்வையின்மையால், போராட்ட அரசியலின்றி, வெறும் கூச்சல்களாக, கூட்டங்களின் கோஷங்களாக தோல்வியில் முடங்கிப் போகின்றன.
தமிழிலக்கியத்தில் புறக்கணிக்கப்பட்ட அல்லது சீந்துவாரற்ற ஜனங்களின் கதைகளைத் தொகுப்பாக கொண்டு வந்ததற்காக ஊடறு வரலாற்றில் இடம் பிடிக்கிறது.
02.‘அல்லியம்’// கார்த்திக் திலகன்

ஒரு கவிஞனுக்கு கவிதையின் கச்சாப் பொருள்… (விதை) எங்கிருந்து கிடைக்கும்? எப்போது கிடைக்கும்? கவிஞனைச் சுற்றியுள்ள எதிலிருமிருந்துதான், எப்போதும்தான், சூரியனுக்கு கீழுள்ள எவையுமே பாடுபொருட்களே. கவிஞன் தன் புலன்களை விழிப்போடு இருக்கும்படியாக வைத்திருக்கும் வேளையில் அவனைச் சுற்றியுள்ள எதிலிருந்தும் கவிதையின் மைக்கூடு திறக்கும் என்பதே நிதர்சனம்.
“வாழ்க்கை என்பது வேறொன்றுமில்லை
பூமி என்கிற தபேலாவின் மீது குரவைகள்
துள்ளுகிறபோது எழுகிற இசை” (ப. 60)
என, இயல்பாக தன்முன் நிகழும் நிகழ்வொன்றிலிருந்து வாழ்வின் சூட்சும இசையின் நுண்ணியத்தை, பகிரும் கார்த்திக் திலகனின் மூன்றாவது கவிதைத் தொகுதி ‘அல்லியம்’
அல்லியம் – என்ற சொல்லுக்கான அகராதி விளக்கமிது : திருமால் கூத்து, இடையர் ஊர், கொட்டி, உழக்கூடியது, அவலட்சணம், அழகற்றது.
அல்லியம் : தொகுப்பின் கவிதைகள்,
அ) தீக்களி,
ஆ) மனப்புரம்
இ) வையத்தகளி
ஈ) ஆகாயத்தின் சொற்கள்
உ)அத்திக்கள்
ஊ) மெய்ப்பாட்டியல்
எ) ஏழாம்சுவை.
எனப்பிரிக்கப்பட்டுஒவ்வொரு தலைப்பின்கீழும், சில கவிதைகளும், சில குறுங்கவிதை கொத்துகளும், வேறுவேறு நிறங்களில்… வித விதமான சுவைகளில்.
ஒவ்வொரு தலைப்பின் முதல் கவிதையில், கார்த்திக் திலகன், காளியிடம் உரையாடுகிறார்…, விண்ணப்பிக்கிறார் ; வேண்டுகிறார். பிறகே கவிதையின் நவீனத் திசையில் பயணிக்கிறார்.கார்த்திக் திலகனின், கவிதைப் பயணமென்பது, ஆன்மீகமா அன்றி நவீன வாழ்வின் சமகாலத் தரிசனமா….?
தொகுப்பின் முதல் கவிதையிது :
“திருப் பொற் கிண்ணத்தில்
தேனெடுத்து
சொல்லும் இசையும்
அதில் குழைத்து
காளி
உன் கையால் ஊட்டுகிறாய்
என் காலக்கோடு நீள்கிறது” (ப.17)
கடலூரிலிருந்து மற்றுமொரு காளிதாசன்! எனில், இந்தக் கவிதைகள், கார்த்திக் திலகனுடையவையா… அன்றி காளி-யால் படைக்கப் பட்டவையா…?
நூலின் பல பக்கங்களில், காளி, சிவன், சக்தி, அர்த்தநாரீஸ்வரன் என இறைமையைப் போற்றுபவரின் (பெரும்பாலும் சைவம் சார்ந்தவை) பரவசப்பனுவல் வரிகளிவை :
“வையமெனும் விளக்கினிலே
தீபமென சுடர்ந்து
ஆகாசக் காவடியை
தோள் மீது சுமந்து
நீ ஆடுகிற ஆட்டத்திலே
அந்தகாரம் கிழியும்
மின்னலெனும் மொழி பிளந்து
இடிச்சொற்கள் அழியும்” (ப. 45)
இப்படி ஆராதிக்கும் கவிஞரின் நிஜ உலக தரிசனமோ வேறு குரலில் ஒலிக்கிறது
‘கடைசிக் கடவுள்’ என்னும் (ப.98) கவிதை, பாலத்தீன படுகொலையை, மியான்மர் மதக் கலவரத்தைப் பாடுகிறது.
‘புகையைப் போல வெளியேறும்
அப்பாவி மக்களை உன் அருட்சேனையோடு
எதிர்வந்து நீ ஆற்றுப்படுத்தினாய் இல்லை,-
என கடவுளைக் கண்டிப்பவரே,
‘நல்லவேளை நீ என்னை
நாத்திகனாகப் படைத்தாய்’– எனத் தற்பெருமிதம் அடைகிறார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க மசூதி ஒன்று இடிக்கப்பட்ட போது, புத்தவிகாரம் தகர்க்கப்பட்ட போது, சமணர்கள் பலர் கழுவேற்றப் பட்ட போதும், எந்த இறைவனும் வரவில்லை. முரணாக பொதுப் புத்திக்கு சொல்லப்பட்டது ‘அன்பே சிவம்’
படைப்பாளியின், படைப்புமுரண்களுக்கு காரணம் எதுவெனில் அடிப்படை அரசியலின்மை. விமர்சனமின்றி பொதுப்புத்தியோடு சொல்லப்பட்ட எதையும் ஏற்பதும் தான்.
கார்த்திக் திலகனின் அகம் சார்ந்த கவிதைகளில், அழகியல் பூத்து குலுங்குகிறது.
“நாம் இருவரும்
இணைந்து நடக்கும்
இந்தத் தனிமைச் சாலைதான்
எவ்வளவு அழகு” (ப.83)-
என வியக்கும் போதே, இன்னொரு காட்சி வாசகனை அதிர்வுக்குள்ளாக்குகிறது.
“எனக்கும் உனக்குமான
இடைவெளி என்பது
பாம்புக்கும் பிடாரனுக்குமிடையில்
இசையால் நிரம்பி கிடக்கும் இடைவெளி’ (ப.82)
யார் பாம்பு? யார் பிடாரன்… எது முந்தும்….? சின்னஞ்சிறு வரிகளில் மகுடியின் இசைக் கோலம்.
‘அவன் கைகள் ஒவ்வொன்றும்
ஐந்து தலைநாகம்’ (ப.78) – எனும் படிமம் புதுசு அர்த்த செதில்கள் நிரம்பியது.
‘இரவு சேவலாக மாறிக் கூவுகிறது’
பகல் பறவையாக மாறி வானத்தில் சடசடக்கிறது’ (ப. 112)
‘சடசடக்கிறது’ எனும் சொல்லாட்சி மேற்சொன்ன வரிகளுக்குப் புத்தழகைக் கொண்டு வந்து ஊட்டுவது வாசகச் சுவை!
‘நரை’ குறித்தான, ‘வாழ்வின் ரசம்’ (ப.87) எனும் கவிதை தமிழுக்குப் புதுசு.
‘பருவத்தில் பொங்கிய அழகு
இப்போது உருகி
நீண்ட மல்லிகைப் பூக்களென
நரைத்து தேங்கியிருக்கிறது’- எனும் வரிகளில் ஒளிர்வது காமமல்ல… காதல்… தூயநேசம்.
‘கடலொரு நீல இலை’ (ப. 46) என்ற ஒருவரியே பொருள் பல சொல்லும் படிமக்கவிதை.
‘தெற்கு என்பது காதலுக்குரிய திசை’ என்பவரே,
‘கிழக்கு தன் காதலைச் சொல்ல சூரியனை மேற்கிடம் தூது அனுப்புகிறது’ என முரண் சுவை சொல்வது’ ‘பூமி சிக்கிக் கொண்டது’ (ப. 56) கவிதையில்…..
கார்த்திக் திலகனின், கவிநடை என்பது மனம் போல் எழுதுவது அதனாலேயே கவிதைகளில் கூடுதல் சொற்கள், தேவையற்ற விளக்கங்கள் … முரண்கள் உணர்வுப் பூர்வமாக எழுதிய முதல் பிரதியை அறிவுப் பூர்வமாக திருத்தங்கள் அல்லது செதுக்கல் செய்வது அவசியமாகிறது.
நவீனம் என்பது இரண்டு உலகப்போர்களுக்கு பின் உதித்த கோட்பாடு… பிரபஞ்சத்தின் மீதான புதிய பார்வை. ஆனால், கார்த்திக் திலகனின் கவிதைகள் சிலதோ சரணாகதி தத்துவத்தைச் சார்ந்திருக்கின்றன. வேறு வேறு முகம் காட்டி வாசகனை திசையடைக்கின்றன. இவை பழையன! தொல் பழையன!
அதே நேரம், மாயமொழியெனும் தூரிகை கொண்டு தீட்டப்பட்ட நவீன ஓவியங்களுமுண்டு, மொழியை மட்டுமே வைத்துக் கொண்டு தாயம் உருட்டுகையில் ஏணிகள் ஏற்றலாம், நாகங்களும் துரத்தும் கொத்தும், இறக்கும் சில நேரம்! வாழ்வின் துளிகளை அனுபவித்து ருசிக்காமல் ஏது பரம பதம்?
“கலைஞனும் கவிஞனும் பொருளின் உண்மை நிலையைப் பிரதிபலிக்கும் பொழுது, அதன் தற்கால நிலையினின்று அது வளர்ச்சியடைகிற போக்கையும், வளர்ச்சியடைந்த நிலையில் அதன் தன்னிலையையும் குறிக்கோள் அல்லது இலட்சிய உலகில் காட்டுகிறார்கள். இங்குதான் புறவயமான பொருளின் அகவயமான பிரதிபலிப்பு மீண்டும் அகவயமான கலையுணர்வினாலும் கற்பனையாலும் கலைப்படைப்பாக மாறுதல் பெறுகிறது”
என்பார் பேரா. நா. வானமாமலை.
‘அல்லியம்’ தொகுப்பின் மனிதநேயமிக்க கவிதையென நான் உணர்ந்தது சலவை செய்த உணர்வுகள் (ப.96)
‘பனியனை ஆண்களுக்கான பிரா
என்று ஏன் சொல்லக்கூடாது என்றான்
என் சகோதரன்
…
….
அவன் கொலுசுக் கால்களை கண்டு திடுக்கிட்டேன்.
…
…
எங்கள் வீட்டு அலமாரியில்
அவனுக்கான பெண்ணுடைகளுக்கு இடமே இல்லை
தலைநிறைய மல்லிகைச் சூடி
பட்டுப்புடவை சரசரக்க
வீட்டை வீட்டு இறுதியாக வெளியேறிய போது
என் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தான்.
அவன் அர்த்த நாரி”
“இருளும் ஒளியும் சேர்ந்தாடும் அர்த்நாரீஸ்வரம் என்னும் நடனத்தின் ரசிகனாக நானதன் அலாரிப்பு தொடங்கி அத்தனை அடவுகளையும் பதிவு செய்கிறேன்” எனும் கார்த்திக் திலகனின் ஒப்புதல் வரிகளையொட்டி. “நமது அன்றாடத்தின் ரசவாதியோ இதை ஒரு குறுக்கு வெட்டாகப் பார்க்கிறான். அவனும் பொருட்களும் நினைவும் சொற்களும் உயிர்களும் தன்னிலைக் காண்பகை நிலையாமையில் பின் தொடரச் செய்கிறான்” என முன்னுரைக்கும் மூத்த படைப்பாளி யவனிகா ஸ்ரீராமின் வரிகள், வாசகனுக்கு உதவுபவை, வாசகனை விரல் பிடித்து கார்த்திக் திலகனின் கவிதையெனும் மாய உலகத்துக்குள் அழைத்து செல்பவை.
03. ஈழத்தமிழரின் புலம் பெயர் இலக்கியம்//
முனைவர் இரா. செங்கொடி

இவ்வுலகில் பிறந்த எவருக்கும் வேர்களையும் தம் விழுமியங்களையும் மாற்றிக் கொள்ளச் சம்மதமில்லை, ஆனால் ஈழத்தில் பிறந்து, இலங்கையின் படைகளின் அட்டூழியங்களுக்கு அஞ்சி, ’உயிர்ப் பிழைத்தால் போதுமடா சாமி’ என வாழ்தலின் பொருட்டல்ல… இருத்தலின் (Existence) தேவை கருதி புகலிடம் தேடி, ஐரோப்பா, இந்தியா, ஆஸ்திரேலியா என பல கண்டங்களுக்கும் செல்லத் துணிந்தவர்கள் வாழ்விலே நிகழ்ந்ததென்ன?
”ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்” – எனும் முனைவர் இரா. செங்கொடியின் ஆய்வு நூலை வாசிக்க, உண்மைத் துலங்கும்.
”ஈழ விடுதலைப் போர் வரலாற்றில் கறுப்பு ஜீலை என அழைக்கப்படும் ஜீலை 1983 தொடங்கி 2009–இல் முள்ளி வாய்க்காலில் கொத்துக் கொத்தாக ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களப் பேரினவாதத்தின் பேய்த்தனத்தினால், பிறந்து வளர்ந்த தாய் நாட்டில் வாழ முடியாமல் உயிரைப் பிடித்துக் கொண்டு உலகப் பரப்பு முழுவதும் தஞ்சம் கோரித் தவித்த தமிழ்க் குடிகளின் வாழ்க்கைப்பாடுகளும் துக்கங்களும் ஈழத்தமிழரின் எழுத்துகளில் எவ்வாறு ஆவணமாக, வரலாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பனவற்றையெல்லாம் ஒன்றையும் விட்டுவிடக் கூடாது என்கிற கவனத்தோடு தொகுத்தும் பகுத்தும் இந்த நூலில் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார்”
என அணிந்துரையில் குறிப்பிடும் பேரா. க. பஞ்சாங்கத்தின் முன் குறிப்பு, நாலில் நுழைவதற்கு ஏதுவாய், புத்தக கதவைத் திறந்து வைக்கிறது.
போர் அல்லது யுத்தம் என்றால் என்ன? அதன் விளைவுகள் என்ன அறியாமலும் புரியாமலும் மன்னர்களின் வாள் முனையின் பெருமை பேசும் புறநானூற்று வழியில் வந்த தமிழ்க்குடிகளுக்கு ஈழ விடுதலைப் போராட்டம், கண்கண்ட சாட்சியாக முன் நின்றது.
ஆயுதங்கள், குண்டு வீச்சு, பாலியல் வன்முறை, படுகொலைகள் போன்ற அவலங்கள் 1980-க்கு பிறகே தமிழ்நாட்டின் திரைக்கதா நாயகர்களின் சாகசத்தில் மயங்கி கிடந்த தமிழ் நாட்டின் பெருங்குடி மக்களுக்கு அறிமுகமாகின்றன.
இலக்கியங்களில் அகம், புறம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு களவொழுக்கமும், கற்பொழுக்கமும் அகமென மகிழ்ந்து, ஆண்ட மன்னர்களின் போர்ப் பெருமையை சிவாகித்து கிடந்த மறத் தமிழர்க் கூட்டத்துக்கு ‘புகலிட இலக்கியம்‘ என்பது புதிது! அயலக வாழ்க்கை, அகதியின் அவலம் புதிது.
22, தலைப்புகளில் ஈழமக்களின் கண்ணீர் மற்றும் செந்நீர் வரலாற்றை, ஒலியற்ற குரலின் பெருவலியை கட்டுரைகளாக தந்திருக்கிறார், முனைவர் செங்கொடி.
எண்பதுகளின் தொடக்கத்தில், இலக்கிய உலகில் நுழையும்போது அதிர்வான வரவேற்பைத் தந்தது ஈழப் போராட்டமும் அது சார்ந்த இலக்கியங்களும் தான்! அதுவரை ‘மஹாகவி‘கள் ’குறும்பா’ எழுதி குதூகலித்துக் கொண்டிருக்க குமரனுக்கும் குந்தவிக்கும் கடிதங்கள் எழுதிய செ. கணேசலிங்கன், செ. யோகநாதன் போன்றோர் புதினங்களாக… சேரன், எம். எ. நுஃமான், வ.ஐ.ச. ஜெயபாலன், வண்ணச் சிறகு சங்கரி, கௌரி போன்றோர் கவிதைகளாகவும், போரை ,,வெகு மக்களின் துயரங்களை,போராட்டவரலாற்றை சொல்லாத சேதிகளாக எழுதினர்.
‘உயிர் பிழைத்தால் போதும்‘ – எனச் சிலப் படைப்பாளிகள் பல தேசங்களுக்கும் பறந்துபோக ‘புகலிட இலக்கியம்‘ எனும் புதுவகைப் படைப்புகள் அறிமுகமாயின.
அ.முத்துலிங்கம், ஆழியாள், நோயல் நடேசன், நளாயினி தாமரைச் செல்வன், ஷோபாசக்தி, றஞ்சி, ரவி, புஸ்பராஜா,–யெனப் புதுப்பட்டாளம் எனில் இஃதோர் புது… அனுபவம் ,கசப்பும் துவர்ப்புமான வாழ்வியல் பதிவு!
தாயகத்தை விட்டு புலம்பெயர்ந்த வந்த தமிழர்கள் பிற நாடுகளுக்குச் செல்லும் முயற்சிகளினூடாக, தரைப்பயணம், கடல்பயணம் அனைத்திலும் பல கணக்கற்ற கஷ்டங்களை சந்திப்பதை துயர்மிகு சொற்களால் விவரிக்கிறது ‘பயணநிலை அவலம்‘ அத்தியாயம்.
”போரில் முதலில் பாதிக்கப்படுவதும், இறுதியாக பாதிக்கப்படுவதும் பெண்தான். புலம் பெயர்விலும், ஆண்கள் சந்திக்கும் அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்ளும் பெண்கள் கூடுதலாகத் தங்கள் உடல் சார்ந்த உபாதைகளுக்கும், வன்முறைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.” (ப.27)
எனச் செங்கொடி குறிப்பிடுவது பல பெண் படைப்பாளிகளின் எழுத்தில் பதிவாகி இருப்பதென்னவோ நிஜம்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ தேசத்துக்கு செல்ல அல்லல் படுவதை, ‘அகதி தஞ்சக் கோரிக்கை, குடியுரிமை, கடவுச் சீட்டு சிக்கல்கள்‘ – கட்டுரை விரிவாய் அலசுகிறது. கொடுந்துயரச் சரிதத்தை குறைந்த வரிகளில் சொல்லிட ஏலுமா…?
போரின், விடுதலைப் போராட்டத்தின் காரணங்களினால் தாய்மண் விலகி, உறவு, உடைமை இழந்து இருத்தலுக்கான ஏக்கத்தினால் முழுவதும் அந்நிய நாடுகளுடன் அல்லல்களை ஈழத்தமிழர் நித்தம் சந்திப்பதை ‘வசிப்பிடச் சிக்கல்‘ எனும் கட்டுரை வலி நிறைந்த வரிகளால் விவரிக்கிறது.
சொந்த மண்ணில் வறுமையின் நிழலுமின்றி வாழ்ந்தவர், புகலிடத் தேசத்தில் அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே சம்பாதிப்பது, அதன் பகுதியை ஈழத்தில் இருக்கும் உறவுகளுக்கு அனுப்புவது என்றாகிவிட்டனர் என்பதை ‘புகலிடத் தொழிலாளர் நிலை‘ கட்டுரை துயர்படச் சொல்கிறது.
”1983- இனக் கலவரத்தின் உச்சகட்டமாகச் சொந்த மண்ணிலேயே வாழ முடியாத நிலையில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாகப் புலம் பெயர்ந்தனர். வரலாற்று நிர்பந்தத்தால் உலகெங்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சென்ற இடமெல்லாம் தங்களுடைய இருப்பினை நிலைநாட்டும் நோக்கில் கலை இலக்கியப் பாரம்பரியத்தை நிலைநாட்டினர்”
என புகலிடச் சிற்றிதழ் அறிமுகம் (ப.185) கட்டுரையில் பேரா. செங்கொடி குறிப்பிடுவது மாபெரும் வரலாற்றுண்மை.
புலம்பெயர் மக்கள் படைத்த எழுத்துகள் உலகெங்கிலும் பரவிட இலக்கிய வளர்ச்சி ஏற்பட புகலிட தேசங்களில் இருந்து தொடங்கி நடத்தப்பட்ட தமிழ்ச் சிற்றிதழ்களுக்கு முக்கியப் பங்கிருப்பதை எவரும் ஏற்பர்.
‘எக்ஸில், தூண்டில், சுவடுகள், காலம், மண், சிந்தனை, பூவரசு, கிளங்காற்று, நிழல், தேடல், கூர், ழகரம், தாயகம், அறிதுயில் அற்றம், மண்வாசம், நுட்பம், நான்பாவது பரிணாமம், அக்கினகுஞ்சு, அசை, பள்ளம், உயிர்நிழல், பாலம், பறை, அம்மா, அஆகி, சக்தி, உயிர்மெய், ஊதா, கண்‘ – போன்ற பல சிற்றிதழ்கள், அச்சிதழ்களாகவும், மின்னிதழ்களாகவும் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, நெதர்லாந்து பொன்ற பல நாடுகளில் இருந்த வெளிவந்து சாதனை படைத்ததையும் பேரா. செங்கொடி, விரிவான பட்டியலாய் வழங்கி இருப்பது வரலாற்றுப் பதிவு.
”புகலிட நாடுகளிலிருந்து வெளியாகும் அரசியல் தன்மையை இரு நிலைகளில் நோக்க முடியும்.
1.கண்ணை மூடிக்கொண்டு இயக்கங்களைத் துதிபாடுபவை
2.அனைத்தையும் விமர்சனத்திற்குட்படுத்தி, தேடலை நோக்கியவை”
என மு. நாகேந்திரன் அவர்களின் மேற்கோளை, பேரா. செங்கொடி சுட்டுவது கவனிக்கத்தக்கது, விரிவான ஆய்வுக்குரியது. காரணம் ஈழப்போராட்டத்தையும், புகலிட வாழ்வின் விளைவுகளையும் இயக்கங்களின் பங்களிப்பு மற்றும் திசைவழியோடும் செயல்பாடுகளோடும் மட்டுமே அணுகமுடியும்.
தாய் மண்ணான ஈழத்தில் எழுத்து, பேச்சு என பெண்ணுக்கு மறுக்கப்பட்டவை யாவும், புகலிடத் தேசங்களில் இருந்து சுதந்திரச் சிந்தனையோடு செயல்பட புலம் பெயர் வாழ்க்கை வாய்ப்பளித்ததை ‘பெண் தனித்துவத்தைக் கட்டமைத்தல்‘ கட்டுரை விரிவாகப் பேசுகிறது.
‘உடலை எழுதுதல்‘ என்னும் ஜீலியா கிறிஸ்தெவா போன்றவர்களின் பெண்ணியத் திறனாய்வுக் கோட்பாடுகளுக்கேற்ப, தாய் தேசம் மறுத்த பேச்சுரிமை, எழுத்துரிமை, மறுக்கப்பட்ட, அடக்கப்பட்ட உணர்வுகள் யாவும் புலம்பெயர்ச் சூழலில் சுதந்திரமாக பெண் படைப்பாளிகளால் வெளிப்படுத்த முடிந்தது எனக் குறிப்பிடும் பேரா. செங்கொடி, கூடுதலாக
”பெண்ணின் பலவீனமான உடற்கூற்றையும், பெண் சார்ந்த மரபுகளையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு பாலியல் ரீதியாகவும், உழைப்பு ரீதியாகவும், அவளைச் சுரண்ட முற்படும் ஆதிக்கச் சக்திகளுக்கு அறைகூவல் விடுக்கும் தன்மையையும், அவ்வாறான எழுச்சியையும், தன்னம்பிக்கையையும் பெண்ணினத்துக்கு ஊட்ட முற்படும் வீரியமும் உண்மையான பெண்ணிய எழுத்துக்கு உண்டு”
என்னும் ஆய்வு வரிகள் ஈழ இலக்கியர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு படைப்பாளிகளுக்கும் பொருந்துபவை.
புலம்பெயர் வாழ்வு துயர்மிகுந்தது, கொடியது அதிலும் புகலிடப் பெண்டிர் நிலையோ எழுத்தில் சொல்லவியலா வலி வாழ்வு.
‘புலம்பெயர் வாழ்வில் பெண்கள் எதிர்நோக்கும் இடர்ப்பாடுகள்‘ எனும் கட்டுரை பின்வருமாறு பட்டியலிடுகிறது.
- புதிய சூழல்
- அகதி அடையாளம்
- பால் அடையாளம்
- ஆணாதிக்கம்
- குடும்ப அமைப்பு
- பண்பாட்டு மாற்றம்
- மொழிப் பரிமாற்றம்
- உணவுச் சிக்கல்
- உறவுச் சிக்கல்
- சுற்றங்களின் அரவணைப்பின்மை
- மணக்கொடை யெனும் வரதட்சணை
- தற்கொலைச் சிந்தனை
- திருமண வாழ்வின் நெருக்கடி
- இறுக்கமான குடும்ப அமைப்பு.
எனினும் நூலாசிரியர் குறிப்பிடும் மேற்சொன்ன பிரச்னைகள் யாவும், புகலிடம் தேடிய ஈழச் சகோதரிகளுக்கு மட்டுமானதல்ல… உலகெங்குமுள்ள பெரும்பாலான பெண்களுக்கானவை.
சரி, புலம்பெயர்ந்தோரின் அயலிட வாழ்வு, சற்றேக்குறைய அரை நூற்றாண்டைத் தொட்டுவிட்டதெனில், அவர்தம் எதிர்காலம் எப்படி இருக்கும்? மிகப் பெருவினா ஒன்றினை எழுப்புகிறார் நூலாசிரியர்.
அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளோடே, மொழி, பண்பாடு போன்ற தம் அடையாளத்தை தக்க வைப்பதற்குப் பெரும் போராட்டங்களை நடத்தியுள்ளதாக குறிப்பிடும் பேரா.செங்கொடி என்றாவது ஒரு நாள் ஈழம் மலரும், வசந்தம் வரும், உதிர்ந்த மலர்கள் தோரணமாகும், மலர்ச் செடிகள் புத்துயிர் பெறும், கரைந்த வாழ்வு திரும்ப வரக்கூடும் – என்றெல்லாம் கனவு வார்த்தைகளால் பூசி மெழுகாமல், ‘இத்தகு சூழலில் சிங்கள இராணுவ மேலாதிக்கத்தால் உலகம் முழுதும் அதிகமாகச் சிதறிவாழும் ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறையினரின் வாழ்வு எவ்வாறு அமையும் என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும்” என நெற்றிப் பொட்டில் அடித்த நிதர்சனத்தை பதிவு செய்வது நூலாசிரியரின் நேர்மைக்கு சான்று .
மொழியும், பண்பாடும் உணவு முறைகளும், புகலிட வாழ்வின் பெரும் சிக்கலை ஏற்படுத்துவன. பெற்றோர் – குழந்தைகளிடையே இணக்க உறவுகள் இல்லாததை, கீழ்க்கண்ட அழகுக்கோனின் கவிதை வரிகள் வழியாக…வரிகளால் வாசகரின் மனதில் கடத்தி விடுகிறார் இரா. செங்கொடி,
“குழந்தைகள் ஊரை உறவை மறந்துவிட்டன
மொழி, ஆங்கிலச் சமுத்திரத்தில் அழிந்துவிட்டது
உறவுகள் பல்லினச் சேர்கையில் கலந்து விட்டன.”
இயற்கையின் பருவமாற்றங்கள், தட்ப வெப்ப மாறுதல், உணவு வகைகள் போன்றவை உடலில் ஏற்படுத்தும் அயர்ச்சி ஒருபுறமெனில், அந்நியமாதல் எனும் மனப்பிரிதல் மற்றொரு புறம், இதன் பக்கவிளைவாக, போதைப் பழக்கம், குற்றங்களில் ஈடுபடுதல், தற்கொலை முயற்சிகள் என (Negative) எதிர்மறைகள் ஒரு தட்டினில் எனில், மறுதட்டிலோ போர் எதிர்ப்பு, தாய்மண் விடுதலை, மொழி காத்தல் என நேர்மறைகள் (Possitive) – அனைத்தையும் காய்தல் உவத்தலின்றி பதிவு செய்திருப்பது முனைவர் செங்கொடி-யின் கல்விப் புல நேர்மை.
புலம்பெயர் வாழ்வில் புகலிட தேசங்களில் ஈழப்பெண்டிர் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளில், பண்பாட்டுக்கலப்பு, மொழிக்கலப்பு என்பவை ஒரு புறமெனில், பாலியல் சமனின்மை, பாலியல் வன்கொடுமை போன்றவை எழுத்தில் சொல்ல முடியாதவை.
தமிழ் மொழியை, மின்மொழியாய் மாற்றியது புலம்பெயர்தமிழரின், சாதனையெனில், உலகமெல்லாம் தமிழ்ப் பரவிட எண்மத் தமிழாய் டிஜிடல் தமிழாய் மாற்றியது பெரும் சாதனையெனலாம்.
ஈழத்தமிழரின் புலம் பெயர் இலக்கியம் – என்கிற இந்நூல் சமகாலத்தைப் பிரதிபலிப்பது, பதிவு செய்வது. சமகாலத்தை எழுதுதல் என்பது எந்த ஒரு படைப்பாளிக்கும் பெரும் சவால்! அந்த சவாலில் சளைக்காமல் சலிக்காமல் போராடி வெற்றியும் பெற்றிருக்கிறார் செங்கொடி! பட்டொளி வீசி பறக்கிறது செங்கொடி-யின் ஜெயக்கொடி.
கண்ணீரின்றி வாசிப்பதுதான் வாசகருக்கான வாசக சவால்! எதிர்கொள்வீரா…?
@

Leave a comment